அன்புள்ள அத்தான் வணக்கம்!
— கவிஞர் காவிரிமைந்தன்
கைராசி திரைப்படத்திற்காக கண்ணதாசன் எழுதித்தந்த பாடல்! இப்பாடலைக் கேட்கும் நேரமெல்லாம் திரையில் தோன்றும் கதாநாயகி மனக் கண் முன்னே மறக்காமல் காட்சி தரும் அற்புதப் பாடல்! இலக்கியத் தமிழைக்கூட சில நேரங்களில் அப்படியே எடுத்தாள்வதும்.. சினிமா என்கிற ஊடகத்தில்கூட ஆங்காங்கே அதற்கான பதிவுகளும் கண்ணதாசனால் கையாளப்பட்டதற்கு இப்பாடல் சாட்சி! ஆம்.. ஆயிழை என்கிற சொல் வழக்கத்தில் இல்லை.. இலக்கியத்தில் உண்டு! கற்பனையில் மேடைகட்டி.. அதற்கேற்ப இசையுமிட்டு வார்த்தைகளை வழங்கினால் வருகின்ற சராசரிப் பாடலாய் இல்லாமல்.. கவிஞர்தம் அற்புத நினைவுச்சுரங்கத்துள்ளிருந்து எடுக்கப்பட்ட வைரக்கற்களாய்.. வரிகள்!
அன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயிழை கொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்..
மறக்க முடியாத மாணிக்க வரிகள்! கண்களில் உறக்கமில்லை என்று சொல்ல வந்த கவிஞருக்கு.. கற்பனையும் உவமையும் எப்படிக் கை கொடுக்கிறது பாருங்கள்!
பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை
பெண்மை இப்படி முன்வந்து சொல்லாத வார்த்தைகள் முழுமையாக வருகின்றன என்றால் எண்ணிப் பாருங்கள்.. அவள் மனம் எல்லைகள் கடந்து வருகிற அழகைக் கவிதையில் தருகிறார் கேளுங்கள்! அழகைக் கொடுக்கிறது பாருங்கள்!
பொன் மணிமேகலை பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
தனிமையும் பிரிவும் தன்னைப் படுத்தும் பாடு ஒரு பக்கம் இருக்கட்டும்! அதிலும் தலைவன் பெயரல்லவா கெட்டுவிடும் என்கிற எச்சரிக்கையில் எவ்வளவு அழகு இறைந்திருக்கிறது பாருங்கள்!
இப்படியெல்லாம் ஒரு காதல் பாடலில்.. தனிமையைப் பற்றி விவரிக்கும் பாடலில்.. எத்தனை விதமான ரசங்கள்! பாவங்கள்! நளினங்கள்! முத்திரைகள்! கவியரசே.. நீ எழுத எழுத.. நான் வரவா.. நான் வரவா என்று தமிழ்ச்சொற்கள் வந்து நிற்குமாமே.. உண்மையா சொல் என்று உன்னைக் கேட்க வேண்டியதில்லை.. உன் கவிதைகள்தான் உன்னையே காட்டிக் கொண்டிருக்கின்றனவே!! விஸ்வநாதன் ராமமூர்ததி இசையமைப்பில் கைராசி பாடல்.. அன்புள்ள அத்தான் வணக்கம்!
http://youtu.be/PQ0Bfm1gF7I
காணொளி: -http://youtu.be/PQ0Bfm1gF7I
படம்: கைராசி
இயற்றியவர்: கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்ததி
நடிகை: சரோஜாதேவிஅன்புள்ள அத்தான் வணக்கம்
உங்கள் ஆயுளைகொண்டாள் மயக்கம்
தென்னவர் கையிருக்கும் திருவாளைப் போலிருக்கும்
கண்ணிருந்தும் இல்லை உறக்கம்
(அன்புள்ள ….மாலைபொழுது வந்து படைபோல் கொல்லும்
வருவார் வருவார் என்ற சேதியை சொல்லும்
ஆலிலை போன்ற உடல் ஆசையில் துள்ளும்
அந்தியிலே இயற்கை என்னையும் வெல்லும்
(அன்புள்ள ….பருவம் நிறைந்திருந்தும் எனக்கென்ன சுகமே
பருகும் இதழிரண்டும் இருந்தென்ன பயனே
கரங்கள் இரண்டிருந்தும் அணைப்பதற்கில்லை
கண்ணா இனி நான் பொறுப்பதற்கில்லை
(அன்புள்ள ….பொன் மணிமேகலை பூமியில் விழும்
புலம்பும் சிலம்பிரண்டும் என்னை விட்டு ஓடும்
கைவளை சேர்ந்து விழும் கண்களும் மூடும்
காண்பவர் உங்களைத்தான் பழி சொல்ல நேரும்
அன்புள்ள அத்தான் வணக்கம்
திருமணம் ஆகுமுன் வேண்டாம் குழப்பம்