கே.ரவி

“புரியுது தம்பி. நளவெண்பா, முத்தொள்ளாயிரம், கலிங்கத்துப் பரணி, பாரதிதாசன் என்று தொடங்கி, ஷெல்லி, கீட்ஸ், பைரன், வொர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் போன்ற ஆங்கிலக் கவிஞர்களின் படைப்புகளில் தோய்ந்து, நா.பா., ஒளவை நடராஜன் போன்ற சமகாலத்து இலக்கிய ரசிகர்களால் செப்பனிடப்பட்டு, சுரதா, முருகுசுந்தரம் போன்ற தற்காலக் கவிஞர்களாலும் பாதிக்கப்பட்டு உன் கவிதை உருப்பெற்று, வளர்ந்தது என்று…..” சிகாமணி முடிக்குமுன் நான் குறுக்கிட்டேன்: “மிக முக்கியமானதை விட்டு விட்டாயே சிகா, தண்டமிழ்க் கொண்டலால் தட்டி எழுப்பப்பட்டு, பாரதியால் தடுத்தாட்கொள்ளப்பட்டு!”

“மறக்கலே தம்பி. நான் அதுக்கு வரதுக்குள்ள ஒனக்குப் பொறுக்கலே, அவசரம்” என்றான் சிகா.

“அது சரி, முன்னே அண்ணே என்றாய், இப்பொழுது தம்பி என்கிறாயே?” கேட்டேன்.

சிகா சொன்னான்: “நீதான் பாடிட்டியே, எதைநான் முதுமை என்பேன், இதைப்போய் இளமை என்றேன், என்று.”

என் துட்டையே எனக்குத் திருப்பித் தருகிறான், சிகாமணி.

எப்படியோ, பலமுனைத் தாக்குதல்களுக்கு இடையில், வளைந்து, நெளிந்து, வளர்ந்து என் கவிதைச் சுடர் அணையாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.

திருமணம் ஆனவுடன், நான் சட்டம் படித்துக் கொண்டே ஒரு பணியிலும் இருந்தேன். வேலைப் பளு அதிகம். நேரமும் கிடைக்கவில்லை. இருந்தாலும் நேரம் கிடைத்த போதெல்லாம் ஷோபனாவுடன் கவிதைகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமின்றி, அவளுடன் சேர்ந்து அமர்ந்து கவிதை யோகத்தில் ஈடுபட்டேன். ஆம், அவள் வீணை வாசிப்பாள். அதற்கு ஏற்ப நான் பாடுவேன். அப்படி வந்த சில பாடல்களில் சில இன்னும் நினைவில் உள்ளன. 1974-75 ஆண்டுகளில் வந்தவொரு பாடல்:

shoba2

யாழில் மிதக்கும் விரல்களோ

தண்ணீரில் தளும்பும் நிலவின் துகள்களோ

யாழில் மிதக்கும் விரல்களோ

உனது பார்வை எனது நெஞ்சில்

ஒலியும் ஒளியும் சேர்க்குமோ

அனிச்ச மலரின் அருகில் வந்த தென்றலோ

பனிசுமந்த நதிவிழுந்த சாரலோ

உன்கரங்கள் தீண்டும் போது என்வதனம்

குழையும் சிலிர்க்கும் காதலோ

யாழில் மிதக்கும் விரல்களோ

விண்மீன்கள் தூளாகி விழுமொலியோ

கடலிசையில் மனமயங்கிக் கருமேகக் கூட்டங்கள் முறியும் ஒலியோ

உன்

சதங்கையோடென் இதயமும்

துடிக்கும் துவளும் பாவமோ

யாழில் மிதக்கும் விரல்களோ

அந்தப் பாடல் வந்த நேரம், தொலைக்காட்சியில் ‘ஒலியும் ஒளியும்’ என்ற நிகழ்ச்சி வரத்தொடங்காத காலம்!

இன்னொரு பாடல், சற்று வினோதமான சூழ்நிலையில் பிறந்தது. திரைப்படக் காட்சிபோல் ஒரு சூழ்நிலையைக் கற்பித்துக் கொண்டு அந்தச் சூழ்நிலையில் பாடுவதற்கு ஏற்ற பாடலாக ஏதேனும் எழுதிப் பாடுவது என்று ஷோபனாவும் நானும் முடிவு செய்தோம். காதலன், காதலி அல்லது கணவன், மனைவி இடையே சின்ன சின்ன கருத்து வேற்றுமைகள் வந்தாலும் அவை காதலுக்குக் குறுக்கே வரத் தேவையில்லை என்பதுபோல் பாடல் அமைய வேண்டும் என்று திட்டமிட்டோம். ஷோபனாவிடம், “ஏதாவது ஒரு ராகத்தை வீணையில் மீட்டு” என்று சொன்னேன். திடீரென்று ஒரு பல்லவி தோன்றியது.

ஆரோகணம் அவரோகணம்

வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

ஆரோகணத்தில் வரும் எந்த ஸ்வரமும், அவரோகணத்தில் வராத வண்ணம், ஆரோகணமும், அவரோகணமும் முற்றிலும் வேறாக இருப்பதாக அமைந்த ஒரு ராகத்தில் ஷோபனா அந்தப் பல்லவியை வீணையில் வாசித்ததும் நான் நெகிழ்ந்து போனேன்.

பாடல் தொடர்ந்தது:

மாறாத இருட்டுக்கு மடியைக் கொடுத்தாலும்

நீராகி விடும் போது நிலம் வாழ்த்தும் கருமேகம்

போல் வந்திடும் ஊடற்களம்

போதென்ற மயல்சாய்ந்து நிலவென்ற பூவந்து கூடல்தரும்

ஆரோகணம் அவரோகணம்

வேறாக இருந்தாலும் விளைவாகும் ஒரு ராகம் சுகமே தரும்

ravi

ஷோபனாவுக்கும் எனக்கும் இடையில் எந்தக் கருத்து வேறுபாடு வந்தாலும், நிறைய வரும், இந்தப் பாடலைத்தான் நினைத்துக் கொள்வேன். “காதலர் இருவர் கருத்தொருமித்து” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், கருத்துக்கும் காதலுக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தோன்றவில்லை. எப்படிக் கருத்துக்கும், கவிதைக்கும் சம்பந்தம் கிடையாதோ அப்படித்தான் கருத்தும் காதலும்.

இப்படி இசையும் கவிதையுமாய்க் கலந்து என் வாழ்க்கை சென்று கொண்டிருந்த காலக் கட்டத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சந்தித்துப் பிரிந்துவிட்ட நண்பன் வ.வே.சு. மீண்டும் சென்னைக்கே வந்து சேர்ந்ததால் எங்கள் தொடர்பு நெருங்கிய நட்பாக வளர்ந்து என் இசையார்வத்தை மேலும் தூண்டிய செய்தியை முன்பே சொல்லிவிட்டேன்.

அதற்கு ஆறேழு ஆண்டுகளுக்கு முன், அதாவது, 1966-67 ஆண்டுகளில் வானொலியில், மன்சாஹே கீத், மனோரஞ்சன் நிகழ்சிகளில் தினம் தவறாமல் நான் கேட்ட பழைய ஹிந்திப் பாடல்களே என் கொஞ்ச நஞ்ச இசை ஞானத்துக்கும் முழுப்பொறுப்பு. ஓ.பி.நய்யர், நெளஷத், மதன்மோஹன், சலீல் செளத்ரி, சங்கர் ஜெய்கிஷன் போன்ற இசை மேதைகளே என் குருநாதர்கள்.

ஏற்கனவே சொன்னதுபோல் பள்ளியில் அரங்கேறிய நாட்டிய நாடகப் பாடல்களால் நான் பெற்ற இசையனுபவங்கள், ஹிந்தித் திரைப் பாடல்களைத் தினமும் கேட்டு லயித்த ரசனை, வ.வே.சு.வின் நட்பு, எல்லாவற்றுக்கும் மேல் பாரதியின் இசைப் பாடல்களின் தாக்கம், இவற்றோடு ஷோபனாவின் இசைத் தேர்ச்சியால் கிடைத்த ராகப் பயிற்சி, எல்லாம் கலந்து, இசையையும், கவிதையையும் என் நெஞ்சின் இருகண்களாகத் திறந்து விட்டன.

“இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா” என்று கவிஞர் கேட்டதுபோல், இசை, கவிதை ஆகிய என்னிரண்டு அகக்கண்களும் இணைவாகவே இயங்கின. என் கவிதைகளில் பெரும்பாலானவை மெட்டோடும், தாளக் கட்டோடும் பிறந்தன. பின்னணி இசையும் கூடவே ஒலிக்கும். எப்பொழுதும் என் மனத்தின் ஓரிழையில், அதாவது, ஒரு சேனலில், ஏதாவது ஓர் இசைப்பாடல் உதித்து, ஒலித்துக் கொண்டே இருக்கும். ‘எப்பொழுதும்’ என்றால் தூங்கும் போதும் என்று கூட அர்த்தம் கொள்ளலாம். நிறைய பாடல்கள் உறக்கத்தில் உதித்துள்ளன. சில பாடல்கள் துயில் கலைந்ததும் மறந்து போகும். பிறகு, பல நாட்கள், அல்லது ஆண்டுகள் கழித்து நினைவுக்கு வரும். என் கவிதைகளில் பல கவிதைகளைப் பாடிப் பாடிப் பல மாதங்களுக்குப் பிறகே ஏதாவது துண்டுக் காகிதத்தில் எழுதி வைத்ததும் உண்டு; தொலைத்ததும் உண்டு.

“போதுமய்யா உன் சுய புராணம்” என்று அலுத்துக் கொண்ட சிகாவை அடக்குகிறேன்: ஏம்பா, இந்தத் தொடரே என் சுய புராணம் தானேப்பா!

கவிதை எப்போது உதிக்கும், எப்போது சொற்களாக உருவெடுத்து வெளிப்படும் என்று என்னால் முன்கூட்டிச் சொல்லவே முடியாது.

சில நிகழ்சிகளை மட்டும் சொல்கிறேன்.

1988-ஆம் ஆண்டில் ஒருநாள், சென்னை உயர்நீதி மன்றத்தில் அன்றைய நீதியரசர் சாமிக்கண்ணு அவர்களுடைய மன்றில் அமர்ந்திருக்கிறேன். என் வழக்குக்கு முந்தைய வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. மணி சுமார் பகல் பன்னிரண்டரை இருக்கக் கூடும். பேசிக் கொண்டிருந்த வழக்குரைஞரின் இளவர், அதாவது, ஜூனியர் வழக்கறிஞரிடம் அவருடைய சீனியரின் வாதம் இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும் என்று மெல்ல வினவுகிறேன். பகல் இடைவேளை வரைக்கும் போகும் என்று அவர் சொன்னதும், ஓ அப்படியானால், நான் பிற்பகல் வந்தால் போதுமோ என்று கேட்கிறேன். “பிற்பகல் நீதிமன்ற அமர்வு கிடையாது, ஏனென்றால் அன்று சிவன் ராத்திரி என்று அவர் பதில் சொன்னதுதான் தெரியும், உடனே, ‘சிவன்’ என்ற சொல்லில் இருந்து ஒரு மின்னல் வெடித்துச் சிதறி என் அகத்திரையைத் தாக்குகிறது. கடகடவென்று பாடல்கள் நெஞ்சில் பெருக்கெடுக்க, எதிரே இருந்த காஸ் லிஸ்ட், அதாவது, வழக்குப் பட்டியல் அச்சாகித் தினசரி வருகின்ற தாளின் பின்புறத்தில் கிறுக்குகிறேன்.

ஆசையில் அலைந்து கெட்டேன் அனுபவம் பழுது பட்டேன்

ஓசையில் உழன்று நொந்தேன் ஒருகணம் உனைநினைந்தேன்

நீசனென் றெள்ளிடாமல் நீயெனைத் தேடி வந்தாய்

ஈசனே எம்பிரானே என்னை ஆளுடைய கோவே

மொத்தம் பன்னிரண்டு பாடல்கள். எழுதி முடித்து, நிமிர்ந்து பார்க்கிறேன், வழக்கு மன்றம் காலியாக இருக்கிறது. நீதியரசர், நீதிமன்ற அலுவலர், நான் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறோம். நீதியரசர் சாமிக்கண்ணு சொல்கிறார், “உங்களுக்கு முந்தைய கேஸ் முடிந்து உங்கள் கேஸ் அழைக்கப் பட்ட போது, நீங்கள் ஏதோ மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள். தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தான் காத்திருக்கிறேன்”.

இப்படிப் பல அனுபவங்கள்!

ஒருநாள், வானத்து மின்னலே வந்து என்னகத்தை ஊடுருவிச் சென்று, அங்கே கவிதை நிலவை மலரச் செய்த அனுபவத்தைப் பிறகு சொல்கிறேன்.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *