இந்த வார வல்லமையாளர்!

ஜூலை 28, 2014

 

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு கவிஞர் குட்டி ரேவதி அவர்கள்
Kutti Revathy

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  கவிஞர் குட்டி ரேவதி அவர்கள் பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து தனது ஆதரவுக் குரலை எழுப்பி வருபவர்.  இவர் தனது சமுதாய அக்கறை கொண்ட இடைவிடாத தொடர்முயற்சியின் ஓர் அங்கமாக இந்த மாதம் குறிப்பிடத்தக்க இரு செயல்களை ஆற்றி மக்களின் சிந்தனையைத் தட்டி எழுப்பியுள்ளார். வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் இவர் ஆற்றிய உரைக்காகவும், இம்மாத கணையாழி இதழில் இவர்  எழுதிய கட்டுரைக்காகவும்  இவர் பாராட்டப்படுகிறார். கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.

கவிஞர் குட்டி ரேவதி அவர்களின் இயற்பெயர் ரேவதி சுயம்புலிங்கம்.  சென்னையில் வசிக்கும் சித்த மருத்துவரான இவர்தம் முற்போக்கு சிந்தனைகளைத்  தொடர்ந்து தனது எழுத்துக்களின் மூலம்  வெளிப்படுத்துவதில் முனைப்பு மிகக் கொண்டவர். தற்கால பெண்ணெழுத்தாளர்களில் பெண்ணிய எண்ணம் நிறைந்த குட்டி ரேவதி “பனிக்குடம்” என்னும் பதிப்பகம் ஒன்றையும் நடத்திவருகிறார். இப்பதிப்பகம் வெளியிடும்  பனிக்குடம் என்ற  தமிழ் இலக்கிய சிற்றிதழின் ஆசிரியர் பொறுப்பிலும் இருக்கிறார். “பெண் எழுத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர்கால வடிவங்களைப் பதிப்பிக்கும் முயற்சி”யைப் பனிக்குடம் தொடர்வது என்பது  இந்தக் காலாண்டிதழின் நோக்கம்.

அத்துடன் பனிக்குடம் பதிப்பகம்   பெண்ணிலக்கியவாதிகளின் படைப்புகளை மட்டுமே வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. தலித் பெண்ணியம் என்பதை சித்தாந்த வடிவில் கட்டமைப்பதும் களப்பணிக்குச் செயல்படுத்துவதே இந்தியாவில் பெண்களின் உரிமைகளை முழுமையான வடிவில் பெற்றுத் தரும் என்று நம்புபவர் குட்டி ரேவதி. சாதிய மறுப்பும் ஒழிப்பும்தான் பெண்ணுடலை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கும் என்ற உணர்வுடன் தலித் பெண்ணியத்தைத் தனக்கேயான மொழியில் சித்தாந்தப்படுத்தி வருகிறார்.

ஆவணப்படத்துறையிலும் திரைப்படத்துறையிலும் பங்காற்றியுள்ள  குட்டி ரேவதி, பூனையைப் போல அலையும் வெளிச்சம் (2000), முலைகள் (2002), தனிமையின் ஆயிரம் இறக்கைகள் (2003), உடலின் கதவு (2006) ஆகிய கவிதை நூல்களையும், காலத்தைச் செரிக்கும் வித்தை (2009) என்ற கட்டுரை நூலையும் எழுதியுள்ளார்.

இந்த மாதம் (2014 ஆம் ஆண்டு ஜூலை 4 மற்றும் 5 ஆம் நாட்களில்) அமெரிக்க செயின்ட் லூயி, மிசௌரி நகரில் நடந்த வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் 27-ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்று இவ்வாண்டில் தன் மறைந்த நூற்றாண்டினைக் காணும் தலித் இயக்க முன்னோடியும், சமூகச் சீர்திருத்தவாதியுமான அயோத்திதாச பண்டிதரைப் பற்றிய சொற்பொழிவொன்றை வழங்கியுள்ளார்.   மேலும் விழாவில்  “கிளம்பிற்றுக்காண் தமிழர் படை ” என்ற தலைப்பில் நடைபெற்ற கவியரங்கத்திற்கு தலைமையேற்று  இன்றைய தமிழ் சமுதாயத்தில் தமிழர் உணர்வுகள் செயல் வடிவம் பெற, தமிழ் உணர்வாளர்களைக் கொண்டு ஊடகக் கல்விக்கூடம் அமைக்க வேண்டியதன் அவசியத்தையும் இன்றைய தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எழுத வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

“பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை” என்ற தலைப்பில் இந்த மாதம் ஜூலை 2014 இல்  வெளியான “கணையாழி” இதழில் இவர் எழுதிய கட்டுரையில், தமிழ் பெண்எழுத்தாளர்களின் மீது  தமிழ்ச் சமுதாயம் கொண்டிருக்கும் கீழ்த்தரமான கண்ணோட்டத்தைக் கண்டித்து எழுதியுள்ளார்.  தமிழ் இந்துவில் எழுத்தாளர் ஜெயமோகன் பெண் இலக்கியவாதிகளை அவர்கள் பாலினம் சார்ந்து வெறுப்புக் கண்ணோட்டத்துடன் விமர்சித்திருப்பதாக* எழுந்த சர்ச்சையின் எதிரொலியாக அவருக்கு பெண் எழுத்தாளர்களும், பெண்ணியவாதிகள் சிலரும் விடுத்த கண்டன அறிக்கையின் எதிரொலிகளில்  ஒன்றாக இக்கட்டுரையைக் கணையாழி இதழில் குட்டி ரேவதி எழுதியிருந்தார். கட்டுரை  முழுவதையும் இச்சுட்டிவழி சென்று படிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துவிட்டு, கட்டுரையின் முக்கியக் கருத்துகள் மட்டுமே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

 

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை

kutty raevathi 2

இன்று தான் என்று இல்லை. பெண்கள் எழுத வந்த முதல் கணம் முதலே பெண் எழுத்தாளர்கள் மீதான வெறுப்பும், சந்தேகங்களும் சமூகத்திடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அது வரை, ஆணின் ஆளுமைகளையும், குடும்பம், திருமணம், சாதி, மதம் இன்ன பிற, ஆணுக்கு இசைவான அமைப்புகளையும், ஆண் ஏற்ற அதிகார அடையாளங்களையும் கட்டிக்காக்கும் பொறுப்புகளை மட்டுமே நிறைவேற்றி வந்த பெண்கள், தம் கைக்கு மொழி கிடைத்ததும், சிந்திப்பதைப் பதிவு செய்யும் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொண்டனர். ஆனால், இதுவும் காலங்காலமான தடைகளுக்குப் பின்பு தான் நிகழ்ந்தது………….

பெண்கள் எழுத வரும்போது, சமூகத்தில் உருவாகும் பதட்டம் என்பது, நிறைய விடயங்களை அம்பலமாக்கும் என்பது தான். அதுவரை மறைத்தலுக்கும் மறந்துபோதலுக்கும் ஆளான வாழ்க்கைச் சம்பவங்கள், அது சார்ந்த முறையீடுகள் எல்லாம் பகிரங்கமாகத் தெரிய வந்து, இது வரை தாம் அனுபவித்து வந்த அதிகாரங்களையும் சமூக மரியாதைகளையும் குலைக்கும் என்பதை ஆண் எழுத்தாளர்கள் உள்ளிட்ட, அதிகாரங்களை அனுபவித்தவர்கள் அறிந்தது தான்………….

இன்று நிலைமை மாறிவிட்டது. குறிப்பாக, மீனவர் பெண்கள், தாழ்த்தப்பட்ட பெண்கள், மதச்சிறு பான்மையினர், உழைக்கும் பெண்டிர், பாலியல் வாழ்வைத் தொழிலாக ஏற்றவர்கள், அதிகாரத்திற்கு எதிரான போராட்ட வாழ்வைத் தம் வாழ்வாக ஏற்றுக்கொண்டவர்கள் என எல்லோரும் எழுத வந்துவிட்டனர். இதனால், ஏற்படும் “பாதுகாப்பின்மை உணர்வு” ஆண் எழுத்தாளர்களைப் பதட்டம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளது………….

அறிவின் உறைவிடமாகவோ, கருத்தின் பிறப்பிடமாகவோ பெண்கள் மாறுவது, ஆண்களின் தன்னிருப்பை அச்சுறுத்தும் ஒன்று தான். அதிலும் எழுத்து என்பது சிந்தனை முறையைக் கேள்விகேட்கும் பணி என்பதால், இயல்பாகவே ஆண் படைப்பாளிகள் சாதாரண, பழைமைகள் தோய்ந்த, ஒரு சராசரி அவரவர் சாதி ஆண்களாகிவிடுகின்றனர். மொழியில் கையாளவேண்டிய குறைந்தபட்ச அறம் கூட, தேய்ந்துபோய்விடுகிறது………….

தமிழ் ஆண் எழுத்தாளர்கள் சொல்வது போல், பெண்கள் ஒன்றும் ஆண்களின் பாலியல் இச்சைகளுக்கு இரையாகி ‘ஊடகப்பிம்பங்களாக’ ஆகிவிட முடிவது இல்லை. ‘உன்னை எவ்வளவு பெரிய ஆளாக ஆக்கிக்காட்டுகிறேன்!’ என்ற பசப்பு வார்த்தைகளுடன் வந்த ஆண் படைப்பாளிகள், அத்தகைய பெண்களைச் சமூக வெளிச்சத்திலிருந்து முற்றிலுமாக விலக்கி, இருட்டடிப்பு தான் செய்திருக்கிறார்கள். இத்தகைய முறை, நடைமுறைக்கு உதவாது என்பது தான் அடிப்படையான தர்க்கம். பெண் நாளும் உழைத்தும், போராடியும் தான் எழுத்தை மட்டுமல்ல, எந்தவகையான கலைவெளிப்பாட்டையும் இந்தச்சமூகத்தில் செய்யமுடியும் என்பது வெகு யதார்த்தம்………….

இவ்விடத்தில், மிகவும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்று. உலகெங்கிலும் உள்ள ஆண் படைப்பாளிகள் இப்படி இருப்பதில்லை. அல்லது, உயர்ந்த அல்லது புகழ்பெற்ற ஆண் படைப்பாளிகள் என்று பாரட்டப்பட்டவர்கள், உண்மையில் அப்படியான புகழ்பெறுவதற்கு அடிப்படையான காரணம், பெண்களை எதிரினமாகப் பார்க்காததுதான். மனித இனமாகப் போற்றியதுதான். பெண்ணும் ஆணும் ஹோமோசேப்பியன்ஸ் என்ற ஒரே வகை இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடிப்படை அறிவியல் அறிவை அவர்கள் பெற்றிருப்பது தான். குதிரையும் கோழியும் என்ற வேறு வேறு இனத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதைப் புரிந்துகொண்டவர்களும் கூட. எந்தச்சந்தர்ப்பத்திலும், அவர்கள் பெண்கள் மீது அபாண்டமான சொற்களை உபயோகித்ததில்லை, உபயோகிக்கத் தயங்கியிருக்கிறார்கள். இன்றைய ஆண் படைப்பாளிகளின் ஆண் எழுத்து, அவர்கள் கொண்டிருக்கும் பெண் மீதான அடிப்படை வன்மங்களினாலேயே கடுமையாகப் பரிகசிக்கப்படும், புறக்கணிக்கப்படும் சூழலில் இருக்கிறது என்பதை அறியாதிருக்கிறார்கள்…………

ஒடுக்கப்பட்டவர்கள் தங்களுக்காகக் குரல் எழுப்ப வேண்டும் என்று அறிந்திராத  அல்லது அவர்களால் இயலாத சூழ்நிலையில் குட்டி ரேவதி போன்ற சமூகப் பொறுப்புள்ளவர் செய்யும் சேவையை சமுதாய வளர்ச்சிக்கு இன்றியமையாத பங்களிப்பாக அங்கீகரித்துப் போற்ற வேண்டியது நமது கடமை.

 

இவரைப் பாராட்ட விரும்புவோருக்காக, இவரது மின்னஞ்சல் முகவரி: kuttirevathi@gmail.com

இவரைப் பற்றி மேலும் தகவல்களை கீழ்காணும் சுட்டிகளின் வழி அறியலாம்:
Facebook.com: https://www.facebook.com/pages/Kutti-Revathi/191482800885454
Twitter.com: https://twitter.com/kuttirevathi
Blogspot: http://www.kuttyrevathy.blogspot.com
Wiki: https://ta.wikipedia.org/s/cqa

 

சான்றுகளும் குறிப்புகளும்:

பெண் வெறுப்பு என்றொரு நீண்ட படலம் – தி இந்து
http://tamil.thehindu.com/general/literature/article6136159.ece

எழுத்தாளர் ஜெயமோகன் மீது பெண் எழுத்தாளர்கள், பெண்ணியவாதிகள் தாக்கு! – தி இந்து
http://tamil.thehindu.com/tamilnadu/article6132852.ece

பெண் எழுத்தாளர்கள் மீது ஆண் எழுத்தாளர்கள் கொள்ளும் வெறுப்பு! – இயங்கியல் பார்வை
http://kuttyrevathy.blogspot.com/2014/07/blog-post.html

* தனது இணையதளத்தில் பெண் எழுத்தாளர்கள் தன் மீது முன்வைத்துள்ள குற்றச்சாட்டை  ஜெயமோகன் மறுத்துள்ளார்

 

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

  1. வல்லவர்களை.. அதுவும் நல்லவர்களை.. இச்சமுதாயத்திற்காக தங்கள் இயல்புவாழ்க்கையை மாற்றியமைத்து கலங்கரைவிளக்காகத் திகழ்பவர்களை.. அடையாளம்காட்டும் பணியிலும் வல்லமை முன்னணியில் திகழ்வது வரவேற்கத்தக்கது!
    எங்கோ.. எப்படியோ.. என்னென்னவோ சாதனைகள்.. இவைதம்மைப் படிப்பதற்கே பெருமையாய் இருக்கிறது! பெண்ணிய சிந்தனையில் பெரும்பங்காற்றிவரும் கவிஞர் குட்டிரேவதி அவர்களின் தூய தொண்டினைப் பாராட்டுவதோடு.. வாழ்த்துகள் வழங்கிடுவோம்! பனிக்குடம் என்கிற பதிப்பகமும் அதில் பெண்ணியம்பற்றிய சிந்தனைகள் மட்டுமே முழங்கிடும் அற்புதமும்.. கடந்த, நிகழ்கால, எதிர்கால நிலையில் பெண்ணியம் என்கிற வரிகளைப் படித்தபோது பரவசம் அடைந்தேன்! தன்னைப்பற்றி எண்ணி வாழவே இவ்வாழ்க்கையில் நேரமில்லை.. பாரம் தாங்கவில்லை என்று தள்ளாடும் சராசரி மக்களிலிருந்து வேறுபட்டு இவர் தாங்கிநிற்கும் பணி.. இலட்சோப லட்சம்பேருக்கு வழிகாட்டட்டும்! சமுதாயத்தில் அறிவுவெளிச்சம் பரவட்டும்! உலக அளவில் உலாவரட்டும்!!
    அன்புடன்.. காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.