அவ்வைமகள்

 தலைமுடியைப் பற்றிய அறியாமையும் அறிவுப்பிழையும்   

சீப்பு பற்றி நாம் பேசிவருகிற வேளையில், அமெரிக்கர்களுக்கு தலைமுடி பற்றிய கவலையும் கரிசனமும் இப்போதுள்ளபோல முற்காலங்களில் இல்லை என்று தான் நான் சொல்லுவேன் என்றார் அந்த இராணுவ அதிகாரி.

ஏன் அப்படிக் கூறுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் விளக்கினார்:

200 ஆண்டுகளுக்கு முன்புவரையில், தலைக்குக் குளிப்பது என்பது என்னவென்றே தெரியாதவர்களாகத்தான் அமெரிக்கர்கள் இருந்து வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால், குளிப்பது என்ற பழக்கம் கூட அவர்களுக்கு இல்லாமல் தான் இருந்திருக்கிறது.

வாஷிங்க்டன் டீ.சி. யில் உள்ள புராதன வரலாற்று அருங்காட்சியகமான ஸ்மித்சோனியன் அருங்காட்சியகத்தில் பண்டைய சீப்புகள் உள்ள பிரிவில், இந்த வாசகங்களை நான் பார்த்திருக்கிறேன்.

ஸ்மித்சோனியன்  அருங்காட்சியகத்தின் வெளியீடு  ஒன்றிலேயும்  கூட இதே வாசகத்தை நீங்கள் பார்க்கமுடியும். இந்த இணைப்பைப் பாருங்கள் என்று தனது கணினியில் காண்பித்தார் https://www.si.edu/spotlight/health-hygiene-and-beauty/hair-care

நீங்கள் முன்பு சொன்னது போல, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்திலே தான் குளியலின் முக்கியத்துவமே தெரிந்திருக்கிறது – அதன் பின் தலைமுடியின் பால் கவனம் மிகுந்திருக்கிறது என்றார்.

மிகச்சரியாகவே ஆய்ந்து சொன்னீர்கள். நன்றி குறித்த தொடர்ந்தேன்.

பார்க்கப் போனால், இங்கு உள்ள உண்மை கொஞ்சம் அறுவறுப்பான உண்மைதான்! ஆங்கிலேயர்களைப்போல சுத்தமில்லாதவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை என்பது பலருக்கும் தெரிந்த ரகசியம். தொற்று வியாதிகளின் மொத்தச் சொந்தக்காரார்கள் ஆங்கிலேயர்களே என்பதும் கூட உலகறிந்த ரகசியம்.

ராட்சத்தனத்தைப் பயன்படுத்தி, எல்லோரையும்  மிரட்டியும், காயப்படுத்தியும்,  கொன்றும், போரிட்டும்,  அடக்குமுறை செய்து ஆங்கிலேயர்கள் பிறரை அடிமை செய்து வாழ்ந்த காலம் முழுதும், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் தொற்று நோய்களை – அதுவும் கடுமையான தொற்றுநோய்களை – கொள்ளை நோய்களைப் பரப்பினார்கள்.  பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகம் முழுமையுமே தொற்றுநோய்களின் கோரப்பிடியில் சிக்கித் தவித்தது என்பதற்கு ஆங்கிலேயர்களே முக்கிய காரணம்.

ஆமாம்! இது சத்தியம் –  என்று அவர் தொடர்ந்தார்: எங்கள் நாட்டின் பூர்வீகக் குடிகளான அமெரிக்க இந்தியர்கள், அதாவது செவ்விந்தியர்கள் ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்று நோய்களால் கொத்து கொத்தாய் ஆயிரக்கணக்கில் ஆங்காங்கே மாண்டு வீழ்ந்தனர். அவர்கள் போரிட்டு எங்கள் இந்தியர்களை அழித்ததைக் காட்டிலும்,  மிக அதிக எண்ணிக்கையில் தொற்று நோய்களைப் பரப்பியே கொன்றனர். எங்கள் பூர்வீகச் செவ்விந்தியர்கள் குலமே இன்று அழிந்துபோய், சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே அவர்கள் இருப்பதன் காரணமே ஆங்கிலேயர்கள் தாம்!

இவ்வாறெல்லாம், மனிதகுலத்தை பல்லாற்றானும் நாசம் செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் அல்லவா? இந்தப்  பாவத்தை அவர்கள் எப்படித் தீர்க்கப் போகிறார்களோ? என்றார்.

நாம் இப்போது தலைமுடி மீது நம் கவனத்தை திசை திருப்பலாமா என்று கேட்க, மீண்டும் தலைமுடியில் எங்களுடைய பேச்சு தொடர்ந்தது.

ஆங்கிலேயர்கள் பரப்பிய தொற்றுவியாதிகளில் தலைமுடியே  – தொற்றுச் சேமிப்பு வங்கியாக, தொற்று ஊடகமாக, தொற்றால்  பாதிக்கப்பட்டப்  பிரதான உடற்பொருளாக இருந்தது என்று நான் சீப்பு பற்றிப் பேசும்போதே சொன்னேன் அல்லவா – பத்தொன்பதாம் நூறாண்டின் துவக்கத்தில் கொள்ளை நோய்களின் போது, ஊரெங்கும் மனிதர்களின் தலையிலிருந்து உதிர்ந்த முடியைச் சேகரித்து – எரிப்பது என்பது முக்கியமான துப்புரவுப் பணியாக உலகம் முழுவதும் இருந்தது என்றால்  நீங்களே தலைமுடியின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளமுடியும்.

நிச்சயமாக உணர்கிறேன் – உலகில் பலபேர் இக்காலகட்டத்தில் வழுக்கையாகிப் போனார்கள் என்று கூடப் பார்த்தோமே – என்றார்.

ஆக, உடம்பின் உள்ளீடாகவோ – வெளியீடாகவோ எந்த பாதிப்பு ஏற்பட்டாலும் – முடி முதலில் பாதிக்கப்படுகிறது என்று புரிகிறது அல்லவா?

சரி, நம் மனநிலை பாதிக்கப்பட்டாலும் லும் கூட நம் தலைமுடி பாதிக்கப்படுமா? என்றார்.

நம்முள் ஏற்படும்  சிறு சிறு உணர்ச்சிப் பிறழ்வுகள் கூட, தலைமுடியைச் சென்றடைகின்றன என்றால், மனநிலை பாதிப்பு எவ்வாறு தலைமுடியை பாதிக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

பிரிவாலும், தனிமையாலும் வருந்துபவர்களுக்கு பொடுகு உண்டாகும். மனக்குழப்பம் ஏற்பட்டால் – முடி கொட்டும் – பிறரது அடக்குமுறைக்கு ஆட்பட்டவர்களுக்கு சொட்டை விழும். தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தீண்டாடுபவர்களுக்கு வழுக்கை உண்டாகும் என உளவியல் மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுபோன்றே பாலியல் உணர்ச்சிகள் மிகினும் குறையினும், முடி அதனை வெளிக்காட்டிவிடும். பெண்மை மிகுந்த ஆண்களும் ஆண்மை மிகுந்த பெண்களும், சிலபல முடிப்பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள் என்பதும்  கூட, ஒரு பொது அறிவாகவே நம்மிடையே விளங்கி நிற்கிறது.

தலைமுடியைப் பற்றி பல்வேறு பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் இருக்கின்றனவே என்றேன்.

தலைமுடியை நம் உடலின், First Responders – முதன்மைப் போராளிகள் – அல்லது  முதன்மை பதிலிருப்பான்கள் என்று சொல்வதே தகும் – எனலாமா என்றார்.

ஆம்! அது  தலைமுடிக்கு மிகப்பொருத்தமான பெயர்ச்சூட்டல் – நன்றி எனத்தொடர்ந்தேன்.

நம் உடலைப் பாதுகாக்க நம் தலைமுடி ஓவ்வொரு நொடியும் மிகுந்த பிரயத்தனம் செய்கிறது – தொடர்ந்து போராடுகிறது – நாம் விழித்திருக்கும்போது மட்டுமல்ல – நாம் உறங்கும் போதும் கூட.

நம்முள் ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் நம் தலைமுடி தாங்கி, அந்தத் தாக்கங்களையெல்லாம், கழிவாக்கித் தன்னுள்  சேகரித்து, வெளித்துப்பும் அற்புதமான பணியை நம் தலைமுடி செய்து கொண்டு வருகிறது.

அதுபோன்றே புறத்திலிருந்து ஏற்படும் அனைத்துத் தாக்கங்களையும் தான் தாங்கி வெளித்துப்பும் அற்புதமான பணியையம் நம் தலைமுடி ஓயாமல் செய்துகொண்டிருக்கிறது.

ஆக, தலைமுடியை, இருபுறமும் கூர்மை கொண்ட கத்திபோன்றது எனலாம் – உள்கிளம்பும் அரக்கரையும், புறத்திருந்து வரும் அரக்கரையும் ஒரே நேரத்தில் சளைக்காமல் தாக்கும் மாபெரும் ஆயுதமாக,  ஒவ்வொரு தலைமுடியும் செயல்படுகிறது.

தலைமுடிக்கு பராக்கிரம பலம் இருக்கிறது போல் தெரிகிறதே என்றார்.

ஆமாம் – அப்படியேதான் – எங்கள் நாட்டின் புராதன மருத்துவமுறைகளுள் ஒன்றான ஆயுர்வேத மருத்துவம் தலைமுடியை – எலும்பும் – தசையும் சேர்ந்த தனித்துவ உறுப்பு என்கிறது.

இது ஏறக்குறைய, தலைமுடி நரம்புகளின் தொடர்ச்சி எனும் செவ்விந்தியக் கோட்பாட்டுக்கு ஒத்துப் போவதாகவே உள்ளது. ஏனென்றால், எலும்பு, தசை, நரம்பு ஆகிய மூன்றும் ஒன்றிணைந்து இயங்குவன. இயக்கத்தில், ஒன்றை விட்டு இன்னொன்றைப் பார்க்கமுடியாத அளவிற்கு ஒருங்கிணைந்த பணியை எலும்பும், தசையும், நரம்பும் செய்கின்றன.

ஆங்கில மருத்துவமுறை தலைமுடியை, உடல் ரோமத்தை, நகத்தை, தோலின் ஓட்டுமானம் (Appendage) என்று சொல்லுகிறதே என்றார்.

ஓட்டுமானம் என்று மேலோட்டமாகச் சொல்லிவிட்டால் பொறுப்பு கழிகிறது அல்லவா?  தலைமுடி இல்லாமலும் உயிர் வாழமுடியும் என்பதால் ஆங்கில மருத்துவம் தலைமுடி பற்றி அலட்டிக்கொள்வதில்லை. ஆனால், பிறந்த எவரொருவரும் நல்லவிதமாக, ஆரோக்கியமாக, சுயமதிப்புடன், அழகாக, மரியாதைத் தோற்றத்துடன் வாழவேண்டும் என்பது முக்கியமல்லவா? – நல்ல ஆரோக்கியமான தலைமுடி இல்லாமல் இது எப்படி சாத்தியமாகும்? என்றேன்.

ஆமாம்! அழகான – கண்ணியமான – ஆரோக்கியமான – தோற்றம் அதி முக்கியம். அதற்காகத்தானே அனைவருமே ஓயாமல் பிரயாசைப் படுகிறோம்!  தோற்ற  அழகு என்றால் தலைமுடி தானே பிரதானம். எனவே, தலைமுடியை, தோலின் ஓட்டுமானம் என்னும் ஆங்கில மருத்துவ சித்தாந்தத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லையே! என்றார்.

ஆங்கில மருத்துவ முறையின் பலவீனமே அதன் அணுகுமுறை சித்தாந்தமே. நோயின் குறிகளை மட்டுமே குணப்படுத்துவது என்கிற நோக்கில் செயல்படுவதால் பெரும்பாலும், ஆங்கில சிகிச்சை முறைகள், நோயைத்  தணிப்பதில்லை. மாறாக நோயாளி, தொடர்ச் சிக்கல்களுக்கும் தொடர் சிகிச்சைக்கும்  இட்டுச் செல்லப்படுவார்.

புராதனமான இந்திய மருத்துவ முறைகள் கொண்டுள்ள சித்தாந்தம் வேறானது – நோயின் குறிகளை நீக்குவது இம்முறைகளின்  குறிக்கோளல்ல. நோயை முற்றிலுமாகத்  தணிப்பது தான் குறிக்கோள். எனவே, பாரம்பரிய மருத்துவச்  சிகிச்சைகளின்  வழிமுறைகள் வேறானவை.

பாரம்பரிய முறைகளில், முதன்மையாக, நோய் வராமல் தடுப்பதில் மட்டுமே மேலார்ந்த கவனம் செலுத்தப்படுகிறது.  எனவேதான் மருத்துவம் என்பது வாழ்வியல் முறையானது.

எனவேதான், அன்றாடப் பழக்க வழக்கங்களும் உணவும் அவரவர் பாரம்பரிய சமூகப் பண்புகளுக்கு ஏற்புடையதாய் – பெண்-ஆண் என்கிற வேறுபாட்டுக்குரிய விகிதாச்சாரத்தில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது.

தலைமுடி என்பது ஒரு பாதுகாப்புக் கவசமாய் – நல்லரணாய்  நம்மைக் காப்பது என்பதால் – தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகளை எவரும் எழுப்பிக்கொண்டுவிடக்கூடாது என்பது எவரொருவருக்கும் தெரிந்திருந்த சூழல் எங்கள் நாட்டில் எல்லோருக்குமே இருந்தது.

தலைமுடிக்கு பழுது ஏற்படக்கூடாது என்றால் – அதை ஒவ்வொருநாளும் கண்ணும் கருத்துமாய்ப் பராமரித்துப் பாதுகாக்கவேண்டும் என்பது அனைவருக்குமே தெரிந்திருந்தது.

எனவேதான், தலைமுடியை நன்கு  பராமரித்து, பலப்படுத்தி, வெகு ஆரோக்கியமாய் அதனைப் பத்திரமாய்ப் பாதுகாக்கவேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் நித்திய கட்டளையானது. இந்த நித்தியக்  கட்டளை குடும்ப வாழ்வில் நிலை நிறுத்தப் பட்டது.

தலைமுடிப் பராமரிப்பு முறயை எங்கள் முன்னோர்கள் மிகுந்த அறிவியல் நுணுக்கங்களோடு, வெகு கவனத்தோடு, தயாரித்து அதனை தினசரிப் பழக்கத்தில் ஏற்றினார்கள்.

ஒரு செயல்பாடு பழக்கமாக மாற எத்தனை முயற்சி தேவை – என்பதை  எண்ணிப் பார்க்கிறேன் – உங்கள் மூதாதையர்களுக்கு என் மானசீகமான வந்தனங்கள் என்றார். நன்றி சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன்.

அவரவர்களே அவர்களது தலைமுடியைப் பராமரித்துக் கொள்ளுவது கூடாது என்பது எங்கள் நாட்டில் தலையாய நியதியாக இருந்தது. இதற்கு இரு காரணங்கள் உண்டு, ஒன்று: நம்மால் நம் தலைமுழுவதையும் பார்க்கமுடியாது – பெரும்பாலான சிக்கலான மற்றும் தீவிரமான தலைமுடிப் பிரச்சினைகள்  தலை உச்சியிலும், சுழியைச் சுற்றியும் ஏற்படுவனவே ; இரண்டு: தலைமுடி என்பது இரத்த சம்பந்தம் உடையது.

இரத்த சம்பந்தம் என்கிறீர்களே – புரியவில்லை – விளக்கமுடியுமா என்றார் – தொடர்ந்தேன்.

நான் ஏற்கனவே சொன்னபடி, நம் தலைமுடி என்பது நம்  குடும்பத்தின் பாரம்பரியத் தன்மையைக் கொண்டு தான் உருவாகிறது. ஒரு தாய் தந்தையருக்குப் பிறந்த குழந்தைகள் முடியில், ஒன்றேயான மரபணுச் சங்கேதத்தோடு பிறக்கிறார்கள். இதுதான் முடியின் இரத்த சம்பந்தம் என்பது. இந்த மரபணுச் சங்கேதத்தை வைத்துத்தான் தடவியலில், முடியை வைத்த்துக் குற்றவாளிகளை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இரத்த சம்பந்தமுள்ளவர்களுக்கு  அடிப்படையில் பாச உணர்ச்சி இருப்பது இயல்பு. நம் தலைமுடி நுண்ணிய உணரி – இரத்த சம்பந்தம்  உள்ளவர்கள் தொடும்போதும் கையாளும்போதும் நம் தலைமுடி குதூகலம் அடைகிறது, பாதுகாப்பை உணர்கிறது.

இரத்த சம்பந்தம் உள்ளவர்கள் ஒருவர் மற்றொருவர்  தலையைத் தொடுவது அல்லது  வருடுவது சொந்த உரிமையாகும். ஆனால்,  பிறர் நம் தலையைத் தொடுவதோ வருடுவதோ உரிமை மீறல் என்று பொதுவாகக் கருதப்படுவது உண்டு.

பெண்களைக் காதல் வலையில் சிக்க வைப்பவர்கள், பெண்களின் தலை மற்றும் தலைமுடியை முதலில் குறி வைப்பார்கள் என்றும் கூறப் படுகிறது. இதுபோன்றே தலையைத் தொட்டும் தலைமுடியைத் தொட்டும் பிறரைத் தன் பால் கவர்ந்திழுக்கும் வசியமுறைகள் கூட தாந்த்ரீக வழிமுறைகளில் காணப்படுவதினை அறிகிறோம்.

கணவன் – மனைவிக்கிடையே அன்பு உருவாக்கம் மற்றும் கூடல் முன் விளையாட்டுக்களில் தலைமுடியின் வேர்க்காலில் சுரக்கும் சிலநுட்ப திரவியங்கள் தூண்டல் ஊடகங்களாகச் செயல் படுவதையும் அறிகிறோம்.

குடும்பத்தில் ஒருவர் மற்றொருவரின் தலைமுடியை வாருவது, பராமரிப்பது, அழகு படுத்துவது எல்லாம் – பாசப்பிணைப்பை மேலும் பிணைப்பதோடு குடும்பத்தின் ஒட்டுமொத்த தலைமுடி ஆரோக்யத்தைப் பாதுகாக்க உதவுகிறது.

சிறியவர்களின் தலையை  தினந்தோறும் எண்ணெய் தடவி வாருவது என்பது பெரியவர்களின் அன்றாடக் கடைமையானது இக்காரணத்தால் தான்.

அன்றாட வேலைப் பட்டியலில், ,தலை வார, கட்டாயமாகக் கணிசமான நேரம் ஒதுக்கப்படும். பாட்டியோ, அம்மாவோ, மூத்த சகோதரியாயோ, எவரோ ஒரு பொறுப்பான மூத்த பெண்மணி, தலைவாரும் பணியை சிரத்தையுடன் மேற்கொண்டு செய்வார்.

இந்தப் பழக்கத்தினால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் தலைமுடியும்  ஒவ்வொரு நாளும் சுத்தமாகப் பராமரிக்கப்படுவதோடு அல்லாது – முடி சம்பந்தமான எந்த ஒரு சிறிய பிரச்சினையும் முளையிலே கண்டுபிடிக்கப்படும் அதற்குண்டான சிகிச்சை உடனடியாக வீட்டிலியேயே வழங்கப் பட்டுவிடும்.

தலைமுடியை உடலின் நுட்பமான உறுப்பாகவே இந்தியர்களின் பண்டைய உலகம் கருதி வந்ததால், வெகு சிறப்பான வீட்டுப்  பராமரிப்பு முறைகளை அது ஆய்ந்து அறிந்து நிலைப்படாக்கியது.

பராமரிப்பு தான் தலைமுடியின் பாதுகாப்புக்கு முதன்மையானது என்பது இந்தியர்களின் உறுதியான நம்பிக்கை – என்று நான் முடித்தவுடன் அவர் சொன்னார்:

ஆமாம் ஆமாம்! செவ்விந்தியர்கள் இன்றும் கூட, தனது தலைமுடியை குடும்பத்தினர் அல்லாத எவரையும் தொட அனுமதிப்பதில்லை. சலூன்களைலிருந்து அவர்களை இன்றும் விலகியே நிற்கிறார்கள்.

சலூன்கள் எல்லாம் தற்கால உற்பத்திகளே. அதுவும் பெண்களின் இன்றைய விரித்துத் தொங்கவிடும் தலைமுடி அலங்காரங்கள் பெரும்பாலும் சலூன்களாலும் விளம்பரங்களாலும் பெருகினவையே. இந்தத் தலைவிரிகோலத்ததால், இன்று ஏற்பட்டிருக்கிற தலைமுடிப் பிரச்சினைகள் ஒன்றா இரண்டா?

இன்று கடைகளில் விறக்கப்படும் அனைத்து தலைமுடி தொடர்பான பொருட்களிலும் வியாபார நோக்கம் மட்டும் தான் இருக்கிறதே  தவிர தலைமுடி ஆரோக்கியத்தின் நோக்கம் அங்கு இல்லை. மேலும் மேலும் அப்பொருட்களை வாங்கி  உபயோகிக்க வேண்டும் என்கிற தேவையைத் தொடர்ந்து மக்களிடையே (குறிப்பாக பெண்களிடையே) தக்கவைக்கவேண்டும் என்கிறதான நெருக்கடியை ஏற்படுத்தும் சாகசம் நிறைந்த வணிக உலகத்தின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு நம் தலைமுடி இன்று திக்குமுக்காட்டிக் கொண்டிருக்கிறது.

உங்கள் பெண்களைப் போலவே எங்கள் பெண்களும், இப்போது, தலைமுடி பராமரிப்புக்கென மிக அதிக அளவில் செலவழிக்கிறார்கள்.

வீட்டிலேயே எளியவழிகளில் தினசரிப் பழக்கமாக, வளமாக தலைமுடியைப் பராமரிக்கும் வழி தெரிந்தும் கண்மூடித்தனமாய், நவீன மோகத்தில் எங்கள் பெண்கள் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இதில் அதிர்ச்சி  தரும்  சேதி என்னவென்றால், சலூனில் செய்யப்பட்ட அலங்காரத்தைகே கலையாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்கிற அவாவில் இன்றைய நவீனப் பெண்கள் தலைக்கு குளிப்பதைக்க கூட குறைத்துக் கொண்டுவிட்டார்கள் அல்லது முற்றிலுமாக விட்டுவிட்டார்கள்.

இன்று, சலூன் பெஞ்சில் படுத்தபடி, சலூன் பணியாளர், தலைமுடியை அலசிவிட்டுப் புது அலங்காரம் செய்யும் நிலையோடு  எங்கள் பெண்கள்  வாழ்க்கை மாறிப்போயிருக்கிறது.

நெருக்கடிமிக்க சந்து பொந்துகளிலெல்லாம் சலூன்கள் – அழகு நிலையங்கள் –  சுகாதாரக் குறைபாட்டுடனே தான் எல்லாம் அங்கு நடக்கின்றன. இருப்பினும், இன்றைய காலத்தின் கோலம் பெண்களும் ஆண்களும் சலூனில் தஞ்சம்.

போலிக் கவர்ச்சியும், வேதிப் பொருட்களின் பூச்சுமாக பெண்களும் ஆண்களும், செயற்கை மிகுந்த ஓப்பனையுடன் – ஜீவ உரம் தாழ்ந்தது வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் தாழ்மையை என்னென்று சொல்வது?

வருத்தமாயிருக்கிறது – உங்கள் நாடு ஒரு ஞான பூமி ஆயிற்றே! உலகம் முழுமைக்கும் உடல் நலத்தில் ஞான ஒளி காட்டி வழி நடாத்திச் செல்லும் பெற்றி பெற்ற ஒரு நாட்டில், இவ்வாறான சீரழிவுகள் நேர்வது உண்மையிலேயே என்னை மிகவும் வருத்தமடையச் செய்கிறது என்றார்.

இன்று தலைமுடியைப் பற்றி அறியாமை மட்டுமல்ல அறிவுப் பிழையும் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகள் நம் உடல் நலனை, நம்மிடமிருந்து விலக்கி வைக்குமாறு நாம் அனுமதித்திருக்கிற மூடத்தனம் இன்றைய அடையாளமாயிருக்க்கிறது என்றார்.

(மேலும் பேசுவோம்) 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *