செல்வன்
Blog
-

ஒரு யுக்தி
2001ஆம் ஆண்டு.ஓக்லாந்து பேஸ்பால் அணி தோல்வி மேல் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. நட்சத்திர வீரர்களை ஏலம் எடுக்கக் காசு இல்லை. அணியின் முன்னணி விரர்கள் ஓய்வு பெற்றுவிட்டார்கள்.இந்தச் சூழலில் அணியின் மேலாளர் பில்லி பீன், பீட்டர் பிராண்டு எனும் யேல் பல்கலைக்கழக எகனாமிக்ஸ் வல்லுனரை சந்திக்கிறார். பீட்டர் பிராண்டு, அவரிடம் “பேஸ்பால் ஆட்டமே மிகத் தவறான முறையில் வழிநடத்தப்படுகிறது. நான் சொல்லும் கணிதவியல் மாடல்களை வைத்து வீரர்களை ஏலம் எடுத்தால் அணி வெற்றிபெறும்” என்கிறார்.அப்போது பேஸ்பால் நட்சத்திர மவுசை வைத்தே இயங்கி வந்தது…. ஹோம் ரன் எனப்படும் சிக்சருக்கு ஒப்பான அடிகளை அடிப்பவர்கள் பெரும் விலை கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டார்கள். பேட்டிங் சராசரி கூடுதலாக இருப்பவர்களும் அதிக விலைக்கு வாங்கப்பட்டார்கள். நட்சத்திரங்களைப் பார்க்கவும், ஹோம் ரன்களைப் பார்க்கவும் கூட்டம் கூடியது..“இந்த மாடலே தவறு. பேட்டிங் சராசரியை அவுட் ஆகாமல் இருப்பதன் மூலம் செயற்கையாகக் கூட்டமுடியும். ஹோம் ரன்களை அடிக்கணும் என எந்த அவசியமும் இல்லை. பந்தைத் தட்டிவிட்டுவிட்டு முதல் பேசுக்கு ஓடுவதில் வல்லவர்களை விலைக்கு வாங்கினால் போதும். அப்படி தட்டிவிட்டுவிட்டு ஓடினால் ரன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்ற பீட்டர் பிராண்ட், அந்த மாடலை வைத்துக் கணக்குகளைப் போட்டு, வீரர்கள் சிலரை ஏலம் எடுக்கச் சொன்னார்.அதில் வயதானவர்கள், ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள், காயம்பட்டுச் சரியாக ஆடமுடியாமல் இருப்பவர்கள் எனப் பலர் இருந்தார்கள். நட்சத்திர வீரர்களை எல்லாம் ஏலம் எடுக்காமல் இவர்களை மிக மலிவான விலைக்கு ஓக்லாந்து அணி ஏலம் எடுக்கவும் அவர்கள் நகைப்புக்கும், பகடிக்கும் ஆளானார்கள். அணி நிர்வாகத்துக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கருதினார்கள்.ஆனால் சீசன் துவங்கியதும் இந்த உத்தி வேலை செய்ய ஆரம்பித்தது. நட்சத்திர வீரர்கள் இல்லை, ஹோம் ரன்கள் இல்லை, ஆனால் ரன்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்தன. தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வென்று உலக சாதனை படைக்கவும் விளையாட்டு உலகமே அதிர்ச்சி அடைந்து, பில்லிபீனைத் திருப்பிப் பார்த்தது. அந்த ஆண்டு, பட்டத்தையும் ஓக்லாந்து அணி வென்றது.உடனடியாக பில்லிபீனை வலுவான, பெரிய அணியின் முதலாளிகள் சூழ்ந்தார்கள். “எத்தனை தொகை வேண்டுமானாலும் கேளுங்கள். கொடுக்கிறோம். எங்கள் அணிக்கு வாருங்கள்” என்றார்கள். ஒரு அணி ஒன்றேகால் கோடி டாலரைக் கொடுக்க முன்வந்தது. அனைத்தையும் மறுத்து அடுத்த சீசனுக்கு தன் அணியின் சார்பிலேயே களம் இறங்கினார் பில்லிபீன்.2001ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 281 ரன்கள் எடுத்து வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியைப் பெற்றுத்தந்த விவிஎஸ் லட்சுமண் இந்த உத்தியைத் தான் கையாண்டார். அந்த 281 ரன்களில் ஒரே ஒரு சிக்சர் கூட இல்லை. “சிக்சருக்கும், பவுண்டரிக்கும் இருக்கும் வேறுபாடு 2 ரன்கள் தான். ஆனால் தூக்கி அடிக்காவிட்டால் அவுட் ஆகமாட்டோம்” என்றார் லட்சுமண்.அடித்து ஆடும் ஆவேச ஆட்டம் இல்லை, ரசிகர்களை வியக்க வைக்கும் ஷாட்டுகள் இல்லை… ஒன்று, இரண்டு, நாலு என மெதுவாக ரன்கள் ஏறின. மெதுவாக, நிலையான, திட்டமிட்ட ஆட்டம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது,.பீட்டர் பிராண்டும், பில்லிபீனும் கையாண்ட உத்தி, இன்று அனைத்து பேஸ்பால் அணிகளாலும் கையாளப்படுகிறது. அவர்கள் கிட்டத்தட்ட லெஜண்டுகளின் இடத்தை அடைந்துவிட்டார்கள். இதை அடிப்படையாக வைத்து, Moneyball எனும் ஆங்கிலப் படம் வெளிவந்தது. பிராட் பிட், பில்லி பீன் வேடத்தில் நடித்தார்.வெற்றி சிக்சர்களாலும், ஹோம் ரன்களாலும், பெரிய சாதனைகளாலும் தீர்மானிக்கப்படுவதில்லை. நிதானமான, தொடர்ச்சியான, சிறுசிறு வெற்றிகள் மூலமே வெற்றி பெறுவோம். நாம் எப்படி ஜெயித்தோம் என்பதே அதன்பின் பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். -

படக்கவிதைப் போட்டி – 258
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (17.05.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
-

படக்கவிதைப் போட்டி 257இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
சிந்தனை முகத்தினராய்ச் சுவரில் சாய்ந்து அமர்ந்திருக்கும் மூவரை ஒளிக்காட்சியாக்கிப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்திருப்பவர் திருமிகு ராமலக்ஷ்மி. அவருக்கு என் நன்றி!
அகத்தின் அழகை மட்டுமன்று கலக்கத்தையும் முகம் துலக்கமாகவே வெளிக்காட்டும் என்பதை இம்மூவரின் முகங்களும் நன்றாகவே புலப்படுத்துகின்றன. எதனால் வந்த கலக்கமிது என்று நாம் யோசிப்பதைவிடவும் நம் கவிஞர்கள் சரியாக யோசித்துப் பதில் சொல்வார்கள் என்பதால் அவர்களையே கேட்போம்! புறப்படுங்கள்!
*****
”வண்ணமிட்ட எம் கைகளுக்கு அன்னமிட யாருமில்லை; கோவில் சுவரே எங்கள் கூடுமிடம். இதுவரை நீராகாரமே எம் உணவு; இனி நீரே ஆகாரமாகும் நிலைவருமோ?” என்று நொந்த சிந்தையோடு அமர்ந்திருப்பவர்கள் இவர்கள் என்கிறார் திரு. ஸ்ரீதரன் வெங்கடகிருஷ்ணன்.
நம்பிக்கை
வேகமான நகரத்தில்
விரைவாக செல்வோரே
சோகமே எங்களது
சொத்தாகும் அறிவீரோ ?ஆழக் குழி தோண்டி
அஸ்திவாரமிட்டு – பிறர்
வாழக் கட்டிடங்கள்
வாகாய்க் கட்டிடுவோம் !வானம் கைகுலுக்கும்
வண்ணக் கட்டிடங்கள்
எத்தனையோ நாங்கள்
எடுத்துக் கட்டி விட்டோம் !சொந்தக் குடிசை என்று
சொல்ல எதுவுமில்லை
வண்ணமிட்ட கைகளுக்கு
அன்னமிட யாருமில்லை !கோவில் சுவர் எங்கள்
கூடும் இடமாகும் – எம்
நாவில் உணவு படவே
நாட்கள் பலவாகும் !ஆளுக்கு அரைக்குவளை
அளவாக நீர் உண்டு
தாவிக் குடித்தே பசித்
தாகம் தீர்த்திடுவோம்நீராகாரம் முன்பு நாங்கள்
நிதமும் பருகிடுவோம்
நீரே ஆகாரமாகும்
நிலை வந்து விடுமோ ?எங்களுக்குள் பயம்
எட்டிப்பார்க்கும் நிதம்
கண்களில் நீர் தாரை
கொட்டித்தீர்க்கும் !தாளாப் பசியினிலும்
தளராது எங்கள் மனம்
உள்ளுணர்வு வந்து
உரைத்தது மெதுவாகவந்துவிட்ட ஊரடங்கு
விரைவாகத் தகருமென !
எங்கள் வாழ்க்கை
இயல்பாக நகருமென !நாங்கள் மூவருமே
நன்று உணர்ந்திட்டோம்
நம்பாமை இனி தாழ்வு
நம்பிக்கையே வாழ்வு !*****
”அழையாக் கொடுநோயால் அகிலம் அல்லலுற்றாலும் உழைப்போர்க்கு உண்டி கிடைத்திட நாம் வழிகண்டிட வேண்டும்!” எனும் நியாயமான கவலையைக் கவிதையில் பதிவுசெய்திருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
உதவிடு உழைப்பவர்க்கு…
உழைப்பவர் ஓய்வில் அமர்ந்திடலாம்
ஊதியம் உழைப்பு இரண்டுமிலை,
அழைத்திடும் வயிறு பசியினிலே
அடங்கா ததுதான் வெறும்நீரில்,
அழையாக் கொடுநோய் வந்ததாலே
அல்லல் படுவார் அனைவருமே,
உழைப்போர் உண்டிட வழிவகுத்தே
உயிர்க்கொலும் நோயையும் ஓட்டுவோமே…!*****
இரு கவிதைகளைப் படக்கவிதைப் போட்டிக்குப் படைத்துத் தந்திருக்கும் திருமிகு. சுதா மாதவன், தம்முடைய முதற்கவிதையில், ”குடல் தின்னும் திரவமதில் மயங்கும் மானிடா! குடும்ப மானம் பறிவோவதை நீ எண்ணவில்லையா? நன்னெறிக்குத் திரும்பு! உன்னத வாழ்க்கையை விரும்பு!” என்று அறிவுறுத்துகின்றார்.
இரண்டாவது கவிதையில், ”அரசின் வருவாய்ப் பெருக மதுக்கடலில் மக்கள் வீழ்வதா? என்று வினாவெழுப்பி, மதுவை எதிர்த்துவெல்லும் மனவுறுதி கொள்வோம்!” என்று வலியுறுத்துகின்றார்.
எப்போது திறக்குமென்று காத்திருக்கிறாயோ?
ஏன் இப்படியானோமென நினைக்கிறாயோ?
கொரோனாவை அழிக்குமென இதை குடிக்கிறாயோ?
குடும்பத்தில் நிம்மதியை குலைக்கிறாயோ?காடுமேடுக் காட்டில் நிற்கிறாயோ?
காசுபணம் நிரம்ப வைத்திருக்கிறாயோ?
குடல் தின்னும் திரவமதில் மயங்குகிறாயோ?
குடும்ப மானம் பறிபோக நினைக்கிறாயோ?உன் சுற்றங்கள் நினைவில்தான் வரவில்லையோ?
குதூகலமாய் உன் மழலைமுகம் தெரியவில்லையோ?
தாலி கட்டியவள் கண்ணீரை நிறுத்தவில்லையோ?மௌனமாய் இருப்பதால் நீ
ஞானியல்ல!
மடைதிறந்த மது உனக்கு நல்லதல்ல!
உடற்பயிற்சி யோகா தினம் உடனே செய்க!
உன்னத நிலை அடைந்திடு வாழ்வை இனிதே வெல்ல!!!!!*****
அரசின் வருவாய்ப் பெருக
மதுக்கடலில் மக்களா?
எதிர்ப்பு சக்தி தரும் என்கிறார்களே
அதை எதிர்க்கும் சக்தி நம்மிடம் இல்லையா?
உன் வாழ்க்கை உன் கையில்
அமர்ந்திருந்து யோசி
ஆவாய் நீ சன்யாசி
புதுமைமிகு எண்ணம் எழும்
பொலிவு பெறும் இது திண்ணம்!*****
பாடுபடும் பாட்டாளிகளெல்லாம் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் அவதியுறும் நிலைகண்டு குமுறி, ”நாட்டு மக்கள் நலங்காணத் திட்டம் தீட்ட வகையின்றி ஓட்டதனைக் காசுக்குப் பெறும் குடியாட்சி ஒன்றே போதும்!” என்று அங்கதமாய் நாட்டின் கேடுகெட்ட நிலையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளார் திரு. வேங்கட ஸ்ரீநிவாசன்.
போதுமென்ற மனம்!
பாடுபட்டு தானுழைக்கும் பாட்டாளிக்குக்
காடு வேண்டாம் கழனி வேண்டாம்
பட்டுச் சட்டை பீதாம்பரம் வேண்டாம்
மேலுடுத்தி மானங்காக்க ஆடை போதும்!வீடு கட்டி வாழ வைக்கும் உழைப்பாளிக்குக்
கோட்டை வேண்டாம் கொத்தளம் வேண்டாம்
தங்கம் வெள்ளி பித்தளை வேண்டாம்
ஓய்வொடுக்க கூரை வீடு அஃதே போதும்!சோறு போட்டு உயிர் காக்கும் விவசாயிக்குக்
கூழ் கஞ்சி இருந்தால் போதும்!
பாதை போடும் தொழிலாளியை தெருவில்
நடக்க அனுமதி தந்தால் போதும்!நாட்டு மக்கள் நலங்காண
திட்டம் தீட்ட வகையின்றி
ஓட்டதனைக் காசுக்குப் பெறும்
குடியாட்சி ஒன்றே போதும்!கனவு கொண்டு முயற்சி இன்றி
மதுக்கடையில் வாழ்வு தொலைத்து
இலவசத்தில் வாழ்ந்திருந்தால்
போதுமென்ற மனமே போதும்!*****
விழிப்புணர்வூட்டும் வீரியமிகு சிந்தனைகளை வார்த்தைகளில் ஏற்றித் தம் கவிதைகட்குப் பொலிவூட்டியிருக்கும் கவிஞர்களைப் பெரிதும் பாராட்டுகின்றேன்.
அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாக நான் தேர்ந்தெடுத்திருப்பது…
சிந்திக்கவைக்கும் மூன்று கவிதைகளை நான் சிறந்த கவிஞராக இவ்வாரம் தேர்ந்தெடுத்திருப்பவர் போட்டிக்குத் தந்திருந்தாலும் அதில் என்னைக் கவர்ந்த ஒன்றை இங்கே பதிவிடுகின்றேன்.
மூவரும் உழைப்பால் மட்டுமே ஒன்றான வர்கள் அல்லர்
உறவுமுறையிலும்அப்பா மகன் மருமகன்
ஆலோசனையில் அதுவும்
அதிதீவிர ஆலோசனையில்நாற்பது நாட்கள் குடியை மறந்திருந்தோம் குடிசையில்
குடியிருந்ததோ பூரண நிம்மதிமறக்க முடிந்தது மதுவை
துறக்க முடிந்தது போதையை
வியக்கக் கண்டது புதிய பாதையைதிறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்
துறந்தது துறந்ததுதான்
மறந்தது மறந்தது தான்
மது எதற்கு இனி என்றான பின்பு
இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!மாமா நீ உழைக்கவே வேண்டாம்
குடிக்காம இரு பிள்ளைக்கு அப்பனாய்
பாடம் நடத்தி விட்டாள் பெஞ்சாதி!குடி குடியைக் கெடுக்கும்
வாசகம் அரசுக்குப் பொருந்தாதா?
ஆறு வயசுப் பையன் கேட்கிறான்!உழைப்பவன் உயர்வாகச் சிந்திக்க மறக்கடிக்கவே மது
அரசியல் சதுரங்கத்தில்
உழைப்பாளிகளைத்தான்
பகடைக்காய்களாக
உருட்டி விளையாடுகின்றன
ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும்!இருகட்சிகளுமே கூட்டணி
அமைப்பர் மது விசயத்தில்!அமாவாசை அன்று மூடிய மதுக்கடைகளை மீண்டும்
ஒளிமயமான பவுர்ணமி அன்று அரசு திறக்கலாம்
குடும்பத்தை அமாவாசை இருட்டாக்கும் மதுவிற்கு
தர்ப்பணம் பண்ணியாச்சு!தனிமனிதன் திருந்திய பின்பு
எவன் குரல் எதற்கு?மதுக்கடைகளை மூடிப் பாரு
முதலில் விபத்துக்கள் குறையும்
மருத்துவமனைக்கு வேலையில்லை
குற்றங்கள் குறையும்
தேசபக்தி வளரும்!குடி குடியைக் கெடுக்கும்
அரசும் சிந்தனை கொண்டால்
குடி மாநிலத்தைக் கெடுக்கும்
குடி நாட்டைக் கெடுக்கும்மூவர் நாங்கள் சிந்தித்து விட்டோம்
சிந்திய வியர்வைத் துளிகள்
பெண்டாட்டி பிள்ளைகளுக்கே!
அவர்களை நடுத்தெருவில் நிற்க வைக்கும் மதுவிற்கல்ல!*****
பூட்டிய டாஸ்மாக் இரும்பு கேட்டினை (gate) திறந்து மக்களுக்குக் கேட்டினை அளிக்கும் மதுவைத் தமிழக அரசு மீண்டும் அனுமதித்ததை வன்மையாகக் கண்டிக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையில்,
”மறக்க முடிந்தது மதுவை
துறக்க முடிந்தது போதையை
வியக்கக் கண்டது புதிய பாதையை
திறக்கட்டும் மீண்டும் கையாலாகாத அரசுகள்!துறந்தது துறந்ததுதான்
மறந்தது மறந்தது தான்
மது எதற்கு இனி என்றான பின்பு
இலவசமாய்த் தந்தாலும் மது மலமே!” என்ற வரிகள் பொட்டில் அடித்ததைப்போல் மதுக்கடைகளைத் திறப்பதை அரசும், மது அருந்துவதை மக்களும் முற்றாகக் கைவிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. இன்றைய சூழலுக்கு அவசியமானதொரு கவிதையைப் படைத்தளித்திருக்கும் திரு. காமாட்சிநாதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். -

குவியம்
செல்வன்நல்ல தொழிலதிபர்கள் வாடிக்கையாளரின் தேவைகள் என்ன என அறிந்து அதை நிறைவேற்றுவார்கள்.ஆனால் மாபெரும் தலைவர்கள், வாடிக்கையாளருக்கு எது நல்லது எனத் தானே கண்டுபிடித்து அதை அவர்களுக்குக் கொடுப்பார்கள்.உலகின் முதல் காரை வடிவமைத்த ஹென்றி போர்டு இதைத்தான் சொன்னார்.“வாடிக்கையாளரிடம் உங்களுக்கு என்ன வேண்டும் எனக் கேட்டிருந்தால் நல்ல குதிரைவண்டி வேண்டும் எனப் பதில் சொல்லியிருப்பார்கள்”அக்கால வாடிக்கையாளர்கள், காரைப் பார்த்ததே இல்லை. பின்னே கார் வேண்டும் என அவர்களுக்கு எப்படி தெரியும்?ஸ்டீவ் ஜாப்ஸ், ஆப்பிள் நிர்வாகிகளிடம் அதைத்தான் சொன்னார், “நல்ல ஐடியாக்களை நிராகரித்தால் தான் ஆப்பிள் மேம்படும்” என.வாரன் பப்பட்டும் அதைத்தான் சொன்னார், “உங்களுக்குத் தோன்றும், சொல்லப்படும் அனைத்து நல்ல ஆலோசனைகளையும் நிராகரிக்கவும். உங்களிடம் ‘எஸ்’ எனும் வார்த்தையை வாங்குவதே மற்றவர்களுக்குப் பெரும்பாடாக இருக்கவேண்டும்” என.பல கம்பனிகளின் சிக்கலே இதுதான். நல்ல ஐடியாக்கள் அனைத்தையும் இழுத்துப் போட்டுக்கொள்வார்கள்.“கொரொனா வந்தாச்சு. மாஸ்க் தயாரித்தால் நல்ல லாபம் வரும்”… உடனே தொடங்கு மாஸ்க் பேக்டரி.“ஆன்லைன் தான் இனி எதிர்காலம்… ஆரம்பி ஆன்லைன் பல்கலைக்கழகம் ஒன்னை..”இப்படி “நல்ல ஐடியாக்கள்” பலவற்றைக் கேட்டு, அனைத்தையும் செயல்படுத்தி, கடைசியில் ஏகப்பட்ட கடன், ஏகப்பட்ட தொழில்கள், எதிலும் ஒருங்கிணைப்பு இல்லை எனும் நிலையில் அனைத்தும் பறிபோகும்.சாம்சங் கம்பனி ஒரு கன்சல்டன்டை அழைத்தது.. “ஆப்பிளை விடச் சிறந்த போன்களை நாம் தயாரிக்கணும். எப்படி எனச் சொல்லுங்கள்..”அவர் ஆராய்ந்து பார்த்துவிட்டு சொன்னார்.. “உங்ககிட்ட ஐம்பதுக்கு மேல் மாடல் இருக்கு. அவர்களிடம் ஐபோன் ஒண்ணு மட்டுமே இருக்கு. இதில் எதை வைத்து அவர்களை முறியடிக்கப் போகிறீர்கள்?”ஐபோன் ஒன்றில் மட்டுமே ஆப்பிள் கவனம் செலுத்தியது. பல நல்ல ஐடியாக்களை நிராகரித்தார்கள். இன்று ஆப்பிளின் ஐபோன் டிவிசன் மட்டுமே மைக்ரோசாப்டை மிஞ்சிய லாபம் ஈட்டுகிறது.போஃகஸ்.. குவியம்.. கவனம் முழுவதும் ஒரே ஒரு சிறப்பான ஐடியாவில் இருப்பதும், மற்ற அனைத்து “நல்ல ஐடியாக்களையும்” நிராகரிப்பதும், செய்யும் அந்த ஒரே ஒரு விசயத்தைத் தன்னிகரற்ற சிறப்புடன் செய்வதுமே வெற்றிக்கான வழி.—
-

(Peer Reviewed) வைரமுத்து படைப்புகளில் உவமக் கோட்பாடுகள் (‘கருவாச்சி காவியம்’ – தொன்ம உவமங்கள்)
திருமதி. ஏ. சுஜிதா M.A., M.PHIL.,
முனைவர்ப் பட்ட ஆய்வாளர் (ப.நே.)
உருமு தனலெட்சுமி கல்லூரி,
காட்டூர் – திருச்சிராப்பள்ளி – 19முன்னுரை
கவிதை, நாவல் என்னும் இருவகை இலக்கியத் தளத்திலும் தன் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டவர்களில் வைரமுத்துவும் ஒருவர். தான் பிறந்து வளர்ந்த சுற்றுப்புற மக்களின் வாழ்வியலை நாவல்களாக்கியமை அவருடைய தனிச்சிறப்பு. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’, ‘மூன்றாம் உலகப்போர்’ என்னும் மூன்று நாவல்களும் தமிழகத்தின் தென்மாவட்டங்களைக் கதைக்களமாகக் கொண்டிருக்கின்றன. கதைமாந்தர்களும் அவ்வட்டாரத்தைச் சேர்ந்தவர்களாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்தம் கருத்து வெளிப்பாட்டுக்கான மொழி முதலிய அனைத்தும் மண்மணம் வீசுமாறு படைக்கப்பட்டுள்ளன. கல்வியறிவு அற்ற அப்பாத்திரங்களின் சொல்லாடல்களில் பயன்படுத்தப்படும் உவமங்கள் இயற்கையாகவும் வாழ்வியல் பட்டறிவினை வெளிப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளன. முறையான தமிழ்க்கல்வி பெற்ற நாவலாசிரியர் வைரமுத்து தாமறிந்த பல தொன்மக் கூறுகளை மேற்கண்ட நாவல்களில் உவமங்களாகப் பயன்படுத்தியிருப்பதை அறியமுடிகிறது. ‘கருவாச்சி காவியம்’ என்னும் பெண்ணியக் காவியத்துள் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்மக்கூறுகளாகிய உவமங்கள் கருத்து விளக்கத்திற்கு எவ்வாறு பயன்படுகின்றன என்பதை ஆராய்ந்து அப்பயன்பாட்டின் அடிப்படையில் சில கோட்பாடுகளை வரையறுப்பதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.
கட்டுரை பற்றி
‘வைரமுத்து படைப்புகளில் உவமக் கோட்பாடுகள்’ என்னுந் தலைப்பில் அமையும் இக்கட்டுரை ‘கருவாச்சி காவியம்’ என்னும் நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்மம் சார்ந்த உவமங்களையே தனது ஆய்வுக் களமாகவும் ஆய்வெல்லையாகவும் கொள்கிறது. கவிதைகளை உவமங்களால் சுவைத்து மகிழ்வதைப் போல நாவல்களில் பயன்படுத்தப்படும் உவமங்களையும் சுவைத்து மகிழ வேண்டும் என்பதைப் பொது நோக்கமாகவும் கருவாச்சி காவியத்துத் தொன்ம உவமங்களின் பயன்பாட்டு மேன்மையினைச் சிறப்பு நோக்கமாகவும் கொண்டு, பகுப்புமுறை திறனாய்வு நெறியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைகிறது.
1.1. நாவலில் உவமம் – ஒரு பார்வை
‘கல்லுளி மங்கன் போனவழி காடு மலையெலாம் தவிடு பொடி’ என்பது போல அந்தச் சுழிக்காற்று”1 என்று உவமத்தால் தனது பொன்னியின் செல்வன் நாவலைத் தொடங்கியிருப்பார் கல்கி. அறிஞர் மு.வ. உள்ளிட்ட நாவல் படைப்பாளர் அனைவரும் தமது நாவல்களில் உவமங்களைப் பல நோக்கங்களுக்காகப் பொருத்தமான இடங்களில் கையாண்டுள்ளனர். வைரமுத்து தமது கவிதைகளைப் போலவே நாவல்களிலும் எண்ணற்ற உவமங்களைப் பயன்படுத்தியுள்ளதைக் காணலாம். கதைச்சூழலைப் புரியவைக்கவும் கதை மாந்தர்களின் பண்புநலன்களை வெளிப்படுத்தவும் படைப்பாளராகிய வைரமுத்து தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தவும் எனப் பல நோக்கங்களில் அது பயன்படுத்தப்பட்டுள்ளது. கருவாச்சி காவியத்து உவமங்களைப் படித்தறிந்து சுவைத்து மகிழ வேண்டும் என்னும் நோக்கத்திற்கு உதவியாக அவளைப் பற்றிய சுருக்கம் அடுத்த பத்தியில் பதிவு செய்யப்படுகிறது.
1.2. காவியமான கருவாச்சி
தனியொருத்தியைக் காப்பிய நாயகியாகக் கொண்டு படைப்பிலக்கியம் செய்வது தமிழுக்குப் புதியதன்று. ஆனால் பெண்ணியம், பெண்விடுதலை ஆகியவற்றின் முழுப்பரிமாணத்தையும் நடப்பியல் சிக்கலோடு மானுடத்தின் மகுடமாகச் சித்திரிப்பதில் தனியிடம் வகிப்பது கருவாச்சி காவியமாகும். இது ஒரு நாவல் பற்றிய தர மதிப்பீடன்று. பெண்ணியம், பெண்விடுதலை ஆகிய தொடர்கள் பற்றிய திரிபுணர்ச்சியால் இன்றைக்கும் ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயம் எப்படிச் சீரழிந்து கொண்டு வருகிறது என்பதைக் கண்ணுறுவார்க்குக் கருவாச்சிப் பாத்திரத்தின் தனித்தன்மையைப் புரிந்து கொள்ள இயலும். கட்டையனைப் போன்ற கணவனின் துன்புறுத்தலுக்கிடையே நடத்தப்படும் நகர்ப்புற நாகரிக வாழ்வு மணமுறிவுக்குத் தயாராகிவிடும். அத்தகு மணமுறிவின் இருபக்கப் பின்விளைவை யாரும் சிந்திப்பதில்லை. ஆனால் மானுடம் என்பது பல்வகைப் பலவீனங்களின் தொகுப்பு என்பதைப் புரிந்து கொண்டு நடத்தப்படும் குடும்ப வாழ்வை ‘இல்’ அறமாக மாற்றிக் காட்டியவள் கருவாச்சி. தன் அண்ணன் மாறுகண்ணுத் தேவர் மகள் சொர்ணக்கிளியின் கொடுமையான மரணத்திற்குப் பெரியமூக்கியின் உறவுக்காரன் செயில்ராசு காரணமானான். அதற்கும் பெரியமூக்கி மகள் கருவாச்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்றாலும் பழிவாங்கும் நோக்கத்துடன் தனது மகன் கட்டையனுக்குக் கருவாச்சியைக் கட்டிச் சீரழித்தார் சடையத்தேவர். சீரழிந்த தன் வாழ்வையும் தன்னோடு ஒட்டிய தன் மகன் அழகுசிங்கத்தையும் காப்பாற்றும் மிகப்பெரிய பொறுப்பில் வாழ்க்கையைக் கொண்டு செலுத்தும் கருவாச்சி இறுதியாகத் தான் அனுபவித்த கொடுமைகளுக்கெல்லாம் காரணமான கட்டையனுக்கும் கஞ்சி ஊற்றுகிறாள். இந்தக் கதைப் பயணத் தொடக்கத்தில் அப்பாவியாகத் தோன்றும் கருவாச்சி. நாவலின் இறுதியில் ஞானிக்கும் ஞானியாகிறாள். இதுதான் கருவாச்சி காவியமான கதை. இனி இந்தக் கதையில் வைரமுத்து கையாண்டிருக்கும் உவமங்கள் சிலவற்றின் சிறப்புக்களைக் காணலாம்.
1.2.1. கற்பூர வழிபாடும் கருவாட்டுக் குழம்புச் சட்டியும்
கற்பூரம் கொளுத்தி இறைவழிபாடு செய்வது தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று. சிவவழிபாட்டு நெறியிலும் வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்க நெறியிலும் இவ்வழக்கம் உண்டு. சிறு தெய்வ வணக்கங்களிலும் மக்களின் அன்றாட இல்லற வழிபாட்டு நிகழ்வுகளிலும் இது இயல்பு. இந்தப் பழக்கத்தைச் “சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி” என வைரமுத்து பதிவு செய்திருக்கிறார். கொதிக்கிற குழம்பை இறக்கி வைப்பதற்கு முன்னே குழம்பைக் கருவாச்சி அளாவும் செயலுக்கு இந்த உவமத்தைப் பயன்படுத்துகிறார்.
“சுட வச்ச நல்லெண்ணெயக் கருவாட்டுச் சட்டிக்குள்ள இறக்கி, சாமிக்குச் சூடம் காமிக்கிற மாதிரி ஒரு அளவு அளாவி மினுமினுன்னு எண்ணெ மெதக்க எறக்கி வப்பா பாருங்க” 2
என்னுந் தொடர்களால் கற்பூரத் தட்டை இறைமுன் வலக்கை கொண்டு மூன்றுமுறை ஆராதிப்பதுபோலக், கொதிக்கின்ற கருவாட்டுக் குழம்புச் சட்டியை அடுப்பிலிருந்து இறக்காமலேயே கருவாச்சி அளவினாள் என்பது விளக்கப்படுகிறது.
1.2.2. சாமியாடிக்கு வந்த அருளும் சாமியின் அருள்வாக்கும்
கோயிலில் சாமியாடிக்கு அருள் வரும். சாமியருள் வந்து ஆடுபவர்கள் அருள் வாக்குச் சொல்வர். இந்த இருவருக்குமே மெய்தடுமாறும் அளவில் ஆவேசம் வரும். அந்த ஆவேசத்தை உவமமாக்கியிருக்கிறார் வைரமுத்து. கருவாச்சியைப் பழிவாங்க வேண்டும் என்று நினைத்த சடையத்தேவரின் ஆவேசத்தையும் கருவாச்சிமீது ஏறி சொர்ணக்கிளி அருள்வாக்கு சொல்லியபோது அவள் கொண்ட ஆவேசத்தையும் விளக்குதற்கு இந்த இரண்டு உவமங்களையும் பயன்படுத்துகிறார்.
“சாமியாடிக்கு அருள் வந்த மாதிரி” சடையத்தேவர் கொதித்தாராம்” 3
“சாமி அருள் வாக்கு சொல்ற மாதிரி கருவாச்சி சொன்னாளாம்” 4
முன்னது நூலாசிரியர் சொல்வது. பின்னது சாமியாடிய கருவாச்சியைக் கண்டோர் கூற்று. மேலெழுந்தவாரியாக ஒன்றுபோலத் தோன்றினாலும் சாமியாடி அருள் வருவதும் சாமிவந்தவன் அருள்வாக்குச் சொல்வதும் வேறுவேறு வினைகள். இவை வெகுநுட்பமாகக் கவனித்துக் கையாளப்பட்டுள்ளன.
1.2.3. இராமரும் அணிலும்
சேதுபந்தண உதவிக்கு இராமர் அணிலைத் தன் விரல்களால் தடவிக் கொடுக்க, தடவிக்கொடுத்த அந்த மூன்று விரல் அடையாளமே அணில் முதுகின் மூன்றுகோடு என்பது தொன்ம சார்ந்த நம்பிக்கை. அந்த நம்பிக்கையை வைரமுத்து பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியின் உடல் நோவு தீரச் செய்கின்ற பணிவிடையில் பதிவு செய்து காட்டுகிறார்.
“அணில் முதுகில் இராமர் மூன்று கோடு போட்ட மாதிரி” 5
கருவாச்சியின் அடிகளை வருடிவிடுகிறாள் பெரியமூக்கி. ‘போட்ட மூன்று கோடு மாதிரி’ எனச் சொல்லாமல் ‘கோடு போட்ட மாதிரி’ எனச் சொல்வதால் பெரிய மூக்கியின் விரல் வருடலாகிய வினைக்கு இது உவமமாகிறது. இராமன் அணிலைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு வருடிவிடுகிற காட்சியையும் பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியை அருகில் வைத்து வருடிவிடுகின்ற காட்சியையும் மனத்திரையில் கொண்டுவந்தால் உவமத்தின் நுட்பம் புரியக் கூடும். இராமனாகிய பரம்பொருள் அனைத்துயிர்களுக்கும் அருள்பாலிக்கும் நிலைக்கும் தாய்மைக்கும் அதிக வேறுபாடு இல்லை. எனவேதான் ‘அம்மையே! அப்பா!’ என இறைவன் விளிக்கப்படுகிறார். ‘தாயுமானவர்’ எனவும் அழைக்கப்படுகிறார். இந்தப் பின்புலத்தில் உவமப் பயன்பாட்டின் முழுப்பரிமாணத்தையும் புரிந்து கொள்வதோடு பெரியமூக்கி தன் மகள் கருவாச்சியின் மேல் வைத்திருந்த தாய்ப்பாசத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. இதே உவமத்தை மற்றொரு இடத்திலும் வைரமுத்து பயன்படுத்திக் கொள்கிறார். இங்கே பெரியமூக்கி தன் மகள் கருவாச்சிக்குப் பாதப்பணி செய்வது போலப் பின்னாலே கருவாச்சி தன் மகன் அழகுசிங்கத்திற்கு நெற்றிப் பணி செய்கிறாள். அந்த இடத்தில்தான் இந்த உவமத்தை அதே தாய்மை உணர்வின் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்.
“ராமர் அணிலுக்குக் கோடு போட்டார்ன்னு சொல்ற மாதிரி” 6
மகன் அழகுசிங்கத்திற்குப் பத்துப்போட்டாளாம் கருவாச்சி. “அடுப்புல வறட்டோட்ட வச்சு அளவாக் கேப்ப மாவ வச்சா. வேணுங்கிற தண்ணிவிட்டுக் கெட்டிபடாம கிண்டுனா. களிப்பதத்துக்கு அது கூடி வாரப்ப ஒரு சிட்டிகை குங்குமத்தப் போட்டுக் கொழகொழன்னு எறக்குனா. ராமர் அணிலுக்குக் கோடு போட்டாடர்ன்னு சொல்ற மாதிரி அதை எடுத்து பிள்ள உச்சந் தலையிலே மூணுவெரலு இறக்கிவிட்டா” 7 இந்த இடத்திலும் இந்த உவமத்தைத் தன்னுடைய பதிவாகவே வைரமுத்து செய்திருக்கிறார். முதல் உவமத்தில் ‘மூன்று விரல்களின் செயல்’ உவமமாக, இங்கே இந்த இரண்டாவது பதிவில் அழகுசிங்கத்தின் நெற்றியில் விழுந்த மூன்று கோடுகளுக்கு அணிலின் மூன்று கோடுகள் உவமமாக்கப்பட்டுள்ளன. முதற்பதிவில் மூன்றுகோடு என இருக்க இரண்டாவது பதிவில் ‘கோடு’ என்று மட்டுமே பதிவிடப்பட்டுள்ளது. அழகுசிங்கத்தின் நெற்றியில் போட்ட கோடுகள் பொருள். அணிற்கோடுகள் உவமம். எனவே முன்னது வருடலுக்கும் பின்னது அழகுசிங்கத்து நெற்றியில் இடப்பட்ட பத்துக்கும் உவமங்களாய் அமைந்தன.
1.2.4. சீதையைத் தேடி அனுமார் போற மாதிரி
கம்பராமாயணத்தில் இன்றியமையாத் திருப்பங்களில் ஒன்று அனுமனின் இலங்கைப் பயணம். அவன் இராமனின் அரசியல் தூதுவனாக இலங்கை செல்லவில்லை. இராமனுக்குத் துணைவனாகச் செல்கிறான். இராமன் சேர்த்துக் கொண்ட தம்பிகளில் அனுமன் இலன் என்பதைப் புரிந்து கொண்டால் இராமனுக்கும் அனுமனுக்கும் நிலவிய நட்பினைப் புரிந்து கொள்ள முடியும். நீலன் உள்ளிட்ட எவரும் கடல்கடக்கும் துணிவில்லாத போது அத்துணிவைப் பெற்ற அனுமனைக் கேட்டுக் கொள்ள,
“ஓசனை ஒன்று நூறும் உள்அடி உள்ளது ஆக
ஈசன்மண் அளந்தது ஏய்ப்ப இருங்கடல் இனிது தாவி
வாசவன் முதலோர் வந்து மலையினும் இலங்கை வாழும்
நீசரை எல்லாம் நூறி நினைத்தது முடிப்பல்” 8என்னும் வைராக்கியத்தோடு சீதையைத் தேடிய அனுமன் புறப்படுகிறான். இந்த நிகழ்வைத்தான் வைரமுத்து கருவாச்சி அம்புலிப்புதூர் சென்ற தன் மகன் அழகுசிங்கத்தைத் தேடிச் சென்றாள் என உவமமாக்கி,
“சீதையைத் தேடி அனுமார் போற மாதிரி” 9
என்று பதிவு செய்திருக்கிறார். வினை, பயன், மெய், உரு என்னும் வகைபாடுகளின் அடிப்படையில் உவமத்தை நோக்கினால் இது வினையுவமம். ஆனால் அங்கே சீதை. இங்கே அழகுசிங்கம். அங்கே இராணவன் சிறையில் சிக்கியிருக்கும் சீதை. இங்கே விலைமாதர் வீட்டுக்குள் சிக்கியிருக்கும் பெற்ற மகன். அங்கே மற்றவன் மனைவியைத் தேடி நண்பன். இங்கே பெற்ற மகனைத் தேடி தாய். அது கடல் பயணம். இது காட்டுப்பயணம். இவற்றையெல்லாம் சிந்தையிலிருத்தி உவமத்தை நோக்கினால் நம்பிக்கை, வினைமுடிக்கும் திறன், தன்னல மறுப்பு, விளைவஞ்சா வினைத்திட்பம் என அத்தனையையும் உவமத்தால் பெற முடியும். இரண்டு வினைகளும் நேர்முக விளைவுகளையே தந்திருக்கின்றன என்று கொள்வதும் பொருந்தும்.
1.2.5. அசையாமல் சயனிக்கும் அரங்கன்
பொறுப்பற்ற மகனாக வளர்கிறான் அழகுசிங்கம். கரகாட்டம் பார்க்க அவனுக்குக் காசு தேவைப்படுகிறது. கொண்ணவாயனிடம் கேட்டுப் பார்க்கிறான். கிட்டவில்லை. ஆத்தா கருவாச்சியிடம் கேட்டால் கேவலம். களவாடத் திட்டமிடுகிறான். எங்கே திருடுவது? கருவாச்சியின் முந்தானை முடிச்சில் எப்போதும் காசிருக்கும். ஆனால் அவளோ மூணுதலைமுறை கண்ட கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கிறாள். முந்தானையைச் சுற்றித் தலைமாடாக மாற்றி அவள் படுத்திருக்கிறாள். எப்போதும் இருபக்கமும் அசைந்து படுப்பவள் அன்றைக்கு ஒருபக்கமாகவே ஒருக்களித்துப் படுத்திருக்கிறாள். அவள் படுத்திருந்த அந்தக் காட்சியைத்தான் வைரமுத்து,
“சீரங்கத்துல ரெங்கநாதர் ஒருக்களிச்சுப் படுத்த மாதிரி” 10
என உவமமாக்கியிருக்கிறார். உவமம் தெய்வமாக இருந்தாலும் அசதியில் நகராமல் உறங்கும் கருவாச்சிக்குத் திருவரங்கத்து அரங்கனின் பள்ளி கொண்ட நிலையை உவமமாக்கியது பொருத்தமான உவமங்களைப் பொருத்தமான இடத்தில் பொருத்திக் காட்டும் அவருடைய இலக்கியத் தொழில் நுட்பம் வெளிப்படுவதாகக் கருதலாம். ‘உயர்ந்ததன் மேற்றே உள்ளுதல் வேண்டும்’ என்பது இலக்கணமாதலின் கருவாச்சிக்கு அரங்கனை உவமமாக்கினார் என்றலும் பொருந்தும்.
1.2.6. இலக்குவன் பர்ணசாலையும் கொண்ணவாயன் குடிசையும்
வைரமுத்து முறையாகத் தமிழ் கற்றவர். கம்பராமாயணம் படித்திருக்கலாம். சித்திரகூடப் படலத்தில் இராமனுக்கும் சீதைக்கும் தங்குவதற்காக இலக்குவன் பர்ணசாலை உருவாக்கிய பக்குவத்தை ‘நேர்முக’ வருணனை போலக் கம்பன் பாடியிருக்கிறான்.
“நெடுங்கழை குறுந்துணி நிறுவி, மேல் நிரைத்து
ஒடுங்கல் இல் நெடு முகடு ஒழுக்கி ஊழுற
இடுஙகல்இல் கைவிசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியேதேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்
பூக்கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களின் சுவரும் சுற்றுறப்
போக்கி மண எறிந்து அவை புனலின் தீற்றியேவேறிடம் இயற்றினன் மிதிலை நாடிக்கும்
கூறின நெறிமுறை குயிற்றி, குங்குமச்
சேறு கொண்டு அழகுறத் திருத்தி திண் சுவர்
ஆறிடு மணியொடு தரளம் அப்பியேமயிலுடைப் பீலியின் விதானம் மேல்வகுத்து
அயிலுடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து
எயில் இளம் களைகளால் இயற்றி ஆறு இடு
செயலுடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே” 11கவிதையாக்கத்தின் அத்தனை தொழில்நுட்பங்களையும் உள்ளடக்கிய கம்பன் பாடல்களுக்கு உரையெழுதியது போல் வைரமுத்து கண்ட கொண்ணவாயன் கருவாச்சிக்குக் குடிசை அமைக்கிறான்.
“கருவாச்சிக்குண்டான சாணிக்குழியில் குடிசை போடுறதுன்னு முடிவாகிப் போச்சு……..மம்பட்டி எடுத்தான் கொண்ணவாயன். செடி செத்தையெல்லாம் செதுக்கி எறிஞ்சுட்டான்………பதினாறு மொழ நீளத்துல பத்தடி அகலத்துல அரைச்சாண் பள்ளத்துக்கு அஸ்திவாரமும் தோண்டிபுட்டான்………கொழச்ச மண்ணுருண்டைய பவளமும் கனகமும் கொடுக்க……காவக்காரச் சக்கணன் கோளாறு சொல்ல….. அஸ்திவாரத்து மேல மண்ணுவைக்க மதில் ஏறுது சரசரன்னு……..”
மறுநாளே தரைக்கு மண்ணடிச்சான். செம்மண்ணு மூணுவண்டி. கெணத்துமண்ணு பத்துவண்டி……… உருமா பெருமாத் தேவருக்கிட்ட பூவரசங்கால் ரெண்டு வாங்கி முன்னுக்க ஒண்ணும் பின்னுக்க ஒண்ணுமா நட்டு மூங்கிக் கம்புக ரெண்டு மாட்டினான்……”
கத்தாழைய அறுத்தான். நார் நாரா உரிச்சான். காயவச்சான் வெயில்ல. ஊறவச்சான் தண்ணியிலே…. பலம் வந்துருச்சு கத்தாழங்கயித்துக்கு…..மூணு பூவரசங்கம்பு வச்சு வேப்பங் குச்சிகள ஊடு குச்சிகளா நெருக்கியடிச்சுப் படபடன்னு உக்காந்து படல் பண்ணிப்புட்டான்.
அவன் நெஞ்சுல பரவுன சந்தோசம் கூன் வரைக்கும் புகுந்து குறுகுறுக்குது….. பத்தடி பின்னுக்கு வந்து அழகுபாத்தான் கொண்ணவாயன்” 12
கொண்ணவாயன் குடிசையைப் பார்த்து நிற்கிற பாங்கினைச் சுட்டுகிற வைரமுத்து,
“பஞ்சவடியில ராமனுக்கும் சீதைக்கும் கட்டிக் குடுத்த குடிசையை இலட்சுமணன் நின்னு அழகு பாத்தானோ இல்லையோ கருவாச்சிக்குக் கட்டிக் குடுத்த குடிசையைக் கொண்ணவாயன் கண்ணால கண்டு குளுந்து போனான் குளுந்து” 13
என இராமயணத் தொன்ம நிகழ்ச்சியை உவமமாக்கியிருப்பதைக் காணலாம். ‘அண்ணன் தங்கவேண்டும்’ என்னும் இலக்குவன் விருப்பத்தை மட்டுமே கம்பர் பாடியிருக்கிறார். இலக்குவன் தான் கட்டிய பர்ணசாலையைப் பார்த்தான் எனப் பாடவில்லை. ஆனால் கருவாச்சியின் கொண்ணவாயன் கருவாச்சிக்காகத் தான்கட்டிய அந்தக் குடிசையைப் பார்த்து மகிழ்கிறான். அந்த மகிழ்ச்சியையும் வைரமுத்து பதிவு செய்திருக்கிறார்.
1.2.7. பிட்டுக்குப் பட்ட பிரம்படி
கற்றலினும் பட்டறிவே ஒருவனை ஞானியாக்கும் என்பது வைரமுத்து கொள்கையாக இருக்கக்கூடும். அந்த நிலைப்பாட்டில் அவர் படைத்திருக்கும் ‘கருவாச்சி’ என்னும் பாத்திரத்தை உற்றுநோக்குவார்க்கு இந்தச் சிந்தனை வராமல் போகாது. காவியத்தின் பிற்பகுதியில் கருவாச்சியைச் சந்திப்பதற்கு வரும் ஞானியாகிய சாமியாரின் வினாக்களுக்குக் கருவாச்சி சொல்லும் விடைகள் ஒவ்வொன்றும் பட்டறிவின் வெளிப்பாடாகவே அமைந்திருக்கிறது. இதற்கு மூலமாகப் பட்டினத்தடிகளைக் கொள்ளுவதில் தவறில்லை. மனிதனுடைய பலம் எது பலவீனம் எது என்னும் சாமியாரின் வினாவிற்கு விடையளிக்கிறாள். அவள் தரும் விடை,
“பேச்சுத்தான் சாமி. மனுசன் பண்ண நல்லதும் அதான். கெட்டதும் அதான். இன்னைக்கி வரைக்கும் நாயும் நரியும் சிங்கமும் புலியும் காட்டுக்குள்ள அடிச்சுக்கிட்டு அலையுதுக. ஏன்னா அதுகளுக்குள்ள பேச்சு வார்த்த இல்ல. மனுசன் பிச்சுப் புடுங்கலத் தீக்கத்தான் பேச்சு வார்த்தை கண்டுபிடிச்சசான். பெறகு பேச்சு வார்த்தையே பிச்சுப் புடுங்கலாகிப் போச்சு. ஒரு சொல்லுல இருக்கு சாமி மனுசப்பொறப்பு மண்ணாகிறதும் பொன்னாகிறதும்” 14
கருவாச்சியின் இந்தப் பரிபக்குவமான விடையைச் சற்றும் எதிர்பார்க்காத சாமியார் அதிர்ந்து போனார். அவர் அந்தக்கரணங்கள் அனைத்தும் நிலைகுத்தி நின்றன. கருவாச்சியின் சொல் அவர் உடலிலும் மனத்திலும் ஏற்பட்ட அதிர்வலைகளையே,
“சிவபெருமான் வாங்குன பிரம்படி சீவராசி முதுகையெல்லாம் பதம்பாத்துச்சுண்ணு சொல்ற மாதிரி” 15
என்று உவமத்தால் விளக்கிக் காட்டுகிறார்.
“வானவர், மனிதர், நரகர், புள், விலங்கு, மாசுணம், சிதல், எறும்பு ஆதி
ஆனபல் சரமும் மலை, மரம், கொடி, புல் ஆதியா அசரமும் பட்ட
ஊனடை கருவும் பட்டன தழும்போடு உதித்தன உயிரில் ஓவியமும்
தானடி பட்ட சராசர சடங்கள் தமக்கு உயிர் ஆயினோன் தழும்பு” 16என்னும் திருவிளையாடற்புராணப் பகுதியைப் படித்துணர்ந்தார்க்கு உவமம் கொண்டு வைரமுத்து ஓவியமாக்கும் சாமியாரின் அதிர்வுகளைப் புரிந்து கொள்ள இயலும்.
1.2.8. மார்க்கண்டேயன் விடாத சிவலிங்கம்
ஆத்தா பெரியமூக்கியும் மகள் கருவாச்சியும் கூலிக்கு வேலைசெய்யக் கரட்டுக் காட்டுக்குப் போவார்கள். வேலைக்கு நடுவே கையில் கிடைத்த சுள்ளிகளைப் பொறுக்கிக் கட்டாகக் கட்டித் தலை சும்மாடு வைத்துத் தூக்கிக்கொண்டு திரும்புவார்கள். அப்படியொருநாள் திரும்பும்போது மழைபிடித்துக் கொள்ள, காட்டோடை வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். ஆத்தா கரையேறிவிட்டாள். ஆனால் கருவாச்சி கரையேறவில்லை. தலையில் வைத்திருந்த விறகுகட்டைத் தூக்கி எறியவும் மனம் வரவில்லை.
“மார்க்கண்டேயன் பிடிச்ச சிவலிங்கம் மாதிரி” 17
அந்த விறகுக்கட்டை அவள் தலையில் வைத்துப் பிடித்திருந்தாளாம். மார்க்கண்டேயனுடைய பதினாறு வயது வரையறுக்கப்பட்ட ஆயுள் இவன் செய்த தவத்தாலும் வழிபாட்டாலும் சிவனால் நீட்டிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டது என்பது தொன்மம். ஆனால் கருவாச்சியின் நிலை அத்தகையதன்று. வெள்ளத்தில் சிக்கியவள் வீட்டில் அடுப்பெரிக்கும் வறுமை நிலையை முன்வைத்து விறகுக்கட்டைக் கைவிட மறுக்கிறாள். வெள்ளத்தில் சிக்கிச் சாவோமா? தப்பிப் பிழைப்போமா? என்னும் நடுக்கத்தல் கருவாச்சி. வரம் கொடுத்து சிவன் கைவிட மாட்டான் என்னும் நம்பிக்கை மார்க்கண்டேயனுக்கு. இந்த உவமம் பற்றுதலின் உறுதிப்பாட்டிற்குரியது. எனினும் இருவேறு மனநிலைகளைக் கற்பார் உணர்வதற்கு வழிவகுக்கிறது.
1.2.9. சந்திரமதி புலம்பல்
வினை, பயன், மெய், உரு என்னுமாறு அமைந்த உவமங்களைச் சுவைப்பதற்கும் வரலாற்று நிகழ்ச்சிகள், தொன்ம நிகழ்வுகள் ஆகிய உவமங்களைச் சுவைப்பதற்கும் அடிப்படை வேறுபாடு உண்டு. பால்போல் இனிய சொல் என்றால் யாரும் புரிந்து கொள்ள முடியும். ‘கடன்பட்டான் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்றால் இலங்கை வேந்தனுடைய மனத்துன்பத்தை ஏதோ ஒருவகையில் அறிந்து கொள்ளாமல் கடன்பட்டான் நெஞ்சம்போல என்னும் உவமத்தைப் புரிந்து கொள்ள முடியாது. சந்திரமதியைப் போல் திம்சு புலம்பினாள் என்றால் சந்திரமதி புலம்பலை அறிந்து கொள்ள வேண்டும். அந்தப் புலம்பலை வல்லூர் தேவராச முதலியார் நெஞ்சம் நெக்குருக எழுதிக் காட்டுகிறார்.
“நிறையோசை பெற்ற பறையோசை அற்று நிரையாய் நிறைந்த கழுகின்
சிறையோசை அற்ற செடியூடு இறக்க விதி யார் இழைத்த செயலோ?
மறையோன் இரக்க வளநாடு அனைத்தும் வழுவாது அளித்த வடிவேல்
இறையோன் அளித்த மகனே! உனக்கு இதுவோ விதித்த விதியே” 18இந்தப் புலம்பலைத்தான் திம்சிடம் கண்டிருக்கிறார் வைரமுத்து. செய்திருக்கிற மாற்றம் என்னவென்றால் சந்திரமதி லோகிதாசனின் தாய். அவளுக்கும் அவள் கணவன் அரிச்சிந்திரனுக்கும் மகன் லோகிதாசனுக்கும் நேரும் துன்பங்கள் தெய்வம் சார்ந்த நிகழ்வுகள். தான் சுமந்து பெற்ற மகன் பாம்பு கடித்து இறந்துவிட்டான் என்பதைக் கேட்டுத் துடிதுடித்த சந்திரமதியின் புலம்பலை ஒரு நாடகக்காரியின் நடிப்புக்கு உவமமாக்குகிறாள் வைரமுத்து. கட்டையன் குடும்பத்தை வேரறுக்க திட்டமிட்டு முதலில் மாமனாரை வழிக்குக் கொண்டு வந்து தொடர்ந்து கட்டையனை வழிக்குக் கொண்டுவந்தாள். அழகு சிங்கத்துக்காகக் காத்திருந்தவளுக்குக் கட்டையன் வீட்டுக்கு ஆடு திருடச் சென்ற சூழல் பெரிதும் உதவியது. கூரையிலிருந்து கீழே விழுந்த அழகுசிங்கத்தைத் தன் மடியில் போட்டுக் கொண்டு,
“லோகிதாசனை மடியில் போட்டு சந்திரமதி மயான காண்டத்துல அழுகிற மாதிரி” 19
அழுதாளாம் திம்சு. போலிக்கண்ணீரை நீலிக்கண்ணீர் என்பர். அது வெள்ளையம்மா என்கிற திம்சுக்குப் பொருந்தும். நாவலைப் படிக்கிறவர்கள் திம்சின் இயல்புக்கும் அவள் புலம்பலுக்கும் தொடர்பே இல்லையென்பதை அறிந்து சந்திரமதியின் புலம்பல் பற்றி அறிந்து கொள்ள முனையக்கூடும். உவமம் பாசம் என்பதையும் பொருள் வேஷம் என்பதையும் புரிந்து கொள்வதால் பாத்திரப்படைப்பு இன்னும் தெளிவு பெறக்கூடும்.
1.2.10 வைரமுத்தின் உவமங்களில் அங்கதமும் அழகியலும்
மேற்கண்ட பத்திகளில் விரிவாக ஆராயப்பட்ட தொன்மங்களின் தொடர்ச்சியாக அழகியல் மற்றும் அங்கதச் சுவைகளை வெளிப்படுத்தும் உவமங்களையும் அவர் பயன்படுத்தியுள்ளமை அறியத்தக்கது.
- அம்புலிப்புதூர் பாலியல் தொழில் செய்வார் வீட்டில் மனையில் உட்கார்ந்திருந்த அழகுசிங்கத்தை “ஒத்தப் பிள்ளையார் மாதிரி”20 எனச் சித்திரித்துக் காட்டியிருப்பதும்,
- குடும்பம் இணைய வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் குழந்தையாகிய அழகுசிங்கத்தைக் கருவாச்சிக்குத் தெரியாமல் தூக்கிவந்து கட்டையன் தந்தையான சடையத் தேவருக்குக் காட்ட பகை பாராட்டிய சடையத்தேவர் அந்த நேரத்தில் குழந்தைக்குக் காட்டிய பாரா முகத்திற்கு “விசுவாமித்திரர் வச்சுருந்தாரு பாருங்க ஒரு மூஞ்சி”21 என உவமம் காட்டியிருப்பதும் அங்கதச் சுவைக்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
- கருவாச்சியின் உடல் உறுப்புக்களின் வனப்புக்கு “மதுரை மீனாட்சிக்கு இருக்குற மாதிரி சின்ன வாயி செப்பு உதடு”22 என்னும் உவம வண்ணனையும்,
- மழைக்கு முன்னால் அடிக்கும் காற்றொலியை “ஆகாயத்திலிருந்து ஆதிசேசன் எறங்கி வார மாதிரி” 23 என உவமத்தால் விளக்கியிருப்பதையும் அழகியலுக்கான தொன்ம உவமங்ளாகக் கருதலாம்.
1.3. வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள்
வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள் என்னும் பொதுத் தலைப்புக்கு உட்பட்டு அவருடைய நாவல்களில் ஒன்றான கருவாச்சி காவியத்துள் பயன்படுத்தப்பட்டிருக்கும் குறிப்பிட்ட தொன்மம் சார்ந்த உவமத் தரவுகளை மட்டும் ஆராய்ந்த வகையில் பெறப்படும் மெய்ம்மைகள் பின்வருமாறு வரையறுக்கப்படுகின்றன.
- பொருள் விளக்கம், அழகியல், அங்கதம் என்னும் உவமத்தின் பன்முகப் பயன்பாட்டிற்கு ஏனைய உவமங்களைப் போலவே தொன்மப் பதிவுகளையும் வைரமுத்து பயன்படுத்திக் கொள்கிறார்.
- வினை, பயன், மெய், உரு என்னும் நான்கு வகை வரையறை, சிறப்பு, நலன், காதல், வலிமை என்னும் நிலைக்களம் என்பவற்றின் வளர்ச்சி நிலையாகவே அவர் உவமங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
- பொருள் விளக்கம் என்ற நிலையோடு அமையாது, உவமத்தின் முழுப்பொருள் விளக்க ஆற்றலையும் அவர் பயன்படுத்திக் கொள்கிறார்.
- தொல்காப்பியம் தொடங்கி இன்றைய புதுக்கவிதைக் காலம் வரை தொன்மம் சார்ந்த பதிவுகள் உவமங்களாகவும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
- சைவம், வைணவம் ஆகிய சமயம் சார்ந்த இதிகாசப் பதிவுகளைக் காப்பியப் பாத்திரங்களின் உரையாடல்களில் பயன்படுத்திக் கொள்ளும் வைரமுத்து ஆசிரியர் என்ற நிலையில் அவரும் பயன்படுத்திக் கொள்கிறார்.
- கருவாச்சி காவியம் வட்டாரம் சார்ந்த பதிவாதலின் தொன்மத்தில் மக்களால் பெரிதும் அறியப்பட்ட பதிவுகளையே உவமங்களாகக் கொள்கிறார்.
- வைரமுத்தின் பதிவுகளில் பொதுவாக அங்கதமும் ஆதங்கமும் பிணைந்தே அமைந்திருக்கும். கருவாச்சி காவியத்தில் உள்ள தொன்மம் சார்ந்த பதிவுகளிலும் அது எதிரொலிப்பதைக் காணலாம்.
- தொன்மம் சார்ந்த உவமங்களை எதிர்மறைக் கருத்து விளக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வது சந்திரமதி – திம்சு இவர்களின் புலம்பலில் வெளிப்படுவதைக் காணலாம்.
நிறைவுரை
பொதுவான இலக்கியத் திறனாய்வுக் கோட்பாடுகள் வைரமுத்தின் படைப்புக்களை ஆராய்வதற்கு எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. அவருடைய படைப்புக்களிலிருந்தே அவற்றை அளந்தறியும் அளவுகோல்களாகிய திறனாய்வுக் கோட்பாடுகளை வடித்தெடுப்பது சரியாக இருக்கலாம். இது அவருடைய நாவல்களுக்கும் பொருந்தும். இத்தகைய நெறிகொண்டு அவருடைய அனைத்துப் படைப்புக்களின் உவமங்களை வகைமாதிரிகளாகத் தொகுத்தாராய்வது ஆய்வுலகத்தில் ஒரு புதிய தடமாகக் கருதப்படலாம். ஒரு குறிப்பிட்ட நாவலில் பகுத்து ஒதுக்கப்பட்ட தொன்மம் சார்ந்த உவமங்களைப் பற்றிய இந்த ஆய்வு அத்தகைய பெருநோக்கம் நிறைவேறுதற்கு உதவுமாயின் அதனையே தனது பயனாகக் கருதுகிறது.
சான்றெண் விளக்கம்
கல்கி பொன்னியின் செல்வன் , 3ஆம் அத்தியாயம், கொலைவாள், கோடியக்கரையில்
வைரமுத்து கருவாச்சி காவியம் ப 271
மேலது ,, ,, ப 28
மேலது ,, ,, ப 48
மேலது ,, ,, ப 101
மேலது ,, ,, க 141
மேலது ,, ,, க 141
கம்பர் கம்பராமாயணம். சி.கூ.படலம் பா.எண். 4732
வைரமுத்து கருவாச்சி காவியம் ப 250
மேலது ,, ,, 27
கம்பர் கம்பராமாயணம் சி.கூ.படலம் பா.எண. 2089-2092
வைரமுத்து கருவாச்சி காவியம் ப 295
மேலது ,, ,, ப 296
மேலது ,, ,, ப 322
மேலது ,, ,, ப 322
பரஞ்சோதி முனிவர் திரு.வி. புராணம் ம.சு.படலம் பா.எண்.55
வைரமுத்து கருவாச்சி காவியம் ப 103
வல்லூர் தேவராசர் அரிச்சந்திர புராணம் ப 998
வைரமுத்து கருவாச்சி காவியம் ப 239
மேலது ,, ,, ப 260
மேலது ,, ,, ப 144
மேலது ,, ,, ப 19
மேலது ,, ,, ப 131
துணைநூற்பட்டியல்
1. வைரமுத்து கருவாச்சி காவியம்
சூர்யா வெளியீடு
22, நான்காம் குறுக்குத் தெரு
டிரஸ்ட்புரம், சென்னை – 600 028
முதற்பதிப்பு – 20062. தொல்காப்பியர் தொல்காப்பியம்
தென்னிந்திய சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகம்
154 டிடிகே சாலை
சென்னை – 600 018
மறுபதிப்பு – மார்ச் 19673. வல்லூர் தேவராச முதலியார் அரிச்சந்திரபுராணம்
(இணைய தளம்)
ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):
‘வைரமுத்தின் உவமக் கோட்பாடுகள்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு
1. கவிஞர் நாவலாசிரியர் என்னும் இருமுகச் சிறப்பு வாய்ந்த வைரமுத்தின் நாவல்களின் உவமங்களைப் பற்றிய பெருங்களத்து ஆய்வில் குறிப்பிட்ட ஒரு நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள தொன்ம உவமங்களை மட்டும்; கட்டுரைப் பொருளாக்கியிருப்பது ஆய்வுநெறி பற்றிய தெளிவான புரிதலைக் காடடுகிறது.
2. கட்டுரையாளர் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் எனத் தெரிய வருவதால், தொடக்கவுரை, கட்டுரையமைப்பு, பத்திப் பிரிப்பு, உத்தி, தரவுகள் தொகுப்பு, வரையறை முதலியவை நெறியாளர் – ஆய்வாளர் இருவருக்கும் பெருமை சேர்ப்பதாகவே அமைந்திருக்கிறது.
3. கல்கி அவர்களின் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தொடக்க உவமத்துடன் செய்திருக்கும் கட்டுரைத் தொடக்கம், கட்டுரைப் பொருளின் கருவறை வாயிலுக்கே அழைத்துச் சென்றுவிடுகிறது.
4. ஏறத்தாழ 450 உவமங்கள் பயின்று வரும் ஒரு நாவலில் பத்துக்கும் குறைவான தொன்மம் சார்ந்த உவமங்களைப் பொருள் விளக்கத்தோடு சுட்டியிருப்பது பாராடடுக்குரியது.
5. மகனை மடியில் வைத்துச் சந்திரமதியின் உண்மைப் புலம்பலைக் கட்டையன்’ குடும்பத்தை முழுமையும் மடக்கி இறுதியாக அழகுசிங்கத்தையும் மயக்க முயலும் ‘வெள்ளையம்மா’ என்னும் திம்சின் போலிப் புலம்பலோடு எதிர்மறையாக்கி வைரமுத்து உவமித்திருப்பதை நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
6. இலக்குவன் சித்திரகூடத்தில் குடில் அமைந்த பாங்கினையும் கொண்ணவாயன் கருவாச்சிக்குக் குடிசை அமைத்த பாங்கினையும் மூலப் பதிவுகளோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது ஆய்வில் தரவுகளுக்கான உழைப்பின் அருமையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.
7. “வைரமுத்தின் பதிவுகளில் பொதுவாக அங்கதமும் ஆதங்கமும் பிணைந்தே அமைந்திருக்கும்.’ என்பதே ஒரு கருதுகோளாக அமைகிறது.
8. கருவாச்சி காவியத்தில் ‘சாமியார் வருகை ‘கதையோடு எள்ளின் முனையளவும் ஒட்டாத’ ஒரு பின்னிணைப்பாக அமைந்துவிட்டது என்பதும் ஒரு திறனாய்வுப் பார்வை. என்னதான் கருவாச்சியின் பட்டறிவு ஞானத்தை நோக்கியதாக இருப்பினும் அந்தப் பகுதியில் சாமியார் வினாக்களுக்கு அவள் தரும் விடைகள் இயல்பான பாத்திரப் படைப்புக்கு ஒப்பனை செய்வது போல அமைந்துவிடுகிறது. அவள் தந்த விடையால் உணர்ந்த சாமியாரின் அதிர்வுக்குச் சிவபெருமான் வாங்கிய அடி ஏற்படுத்திய அதிர்வுகளை உவமமாக்கியிருக்கும் பொருத்தமின்மையை உணர்த்தியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கும்.
9. சான்றெண் விளக்கத்தில் பயன்படுத்தப்பட்;டிருக்கும் நூல்கள் பற்றிய விவரமும் துணைநூற்பட்டிய்லில் தரப்பட்டிருக்கும் விவரமும் பொருத்தமாக இல்லை என்பதை ஆய்வாளர் கவனித்திருக்க வேண்டும்.
10. திரைப்படப் பாடலாசிரியராகவே அடையாளம் காணப்பட்டிருக்கும் வைரமுத்தின் படைப்பிலக்கியப் பரிமாணம், இதுபோன்ற ஆய்வுகளால் உயரக்கூடும்.
-

ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
சித்திரை 29 2051 செவ்வாய் (12.05.2017)
ஊடகத்தாருக்கு அறிக்கைசுமந்திரனைக் கட்சியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
1961 அறப்போர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழ்த் தேசியம் ஈழத்தமிழர் நலம் எனத் தமிழரசுக் கட்சி சார்ந்து பணிபுரிந்து கொண்டிருக்கிற மறவன்புலவு க. சச்சிதானந்தன் கோருகிறேன்.
சுமந்திரனைத் தமிழரசுக் கட்சியை விட்டுத் தூக்கி எறியுங்கள் என 2018 நவம்பர் 6இல் நான் திரு மாவை சேனாதிராஜா அவர்களுக்கு எழுதினேன்.
சுமந்திரனின் நாக்கு, கரி நாக்கு. தமிழை தமிழரை தமிழ் தேசியத்தை உணராத அறியாத புரியாத தெரியாத விரும்பாத ஒருவரின் நாக்கே சுமந்திரனின் நாக்கு என நான் அன்று கூறினேன்.
எனவே தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்குங்கள் எனத் தலைவருக்குக் கடிதம் எழுதினேன்.
அதற்கு முன்பு 30.12.2015இல் வட மாகாணசபையை முடக்குவதற்கு அக்காலப் பிரதமர் இரணில் விக்கிரமசிங்கர் எடுத்த முயற்சிக்கு சுமந்திரன் கைகொடுத்தார் எனக் குற்றம்சாட்டி எழுதினேன்.
சென்னையில் 100 அடி சாலையில் அமர்ந்திருந்த உயர்தர விடுதியொன்றில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையினர் 2015இல் நடத்திய கருத்தரங்கில் முதல் முதலாகச் திரு சுமந்திரனைச் சந்தித்தேன். ஈழத்தமிழரின் சார்பில் அவர் அங்கு பேசினார்.
அங்கே அவரின் பேச்சைக் கேட்டேன். இவருக்கும் தமிழுக்கும் தமிழருக்கும் தமிழ்த் தேசியத்திற்கும் என்ன தொடர்பு? இத்தகைய கரிநாக்கராக இருக்கிறாரே என மனத்துள் சினந்தேன்.
1961 முதலாக தமிழ் தமிழர் தமிழ் தேசியம் ஈழத்தமிழரின் நன்மை என்பவற்றுக்காக தமிழகத்தில் நானும் இணைந்து சிறிது சிறிதாகக் கட்டியெழுப்பிய ஈழத்தமிழர் ஆதரவுக் கொள்கையைப் போட்டு உடைத்தார் 2015இல் சென்னையில் சுமந்திரன்.
சிங்களத் தொலைக்காட்சி பேட்டியில் சுமந்திரன் கொடுத்த விடைகள் கரிநாக்கராக அவரை உறுதி செய்துள்ளன.
தமிழர் இயல்பிலேயே அறநெறியாளர். ஆயுதங்களை 400 ஆண்டுகளாக அறியாதவர். அவர்களை ஆயுதம் தூக்குமாறு தூண்டியோர் 1948இல் விடுதலைக்குப் பின் வந்த சிங்கள அரசுகள். சிங்கள அரசுகளும் சிங்களக் குண்டர்களும் தொடர்ச்சியாக 1952இல் 56இல் 58இல் 61இல் 72இல் 74இல் 77இல் 82இல் 83 நடத்திய தமிழர் மீதான கொடும் பயங்கரவாதத்தை அரச பயங்கரவாதத்தை நினைவுகூரச் சுமந்திரன் தவறிவிட்டார்.
அப்பாவிகளாக இருந்த தமிழ் இளைஞர்களை ஆயுத தாரிகள் ஆக்கிய அரச பயங்கரவாதத்தை, சிங்களத் தலைவர்கள் பலரையும் ஒப்புக்கொண்ட எதார்த்த நிலையை சுமந்திரன் அடிக்கோடிட்டுக் கூறாமல் விட்டார்.
ஏனெனில் அவர் தமிழ் தமிழர் தமிழ்த்தேசியம் என்பவற்றைக் கிஞ்சித்தும் அறியாதவர் கொஞ்சமும் உணராதவர்.
இப்பொழுதும் காலம் கடந்து விடவில்லை.
தமிழரசுக் கட்சியின் தலைவர் திரு மாவை சேனாதிராஜா அவர்களே முதற்கட்டமாக அவரைக் கட்சியிலிருந்து இடை நிறுத்துங்கள். விசாரணையைத் தொடங்குங்கள். அவர் வேட்பாளர் இல்லை என்பதை மக்களுக்குத் தெரிவியுங்கள்.
அவருக்கு வாக்களிக்க வேண்டாம் எனத் தமிழ் மக்களிடம் கூறுங்கள்.
வரலாற்றை அறியாத தமிழ் தேசியத்தில் ஊறாத தமிழ்த் தேசியத்தில் ஈடுபாடற்ற ஒருவரை, அகத்தே முரட்டுக் குணத்துடன் கொடிய நோக்கத்துடன் ஓநாயாகிப் புறத்தே ஆட்டுத்தோல் போர்த்திய பொய்யர்களான போலிகளை அடையாளம் கண்டு ஒதுக்குங்கள் என இயேசுபிரான் கூறியதாக மத்தேயு 7:15இல் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தம்.
-

வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-23
தி. இரா. மீனா
பசவேசர் தொடர்ச்சி
35. “பாம்பு கடித்தவரைப் பேசவைக்கலாம்
பேய் பிடித்தவரைப் பேசவைக்கலாம்
செல்வமெனும் பூதம் பிடித்தவரைப்
பேசவைக்க முடியாது காணீர்
வறுமை என்னும் மந்திரவாதி வந்தால்
உடனே கூறுவார்கள், கூடலசங்கமதேவா என்றே“36. “நீர் தப்பிய மீன் வாழ்வதில்லை
சிவகணங்களுடன் என்னைச் சேர், இலிங்கமே
சிவசிவா கூடலசங்கமதேவா
முந்தானை நீட்டிக் கெஞ்சுகிறேன்”37. “பானை செய்ய மண்ணே அடிப்படையாம்
தோடு செய்யப் பொன்னே அடிப்படையாம்
சிவநெறியறிய குருநெறியே அடிப்படையாம்
நமது கூடலசங்மதேவனை அறிய
அடியவர் கூட்டமே அடிப்படையாம்“38. “விழாவிற்கென வந்த பலியாட்டுக்குட்டி
தோரணத் தளிர்களைத் தின்றது
கொல்லப் போகிறார்கள் என்பதறியாமல்
வேகப் போகும் உடலை வளர்க்க முயன்றது.
மக்கள் பிறந்ததும் அவ்வாறே பெற்றதும் அவ்வாறே
கொன்றவர் மிஞ்சினார்களோ, கூடலசங்கமதேவா?”39. “எலே எலே மனிதா பேராசை வேண்டாமடா!
வளர்பிறை தேய்பிறையாம் செல்வம் நிலையல்ல
அழியா அரசு பெறவே கூடலசங்கம தேவனே
மறவாமல் பூசை செய்வாய்“40. “சாணத்தில் பிடித்த விநாயகனைச்
சம்பங்கி மலர் கொண்டு பூசித்தால்
அலங்காரம் ஆகுமன்றி நாற்றம் விடுவதில்லை.
மண் பொம்மையை விடாது நீரில் கழுவினால்
அடுத்தடுத்துச் சேறாவதல்லாது அதனியல்பு மாறாது.
உலகில் ஊறிய மனிதனுக்குச் சிவதீட்சை தந்தால்
கெட்டவன் ஏன் சிவபக்தன் ஆகான் கூடலசங்கமதேவா?”41.“தீட்டுண்டோ இலிங்கமிருக்கமிடத்திலே?
குலமுண்டோ ஜங்மனிருப்பிடத்தில்?
எச்சிலுண்டோ பிரசாதமிருக்குமிடத்தில்?
தூய்மையின்றிப் பேசுபவன் சூதகன் பாதகன்
களங்கமின்மை ,உண்மை ,ஐக்கியம் என்னும் மூவகை
மனவுறுதியால் கூடலசங்கமதேவனே
உனது சரணருக்கு இல்லாதது வேறு எதுவுமில்லை“எளிமை, தியாகம், நல்லெண்ணம், மிருதுவான இயல்பு மற்றும் கடினத் தன்மை, கவித்திறன், அச்சமின்மை தூயமனம் என்று அனைதியல்பு களையும் பெற்ற ஒரு சிறந்த நாயகனாகவே பசவேசர் தன் காலத்து மனிதர்களால் போற்றப்பட்டவர். ”பசவண்ணர் நடந்ததே வழி, எல்லா உயிர்களுக்கும் அவன் சொன்னதே வேதம்“ என்று மருளசங்கரன் என்னும் வசனக்காரரும்
“எங்கெங்கு பார்த்தாலும் அங்கங்கு பசவன் என்னும் கோடி
எட்டிப் பார்த்தால் இலிங்கத்தின் கூட்டம்
நெருங்கிப் பார்த்தால் பக்தியென்ய்ம் ரசமையா“என்று மடிவாளமாச்சையன் என்னும் வசனக்காரரும் கூறுகின்றனர். ”பசவண்ணரின் எண்ணம் இன்பப் பெருங்கடலையா“என்று சித்த ராமன் போற்றுகிறார். ”பசவனின் பெயர் சிவனின் முக்கிய கணங்கள் எல்லாவற்றின் பெயரிலும் தலையாயது“என்று பீமகவி போற்றுகிறார்.
தாசோஹத சங்கண்ணா
சரணர்களுக்கு அன்னம் படைப்பதே இவர் காயகம்.அதனாலேயே இவருக்கு “தாசோஹத சங்கண்ணா“என்பது பெயராகிவிட்டது. “மாதுளங்க மதுகேஸ்வரன்“ இவரது முத்திரையாகும்.
1.“காண்பவர் அனைவரும் ஆடமுடியுமா?
பேசுபவர் அனைவருமங்கலிங்கத்தின் யோகமறிவார்களா?
சாதனை செய்கின்றவர் அனைவரும் போர் புரிவார்களா?
போலியான யோகியர் அங்கலிங்கம் யோகமறிவாரோ?
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“2. “ பூனையை விழுங்கிய சேவல்
காலமறிந்து தன் குரலால் கூவமுடியுமா?
இலிங்கமறிந்த மனம் சம்சாரக் கூட்டத்தில் மூழ்குமோ?
இவ்வேற்றுமையறிந்து யோக உறவிலிருக்க வேண்டும்
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“3. “ கருவிக்குக் கட்டுப்பாடேயன்றி நாதத்திற்குண்டோ?
அறிவிற்குக் கட்டுப்பாடேயன்றி அறிவாளிக்குண்டோ?
அறிந்தேனெனும் பிரமை அறிந்துகொண்டேன் என்ற
அடையாளம் இரண்டும் இருக்கும்போது
எண்ணம் தூய்மையன்று.
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“4. “கல்லுள் நெருப்பின் நிலைபோல
ஆதியந்தம் இடையென நினைக்காமல்
எங்கு தொட்டாலும் பொறி எழுவது போல
அங்கம் முழுவதும் இலிங்கமான சரணனுக்கு
எந்நிலையில் பார்த்தாலும் இலிங்கமிருக்கும்
எதிரில் தான் மற்றவரெனும் தீட்டு அவனுக்கில்லை
பழத்துள் விடம் கலந்தால்
தின்றவனுக்கன்றி பழத்திற்குக் கேடோ?
இக்குணம் உடல் முழுவதும் இலிங்கமானவனுக்குரித்து.
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“5. “புற்றுக்குப் பாம்பாகி நீருக்கு நீர்ப்பாம்பாகி
கிளைக்குக் குரங்காகி அவரவர் போக்கில்
இறைச்சிக்குக் காத்திருக்கும் நரிபோலத் திரிவதேன்?
ஆயுள் முடிந்தபின்னர் மரணம்
செல்வம் போனபின் தரித்திரம் தப்பாது என்றறிந்த பின்
இறந்தது போல அமைதியாயிருக்க வேண்டும்
பக்தியின் வழியிது
சிவனால் இப்பக்கம் சுயம்புவினால் அப்பக்கம்
பேராற்றல் பாராய் மாதுளங்க மதுகேஸ்வரனே“[தொடரும்]
-

சேக்கிழார் பாடல் நயம் – 80 (இன்று நீர்)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
இன்று நீர்எனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்க
சென்று மாதவன் சேவடிபணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்நீங்கள் விரும்பிய பொருள் முன்பே என்னிடம் உள்ளபொருள்தானே, அதனை விரும்பியது எம்பிரான் எனக்குச் செய்த பெரும்பாக்கியம் ஆகும்! என்று கூறிய இயற்பகையார், மிகவும் விரைவாகத் தம்இல்லத்தில் புகுந்தார். அங்கே மனை வாழ்க்கை வாழ்கின்ற கற்பில் மேம்பட்ட தம் காதலுக்கு உரியவரைநோக்கினார். ‘’இதுவரை திருமண விதிப்படி என்னைத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் மடந்தையே, இன்று உன்னை இங்கே வந்துள்ள உண்மையான தவமுனிவருக்கு உரிமையாக்கி நான் கொடுத்து விட்டேன்!’’ என்றார்.
அதனைக்கேட்ட அவ்வம்மையார், ‘’இன்று எனக்குக் கட்டளையிட்டுச் செய்யுமாறு அருளியது இதுதான் என்றால், என் உயிருக்கும் உரிய நாதராகிய நீங்கள் கூறிய இவ்வொப்பற்ற செயலை உடனே ஏற்றுச் செய்யும் அளவன்றி, எனக்கு வேறு வகையான உரிமை உண்டோ?’’ என்று கூறினாள். உடனே அவர் தம் தனிச் சிறப்புடைய கணவரை வணங்கினார்; தொண்டராகிய இயற்பகையார், அவரைமிகுந்த பணிவுடன் வணங்கினார். திருமகளைவிடவும் பெரியவளாகிய அந்த அம்மையார் உடனே விலகிச் சென்று, அங்கு வந்திருந்த அந்தணரின் திருவடி பணிந்து வணங்கியபின் திகைப்படைந்து நின்றார்.
இந்தவிடத்தில் நமக்கு இயல்பாக எழும் சிந்தனைக்கும், வினாக்களுக்கும் உரிய விடைகள் இப்பாடலிலேயே நுட்பமாக அமைந்துள்ள சிறப்பை என்னவென்று சொல்ல! இதன் முதற் பாடலில் ‘’விதிமணக்குல மடந்தை’’ என்று அழைக்கிறார், கணவனின் சொல்லை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது திருமணத்தின் விதி. சைவநாயன்மார்கள் தம்மிடம் உள்ளவை யாவும் சிவன்சொத்தே என்று கருதுவர். இறைவனிடத்து அடியார்கள் செலுத்தும் பக்தி ‘’அடிமைத்திறம்’’ என்று போற்றப் பெறும்.
‘’எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே!’’
என்பது சம்பந்தர் வாக்கு. அப்பரடிகள்,
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னேஎன்று பாடுகையில் அடிமைத்திறத்தில் சிந்தனைக்கும் திகைப்புக்கும் இடமில்லை என்கிறார். மேலும்,
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னைக்
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே!என்றும்,
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே என்றும் பாடுகிறார்.யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்
என்றும்,
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்
என்றும் பாடி அடிமைத் திறத்தின் பெருமையைக் கூறுகிறார். திருமூலர்,
அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானேஎன்ற பாடலில் சிவனடிரின் மிகமிகத் தாழ்ந்த அடிமை நிலையை வரையறுக்கிறார். அதனால் தான் தம் மகனைஅறுத்து அடியாருண்ணக் கறியமுதாக்கியும், தம்மகளின் கூந்தலை அடியாரின் பஞ்சவடிக்கு ஆக்கியும் அடியார் பிறர், எந்தத் தயக்கமும் இல்லாது இறைவனுக்கு எல்லாம் நல்கினர். இதனையே,
‘’என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக்கு? ‘’என்கிறார் இயற்பகையார் மனைவியார். மேலும் இவ்வாறு கூறி வணங்கிய மனைவியாரைக் கணவனாரே வணங்கினார். இதனால் கடவுளுக்கு அளிக்கப் பெறும் பொருளையும் கடவுளாகவே வணங்கி அதனுடன் தனக்குள்ள தொடர்பையும் விலக்கத் துணிந்தமை புலனாகும். அவ்வாறே மனைவியாரும் கணவன் விருப்பப்படி வந்த அடியவர் பால் சென்று பின் திகைத்து நின்றார் என்கிறார் சேக்கிழார்! அம்மையார் திகைத்து நின்றமைக்கு நுட்பமான காரணம் உண்டு! இயற்பகையார் மனைவியார் ‘’கற்பின் மேம்பட்ட காதலுக்கு உரியவர்’’ என்று முன் பாடலில் குறிப்பிட்டார். அம்மாதரசியின் குடும்பக் கடமை என்ற தவத்தினைச் செய்தமையால் அவர் பெற்ற ஞானம், வந்த அந்தணரை இறைவனாகவே காணச் செய்தது. அதனால் அவருக்கு உண்டான அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அவரைத் திகைக்க வைத்தது, என்பதை நாம் உய்த்துணர்கிறோம்! திருமகள் கணவனின் சங்கற்பத்தால், சீதையாகி அவனுக்காகத் தாமே சிறையில் இருந்தமை, அசுரன் வீழ்த்தக் கடலில் கடலில் மூழ்கியமை போன்றவை திருமால் அவதரித்தபோது அவருக்காகத் தாமும் அவதரித்துத் தாழ்ந்து வாழ்ந்த தேவர்குலத் திருமகளின் பெருமையாகும். ஆனால் எளிய மானிடப் பெண்ணாகிய இயற்பகையார் மனைவியார், கணவனின் கொள்கைக்குத் துணைபுரிந்த செயலால் திருமகளை விடப் பெரியவள் ஆனாள் என்பதை உணர்த்தவே, இப்பாடலின் இறுதியில் ‘’ திருவினும் பெரியாள் ‘’ என்ற தொடர் அமைந்தது! மீண்டும் பொருளுணர்ந்து இப்பாடலைப் பயில்வோம்
இன்று நீர்எனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்க
சென்று மாதவன் சேவடிபணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள் -

எழுவகைப் பெண்கள் – 16
அவ்வைமகள்
தலைமுடியைப் பற்றிய அறியாமையும் அறிவுப்பிழையும்
சீப்பு பற்றி நாம் பேசிவருகிற வேளையில், அமெரிக்கர்களுக்கு தலைமுடி பற்றிய கவலையும் கரிசனமும் இப்போதுள்ளபோல முற்காலங்களில் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் என்றார் அந்த இராணுவ அதிகாரி.
ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் விளக்கினார்:
200 ஆண்டுகளுக்கு முன்புவரையில், தலைக்குக் குளிப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களாகத்தான் அமெரிக்கர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், குளிப்பது என்ற பழக்கம் கூட அவர்களுக்கு இல்லாமல் தான் இருந்திருக்கிறது.
வாஷிங்க்டன் டீ.சி. யில் உள்ள புராதன வரலாற்று அருங்காட்சியகமான ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் பண்டைய சீப்புகள் உள்ள பிரிவில், இந்த வாசகங்களை நான் பார்த்திருக்கிறேன்.
ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தின் வெளியீடு ஒன்றிலேயும் கூட இதே வாசகத்தை நீங்கள் பார்க்கமுடியும். இந்த இணைப்பைப் பாருங்கள் என்று தனது கணினியில் காண்பித்தார் https://www.si.edu/spotlight/health-hygiene-and-beauty/hair-care
நீங்கள் முன்பு சொன்னது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே தான் குளியலின் முக்கியத்துவமே தெரிந்திருக்கிறது – அதன் பின் தலைமுடியின் பால் கவனம் மிகுந்திருக்கிறது என்றார்.
மிகச்சரியாகவே ஆய்ந்து சொன்னீர்கள். நன்றி குறித்த தொடர்ந்தேன்.
பார்க்கப் போனால், இங்கு உள்ள உண்மை கொஞ்சம் அறுவறுப்பான உண்மைதான்! ஆங்கிலேயர்களைப்போல சுத்தமில்லாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம். தொற்று வியாதிகளின் மொத்தச் சொந்தக்காரார்கள் ஆங்கிலேயர்களே என்பதும் கூட உலகறிந்த ரகசியம்.
ராட்சத்தனத்தைப் பயன்படுத்தி, எல்லோரையும் மிரட்டியும், காயப்படுத்தியும், கொன்றும், போரிட்டும், அடக்குமுறை செய்து ஆங்கிலேயர்கள் பிறரை அடிமை செய்து வாழ்ந்த காலம் முழுதும், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் தொற்று நோய்களை – அதுவும் கடுமையான தொற்றுநோய்களை – கொள்ளை நோய்களைப் பரப்பினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுமையுமே தொற்றுநோய்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது என்பதற்கு ஆங்கிலேயர்களே முக்கிய காரணம்.
ஆமாம்! இது சத்தியம் – என்று அவர் தொடர்ந்தார்: எங்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளான அமெரிக்க இந்தியர்கள், அதாவது செவ்விந்தியர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்று நோய்களால் கொத்து கொத்தாய் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே மாண்டு வீழ்ந்தனர். அவர்கள் போரிட்டு எங்கள் இந்தியர்களை அழித்ததைக் காட்டிலும், மிக அதிக எண்ணிக்கையில் தொற்று நோய்களைப் பரப்பியே கொன்றனர். எங்கள் பூர்வீகச் செவ்விந்தியர்கள் குலமே இன்று அழிந்துபோய், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் இருப்பதன் காரணமே ஆங்கிலேயர்கள் தாம்!
இவ்வாறெல்லாம், மனிதகுலத்தை பல்லாற்றானும் நாசம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லவா? இந்தப் பாவத்தை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்களோ? என்றார்.
நாம் இப்போது தலைமுடி மீது நம் கவனத்தை திசை திருப்பலாமா என்று கேட்க, மீண்டும் தலைமுடியில் எங்களுடைய பேச்சு தொடர்ந்தது.
ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்றுவியாதிகளில் தலைமுடியே – தொற்றுச் சேமிப்பு வங்கியாக, தொற்று ஊடகமாக, தொற்றால் பாதிக்கப்பட்டப் பிரதான உடற்பொருளாக இருந்தது என்று நான் சீப்பு பற்றிப் பேசும்போதே சொன்னேன் அல்லவா – பத்தொன்பதாம் நூறாண்டின் துவக்கத்தில் கொள்ளை நோய்களின் போது, ஊரெங்கும் மனிதர்களின் தலையிலிருந்து உதிர்ந்த முடியைச் சேகரித்து – எரிப்பது என்பது முக்கியமான துப்புரவுப் பணியாக உலகம் முழுவதும் இருந்தது என்றால் நீங்களே தலைமுடியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.
நிச்சயமாக உணர்கிறேன் – உலகில் பலபேர் இக்காலகட்டத்தில் வழுக்கையாகிப் போனார்கள் என்று கூடப் பார்த்தோமே – என்றார்.
ஆக, உடம்பின் உள்ளீடாகவோ – வெளியீடாகவோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் – முடி முதலில் பாதிக்கப்படுகிறது என்று புரிகிறது அல்லவா?
சரி, நம் மனநிலை பாதிக்கப்பட்டாலும் லும் கூட நம் தலைமுடி பாதிக்கப்படுமா? என்றார்.
நம்முள் ஏற்படும் சிறு சிறு உணர்ச்சிப் பிறழ்வுகள் கூட, தலைமுடியைச் சென்றடைகின்றன என்றால், மனநிலை பாதிப்பு எவ்வாறு தலைமுடியை பாதிக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.
பிரிவாலும், தனிமையாலும் வருந்துபவர்களுக்கு பொடுகு உண்டாகும். மனக்குழப்பம் ஏற்பட்டால் – முடி கொட்டும் – பிறரது அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களுக்கு சொட்டை விழும். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தீண்டாடுபவர்களுக்கு வழுக்கை உண்டாகும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுபோன்றே பாலியல் உணர்ச்சிகள் மிகினும் குறையினும், முடி அதனை வெளிக்காட்டிவிடும். பெண்மை மிகுந்த ஆண்களும் ஆண்மை மிகுந்த பெண்களும், சிலபல முடிப்பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதும் கூட, ஒரு பொது அறிவாகவே நம்மிடையே விளங்கி நிற்கிறது.
தலைமுடியைப் பற்றி பல்வேறு பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் இருக்கின்றனவே என்றேன்.
தலைமுடியை நம் உடலின், First Responders – முதன்மைப் போராளிகள் – அல்லது முதன்மை பதிலிருப்பான்கள் என்று சொல்வதே தகும் – எனலாமா என்றார்.
ஆம்! அது தலைமுடிக்கு மிகப்பொருத்தமான பெயர்ச்சூட்டல் – நன்றி எனத்தொடர்ந்தேன்.
நம் உடலைப் பாதுகாக்க நம் தலைமுடி ஓவ்வொரு நொடியும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறது – தொடர்ந்து போராடுகிறது – நாம் விழித்திருக்கும்போது மட்டுமல்ல – நாம் உறங்கும் போதும் கூட.
நம்முள் ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் நம் தலைமுடி தாங்கி, அந்தத் தாக்கங்களையெல்லாம், கழிவாக்கித் தன்னுள் சேகரித்து, வெளித்துப்பும் அற்புதமான பணியை நம் தலைமுடி செய்து கொண்டு வருகிறது.
அதுபோன்றே புறத்திலிருந்து ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் தான் தாங்கி வெளித்துப்பும் அற்புதமான பணியையம் நம் தலைமுடி ஓயாமல் செய்துகொண்டிருக்கிறது.
ஆக, தலைமுடியை, இருபுறமும் கூர்மை கொண்ட கத்திபோன்றது எனலாம் – உள்கிளம்பும் அரக்கரையும், புறத்திருந்து வரும் அரக்கரையும் ஒரே நேரத்தில் சளைக்காமல் தாக்கும் மாபெரும் ஆயுதமாக, ஒவ்வொரு தலைமுடியும் செயல்படுகிறது.
தலைமுடிக்கு பராக்கிரம பலம் இருக்கிறது போல் தெரிகிறதே என்றார்.
ஆமாம் – அப்படியேதான் – எங்கள் நாட்டின் புராதன மருத்துவமுறைகளுள் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம் தலைமுடியை – எலும்பும் – தசையும் சேர்ந்த தனித்துவ உறுப்பு என்கிறது.
இது ஏறக்குறைய, தலைமுடி நரம்புகளின் தொடர்ச்சி எனும் செவ்விந்தியக் கோட்பாட்டுக்கு ஒத்துப் போவதாகவே உள்ளது. ஏனென்றால், எலும்பு, தசை, நரம்பு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து இயங்குவன. இயக்கத்தில், ஒன்றை விட்டு இன்னொன்றைப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒருங்கிணைந்த பணியை எலும்பும், தசையும், நரம்பும் செய்கின்றன.
ஆங்கில மருத்துவமுறை தலைமுடியை, உடல் ரோமத்தை, நகத்தை, தோலின் ஓட்டுமானம் (Appendage) என்று சொல்லுகிறதே என்றார்.
ஓட்டுமானம் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டால் பொறுப்பு கழிகிறது அல்லவா? தலைமுடி இல்லாமலும் உயிர் வாழமுடியும் என்பதால் ஆங்கில மருத்துவம் தலைமுடி பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், பிறந்த எவரொருவரும் நல்லவிதமாக, ஆரோக்கியமாக, சுயமதிப்புடன், அழகாக, மரியாதைத் தோற்றத்துடன் வாழவேண்டும் என்பது முக்கியமல்லவா? – நல்ல ஆரோக்கியமான தலைமுடி இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்? என்றேன்.
ஆமாம்! அழகான – கண்ணியமான – ஆரோக்கியமான – தோற்றம் அதி முக்கியம். அதற்காகத்தானே அனைவருமே ஓயாமல் பிரயாசைப் படுகிறோம்! தோற்ற அழகு என்றால் தலைமுடி தானே பிரதானம். எனவே, தலைமுடியை, தோலின் ஓட்டுமானம் என்னும் ஆங்கில மருத்துவ சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே! என்றார்.
ஆங்கில மருத்துவ முறையின் பலவீனமே அதன் அணுகுமுறை சித்தாந்தமே. நோயின் குறிகளை மட்டுமே குணப்படுத்துவது என்கிற நோக்கில் செயல்படுவதால் பெரும்பாலும், ஆங்கில சிகிச்சை முறைகள், நோயைத் தணிப்பதில்லை. மாறாக நோயாளி, தொடர்ச் சிக்கல்களுக்கும் தொடர் சிகிச்சைக்கும் இட்டுச் செல்லப்படுவார்.
புராதனமான இந்திய மருத்துவ முறைகள் கொண்டுள்ள சித்தாந்தம் வேறானது – நோயின் குறிகளை நீக்குவது இம்முறைகளின் குறிக்கோளல்ல. நோயை முற்றிலுமாகத் தணிப்பது தான் குறிக்கோள். எனவே, பாரம்பரிய மருத்துவச் சிகிச்சைகளின் வழிமுறைகள் வேறானவை.
பாரம்பரிய முறைகளில், முதன்மையாக, நோய் வராமல் தடுப்பதில் மட்டுமே மேலார்ந்த கவனம் செலுத்தப்படுகிறது. எனவேதான் மருத்துவம் என்பது வாழ்வியல் முறையானது.
எனவேதான், அன்றாடப் பழக்க வழக்கங்களும் உணவும் அவரவர் பாரம்பரிய சமூகப் பண்புகளுக்கு ஏற்புடையதாய் – பெண்-ஆண் என்கிற வேறுபாட்டுக்குரிய விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.
தலைமுடி என்பது ஒரு பாதுகாப்புக் கவசமாய் – நல்லரணாய் நம்மைக் காப்பது என்பதால் – தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளை எவரும் எழுப்பிக்கொண்டுவிடக்கூடாது என்பது எவரொருவருக்கும் தெரிந்திருந்த சூழல் எங்கள் நாட்டில் எல்லோருக்குமே இருந்தது.
தலைமுடிக்கு பழுது ஏற்படக்கூடாது என்றால் – அதை ஒவ்வொருநாளும் கண்ணும் கருத்துமாய்ப் பராமரித்துப் பாதுகாக்கவேண்டும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.
எனவேதான், தலைமுடியை நன்கு பராமரித்து, பலப்படுத்தி, வெகு ஆரோக்கியமாய் அதனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் நித்திய கட்டளையானது. இந்த நித்தியக் கட்டளை குடும்ப வாழ்வில் நிலை நிறுத்தப் பட்டது.
தலைமுடிப் பராமரிப்பு முறயை எங்கள் முன்னோர்கள் மிகுந்த அறிவியல் நுணுக்கங்களோடு, வெகு கவனத்தோடு, தயாரித்து அதனை தினசரிப் பழக்கத்தில் ஏற்றினார்கள்.
ஒரு செயல்பாடு பழக்கமாக மாற எத்தனை முயற்சி தேவை – என்பதை எண்ணிப் பார்க்கிறேன் – உங்கள் மூதாதையர்களுக்கு என் மானசீகமான வந்தனங்கள் என்றார். நன்றி சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.
அவரவர்களே அவர்களது தலைமுடியைப் பராமரித்துக் கொள்ளுவது கூடாது என்பது எங்கள் நாட்டில் தலையாய நியதியாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் உண்டு, ஒன்று: நம்மால் நம் தலைமுழுவதையும் பார்க்கமுடியாது – பெரும்பாலான சிக்கலான மற்றும் தீவிரமான தலைமுடிப் பிரச்சினைகள் தலை உச்சியிலும், சுழியைச் சுற்றியும் ஏற்படுவனவே ; இரண்டு: தலைமுடி என்பது இரத்த சம்பந்தம் உடையது.
இரத்த சம்பந்தம் என்கிறீர்களே – புரியவில்லை – விளக்கமுடியுமா என்றார் – தொடர்ந்தேன்.
நான் ஏற்கனவே சொன்னபடி, நம் தலைமுடி என்பது நம் குடும்பத்தின் பாரம்பரியத் தன்மையைக் கொண்டு தான் உருவாகிறது. ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த குழந்தைகள் முடியில், ஒன்றேயான மரபணுச் சங்கேதத்தோடு பிறக்கிறார்கள். இதுதான் முடியின் இரத்த சம்பந்தம் என்பது. இந்த மரபணுச் சங்கேதத்தை வைத்துத்தான் தடவியலில், முடியை வைத்த்துக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.
இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கு அடிப்படையில் பாச உணர்ச்சி இருப்பது இயல்பு. நம் தலைமுடி நுண்ணிய உணரி – இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் தொடும்போதும் கையாளும்போதும் நம் தலைமுடி குதூகலம் அடைகிறது, பாதுகாப்பை உணர்கிறது.
இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவர் மற்றொருவர் தலையைத் தொடுவது அல்லது வருடுவது சொந்த உரிமையாகும். ஆனால், பிறர் நம் தலையைத் தொடுவதோ வருடுவதோ உரிமை மீறல் என்று பொதுவாகக் கருதப்படுவது உண்டு.
பெண்களைக் காதல் வலையில் சிக்க வைப்பவர்கள், பெண்களின் தலை மற்றும் தலைமுடியை முதலில் குறி வைப்பார்கள் என்றும் கூறப் படுகிறது. இதுபோன்றே தலையைத் தொட்டும் தலைமுடியைத் தொட்டும் பிறரைத் தன் பால் கவர்ந்திழுக்கும் வசியமுறைகள் கூட தாந்த்ரீக வழிமுறைகளில் காணப்படுவதினை அறிகிறோம்.
கணவன் – மனைவிக்கிடையே அன்பு உருவாக்கம் மற்றும் கூடல் முன் விளையாட்டுக்களில் தலைமுடியின் வேர்க்காலில் சுரக்கும் சிலநுட்ப திரவியங்கள் தூண்டல் ஊடகங்களாகச் செயல் படுவதையும் அறிகிறோம்.
குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரின் தலைமுடியை வாருவது, பராமரிப்பது, அழகு படுத்துவது எல்லாம் – பாசப்பிணைப்பை மேலும் பிணைப்பதோடு குடும்பத்தின் ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்யத்தைப் பாதுகாக்க உதவுகிறது.
சிறியவர்களின் தலையை தினந்தோறும் எண்ணெய் தடவி வாருவது என்பது பெரியவர்களின் அன்றாடக் கடைமையானது இக்காரணத்தால் தான்.
அன்றாட வேலைப் பட்டியலில், ,தலை வார, கட்டாயமாகக் கணிசமான நேரம் ஒதுக்கப்படும். பாட்டியோ, அம்மாவோ, மூத்த சகோதரியாயோ, எவரோ ஒரு பொறுப்பான மூத்த பெண்மணி, தலைவாரும் பணியை சிரத்தையுடன் மேற்கொண்டு செய்வார்.
இந்தப் பழக்கத்தினால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலைமுடியும் ஒவ்வொரு நாளும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதோடு அல்லாது – முடி சம்பந்தமான எந்த ஒரு சிறிய பிரச்சினையும் முளையிலே கண்டுபிடிக்கப்படும் அதற்குண்டான சிகிச்சை உடனடியாக வீட்டிலியேயே வழங்கப் பட்டுவிடும்.
தலைமுடியை உடலின் நுட்பமான உறுப்பாகவே இந்தியர்களின் பண்டைய உலகம் கருதி வந்ததால், வெகு சிறப்பான வீட்டுப் பராமரிப்பு முறைகளை அது ஆய்ந்து அறிந்து நிலைப்படாக்கியது.
பராமரிப்பு தான் தலைமுடியின் பாதுகாப்புக்கு முதன்மையானது என்பது இந்தியர்களின் உறுதியான நம்பிக்கை – என்று நான் முடித்தவுடன் அவர் சொன்னார்:
ஆமாம் ஆமாம்! செவ்விந்தியர்கள் இன்றும் கூட, தனது தலைமுடியை குடும்பத்தினர் அல்லாத எவரையும் தொட அனுமதிப்பதில்லை. சலூன்களைலிருந்து அவர்களை இன்றும் விலகியே நிற்கிறார்கள்.
சலூன்கள் எல்லாம் தற்கால உற்பத்திகளே. அதுவும் பெண்களின் இன்றைய விரித்துத் தொங்கவிடும் தலைமுடி அலங்காரங்கள் பெரும்பாலும் சலூன்களாலும் விளம்பரங்களாலும் பெருகினவையே. இந்தத் தலைவிரிகோலத்ததால், இன்று ஏற்பட்டிருக்கிற தலைமுடிப் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா?
இன்று கடைகளில் விறக்கப்படும் அனைத்து தலைமுடி தொடர்பான பொருட்களிலும் வியாபார நோக்கம் மட்டும் தான் இருக்கிறதே தவிர தலைமுடி ஆரோக்கியத்தின் நோக்கம் அங்கு இல்லை. மேலும் மேலும் அப்பொருட்களை வாங்கி உபயோகிக்க வேண்டும் என்கிற தேவையைத் தொடர்ந்து மக்களிடையே (குறிப்பாக பெண்களிடையே) தக்கவைக்கவேண்டும் என்கிறதான நெருக்கடியை ஏற்படுத்தும் சாகசம் நிறைந்த வணிக உலகத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு நம் தலைமுடி இன்று திக்குமுக்காட்டிக் கொண்டிருக்கிறது.
உங்கள் பெண்களைப் போலவே எங்கள் பெண்களும், இப்போது, தலைமுடி பராமரிப்புக்கென மிக அதிக அளவில் செலவழிக்கிறார்கள்.
வீட்டிலேயே எளியவழிகளில் தினசரிப் பழக்கமாக, வளமாக தலைமுடியைப் பராமரிக்கும் வழி தெரிந்தும் கண்மூடித்தனமாய், நவீன மோகத்தில் எங்கள் பெண்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்.
இதில் அதிர்ச்சி தரும் சேதி என்னவென்றால், சலூனில் செய்யப்பட்ட அலங்காரத்தைகே கலையாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற அவாவில் இன்றைய நவீனப் பெண்கள் தலைக்கு குளிப்பதைக்க கூட குறைத்துக் கொண்டுவிட்டார்கள் அல்லது முற்றிலுமாக விட்டுவிட்டார்கள்.
இன்று, சலூன் பெஞ்சில் படுத்தபடி, சலூன் பணியாளர், தலைமுடியை அலசிவிட்டுப் புது அலங்காரம் செய்யும் நிலையோடு எங்கள் பெண்கள் வாழ்க்கை மாறிப்போயிருக்கிறது.
நெருக்கடிமிக்க சந்து பொந்துகளிலெல்லாம் சலூன்கள் – அழகு நிலையங்கள் – சுகாதாரக் குறைபாட்டுடனே தான் எல்லாம் அங்கு நடக்கின்றன. இருப்பினும், இன்றைய காலத்தின் கோலம் பெண்களும் ஆண்களும் சலூனில் தஞ்சம்.
போலிக் கவர்ச்சியும், வேதிப் பொருட்களின் பூச்சுமாக பெண்களும் ஆண்களும், செயற்கை மிகுந்த ஓப்பனையுடன் – ஜீவ உரம் தாழ்ந்தது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தாழ்மையை என்னென்று சொல்வது?
வருத்தமாயிருக்கிறது – உங்கள் நாடு ஒரு ஞான பூமி ஆயிற்றே! உலகம் முழுமைக்கும் உடல் நலத்தில் ஞான ஒளி காட்டி வழி நடாத்திச் செல்லும் பெற்றி பெற்ற ஒரு நாட்டில், இவ்வாறான சீரழிவுகள் நேர்வது உண்மையிலேயே என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்றார்.
இன்று தலைமுடியைப் பற்றி அறியாமை மட்டுமல்ல அறிவுப் பிழையும் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் நம் உடல் நலனை, நம்மிடமிருந்து விலக்கி வைக்குமாறு நாம் அனுமதித்திருக்கிற மூடத்தனம் இன்றைய அடையாளமாயிருக்க்கிறது என்றார்.
(மேலும் பேசுவோம்)
-

நாலடியார் நயம் – 16
நாங்குநேரி வாசஸ்ரீ
16. மேன் மக்கள்
பாடல் 151
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.அழகிய இடத்தினை உடைய
ஆகாயத்தில் விரிந்த நிலவினைப்
பரப்பும் சந்திரனும் பெரியோரும்
தம்முள் பெரும்பாலும் ஒப்பாவர்
திங்கள் தம் களங்கத்தைப்
பொறுப்பதுபோல் பெரியோர்
பொறுக்காது தவறு நேருங்கால்
தம்முள் வருந்தி மெலிவர்.பாடல்152
இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் – விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?கடும்வேகத்துடன் நரியின் மார்பைக்
கிழித்த அம்பை விட சிங்கத்தை
அழிக்க விடப்பட்ட குறிதவறிய
அம்பு உயர்ந்ததாம் அதுபோல்
முடிந்தாலும் முடியாவிட்டாலும்
மேலோர் பழியற்ற செயலையே
மனதிற்கொண்டு செய்வர்.பாடல் 153
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் – உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.நரம்புகள் வெளித்தோன்றுமாறு
நலிந்து வறுமையுற்றாலும்
நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து
நாவால் இரத்தலெனும் குற்றம்செய்ய
நடந்து பிறரிடம் செல்லார்
நல்லறிவைக் கவறாகக் கொண்டு
நன்முயற்சியெனும் நாரினால்
நெஞ்சத்தைக் அடக்கிக் கட்டி
நற்செயலை உள்ள பொருள்கொண்டு
நன்கு ஆற்றுவர் மேலோர்.பாடல் 154
செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.நல்ல மலைகள் உள்ள
நாட்டுடை மன்னனே!
போகும் வழியில் ஒருநாள்
பார்த்தாலும் அவருடன்
பலநாள் பழகியதுபோல்
நட்புகொள்வர் மேன்மக்கள்
தொடர்ந்து சிலநாள் நடந்தால்
கல்மிகுந்த மலையும் தேய்ந்து
காலடிபட்டு வழி உண்டாக்கும்
பலநாள் பழகிப் பின் வரும் நட்பில்
பெருமையில்லை மேன்மக்கள் நட்பே
பெருமை வாய்ந்தது.பாடல் 155
புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.அரும் நூற்பொருளறியாப் பயனற்றவரின்
அவையைச் சார்ந்த கல்லா ஒருவன்
பொருத்தமற்று உரைப்பனவற்றை
பலர்முன் சுட்டிக் காண்பித்தால்
பல்லோரிடை அவனுக்கு அவமானம்
விளையும் என எண்ணி மனம்
வருந்தினாலும் அமைதியாய்க்
கேட்டிருப்பர் அறிவுடையோர்.பாடல் 156
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.கரும்பைப் பல்லால் கடித்தாலும்
கணுக்கள் உடையுமாறு நெரித்து
ஆலையில் சாறுபிழிந்து
அருந்தினாலும் இன்சுவை உள்ளதே
அத்தகு மேன்மக்களோ
மனம் புண்படும்படி
மற்றோர் இகழ்ந்துரைத்தாலும்
தம் வாயால் வசை கூறார்.பாடல் 157
கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.குற்றமற்ற அறிவுடையோர்
களவு செய்யார் கள் அருந்தார்
தள்ளத்தக்கவைகளைத் தள்ளி
தூயவராய் மற்றோரை அவமதியார்
தவறியும் தம் வாயால் பொய்யுரையார்
தம் நிலைகெட்டுத் தளர்ந்தாலும் வறுந்தார்.பாடல் 158
பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.அன்னியரின் இரகசியம் கேட்பதில் செவிடனாவும்
அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாவும்
அடுத்தவரில்லா நேரம் பழி பேசுவதில் ஊமையாகவும்
அமைந்தவனுக்கு எவ்வித அறமும் கூறவேண்டா.பாடல் 159
பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப – என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.நற்பண்பில்லாக் கீழோர் பல
நாட்கள் வந்து கொண்டிருப்பவரையும்
நம்மிடம் பலன் எதிர்பார்ப்பவர் என
நம்பி அவமதித்து ஒதுக்குவர்
நற்குணம்நிறை மேலோர்
நாடி வருபவர் எதைக் கேட்டாலும்
நல்லது என்று கூறி மகிழ்ந்து
நாளும் நன்மையே செய்வர்.பாடல் 160
உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; – உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.செல்வம் உடையவர் இவர் எனச்
சிந்தித்து உறுதியாய்ப் பற்றிக்கொண்டு
அற்ப மனிதர் பின்சென்று பிழைப்பர் சிலர்
அவர் மேன்மக்களுடன் சேர்ந்தவிடத்து
அளவில்லாப் பொருள்நிறை சுரங்கம்
அகப்பட்டதுபோல் இன்பம் கிட்டாதோ? -

வல்லமை யூடியூப் அலைவரிசை
அண்ணாகண்ணன்அன்பர்களுக்கு வணக்கம்.வல்லமைக்கு யூடியூபில் தனி அலைவரிசை தொடங்கத் திட்டம். ஆய்வுக் கட்டுரைகள், இள முனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை வீடியோவில் பதிந்து ஏற்ற எண்ணம். உங்கள் முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.வாருங்கள், நல்லதோர் ஆவணத்தை உருவாக்குவோம். உங்கள் உழைப்பை உலகறியச் செய்வோம். -

அழகப்பா பல்கலைக்கழகம்: தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு
சான்றிதழ் வகுப்பு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையம் நடத்தும் ஏழுநாட்கள் சான்றிதழ் வகுப்பு 15.05.2020 தொடங்கி 21.05.2020 வரை நடைபெற உள்ளது. இவ்வகுப்பில் பங்கேற்போருக்கு சான்றிதழ் வழங்கப் பெறும். கட்டணம் ஏதும் கிடையாது.
முன்பதிவிற்கான கடைசி நாள் 13.05.2020.
சான்றிதழ் வகுப்பினில் இணைய விரும்புவோர் pavaisenthamiz17@gmail.com என்ற மின்னஞ்சலிலும் 9442379558 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தங்கள் முழு முகவரியை (மின்னஞ்சல், வாட்ஸ்அப் எண்ணோடு) பதிவு செய்து கொள்ள வேண்டும்.
படைப்பிலக்கியக் கூடல்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் – தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பாக, படைப்பிலக்கியக் கூடல் நிகழ்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வற்கடம் (பஞ்சம்) பற்றிய குறிப்பு இறையனார் களவியலில் உள்ளது. அதுபோன்றே தாது வருடப் பஞ்சம் குறித்து, ‘பஞ்சமுக விலாசம்’ என்னும் நூல் குறிப்பிடுகிறது. இந்த நூல்களின் வழியே அக்கால மக்களின் நிலையை வாழ்வியலை அறிந்து கொள்ள முடிந்தது. அதுபோன்று 2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் முதல் கொரானா என்னும் கொடிய நோய்த்தொற்று உலகம் முழுவதும் மக்களை அச்சுறுத்திக் கொண்டுள்ளது. அந்த நோய்க்குரிய மருந்து இல்லாத நிலையில் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடைக்கக்கூடிய சூழல் உள்ளது. இங்ஙனம் ஒட்டுமொத்த மனித குலத்தையே அச்சுறுத்தும் கரோனா குறித்துப் படைப்பாளர்களின் எண்ணங்களைப் பதிவு செய்து நூலாக்கம் செய்யும் முயற்சியைத் தமிழ்ப் பண்பாட்டு மையம் மேற்கொண்டுள்ளது. எனவே படைப்பாளர்கள், தங்களின் படைப்புகளை அனுப்பி வைக்கலாம்.
படைப்புகளின் மையப்பொருள் கரோனா என்பதாகும்.
கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுகதை, நகைச்சுவைத் துணுக்கு எனத் தங்களின் படைப்புகள் அமையலாம் படைப்புகளை 20.05.2020 க்குள் pavaisenthamizh17@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
அனைவருக்கும் சான்றிதழ் உண்டு.
-

நாட்டார் படைப்புகளை நாடறியச் செய்த பண்பாளர்!
-மேகலா இராமமூர்த்தி
அறக் கருத்துகளையும் சிறந்த வாழ்வியல் விழுமியங்களையும் தம் படைப்புகள் வாயிலாக வலியுறுத்தி மக்கள் மனங்களில் இடம் பிடித்தவர் மு. வரதராசனார் எனும் மு.வ., என்றால் நாட்டார் படைப்புகளுக்கும் மார்க்சியச் சிந்தனைகளுக்கும் கல்விக் கழகங்களில் இடம்பெற்றுத் தந்தவர் என்ற வகையில் நம் போற்றுதலுக்குரியவர் நா. வானமாமலை எனும் நா.வா.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் திசம்பர் 7, 1907இல் பிறந்தவர் நா.வானமாமலை. திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் புகுமுகப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வேதியியல் படிப்பையும் முடித்தார். சென்னையிலுள்ள சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியல் பட்டம் பெற்றார். பின்னாளில் அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் கார்மேகக் கோனாரின் அறிவுறுத்தலின்படி, முதுகலைப் படிப்பையும் முடித்தார். 1942 தொடங்கி சில ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றினார்.
சமூக ஆர்வம் காரணமாக அப் பணியிலிருந்து விலகிய அவர், அக்காலக்கட்டத்தில் முதல் தலைமுறையாகப் படிக்க வந்தவர்களுக்குத் தனிப்பயிற்சி நிலையங்களே (tuition centers) துணைநிற்பதை அறிந்து, 1948-இல் பாளையங்கோட்டையில் தனிப்பயிற்சி நிலையத்தை தொடங்கினார். அதேநேரத்தில், நாங்குனேரி வட்டார விவசாயிகள் இயக்கத்திலும், நெல்லை மாவட்டத் தொழிலாளர் இயக்கத்திலும் செயற்பட்டார்.
கோயில் நுழைவு, சாதிக் கொடுமைகள் எதிர்ப்பு, நில மீட்புப் போராட்டங்கள் ஆகியவற்றில் நா.வா. முன்னின்றார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநிலத் தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் கல்விப் பிரிவின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.
முதல் விடுதலைப் போரின் நூற்றாண்டு விழா 1957-இல் கொண்டாடப்பட்டபோது கம்யூனிஸ்ட் தலைவர் பூர்ணசந்த்ர ஜோஷி அவர்கள், நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். புலவர்களால் உருவாக்கப்பட்டுக் கற்றவர்களால் காப்பாற்றப்படுபவை செவ்விலக்கியங்கள். ஆனால் பாமர மக்களால் உருவாக்கப்பட்டு அவர்களாலேயே காப்பாற்றப்படுபவை நாட்டுப்புற இலக்கியங்கள். எனவே பாமர மக்களின் வாழ்க்கையை அறிய நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்கவேண்டிய பணி இன்றியமையாத ஒன்றே. அதனை நன்குணர்ந்த ஜோஷி அவர்கள் தமிழிலுள்ள நாட்டுப்புறப்பாடல்களைச் சேகரித்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை மேற்கொள்ளுமாறு நா.வாவைப் பணித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நா.வா., தமிழ்நாட்டில் பரவலாக வழங்கப்பட்டுவரும் நாட்டுப்பாடல்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
அக்காலக்கட்டத்தில், வானமாமலையைப் போன்றே கி.வா.ஜகந்நாதன், செ. அன்னகாமு, பெரியசாமித்தூரன், சோமலெ போன்றவர்களும் நாட்டுப்புறப் பாடல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆயினும், நாட்டுப்புறப் பாடல்களை அவற்றின் பொருண்மை, நிலவியல், சூழல் அடிப்படையில் வகைதொகைப்படுத்திய பெருமை நா.வா.வையே சாரும். மேலும், பாடியோர், பாடல் வழங்கும் இடம், சேகரித்தோர் பெயர் போன்ற விவரங்களையும் குறிப்பிட்டவர் அவரே. இந்தப் புதிய முறையோடு, தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்(1960), தமிழர் நாட்டுப் பாடல்கள்(1964) ஆகிய இரண்டு தொகுப்புகளை அடுத்தடுத்து அவர் வெளியிட்டார்.
’தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள்’ என்ற நா.வா.வுடைய நூலில் அதுவரை ஏட்டுக்கு வராத பாமரர்களின் பாடல்கள் பல பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அப்பாடல்கள் நம் சமூகத்தின் அடித்தட்டில் வாழுகின்ற உழைக்கும் மக்கள் வாழ்வில் நிகழும் அனைத்தையும் படம்பிடித்துக் காட்டுகின்றன.
குறிப்பாக இப்பாடல்களில் சாதிப் பிரிவினைகளால் உழைக்கும் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளும், அவற்றை எதிர்த்து அம்மக்கள் எழுப்பும் உரிமைக்குரலும் ஓங்கி ஒலிக்கின்றன எனலாம். இவற்றையெல்லாம் படித்தறிந்தால் மட்டுமே பாமர மக்களின் வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் பிரச்சினைகளும் ஏனையோர்க்கும் தெரியவரும்.
சான்றாகப் பொழுதடைந்த பின்பும் வீடுசெல்ல முடியாமல் முதலாளியின் பண்ணையில் மாடாய் உழைத்துக்கொண்டிருக்கும் ஏழைத் தொழிலாளி ஒருவன் மிகவும் தயக்கத்தோடும் பணிவோடும் முதலாளியிடம் கூலி கேட்பதை விளக்கும் பாடலிது:
வீடு ரெண்டுங் காரவீடு
வேட்டி ரெண்டும் வெள்ளை வேட்டி
இரக்கமுள்ள புண்ணியர்க்குப்
பிறக்கிறது ஆண்குழந்தை!சம்பளமும் கட்டுதில்லை
சாதியுள்ள மாணிக்கமேஎங்க இர(ற)க்கம் பார்த்து
ஏத்த கூலி போடுமையா!பொழுது அடைஞ்சிருச்சே
பூமரமும் சாஞ்சிருச்சே
இன்னம் இரங்கலையோ
எசமானே உங்க மனம்?இந்தப் பாடலில் வெளிப்பட்டிருக்கும் ஓர் ஏழைத் தொழிலாளியின் இரங்கத்தக்க வறுமைநிலையும், முதலாளிக்கு அஞ்சியும் அவரைக் கெஞ்சியும் அவன் கூலிபெறவேண்டிய அவலமும் படிப்போர் நெஞ்சை மட்டுமல்லாது கண்களையும் கலங்கச் செய்கின்றன.
’தமிழர் நாட்டுப்பாடல்கள்’ என்ற நா.வா.வின் மற்றொரு நூலும் சிறப்பான ஒன்றாகும். இந்நூல் நமக்கு அறியத்தரும் செய்திகளில் சில:
தமிழ் மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்களை நாம் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
- இதிகாசத் துணுக்குகள்
- கிராம தேவதைகளின் கதைகள்
- சமூகக் கதைகள்
- வரலாற்றுக் கதைகள்
இதிகாசங்கள் என்றும் இந்தியக் காப்பியங்கள் என்றும் போற்றப்படுகின்ற இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப்பாடல்கள் தோன்றியிருக்கின்றன. கிராம மக்கள் இராமாயணத்தைவிடவும் மாபாரதத்தையே அதிகம் விரும்பிக் கேட்கிறார்கள். அதில் வரும் வீமனும் அர்ச்சுனனும் கண்ணனும் கன்னனும் (கர்ணன்) அவர்கள் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கின்றார்கள் என்று தெரிவிக்கும் நா. வானமாமலை, சமூகக் கதைப் பாடல்களும் மக்கள் மத்தியில் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப்பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்லதங்காள் கதை, கௌதல மாடன் கதை முதலியன. இவையாவும் தமிழ்நாட்டுப் பாட்டாளி மக்களையும், தமிழ்நாட்டுத் தலைவர்களையும் கதைகளின் தலைமாந்தர்களாகக் கொண்டவை என்கிறார்.
இந்நூல், தமிழகப் பல்கலைக்கழகங்களிலும், கேரளப் பல்கலைக்கழகத்திலும், தமிழ்த்துறையின் மூல நூலாக (source book) பயன்படுகின்றது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும் நாட்டுப்பாடல் துறையின் சிறந்த நூலென இந்நூலைக் கருதுவது இதன் சிறப்பையும் மதிப்பையும் உணர்த்துகின்றது.
அரிதின் முயன்று, பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து நா.வா.வும் அவருடைய மாணாக்கர்களும் சேகரித்து வெளியிட்டவை வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, பழங்கதைகளும் பழமொழிகளும் போன்றவை.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலின் முன்னுரையில் பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரரான கட்டபொம்முவின் வாழ்க்கைச் சித்திரத்தை விரிவாகத் தந்திருக்கின்றார் நா.வானமாமலை. கட்டபொம்மு, பாளையத்து மக்களிடம் ஈவு இரக்கமின்றி நடந்துகொண்டதையும், அதனால் அவர் அம்மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துக்கொண்டதையும் நாட்டுப்பாடல்கள் பேசுகின்றன எனக் குறிப்பிடும் வானமாமலை, கட்டபொம்முவின் போக்கு பிடிக்காததால் அவன் வெள்ளையரை எதிர்த்தபோதும் பாளையத்து மக்கள் அவனுக்குப் பெரிதாக ஆதரவளிக்கவில்லை என்பதையும், எனினும் அவன் வெள்ளையரால் தூக்கிலிப்பட்டது அவன்மீது மக்களுக்கு அனுதாபத்தை ஏற்படுத்தியதையும் பதிவுசெய்திருக்கின்றார். திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்ட ’உயர்ந்த மனிதன்’ எனும் பிம்பம் கொண்ட வீரபாண்டிய கட்டபொம்மனிலிருந்து மாறுபட்டவராகவே உண்மையான கட்டபொம்மு இருந்திருக்கின்றார் என்பது நாமறிய வேண்டிய வரலாற்றுச் செய்தியாகும்.
பன்மொழிப் புலவர் தொ.பொ. மீனாட்சிசுந்தரனார் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்தபோது, நா.வா.வின் கதைப்பாடல் தொகுப்புகளை, அப் பல்கலைக்கழகம் நூலாக வெளியிட்டது. வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல், கட்டபொம்மு கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகிய ஆறு நூல்கள் இவ்வாறு வெளியிடப்பட்டவையே ஆகும்.
”நாட்டார் பாடல்கள் வாய்மொழிப் பாடல்களாக இருப்பதே சிறப்பு; அவற்றை ஏட்டில் எழுதிவைத்தால் அவை நாட்டார் பாடல்கள் எனும் தகுதியை இழந்துவிடும்” எனும் விமரிசனம் சிலரால் முன்வைக்கப்பட்டபோது, அதை மறுத்த நா.வா., நாட்டார் பாடல்களையும் படைப்புக்களையும் ஏட்டில் எழுதிவைத்தால் மட்டுமே அவை அழியாமல் காக்கப்படும். இல்லையேல் அவை விரைவில் மறக்கப்படுவதோடு அழிந்தும் போய்விடும். ஏட்டில் எழுதிவைக்கப்படும் நாட்டார் படைப்புக்கள்கூட அப்படியே வாழும் என்று கூறுதற்கில்லை; பண்பாட்டு மாறுதல்கள் காலப்போக்கில் நிகழும்போது அவையும் தம்முடைய வடிவை மாற்றிப் புத்துருக்கொள்ளும் என்று குறிப்பிட்டார்.
‘Folklore’ என்பதற்கு ’நாட்டுப்புறவியல்’ என்ற மொழிபெயர்ப்பு முதலில் உருவாக்கப்பட்டது. அதற்கு ‘நாட்டார் வழக்காற்றியல்’ என்ற மாற்றுப் பெயரைச் சூட்டி அழகுபார்த்தவர் நா. வானமாமலை.
தமிழ்மொழி இலக்கிய ஆய்வுகளை, வரலாறு, தொல்லியல், மானுடவியல், சமூகவியல், பண்பாட்டியல் போன்ற பிற துறைகளுடன் இணைந்த பல்துறைக் கூட்டாய்வுகளாக வளர்த்தெடுத்ததிலும் நா.வா.வின் பங்கு முதன்மையானது. நாட்டார் வழக்காற்றியலைப்போலவே மார்க்சியம் இன்று கல்விப்புலத்தில் ஒரு முறையியலாகவும், அணுகுமுறையாகவும் நிலைபெற்றிருப்பதற்கு வித்திட்டவரும் அவரே.
மக்கள் தம் நாட்டின் வரலாற்றை எழுதுவதிலும் நேரிய நோக்கையும் சீரிய போக்கையும் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திவர் நா.வா.
”இந்திய நாட்டு வரலாற்றைக் கருத்தில்கொண்டால், வேத காலமே பொற்காலம் என்பர் ஆரியர்; சங்க காலமே தங்க காலம் என்பர் தமிழர். ஆனால் இவை எவையுமே உண்மையில்லை. ஏனெனில் ஒரு நாட்டின் உண்மையான வரலாறு என்பது அந்நாட்டில் வாழும் செல்வர், வறியவர், ஆண்டான், அடிமை, மேலோர் கீழோர் ஆகியோரிடையே நடந்த வர்க்கப் போராட்டங்களைப் பேசும் வரலாறே ஆகும். இம்முறையில் பொருளாதார வாழ்வையும் வர்க்க முரண்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு மக்களின் வரலாறு முழுதும் எழுதப்பட வேண்டும். இவ்வரலாற்றைத் தனி ஒருவர் எழுதுதல் இயலாது.
நூற்றுக்கணக்கான வரலாற்று வல்லுநர்கள், தமிழறிஞர்கள், மார்க்சியவாதிகளின் கூட்டுமுயற்சியால் இவ்வரலாறு உருவாகவேண்டும். தொடக்கத்தில் பல கருத்துவேற்றுமைகள் தோன்றுதல் இயல்பே. பல கருத்துமோதல்களின் விளைவாகவே உண்மை வெளிப்படும். பண்டைத் தமிழர் வரலாற்றை தொடக்கம் முதல் இடைக்காலம் வரை ஆராய்ந்து எழுதுதற்குப் பரவலான சான்றுகள் இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றைச் சேகரித்துச் சமூக வளர்ச்சி தொழில் கண்ணோட்டத்தில் ஒரு வரலாறு உருவாக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட தமிழர் வரலாறு நமக்கு அவசியம் தேவை.” என்பது மார்க்சியச் சிந்தனையாளரான வானமாமலையின் கருத்தாகும்.
அடிப்படையான அறிவியல் நூல்கள் சிலவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தவர் நா.வா. காகிதத்தின் கதை, இரும்பின் கதை, ரப்பரின் கதை முதலிய அறிவியல் நூல்களைச் சிறுவர்களுக்கென எழுதியவர். விண்வெளி ரசாயனம், விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியும் அதன் விளைவுகளும் போன்றவை நா.வா.வின் அறிவியல் நூல்களில் குறிப்பிடத்தக்கவை.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் துணை விளைவாக ‘அனைத்தும் ஆங்கிலம்’ என மாறிய சூழலில், சி. சுப்பிரமணியம், மோகன் குமாரமங்கலம் போன்ற அரசியலாளர்கள், தமிழில் அறிவியல் பாடநூல்கள் குறித்து அக்கறையும் ஆர்வமும் கொண்டனர். அத்தருணத்தில் ‘தமிழில் முடியும்’ என்னும் தொகுப்பு நூல் ஒன்றை நா.வா. வெளிக்கொணர்ந்தார்.
1967இல் ‘நெல்லை ஆய்வுக் குழு’ என்னும் அமைப்பை உருவாக்கினார். கற்றலில் ஆர்வம், ஆய்வில் ஈடுபாடு, அறிவியல் நோக்குடையவர்கள் எவர் வேண்டுமானாலும் இக்குழுவில் உறுப்பினராகலாம். இந்த ஆய்வுக் குழுவில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளை வெளியிடவும், தமிழில் ஆய்வுக் களத்தை விரிவாக்கவும் 1969இல் ‘ஆராய்ச்சி’ என்னும் ஆய்விதழைத் தொடங்கினார் நா.வா. பல்துறை அறிஞர்களின் கட்டுரைகளுடன், ஆராய்ச்சிக் குழுவினரின் கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்தன.
தமிழகத்தில் மட்டுமன்றி ஈழ, மலேசியத் தமிழர்கள் மத்தியிலும் மதிப்பிற்குரியவராகத் திகழ்ந்தார் நா. வானமாமலை. அவரது இலக்கியப்பணிகளைக் கௌரவிக்கும் வகையில், அவருடைய மறைவுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் அவருக்கு “இலக்கியக் கலாநிதி” என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.
முதுபெரும் ஆராய்ச்சியாளர், பல துறைகளிலும் முன்னோடியாகத் திகழ்ந்த புதுமைவாதி; முற்போக்கு இலக்கியவாதி; பாட்டாளி மக்களின் தோழர்; இளம் எழுத்தாளர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் திறனாய்வாளர்களுக்கும் வழிகாட்டியாய்த் திகழ்ந்த ஆசான் எனப் பல்வேறு சிறப்புகளுக்கும் உரியவராய்த் திகழ்ந்தார் நா.வானமாமலை.
அரசர்களின் பெருமையைப் பறைசாற்றிக்கொண்டிராமல் சாமானிய மக்களின் சமூக வாழ்க்கையை, அவர்களின் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் தமிழக வரலாறு மீட்டுருவாக்கம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்திய நா.வா., மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுவுடைமைச் சமுதாயம் நம் மண்ணில் மலர்வதே வர்க்க பேதங்களுக்குச் சாவுமணி அடிக்கும் செயலாக அமையும் என்று திடமாக நம்பியவர்.
குழந்தைகளுக்கு நீதிநூல்களையும் புராணக் கதைகளையும் அறிமுகப்படுத்துவதைவிடவும் அறிவியல் நூல்களை அறிமுகப்படுத்துவது சிறந்தது என்பது அவரது எண்ணம். அவ்வாறே பிறநாட்டு நல்லறிஞர் நூல்களைத் தமிழில் மொழியாக்கம் செய்வதிலும் அவருக்கு ஈடுபாடு இருந்திருக்கின்றது. நா.வானமாமலையின் 22 நூல்கள் அரசுடைமையாக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக மக்களுக்கு ஒல்லும் வகையிலெல்லாம் நல்லறிவு கொளுத்திச் சென்றிருக்கும் அவ்வறிஞரின் சிந்தனைகளைப் போற்றுவதும், அவர் வகுத்தளித்த பொதுவுடைமைப் பாதையில் பயணிப்பதும், அவர் விரும்பியபடி, சமூக உண்மைகளைப் பாசாங்கின்றிப் பிரதிபலிக்கும் வகையிலான தமிழர் வரலாற்றை அனைத்துத்துறை அறிஞர்களும் ஒருங்கிணைந்து எழுதுவதும் அன்னாருக்கு நாம் செய்யும் சிறந்த கைம்மாறாக அமையும்.
*****
கட்டுரைக்குத் துணைநின்றவை:
- தமிழ்நாட்டுப் பாமரர் பாடல்கள் – நா. வானமாமலை, எம்,ஏ., எல்.டி., என்சிபிஎச் பிரைவேட் லிமிடெட், சென்னை – 2
- தமிழர் நாட்டுப் பாடல்கள் – தொகுப்பாசிரியர் – நா. வானமாமலை, எம்.ஏ., எல்.டி., நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98
- வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடல் – பதிப்பாசிரியர் – நா.வானமாமலை, எம்,ஏ., எல்.டி., அச்சிட்டோர் நியூ செஞ்சுரி பிரிண்டர்ஸ், சென்னை – 2
- https://www.hindutamil.in/news/opinion/columns/178979-.html
-

க்ஷேத்ரய்யா — தெலுங்கு மொழியின் ஜெயதேவர்
தி. இரா. மீனா
க்ஷேத்ரய்யா தெலுங்குக் கவிஞரும் கர்நாடக சங்கீதப் பாடலாசிரியருமாவார். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் முவ்வா கிராமத்தில் பிறந்தவர். இயற்பெயர் வரதய்யா. இளம் வயதிலேயே ஒரு யோகி கற்றுத் தந்த “கோபால“ மந்திரத்தைத் தொடர்ந்து சொல்லி இறையருள் பெற்றவர். பதம் என்ற வடிவத்திலமைந்த இவருடைய பாடல்கள் பெரும்பான்மையாக நாட்டியத் துறையிலும், அடுத்த நிலையில் இசைத் துறையிலும் பயன்படுத்தப்படுகின்றன. அன்னமையாவுக்கு அடுத்தபடியான செல்வாக்கு இவர் பாடல்களுக்குரியதென கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
க்ஷேத்ரய்யாவின் [1600 -1680] வாழ்க்கை பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை. தான் பிறந்த கிராமமான முவ்வாவிலுள்ள வேணுகோபாலன் கோவில் இவரைப் பெரிதும் கவர்கிறது. அக்கோவில் ஓரிரவில் கட்டப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. ஒரு நாள் கோயிலில் தியானம் செய்து கொண்டிருக்கும் போது “நீ உயர்ந்த பாடலாசிரியனாகப் புகழும், பெயரும் பெறுவாய். புனித ஸ்தலங்களுக்குச் சென்று தெய்வீகப்பணி செய்வாய்“ என்று குரல் கேட்கிறது. விழித்துப் பார்த்தபோது எவருமில்லை. இறையருளே கிடைத்திருக்கிறது என்று மகிழ்ந்து வீட்டிற்கு ஓடி பெற்றோரிடம் சொல்கிறார். அதைக் கேட்டதும் மகன் தன்னைப் பிரிவானே எனத் தாய் வருந்த, மகன் வழியில் குறுக்கிடக் கூடாதென உணர்ந்த தந்தை சொல்லப்பட்ட செய்தியை நடத்திக் காட்ட மகனுக்கு உதவவேண்டுமெனச் சொல்லி மனைவியை ஆறுதல் படுத்துகிறார். பெற்றோர் வழியனுப்பி வைக்கின்றனர். ஊரை விட்டுப் புறப்படுவதற்கு முன்பு தன் இளம் பருவத்துத் தோழி மோகனாங்கியைச் சந்திக்க விரும்புகிறார். அவள் தாசி பரம்பரையில் வந்தவள். இருவரும் இளம்பருவத்திலிருந்தே ஆடல், பாடல் ஒருங்கே கற்றவர்கள் அவர் பாடல்கள் இயற்றுவதிலும், பாடுவதிலும் சிறந்தவராகிறார் அவர் பல பாடல்களைப்பாட அவள் கோயில் நடனப் பெண்ணாகிறாள். இருவரும் முவ்வகோபாலனின் பக்தர்களாகின்றர். தம்மை மறந்து கோயிலில் பாடியும், ஆடியும் மகிழ்கின்றனர். போவதற்கு முன்பு தனக்குக் கிடைத்த அசரீரிசெய்தியைச் சொல்லி அவளைப் பின்னொரு நாளில் சந்திப்பதாகக் கூறி விடைபெறுகிறார்; பயணத்தைத் தொடங்குகிறார்.
முதலில் கோல்கொண்டா போகிறார். அங்குள்ள அரசரான அப்துல்லா குதுப்ஷா கலாரசிகர். அவர் அரண்மனையில் சில பதங்கள் பாடுகிறார். நவாப் அவரைத் தன் அவையில் இருக்கும்படி வேண்டுகிறார். வரதய்யா தன் வாழ்வு நோக்கத்தை எடுத்துச் சொல்லி புறப்படுகிறார். அடுத்தது மதுரை அவர் செல்லுமிடமாகிறது. திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட காலகட்டமது. அன்றைய சூழ்நிலையில் காதல்பாடல்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன என்பதால் அந்த அடிப்படையில் சில பாடல்களைப் பாடுகிறார். வெளிப்பார்வைக்கு காதலுணர்வை காட்டுவது போல அவை இருந்தாலும் ஆழமான கருத்துக்களை உள்ளடக்கியதாக அமைகின்றன. சாதாரண மக்களுக்கு அது காதல் பாடலாகத் தெரிய இறைச் சிந்தனை கொண்டவர்களுக்கு பரம்பொருளின் மீதுகொண்ட காதல் வெளிப்பாட்டின் தன்மை புரிகிறது. அதுதான் அவர் செய்தியும் கூட. அவருடைய புலமைகண்டு அரசனும், புலவர்களும் ஆச்சர்யமடைகின்றனர்.
அடுத்து அவர் காஞ்சி செல்கிறார். அது சிவனின் காஞ்சியாகவும் விஷ்ணுவின் காஞ்சியாகவும் அவருக்குத் தெரிகிறது. சிவனின் காஞ்சியில் ஏகாம்பரேசுவரர் மற்றும் காமாட்சிதேவி கோயில்களுள்ளன. ஏகாம்பரேசுவவரர் கோயிலிலிருக்கும் ஒரு மாமரத்தினடியில் காமாட்சி சிவனைவேண்டித் தவமிருந்ததாக ஒரு கதையுண்டு. நான்கு வேறு கிளைகளாக உள்ள அந்த மரத்தின் மாங்கனிகள் நான்குவகையான சுவையுடையவை என்றும் அவை நான்கு வேதங்களைக் குறிப்பவை என்றும் சொல்லப்படுகிறது. அங்குள்ள விஷ்ணுகோயில் வரதராஜப் பெருமாள் என்றழைக்கப்படுகிறது. பெருந்தேவி தாயார்கோயிலும் சில அடிகள் தொலைவில் தானுள்ளது. சிவன்-விஷ்ணுவைத் தரிசனம் செய்த வரதய்யா தன் வாழ்க்கை சாபல்யம் பெற்றதாக நினைக்கிறார். முவ்வ கோபாலனுக்கு அடுத்தபடியாக அவர் மனதைக் கவர்ந்தவர் வரதராஜப் பெருமாள் தான். அங்கு அவர் பக்தி உச்சமடைகிறது. தன்னை நாயகியாகக் காணத் தொடங்கி சிருங்கார பக்தியை வளர்த்துக் கொண்டது காஞ்சியில்தான். பல மணிநேர தியானத்தில் தன்னை மறந்திருந்ததும் அங்குதான். ஒரு நாள் இரவு வழிபாட்டின்போது அவர் தன்னை மறந்திருந்த தருணத்தில் அர்ச்சகர் கோயில் கதவைப் பூட்டிக் கொண்டு போய்விடுகிறார். இருவரும் இதை உணரவில்லை. வரதய்யா தன்னுணர்வுக்கு வந்தபோது பெருந்தேவி தாயார் பெருமாள் ஆலயத் திலிருந்து தன்னிடத்திற்குப் போவதைப் பார்க்கறார். ரோஜாமாலையின் மணம் அவிழ்ந்த கூந்தலிருந்து வரக் கண்கள் தூக்கமிழந்து செம்மையாய். கழுத்தில் சங்கிலிகள் தாறுமாறாய்க் கிடக்க சேடியர் இருபுறத்திலும் வர… மெதுவாய் நடப்பதைப் பார்க்கிறார். என்ன அற்புதமான காட்சி! யாருக்கும் காணக் கிடைக்காத காட்சி..! அடுத்தநாள் கதவு திறக்க வரும் அர்ச்சகர் வரதய்யா உள்ளிருப்பதைப் பார்த்து ஆச்சர்யமடைகிறார். யாருக்கும் கிடைக்காத தரிசனம் அவருக்குக் கிடைத்ததைக் கேட்டு அனைவரும் ஆச்சர்யடைகின்றனர். கவிதை என்பது இயல்பாய் எழும் உணர்ச்சிப் பெருக்குத்தான். இதை வரதய்யா ஒரு பதத்தின் கருவாக்குகிறார் [“மகுவ தன கேலிக்க மந்திரம் என்பது அப்பாடல் [‘Maguva tana Kelikaamandiram Vedalen Vagakada, Maa Kanchi Varada, Tellavaare Nanuchu] அவருடைய பாடல்களில் வரதராஜப்பெருமாள் பற்றிய குறிப்பு ஏறக்குறைய இருபத்து மூன்று பாடல்களில் வெளிப் படுகிறது. காஞ்சியில் தன்யாசி, கல்யாணி, பந்துவராளி, பைரவி, தோடி, முகாரி ஆகிய ராகங்களில் மட்டும் பாடியது குறிப்பிடத்தக்கது. அபூர்வக்காட்சி கிடைத்த காஞ்சியில்தான் அவர் அதிககாலம் இருந்தி ருக்கிறார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.பின்பு மோகனாங்கியிடம் சொன்னதுபோல தான் காஞ்சியிலிருக்கும் செய்தியை அவளுக்குத் தெரிவிக்கிறார்.
காஞ்சியிலிருந்து தஞ்சை செல்கிறார். தஞ்சையையாண்ட விஜய ராகவன் கலைஞர்களை ஊக்குவிப்பவன் என்பதால் அவனைப் பாராட்டும் வகையில் பாடலொன்று இயற்றுகிறார். அவருடைய அறிவின் கூர்மையைப் பொறுக்க முடியாத சிலர் அவரை அவமானப்படுத்த நினைக்கின்றனர். அவர் கருத்தில் குறை கூறுகின்றனர். அப்போது அவர் ”நான் அரசராக அவரை மதிக்கிறேன். ஆனால் நண்பராக நேசிக்கிறேன். என் பாடலில் அவரை நண்பனாகத்தான் காண்கிறேன். இன்னும் சொல்லப்போனால் கடவுளைக்கூட நானப்படித்தான் அழைக்கிறேன். அந்த தொனியிலான அழைப்பு இன்னும் என்னை அவர்களோடு நெருக்கப் படுத்துகிறது. என் பாடல்கள் உரைநடையாலானவை. நாட்டியநாடக அமைப்புடையவை என்பதால் பேச்சுவழக்கு மொழியோடு நெருங்கியிருக்க வேண்டும். அதனால் மொழி எளிமையாக இருக்க வேண்டு மென்பது என் விருப்பம். செய்யுள் என்பது இதிலிருந்து மாறுபட்டது. என் பாடல்களில் வெளிப்படும் காதல் உடல்சார்ந்ததல்ல. அது பேரானந்தம் தரும் தன்மையுடையது “என்று பெரிய விளக்கம் தருகிறார். பின்பு ஒரு பாடலைப் பாதியாக எழுதி அதை முடித்து வைக்கும்படி சொல்லி விட்டுப்போகிறார். அதே நேரத்தில் மோகனாங்கி காஞ்சியிலிருந்து தஞ்சை வருகிறாள். வரதய்யாவுக்கும் ,அவர் பாடல்களுக்கும் உள்ள மதிப்பையறிந்து அரசவையில் அவர் பாடல்களுக்கு நடனமாடுகிறாள்.
தஞ்சையிலிருந்து வரதய்யா ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் ஆகிய தலங்களுக்குப் போகிறார். அங்கும் பாடல்கள் இயற்றுகிறார். நீண்டகாலம் வெவ்வேறிடங்களில் தங்கிய அவருக்கு தன் இஷ்டதெய்வமான முவ்வ கோபாலனின் கோயிலுக்குச் சென்றுவிடவேண்டுமென்று தோன்றுகிறது. தஞ்சை வழியாகத் திரும்புகிறார். தன் பாடல்களுக்கு மோகனாங்கி ஆடி மக்களைப் பரவசப்படுத்தியதை அறிந்து மகிழ்கிறார். பாதி எழுதப்பட்ட தன் பாடலின் முடிவுபற்றிக் கேட்கிறார். ’ஒரு பெண் தன்காதலன் வருகைக்காக காத்திருக்கிறாள். மற்ற பெண்கள் தம் காதலர்களோடு கூடியிருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறாள். அவள் மனநிலை எப்படியிருக்கும்? ”இதுதான் அவர் எழுதிக் கொடுத்த பாதிப்பாடல். கவிஞர்கள் அதற்கான பதிலைத்தந்து கவிதையை முடிக்கவேண்டும். பொதுவாகக் காதலின் உச்சநிலையிலிருக்கும் எந்தப் பெண்ணுக்கும் காதலன் மீது கோபம் பொங்கும். அல்லது உணர்வுகளுக்கு அடிமையாகும் தன்மை ஏற்பட்டிருக்க வேண்டும். இதுதான் சாதாரண நிலை. இந்த பதில் வரதய்யாவுக்குத் திருப்தி தராதென்று அனைவருக்கும் தெரியும். தங்களைக் கேலிப் பொருளாக்கிக்கொள்ள அவர்களுக்கு விருப்பமில்லை. மௌனம் சாதிக்கின்றனர். சிறிது ஆழமாகச் சிந்தித்திருந்தால் பாடலை முடித்திருக்க முடியும். வரதய்யா முன்பு குறிப்பிட்டது போல உடல்ரீதியான எண்ணங்களுக்கு இடமில்லாத போது சிருங்காரம் உயர்ந்த பக்திநிலையாக முடியும். தன்பாடல்களில் அவர் உயர்ந்த இறைபக்தியைப் பற்றிப் பேசியிருக்கிறாரே தவிர உடல்சார்ந்த நிலையையல்ல. கவிதையில் காட்டப்பட்ட பெண் மற்ற கோபிகை களைப்போல முதலில் உடல் சார்ந்த காதலனுக்காக, காதலுக்காகப் புலம்புகிறாள். பின்பு தன் காதலின் உன்னதத்தை, காதலனின் அருமையையுணர்ந்து கோபாலனுடனான அன்பை தத்துவார்த்தமாக வளர்த்துக் கொள்கிறாள் என்பதுதான் அவர் தரும் முடிவு. அரசன் உள்பட அனைவரும் அதுகேட்டு வியப்படைகின்றனர்.
”ராமா! ராமா! இது என்ன? நான் சாதாரணப் பெண் இல்லயே!
உன்மீது காதல் கொண்டவள் அல்லவா இது ஆயுள் பரியந்தம்”என்ற பொருள்பட [ராமா ராமா ஏ மெனிதோ“]
அந்தப் பதத்தை தானேமுடிக்கிறார். விடைபெறும் போது அரசவையில ’மகுவ தன கேலிக்க மந்திரம்“ பாடலைப் பாட மோகனாங்கி அவர் கண்ட அபூர்வக்காட்சியை பாத்திர நிலையில் உணர்ந்து அனுபவித்து ஆடுகிறாள். அனைவரும் மகிழ்கின்றனர். அவருடைய சிறப்பறிந்து அரசன் உள்ளிட்ட அறிஞர்கள் அவருக்கு ’க்ஷேத்ரய்யா’ என்று பட்டம் தருகின்றனர். [க்ஷேத்திரங்களைக் கண்டு மகிழ்ந்தவன்] அவர் இருபது க்ஷேத்திரங்களுக்குப் போயிருக்கிறார். எங்கு போனாலும் கிருஷ்ணன் பாடலைப் பாடியிருக்கிறார். அந்த பக்தி அவரை வழிநடத்தியிருக்கிறது.
இறுதியில் அவர்கள் முவ்வா வருகின்றனர். கிருஷ்ண ஜன்ம தினத்தில் முவ்வ கோபாலன் கோயிலில் அவர் பாட மோகனாங்கி ஆடுகிறாள். அனைவரும் மகிழ்ந்திருக்கும் நேரத்தில் கருணையோடு தன்னை ஒரு கை தழுவுவதுபோல உணர்கிறார். பரமாத்மாவோடு கலக்கிறார். மோகனாங்கியும் அவருடன் மறைகிறாள்.
ஏறக்குறைய நான்காயிரம் பாடல்களை அவர் இயற்றியதாகச் சொல்லப்பட்டாலும் 381 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட பதம் முறைதான் இன்றும் வழக்கிலிருக்கிறது. பரதநாட்டியம், குச்சிப்புடி, மற்றும் கர்நாடக சங்கீதப் பாடல்களில் அவர் பதங்கள்தான் பாடப்படுகின்றன. அனுபல்லவி, பல்லவி, மூன்று சரணங்கள் என்பது அவர் பார்வையில் பதத்திற்கான இலக்கணமாகும். நாட்டியப் பின்னணியிலான பெரும்பாலான பாடல்களைத் தந்த பெருமை இவரையும், சீடனான சாரங்கபாணியையும் சேரும். நாற்பது வகை ராகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன பெரும்பான்மை பதங்களின்கரு கிருஷ்னணின் வருகைக்காக ஏங்குவதாகவே அமைந்திருக்கிறது. அவருடைய பாடல்களின் முக்கியகரு மதுரபக்தியிலமைந்த சிருங்காரமாகும். பெரும்பான்மைப் பாடல்களில் அவருடைய முத்திரையாக ’முவ்வ கோபாலா’ அமைகிறது. பொதுவாக முத்திரை என்பதை பெரும்பாலான கலைஞர்கள் தம் பாடல்களின் இறுதியில் பயன்படுத்தியிருக்க க்ஷேத்ரய்யா பாடலின் எந்தப் பகுதியிலும் அது இடம்பெறு வதான முறையைக் காட்டியுள்ளார். முவ்வ கோபாலன் தவிர, ’காஞ்சி வரதுடு’ செவ்வடி லிங்கடு’ ’ஆதிவரத’ ’தில்லைகோவிந்தராஜ’ ’ஸ்ரீரங்கேச”’ ‘யதுகிரிசெலுவராய’ ஆகிய முத்திரைகள் சில பாடல்களில் வெளிப்படுகின்றன. நாட்டியம், இசை என்ற துறைகளில் அவருடைய தாக்கம் மிக ஆழமாக இருந்ததும், இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் தென்னிந்தியாவில் நாட்டியம், இசை ஆகிய கலைகளை வாழ்வின் மூலாதாரமாகக் கொண்டும், பரம்பரை பரம்பரையாக கோயிலுக்காக வாழ்பவர்கள் என்ற நிலையில் வாழ்ந்த தேவதாசிப் பெண்களை வைத்தும் அமைந்தவை அவருடைய பல பாடல்கள். பிரிவு, பொறாமை, சந்தேகம், மகிழ்ச்சி அழுகை என்று எல்லாம் அடங்கிய காதல்வெளிப்பாட்டில் இவர் பதங்கள் சிறப்புப் பெறுகின்றன. நாயகன்-நாயகி பாவத்தில் பக்குவமானவள், இடைநிலையிலுள்ளவள், அனுபவமற்றவள், மனைவி, மற்றவன்துணை என்ற வகைகளில் தன்னை நாயகியாக பாவனை செய்துகொண்டு பாடியிருப்பது இவருடைய புதிய அணுகுமுறையாகும். இந்த வெளிப்பாட்டிற்கு “நா மனசு வந்திதே“ என்ற பதம்
“நான் உனக்காக ஏங்குவதைப் போல நீ எனக்காக ஏங்கினால்
என் கனவு உண்மையாகும். கரும்பு இனிமையானது. அது கனி
தந்தால் எவ்வளவு இனிப்பு அதிலிருக்கும்! முவ்வ கோபாலா! நான்
உன்னை விரும்புவது போல என்னை நீ விரும்பினால் என்
மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.”என்றும்
“உன்னுடல் என்னுடல் என்று சொல்வாய் அது உண்மைதான்
முவ்வ கோபாலா! உன்னுடன் இவ்வளவு காலமிருந்தும் எனக்குத்
தெரியவில்லை உன் மார்பில் யாரோ கீறிய கீறலால் எனக்கு
வலிக்கிறது இரவு நீ தூங்கவில்லை ஆனால் என் கண்கள்
சிவக்கின்றன ”என்றும் அவரது ஓரிரு உணர்வுபூர்வ பதங்களைச் சான்று காட்டலாம்.
பதக்காரர்களைப் பொறுத்தவரை நாயகன் தன் நாயகியோடு நேரடியாகப் பேசும் நிலை என்பது மிக அபூர்வமானதாகவேயுள்ளது. அதனால் அவர்கள் நாயகன் நாயகி என்று யாராக இருந்தாலும் அவர்களின் உணர்வுகளைத் தோழி / தூதன் மூலம்தான் வெளிப்படுத்துகின்றவர்களாக இருக்கின்றனர். சான்றாக க்ஷேத்ரய்யாவின் ஒரு பதத்தில் தலைவி தலைவனை விட்டுத் தனியாக வரும்போது தோழி நாயகியிடம் “அவனைத் தனியே விட்டு நீ ஏன் இங்கு வந்தாய். உன் கால்கள் ‘அதற்கு எப்படிச் சம்மதித்தன?அன்பே! முவ்வகோபாலன் உன்‘ நினைவுகளில் ஆழ்ந்து எப்போதும் உன் பெயரையே அரற்றிக் கொண்டிருக்கிறான். படுக்கையிலிருந்து திடீரென எழுகிறான். உன்னைத் தேடுகிறான். கண்களில் நீர் பெருகி கண்கள் செம்மையாகின்றன. உன்னுடைய ஒவ்வொரு நளினத்தையும் நினைவில் வைத்திருக்கிறான். அவன் காதலைச் சொல்ல நீ சுதந்திரம் தந்திருக்கிறாய். ஒப்புமைக்கு இயலாதவளாக உன்னைக் காண்கிறான்” என்று தோழி தன்னிடம் வந்த நாயகியிடம் சொல்வதாக ஒரு பதத்தை அமைத்திருக்கிறார்.
இதே பதம் ஜெயதேவரின் அஷ்ட பதியிலும் வெளியாகிறது. தோழி தலைவனுக்காகப் பேசுகிறாள்.
”பெண்ணே! கிருஷ்ணன் யமுனை ஆற்றின் கரையில்
நிற்கிறான். அவனிடம் போ, சங்கமம் கொள், புல்லாங்குழலில் உன்
பெயரை இசைத்துத் தான் அங்கிருப்பதைச் சொல்கிறான் உன்
மேனியிலிருந்து பரவும் மணத்தை தென்றலின் மூலம்
உணர்கிறான். உன் மென்மையான அசைவொலி கேட்க
உனக்காகக் காத்திருக்கிறான் “என்ற பதத்தோடு ஒப்பிடலாம்.
வீணை தனம்மாள், பிருந்தா ஆகியோர் அவருடைய பாடல்களை பிரபலப்படுத்தியதில் பெரும்பங்குடையவர்கள். ’எவ்வடே’, ராரா சாமி ராரா’, ”பைய்யாடா’, ’இந்த மோகம் ஏமிரா’ ’ஏமி செய்யுது” ஆகிய பாடல்கள் பிரபலமான பாடல்களில் சிலவாகும். சுந்தரர், நம்மாழ்வார், திருமங்கை யாழ்வார், ஜெயதேவர் ஆகியோர் வழியில் இறைவனை நாயகன்—நாயகி பாவத்தில் கண்டு, ஏங்கி, புலம்பி, காத்திருந்து பேரின்பம் அடைந்தவர் இவர். ’சமஸ்கிருத மொழிக்கு ஜெயதேவர்போல தெலுங்கு மொழிக்கு க்ஷேத்ரய்யா என்று மிகப் பரவலாகச் சொல்லப்படும்’ பாராட்டும் இங்கு குறிப்பிடத்தக்கது.


