-சேசாத்ரி பாஸ்கர்

அப்போது எனக்குச் சுமார் பதினைந்து வயது இருக்கலாம். வறுமை சூழ்ந்த காலம். பள்ளி செல்வதற்கு ஒரு அரைக்கை வெள்ளை சட்டை; ஒட்டுப்போட்ட காக்கி நிஜார். அந்தத் துணி என்னிடம் இருந்த நாட்களை விடத் தையல்காரனிடம் அதிகமாக இருந்தது; எங்கெல்லாமோ கிழிசல். போன வருஷம் யாரோ படித்த புத்தகம் இந்த வருஷம் என் கையில். புதுப் புத்தகத்தில் என் பெயர் போட்ட நினைவே இல்லை. இந்தச் சோகத்தை இன்று என்னால் தாங்க முடியாது. அன்று சிறு வயதில் அது உள்ளே போகவில்லையோ என நினைக்கிறேன். அப்போது அதுதான் முதிர்ச்சியா என வியக்கிறேன். படிப்பும் பெரிசாக இல்லை. சிவாஜியை நினைத்தே காலம் போய்விட்டது.

வறுமையே என்னை எல்லோரிடமும் பிரித்து விட்டது. எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அப்படியே சேர்ந்தாலும் அது அற்ப ஆயுசு. ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பது போல் என்றோ மதிப்பார்கள். அது அவர்களின் இளகின நேரமாகத்தான் இருக்க வேண்டும். அப்போதே மதிய உணவு பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு இலவசம். என் பெயரைச் சேர்க்க சொல்லி விட்டார்கள். கூச்சம் என்னையே விழுங்கும். என்னோடு ஒரு பையன் மட்டும் உணவு அருந்துவான். அவனுக்கு எல்லோரும் துச்சம் போலும். என்னைப்போல் ஒரு மனப்பான்மை இல்லை. அதாவது கிட்டத்தட்ட ஒரு தாழ்வு மனப்பாங்கு போல். மதிய உணவு சாப்பிடுவது ஒரு அவமானமான செயலாக மனம் இருந்ததே ஒரு அறியா நிலை. அந்த வயதில் அது நியாயம் எனத் தேற்றிகொள்ளலாம்.

வருஷ ஆரம்பத்தில் மதிய உணவு அட்டையை எடுத்துக்கொண்டு சிப்பந்தி வந்து ஆசிரியிரிடம் கொடுத்து அதைப்பெற்றுக் கொள்கையில் வேதனை கவ்வும். உலகமே என்னைப் பார்ப்பது போல் ஒரு அவஸ்தை. கிட்டத்தட்ட நிர்வாண நிலையில் மனம். அதையெல்லாம் தாண்டிச் சாப்பிட்டு இருக்கிறேன். வறுமைதான் மனிதனைச் செம்மைபடுத்துகிறதோ எனக்கூடத் தோன்றும்.

’இளமையில் வறுமை கொடிது’ என அனுபவிக்காமலா சொல்லிருப்பபார்கள்? சென்ற வாரம் பாபா கோவிலில் சாம்பார் சாதம் சாப்பிட்டபோது மனத்தில் அதே சாம்பார் சாதம் நினைவு. வாழ்க வறுமை…குறைந்த பட்சம் என்னிடம்! அது தான் என்னை இயக்குகிறது.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சாம்பார் சாதம்

  1. Dear Baskar,

    You are right. Ezhmai enRum nam manaththilum, sinthaiyilum irunthathE illai. Athu nam mail pakkuvap paduththi sethukki uruvAkki irukkiRathu. Antha sAmbAr sAthamE SAi prasAtham.
    JAI SAI RAM!

    Su.Ra

  2. உண்மை தான் அண்ணா . ஒரு வேளை இன்று நல்ல நிலையில் இருப்பதால் தான் இப்படி யோசிக்க முடிகிறது . இன்றும் அந்த கடைந்தெடுத்த வறுமை இருப்பின் இப்படி என்னால் எழுத முடியுமா ? பாரதிக்கு அது சத்யம் , சாத்தியம் . பாஸ்கருக்கு ? 

  3. அருமையான பதிவு பாஸ்கர். “நின்றைக்குச் சென்றக்கால் நீயெங்கே நானெங்கே இன்றைக்கே சற்றே இரு” என்று நல்குரவாகிய வறுமையை அருகில் அழைத்துப் பாடிய கம்பீரப் புலவர்கள் நம் முன்னோர்கள். சத்தியமும், சாத்யமும் பாரதிக்கும் பாஸ்கருக்கும் வேறுவேறில்லை. சங்கல்ப சக்திதான் வேறு. அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குச் செல்லம்மா கையைப் பிசைந்து கொண்டு நின்ற போது, “எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்!” என்று பாடிய திறனும், வெம்மைமிக்க வறுமையிலும் விநாயகனிடம் வேண்டும் போது, “கனக்கும் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே” என்று கேட்ட கம்பீரமும், “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேண்டும்” என்ற சங்கல்ப சக்தியால்தான் பாரதிக்குக் கைகூடியது. நாமும் பெறுவோமாக! நன்றி. கே.ரவி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *