Featuredஇலக்கியம்பத்திகள்

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! (33)

அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம்(2), சிங்கப்பூர்

 

 

சுபாஷிணி ட்ரெம்மல்

​மலேசியா-சிங்கை வாழ் மக்களைத் தவிர ​பெரானாக்கான் சமூகத்தைப் பற்றி ஏனைய பலர் அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. இந்தச் சமூகம் ​மலேசியா-சிங்கை கடல் வணிகப் பகுதியை மையமாகக் கொண்ட நிலப்பகுதியில் மட்டுமே அதிகமாக உருவாகி வளர்ந்த ஒரு சமூகம் என்பதே இவர்களின் தனித்துவம்.

14ம் நூற்றாண்டின் இறுதிக்குப் பின் படிப்படியாக 15ம் நூற்றாண்டில் அன்றைய மலாயாவின் வர்த்தக மையமாக மலாக்கா வளர்ச்சியுற்றது. அரேபிய வணிகர்கள், சீன வணிகர்கள் என இப்பகுதிக்கு வந்து செல்லும் வேற்று நாட்டினர் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கிய காலகட்டமது. சோழ சாம்ராஜ்ஜியம் மலாக்காவுக்கு மேலே வடக்கு மானிலத்தில் கடாரத்தில் மையமிட்டு மலாயா தீபகற்பம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, அதாவது 9ம் நூற்றாண்டு முதல் 10ம் நூற்றாண்டு ஆரம்பம் வரை ஹிந்து சமயப் பின்னனியுடன் அமைந்த ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருந்தது. இந்தோனேசிய தீவுகளில் ஆட்சி செய்த ஸ்ரீவிஜயா மன்னர்களும் ஹிந்து சமயம் தழுவி ஹிந்து சமய சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த காலம் அது.

பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம் பினாங்கு, மலாக்கா, சிங்கை ஆகிய பகுதிகளில் பெரானாக்கான் மக்களின் குடியிருப்பைக் காட்டும் வரைபடம்

ஆயினும் 11ம் நூற்றாண்டில் மலாயா தீபகற்பம் வந்த அரேபியர்களின் தாக்கத்தால் மலாயா இஸ்லாமிய நாடாக கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டு கொண்டிருந்தது. கடாரப் பகுதியில் அரச பரம்பரையினர் 12ம் நூற்றாண்டு வாக்கில் இஸ்லாமிய மதத்தைத் தழுவி இஸ்லாமிய சமயம் சார்ந்த அரசாட்சி செலுத்திக் கொண்டிருந்தனர். ஆயினும் அவர்களது ஆட்சி என்பது மலாயா முழுமைக்கும் என்றில்லாது இன்றைய பெர்லிஸ், கெடா, பினாங்கு ஆகிய பகுதிகளில் அடங்கியதாக மட்டுமே இருந்தது.

15ம் நூற்றாண்டு மலேசிய வரலாற்றில் மிக முக்கியமாகக் கருதப்படுவது. அதுவே ஆங்கிலேய ஆட்சிக்கு முந்தைய ஒரு மலாய் அரசாட்சியின் தொடக்ககாலம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மலாய் ஆட்சிக்கு வித்திட்டவர் பரமேஸ்வரா.

சிங்கபுரம் என்ற சிங்கப்பூரை ஆட்சி செய்து கொண்டிருந்த ஸ்ரீ மஹாராஜாவிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டு அவரது மகன் பரமேஸ்வரா (1344-1414) தனது ஆட்சியைத் தொடங்கினார். இது நிகழ்ந்த ஆண்டு 1389. அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தோனேசிய தீவுகளில் ஒன்றான மஜபாஹிட் தீவில் தனியாட்சி செய்து வந்த ஒரு குழு சிங்கப்பூர் தீவைக் கைப்பற்ற செய்த முயற்சியில் அத்தீவு அவர்கள் வசம் விழ, பரமேஸ்வரா தனது ஆதரவாளர்கள் சிலருடன் தப்பித்து மலாயாவின் மெர்போக் நதிக்கரைக்கு அருகில் உள்ள ஒரு பகுதிக்கு கடல் மார்க்கமாக வந்து சேர்கின்றார். மலாக்கா பசுமை வளம் நிறைந்த கடற்கரை பகுதி நகரம். இத்தகைய அருமையான பகுதியில் தலைமைத்துவம் இன்றி இருக்கும் அப்பகுதிக்கு தானே தன்னை தலைவனாக்கிக் கொண்டு பின்னர் மன்னராக முடிசூட்டிக் கொண்டு அங்கே மலாக்காவின் அரச பரம்பரைக்கு ஒரு தொடக்கத்தை வைக்கின்றார் பரமேஸ்வரா

பரமேஸ்வரா பின்னர் வணிக நோக்கத்துடன் மலாக்கா வரும் பெர்ஷிய குழுவினருடன் அணுக்கமான உறவினை வளர்க்கும் பொருட்டு பெர்ஷிய இளவரசி ஒருவரை மணந்து பின்னர் இஸ்லாமிய மதத்தையும் தழுவுகின்றார். தன் பெயரையும் ஸ்ரீ இஷ்கந்தர் ஷா என மாற்றிக் கொள்கின்றார். இதுவே மலாயா அதிகாரப்பூர்வமாக ஒரு இஸ்லாமிய மதம் சார்ந்த நாடாக உருவாகக் காரணமாக அமைந்த முக்கியச் சம்பவம்.

அதன் பின்னர் சீனாவுடன் சிறந்த வர்த்தகத் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார் பரமேஸ்வரா. இதன் பொருட்டு சீனாவில் ஒரு பகுதியின் அரச குடும்பத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு இளவரசி ஹங் லீ போவை திருமணம் செய்கிறார். சீனாவிற்கும் வர்த்தகத்தை விரிவாக்கும் பொருட்டு கடல் பயணம் செய்தவர் இவர்.

இக்கால கட்டத்தில் சீனாவிலிருந்து மலாக்காவிற்கு வந்து சேரும் வர்த்தகக் குழுவினரில் பலர் உள்ளூரிலேயே தங்கிவிட அவர்களில் பலரும் படிப்படியாக உள்ளூர் மக்களை மணந்து அங்கேயே ஒரு புதிய இன உருவாக்கத்திற்கு அடித்தளம் அமைக்கின்றனர். இதுவே பெரானாக்கான் சமூகம் உருவான சரித்திரம்.

​பெரானாக்கான் இனமக்கள் - ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்
​பெரானாக்கான் இனமக்கள் – ஒரு குடும்பப் படம்: பாரம்பரிய உடையில்

இப்படி உருவான பெரானாக்கன் சமூகத்தினர் குறிப்பாக மலாக்காவிலும் அதற்கடுத்த வகையில் சிங்கையிலும் பினாங்கிலும் மட்டுமே குடியிருந்தனர். கடல் வணிகம் என்பது முக்கியமாக மையம் கொண்டிருந்த துறைமுகப் பகுதிகள் இவை மூன்றும் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். மலாக்கா அரச குடும்பத்தின்அரது ஆதரவும் இம்மக்களுக்கு அமைந்திருந்தது. அடிப்படையிலேயே வர்த்தகமே இச்சமூகத்தினரின் அடிப்படை தொழிலாக அமைந்ததால் இச்சமூகத்தினர் ஆரம்ப காலம் தொட்டு செல்வச் செழிப்புடன் வாழும் சமூகமாகத் திகழ்கின்றனர்.

சீன ஹொக்கிய சமூகம் மலாய் இன மக்களோடு திருமண உறவின் வழி கலந்ததின் விளைவாக உணவு, உடை, பேச்சு மொழி ஆகியன மலாய் அடிப்படையிலும் மருத்துவம், பெயர், கலாச்சாரம், பண்பாடு , திருவிழாக்கள் ஆகியன சீன சமூகத்தின் வழக்கத்தின் அடிப்படையிலும் அமைந்திருப்பவை. இவர்களது சமயம் சீனாவில் பாரம்பரியமாக இவரகள் வழிபாட்டு சமயமாக அமைந்த தாவோயிஸம். சிலர் புத்த மத வழிபாடும், கிறிஸ்துவர்களாக மதம் மாறியோர் சிலர் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுவோராகவும் இருக்கின்றனர். திருமணச் சடங்குகள் எனும் போது அது சீன பாரம்பரியத் திருமணச் சடங்கு முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது.

​சிங்கையில் உள்ள பெரானாக்கான் அருங்காட்சியகம் செல்லும் போது படங்களுடன் இம்மக்களைப் பற்றிய மேலும் பல தகவல்களை வருகையாளர்கள் அறிந்து கொள்ளலாம். இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களும் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தை இங்கு காணலாம் http://www.peranakanmuseum.org.sg/. சிங்கை செல்பவர்கள் சென்று கண்டு வர வேண்டிய அருங்காட்சியகங்களின் பட்டியலில் இடம்பெற வேண்டிய ஒரு அருங்காட்சியகம் இது.

இத்தொடரின் எனது அடுத்த பதிவில் வேறொரு நாட்டில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். காத்திருங்கள்..!

தொடரும்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க