Blog

  • சங்கடம் கொள்ளவேண்டாம்!

    -எம்.ஜெயராமசர்மாமெல்பேண்

    சர்க்கரை வியாதி வந்தால்
    சந்தோ
    ஷம் பறந்தே போகும்
    சாப்பாட்டைக்
     கண்டு விட்டால்              sweet
    சலனமே
    மனதில் தோன்றும்!

    எப்பவும் இனிப்பை எண்ணும்
    எதையுமே
    உண்ணப் பார்க்கும்
    அப்படி
    உண்டே விட்டால்
    அதுதொல்லை
    ஆகி நிற்கும்!

    திருமண வீடு சென்றால்
    தித்திப்பு
    நிறைந்தே நிற்கும்
    வகைவகை
    உணவை அங்கே
    வரிசையாய்க்
    கண்கள் காணும்!

    அவையெலாம் உண்ணும் ஆசை
    அளவிலா
    மனத்தை ஆளும்
    நினைவெலாம்
    உணவாய் நிற்கும்
    நிம்மதி
    பறந்தே போகும்!

    கொண்டாட்டம் வந்து விட்டால்
    குதூகலம்
    நிறைந்தே நிற்கும்
    குலோப்ஜான்
    லட்டு எல்லாம்
    குறைவின்றி
    இருக்கு மங்கே!

    நாக்கிலே நீரும் ஊறும்
    நரம்பிலே
    முறுக்கும் ஏறும்
    ஆர்க்குமே
    தெரியா வண்ணம்
    அனைத்தையும்
    தின்னத் தோணும்!

    விரைந்தோடி நிற்கும் வெட்கம்
    விரும்பிமனம்
    உண்ண நிற்கும்
    வேண்டியதை
    உண்டு விட்டு
    விழி
    பிதுங்கி நிற்போமே!

    இனிப்புகள் உள்ளே சென்று
    இரத்தத்தில்
    கலந்து நின்று
    முறைத்துமே
    எம்மைப் பார்க்க
    முகமெலாம்
    கலங்கி நிற்போம்!

    மனைவியும் மகளும் சேர்ந்து
    மங்களம்
    பாடித் தீர்ப்பார்
    மளமள
    வென்று சென்று
    மருந்தினை
    விழுங்கி நிற்பேன்!

    விளம்பரம் ஒன்றைப் பார்த்து
    விரைவுடன்
    படித்து நின்றேன்
    விருப்பமாய்ச்
    செய்தி அங்கே
    விந்தையாய்
    இருந்த தங்கே!

    சர்க்கரை உள்ளோர் எல்லாம்
    சங்கடம்
    கொள்ள வேண்டாம்
    சரியான
    உணவு எல்லாம்
    சந்தையில்
    இருக்கு இப்போ!

    செயற்கையாய் இனிப்புச் சேர்த்து
    தின்பண்டம்
    இருக்கு இப்போ
    வருத்தமே
    படவே வேண்டாம்
    வந்துமே
    வாங்கித் தின்பீர்!

    அளவுடன் உண்ண வேண்டும்
    அதைநிதம்
    பேண வேண்டும்
    அனைவரும்
    மனதில் கொண்டால்
    ஆனந்தம்
    வருமே நாளும்!

    தினமுமே நடந்து சென்றால்
    தீராத
    நோயும் தீரும்
    நடவுங்கள்
    எந்த நாளும்
    நன்மைகள்
    உம்மைச் சேரும்!

    சர்க்கரை வியாதி கண்டு
    சஞ்சலம்
    கொள்ள வேண்டாம்
    சாப்பாடு
    எடுக்கும் போது
    சமமாக
    எடுக்க வேணும்!

    உடற் பயிற்சி செய்திடுங்கள்
    உணவு
    எலாம் மாற்றிடுங்கள்
    மனத்தினிலே
    உறுதி கொண்டு
    மாற்றிடுங்கள்
    பழக்கம் எலாம்!

    சோம்பல் நிலை மாற்றிடுங்கள்
    சுறுசுறுப்பை
    ஏற்றிடுங்கள்
    நாங்கள்
    வாழ வேண்டுமென்று
    நாளும்
    எண்ணி நின்றிடுங்கள்!

    சர்க்கரை வியாதி தன்னைச்
    சலிப்புடன்
    நோக்க வேண்டாம்
    எப்பவும்
    உங்கள் வாழ்வில்
    இனிப்புகள்
    தேவை அன்றோ!

    தப்புடன் இனிப்பை உண்டால்
    தலையிடி
    வந்தே தீரும்
    எப்பவும்
    அளவாய் உண்டால்
    எவர்க்குமே
    விளைவு நன்றே!

    மருந்தினை விருந்தாய் உண்போம்
    விருந்தினை
    மருந்தாய் உண்போம்
    வருந்திநாம்
    நிற்க வேண்டாம்
    வாழ்வெலாம்
    இன்பம் காண்போம்!

    வெளிச்சத்தைக் கொண்டு வந்த
    விளம்பரச்
    செய்தி தன்னால்
    சர்க்கரை
    வியாதி பற்றி
    சங்கடம்
    அகன்றே போச்சு!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (33)

    அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம்(2), சிங்கப்பூர்

     

     

    சுபாஷிணி ட்ரெம்மல்

    ​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.

    14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.

    பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம் பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்

    ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.

    15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.

    சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா

    பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.

    அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.

    இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.

    ​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
    ​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்

    இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.

    சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

    ​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.

    இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

    தொடரும்

    Share
  • ஒரு பஸ் பயணம்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    bus

    “அப்பா டிரெயின்ல தட்கால் கூட கிடைக்கல உனக்கு ஸ்லீப்பர் பஸ்ல டிக்கட் ஆன் லைன்ல புக் பண்ணிடறேன்” என்றான் என் மகன். வேறு வழியில்லை மறுநாள் சென்னையில் ஒரு படப்பிடிப்பிற்கு வந்தாக வேண்டிய கட்டாயம். அப்பர் பெர்த் ரெயிலைவிட ஏ/சி பஸ் மேல் என்று சரியென்றேன். எனக்கு பொதுவாக பயணம் என்றால் பயம் அதிலும் பஸ் என்றால் இன்னும் பயம். நல்ல சாலைகள், நல்ல பஸ் நல்ல இருக்கைகள் எல்லாம் சரி எங்கேயும் எப்போதும் படமெல்லாம் பார்த்து மனதில் இன்னும் நடுக்கம்.

    பஸ்ஸூக்கும் டிரெயினுக்கும் இன்னொரு வித்யாசம் டிரெயினில் டிரைவர் நம் கண்ணுக்கு விழுவதில்லை. பஸ்ஸில் நாம் காணக் கிடைக்கிறார். டிரெயினில் எப்போதாவதுதான் நம் லைனிலே  டிரெயின் வரும அபாயம் உண்டு.  பஸ்ஸில் எந்த பக்கத்திலிருந்தும் பஸ், லாரி, கார் எதுவும் வரும். சில சமயங்களில் நம் டிரைவர் பயணிகள் தூங்கும்போது நாம் கொஞ்சம் தூங்கினால் என்ன என்று கண் அசரும் அபாயம் நான் சில முறை பார்த்திருக்கிறேன். இரவு பகல் மழை வெயில் பாராமல் எப்படி பட்ட வண்டியை கொடுத்தாலும் அந்த மனித தெய்வங்களை குறை கூற இந்த பதிவு இல்லை. கொஞ்சம் வார்ம் அப் பண்ண ஒரு இரண்டு பாரா எழுதினேன்.

    ஆனால் இந்த சிட்டி பஸ் களிலும் வெளியூர்களிலும் சமீப காலங்களில் நான் காணும் மிகப் பெரிய வேற்றுமைகளை உங்களிடம் பகிர்ந்து கொள்வதுதான் இந்த பதிவின் நோக்கம்.

    பிராட்வே, மயிலாப்பூர் டேங், தி. நகர், வடபழனி ஐயப்பந்தாங்கல் இப்படி பஸ் புறப்படும் இடங்களில் நீங்கள் பயணத்தைத் துவக்கியிருந்து கவனித்திருந்தால் அந்த மாறுதல் தெரியும். ஒரு 5B 12B 17M 18K 12 13 45B 5E இப்படி எதாவது பஸ் என்று வைத்துக் கொள்ளுங்கள்.ஒரே நம்பரில் இரண்டு பஸ்கள் நிற்கும். நாம் பூவா தலையா போட்டு ஒன்று முதலில் புறப்படும் என்று நம்பி அதில் ஏறி அமர்வோம். நம்மைப் போல் பலர் அந்த வண்டியில் இருப்பார்கள். நம் கண் எதிரில் டிரைவர் கண்டக்டர்கள் நின்று பேசிக்கொண்டிருப்பார்கள்.

    வரும்போது வரட்டும் என்று நாம் உட்கார்ந்திருக்கும் போது எங்கிருந்தோ ஒரு டிரைவர் வந்து நாம் உட்காராத பஸ்ஸில் ஏறி உடன் அதனை இயக்கி வேகமாக புறப்பட்டுவிடுவார். நாம் பிடித்த ஜன்னல் சீட்டை தியாகம் பண்ணிவிட்டு தலை தெறிக்க ஓடி கையிலிருந்த பொருட்களை ஞாபகமாக எடுத்தோமோ என்று பார்த்து ஏறி இடத்தில் உட்காருவோம். கண்டக்டர் வந்தாரா பஸ்ஸில் இருக்காரா ரைட் என்று விசில் கொடுக்கிறாரா என்பதெல்லாம் இப்போது டிரைவர் கவலைப்படுவதில்லை. ஒரு உலுக்கு உலுக்கி பஸ் எடுத்து விடுவார். ஏறினவரை லாபம்தான்.

    கண்டக்டரும் நான் கவலைப்படுகிற அளவு கவலைப்படுவதாக தெரியவில்லை. கண்டக்டர் டிக்கட் , சில்லறை இருக்கா, பத்துரூபா, அம்பது ரூபா நூறு ரூபாயா எடுத்துகிட்டு எல்லாரும் வந்து உட்கார்ந்திடுங்க, போவாது, இறங்கு, இடம் இருக்குல்ல முன்ன போ. இதை தவிர யாரிடமும் எதுவும் பேசுவதுமில்லை பயணிகளும் அவரிடம் எதுவும் கேட்பதுவுமில்லை. அவரவர்களுக்கு காதில் சொருகியிருக்கும் ஹியர் போனில் பாட்டு கேட்பதற்கும், கடலைப் போடுவதற்கும், போனில் பொய் சொல்வதற்கும்தான்  நேரம் சரியாக இருக்கிறதே.

    சென்னையில் அரசு பஸ்தான் ஒரே ஒரு தனியார் பஸ் 54 பூந்தமல்லி –பிராட்வே. நான் தனியார் பஸ் கோலோச்சிய காலத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். என்னோடு வாருங்கள். இடம் மாயவரம். அந்த காலத்தில்  ஶ்ரீராமவிலாஸ் (S.R.V.S) கும்பகோணத்திலிருந்து இயக்கப்பட்டது. அடுத்தது சத்தி விலாஸ் பொரையார், ராமன் & ராமன் (கும்பகோணம்) . இந்த ராமன் ராமன் கம்பெனி பஸ்களில் 54 இருந்தது. ஒவ்வொரு பஸ்ஸூக்கும் ஒரு ராமன் பெயர் கல்யாண ராமன், கோதண்ட ராமன், சீதா ராமன். கடைசி பஸ் மட்டும். ராமனில்லை தாசரதி.

    அது ஒரு கட்டுக்கோப்பான காலம். மாயவரத்திலிருந்து கும்பகோணம், சிதம்பரம் புதுப்பட்டினம் இப்படி நிறைய ஊர்களுக்கு அந்த பஸ் செல்லும். என்னால் மறக்க முடியாதவர் டிரைவர் சம்பந்தம் பிள்ளை. நான் சிறுவனாக அவரை சந்தித்த போது அவர் நாற்பதுகளில் இருப்பார். அப்போது காக்கி அரை டிராயர் தான் காக்கி சட்டைதான் டிரைவர் யூனிபார்ம். கம்பீரமாக இருப்பார். திறமையாக ஓட்டுவார்.

    கண்டக்டரும் ரொம்ப திறமையாக இருப்பார். டிக்கட் போடுவதே ஒரு அழகு. அடியில் அலுமினியப் பலகையில் சீட்டு புக் இருக்கும். கார்பன் பேப்பரை இரண்டு பக்கமும் வைத்து பென்சிலால் அல்லது பால் பென்னால் எழுதி டிக்கட் போட்டு கிழித்துக் கொடுப்பார். பஸ் புறப்படுவத்ற்கு முன் டிக்கட் போடுவார். சின்னப் பையன் என்றால் அரைடிக்கட் தீர்மானம் பண்ண படியில் ஒரு உயரம் இருக்கும் அதன் அருகில் நிற்க வைப்பார். அப்போதெல்லாம் ½ டிக்கட் பத்து வயது வரைக்கும். உயரம் முதலில் தீர்மானிக்கும். நான் என் உயரத்தினால் 14 வயது வரை ½ டிக்கட் வாங்கி பயணித்திருக்கிறேன். பல சமயம் தம்பி அந்த அம்மா பக்கத்தில உட்காருங்க என்பார். நான் வெட்கத்தோடு போய் உட்காருவேன்.

    புறப்படும் நேரம் வரும்போது சம்பந்தம் வருவார். வண்டியில் கம்பீரமாக உட்கார்ந்து கொண்டு  டவலால் முகத்தைத் துடைத்துக் கொள்வார். பொறுமையாக உட்காருவார். போலாமா தம்பி என்று கண்டக்டரைக் கேட்பார். போலாண்ணே என்பார். பிறகு தான் வண்டி எடுப்பார். விசிலுக்கு கட்டுப்பட்டு பஸ் ஓட்டுவார்.

    கண்டக்டர் பயணிகளோடு உரையாடி வருவார். நிறைய வேடிக்கைகள் நடக்கும். யாராவது டிக்கட் இன்னும் வாங்கணுமா என்பார். எல்லாரும் பேசாமல் இருப்பார்கள். தலையை எண்ணுவார். இன்வாய்ஸ் சரி பார்ப்பார். வண்டியை ஓரங்கட்டுங்கண்ணே என்பார். வண்டி ஓரமாக நிறுத்தப் படும். கண்டக்டர் எல்லாரிடமும் சீட்டைக் குடுங்க என்று ஒவ்வொருவராக கேட்டுக் கொண்டுவருவார். இருபது பேருக்கு மேல் செக் பண்ணினபிறகு ஜன்னல் ஓரம் ஒருவர் தூங்கிக் கொண்டிருப்பார். ஐயா டிக்கட் என்றவுடன் அவர் தூங்கி எழுந்து வைத்தீஸ்வரன் கோயில் ஒண்ணு குடுங்க என்று இப்போதுதான் கண்டக்டர் கேட்பது போல் டிக்கட்டுக்குப் பணம் கொடுப்பார்.

    கண்டக்டர் கோபம் வந்தாலும் ஏன்யா டிக்கட் வாங்கிட்டு  தூங்க கூடாதா என்பார். போலாண்ணே என்று விசில் கொடுத்துவிட்டு டிக்கட் கொடுப்பார். பஸ் மறுபடியும் பயணம் தொடரும். மாயவரம் சீர்காழி பஸ் சாலை வேடிக்கையாக இருக்கும். அந்த காலத்தில் சோழ நாட்டில் எதிரிகள் படை எடுக்க வந்தால் நேர் பாதையாக இருந்தால் வேகமாக முன்னேறுவார்கள் என்பதால் வளைந்து வளைந்து சாலைகள் இருக்கும். இன்னும் இன்றும் அப்படியே இருக்கிறது. அதனால் வண்டி ஓட்டுவது கஷ்டம். பஸ் ஸ்டாப் ஊர் பெயரும் இருக்கும். சில இடங்களில் ஒத்தகடை, பஞ்சாயத்து போர்டு, மதகடி, புளியந்தோப்பு, அய்யனார் கோவில், சாவடி, ஆத்துப் பாலம் இப்படி.

    அதுவுமில்லாமல் புதுசாக வந்தவர்கள் ஊரில் பெரிய புள்ளிகளைச் சொன்னால் தலைவர் ஐயா வீட்டிற்கு போகணும் என்றால் ஓத்த கடையில இறங்கி வடக்கே போங்க தோப்புக்கு அடுத்த தெரு என்பார். சில சமயம் பயணிகளை பாத்து நாளாயிட்டு ஊர்ல இல்லையா என்பார்.

    அவர்களும் அவர்கள் வீட்டு வைபவங்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பார்கள். சில பேர் தீபாவளிக்கு பொங்கலுக்கும் வேஷ்டி சட்டை வாங்கி கொடுப்பார்கள். கண்டக்டர் வெற்றிலைப் பாக்கு புகையிலை போடுவார்.

    இன்னொரு காட்சி டிரைவர் கண்டக்டர் வீடுகள் அவர்கள் பாதையில் இருக்கும். மதிய சாப்பாடு அவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வீட்டிலிருந்து மனைவியோ மகனோ மகளோ கொண்டுவந்து கொடுப்பார்கள்.

    திருமண வீடுகளுக்கு வரும்போது வேஷ்டி சட்டையில் வருவார்கள். இவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். பிறகுதான் அவருக்கு காக்கி டிராயர் சட்டைப் போட்ட பிறகுதான் டிரைவர் கண்டக்டர் என்று மனதிற்குள் பளிச்சிடும்.

    பஸ்களும் முடிந்த வரை சரியான அளவுதான் டிக்கட் கொடுப்பார். ½ டிக்கட் கூட அதிகம் கொடுக்க மாட்டார்கள். அடுத்த வண்டியில வாங்க போலாம் ரைட்டு என்று விசில் அடிப்பார். பஸ்கள் பொதுவாக அசோக் லைலெண்ட், ஃபார்கோ, டாஜ் இருக்கும் டாடா பின்னாளில் வந்த்து. மாயவரத்தில் 1 நம்பர் டாட  பஸ் முன் பக்கம் கொஞ்சம் புடைத்துக் கொண்டிருக்க்கும். நாங்கள் அதை தொப்பை பஸ் என்போம். டிரைவர் நாகராஜன் ரொம்ப நாள் அந்த வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார்.

    கண்டக்டர்கள் ஓயாமல் பேசிக்கொண்டு வருவார்கள். ஒரு சிலர் வேடிக்கையாக பேசி பயணக் களைப்பில்லாமல் செய்வார்கள். ஒரு கண்டக்டர் எவ்வளவு கூட்டமிருந்தாலும் டிக்கட் கொடுப்பார். டிக்கட் வாங்கிக்கிங்க. அம்மா வாங்கராங்கனு ஐயா சும்மா இருந்துடுவார், ஐயா வாங்கிடுவாருன்னு அம்மா சும்மா இருந்துடுவாங்க. கேளுங்க கேட்டு வாங்கிடுங்க. செக்கர் வந்தா மாட்டிகிடுவீங்க என்பார். அம்மா ஏற பக்கம் ஐயா ஏறாதீங்க ஐயா ஏற பக்கம் அம்மா ஏறாதீங்க என்பார். கடலங்குடி வரை செல்லும் 1 நெம்பர் பஸ்ஸில் ஒரு இளைஞர் கண்டக்டர். அவர் மிக வேடிக்கையாக பேசுவார். நல்ல தமிழ் தெரிந்தாலும் கிராமத்து மக்கள் பயணம் செய்யும் வழித்தடம் என்பதால் அவர்கள் பாஷையில் பேசுவார். நிறுத்தங்கள் பெயரை சொல்வதில் வேடிக்கையாக இருக்கும். ஆ தேரடி இருக்கா இறங்கு கைவிடு முன்பக்கம் பாத்து குதி, மதுவு கொண்டல் மதுவு, இந்தா ஏறு என்னா வேடிக்கை. போவாது கையை விடு. யாருய்யா புகையிலை துப்பறது வண்டி நிப்பாட்டினப் பிறகு துப்பு. இப்படி வழி முழுக்க கமெண்ட் அறிவுப்பும், அன்பும் கிண்டலும் கேலியும் கலந்து தருவார். திடீரென்று விசில் இல்லாமல் வாயாலே குருவி மாதிரி விசில் அடிப்பார். பணியில் இல்லாத நேரம் அவர் சாதாரணமாக பேசுவார். விநோதமான மனிதர். இன்னும் என் நினைவில் இருப்பவர். இப்போது அவருக்கு வயது எழுபதுக்கு மேல் இருக்கும்.

    கல்லூரி பகுதிக்கு செல்லும் டவுன் பஸ் பயணிகளும் டிரைவர் கண்டக்டர்களுக்கும் தினம் சண்டைதான். இருந்தாலும் மாணவர்கள் அவர்களுக்கு கட்டுப் பட்டு நடப்பார்கள். டிரைவர்கள் முடிந்த வரை இடமிருந்தால் ஸ்டாபிங்க் இல்லாத இடத்தில் கூட நிறுத்தி ஏற்றிக் கொள்வார்கள். வழக்கமாக வருபவர்களிடம் ஒரு நட்பும் நெருக்கமும் இருக்கும்.

    இப்போது அதையெல்லாம் நாம் இழந்து விட்டோம். இருந்தாலும் இன்னும் ஒரு சிலர் அதையெல்லாம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எங்கள் வீட்டில் ஏறும் 5E வரும். பல வருடங்களாக அந்த பகுதியில் இருந்து பஸ்ஸில் பயணம் செய்வதால் ஒரு நல்ல டிரைவர் நண்பரை கொடுத்திருக்கிறது. அவர் திரு ஆறுமுகம். அவர் மத்யான நேரத்தில் வீட்டில் இருக்கும்போது என் தொலைக்காட்சி சீரியல்கள் பார்த்திருப்பார் போல நான் பஸ் ஏறிய உடன் வாங்க ஸார் எங்க இந்த நேரத்துல? என்பார். நல்லா நடிக்கிறீங்க. உட்காருங்க என்று இடம் கொடுத்து பேசிக்கொண்டிருப்பார். நான் வேறு பஸ்ஸூக்கு நின்றால் அவர் டூட்டியில் வந்தால் வணக்கம் சொல்வார்.

    இப்போது ஆயிரம் ரூபாய் டிக்கட் மாதாந்திர சலுகை கட்டணம் வாங்கியிருக்கிறேன். அதனால் கண்டக்டரிடம் பேசும் அவசியம் இல்லை. சில்லறை பிரச்னைகள் இல்லை. சில சமயம் பாஸ் என்று கை காட்டினால் என்ன பாஸ் காட்டுங்க என்பார்கள். காட்டிவிட்டு பயணம் தொடரலாம். நிறைய பஸ்கள், நிறைய வசதி. ஆனால் நெருக்கம் இல்லை. எல்லாம் மாறிவிட்டது. இது மட்டும் மாறாமல் இருக்குமா?

    அடுத்த முறை பஸ் பயணத்தில் என்னை நினைத்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு நினைவும் நேரமும் இருந்தால்.

    படம் உதவிக்கு நன்றி: http://www.skyscrapercity.com/showthread.php?t=907864&page=1668

    Share
  • காற்று வாங்கப் போனேன் (26)

    கே.ரவி

    “புரியுது தம்பி. நளவெண்பா, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் என்று தொடங்கி, ஷெல்லி, கீட்ஸ், பைரன், வொர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளில் தோய்ந்து, நா.பா., ஒளவை நடராஜன் போன்ற சமகாலத்து இலக்கிய ரசிகர்களால் செப்பனிடப்பட்டு, சுரதா, முருகுசுந்தரம் போன்ற தற்காலக் கவிஞர்களாலும் பாதிக்கப்பட்டு உன் கவிதை உருப்பெற்று, வளர்ந்தது என்று…..” சிகாமணி முடிக்குமுன் நான் குறுக்கிட்டேன்: “மிக முக்கியமானதை விட்டு விட்டாயே சிகா, தண்டமிழ்க் கொண்டலால் தட்டி எழுப்பப்பட்டு, பாரதியால் தடுத்தாட்கொள்ளப்பட்டு!”

    “மறக்கலே தம்பி. நான் அதுக்கு வரதுக்குள்ள ஒனக்குப் பொறுக்கலே, அவசரம்” என்றான் சிகா.

    “அது சரி, முன்னே அண்ணே என்றாய், இப்பொழுது தம்பி என்கிறாயே?” கேட்டேன்.

    சிகா சொன்னான்: “நீதான் பாடிட்டியே, எதைநான் முதுமை என்பேன், இதைப்போய் இளமை என்றேன், என்று.”

    என் துட்டையே எனக்குத் திருப்பித் தருகிறான், சிகாமணி.

    எப்படியோ, பலமுனைத் தாக்குதல்களுக்கு இடையில், வளைந்து, நெளிந்து, வளர்ந்து என் கவிதைச் சுடர் அணையாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

    திருமணம் ஆனவுடன், நான் சட்டம் படித்துக் கொண்டே ஒரு பணியிலும் இருந்தேன். வேலைப் பளு அதிகம். நேரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் ஷோபனாவுடன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அவளுடன் சேர்ந்து அமர்ந்து கவிதை யோகத்தில் ஈடுபட்டேன். ஆம், அவள் வீணை வாசிப்பாள். அதற்கு ஏற்ப நான் பாடுவேன். அப்படி வந்த சில பாடல்களில் சில இன்னும் நினைவில் உள்ளன. 1974-75 ஆண்டுகளில் வந்தவொரு பாடல்:

    shoba2

    யாழில் மிதக்கும் விரல்களோ

    தண்ணீரில் தளும்பும் நிலவின் துகள்களோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    உனது பார்வை எனது நெஞ்சில்

    ஒலியும் ஒளியும் சேர்க்குமோ

    அனிச்ச மலரின் அருகில் வந்த தென்றலோ

    பனிசுமந்த நதிவிழுந்த சாரலோ

    உன்கரங்கள் தீண்டும் போது என்வதனம்

    குழையும் சிலிர்க்கும் காதலோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    விண்மீன்கள் தூளாகி விழுமொலியோ

    கடலிசையில் மனமயங்கிக் கருமேகக் கூட்டங்கள் முறியும் ஒலியோ

    உன்

    சதங்கையோடென் இதயமும்

    துடிக்கும் துவளும் பாவமோ

    யாழில் மிதக்கும் விரல்களோ

    அந்தப் பாடல் வந்த நேரம், தொலைக்காட்சியில் ‘ஒலியும் ஒளியும்’ என்ற நிகழ்ச்சி வரத்தொடங்காத காலம்!

    இன்னொரு பாடல், சற்று வினோதமான சூழ்நிலையில் பிறந்தது. திரைப்படக் காட்சிபோல் ஒரு சூழ்நிலையைக் கற்பித்துக் கொண்டு அந்தச் சூழ்நிலையில் பாடுவதற்கு ஏற்ற பாடலாக ஏதேனும் எழுதிப் பாடுவது என்று ஷோபனாவும் நானும் முடிவு செய்தோம். காதலன், காதலி அல்லது கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வந்தாலும் அவை காதலுக்குக் குறுக்கே வரத் தேவையில்லை என்பதுபோல் பாடல் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். ஷோபனாவிடம், “ஏதாவது ஒரு ராகத்தை வீணையில் மீட்டு” என்று சொன்னேன். திடீரென்று ஒரு பல்லவி தோன்றியது.

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ஆரோகணத்தில் வரும் எந்த ஸ்வரமும், அவரோகணத்தில் வராத வண்ணம், ஆரோகணமும், அவரோகணமும் முற்றிலும் வேறாக இருப்பதாக அமைந்த ஒரு ராகத்தில் ஷோபனா அந்தப் பல்லவியை வீணையில் வாசித்ததும் நான் நெகிழ்ந்து போனேன்.

    பாடல் தொடர்ந்தது:

    மாறாத இருட்டுக்கு மடியைக் கொடுத்தாலும்

    நீராகி விடும் போது நிலம் வாழ்த்தும் கருமேகம்

    போல் வந்திடும் ஊடற்களம்

    போதென்ற மயல்சாய்ந்து நிலவென்ற பூவந்து கூடல்தரும்

    ஆரோகணம் அவரோகணம்

    வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

    ravi

    ஷோபனாவுக்கும் எனக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடு வந்தாலும், நிறைய வரும், இந்தப் பாடலைத்தான் நினைத்துக் கொள்வேன். “காதலர் இருவர் கருத்தொருமித்து” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், கருத்துக்கும் காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. எப்படிக் கருத்துக்கும், கவிதைக்கும் சம்பந்தம் கிடையாதோ அப்படித்தான் கருத்தும் காதலும்.

    இப்படி இசையும் கவிதையுமாய்க் கலந்து என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த காலக் கட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பிரிந்துவிட்ட நண்பன் வ.வே.சு. மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்ததால் எங்கள் தொடர்பு நெருங்கிய நட்பாக வளர்ந்து என் இசையார்வத்தை மேலும் தூண்டிய செய்தியை முன்பே சொல்லிவிட்டேன்.

    அதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1966-67 ஆண்டுகளில் வானொலியில், மன்சாஹே கீத், மனோரஞ்சன் நிகழ்சிகளில் தினம் தவறாமல் நான் கேட்ட பழைய ஹிந்திப் பாடல்களே என் கொஞ்ச நஞ்ச இசை ஞானத்துக்கும் முழுப்பொறுப்பு. ஓ.பி.நய்யர், நெளஷத், மதன்மோஹன், சலீல் செளத்ரி, சங்கர் ஜெய்கிஷன் போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்.

    ஏற்கனவே சொன்னதுபோல் பள்ளியில் அரங்கேறிய நாட்டிய நாடகப் பாடல்களால் நான் பெற்ற இசையனுபவங்கள், ஹிந்தித் திரைப் பாடல்களைத் தினமும் கேட்டு லயித்த ரசனை, வ.வே.சு.வின் நட்பு, எல்லாவற்றுக்கும் மேல் பாரதியின் இசைப் பாடல்களின் தாக்கம், இவற்றோடு ஷோபனாவின் இசைத் தேர்ச்சியால் கிடைத்த ராகப் பயிற்சி, எல்லாம் கலந்து, இசையையும், கவிதையையும் என் நெஞ்சின் இருகண்களாகத் திறந்து விட்டன.

    “இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்று கவிஞர் கேட்டதுபோல், இசை, கவிதை ஆகிய என்னிரண்டு அகக்கண்களும் இணைவாகவே இயங்கின. என் கவிதைகளில் பெரும்பாலானவை மெட்டோடும், தாளக் கட்டோடும் பிறந்தன. பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும். எப்பொழுதும் என் மனத்தின் ஓரிழையில், அதாவது, ஒரு சேனலில், ஏதாவது ஓர் இசைப்பாடல் உதித்து, ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘எப்பொழுதும்’ என்றால் தூங்கும் போதும் என்று கூட அர்த்தம் கொள்ளலாம். நிறைய பாடல்கள் உறக்கத்தில் உதித்துள்ளன. சில பாடல்கள் துயில் கலைந்ததும் மறந்து போகும். பிறகு, பல நாட்கள், அல்லது ஆண்டுகள் கழித்து நினைவுக்கு வரும். என் கவிதைகளில் பல கவிதைகளைப் பாடிப் பாடிப் பல மாதங்களுக்குப் பிறகே ஏதாவது துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்ததும் உண்டு; தொலைத்ததும் உண்டு.

    “போதுமய்யா உன் சுய புராணம்” என்று அலுத்துக் கொண்ட சிகாவை அடக்குகிறேன்: ஏம்பா, இந்தத் தொடரே என் சுய புராணம் தானேப்பா!

    கவிதை எப்போது உதிக்கும், எப்போது சொற்களாக உருவெடுத்து வெளிப்படும் என்று என்னால் முன்கூட்டிச் சொல்லவே முடியாது.

    சில நிகழ்சிகளை மட்டும் சொல்கிறேன்.

    1988-ஆம் ஆண்டில் ஒருநாள், சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைய நீதியரசர் சாமிக்கண்ணு அவர்களுடைய மன்றில் அமர்ந்திருக்கிறேன். என் வழக்குக்கு முந்தைய வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. மணி சுமார் பகல் பன்னிரண்டரை இருக்கக் கூடும். பேசிக் கொண்டிருந்த வழக்குரைஞரின் இளவர், அதாவது, ஜூனியர் வழக்கறிஞரிடம் அவருடைய சீனியரின் வாதம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று மெல்ல வினவுகிறேன். பகல் இடைவேளை வரைக்கும் போகும் என்று அவர் சொன்னதும், ஓ அப்படியானால், நான் பிற்பகல் வந்தால் போதுமோ என்று கேட்கிறேன். “பிற்பகல் நீதிமன்ற அமர்வு கிடையாது, ஏனென்றால் அன்று சிவன் ராத்திரி என்று அவர் பதில் சொன்னதுதான் தெரியும், உடனே, ‘சிவன்’ என்ற சொல்லில் இருந்து ஒரு மின்னல் வெடித்துச் சிதறி என் அகத்திரையைத் தாக்குகிறது. கடகடவென்று பாடல்கள் நெஞ்சில் பெருக்கெடுக்க, எதிரே இருந்த காஸ் லிஸ்ட், அதாவது, வழக்குப் பட்டியல் அச்சாகித் தினசரி வருகின்ற தாளின் பின்புறத்தில் கிறுக்குகிறேன்.

    ஆசையில் அலைந்து கெட்டேன் அனுபவம் பழுது பட்டேன்

    ஓசையில் உழன்று நொந்தேன் ஒருகணம் உனைநினைந்தேன்

    நீசனென் றெள்ளிடாமல் நீயெனைத் தேடி வந்தாய்

    ஈசனே எம்பிரானே என்னை ஆளுடைய கோவே

    மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். எழுதி முடித்து, நிமிர்ந்து பார்க்கிறேன், வழக்கு மன்றம் காலியாக இருக்கிறது. நீதியரசர், நீதிமன்ற அலுவலர், நான் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறோம். நீதியரசர் சாமிக்கண்ணு சொல்கிறார், “உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப் பட்ட போது, நீங்கள் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் காத்திருக்கிறேன்”.

    இப்படிப் பல அனுபவங்கள்!

    ஒருநாள், வானத்து மின்னலே வந்து என்னகத்தை ஊடுருவிச் சென்று, அங்கே கவிதை நிலவை மலரச் செய்த அனுபவத்தைப் பிறகு சொல்கிறேன்.

    (தொடரும்)

    Share
  • அன்புள்ள அத்தான் வணக்கம்!

    — கவிஞர் காவிரிமைந்தன்

    anbulla atthan
    கைராசி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதித்தந்த பாடல்!  இப்பாடலைக் கேட்கும் நேரமெல்லாம் திரையில் தோன்றும் கதாநாயகி மனக் கண் முன்னே மறக்காமல் காட்சி தரும் அற்புதப் பாடல்! இலக்கியத் தமிழைக்கூட சில நேரங்களில் அப்படியே எடுத்தாள்வதும்.. சினிமா என்கிற ஊடகத்தில்கூட ஆங்காங்கே அதற்கான பதிவுகளும் கண்ணதாசனால் கையாளப்பட்டதற்கு இப்பாடல் சாட்சி!  ஆம்.. ஆயிழை என்கிற சொல் வழக்கத்தில் இல்லை.. இலக்கியத்தில் உண்டு!  கற்பனையில் மேடைகட்டி.. அதற்கேற்ப இசையுமிட்டு வார்த்தைகளை வழங்கினால் வருகின்ற சராசரிப் பாடலாய் இல்லாமல்.. கவிஞர்தம் அற்புத நினைவுச்சுரங்கத்துள்ளிருந்து எடுக்கப்பட்ட வைரக்கற்களாய்.. வரிகள்!

    அன்புள்ள அத்தான் வணக்கம்
    உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்

    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்..
    மறக்க முடியாத மாணிக்க வரிகள்!  கண்களில் உறக்கமில்லை என்று சொல்ல வந்த கவிஞருக்கு.. கற்பனையும் உவமையும் எப்படிக் கை கொடுக்கிறது பாருங்கள்!

    பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
    பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
    கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
    கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை

    பெண்மை இப்படி முன்வந்து சொல்லாத வார்த்தைகள் முழுமையாக வருகின்றன என்றால் எண்ணிப் பாருங்கள்.. அவள் மனம் எல்லைகள் கடந்து வருகிற அழகைக் கவிதையில் தருகிறார் கேளுங்கள்! அழகைக் கொடுக்கிறது பாருங்கள்!

    பொன் மணிமேகலை பூமியில் விழும்
    புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
    கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
    காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்

    தனிமையும் பிரிவும் தன்னைப் படுத்தும் பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்! அதிலும் தலைவன் பெயரல்லவா கெட்டுவிடும் என்கிற எச்சரிக்கையில் எவ்வளவு அழகு இறைந்திருக்கிறது பாருங்கள்!

    இப்படியெல்லாம் ஒரு காதல் பாடலில்.. தனிமையைப் பற்றி விவரிக்கும் பாடலில்.. எத்தனை விதமான ரசங்கள்! பாவங்கள்! நளினங்கள்!  முத்திரைகள்!  கவியரசே.. நீ எழுத எழுத.. நான் வரவா.. நான் வரவா என்று தமிழ்ச்சொற்கள் வந்து நிற்குமாமே.. உண்மையா சொல் என்று உன்னைக் கேட்க வேண்டியதில்லை.. உன் கவிதைகள்தான் உன்னையே காட்டிக் கொண்டிருக்கின்றனவே!!  விஸ்வநாதன் ராமமூர்ததி இசையமைப்பில் கைராசி பாடல்.. அன்புள்ள அத்தான் வணக்கம்!

    http://youtu.be/PQ0Bfm1gF7I

    காணொளி: -http://youtu.be/PQ0Bfm1gF7I

     

    படம்: கைராசி
    இயற்றியவர்: கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்ததி
    நடிகை: சரோஜாதேவி

    அன்புள்ள அத்தான் வணக்கம்
    உங்கள் ஆயுளைகொண்டாள் மயக்கம்
    தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
    கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
    (அன்புள்ள ….

    மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
    வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
    ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
    அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
    (அன்புள்ள ….

    பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
    பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
    கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
    கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை
    (அன்புள்ள ….

    பொன் மணிமேகலை பூமியில் விழும்
    புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
    கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
    காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
    அன்புள்ள அத்தான் வணக்கம்
    திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்

    Share
  • பெண்களுக்கெதிரான குற்றங்கள்

    — பி.எஸ்.டி.பிரசாத்.

    women life

    ​மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா ! – என்று கவிமணி பாடிய நம் மண்ணில் சமீப காலமாக பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது.

    “தாயருகில் சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருகில் தாயாகும் பெண்ணே !” – என்று கவியரசு வைரமுத்து அவர்கள் திரையிசையில், பெண்ணின் வாழ்க்கைச் சக்கரத்து மாற்றங்களை அருமையாகப் பாடியுள்ளார். ஆனால், வயிற்றில் இருப்பது பெண் குழந்தை என்று தெரியப்படுகின்ற அந்த நேரம் முதல், எல்லாக் கட்டத்திலும், தன் வாழ்வில் துன்பங்களை சந்திக்க வேண்டியுள்ளது ஒரு பெண்ணால். சேயாக இந்த பூமியில் பிறக்கும் முன்பே கொன்றுவிடும் கூட்டம் – குழந்தை பருவத்திலே சிறுமியாக இருக்கும்போது, பாலியல் உட்பட பல்வேறு வகையான குற்றங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதையும் தாண்டி குமரிப் பருவம் வந்தால் கேட்கவே வேண்டாம். இரைக்கு அலையும் கழுகுகளின் பார்வையிலிருந்து தப்பித்து கற்பைக் காத்து வளர்வது…அம்மம்மா !  Eve teasing, கற்பழிப்பு, கொலை….இன்னும் எத்தனை எத்தனை குற்றங்கள்…

    அலுவல்களுக்குச் செல்லும்போது, வேலை செய்யும் இடத்தில் பெண்கள் நடத்தப்படும் விதம் பல இடங்களில் விவாதிக்கப் படக் காணலாம். இதையும் தாண்டி அடுத்தக் கட்டத்தை அடைந்து வீட்டில் தனியாக இருக்கும் போது பொருளற்ற வாழ்வு வாழும் கொள்ளையர்கள், உயிரை மாய்த்து பொருளை சுருட்டிக் கொண்டு ஓடுகின்றனர். நினைத்துப் பாருங்கள்…என்னதாங்க நடக்குது? !

    தாடகையின் தொல்லை தாங்காது ரிஷிகளும், முனிவர்களும் அவதிப் பட்டுக்கொண்டிருந்த போது விஸ்வாமித்ரர் அவர்கள், ஸ்ரீ ராம பிரானிடம், தாடகையை வதம் செய்யச் சொன்னாராம். அதற்கு, ஸ்ரீராமன், “அவள் ஒரு பெண்…அவளை என்னால் கொல்ல இயலாது” என்று சொல்லி தயங்கியதாகவும், பிறகு விஸ்வாமித்ரர், ஸ்ரீ ராமனுக்கு பல காரணங்களைச் சொல்லி தாடகையை வதம் செய்ய வைக்கப் பெரும் பாடு பட்டார் என்றும் ராமாயணம் சொல்கிறது. இது போன்ற ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளை தொலைக்காட்சியில் ஆர்வமுடன் பார்ப்பவராக இருந்தும், காட்சியில் வரும் தத்துவங்களையும், சொல்லப்படும் கருத்துக்களையும் மனதில் எடுத்துக் கொள்ளதவராய் இருக்கிறோம் என்பது மிகவும் வருந்தத் தக்கது. ஒரு அரக்கி, அழிக்கப் பட வேண்டியவள், அவளை கொல்வதற்கு, ‘அவள் ஒரு பெண்’ என்ற ஒரே காரணத்திற்காக  தயக்கம் காட்டிய ஸ்ரீராமனை முன்னுதாரணமாய் கொள்ள வேண்டாமா?

    காசும், பணமும் பெருகப் பெருக, மேலும் பணம் சம்பாதிப்பதற்கான குறுக்கு வழிகளிலும், பெண் போதையிலும் தான் மனம் அலைகின்றது.”கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்றக் கோட்பாடுகள் எல்லாம் காற்றோடு போய் கட்டுப்பாடற்ற நாகரீகத்தை நோக்கி பயணித்து வருகிறோம் என்பது கசப்பான உண்மையாகும்.

    “மகளிர் தினம்” கொண்டாடுவதால் பெண்களை போற்றுவோர் ஆக மாட்டோம். அந்த நாள் கூட பலருக்கு, வியாபார ரீதியாக “தள்ளுபடி விற்பனை” செய்வதற்கான வாய்ப்பாகத் தான் கருதப்படுகிறது. பெண்களுக்கு நிகழ்த்தப் படும் கொடுமைகளுக்குத் தள்ளுபடி செய்தபாடில்லை ! உண்மையிலேயே, உரத்த சிந்தனை தேவைப்படுகிறது …இந்த பிரச்சனையை எதிர் கொண்டு சமாளிக்க…வாருங்கள்…சிந்திப்போம் !

     

     

    படம் உதவிக்கு நன்றி:   http://eluthu.com/images/poemimages/l/112934.gif

    Share
  • யார்மனத்தில்

    கே.ரவி

     

     யார்மனத்தில்

    (பாடல் – எஸ்.பி. பாலசுப்பிரமணியம்)

    151_002

    யார்மனத்தில் நீயிருந்து தேர்செலுத்துகின்றாய்

    யாருயிர்க்குள் நீநுழைந்து குழலிசைக்கின்றாய்

     

    யார்விழிக்குள் நீநிறைந்து வண்ணம் சேர்க்கின்றாய்

    யார்மொழிக்குள் கையளைந்து வெண்ணை கேட்கின்றாய்

     

    யார்புனைந்த மாலைக்காகத் தோள் அசைக்கின்றாய்

    யார்விரித்த குழல்முடிக்கப் போர் நடத்துகின்றாய்

    எங்கிருந்தோ பாஞ்ஜசன்யம் நீ முழக்குகின்றாய்

    இங்கெனக்குள் உன்நினைப்பை ஏன் விதைக்கின்றாய் – எனை

    ஏன் வதைக்கின்றாய்

     

    நீநடத்தும் நாடகத்தில் நான் நடிக்கின்றேன்

    நீயியக்கும் கருவியாக வரத்துடிக்கின்றேன்

    நீயும் நானும் வேறுவேறா கூறுவாய் கண்ணா

    நீபிரிந்தென் உள்ளும்வந்து சேருவாய் கண்ணா – பதில்

    கூறுவாய் கண்ணா

     

     

     

     

    Share
  • எப்படி?

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (7)

     

    எப்படி?

    {கேட்டு மகிழ} 

    images (1)

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    எல்லா வாசலும் பூட்டிக் கிடக்க

    சன்னல்களெல்லாம் சாத்தியிருக்க

    நெஞ்சக் குழியில் சுவாசம் நிறுத்தி

    இதயத் துடிப்பையும் நிலைக்கவைத்து

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்தேன்

     

    எப்படி வந்தாய் உள்ளே?

    ஏதோ கொஞ்சம் இறுமாந்திருந்ததே

    போதுமென்று புன்னகைக்கிறாயா?

    கன்னம் மேவும் மின்னலினாலே

    கன்னம் வைத்துக் கண்சிமிட்டுகிறாயா?

     

    எப்படி? ம்…எப்படி?

    சுரங்கப் பாதை குடைந்து, கவிதையின்

    சுருதி ஊற்றில் கலந்துகொண்டு, ஒரு

    சொல்லின் நிழலில் ஒளிந்து, அந்தரங்க

    முற்றத்தில் முத்தாய் உதிர்ந்தாயா?

     

    எப்படி? வேறெப்படி? ம்..?

    காளியிடம் உனக்குப் பழக்கமுண்டா? அவள்

    காலைப் பிடித்து சாதித்தாயா?

    மாயக் காரியை மயக்கிவிட்டாயா?

    மண்குடிசைக்குள் மாளிகை விளக்காய்..

     

    எப்படி? எப்படித்தான் சொல்லேன்?

    ஊஹூம்…

    நீ எதற்குச் சொல்லப் போகிறாய்?

    சாவகாசமாக அமர்ந்து

    சாகடித்த கதைகளை வரிவரியாய்

    எங்கேனும் சொல்லுமா எந்தப் புலியேனும்?

    ஓ!

    முற்றும் என்னை முடித்துவிட்டு

    முகத்தில் அதென்ன கோணல்?

    ஆ!

    வந்திருக்கிறார்களாம்!

    வரவேற்கவில்லையாமாம்!!

     

    அழைத்தோ அழைக்காமலோ

    வாசலில் தயங்கி நிற்போரைத்தான்

    வரவேற்பார்கள் பார்த்திருக்கிறோம்

    அத்துமீறி வந்தவர்களுக்கு

    ஆரத்தி கேட்கிறதா?

    தீர்த்துக்கட்ட வந்தவர்களுக்கு

    திவ்யப் பிரபந்தமா?!

     

    நீதியைக் காட்டிலும் அநீதியின் குரல்தான்

    நெஞ்சைப் பிசைகிறது…

     

    சரி சரி

    அந்த அறையில்

    மேசையில் இருக்கும் என்

    மூக்குக் கண்ணாடியைக் கொண்டுவா

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    டியர் கேசவ் ,உம்மை ஒப்பேற்ற வேண்டாம்….கண்ணனால் நீங்கள் Already ஒப்பில்லா ஏற்றத்தில் உள்ளீர்கள் ….வாழ்க உம் பணி &பாணி….

    பின் குறிப்பு -There is a proverb in tamil ….”ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும் ….பாடற மாட்டை பாடிக் கறக்கணும்” ….அருச்சுனனை உமது ஓவியத்தால் கதகளி ஆடிக் கறந்தான்….பின் கீதையைப் பாடிக் கறந்தான் ஆடாது அசங்காது அந்த ஆயன் ….அருச்சுனன் என்ன நாம் எல்லோருமே அந்த மேய்ப்பவனுக்கு முன் கால் நடை ஜீவ ராசிகள்தானே….!

    அபாரம் கேசவ்….இது புதிய பாணி “கேளிச் சித்திரம் “….

    crazy

    “கேரள கேளி கிருஷ்ணன் அருச்சுனனை
    ஓரளவு ஒப்பேற்றும் உத்தியுடன் , -தேரலகில்
    தைதை கதகளி தாண்டவம் செய்தனன்
    கீதைக்(கு) இதுஒத்தி கை”….கிரேசி மோகன் ….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஜூலை 28, 2014

     

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
    Kutti Revathy

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர்.  இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர்முயற்சியின் ஓர் அங்கமாக இந்த மாதம் குறிப்பிடத்தக்க இரு செயல்களை ஆற்றி மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய உரைக்காகவும், இம்மாத கணையாழி இதழில் இவர்  எழுதிய கட்டுரைக்காகவும்  இவர் பாராட்டப்படுகிறார். கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

    கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம்.  சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத்  தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம்  வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும்  பனிக்குடம் என்ற  தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது  இந்தக் காலாண்டிதழின் நோக்கம்.

    அத்துடன் பனிக்குடம் பதிப்பகம்   பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.

    ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள  குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார்.

    இந்த மாதம் (2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில்) அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று இவ்வாண்டில் தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார்.   மேலும் விழாவில்  “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று  இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

    “பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில் இந்த மாதம் ஜூலை 2014 இல்  வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது  தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார்.  தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருப்பதாக* எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக அவருக்கு பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில்  ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரை  முழுவதையும் இச்சுட்டிவழி சென்று படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு, கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

     

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை

    kutty raevathi 2

    இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது………….

    பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்………….

    இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது………….

    அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது………….

    தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்………….

    இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்…………

    ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத  அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை.

     

    இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: kuttirevathi@gmail.com

    இவரைப் பற்றி மேலும் தகவல்களை கீழ்காணும் சுட்டிகளின் வழி அறியலாம்:
    Facebook.com: https://www.facebook.com/pages/Kutti-Revathi/191482800885454
    Twitter.com: https://twitter.com/kuttirevathi
    Blogspot: http://www.kuttyrevathy.blogspot.com
    Wiki: https://ta.wikipedia.org/s/cqa

     

    சான்றுகளும் குறிப்புகளும்:

    பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் – தி இந்து
    http://tamil.thehindu.com/general/literature/article6136159.ece

    எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு! – தி இந்து
    http://tamil.thehindu.com/tamilnadu/article6132852.ece

    பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை
    http://kuttyrevathy.blogspot.com/2014/07/blog-post.html

    * தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை  ஜெயமோகன் மறுத்துள்ளார்

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 129

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 02: வேட்டுவ வரி

    கண்ணகி நாணமுற்று, புன்முறுவல் பூத்து நிற்றல்

    சாலினி மொழி கேட்ட கண்ணகி நாணமுற்று
    “மூதறிவுடைய இவள் மயக்கத்தால்                          mahisasuramardini for silambu 28th july
    இவ்வாறு கூறுகிறாள்” என்றே கூறி,
    பெறுதற்கரிய கணவனாம் கோவலன்
    முதுகின் பின்னே ஒளிந்து கொண்டு
    புதிய புன்முறுவல் பூத்து நின்றனள்.

    பிறை என வெள்ளைத் தாமரை இதழைச்
    சூடி நிற்கும் நெற்றியும்
    நெற்றிக்கண்ணைத் திறந்து விழிக்கும்
    இமையாத விழிகளையும்
    பவளம் போன்ற வாயினையும்,
    வெள்ளி போல் ஒளிபொருந்திய சிரிப்பினையும்,
    நஞ்சினை உண்டதால் கறுத்த கழுத்தினையும் உடையவள்.

    கொடிய சினத்தை உடைய
    வாசுகி என்னும் பாம்பை நாணாகப் பூட்டி
    மேருவாகிய மலையை வில்லாய் வளைத்தவள்.

    நஞ்சுகொண்ட துளைகள் பொருந்திய
    பற்களை உடைய பாம்பினைக்
    கச்சாக அணிந்த முலைகளை உடையவள்.
    வளையணிந்த கைகளில் சூலம் ஏந்தியவள்.
    யானையின் தோலைப் போர்த்திக் கொண்டு
    அதன் மீது, பிறரை வருத்தும் தன்மையுடைய
    சிங்கத்தின் தோலை மேகலையாக அணிந்தவள்.

    இடது காலில் சிலம்பும் வலது காலில் கழலும்
    ஒலித்திடும் சிறிய அடிகளையும்
    மேலான வெற்றியைப் பெற்றுத் தரும்
    ஒளி பொருந்திய வாளையும் உடையவள்.

    தலை எருமையாகவும் உடல் அசுரனாகவும்
    இருவேறு வடிவங்கள் பொருந்திய
    திரண்ட தோளினியுடைய
    மகிடாசுரன் தலையின் மீது நின்றவள்.

    தேவரும் முனிவரும் மற்ற யாவரும் வணங்கும்
    அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி
    எனும் பெயர்களைப் பெற்றவள்.
    யாவரும் வணங்கும் இறப்பில்லாதவள்.
    திருமாலுக்கு இளையோள்.

    தெய்வங்களுக்கெல்லாம் தலைவியாய் நிற்பவள்.
    திருமகள் ஆனவள்.
    கொடிய வாளினைத் தன் கைகளில் தாங்கியவள்.
    கலைமான் ஊர்தி உடையவள்.
    பச்சை வீர வளை அணிந்தவள்.

    ஆய்கலைப் பாவை, அருங்கலப்பாவை எனப்
    பலராலும் புகழ்ந்து போற்றப் படுபவள்.

    திருமாலும் நான்முகனும் போற்றி வணங்கும் சிறப்புடைய
    கொற்றவை கோலம் தரித்துக்
    கலைமான் மீது அமர்ந்திருந்த
    சாலினியைக் கண்ட அம்மறக்குடிமக்கள்
    “நம் குலத்தில் தோன்றிய குமரிக்கு
    மிகவும் பொருத்தமாக இருக்கிறது இக்கோலம்;
    அவள் வாயிலாக ஐயை அருள் புரிந்தனள்”
    எனக் கூறிக் கொற்றவையை வாழ்த்தி
    வரிப்பாடல்கள் பாடினர்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  51 –  74
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://srilasridurgaswamigal.wordpress.com/2012/03/07/mahisasuramardhini-stotram/mahisasuramardini/

     

    Share
  • அறிவியலாளர் கெப்ளர்

    -முனைவர் சேஷா சீனிவாசன்

    தற்போதைய 21ஆம் நூற்றாண்டில் இயற்பியலையும், மற்றும் விண்வெளி Johannes_Kepler_1610ஆராய்ச்சியையும் பிரிக்கமுடியாத ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக நாம் கருத்தில் கொள்கிறோம். இந்தப் பரந்த நோக்கு, 16ஆம் நூற்றாண்டில் நிலவியதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 16ஆம் நூற்றாண்டில், இயற்பியல் இயற்கைத்தத்துவ ஆராய்ச்சியாகவும் விண்வெளி ஆராய்ச்சி பெருவாரியாகக் கணிதம் சார்ந்ததாகவும் பின்பற்றப்பட்டு வந்தது என்பதை ஆராய்ச்சி நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. இந்த வேறுபட்ட சிந்தனைக்கூறுகளை மாற்றி இயற்பியலையும் வான்வெளி ஆராய்ச்சியையும் ஒன்றாக இணைத்த பெருமைக்குரியவர் அறிவியலாளர் திரு. ஜோஹனேஸ் கெப்ளர் (Johannes Kepler) ஆவார். அவரைக் குறித்து சற்று சிந்திப்போமா!

    திரு கெப்ளர், டிசம்பர் மாதம் 1571இல் ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் எனும் மாகாணத்தில் மிகவும் வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே பெரியம்மை நோயினால் தாக்குற்றுத் தன் கைகள் மற்றும் கண்கள் பாதிப்பிற்குள்ளானாபோதிலும், கணிதத் திறமையில் இயற்கையிலேயே மிகவும் வல்லவராகத் திகழ்ந்தார். தனது ஆறாம் வயதிலிருந்தே வான்வெளி ஆராய்ச்சியின்பால் மிகுந்த காதல் கொண்டிருந்ததன் காரணமாக அவருடைய தாயார் அவரைத் தினமும் வெளியில் அழைத்துச் சென்று இரவு நேரத்தில் வானில் சுடர்விடும் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன்களை அவருக்குக் காண்பிக்கலானார். சில வருடங்களுக்குப்பின் முதன் முதலாய்க் கெப்ளர், சந்திர கிரகணத்தைக் கண்ணுற்றார்.

    டியுபிங்கன் (Tubingen University) பல்கலைக்கழகத்தில் தத்துவம் மற்றும் தியாலஜி (theology) பயின்று அதே பல்கலைக்கழகத்தில் வான்வெளி ஆராய்ச்சியாளராகவும், பிறகு கிரேஸ் பல்கலைக்கழகத்தில் (Graz) வான்வெளிக் கணித ஆசிரியராகவும் பணியாற்றினார்.

    சூலை 19, 1595இல் ஜூபிடர் மற்றும் சனிக்கோள்களைப் பற்றியும் அவற்றின் பாதை ஒழுங்கமைப்பைப் பற்றியும் விரிவுரை நடத்திக் கொண்டிருந்த தருணத்தில், கெப்ளருக்கு ஓர் உள்நோக்குச் சிந்தனை தோன்றியது; அது யாதெனில், நம் அண்டம் (Universe) ஐந்து வடிவமைப்புக்களை உள்ளடக்கியது என்பதாகும். தனது கணிதப் புலமையின் வாயிலாக அவ்வைந்து திட (solid) வடிவமைப்புக்களையும் (Octahedron, icosahedron, dodecahedron, tetrahedron and cube) எனப் பட்டியலிட்டுள்ளார் அவர். அவ்வைந்து வடிவங்களும் நம் அண்டமாகிய கோளத்தில் பின்னிப் பிணைந்து ஆறு தளங்களாக (layer) தோன்றியமையைக் கெப்ளர் ஆறு கோள்களுக்கு (புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், ஜுபிடர், சனி) ஒப்பாக உருவகம் செய்தார். இவற்றோடல்லாமல் அக்கோள்களின் அளவு, அவை சூரியனைச் சுற்றிவர எடுத்துக் கொள்ளும் பாதையின் நேரம் போன்றவற்றைத் தன் கணிதச் சூத்திரத்தின் (Mathematical Formulae) வாயிலாக நமக்குத் தெளிவு படுத்தியுள்ளார்.

    மேற்கூறிய இந்தச் செயல்முறை விளக்கங்களே கெப்ளரின் “Mysterium Cosmographicum” என்ற அறிவியல் ஆராய்ச்சி நூலுக்கு வித்தாக அமைந்தன என்றால் அது மிகையாகாது. மேலும், கோபர்நிகஸின் கோள்களின் சுழற்சி பற்றிய அடிப்படைத் தத்துவத்தினை (Helio Centric System) பறைசாற்றுவதாகவும் அமைந்தன. Mysterium Cosmographicum treatise (MCT (அ) மசட) என்றால் என்ன என்பதைப் பற்றிச் சிறிது பார்ப்போம்.

    ”மசட” என்ற கெப்ளரின் ஆராய்ச்சி நூலில் ஓர் அத்தியாயத்தில், அவர் கிறித்துவர்களின் பைபிளுக்கும் (Holy Bible) கோபர்நிகஸின் கோள் சுற்றுப்பாதை ஆராய்ச்சிக்கும் உள்ள ஒற்றுமைகளை எடுத்துரைத்திருந்தார். ஆனால் அந்த அத்தியாயம் பின்னாளில் (1596) துரதிர்ஷ்டவசமாக நூல் பதிப்பிற்கு முன்னரே நீக்கப்பட்டது. அத்தகைய செயல் கெப்ளரின் புகழிற்குத் தடையாய் ஆனது. கெப்ளர் தன்னூலின் மேற்கூறிய அத்தியாயத்தைத் தனது நண்பர்கள் மற்றும் Danish வான்வெளி ஆராய்ச்சியில் புகழ்பெற்ற டைகோ ப்ராகி (Tycho Brahe) ஆகியோர்க்கு அனுப்பியிருந்தார். டைகோ ப்ராகி அதனைப் படித்துச் சற்று கடுமையான வார்த்தைகளால் கெப்ளரின் ஆராய்ச்சியை விமரிசித்துப் பல திருத்தங்கள் அதில் செய்யப்பட வேண்டும் என்ற தமது சிந்தனைகளையும் எழுதியிருந்தார்.

    கெப்ளர் அவ்வறிவுரைகளைச் சிரமேற்கொண்டு ப்ராகியின் யோசனைப்படி பல மாற்றங்களைச் செய்தார். கெப்ளரிடம் போதிய ஆராய்ச்சிச் சாதனங்கள் இல்லாததாலும், மற்றும் ப்ராகியின் தனி வான்வெளி ஆராய்ச்சிக்கூட மையத்தின் (Astronomical laboratory) செவ்வாய் கோளின் புள்ளிவிவரத் தரவுகளைச் சோதனை செய்யும் நோக்கத்திற்காகவும், தனது “மசட” பற்றிய ஆராய்ச்சிக்காகவும் கெப்ளர் 1600இல் ப்ரேகில் (Prague) உள்ள ப்ராகியின் ஆராய்ச்சிக் கூடத்திற்குச் சென்றார்.  கத்தோலிக்கக் கிறித்துவராக மாறாததனால், அவர் வசித்துக் கொண்டிருந்த Graz (in Germany) நகரத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டு, பின் தன் குடும்பத்துடன் ப்ராகியின் வான்வெளி மையத்திற்குக் குடி பெயர்ந்தார்.

    டைகோ ப்ராகியின் மறைவிற்குப்பின் கெப்ளர் அரசாங்கக் கணித வல்லுநராக நியமிக்கப்பட்டார். Prague அரசு அவருடைய லூதரன் (Lutheran Faith) கொள்கையை மதித்தது. அரசின் ஜாதக ஆலோசகராகப் (Horoscopes – Astrologer) பணிபுரிந்துவந்த கெப்ளர் அப்பணியை மட்டுமே தொடர்வதை விரும்பவில்லை. அறிவியல் வாயிலாக உண்மை அறிதலையே ஜாதகங்களிற்கு மாற்றாக அவர் எண்ணினார். ப்ராகியின் வான்வெளி ஆராய்ச்சித் தரவுகள் (Data) கெப்ளரின் ஆராய்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்ததோடல்லாமல் அவருடைய ஆய்வுக்கூட விரிவாக்கத்திற்கும், ஒளி விதிகள் கண்டுபிடிப்பிற்கும் காரணமாக இருந்தன. 1604ஆம் ஆண்டில், வெளிவந்த கெப்ளரின் நூல் “Astronomiae Pars Optica” நவீன ஒளியியல் (Modern Optics) எனும் புதிய துறை உருவாகக் காரணமாக அமைந்தது எனில் அது மிகையில்லை.

    மேற்கூறிய அத்தனை ஆராய்ச்சி வழிமுறைகளும், கெப்ளர் தன் புதிய கண்டுபிடிப்பான தொலைநோக்குக் கருவி (Telescope) உருவாக்கத்திற்கும், மற்றும் இரண்டு குழி லென்ஸ்கள்  (ஆடிகள்) (convex lenses) கொண்ட கெப்ளேரியன் தத்துவத் தோற்றத்திற்கும் வித்தாக அமைந்தன. கலிலியோவின் ஒரு குழி மற்றும் ஒரு குவி ஆடிகள் கொண்ட தொலைநோக்குக் கருவியை விடவும் கெப்ளரின் மேலே சொல்லப்பட்ட இரு குழியாடிகள் கொண்ட கருவி 1604ஆம் ஆண்டில் supernova என்ற நட்சத்திரச் சிதையல் முறைகளைக் கண்டுபிடிக்க உறுதுணையாக இருந்தது என்பதை அவரின் ’De Stella Nova’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையின் வாயிலாக அறிய முடிகிறது.

    ஆராய்ச்சியாளர், சிந்தனையாளர் என்று பன்முகத்திறன் கொண்டவராகக் கெப்ளர் திகழ்ந்ததோடல்லாமல், மிகச்சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார் என்பதை 1611இல் வெளிவந்த அவருடைய “கனவு” (Sonium அதாவது “The Dream”) என்ற அறிவியல் புத்தகம் (Science Fiction) வாயிலாக உணரமுடிகிறது. 1611லேயே மற்ற கிரகங்களில் (கோள்களில்) வான்வெளி ஆராய்ச்சி எப்படி இருக்கும் என்பதையும், சந்திரனுக்குப் பயணம் செய்வதையும் விளக்கியுள்ளார் கெப்ளர் தன்னுடைய “கனவு” எனும் புத்தகத்தில். இது அப்போதிருந்த சூழ்நிலையில் மிகக் குறுகிய மனம் படைத்த அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன் விளைவு, கெப்ளரின் தாயாருக்கு 14 மாத சிறைத் தண்டனையைப் பெற்றுத்தந்தது என்று நினைக்கும்போது இன்றைய மனிதனின் சந்திரனில் பயணமும், செவ்வாயில் ஆராய்ச்சியும் எப்படி சாத்தியம் என்ற வினாவை எழுப்புகிறது.

    இப்போது கெப்ளரின் புகழிற்குக் காரணமாக அமைந்த “கோள்கள் சூரியனைச் சுற்றும் விதிகளைப்” (Kepler’s Laws of Planetary Motion) பற்றிப் பார்ப்போம்.

    முதலாவதாக, அனைத்து கோள்களும், சூரியனை நீள்வட்டப் பாதையில் (Elliptical Orbit) சுற்றுகின்றன என்பது அவரின் “நீள்வட்ட விதி (Law of Ellipses)” ஆகும். இரண்டாவது விதியானது, நாம் சூரியனின் மையத்திற்கும் மற்றும் எடுத்துக்கொண்ட ஒரு கோளின் மையத்திற்கும் ஓர் கற்பனைக் கோடு (Imaginary Line) வரைந்தால், அக்கோடு சம நேரத்தில், சம அளவு கொண்டதாய், (“equal areas in equal amount of time”) தோற்றமளிக்கும் (the Law of Equal Areas) என்பதேயாம். மூன்றாவது விதி “the Law of Harmonies” என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்றால், ஒரு கோளின் இரண்டு சுழலும் நேரத்தின் விகிதங்களின் இரண்டு மடங்காக எடுத்துக்கொண்டால், அவற்றின் சம தொலைவின்  விகிதங்கள் சூரியனிலிருந்து மூன்று மடங்காக இருக்கும். இதைத்தான் ஆங்கிலத்தில் “The ratio of the squares of any two planetary periods is equal to ratio of the cubes their average distances from the sun என்கின்றனர். இம்மூன்று விதிகளுமே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், இவ்விதிகள் “Epitome Astronomiae Copernicanae” என்ற ஆராய்ச்சி நூலில் பதிவாகி உலகம் முழுவதும் மக்களால் படிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும் வருகின்றன.

    கெப்ளர், நவம்பர் 15, 1630இல் காலமானார். அவருடைய இறப்புச் செய்தியை (Epitaph) அவரே எழுதியதை, இன்றும் அவருடைய கல்லறையில் காணமுடிகிறது. அவருடைய அந்த வாசகங்கள் அவருடைய தாய்மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளன; பின்பு அவை தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவற்றைக் கீழே காண்க:

    “Mensus eram coelos, nunc terra metior umbras; Mens coelestis erat, corporis umbra jacet”.

    “I measured the skies, now the shadows I measure; Skybound was the mind, earthbound the body rests”

    “நான் வான்வெளியை அளந்தேன், இப்பொழுது என் நிழலை அளக்கிறேன்; வான வரையறை என்பது மனதளவு; உலக வரையறை என்பது நம்முடைய உடல் அமைதியுறும் இடம்.”

    இவ்வாறு பல்வேறு வான்வெளி ஆராய்ச்சிகளையும், கணிதம் மற்றும் இயற்பியல் விதிகளையும் நமக்களித்த கெப்ளரின் புகழ் அறிவியல் வானில் என்றும் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    ஆதாரங்கள்:

    1. American Physical Society news, Vol. 23, No. 7, July 2014
    2. www.nasa.gov
    3. http://en.wikipedia.org/wiki/Platonic_solid
    Share
  • ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    ramadan

    இறையருளின் இயக்கமதே இவ்வுலகம்              
    என்பதனை உணர்ந்தவர்கள்- தினம்
    தொழுகின்ற திசைதானே உலகின்மூலம்!          Ramadan-Greetings-
    மறைபொருளை மனதாலே நினைந்தபடி
    நிறைமனதால் அவன் புகழை உச்சரித்து
    அனுதினமும் வாழ்தலே உயர்வன்றோ?

    இருக்கின்ற பொருள்தன்னை ஈந்திடும்
    குணத்தாலே ‘ஈமான்’ என்கின்ற சிறப்பினை
    ஈட்டுகின்ற புண்ணியங்கள் வேண்டுமன்றோ?
    இம்மைக்கும் மறுமைக்கும் வழித்தடம்மாறாமல்
    இறைவனடி சேருதலே என்றும் நன்றாம்!!                      ramadan-greetings

    பசியதுவும் எப்படியிருக்கும் என்பதனை                              
    பசித்துணரும் மாதம்தான் ரமலான்…அதை
    பண்போடு அணுகிநிதம் நோன்புற்று
    ஒருமாத காலமும் உணர்ந்திடும் மார்க்கத்தை
    உள்மனதில் கொண்டு நடைபோடுகின்றார்!

    அன்பென்ற சொல்லின் பொருள் விரிவாக்கி
    அனைவரும் நலம்காணும் உலகைக்காண்கின்றார்!
    உயிரனைத்தும் படைத்த பெருநாயகனின் திருப்புகழ்
    ஓதிதினம் வாழுகின்ற மாந்தெரல்லாம் வாழியவே!!

    ரமலான் திருநாள் வாழ்த்துகள்!!

    Share
  • நேயத்தைக் கொண்டாட வைக்கும் நூல் வாசிப்பு

    புத்தகமும் மனிதநேயமும்

    எஸ் வி வேணுகோபாலன்

    வாசிப்பு என்பதே நேயத்தின் ஒரு வெளிப்பாடுதான். மகாகவி பாரதியின் கவிதை வரிகளில், “காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்” என்று வருகிறது. என்ன கருவி அது? காசியில் இருப்பவர் பேசும் மொழி காஞ்சியில் இருப்பவர்க்கு எப்படி விளங்கும்…ஒன்று இவர் அந்த மொழியைக் கற்றிருக்கவேண்டும். அல்லது அவர் தமிழில் பேச வேண்டும். அல்லது பொதுவான மொழியொன்றில் பரஸ்பரம் புரிந்து கொள்ளவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் சொல்வதை இவர் கேட்பதற்கோர் இதயம் வேண்டும். அந்த உள்ளம் – அந்த மனம்தான் பாரதி சொல்லும் கருவி.

    கதையோ, கவிதையோ, சிறுகதையோ, நாவலோ – ஒரு புத்தகம் நமக்குள் எத்தனையோ வித சிந்தனையைத் தூண்டிவிடுகிறது. நம்மைச் சுற்றி இருப்பவர் குறித்து யோசிக்க வைக்கிறது. சிந்தி மொழி கவிஞர் மோதிலால் ஜத்வானி எழுதி இருக்கும் செலவழித்த புன்னகைகள் என்ற கவிதை, “மளிகைக் கடைக்காரனிடம் சிறிது புன்னகை செய்கிறேன்/ பொருள்களைத் தராசில் வைத்து நிறுத்தும்போது/ என் பக்கம் சிறிய சாய்வு செய்யக் கூடாதா என்று! எனது அன்றாடத் தேவைகளின் விலை/ கூடிக் கொண்டே செல்கிறது, காய்கறிக்கடைக்காரனிடமும் புன்னகை செய்கிறேன்/ என்னுடையதைப் போன்ற குறைந்த தேவைக்கு/ அவன் அதிகவிலை வைத்துவிடக் கூடாதே என்று/ இப்படி கடைத் தெரு முழுக்க செலவாகிறது என் புன்னகை/ வீடு திரும்புகிறேன்/ மனைவி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க/ புன்னகை கைவசம் இல்லை” என்று முடிகிறது.

    டாக்டர் பி எம் ஹெக்டே அவர்களின் “உள்ளங்கையில் உடல் நலம்” (விகடன் பிரசுரம்)நூலின் முதல் கட்டுரை சிரிப்பு மருத்துவம் பற்றிப் பேசுகிறது. சிரிப்பைப் பற்றிய கலைவாணரின் பாடலில், ‘வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாக்கும் இந்தச் சிரிப்பு’ என்று வருகிறது. ஹெக்டே அவர்கள், நாய் போன்ற சில விலங்குகள் சிரிக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவற்றின் முகம் நீண்டிருப்பதால் நமக்கு அது தென்படுவதில்லை என்று சொல்கிறார். நாமோ சிரிக்கத் தெரிந்தும் சிரிக்க மறுக்கிறோம். ‘ஸ்மைல் ப்ளீஸ்’ என்று நமது மோவாயைத் தொட்டுப் புகைப்படக் கலைஞர் என்ன கெஞ்சினாலும் நாம் இறுக்கமாகவே நிற்பதை புகைப்பட ஆல்பங்கள் நிரூபிக்கும். இலேசாகும் மனத்தால் வஞ்சனையின்றி சிரிக்க முடியும். அதற்கும் புத்தகம் மிகப் பெரிய வாசல் திறந்து கொடுக்கிறது. வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த வாசிப்பு. நாம் ஏன் அதை மறுத்துக் கொள்ள வேண்டும்?

    அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில் வாழ்ந்த வாழ்க்கைக்கும் தொண்ணூறுகளுக்குப் பின் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. உலகமயம் நமது போக்கில் எத்தனையோ மாற்றங்களைத் திணித்துவிட்டது. கூடி வாழ்ந்த ஜனத் திரளை ஒற்றை ஒற்றை மனிதர்களாகப் பிரிக்கும் வேலையில் உலகமயம் வெற்றி பெற்று வருகிறது என்று பத்தாண்டுகளுக்கு முன்பே சுட்டிக் காட்டினார் பிரபல பொருளாதார நிபுணர் பிரபாத் பட்நாயக். நேயத்திற்கு எதிரான கோட்பாடு இந்த உலகமயம்.

    “இந்தத் தெருவில் குரைப்பதற்கு நாய் கூட இல்லை…”என்று தொடங்கும் த.வாசுதேவன் என்பவரின் வீடு என்கிற கவிதை (தீராநதி: மார்ச் 2012),

    வீடுகளின் குழந்தைகள்
    ரெசிடென்ஷியல் பள்ளிகளில் படிக்கிறார்கள்
    பெரியவர்கள்
    முதியோர் இல்லங்களில்
    இறப்பதற்குக் காத்திருக்கின்றனர்
    ……………
    ………..

    தங்கத்தை பேங்க் லாக்கரில் வைத்திருப்பதால்
    திருடர்களும் வர மாட்டார்கள்
    மிச்சமிருக்கும் உணவை
    வைப்பதற்கு ஃபிரிட்ஜ் இருப்பதால்
    பிச்சைக்காரன் கூட இங்கு வரமாட்டான்
    ……..
    ……..
    நாங்கள் அனேகமாக அலுவலகத்தில்தான் இருக்கிறோம்
    வாடிக்கையாளரும் எஜமானனும்
    வெளிநாட்டில் இருக்கிறார்கள்
    …….
    ……
    வீடு பெரும்பாலும் பூட்டித்தான் இருக்கிறது
    மனசும்தான்
    இந்த வீட்டில்
    டிவி மட்டுமே பேசவும் பாடவும் செய்யும்
    இந்த வீட்டில் தான்
    கதவுகளை நன்கு சாத்தியபடி
    நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்”

    என்கிறது. மறைந்த மார்க்சிய தத்துவார்த்த மேதை பி ராமமூர்த்தி அவர்களது ‘விடுதலைப் போரும் திராவிட இயக்கமும்’ (அண்ணா அவர்களது ஆரிய மாயை நூலுக்கு எதிர்வினையாக ஆரிய மாயையா, திராவிட மாயையா என்ற தலைப்பில் பி ஆர் எழுதிய நூல் அது) என்ற புத்தகத்தில், புராதன பொதுவுடைமை காலத்தில் மக்களது கீதங்களாகப் பிறந்த ரிக் வேதத்தில், ‘ஓம் ஸஹ நாவவது ஸஹ நௌ புனக்து’ என்று வரும் பாடலின் பொருள், நாம் கூட்டாக வாழ்வோம், கூட்டாக விளையாடுவோம், கூட்டாக அனைத்து இன்பங்களும் அடைவோம் என்பதாக வருவதை பி ஆர் விளக்கினார்.

    ‘உன்னைப் பற்றி மட்டுமே யோசி, உனக்குள் ஒடுங்கிக் கொள், உன்னைப் பற்றிமட்டுமே கவலை கொள்’ என்கிறது உலகமயம். சேர்ந்து வாழும் மனிதகுல பண்பாட்டுக்கு வேட்டு வைக்கிறது உலகமயம். அதைத் தகர்த்து எறிந்து மனித குல இருப்பிற்கும், மற்றவர்களுக்கு உதவுவதற்கும் சிந்திக்க வைக்கும் வேலையை ஒரு புத்தகம் சிறப்பாகச் செய்யமுடியும்.

    அறிவை விரிவு செய், அகண்டமாக்கு
    விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை
    அணைந்து கொள், உன்னைச் சங்கமம் ஆக்கு
    மானிட சமுத்திரம் நானென்று கூவு

    என்ற பாவேந்தர் வரிகள் இதைத் தான் செய்கின்றன. ஒரு நல்ல புத்தகம் உள்ளத்தைத் தீண்டி இம்மாதிரியான சிந்தனைகளைத் தூண்ட முடிகிறது. நேயத்தை ஊட்டமுடிகிறது.

    எல்லாவற்றையும் பண்டமாக, பணமாக, லாபத்தின் கூறாகப் பார்க்கப் பழக்கும் தாராளமய காலத்தில் நாம் அனைத்து உறவுகளையும் ஈவிரக்கமின்றி மிதித்து நடக்கிறோம். குழந்தைகளை வாட்டி எடுக்கிறோம். வயது மூத்தவர்களைப் புறக்கணிக்கிறோம். முதுமை அடையும் நிராகரிப்பின் கசப்பைப் பேசும் கவிஞர் வைரமுத்துவின் கவிதை ஒன்று, “எண்ணைக்கு என் மனைவி/என்னைவிட்டுப் போனாளோ/ அண்ணைக்கே என் படுக்கை/ திண்ணைக்கு வந்திருச்சு/ நாய் தின்னும் சொத்தில் நாலஞ்சு கவளத்த/ எனக்கும் போட்டுவப்பான் இரக்கமுள்ள எம்புள்ள..” என்கிறது.

    குழந்தைகள், முதியவர்கள், பெண்களையும் சமூகம் மிக மோசமாக நடத்துகிறது. ஒடுக்கப்பட்டோரை மிகவும் கீழ்மைப்படுத்தி வதைக்கிறது. ஆதிக்க உளவியல் இருக்கும் இடத்தில் அன்பு மறுக்கப்பட்டுவிடுகிறது. தருமபுரி மாவட்டத்தில் கிராமங்கள் மூன்று சூறையாடப்பட்ட சாதிய தாக்குதல்களை விவாதிக்கும் யாரும், அதற்கு ஒரு மாதமுன்பே தொடர் நிகழ்வுகளின் தாக்கத்தில் இமையம் அவர்கள் எழுதிய ‘பெத்தவன்’ (உயிர்மை:ஜூன் 2012; பின்னர் பாரதி புத்தகாலய வெளியீடாக வந்திருப்பது) கதையைப் பேசாது தவிர்க்க முடியாது.

    உரத்த சத்தம் எழுப்புவதாலேயே ஒன்றின் நியாயம் தீர்மானிக்கப்பட்டுவிட முடியாது என்று சொல்லும் குட் பை மிஸ்டர் சிப்ஸ் கதையை, பேரா ச மாடசாமி அவர்களது மொழியில் “போயிட்டு வாங்க சார்” (பாரதி புத்தகாலயம்) நூலகா வாசிக்கிறோம். ஆசிரியர்கள் மாணவர் உறவின் மேன்மையைக் கொண்டாட்டமாகப் பேசும் இந்த நூலை ஆசிரியர்கள் வாங்கிப் படிப்பது அவசியமாகிறது.

    இலங்கை எழுத்தாளர் அ முத்துலிங்கம் (கனடா) எழுதியிருக்கும் ‘புவி ஈர்ப்புக் கட்டணம்’ சிறுகதை, இயற்கையின் வரங்களுக்கும் கட்டணம் போட்டுச் சுரண்டும் எதிர்கால அரசியலைப் பகடி செய்து எழுதப்பட்டதாகும். சுஜாதாவின் ‘நகரம்’ சிறுகதை, குழந்தையின் சிகிச்சைக்காக மதுரை பெரியாஸ்பத்திரிக்கு வரும் ஏழைத் தாய் எதுவும் புரியாமல் குழந்தையோடு வெளியேறியபிறகு, அடடா அது ஒரு தீவிர நோய் ஆயிற்றே எங்கே அவர்கள் என்று அலைமோதும் மருத்துவரையும் பேசுகிறது.

    வகுப்பறை குறித்துக் கேள்வி எழுப்பும் ஆயிஷாவும், குழந்தை-பெற்றோர் உணர்வுகள் குறித்தப் பேசும் ரோஜாவும் (இரா நடராசன் நூல்கள்:பாரதி புத்தகாலயம்) கல்வி குறித்து நிறைய சிந்தனைகளை எழுப்புகின்றன. வர்த்தகமாகும் கல்வி பற்றியும், மருத்துவம் பற்றியும் பேசும் நூல்கள் சம கால அராஜக வாழ்வுச் சூழலுக்கு எதிரான கலகத்தை விதைக்கின்றன.

    காஸா பகுதியில் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலால் மருத்துவமனைகளில் நிறையும் இரத்தம், வெட்டப்பட்ட உறுப்புகள், உயிரிழக்கும் மனிதர்களைப் பார்த்தாவது போர்களை நிறுத்துவீர்களா என்று ஒபாமாவை கேள்விக்குள்ளாக்கும் கட்டுரை ஒன்றை அங்கே பணியாற்றும் மருத்துவர் எழுதியிருக்கிறார் (தமிழ் இந்து:ஜூலை 25). சம காலத்தில் வேட்டையாடப்படும் உணர்வுகளை, உளவியலை, வாழ்க்கையை மீட்டெடுக்க புத்தகங்கள் ஏராளமான சாத்தியங்களை முன்வைக்கின்றன. ஆதிக்கத்திற்கு எதிரான போர்க்குரலை நூல்கள் எழுப்பமுடியும்.

    வாசிப்பு பகிர்தலைக் கற்பிக்கிறது; மனித வாழ்வை மேன்மைப் படுத்துகிறது; நேயம் கொண்டாடும் நெஞ்சத்தை வழங்குகிறது.

    (ஓசூர் புத்தக் கண்காட்சியில் ஜூலை 25 அன்று நடந்த கூட்டத்தில் பேசியதிலிருந்து)

    நன்றி: தீக்கதிர் – இலக்கிய சோலை (ஜூலை 28, 2014)

    Share
  • கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (6)

     

    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    (பாடல்)

    images (1)
    கொஞ்சிக் கொஞ்சிக் கொல்லாதே
    நெஞ்சைத் தொட்டுக் கிள்ளாதே
    கெஞ்சிக் கெஞ்சிக் கேட்கிறேன் சற்றும் விலகிச் செல்லாதே! இந்த
    பிஞ்சு நெஞ்சை இன்னமும் நீ கலங்க விடாதே!

    அஞ்சுப் பத்துவிரல்கள் எந்தன் கன்னத்தைத் தாங்க
    அருகில், மிக அருகில் என்னுயிர் ஏங்க
    நெஞ்சில் உந்தன் சுவாசம் படும் நெற்றிப் பொட்டின் வாசம் வரும்
    தஞ்சமென்று வெள்ளம்வந்து நாணலைக் கெஞ்சும், இந்தத்
    தருணத்தில் தமிழும் நிலவும் தள்ளாடி மயங்கும் (கொஞ்சி)

    சந்திக்கும் போது காலம் மணலாய்க் கரையும்
    சந்திக்க ஏங்கும்போது மலையாய் கனக்கும்
    சந்திப்பும் தேவையில்லை பிரிவுக்கும் வாய்ப்புமில்லை
    இந்த உயிர் அந்த உயிர் என்பதில்லையே, இந்த
    சொந்தம் எந்த ஜென்மபந்தம் தெரியவில்லையே
    தத்தைக்கிளி கொத்திச் சிவந்து கனிந்த பழங்கள்போல், உன்
    பட்டு இதழ் தொட்டுவரும் பவழ வார்த்தைகள்!
    கள்ளெடுத்த மொழியோ அன்பின் வழியோ உந்தன்
    காதல் மொழி?
    முள்ளெடுத்த முனையில்நின்று தவம்புரிவது எந்தன் விதி (கொஞ்சி)

    நாணத்துக்கும் வெட்கத்துக்கும் விடுதலை நாளா?
    வண்ணத்துக்கும் ராகத்துக்கும் திருமண நாளா?
    வானத்துக்கு என்னவந்தது தேனில் விழுந்ததா? என்
    வார்த்தையில் அமிழ்தம்நுழைந்து மயங்கித் துவண்டதா?
    காலத்துக்கும் இருக்கும் இந்த நெருக்கம் என்று
    கவிதை சொல்ல
    கண்விளிம்பில் மட்டும் ஒரு
    கண்ணீர்த்துளி தயங்கித் ததும்ப (கொஞ்சி)

     

     

    Share