நாலடியார் நயம் – 16
நாங்குநேரி வாசஸ்ரீ
16. மேன் மக்கள்
பாடல் 151
அங்கண் விசும்பின் அகல்நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் – திங்கள்
மறுவாற்றம்சான்றோர் அஃதாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமாசு உறின்.
அழகிய இடத்தினை உடைய
ஆகாயத்தில் விரிந்த நிலவினைப்
பரப்பும் சந்திரனும் பெரியோரும்
தம்முள் பெரும்பாலும் ஒப்பாவர்
திங்கள் தம் களங்கத்தைப்
பொறுப்பதுபோல் பெரியோர்
பொறுக்காது தவறு நேருங்கால்
தம்முள் வருந்தி மெலிவர்.
பாடல்152
இசையும் எனினும் இசையா தெனினும்
வசைதீர எண்ணுவர் சான்றோர் – விசையின்
நரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ
அரிமாப் பிழைபெய்த கோல்?
கடும்வேகத்துடன் நரியின் மார்பைக்
கிழித்த அம்பை விட சிங்கத்தை
அழிக்க விடப்பட்ட குறிதவறிய
அம்பு உயர்ந்ததாம் அதுபோல்
முடிந்தாலும் முடியாவிட்டாலும்
மேலோர் பழியற்ற செயலையே
மனதிற்கொண்டு செய்வர்.
பாடல் 153
நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம்கொண்டு ஏறார் – உரங்கவறா
உள்ளமெனும் நாரினால் கட்டி உளவரையால்
செய்வர் செயற்பா லவை.
நரம்புகள் வெளித்தோன்றுமாறு
நலிந்து வறுமையுற்றாலும்
நல்லொழுக்கத்தின் வரம்புகடந்து
நாவால் இரத்தலெனும் குற்றம்செய்ய
நடந்து பிறரிடம் செல்லார்
நல்லறிவைக் கவறாகக் கொண்டு
நன்முயற்சியெனும் நாரினால்
நெஞ்சத்தைக் அடக்கிக் கட்டி
நற்செயலை உள்ள பொருள்கொண்டு
நன்கு ஆற்றுவர் மேலோர்.
பாடல் 154
செல்வுழிக் கண்ணொருநாள் காணினும் சான்றவர்
தொல்வழிக் கேண்மையில் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சில நாள் அடிப்படில்
கல்வரையும் உண்டாம் நெறி.
நல்ல மலைகள் உள்ள
நாட்டுடை மன்னனே!
போகும் வழியில் ஒருநாள்
பார்த்தாலும் அவருடன்
பலநாள் பழகியதுபோல்
நட்புகொள்வர் மேன்மக்கள்
தொடர்ந்து சிலநாள் நடந்தால்
கல்மிகுந்த மலையும் தேய்ந்து
காலடிபட்டு வழி உண்டாக்கும்
பலநாள் பழகிப் பின் வரும் நட்பில்
பெருமையில்லை மேன்மக்கள் நட்பே
பெருமை வாய்ந்தது.
பாடல் 155
புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி
கல்லா ஒருவன் உரைப்பவும் கண்ணோடி
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்றவன்
பல்லாருள் நாணல் பரிந்து.
அரும் நூற்பொருளறியாப் பயனற்றவரின்
அவையைச் சார்ந்த கல்லா ஒருவன்
பொருத்தமற்று உரைப்பனவற்றை
பலர்முன் சுட்டிக் காண்பித்தால்
பல்லோரிடை அவனுக்கு அவமானம்
விளையும் என எண்ணி மனம்
வருந்தினாலும் அமைதியாய்க்
கேட்டிருப்பர் அறிவுடையோர்.
பாடல் 156
கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்;
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயிற் சிதைந்து.
கரும்பைப் பல்லால் கடித்தாலும்
கணுக்கள் உடையுமாறு நெரித்து
ஆலையில் சாறுபிழிந்து
அருந்தினாலும் இன்சுவை உள்ளதே
அத்தகு மேன்மக்களோ
மனம் புண்படும்படி
மற்றோர் இகழ்ந்துரைத்தாலும்
தம் வாயால் வசை கூறார்.
பாடல் 157
கள்ளார், கள் உண்ணார் கடிவ கடிந்தொரீஇ
எள்ளிப் பிறரை இகழ்ந்துரையார் – தள்ளியும்
வாயிற்பொய் கூறார், வடுவறு காட்சியார்
சாயின் பரிவ திலர்.
குற்றமற்ற அறிவுடையோர்
களவு செய்யார் கள் அருந்தார்
தள்ளத்தக்கவைகளைத் தள்ளி
தூயவராய் மற்றோரை அவமதியார்
தவறியும் தம் வாயால் பொய்யுரையார்
தம் நிலைகெட்டுத் தளர்ந்தாலும் வறுந்தார்.
பாடல் 158
பிறர்மறை யின்கண் செவிடாய்த் திறனறிந்து
ஏதிலார் இல்கண் குருடனாய்த் தீய
புறங்கூற்றின் மூங்கையாய் நிற்பானேல் யாதும்
அறங்கூற வேண்டா அவற்கு.
அன்னியரின் இரகசியம் கேட்பதில் செவிடனாவும்
அயலார் மனைவியைக் காண்பதில் குருடனாவும்
அடுத்தவரில்லா நேரம் பழி பேசுவதில் ஊமையாகவும்
அமைந்தவனுக்கு எவ்வித அறமும் கூறவேண்டா.
பாடல் 159
பன்னாளும் சென்றக்கால் பண்பிலார் தம்முழை
என்னானும் வேண்டுப என்றிகழ்ப – என்னானும்
வேண்டினும் நன்றுமற் றென்று விழுமியோர்
காண்தொறும் செய்வர் சிறப்பு.
நற்பண்பில்லாக் கீழோர் பல
நாட்கள் வந்து கொண்டிருப்பவரையும்
நம்மிடம் பலன் எதிர்பார்ப்பவர் என
நம்பி அவமதித்து ஒதுக்குவர்
நற்குணம்நிறை மேலோர்
நாடி வருபவர் எதைக் கேட்டாலும்
நல்லது என்று கூறி மகிழ்ந்து
நாளும் நன்மையே செய்வர்.
பாடல் 160
உடையார் இவரென்று ஒருதலையாப் பற்றிக்
கடையாயார் பின்சென்று வாழ்வர்; – உடைய
பிலந்தலைப் பட்டது போலாதே, நல்ல
குலந்தலைப் பட்ட இடத்து.
செல்வம் உடையவர் இவர் எனச்
சிந்தித்து உறுதியாய்ப் பற்றிக்கொண்டு
அற்ப மனிதர் பின்சென்று பிழைப்பர் சிலர்
அவர் மேன்மக்களுடன் சேர்ந்தவிடத்து
அளவில்லாப் பொருள்நிறை சுரங்கம்
அகப்பட்டதுபோல் இன்பம் கிட்டாதோ?