சேக்கிழார் பாடல் நயம் – 80 (இன்று நீர்)
![சேக்கிழார் பாடல் நயம் – 80 (இன்று நீர்)](https://www.vallamai.com/wp-content/uploads/2020/03/0-3.jpg)
திருச்சி புலவர் இராமமூர்த்தி
இன்று நீர்எனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்க
சென்று மாதவன் சேவடிபணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்
நீங்கள் விரும்பிய பொருள் முன்பே என்னிடம் உள்ளபொருள்தானே, அதனை விரும்பியது எம்பிரான் எனக்குச் செய்த பெரும்பாக்கியம் ஆகும்! என்று கூறிய இயற்பகையார், மிகவும் விரைவாகத் தம்இல்லத்தில் புகுந்தார். அங்கே மனை வாழ்க்கை வாழ்கின்ற கற்பில் மேம்பட்ட தம் காதலுக்கு உரியவரைநோக்கினார். ‘’இதுவரை திருமண விதிப்படி என்னைத் திருமணம் புரிந்து கொண்டு வாழும் மடந்தையே, இன்று உன்னை இங்கே வந்துள்ள உண்மையான தவமுனிவருக்கு உரிமையாக்கி நான் கொடுத்து விட்டேன்!’’ என்றார்.
அதனைக்கேட்ட அவ்வம்மையார், ‘’இன்று எனக்குக் கட்டளையிட்டுச் செய்யுமாறு அருளியது இதுதான் என்றால், என் உயிருக்கும் உரிய நாதராகிய நீங்கள் கூறிய இவ்வொப்பற்ற செயலை உடனே ஏற்றுச் செய்யும் அளவன்றி, எனக்கு வேறு வகையான உரிமை உண்டோ?’’ என்று கூறினாள். உடனே அவர் தம் தனிச் சிறப்புடைய கணவரை வணங்கினார்; தொண்டராகிய இயற்பகையார், அவரைமிகுந்த பணிவுடன் வணங்கினார். திருமகளைவிடவும் பெரியவளாகிய அந்த அம்மையார் உடனே விலகிச் சென்று, அங்கு வந்திருந்த அந்தணரின் திருவடி பணிந்து வணங்கியபின் திகைப்படைந்து நின்றார்.
இந்தவிடத்தில் நமக்கு இயல்பாக எழும் சிந்தனைக்கும், வினாக்களுக்கும் உரிய விடைகள் இப்பாடலிலேயே நுட்பமாக அமைந்துள்ள சிறப்பை என்னவென்று சொல்ல! இதன் முதற் பாடலில் ‘’விதிமணக்குல மடந்தை’’ என்று அழைக்கிறார், கணவனின் சொல்லை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது திருமணத்தின் விதி. சைவநாயன்மார்கள் தம்மிடம் உள்ளவை யாவும் சிவன்சொத்தே என்று கருதுவர். இறைவனிடத்து அடியார்கள் செலுத்தும் பக்தி ‘’அடிமைத்திறம்’’ என்று போற்றப் பெறும்.
‘’எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே!’’
என்பது சம்பந்தர் வாக்கு. அப்பரடிகள்,
சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய
எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே
என்று பாடுகையில் அடிமைத்திறத்தில் சிந்தனைக்கும் திகைப்புக்கும் இடமில்லை என்கிறார். மேலும்,
எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னைக்
கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே!
என்றும்,
அல்லல் என் செயும் அருவினை என் செயும்
தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும்
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு
எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே என்றும் பாடுகிறார்.
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்
என்றும்,
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்
என்றும் பாடி அடிமைத் திறத்தின் பெருமையைக் கூறுகிறார். திருமூலர்,
அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு
அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன்
அடியார் அருளால் அவன் அடி கூட
அடியான் இவன் என்று அடிமை கொண்டானே
என்ற பாடலில் சிவனடிரின் மிகமிகத் தாழ்ந்த அடிமை நிலையை வரையறுக்கிறார். அதனால் தான் தம் மகனைஅறுத்து அடியாருண்ணக் கறியமுதாக்கியும், தம்மகளின் கூந்தலை அடியாரின் பஞ்சவடிக்கு ஆக்கியும் அடியார் பிறர், எந்தத் தயக்கமும் இல்லாது இறைவனுக்கு எல்லாம் நல்கினர். இதனையே,
‘’என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக்கு? ‘’
என்கிறார் இயற்பகையார் மனைவியார். மேலும் இவ்வாறு கூறி வணங்கிய மனைவியாரைக் கணவனாரே வணங்கினார். இதனால் கடவுளுக்கு அளிக்கப் பெறும் பொருளையும் கடவுளாகவே வணங்கி அதனுடன் தனக்குள்ள தொடர்பையும் விலக்கத் துணிந்தமை புலனாகும். அவ்வாறே மனைவியாரும் கணவன் விருப்பப்படி வந்த அடியவர் பால் சென்று பின் திகைத்து நின்றார் என்கிறார் சேக்கிழார்! அம்மையார் திகைத்து நின்றமைக்கு நுட்பமான காரணம் உண்டு! இயற்பகையார் மனைவியார் ‘’கற்பின் மேம்பட்ட காதலுக்கு உரியவர்’’ என்று முன் பாடலில் குறிப்பிட்டார். அம்மாதரசியின் குடும்பக் கடமை என்ற தவத்தினைச் செய்தமையால் அவர் பெற்ற ஞானம், வந்த அந்தணரை இறைவனாகவே காணச் செய்தது. அதனால் அவருக்கு உண்டான அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி அவரைத் திகைக்க வைத்தது, என்பதை நாம் உய்த்துணர்கிறோம்! திருமகள் கணவனின் சங்கற்பத்தால், சீதையாகி அவனுக்காகத் தாமே சிறையில் இருந்தமை, அசுரன் வீழ்த்தக் கடலில் கடலில் மூழ்கியமை போன்றவை திருமால் அவதரித்தபோது அவருக்காகத் தாமும் அவதரித்துத் தாழ்ந்து வாழ்ந்த தேவர்குலத் திருமகளின் பெருமையாகும். ஆனால் எளிய மானிடப் பெண்ணாகிய இயற்பகையார் மனைவியார், கணவனின் கொள்கைக்குத் துணைபுரிந்த செயலால் திருமகளை விடப் பெரியவள் ஆனாள் என்பதை உணர்த்தவே, இப்பாடலின் இறுதியில் ‘’ திருவினும் பெரியாள் ‘’ என்ற தொடர் அமைந்தது! மீண்டும் பொருளுணர்ந்து இப்பாடலைப் பயில்வோம்
இன்று நீர்எனக் கருள்செய்த திதுவேல்
என்னு யிர்க்கொரு நாதநீர் உரைத்தது
ஒன்றைநான் செய்யும் அத்தனை யல்லால்
உரிமை வேறுள்ள தோஎனக் கென்று
தன்த னிப்பெருங் கணவரை வணங்கத்
தாழ்ந்து தொண்டனார் தாமெதிர் வணங்க
சென்று மாதவன் சேவடிபணிந்து
திகைத்து நின்றனள் திருவினும் பெரியாள்