தேடித் தேடிக் காத்திருந்தேன்…
-கவிஞர் காவிரிமைந்தன்
நாயகி – ஒரு பெண்ணை அடிமையாக்கக்கூடிய இத்தனை பலம் ஒரு ஆணுக்கு எங்கிருந்து வந்தது?
நாயகன் – ஒரு ஆணைக் கோழையாக்கக்கூடிய இவ்வளவு சக்தி ஒரு பெண்ணுக்கு எப்படி வந்தது?
மேற்கண்ட வசனம் இப்பாடலின்முன் இடம்பெறுகிறது. உணர்ச்சிமிகு நடிப்பின் உயரம் தொடுகிறார்கள் ஜெமினி கணேசன் அவர்களும் அபிநய சரஸ்வதி சரோஜா தேவியும்.
‘காதல் சரீரத்தில் இல்லை; ஆத்மாவில் இருக்கிறது’ என்ற தத்துத்தைச் சொன்னேன்; அது மக்களைச் சென்று அடையவில்லை. ஒரே ஒரு படத்தை இயக்கப் போனதால் 10 சிவாஜி படங்களையும், 10 எம்.ஜி.ஆர். படங்களையும், 10 ஏனைய படங்களையும் இழக்க நேரிட்டது என்கிறார் வசனகர்த்தா ஆரூர்தாஸ். இவர் இயக்கிய ஒரே படம் இதுதான்.
ஒரு தேடலின் முடிவில் நாயகனைச் சரணடைகிறாள் நாயகி! உணர்வின் உந்துதலால் அங்கே இரண்டு இதயங்கள் அன்பைப் பரிமாறி விம்மலும் விசும்பலும் என ஒன்றிணையும் கட்டத்தில் உருவாக்கப்பட்ட பாடல்! இயற்றியிருக்கிறார் கவிஞர் கண்ணதாசன். ஏ.எல்.எஸ். தயாரிப்பில் 1967ல் வெளியான படம்.
பெண் என்றால் பெண் திரைப்படத்திற்காக, ஜெமினி கணேசனுடன் சரோஜாதேவி இணைந்து நடித்த பாடல்!
மலருக்கெல்லாம் வாயிருந்தால் என் மன்னவன் புகழ்பாடும் என்று தற்குறிப்பேற்ற அணி கொண்டு வரிகளை வரைந்திருக்கிறார்.
மேகம்போல ஆடையிட்டு சோகம்பாடு வீணைதனை
பால்போல சேலையிட்டு பார்த்தாய் என் தெய்வமே!
சோகத்தில் சொந்தம் கொண்டாடியிருந்த எனக்குச் சொர்க்கத்தைத் தந்த தலைவனே… என்று அவன் காலடியில் சுகம் காணுகிறாள் நாயகி.
எண்ண மலர்களை எழுத்துவடிவில் தரும் திறமையுள்ள கவிஞர்களால் இப்படிச் சூழ்நிலைகளையும் பாடல் வரிகளாக்க முடியும் என்பதற்கு இப்பாடல் சாட்சி! வருடிக் கொடுக்கும் இசை வார்த்தைகளை அலங்கரித்துத் தருகிறது. இனிய குரல்களால் நம் செவிகளைச் சென்றடைகிறார்கள் டி.எம்.எஸ். மற்றும் பி.சுசீலா.
தேடித் தேடிக் காத்திருந்தேன்…
தெய்வம் என்னைப் பார்க்கவில்லை…
ஆதாரம் வேண்டியடைந்தேன்
ஐயா உன் காலடியில்…
மலருக்கெல்லாம் வாயிருந்தால் என் மன்னவன் புகழ்பாடும்
மஞ்சளுடன் குங்குமமும் உன் மடியில் விளையாடும்
மேகம்போல ஆடையிட்டுச் சோகம்பாடு வீணைதனை
பால்போலச் சேலையிட்டு பார்த்தாய் என் தெய்வமே!
ஊஞ்சலிலே நாயகனின் உருவம் விளையாட
ஓர்விழியால் முகம்பார்த்து நாயகி இசைபாட
வானமீன்கள் பூச்சொரிய வந்த தென்றல் தாலாட்ட
ஆனந்தம்கோடி கண்டேன் ஐயா உன் மடியினில்…
http://www.youtube.com/watch?v=rjL-3Rlc4fQ
அற்புதமான பாடல் . இசை விசுவநாதன் . அவரை பற்றி குறிப்பிட்டு இருக்கலாம் .அண்மையில் தொலைகாட்சியில் இந்த படலை கேட்டேன் . என்ன சுகம் …..சுசில் awe .
வழக்கமாய் இசைஅமைப்பாளர் பெயர் மறக்காமல் குறிப்பிடுவேன். இந்த முறை விடுபட்டுவிட்டது. இனி அதில் கவனம் கொள்வேன். தங்கள் நினைவூட்டலுக்கு நன்றிகள்.
காவிரிமைந்தன்
நன்றி .காவிரி மைந்தன் அவர்களே .