Blog

  • வரவேற்பு

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக   (2)

    வரவேற்பு 

    (கேட்டு மகிழ)

    வருக வருக திருமகளே1625554_556625784436420_4864087313791331849_n

    வாசல் திறந்துவைத்தேன்! உன்

    அருகில் இருக்கும் பேற்றை எண்ணி

    அழுக்கைத் துடைத்துவைத்தேன்!

    உருகும் என்றன் உயிரில் சிறிய

    தீபம் ஏற்றி வைத்தேன்! நீ

    உதிர்க்கும் சிரிப்பை ஏந்திக்கொள்ள

    உள்ளம் திறந்துவைத்தேன்!

     

    எதுவுனக்குப் பிடிக்குமென்று

    எனக்குத் தெரியவில்லை! உனக்கு

    எதையும் கொடுக்கும் தகுதி இந்த

    ஏழை எனக்கு இல்லை!

    இதயம் ஒன்றைப் பறிகொடுத்து

    எதிரில் நிற்கும்போது

    இன்னும் என்ன தருவதென்று

    இதுவும் புரியவில்லை!

     

    வசந்தகாலம் நூறு உன்றன்

    வாசலாகட்டும்!

    வழிமுழுவதும் தேவகானம்

    வளைந்து பொழியட்டும்!

    இசைந்து இசைந்து இறைவன் உனக்கு

    இன்பம் வழங்கட்டும்! அதை

    இங்கிருந்தோ எங்கிருந்தோ இந்த

    ஏழை பார்க்கட்டும்! அதிலென்

    வாழ்வு நிறையட்டும்!

     

    நான்

    வந்தகதை விதியினாலே

    வாழ்க்கை முடிந்தது! நீ

    வரும்வரைநான் வாழவேண்டும்

    வாழ்தல் புரிந்தது

    இந்த வாழ்வில் இருக்கும் கணங்கள்

    இனி உனக்காக! என்

    இன்பம் யாவும் வைத்து நின்றேன்

    இருவிழிக்காக!

     

    நானிருக்கும் வரையுனக்கு

    நலங்கள் பாடுவேன்!

    நாளும் இரவும் காவலாகக்

    கடவுளைத் தொழுவேன்!

    தேன்மயங்கும் உன் நினைவே

    நெஞ்சில் சூடுவேன்! அந்தத்

    தெருமுனையில் நிலவொளியில்

    தேய்ந்து கரைவேன்!


     

    Share
  • திருமால் திருப்புகழ் (151)

     

    கிரேசி மோகன்

     
    பெருமாள் திருப்புகழ்….
    —————————————–
    ’’கண்ணன் திருப்புகழ்’’(விருத்தம்)
    ————————————————————
    தூங்க வருகவே
    ——————————-

    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter.  Navaneeta Natyam- acrylic on canvas.
    Dancing to the rhythm of churning, Krishna, who churned the ocean for Amrita, asks for a handful of butter. Navaneeta Natyam- acrylic on canvas.

     

    முடியில் கற்றை மயிற்பீலி புனைந்துblogger-image--1210577220
    மடியில் பட்டுப் பீதாம்பரம் அணிந்து
    நொடியில் ராதைக்காய் காத்துக் களைத்தவன்
    அடியேன் என்னகத்தில் தூங்க வருகவே….(6)

    அன்னையர் துரத்த ஆயர் பாடியில்
    வெண்ணெய் திருடி வீதியோடிக் களைத்தவன்
    பின்னையின் பின்னல் நிறத்தன் என்மனத்
    திண்ணையில் சாய்ந்து தூங்க வருகவே….(7)

    ஆசை கோபியர் அன்புக்கு அடிமையாய்
    ராச லீலையில் மூழ்கிக் களைத்தவன்
    வாச துளசி மாலை அணிந்தெனது
    பூசை உள்ளில் தூங்க வருகவே….(8)

    பூதனை நச்சுப் பாலொடு அவளின்
    வேதனை தீரக் குடித்துக் களைத்தவன்
    சீதரன் கோமளன் ஸ்யாமளன் என்னுளத்
    தீதினை விரட்டித் தூங்க வருகவே….(9)

    இத்தரை இன்னல்கள் களைந்து தர்மம்
    புத்துயிர் பெற்றிடப் பற்பல யுகத்தில்
    பத்தவதாரம் பூண்டுக் களைத்தவன்
    புத்தியில் யோகமாய்த் தூங்க வருகவே….(10)
    —————————————————————————————————————————

    படங்களுக்கு நன்றி :

    http://kamadenu.blogspot.in/2013_11_01_archive.html

     

    Share
  • ஒரு நாள்

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக! – (1)

     

    காலத்தால் அழியாதது காதல் மட்டுமே. கவிஞர்களுக்கு இந்த காதல் மட்டுமே தங்களின் இருப்பை உணர்த்துகிறதோ என்று நினைக்கத் தோன்றுமளவிற்கு, ஆண்டவனிடம் தொடங்கி, ஆயர்பாடி ஆடு மற்றும் மாடுகளிடம்கூட அற்புதமாக காதல்மொழி பேசும் வல்லமையை இவர்கள் எங்கிருந்துதான் பெறுகிறார்களோ! அந்த வகையில் நம் இசைக்கவி ரமணன் அவர்களின் ‘உனக்கே உனக்காக’ என்ற காதல் கவிதைகளின் தொகுப்பின் முதல் பகுதியாக இப்பாடலை அவர்தம் இனிய குரலிலேயே கேட்டு மகிழலாம்.

    ஒருநாள்..

    (பாடல்)

     

    ஒரு நாள்images

    மலராகப் பிறக்க வேண்டும்

    உன் கூந்தலில்

    சிலநேரம் இருக்க வேண்டும்

    ஒருநாள்

    தென்றலாய்ப் பிறக்க வேண்டும்

    உன் மடியினில்

    குழந்தைபோல் தவழ வேண்டும்  (ஒருநாள்)

     

    இருந்ததுவும் ஓரிதயம், அதைக்

    கவர்ந்து கொண்டாய்

    இமைவிளிம்பில் ஒரு பார்வையில், உன்

    நெஞ்சைத் தந்தாய்

    உன் மடியில், கண் மூடி

    என் பாடல் காற்றில் மிதந்திடவே  (ஒரு நாள்)

     

    உன்னிடமே என்னென்னமோ நான்

    சொல்லிட வந்தேன்

    கண்ணெதிரில் உன்னைக் கண்டதும் நான்

    என்னை மறந்தேன்

    என்னுயிரே! என் துணையே!

    என் தெய்வம் என்றும் நீதானே!  (ஒரு நாள்)

     

     

    Share
  • தழல் தந்த தரிசனம்

     

     சு.ரவி 

    60437A8F-1597-4A79-8651-8B9F7BA31DE0
    தழலுக்குள்ளே தண்ணீருண்டு, நீருக்குள்ளும் தழலுண்டு
    சுழலுக்குள்ளே சும்மாநிற்கும் அமைதிப் புள்ளி ஒன்றுண்டு
    நிழலுக்குள்ளும் சூரியனுண்டு, இரவுக்குள்ளும் பகலுண்டு
    விழலுக்கென்றும் வெள்ளம் உண்டு; கழலுக்குள்ளே புகலுண்டு!

    எரியாய்க் கவிதை செய்தேன் அதனுள் அமுதாய்த் தானே அவள் வந்தாள்
    திரியாய்த் தானே நான் நின்றேன் அதில் தீபச் சுடராய் அவள் நின்றாள்
    கரியாய்ப் போகும் மேனிக்குள்ளும் கவிதைத் தேனைப் பாய்ச்சியதார்?
    தரிசானாலும் தரிசனம் தந்தெனைத் தண்வயலாக மாற்றியதார்?

    வனப் புள்ளாய் என் ஆன்மா வானில் வட்டமடித்துப் பறக்கிறது
    என்க்குள் எரியும் தீபம் எந்தன் வாக்கில் கவியாய்ப் பிறக்கிறது
    மனக்குள அலைகள் ஓயும் நேரம் மரத்தின் வேர்கள் தெரிகிறது
    தனக்குள் தானே உறையும் தருணம் தழலின் தவமும் புரிகிற்து

     

    C664FD38-7BD1-4F01-9DCA-64E4E68EA0B3 
    எல்லாக் கவியும் என்கவி என்றே நெஞ்சம்மகிழ்ந்து ரசிக்கிறது
    எல்லாத் துயரும் என்தோள் ஏற்று ரகசியமாக விசிக்கிறது
    எல்லா உயிரும் நானே என்று வாழ்ந்திட நெஞ்சு பதைக்கிறது
    நில்லாதோடும் காலம் மட்டும் நினைத்து நினைத்து நகைக்கிறது!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர் – 32

    சுபாஷிணி ட்ரெம்மல்

    மலாயா இந்தோனேசிய நாடுகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல்லாண்டுகளாகப் பல காலகட்டங்களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது நிகழ்ந்துள்ளது.

    சீனர்களின் வர்த்தக ஈடுபாடு அவர்கள் உலக உருண்டையின் பல பகுதிகளுக்குச் செல்ல உந்துதலாக அமைந்தது. மலாயா தீபகற்பத்திற்குச் சீனர்களின் குடியேற்றம் என்பது பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. சீனாவின் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனும், உழைத்துப் பொருள் சேர்க்கும் நோக்கத்துடனும் இப்பகுதிகளுக்குப் புதிய வாழ்வை தேடி வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில், அதிலும் குறிப்பாக 15ம் நூற்றாண்டு தொடக்கம் மலாக்கா சிங்கை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறியோர் தனித் தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.

    மலேசியாவைப் பொருத்தவரை சீனர்களில் பெரும்பாலானோர் ஹொக்கியான் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இதற்கு அடுத்தார்போல அமைவது தியோச்சூ, கண்டனீஸ் இனக்குழு மக்கள்.

    ​மலேசியா சிங்கை ஆகிய இருநாடுகளும் இரு தனி நாடுகள் என்ற போதும் ​சிங்கப்பூர் ​மலாயா மக்களால் அன்றும் மலேசிய மக்களால் இன்றும் பிரித்துப் பார்க்க முடியாத வகையிலேயே இணைந்தே காணப்படும் நிலை உள்ளது. ஒரு வகையில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே 1965ம் ஆண்டு வரை கருதப்பட்டது. மலாயா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் இடம்பெறுவது தொடர்ந்து, அதன் பின்னர் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுபட்டு 1963ம் ஆண்டு சுதந்திர மலேசியாவுடன் ​சிங்கப்பூர் ​இணைந்தாலும் இந்த நிலை நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை பிரகட​ன​ப்படுத்திக் கொண்டது சிங்கப்பூர். மலேசிய மக்கள் போலவே சிங்கையின் மக்கள் தொகையில் மலாய், சீன, இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று நான் அறிமுகம் செய்யும் அருங்காட்சியகம் ​பெரானாக்கன் என அறியப்படும் ​ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ள ​ ​ஓர் அருங்காட்சியகம்.

    பெரானாக்கன் அருங்காட்சியகம்
    பெரானாக்கன் அருங்காட்சியகம்

    சிங்கையில் அமைந்திருக்கும் இந்த பெரானாக்கன் அருங்காட்சியகம் பெரானாக்கான் எனப்படும் பாபா-ஞோஞ்ஞா (baba-Nyonya) மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகம். இது சிங்கை நகரி ​ன் மையத்தில் முக்கியப் பகுதியில் அதிலும் குறிப்பாக சிங்கை நேஷனல் அருங்காட்சியகம், ஆர்க்கைவ் ஆகியவை உள்ள​ பகுதியில் அமைந்திருக்கின்றது. ​வெளிப்புரத்தில் காலணித்துவ ஆட்சியின் கட்டிட கட்டுமான வடிவத்தை கொண்டு அமைந்திருக்கும் இக்கட்டிடம் உள்ளே ​ கண்ணைக் கவரும் வர்ணங்களில் ஆன அலங்கார​ங்களையும் அரும்பொருட்களின் சேகரிப்புக்களையும் கொண்டுள்ளது. ​ இந்த அருங்காட்சியகம் அடிப்படையில் 1912ம் ஆண்டு தாவ் நான் சீன ​ப்​ பள்ளியை மாற்றி உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் சிங்கை சென்றிருந்த சமயம் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

    பாபா என்பது இவ்வினத்து ஆண்களைக் குறிக்கவும், ஞோஞ்ஞா என்பது இவ்வினத்துப் பெண்களைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ள சொல். சீன ஹொக்கியன் சமூகத்தைச் சேர்ந்த இம்மக்கள் தாம் புதிதாக வந்து குடியேறிய மலாயாவில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் மொழி, பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் உள்ளூரில் ​திருமணம் புரிந்து கொண்டும் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து போனவர்கள். இம்மக்களின் முகச் சாயலில் மலாய் சீன இரு ​சமூகங்களின் ​இனக்கலப்பும் மிக நன்கு தெரியும். பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தவர்கள் இவர்கள்.

    ​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்
    ​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்

    ​ஆச்சரியப்படத்தக்க வகையில் ​இவர்கள் சீனர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஹொக்கியான் சமூகத்து சீனர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு புதிய சமூகமாக உருவானவர்கள் என்பதே இவர்களின் தனிச்சிறப்பு.

    சீன மொழியில் ஒன்றான ஹொக்கியான் மொழியின் சொற்கள் கலந்த மலாய் மொழியின் ஒரு வடிவம் இவர்கள் பேசும் மொழி. இம்மொழி இப்போது பயன்பாட்டில் மிகக் குறைந்து வருகின்ற போதிலும் இன்னமும் இல்லங்களில் பெரானாக்கான் சமூக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றது.

    உணவுப் பாத்திரங்கள்
    உணவுப் பாத்திரங்கள்

    மலேசியாவின் மலாக்கா மானிலத்தி​ன் ​மலாக்கா நகரில் பெரானாக்கன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. ​அங்கும் இவ்வகை சமூகத்தினர் ஏராளமானோர் இன்றளவும் வாழ்கின்றனர். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைவிட பெரியதாக உள்ளது சிங்கையில் இருக்கும் இந்த பெரானாக்கான் அருங்காட்சியகம். இங்கு பாபா-ஞோஞ்ஞா சமூகத்தினரின் புகைப்படங்கள் சில உள்ளன. திருமணச் சடங்குகளைக் காட்டும் புகைப்படங்கள், சமூக நிகழ்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆகியனவாக இவை அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பாக ஆண் பெண் உடைகள், திருமண உடைகள், விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் என இங்குள்ள சேகரிப்புக்கள் இம்மக்களின் உருவத்தோற்றம், உடையலங்காரம் ஆகியனவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

    தொடரும்…

    Share
  • நாம் எண்ணி நிற்கின்றோம்!

    எம். ஜெயராமசர்மாமெல்பேண்

    சிம்மக் குரலோனே                                       sivaji-ganesancourt
    சினிமாவை ஆண்டவனே
    சிவாஜியே நீஇல்லா
    சினிமாவும் அழுகிறது!

    நீ சிரித்தால் நாம்சிரித்தோம்
    நீ அழுதால் நாமழுதோம்
    நீ இன்றிச் சினிமாவை
    நினைக்கவே முடியவில்லை!

    நடிப்புலகாய் இருந்தாயே
    நல்லபடம் தந்தாயே
    நாடி நரம்பு எல்லாம்
    நடித்தனவே உன்னிடத்தில்!

    நடந்தாலும் நடிப்புத்தான்
    கிடந்தாலும் நடிப்புத்தான்
    நாட்டிலுள்ளோர் அனைவரையும்
    நடிப்பாலே பிடித்துவைத்தாய்!

    உன்நாவில் தமிழன்னை                                            sivaji-ganesan-s-karnan-movie-stills--a6547319
    உட்கார்ந்து இருந்ததனால்
    உயிர்த்துடிப்பாய் வசனங்கள்
    உள்ளின்று வந்தனவே!

    நீபேசும் தமிழ்கேட்டு
    நீதிபதி திகைத்தாரே!
    பராசக்திவசமனாய்
    பாசமலர்ஆகிவிட்டாய்!

    அப்பராய் வந்தாய்
    ஆண்டவன் ஆகிவந்தாய்
    அன்ரனியாய் வந்தாய்
    அசடனாயும் வந்தாயே!

    தங்கப் பதக்கமானாய்
    தடியெடுத்தும் சண்டைசெய்தாய்               sivaji2
    வில்லனாய் வந்துநின்றாய்
    விதம்விதமாய் நடித்தாயே!

    நவரசத்தைக் காட்டியே
    நடிகருள் திலமானாய்!
    நாட்டியமும் ஆடிநின்று
    நடராஜ வடிவமானாய்!

    பானா வரிசையிலே
    பலபடங்கள் தந்தாயே!
    பார்த்தவர்கள் எல்லோரும்
    பரவசத்தில் நின்றாரே!

    உன்நடிப்பைத் தொட்டுவிட
    ஒருவருமே வரவில்லை!
    உயரத்தில் இருக்கின்றாய்
    உனைநினைந்து நிற்கின்றோம்!

    கப்பலை ஓட்டினாய்
    கட்ட பொம்மன்
    ஆகி நின்றாய்!
    தொப்பை நீபோட்டாலும்
    சுவையாக நடித்தாயே!

    எப்பநீ வந்தாலும்
    இங்கிதமா யிருக்குமங்கே!
    தப்பாமல் நடிப்பாயே
    தமிழ்நடிகன் நீயன்றோ!!

    காலத்தால் அழியாத
    காவியங்கள் பலதந்தாய்
    கண்ணாலே நடித்துஎமை
    கட்டிநீ போட்டாயே!

    நாளைவரும் நடிகருக்கு
    நல்லதொரு நூலானாய்!
    நாளெலாம் உன்நடிப்பை
    நாமெண்ணி நிற்கின்றோம்!

     

    Share
  • குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

    கவிஞர் காவிரி மைந்தன்

    வந்த கோபம் வடிந்துமுடிவதற்குள் வாழ்க்கையில் பாதி தொலைந்து போகிறது என்று முன்பொரு நாள் நான் எழுதியது நினைவலைகளில்!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

    கணவன் – மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குழந்தைகளின் மனதை எப்படி பாதிக்கின்றது என்பதை திரைப்படம் அன்றே எடுத்துச் சொல்லியிருக்கிறது! குறிப்பாக இந்தப் பாடல் கவிஞர் கண்ணதாசனின் வரையோவியம்!

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுsuseela
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
    நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
    ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
    நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
    ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

    இவர்களுக்கெல்லாம் ஞானம் எப்படி வந்திருக்கிறது பாருங்கள்.. பல நூறு பக்கங்களில் எழுதிவைத்தாலும் அடங்கிடாத பிரச்சினைகளுக்கு ஒரு சில வரிகளிலேயே தீர்வு எழுதிவைத்ததுபோல இருக்கிற பாடல்! சொல்லப்போனால் இல்லற வாய்ப்பாடு இதுவென்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதையும் குழந்தையின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பது இன்னும் அருமை!

    பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது kaviri
    பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப்
    பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது – அந்தப்
    பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
    வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
    வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு
    வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது – அங்கு
    வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

    கருப்பு வெள்ளையில் வெளியான திரைச்சித்திரத்தில் குட்டி பத்மினி.. தோன்றும் காட்சி.. வெள்ளையாய் இருந்த குழந்தை மனது வயதாக ஆக.. நிறம் மாறுகிறது! குழந்தை மனதில் குடியிருந்த தெய்வம் பிறகு அந்த இடத்தைவிட்டு விலகுகின்றது என்னும் நிதர்சனங்கள் பாடல்வாயிலாக நம் நெஞ்சங்களைத் தொடும்போது உண்மை சுடுகிறதல்லவா?

    கோபம்.. வந்த கோபம் வடிந்துமுடிவதற்குள் வாழ்க்கையில் பாதி தொலைந்து போகிறது என்று முன்பொரு நாள் நான் எழுதியது நினைவலைகளில்! இந்த கோபத்தின் விளைவுகள் பெரும்பாலும் நன்மை பயப்பதில்லை! மாறாக.. மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு என பல்வேறு நிலைகளுக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றது! இதையெல்லாம் உணர்ந்து வாழத் தெரிந்துவிட்டால்.. இன்பமயமாகிவிடும் வாழ்க்கை!

    உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
    உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – நம்
    உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது – நம்
    உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
    காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது – பேசிக்
    கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது – பேசிக்
    கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

    பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
    பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப்
    பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் – அந்தப்
    பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
    கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
    கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும்
    கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் – என்றும்
    கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
    நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
    ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
    குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
    குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

    பாடல்: குழந்தையும் தெய்வமும்
    திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
    பாடியவர் . பி. சுசீலா
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1965

    Share
  • நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

    பவள சங்கரி

    சமீபத்தில் இலண்டனிலிருந்து வரும் ’இலக்கியப் பூக்கள்’ என்ற அகில வானொலியில் ஒலிபரப்பான எனது சிறு படைப்பு.

    நிலையான மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?

    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எத்தனையோ இலட்சியங்களும் குறிக்கோளும் கொண்டிருந்தாலும், அனைவருக்கும் பொதுவான ஒரு விசயம், நாம் அனைவரும் ஒரே எல்லையை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதுதான். அதுதான் மகிழ்ச்சி, இன்பம், சந்தோஷம், அமைதி இப்படி பல பெயர்கள் கொண்ட அந்த ஒரே விசயம். ஒருவர் எத்தனைதான் சாதனைகள் புரிந்தாலும், மகிழ்ச்சி என்ற ஒன்று கிட்டாத வரை அதில் எந்த பலனும் இல்லை அல்லவா? இந்த மகிழ்ச்சி எதனால் அதிகம் வருகிறது? அல்லது எப்போது நிலைத்து நிற்கிறது, இது எல்லோருக்குமே எழக்கூடிய ஒரு வினாதானே?

    பெரும் பணக்காரராக, அதாவது கோடிக்கணக்கான சொத்து உள்ளவராக இருந்தால் எல்லையில்லா மகிழ்ச்சி வருமோ?

    ஓரளவிற்கு, அதாவது ஒரு டிகிரி என்று வைத்துக் கொள்ளலாம். சரி தேவையான துணிமணிகளும், பொருட்களும் வாங்கிமுடித்தவுடன் பிறகு சிறிது சிறிதாக மகிழ்ச்சி குறைந்து சலிப்பு தோன்ற ஆரம்பிக்கும். சமீப காலங்களில் சராசரி வருமான விகிதம் கணிசமாக ஏறித்தான் இருக்கிறது. ஆனால் அதனால் மகிழ்ச்சி பெருகியுள்ளது என்றுகூற முடியாது. பணம் ஒரு அளவிற்கும் மேல் சேர்ந்து விட்டால், பிறகு அது மகிழ்ச்சி கொடுக்கக்கூடிய காலம் எப்போதென்றால், தன் நண்பனை விடவோ, தன் பக்கத்து வீட்டுக்காரரைவிடவோ அல்லது நெருங்கிய உறவினரைவிடவோ அதிகமாக இருக்கும் வேளையில் மட்டுமே சிறிது மகிழ்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கும்.

    பணம் மனிதரின் தரத்தை உயர்த்துகிறது. தரம் உயர்ந்தால், மற்றவரின் கவனம் ஈர்க்கப்படுகிறது. அப்போது ஓரளவிற்கு மகிழ்ச்சியளிக்கிறது.ஆனாலும் மத்திய வர்க்கத்திலுள்ளவர்களைவிட மேல்மட்டத்தில் உள்ளவர்கள் குறைந்த மகிழ்ச்சியுடையவர்களாகவே காணப்படுகிறார்கள் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

    விருப்பு அதிகமானால் மகிழ்ச்சி அதிகமாகுமா?

    சில ஆண்டுகளுக்கு முன்பு, அலெக்ஸ் மெகேலோஸ் என்ற விஞ்ஞானி பல நாடுகளிலிருந்தும் 18,000 கல்லூரி மாணவர்களை தேர்வு செய்து அவர்களிடம், மகிழ்ச்சி குறித்து ஆய்வு செய்தார். அவர் ஆய்வின் முடிவில், அவர்களின் விருப்பம் பணம் தேடல் பற்றியதாக இல்லாமல், நட்பு, குடும்பம், வேலை, ஆரோக்கியம், தொழில் போன்றவைகளின் முன்னேற்றம் குறித்ததாகவே இருந்தது. அதாவது போதும் என்ற மனம் இருப்பதில்லை. தேடல் தொடர்ந்து கொண்டே இருப்பதனால், மகிழ்ச்சி இருப்பதில்லை.

    அதி புத்திசாலித்தனம் மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

    மிகுந்த அறிவாளிகளாக இருப்பவர்கள் அதிக எதிர்ப்பார்ப்பு உடையவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே சாதாரண சாதனைகளவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதாவது அவர்களின் சாதனைகள் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்வதைவிட, மேலும் பெரிய சாதனைகள் செய்ய வேண்டுமென்ற வெறியை ஏற்படுத்தி, மகிழ்ச்சியைத் தடை செய்துவிடுகிறது.

    பிறவியிலேயே வரும் ஒரு குணமா…..இந்த மகிழ்ச்சி என்பது?
    இது ஓரளவிற்கு உண்மையாம். அதாவது, மரபணு வழியாக இந்த மகிழ்ச்சி, தன்னிறைவு வரும் வாய்ப்பு இருக்கிறதாம். அதாவது, தாய் தந்தை வழியாகவும், அவர்கள் வளர்ப்பு முறையிலும் மகிழ்ச்சியான வாழ்க்கை சாத்தியப்படுகிறது. சலிப்போ, சங்கடமோ மகிழ்ச்சியோ எதுவாகினும், பரம்பரைப் பழக்கமும் துணை போகிறது. பெற்றோர் எவ்வழியோ, குழந்தைகள் அவ்வழி இல்லையா?

    ‘அழகு ’ மகிழ்ச்சிக்கான ஒரு முக்கியமான காரணமா?

    அழகாக இருப்பவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதற்கு, ஆச்சரியமான பதில் ஆம் என்பது. பொதுவாக ஆரோக்கியமான அழகு உடையவர்கள் மகிழ்ச்சி உடையவர்களாகவே உள்ளனர் என்கிறது சில ஆய்வறிக்கைகள். இதில் இன்னொரு ஆச்சரியம், மனதில் தான் அழகாக இருப்பதாக எண்ணம் கொண்டவர்களாக இருந்தால் கூட போதுமாம், மகிழ்ச்சியுடையவர்களாக இருப்பதற்கு. பொதுவாக பெண்கள் பெரும்பாலும் தாங்கள் குண்டாக இருப்பதாகவும், ஆண்கள் உயரம் குறைவாகவும், கட்டான உடலமைப்பு இல்லையே என்று எண்ணி வருந்துகிறார்களாம்.

    நல்ல நட்பு மகிழ்ச்சியைக் கொடுக்குமா ?

    சமூக உறவுகள் மனித வாழ்க்கையின் அடிப்படை மகிழ்ச்சிக்கு சிறந்த ஊக்குவிப்பாக இருப்பதுதான் நிதர்சனம். நல்ல நட்பு வட்டம் உடையவர்களும், கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்களும், உறவுகளுடன் சார்ந்து வாழும் தன்மையுடையவர்களும் பெரும்பாலும் மகிழ்ச்சியுடையவர்களாகவே இருக்கிறார்கள்.

    திருமணம் மகிழ்ச்சியான வாழ்க்கையின் ஆதாரமா?

    42 நாடுகளில் செய்த ஆய்வின் அடிப்படையில், அமெரிக்க ஆய்வாளர்கள், நல்ல திருமண வாழ்க்கை அமைந்த ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரும் அடிப்படையான மகிழ்ச்சி உடையவர்களாகவே இருக்கிறார்களாம். தனிமனிதனாக இருப்பவர்களைவிட, திருமணம் ஆகி நல்ல குடும்பத்துடன் வாழ்பவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறார்கள்.

    நம்பிக்கை – மகிழ்ச்சியைக் கொடுக்குமா?

    ஹெரால்ட் கோயிங் என்கிற அமெரிக்க மனோதத்துவ நிபுணர், மறுபிறவி நம்பிக்கை உடையவர்கள் வாழ்க்கையில் அதிகமாக தனிமையை உணர்வதில்லை என்கிறார். ஒருவகையில் கார்ல் மார்க்ஸின் தத்துவங்கள் இதனோடு ஒத்துப் போகிறது. மன அழுத்தமான சூழலில் இந்த ஆன்மீக நம்பிக்கை ஒரு தனிப்பட்ட சக்தியை வழங்குவதாக பல தத்துவ ஞானிகளும் சொல்கின்றனர். நம் அனுபவத்திலும் நம்மால் அதை உணர முடிகிறது. மத நம்பிக்கை பல எதிர் விளைவுகளுக்கு ஒரு நிவாரணியாகவே செயல்படுகிறது. ஆழ்ந்த ஆன்மீக நம்பிக்கை கொண்டோரின் ஆயுள் விருத்தியாவதற்கும் இதுவே காரணமாகிறது. மன அமைதியும், நம்பிக்கையும் ஒருவரை மகிழ்ச்சியான சூழலில் வைத்திருக்க உதவி புரிகிறது.

    தயாள குணம் மகிழ்ச்சியை அதிகப்படுத்துமா?

    ஆம் என்கிறது நம் சைவ சித்தாந்தமும், கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மத தத்துவங்களும். தயாள குணம் உடனடி மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒரு ஆயுதம் என்கிறது மனோத்தத்துவ ஆய்வுகள். இது கொடுப்பவர்களுக்கும், பெறுபவர்களுக்கும் ஆக இரு சாராருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய விசயமாகும். இதற்கு சரியான சான்று மகாபாரதப் போரில் கர்ணன் தன் இறுதி நேரத்தில் கூட தன் தர்ம புண்ணியங்கள் அனைத்தையும் தாரை வார்த்துக் கொடுத்து மகிழ்ச்சி அடையும் உன்னத நிலையாகும்.

    வயது முதிர்ச்சியால் மகிழ்ச்சி கூடுமா குறையுமா?

    முதுமை அவ்வளவு கொடுமை அல்ல. ஆம் முதுமையில் தான் தன்னிறைவு அடைகிறதாம் மனது. காரணம் முதியவர்கள் வாழ்க்கையின் கடினமாகப் பகுதியையே அதிகமாக எதிர்பார்த்து இருப்பதனால், பிரச்சனைகள் அவர்களின் மகிழ்ச்சியைப் பாதிப்பதில்லை என்கிறது ஆய்வுகள். அனுபவம் காரணமாக தங்களின் இயல்பை உணர்ந்து வைத்திருப்பதாலும், தங்களுக்கு சாத்தியமாகக் கூடிய விசயங்களிலேயே நாட்டம் செலுத்துவதாலும் அவர்களின் மகிழ்ச்சிக்கு பங்கம் வருவதில்லை. அதாவது சுருங்கச் சொன்னால், 85 வயது பெரியவர் தன் மனைவிக்குக் கொடுக்கும் பிரியாவிடை முத்தம் ஏற்படுத்துகிற உணர்வுப்பூர்வமான பின்விளைவுகள் ஒரு 20 வயது இளைஞன் தன் மனைவிக்குக் கொடுக்கும் முத்தம் ஏற்படுத்துவதில்லை என்கிறது ஆய்வுகள்!!

    ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில் தான் உள்ளது என்பது தெளிவாகிறதல்லவா?

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி 24

    கே.ரவி

    இந்த அளவு எனக்குக் கவிதைவெறி வரக் காரணம் என்ன? அது என்ன விட்ட குறை, தொட்ட குறையோ!

    முன்னொரு பிறவியில் நான் தேரழுந்தூரில் ஒரு புலவன் வீட்டில் கட்டுத்தறியாக முக்கி முனகிக் கொண்டிருந்தேனோ? இல்லை, அதற்கும் முன்பு ஒரு புலவன் தன் முழவுத் தொழிலை விட்டுவிட்டு, உழவுத் தொழிலை மேற்கொண்டதால், புறக்கணிக்கப் பட்ட பறையாக எனக்குள்ளேயே படபடவென்று ஒரு மூலையில் கிடந்து நெஞ்சு துடித்துக் கொண்டிருந்தேனோ? இல்லை, மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலுமாய் ஒருத்தி விட்டெறிந்த ஒற்றைச் சிலம்பிலிருந்து தெறித்துப் பாண்டியன் அரண்மனைத் தரையில் உருண்டோடிய நினைவைச் சுமந்து கொண்டு அவளைச் சொல்லில் வடித்த துறவியின் நெஞ்சில் மாணிக்கப் பரலாய் பதிந்திருந்தேனோ? ஏன், ஏறக்குறைய நூறாண்டுகளுக்கு முன்பு, குடக்கூலி கூடக் கொடுக்க முடியாமல் ஒண்டுக் குடித்தனத்தில் ஒண்டிக் கிடந்தும், அண்டங்களையெல்லாம் ஒரே நொடியில் சுற்றிவர ஆவேசக் கவிஞன் செய்துகொண்ட ரதத்தின் ஒரு சக்கரமாகச் சுழன்று கொண்டிருந்தேனோ? யாருக்குத் தெரியும்!

    அவளுக்குத் தெரியும். என்னை ஆக்கி, எனக்குள் ஊழிக் கனல் எழுப்பி, ஊதி ஊதி வளர்த்து அதில் தாண்டவம் ஆடுகிற பிச்சிக்குத் தெரியும். சொல்லுவாளா அவள்? சண்டித்தனம் செய்யும் சாகசக்காரி சொல்லுவாளா? பாட்டுப் பாடிக் கேட்டேனே. சந்தச் சதங்கை ஒலிக்கச் சதா ஆடிக்கொண்டே இருக்கும் அந்த பைரவியைச் சிந்து பைரவி ராகத்தில் பாடிக் கேட்டேனே:

    நீல வானமாய் விரிகிறாய் – என்

    நெஞ்சிலே இசை பொழிகிறாய்

    கால காலமாய் நீயும் நானுமாய்

    ஆடினோம் பல நாடகம் – நாம்

    அணிந்த வேடங்கள் ஆயிரம்

    காளி தாசனின் நாவில் எழுதிய அட்சரம் உனது மந்திரம்

    கம்ப நாடனின் கவியெ லாமுன் காற்ச தங்கையின் நர்த்தனம்

    மேள மாயிடி மின்ன லாயொளி மேடை தந்தனன் பாரதி – அண்டக்

    கோல மாகியே பாடல் யாவையும் கொள்ளை கொண்டனை பைரவி

    நீல வானமாய் விரிகிறாய்

    தத்து வங்களில் ஒளிகிறாய் – தர்க்கம்

    செய்யும் போதுநீ நெளிகிறாய்

    பித்த னாகநான் பேசும் போதுசிறு பிள்ளை யாகவந் தமர்கிறாய்

    சித்தர் பாடலில் சிரிக்கி றாய்ப்பின் ஷெல்லி கவிதையில் ஜொலிக்கிறாய்

    ஷேக்ஸ்பியர் கீட்ஸ் மாயா கெளஸ்கியெனத் தோழர் சூழநீ நடக்கிறாய்

    கால காலமாய் நீயும் நானுமாய்

    ஆடினோம் பல நாடகம் – நாம்

    அணிந்த வேடங்கள் ஆயிரம்

    தாயிலாமலே குழந்தையா – உன்

    தயவிலாமல் ஒரு கவிதையா

    தழலும் தென்றலும் நிழலும் வெய்யிலும்

    கலந்து நிற்பதுன் சாயலே

    நீயி லாமலிதழ் பாடுமா – சுடு

    தீயி லாமல் சுடர் கூடுமா

    சிறிய வன்மனம் திரி யதில்தினம்

    தீபம் ஏற்றுதிரி சூலியே

    சிகாமணி ஏதோ சொல்ல வாயெடுக்கிறான். வார்த்தை வராமல் அவன் வாய் குழறுகிறது. மனோன்மணி எங்கே? ஒரு மின்னல் இழை வான் நடுவே சுழன்று, சுழன்று ஆடிக் கொண்டிருக்கும் அதிசயக் காட்சி மட்டும் தெரிகிறது. ‘அரோரா போரியாலிஸ்’ என்றெல்லாம் கானடா நாட்டில் போய்ப் பார்த்து வியப்பார்களே, அது போல்! அந்த இழையில் கலந்து மனோன்மணியும் ஆடுகிறாளோ?

    இப்படி நான் பாடிக் கேட்டுப் பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் அவள் பதில் சொல்லவில்லையே! ஆடிக் கறக்கவோ, பாடிக் கறக்கவோ மாடில்லை அவள். வாசிக்கலாம் என்றால் ஏடில்லை அவள். வசிக்கலாம் என்றால், வீடில்லை அவள். பிறகு யாரவள்?

    புன்னகை யோசின்ன பூவிதழோ – ஒளி

    பொங்கித் ததும்பும் வெண்ணிலவோ

    கண்வழி யேநுழைந்(து) என்னுயிரை – மெல்லக்

    கவர்ந்திழுக் கும்,எழில் காரிகையோ

    காலையி லேதங்கத் தேரினிலே – வரும்

    கனகதுர்க் காபர மேஸ்வரியோ

    மாலையி லேமலர்ச் சோலையென – உரு

    மாறும் மாயா மோகினியோ

    புவியினி லேஉயிர்க் குலம்தழைக்கப் – பசும்

    பாய்விரிக் கும்,அருள் தாய்மடியோ

    வியனுல காய்விதை மூலமுமாய் – நித்தம்

    விரிந்துகொண் டேவரும் விழிச்சுடரோ

    கவிதையி லேசிறு கால்பதித்துக் – கொஞ்சம்

    களிநடம் செய்யும் பேரழகோ

    த்யானத்தி லேயெழும் தழல்வடிவோ – அது

    அவனோ அவளோ வேறெதுவோ

    த்யானத்திலே எழும் தழல்வடிவோ! எனக்கெதிரே, எதிரே இல்லை, உள்ளே, ஆம், எதிரும் புதிருமாய், உள்ளும் புறமுமாய், மூண்டெழுந்து சிரிக்கிறது ஒரு மூலத் தழல்வடிவம். ஒன்றென்றா சொன்னேன்? இரண்டோ, இல்லை இரண்டு போல் தோன்றும் ஒன்றோ? உற்றுப் பார்த்தால் அதற்குள், இல்லை, அதுவாய், நானே தெரிகிறேனா? நானா, இல்லை அவனா, அவளா, அதுவா?

    சிகாமணி ஓரிழையாய், மனோன்மணி மற்றோர் இழையாய் ஒன்றிக் கலந்த அர்த்தநாரியாய், இல்லை, அர்த்த ஆடைகளைக் களைந்து எறிந்துவிட்டு அம்மணமாய் ஆடும் ஆவேசமாய் . . . என்ன குழப்பம்?

    மேலே எத்தனை முறை ‘இல்லை’, ‘இல்லை’ என்று மறுத்துச் சொல்லியிருக்கிறேன் என்று எண்ணிப் பாருங்கள். இந்தத் திண்டாட்டத்தைத்தான் “நேத்தி நேத்தி” என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிஷி கூவினானோ?

    என் மூச்சை ஒரு நிலைக்குக் கொண்டு வருகிறேன்.

    ‘அப்பா, புலம்பாதே. நீ என்னதான் சொல்கிறாய். புரியும் படிச்சொல்.’

    உங்களில் யாரோ கேட்பது என் செவியை எட்டுகிறது. சொல்வதற்கு என்ன இருக்கிறது? சோர்வு மேலிட மெளனத்தில் ஆழ்கிறேன்.

    முதல் தரிசனம், அதாவது, “தெளிவுறவே அறிந்திடுதல்” என்ற பாரதி பாட்டைக் கவிமாமணி தேவநாராயணன் பாடக் கேட்டு நான் உருகினேன் இல்லையா, அதற்குப் பின் என் கவிதையின் போக்கு மாறியது. அப்படிச் சொல்வதைவிட, கவிதை பற்றிய என் நோக்கு மாறியது என்று சொல்வதே மேலும் பொருத்தமாக இருக்கும். நான் கவிதை எழுதுகிறேன் என்ற நினைப்புப் போய், கவிதையே என்மூலம் தன்னை எழுதிக் கொள்வதுபோல் உணரத் தொடங்கினேன். இப்படிச் சொல்வது பகுத்தறிவுக்கு ஒத்து வராததாகத் தோன்றலாம். அந்தச் சமயத்தில்தான் தத்துவக் கதவு திறந்தது.

    unnamed

    புகுமுக வகுப்பு முடிந்து பி.ஏ. சேர வேண்டும். அதிலும் ஒரு போராட்டம். ஒரே சமயத்தில் ஆங்கில இலக்கியத் துறையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரியிலும், தத்துவத் துறையில் மயிலை விவேகானந்தா கல்லூரியிலும் எனக்கு இடம் கிடைத்தது. நேராக, விவேகானந்தா கல்லூரி தத்துவத் துறைக்குச் சென்று, அப்போது துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் த.ந.கணபதி அவர்களிடம் இந்தப் பிரதாபத்தைப் பற்றி அளந்து விட்டு, இலக்கியத் துறைக் கடிதத்தை அவர் முன்னிலையிலேயே கிழித்து விட்டுத் தத்துவத் துறையில் சேர்ந்தேன். அப்போது நினைத்தேன், சொன்னேனா என்று நினைவு இல்லை, ‘இலக்கியம் எப்படியும் படித்துக் கொள்ள முடியும், அதனால் பி.ஏ. ஃபிலாஸஃபி சேர்வதே சரி.’ என்ன ஆணவம்!

    unnamed (1)அப்புறம்தான் தத்துவ மேதைகளின் படைப்புகளைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கிரேக்க நாட்டில் வாழ்ந்த தாலீஸ், ஹிராக்லிட்டோஸ், சோக்ரட்டீஸ், ப்லேடோ, அரிஸ்டாட்டுல் போன்ற சிந்தனையாளர்கள் தொடங்கி, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த டேகார்ட், ஸ்பினோட்ஸா, லைப்னீட்ஸ், லாக், பார்க்லீ, ஹ்யூம் போன்ற மேலை நாட்டுத் தத்துவ ஞானிகளின் நூல்களைப் படித்தேன். அப்போதுதான் பதினெட்டாம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த இம்மானுவல் கண்ட் என்ற தத்துவ மேதையின் சிந்தனைகள் என்னை ஆட்கொண்டன. ‘தூய அறிவு பற்றிய ஆய்வு’ என்ற தலைப்பில் அவன் ஜெர்மானிய மொழியில் படைத்திருந்த நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு, ‘க்ரிடிக் ஆஃப் ப்யூர் ரீஸன்’ என்னை மிகவும் பாதித்தது. அந்த நூலைத் தந்து என்னை ஆற்றுப் படுத்திய பேராசிரியர் கணபதிக்கு நான் என்றும் நன்றிக் கடன் பட்டவனாகிறேன். அந்த நூலில் இம்மானுவல் கண்ட் பகுத்தறிவின் எல்லைக் கோடுகளை வரைந்து காட்டியிருந்தான். அந்தக் கோட்டுக்குள் மட்டுமே பகுத்தறிவு செல்லுபடியாகும் என்பதையும், அந்தக் கோட்டுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் உள்ளன என்பதையும் தெளிவாக விளக்கியிருந்தான். “அறிவினால் ஆகுவ துண்டோ” என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் கேட்ட கேள்வியின் அர்த்தம் அப்போதுதான் எனக்கு விளங்கியது. சங்கரரின் அத்வைதக் கொள்கை என்னை அதற்கு முன்பே ஈர்த்திருந்தாலும், அது வெறும் மாயா வாதமாகவே தோன்றிய தப்பெண்ணத்தை மாற்றி அதன் யதார்த்தத்தை நான் உணரக் கண்ட்டின் நூல்தான் உதவியது.

    இலக்கியத்தை நான் விட்டாலும் அது என்னை விடுவதாகத் தெரியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில்தான் பாரதியின் பாட்டு மூலம் எனக்கு முதல் தரிசனம் கிடைத்தது. கண்ட் வரைந்து காட்டிய கோட்டை அலட்சியம் செய்துவிட்டு கோட்டுக்கு உள்ளும் புறமும் போய்வரக் கூடிய ஆற்றல் கவிதைக்கு உண்டு என்பதை உணரத் தொடங்கினேன். அந்தப் போக்குவரத்தின் அனுபவத்தில் தத்துவத் தாக்கம் அல்லது தத்துவத் தாகம் இழையோடும் கவிதைகள் வரப்பெற்றேன்.

    சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருக்கிறேன்

    (என்) சிந்தனைக் கனலில் (நானே) வெந்துகொண் டிருக்கிறேன்

    முழுதும் எரிந்து முடிந்த பின்னர்

    சாம்பலை எடுத்துச் சலித்துப் பாருங்கள்

    காதல் கிடைக்கும் கவிதைகள் கிடைக்கலாம்

    கருகிப் போன லட்சியங்கள் கண்ணில் படலாம்

    (என்) அஸ்தியைக் கரைக்க ஆறுகள் வேண்டாம்

    என்னைப் போலவே எங்கோ ஒருவன்

    சிந்தனைக் கனலில் வெந்துகொண் டிருப்பான்

    அவனுக் காவது அழது தீருங்கள் – அந்தக்

    கண்ணீர்க் கடலில் கரைந்து போகிறேன்

    இருபது வயது கூட ஆகாத ஒரு வாலிபன் எழுதிய பாடலா இது!

    ஏன், கீட்ஸ் மிக இளம் வயதில் கனமான கவிதைகள் எழுதவில்லையா? ஓ, சிகாமணி வந்து விட்டான், கேள்வி கேட்க. என்ன பதில் சொல்லப் போகிறேன்?

    (தொடரும்)

    Share
  • சாம்பார் சாதம்

    -சேசாத்ரி பாஸ்கர்

    அப்போது எனக்குச் சுமார் பதினைந்து வயது இருக்கலாம். வறுமை சூழ்ந்த காலம். பள்ளி செல்வதற்கு ஒரு அரைக்கை வெள்ளை சட்டை; ஒட்டுப்போட்ட காக்கி நிஜார். அந்தத் துணி என்னிடம் இருந்த நாட்களை விடத் தையல்காரனிடம் அதிகமாக இருந்தது; எங்கெல்லாமோ கிழிசல். போன வருஷம் யாரோ படித்த புத்தகம் இந்த வருஷம் என் கையில். புதுப் புத்தகத்தில் என் பெயர் போட்ட நினைவே இல்லை. இந்தச் சோகத்தை இன்று என்னால் தாங்க முடியாது. அன்று சிறு வயதில் அது உள்ளே போகவில்லையோ என நினைக்கிறேன். அப்போது அதுதான் முதிர்ச்சியா என வியக்கிறேன். படிப்பும் பெரிசாக இல்லை. சிவாஜியை நினைத்தே காலம் போய்விட்டது.

    வறுமையே என்னை எல்லோரிடமும் பிரித்து விட்டது. எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அப்படியே சேர்ந்தாலும் அது அற்ப ஆயுசு. ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பது போல் என்றோ மதிப்பார்கள். அது அவர்களின் இளகின நேரமாகத்தான் இருக்க வேண்டும். அப்போதே மதிய உணவு பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவசம். என் பெயரைச் சேர்க்க சொல்லி விட்டார்கள். கூச்சம் என்னையே விழுங்கும். என்னோடு ஒரு பையன் மட்டும் உணவு அருந்துவான். அவனுக்கு எல்லோரும் துச்சம் போலும். என்னைப்போல் ஒரு மனப்பான்மை இல்லை. அதாவது கிட்டத்தட்ட ஒரு தாழ்வு மனப்பாங்கு போல். மதிய உணவு சாப்பிடுவது ஒரு அவமானமான செயலாக மனம் இருந்ததே ஒரு அறியா நிலை. அந்த வயதில் அது நியாயம் எனத் தேற்றிகொள்ளலாம்.

    வருஷ ஆரம்பத்தில் மதிய உணவு அட்டையை எடுத்துக்கொண்டு சிப்பந்தி வந்து ஆசிரியிரிடம் கொடுத்து அதைப்பெற்றுக் கொள்கையில் வேதனை கவ்வும். உலகமே என்னைப் பார்ப்பது போல் ஒரு அவஸ்தை. கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் மனம். அதையெல்லாம் தாண்டிச் சாப்பிட்டு இருக்கிறேன். வறுமைதான் மனிதனைச் செம்மைபடுத்துகிறதோ எனக்கூடத் தோன்றும்.

    ’இளமையில் வறுமை கொடிது’ என அனுபவிக்காமலா சொல்லிருப்பபார்கள்? சென்ற வாரம் பாபா கோவிலில் சாம்பார் சாதம் சாப்பிட்டபோது மனத்தில் அதே சாம்பார் சாதம் நினைவு. வாழ்க வறுமை…குறைந்த பட்சம் என்னிடம்! அது தான் என்னை இயக்குகிறது.

    Share
  • தீராமல் எரிகின்ற தீ – பாடல்

    –பி.எஸ்.டி.பிரசாத்.

    Nithyshree

    கீழ்காணும் ஷீரடி சாய்பாபா மீதான பாடல், சமீபத்தில் வெளியான எனது முதல் ஆடியோ சி.டி. யில் இடம்பெற்றுள்ளது.

    இந்தப் பாடலை மதிப்பிற்குரிய நித்யஸ்ரீ அவர்கள் பாடி பெருமை சேர்த்துள்ளார்கள்.

    பாடலை மெட்டமைத்து, இனிமையான இசை சேர்ப்பு செய்துள்ளவர் திரு.குருபாத் அவர்கள்.

    பாடலைக் கேட்க: https://soundcloud.com/psdp1/theeramal-erigindra

     

    பாடல் வரிகள்:

    தீராமல் எரிகின்ற துனி என்னும் தீயாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !
    தீராத நோய் தீர்க்க நமக்கருளும் உதியாம் !

    தீன தயாளனாம் சாயி ! தீன தயாளனாம் சாயி !
    தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி ! தீர்க்கமாய்த் தெரிகின்ற ஜோதி !

    (தீராமல்)

    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !
    தித்திக்கும் தீ…தீ….தீவினை எரிக்கும் தீ ! தீ !

    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !
    எத்திக்கும் பரவும் ஓம்சாயி பக்தி !

    (தீராமல்)

    திருமூர்த்தி பாதி ! திருமாலும் பாதி !
    குருசாயி சக்தி ! பாடவரும் சித்தி !

    (தீராமல்)

    ஆனந்தத் தீ ! ஆராதனைத் தீ !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !
    ஆரத்தி பார்க்க ஆகும் மனம் சாந்தி !

    (தீராமல்)

    பி.எஸ்.டி.பிரசாத்.

     

     

     

     

     

     
    வலைத்தளம்: http://psdprasad-tamil.blogspot.com

     

     

     

     

    படம் உதவிக்கு நன்றி: http://tamil.oneindia.in/art-culture/essays/2012/nithyasri-perform-cincinnati-aid0136.html

    Share
  • கீசகன் வதம்

    –தஞ்சை வெ.கோபாலன்.

    பாரத புண்ணிய பூமியின் தலைசிறந்த இதிகாசங்களுள் மகாபாரதம் ஒன்று. அதில் பாண்டவர்களின் மூத்தவன் யுதிஷ்டிரன் சகுனியோடு சூதாடி தோற்றதன் விளைவாக ஓராண்டு காலம் அக்ஞாத வாசம் அதாவது தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமறைவாக இருத்தல் வேண்டுமென விதிக்கப்பட்ட நிபந்தனைக்கு உட்பட்டு மறைந்திருந்த காலம். தாங்கள் யார் கண்ணிலும் படாமல் ஒரு வருஷ காலத்தை ஓட்ட வேண்டுமானால் அதற்குத் தக்க இடம் விராட மன்னன் ஆண்ட மத்சிய நாடு என்பதை முடிவு செய்தார்கள். அவர்கள் அந்த ஊரினுள் நுழையுமுன் ஊருக்கு வெளியே இருந்த ஒரு வன்னிமரப் பொந்தில் தங்களுடைய ஆயுதங்களையெல்லாம் மறைத்து வைத்துவிட்டுத் தனித்தனியாகப் பிரிந்து போய் நகரத்தினுள் நுழைந்தார்கள். தங்கள் முயற்சி வெற்றி பெற வேண்டுமென்று யுதிஷ்டிரன் துர்க்கையிடம் வேண்டிக் கொண்டான்.

    விராட ராஜாவிடம் சென்று யுதிஷ்டிரன் தன்னை கனகன் எனும் பெயர் கொண்ட ஒரு பிராமண பண்டிதன் என்று சொல்லிக் கொண்டு பகடை ஆட்டத்திலும் வல்லவன் என்று சொல்லி அரசனின் தோழனாகச் சேர்ந்து கொண்டான். பீமன் தன்னை வல்லாளன் என்று சொல்லிக் கொண்டு, மல்யுத்தமும் செய்வேன் என்று சொல்லி விராட ராஜாவின் அரண்மனையில் சமையல் செய்பவனாகச் சேர்ந்தான். அர்ஜுனன் பெண் வேடமணிந்து கொண்டு சற்று ஆண்மை வெளிக்காட்ட தன் பெயர் பிரஹன்னளை என்றும் தான் ஒரு பேடு எனத் தெரிவித்து அந்தப்புரத்தில் வேலைக்கு அமர்ந்தான். நகுலனோ தமக்ரந்தி எனும் பெயரோடு அரண்மனை குதிரை லாயத்தில் குதிரைகளைப் பழக்கும் பணியில் ஈடுபட்டான். சகாதேவனோ தந்திரிபாலன் எனும் பெயரோடு மாட்டுத் தொழுவத்தில் பணியாற்றத் தொடங்கினான்.

    இப்படி பாண்டவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் விராட மன்னனிடம் வெவ்வேறு பணிகளில் அமர்ந்து கொண்ட அதே நேரத்தில் விராட நகரத்து வீதிகளில் ஒரு வேலைக்காரி போல பாஞ்சாலி நடந்து செல்கிறாள். வேலைக்காரி என்பதை ‘சைரந்திரி’ என்று தன்னைக் கூறிக் கொண்ட பாஞ்சாலி அதற்கேற்ப கிழிந்த உடைகளை அணிந்திருந்தாள். பேரழகியான திரெளபதி என்னதான் கந்தை உடைக்குள் தன்னை மறைத்துக் கொண்டாலும் அழகு வெளிப்படாமல் போகுமா? தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அவள் மீது கவனம் செலுத்தினார்கள். அரண்மனை மேல்தட்டில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ராணி சுதேசனா என்பாள் கண்களில் இந்த சைரந்திரி தென்பட்டாள். அவள் நிலைமையைக் கண்டு மனமிரங்கி அவளை அழைத்துவரச் செய்து அவள் வரலாற்றைக் கேட்டாள். அதற்கு சைரந்திரி சொன்னாள், “மகாராணி! எனக்கு ஐந்து கந்தர்வர்கள் கணவன்களாக இருக்கிறார்கள். ஒரு சாபத்தின் காரணமாக ஒரு வருஷ காலம் நான் அவர்களிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும். இந்த ஒரு வருஷ காலம் முடிந்ததும் அவர்கள் என்னை வந்து அழைத்துச் செல்வார்கள். அதுவரை எனக்கு அடைக்கலம் தாருங்கள். நான் தங்களுக்கு மலர்மாலைகள் தொடுத்தும், அழகுபடுத்தியும் தோழியாக இருந்து பணிவிடை செய்வேன்” என்றாள்.

    ராணி சுதேசனா உடனே ஒப்புக்கொண்டாலும், இவளது அழகு தொல்லை கொடுத்தால் என்ன செய்வது என்று யோசனை செய்தாள். அவளது சந்தேகத்தை சைரந்திரியிடமே கேட்டாள் ராணி. அதற்கு அவள் சொன்னாள், “தாயே! நான் தங்களுடனேயே தங்கிக்கொள்கிறேன். பிரிந்து சென்றாலல்லவோ தொல்லை. இருந்தாலும் எனது கந்தர்வக் கணவர்கள் எனக்கு எப்போதும் காவலாக இருந்து காப்பாற்றுவார்கள். முறைதவறி யாரேனும் நடக்க முயன்றால், அவர்களை என் கணவன்மார்கள் கொன்றுவிடுவார்கள், ஆகையால் அஞ்ச வேண்டாம்” என்றாள். ராணியின் பரிபூரண சம்மதத்தோடு சைரந்திரி அங்கேயே ராணியின் தோழியாகத் தங்கிக் கொண்டாள்.

    விராட நாடு, அற்புதமான வளம் மிகுந்த நாடு. அங்கு எப்போதும் திருவிழாக்கள் நடந்து கொண்டிருக்கும். மகாசிவராத்திரி அங்கு விமரிசையாகக் கொண்டாடப்படும். பத்து நாட்கள் நடைபெறும் சிவராத்திரி விழாவில் பல போட்டிகள் நடக்கும். அவற்றில் மற்போரும் ஒன்று. பல தேசங்களில் இருந்தெல்லாம் மல்லர்கள் வந்து அங்கு குவிந்தனர். அந்த ஆண்டில் நடந்த மற்போரில் வேற்று நாடு ஒன்றிலிருந்து வந்திருந்த மல்லன் ஒருவன் எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்றதோடு தன்னை எதிர்க்க எவரும் இல்லையென்று முழக்கம் செய்து கொண்டிருந்தான். மன்னருக்கு இந்தச் செய்தி மனவருத்தத்தைக் கொடுத்தது. அயலானான இவனை எதிர்த்து மல் யுத்தம் செய்ய நம் நாட்டில் எவரும் இல்லையா? என வருந்தினான். அப்போது கனகன் எனும் பெயரில் மன்னனிடம் நண்பனாக விளங்கிய யுதிஷ்டிரன் சொல்கிறார், “மன்னா! கவலை வேண்டாம். தங்கள் அரண்மனை மடைப்பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் சமையற்காரன் வல்லாளன் சிறப்பாக மற்போர் புரிவதை நான் பார்த்திருக்கிறேன். அவனை இந்த வேற்று நாட்டானோடு போட்டியிட்டு வேற்றி பெறச் செய்யலாம், அவன் நிச்சயம் வெல்வான்” என்றார்.

    அரசர் உடனே வல்லாளனை அழைத்தார். அவனை புதிய மற்போர் வீரனை எதிர்த்து மற்போர் புரிய முடியுமா என்றார். வல்லாளன் ஒப்புக்கொண்டான். அங்ஙனமே வல்லாளன் புதியவனை எதிர்த்துக் களம் இறங்கினான். இரண்டு யானைகள் மோதிக்கொண்டது போல இருவரும் மோதிக் கொண்டனர். எடுத்த எடுப்பில் வல்லாளன் தன் திறமைகளை வெளிக்காட்டவில்லை. மெல்ல மெல்ல அவன் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தான். ஆணவத்தோடு புதியவன் போரிடத் துவங்கும் சமயம் வல்லாளன் தன் திறமையை எடுத்து விட்டான். கூட்டம் ஆர்ப்பரிக்க புதியவன் மண்ணைக் கவ்வ, வல்லாளன் வெற்றி வீரனாக மார்பில் முஷ்டியால் குத்திக் கொண்டு தன் வெற்றியைக் கொண்டாடினான்.

    விராட தேசத்து ராணி சுதேசனாவுக்கு ஒரு தம்பி இருந்தான். அவன் பெயர் கீசகன். பயங்கரமான பலசாலி அவன். அந்த நாட்டுப் படைத்தலைவன், அதோடு அரசரின் மைத்துனன் என்கிற திமிர் உண்டு அவனுக்கு. பாண்டவர்களின் அக்ஞாத வாசம் பத்து மாதங்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கு ஒரு சோதனை உண்டானது கீசகன் வடிவத்தில். ஒரு நாள் அவன் தன் சகோதரியின் அந்தப்புரத்துக்குச் சென்றான். அங்கு ராணிக்கு உதவி புரிந்து கொண்டிருந்த தோழி சைரந்திரியைப் பார்த்து விட்டான். அவளுடைய அழகில் மயங்கி அந்தப் பணிப்பெண்ணைத் தன்னிடம் ஒப்படைக்கும்படி சகோதரி சுதேசனாவிடம் கேட்டான். அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் பிடிவாதமாக அந்த வேலைக்காரிதான் வேண்டுமென்று கீசகன் அடம் பிடித்தான். அவளுடைய கணவன்மார்கள் தீங்கு செய்வார்கள் எனும் எச்சரிக்கை செய்தும் அவன் கேட்பதாயில்லை.

    வேறு வழியறியாத ராணி தன் சேடியான சைரந்திரியை கீசகன் மாளிகைக்குச் சென்று சிறிது மதுபானம் எடுத்து வரும்படி கட்டளையிட்டாள். மறுத்துப் பேசமுடியாத சைரந்திரி எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாள், தனக்குப் பதிலாக வேறு யாரையாவது அனுப்பும்படி, ராணி கேட்கவில்லை, பிடிவாதமாக அவளையே போகச்சொன்னாள். கீசகன் கொடுத்த அழுத்தம் அல்லவா? வேறு வழியில்லை. இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுத் தன் கணவன்மார்கள் மீதிருந்த நம்பிக்கையில் தாம் எப்படியும் காப்பாற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் சைரந்திரி கீசகன் அரண்மனைக்குச் சென்றாள்.

    Raja_Ravi_Varma,_Keechaka_and_Sairandhri,_Oleograph_wiki pictureதான் விரும்பிய பெண் தன் அரண்மனைக்குள் வருவது கண்டதும் இன்ப உணர்வு மேலிட கீசகன் தன்னை மறந்து அவளைக் கட்டி அணைக்க முயன்றான். மிக நளினமாக அவன் பிடியிலிருந்து தப்பினாள் சைரந்திரி. ஓடி அரண்மனையின் சபைக்கு நடுவே சென்று உதவி கேட்டு அலறினாள். அப்போது அங்கு குழுமியிருந்த விராட ராஜா உட்பட அனைவரும் பயத்தில் உறைந்து போயிருந்தனர். கீசகனைக் கண்டு அவர்களுக்கெல்லாம் அத்தனை பயம். அருகிலிருந்த யுதிஷ்டிரரும், பீமனும் கூட தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாளாவிருந்தனர். பீமன் கட்டுப்பாட்டை இழந்து பொறுமை இழக்கும் நிலைக்கு வந்தது கண்டு அருகிலிருந்த யுதிஷ்டிரர் அவனை சமையற்கட்டில் விறகு பிளக்க வேண்டுமாம் போ என்று அனுப்பி வைத்தார்.

    எப்படியும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள நினைத்த சைரந்திரி சமையற்கூடத்தில் பீமனை ரகசியமாகச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்ற வேண்டினாள். சூழ்நிலைகளை நன்கு ஆராய்ந்து பீமன் சைரந்திரியிடம் சொன்னான், “கீசகன் ஆசைக்கு இணங்குவது போல பாசாங்கு செய்து, நள்ளிரவில் தனித்து வந்து உன்னை சந்திக்கும்படி சொல். நான் அங்கு மறைந்திருந்து மற்றவைகளை கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.

    வலாளனாக இருந்த பீமன் சொன்ன ஏற்பாட்டின்படி திரெளபதி எனும் சைரந்திரி நடந்து கொண்டாள். அவள் சம்மதத்தைக் கேட்டு கீசகன் மட்டற்ற இன்ப அதிர்ச்சி அடைந்தான். இரவை எண்ணி தவமிருந்தான். இரவும் வந்தது. சைரந்திரி சொன்ன நாட்டியசாலைக்குள் எதிர்பார்ப்புகளோடும், இன்பக் கனவுகளோடும் நுழைந்தான். உள்ளே மங்கிய வெளிச்சம். அருகில் கட்டிலில் ஒரு உருவம் போர்வையால் மூடிக்கொண்டு படுத்திருந்ததைப் பார்த்தான் கீசகன். அவன் இதயம் மிக வேகமாக படபடவென்று அடித்துக் கொண்டது. உடலெங்கும் இன்ப உணர்பு பரவியது. கட்டிலுக்கருகில் சென்றான், மெல்ல போர்வையால் மூடிய தேகத்தைத் தொட்டான், அந்த உருவம் அசைந்தது, எழுந்தது பலம் மிகுந்த ஒரு ஆண் கீசகனோடு போரிடத் தொடங்கினான்.

    இருவரும் பலமாக மோதிக் கொண்டார்கள். ஒருவன் உள்ளம் காம இச்சையால் களி கொண்டிருந்தது. மற்றொருவன் உள்ளமோ பழிவாங்கும் உணர்வில் ரத்தப்பசி கொண்டு போராடியது. கையில் கிடைத்த கீசகனை மாவு பிசைவது போல பிசைந்து கொன்றான் வல்லாளன். பிறகு சென்று குளிர்ந்த நீரில் நீராடிவிட்டு உடலெங்கும் சந்தனம் பூசிக் கொண்டு படுத்து நன்கு உறங்கினான்.

    பொழுது விடிந்தது. ஊரெங்கும் செய்தி பரவியது. காம வெறி பிடித்த கீசகனை ஏதோ கந்தர்வர்கள் வந்து பிசைந்து கொன்றுவிட்டார்கள் என்று. விராட ராஜாவும், ராணி சுதேசனாவும், நாட்டு மக்களும், அரண்மனையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஐந்து ஜீவன்களைத் தவிர அனைவருமே கீசகனை கந்தர்வர்கள் வந்து கொன்றுவிட்டார்கள் என்று நம்பினார்கள். பாண்டவர்களும் எஞ்சியிருந்த ஒரு மாத காலத்தை அஞ்சாத வாசமிருந்து முடித்துக் கொண்டார்கள். கீசகன் வதம் மகாபாரதத்தில் வரும் ஒரு சுவையான கதை.

    படம் உதவிக்கு நன்றி: விக்கிபீடியா

    Share
  • காவேரி

    தஞ்சை வெ.கோபாலன்.

    cauvery mapதஞ்சை மாவட்டத்துக்கு உயிர் கொடுப்பது காவேரி ஆறு. பாரத நாட்டுப் புராதன நதிகளில் ஒன்று காவேரி. பெண்கள் பெயரால் அழைக்கப்படும் நம் நாட்டு நதிகளில் கங்கையைப் போன்று புனிதமுடையது காவேரி. பல காப்பியங்களின் உயிரோட்டமாக இருந்திருப்பது காவேரி. இன்றைய அரசியலில் காவேரி பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. காவேரி நதி வரண்டு போனால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறுவது உறுதி. அப்படிப்பட்ட ஜீவனுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்களுடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த காவேரி நதியைப் பற்றி சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    தென் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியை யொட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு நாட்டில் தலைக்காவேரி எனுமிடத்தில் உற்பத்தியாவது காவேரி. இந்தப் பகுதி கர்நாடக மாநிலத்து எல்லையில் கேரளத்தை யொட்டி அமைந்திருக்கிறது. குடகில் உற்பத்தியாகும் இந்த நதி, கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து, தமிழகத்தில் ஹொகனக்கல் எனுமிடத்தில் நுழைந்து சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை எனப் பாய்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

    காவிரி நதியோடு வந்து இணையும் பல உபநதிகள் உண்டு. அவற்றில் குறிப்பாக ஹேமாவதி, அமராவதி, கபினி, பவானி, நொய்யல் ஆகிய ஆறுகளை முக்கியமாகச் சொல்லலாம். காவேரி நதியால் பயன் அனுபவிக்கும் மாநிலங்களின் பகுதிகள் நான்கு. அவை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவை. இது கர்நாடகாவில் சிவசமுத்திரம் எனுமிடத்திலும், தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் ஹொகனகல் எனுமிடத்திலும் அருவியாகக் கொட்டி மனங்களை மகிழ வைக்கிறது. இதில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி சுமார் 320 அடி உயரத்திலிருந்து கொட்டுகின்ற அழகை நன்கு ரசிக்கலாம். ஹொகனக்கல் நீர்வீழ்ச்சி அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடம்.

    காவிரி நதி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது தவிர டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்கு முக்கியமாகப் பயன்படுகின்றது. இந்த காவேரி நதிக்குப் புராண கதைகளின் படி பல்வேறு செய்திகள் சொல்லப்படுகின்றன. பிரம்மனின் புதல்வி லோபாமுத்திரை எனப்படுபவர். இவர் அகத்திய முனியின் பத்தினி என்று சொல்லப் படுகிறது. இந்த புராண வரலாற்றையொட்டி திருவையாறு அறம்வளர்த்தநாயகியின் புகழ்பாடும் “தர்மாம்பாள் குறம்” எனும் நாட்டுப்புற இலக்கியமும் பேசப்படுகிறது. தமிழில் கா என்றால் சோலை, விரி என்றால் இந்த ஆறு ஓடுமிடங்களில் இருபுறமும் பசுமையான சோலைகளை வளர்த்துக் கொண்டு போவதால் இதனை காவிரி என்றனர் என்று விளக்கம் கூறப் படுகின்றது.

    குடகில் இந்த நதி உற்பத்தியாகுமிடம் ஒரு குளம் போன்ற பகுதியில் ஒரு மூலையில் சிறு கிணறு போல் அமைந்த காவிரிமாதா சந்நிதிக்கு எதிரில் ஒரு ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து பாதாளம் வழியாகப் பாய்ந்து செல்கிறது. நீராக ஓடிவரும் காவேரி சிவசமுத்திரம் எனுமிடத்தில் மின் உற்பத்தியாகி பெங்களூர் நகரத்தை ஒளிமயமாக்குகிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒரு தீவாக ஆக்கி அங்கு பள்ளி கொண்ட ரங்கநாதரை வழிபட்டு ஓடிவருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவேரி ஓடிவரும் பாதையெல்லாம் விவசாயத்துக்கு மட்டுமல்ல மக்களுக்குக் குடிக்கவும் குடிநீரைத் தந்து கொண்டு ஓடிவருகிறது. கிராமங்கள் மட்டுமல்லாமல் மண்டியா, மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் காவேரியின் குடிநீர் கிடைக்கிறது. இந்த நாட்டில் பல நதிகள் ஜீவ நதிகளாம். காவேரியும் ஜீவநதி என்கிறார்கள். தஞ்சை டெல்டா பிரதேசத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் காவேரி ஜீவநதியா என்று.

    கர்நாடகம் முடிந்த மட்டும் காவிரியின் பயன்பாட்டை அனுபவித்தபின், தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அது நுழையும் பகுதி தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம். அங்கு நதி நுழையுமிடம்தான் ஹொகனக்கல். காவேரி சேலம் மாவட்டத்துள் நுழையும்போது மேட்டூரில் ஸ்டான்லி ரிசர்வாயர் என அழைக்கப்படும் மேட்டூர் அணையில் நீரைத் தேக்கி தேவைப்படும் போது அளவோடு நீரை திறந்து காவிரி பாசன டெல்டா பகுதிகள் பயனடையும் விதமாகக் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தண்ணீர் தேக்கப்படுவதோடு, மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.

    மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவேரி ஈரோடு பகுதிக்கு வரும்போது அகண்ட காவேரியாக பெருகி வளர்ந்து வரும் கம்பீரம் பார்த்து ரசிக்கத்தக்கது. அங்கு பவானி நதி காவிரியோடு சேர்ந்து கொள்கிறது. பவானி நதி காவேரியில் வந்து சேரும் இடத்தில் பவானி எனும் ஊரில் கூடுதுறை என்று போற்றி அந்த சங்கத்தில் மக்கள் புனித நீராடுகின்றனர். திருமணி முத்தாறு, நொய்யல் ஆறுகளும் காவிரியில் வந்து கலக்கிறது. கரூரை அடுத்த நெரூரில் ஆம்பிராவதி என்று பெரியபுராணம் குறிப்பிடும் அமராவதி நதி காவிரியில் வந்து கலக்கிறது. ஈரோடு, கொடுமுடி, ஊஞ்சலூர், மாயனூர் என்று பல ஊர்களைக் கடந்து வந்து அங்காங்கே சில தடுப்பணைகளைத் தாண்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை வந்து அடைகிறது.

    மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்ற காவிரி நதி ஊஞ்சலூர் கொடுமுடி அருகில் வடக்கு தெற்காக சிறிது தூரம் ஓடுகிறது. அப்படி ஓடுகின்ற நதி புனிதமானது என்று மக்கள் அங்கு நீராடுவது வழக்கம். ஈரோடு தொடங்கி திருச்சிராப்பள்ளி வரும் வரை காவிரி அகண்ட காவேரியாகக் காணப்படுகிறாள். மாயனூரில் காவிரியிலிருந்து நீர்ப்பாசனத்துக்காக கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு விவசாயத்துக்குக் கொண்டு செல்லப் படுகிறது. கட்டளை மேல்கரை வாய்க்கால், கீழ்கரை வாய்க்கால் என இவை அழைக்கப்படுகின்றன.

    குளித்தலை தாண்டி காவிரி மேலணை எனப்படும் இடம் வந்ததும் அங்கொரு தடுப்பணையில் காவிரி இரண்டாகப் பிரிகிறது. இந்த இடம் திருச்சிக்கும் மேற்கில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கு காவிரி இரண்டாகப் பிரிகிறது அல்லவா, அதன் வடக்குப் பகுதி ஆற்றுக்கு கொள்ளிடம் என்றும், தென்பகுதி ஆற்றுக்கு காவேரி என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். மேலணையில் பிரியும் காவேரி திருவரங்கப் பெருநகரம் வந்ததும் மீண்டும் ஒன்று சேருகின்றன. இந்த இடைப்பட்ட பகுதி ஒரு தீவாகக் காணப்படும். இங்குதான் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.

    குடகில் காவேரி உற்பத்தியாகி வரும் வழியில் அதனோடு இணைந்து கொள்ளும் உபநதிகளாவன, ஹைமாவதி, ஷிம்ஷா, ஆர்க்காவதி, கபினி, ஹாரங்கி, பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை.

    திருச்சிக்கு அருகில் ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே ஓடும் காவிரியாற்றில் கரிகால் சோழன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அணையைக் கட்டி காவிரி நீர்ப்பாசனத்துக்கு வழிவகுத்தான். கல்லணையிலிருந்து கிழக்கே காவேரி காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வரை புனிதமான அம்மனாகக் காவேரி போற்றப் படுகிறாள். காவிரியிலிருந்து கல்லணை திறக்கப்பட்டு தண்ணீர் விடப்படும்போது வழி நெடுக மக்கள், காவேரி அம்மனை வழிபட்டு வெற்றிலை தேங்காய் பூ இவற்றை வைத்து வணங்கி கற்பூரம் காட்டி ஆற்று மணலில் இறங்கி நமஸ்கரித்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் காவிரி புனிதநதி என்பதால் அதன் மணலில் காலில் செருப்போடு கூட நடக்க மாட்டார்கள். காவிரி நதியின் கரைகளில் ரிவிட்மெண்ட் எனும் சுவர் எழுப்பி உடைப்பு எடுக்காமலும், தண்ணீர் வீணாகாமலும் பாதுகாத்து சிறு சிறு ஓடைகள் வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்குக் கொண்டு சென்று விவசாயத் தொழில் புரிந்தனர்.

    கல்லணையில் பிரியும் கொள்ளிடம் வடகிழக்கு திசையாக ஓடி பரங்கிப் பேட்டைக்கு தெற்கே தேவிபட்டணம் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த கொள்ளிடம் கும்பகோணத்துக்கு வடக்கே வரும்போது அங்கு கீழணை எனும் ஒரு அணையில் நீரைத் தேக்கி அங்கிருந்து மண்ணியாறு, உப்பனாறு போன்ற ஆறுகளாகப் பிரிந்து கிழக்குப் பகுதி விவசாயத்துக்குப் பயன்படுகின்றன.

    கல்லணையைத் தாண்டியதும் காவிரி பிள்ளைக்குட்டிக்காரியாக ஆகிவிடுகிறாள். ஏராளமான கிளை நதிகள் இங்கிருந்து பிரிந்து பல பகுதிகளுக்கும் விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகின்றது. வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, திருமலைராயனாறு, வீரசோழனாறு இப்படிப் பலப்பல. போதாதற்கு கல்லணைக் கால்வாய் என்று செயற்கையாக வெட்டி பாசனத்துக்காக பட்டுக்கோட்டை போன்ற மேட்டுப் பகுதிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டிருக்கிறது.

    குடகில் உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக ஓடி, கடைசியில் மாயூரம் எனும் ஊரைத் தாண்டியவுடன் சின்னஞ்சிறு வாய்க்காலாக மாறி, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறாள் காவேரி.

    [மறுபதிவு: நன்றி…”தி தமிழ் இந்து”  ‘ஆடிமலர்’]

    படம் உதவிக்கு நன்றி: http://pagalavantamil.blogspot.com/2009/12/blog-post_984.html

    Share
  • திருமால் திருப்புகழ் (150)

     

     கிரேசி மோகன்

     

    பெருமாள் திருப்புகழ்….
    —————————————–
    ’’கண்ணன் திருப்புகழ்’’(விருத்தம்)
    ————————————————————
    தூங்க வருகவே
    ——————————-

    Bhagavatha - Markandeya's Vision of Maya - Keshav
    Bhagavatha – Markandeya’s Vision of Maya – Keshav

     

    காளிக்கு அண்ணன் கார்முகில் வண்ணன்crazy
    காளிங்க நர்த்தனம் ஆடிக் களைத்தவன்
    கோளரி மாதவன் கோவிந்தன் என்வீட்டுத்
    தூளியில் ஆடித் தூங்க வருகவே….(1)

    வானிடை சூரியன் காய்கின்ற வேளையில்
    ஆநிரை காத்து மேய்த்துக் களைத்தவன்
    தூணிடை சிங்கன் எந்தன் துரும்பு
    மேனியில் ஒளிந்து தூங்க வருகவே….(2)

    பாரதப் போரில் பார்த்தனின் தேரை
    சாரத்யம் செய்து சோர்ந்துக் களைத்தவன்
    நாரத மாமுனி நாவிருப்போன் என்
    மாரதில் புரண்டு தூங்க வருகவே….(3)

    மாணிக்கக் குறளன் மாவலி ஈன்ற
    காணிக்கை ஏற்றுக் கால்களை நீட்டி
    வானுக்குத் தாவி களைத்தவன் எந்தன்
    ஊனுக்குள் கலந்து தூங்க வருகவே….(4)

    மாம்பழக் கதுப்பு மருங்கில் கட்டிய
    தாம்புக் கயிறால் உரலை இழுத்து
    கூம்பிய ஆம்பலாய்க் களைத்தவன் ஐம்புலப்
    பாம்பை அடக்கத் தூங்க வருகவே….(5)

     

    படங்களுக்கு நன்றி: கேஷவ்

    கிரேசி மோகன்

     

     

    Share
  • கலிகால கரிகாலன்

    கிரேசி மோகன்

    ”கிரேசி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’’ நாடகத்தில் என் பெயர் ர.மோகன் என்றுதான் அறிவிக்கப்படும்….அந்த சமயத்தில்(1975 என்று நினைவு) ஆனந்த விகடன் ஆசிரியர் வீயெஸ்வி ஒரு குட்டி நாடகம் எழுதித் தருமாறு கேட்டார்….முதன்முதலில் பத்திரிகையில் வந்த அடியேனின் சிறு நாடகம் ‘’கலிகால கரிகாலன்’’….நம் எழுத்து பத்திரிகையில் பார்க்கும் ஆர்வத்தில் அந்த வெள்ளிக்கிழமை கடைக்குச் சென்று ஆனந்த விகடன் வாங்கிப் பார்த்தால் அதில் ர(ர பாஃர் ரஙாச்சாரி)மோகன் கிரேசி மோகன் என்று போடப்பட்டிருந்தது….ஆக எனக்கு வீட்டுத் தாத்தா வைத்த பெயர் ர.மோகன்….விகடன் தாத்தா வைத்த பெயர் கிரேசி மோகன்….அடைமொழியை வார்த்துப் போட்டது ஆனந்த விகடன் ஆசிரியர் ‘’வீயெஸ்வி’’….என்னை கிரேசியாக்கிய இந்த சிறு நாடகம் பிற்காலத்தில் (80துகளில்) ‘’ஜூனியர் விகடனில்’’ அடியேன் ஆடிய ‘’கே.பி.டி சிரிப்பு ராஜன்’’ என்ற 5 நாள் மேட்ச்சுக்கு நெட்-ப்ராக்டீஸாக அமைந்தது….

    crazy1

    crazy2

    crazy3

    crazy4

    Share