தஞ்சை வெ.கோபாலன்.

cauvery mapதஞ்சை மாவட்டத்துக்கு உயிர் கொடுப்பது காவேரி ஆறு. பாரத நாட்டுப் புராதன நதிகளில் ஒன்று காவேரி. பெண்கள் பெயரால் அழைக்கப்படும் நம் நாட்டு நதிகளில் கங்கையைப் போன்று புனிதமுடையது காவேரி. பல காப்பியங்களின் உயிரோட்டமாக இருந்திருப்பது காவேரி. இன்றைய அரசியலில் காவேரி பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. காவேரி நதி வரண்டு போனால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறுவது உறுதி. அப்படிப்பட்ட ஜீவனுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்களுடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த காவேரி நதியைப் பற்றி சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

தென் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியை யொட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு நாட்டில் தலைக்காவேரி எனுமிடத்தில் உற்பத்தியாவது காவேரி. இந்தப் பகுதி கர்நாடக மாநிலத்து எல்லையில் கேரளத்தை யொட்டி அமைந்திருக்கிறது. குடகில் உற்பத்தியாகும் இந்த நதி, கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து, தமிழகத்தில் ஹொகனக்கல் எனுமிடத்தில் நுழைந்து சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை எனப் பாய்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

காவிரி நதியோடு வந்து இணையும் பல உபநதிகள் உண்டு. அவற்றில் குறிப்பாக ஹேமாவதி, அமராவதி, கபினி, பவானி, நொய்யல் ஆகிய ஆறுகளை முக்கியமாகச் சொல்லலாம். காவேரி நதியால் பயன் அனுபவிக்கும் மாநிலங்களின் பகுதிகள் நான்கு. அவை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவை. இது கர்நாடகாவில் சிவசமுத்திரம் எனுமிடத்திலும், தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் ஹொகனகல் எனுமிடத்திலும் அருவியாகக் கொட்டி மனங்களை மகிழ வைக்கிறது. இதில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி சுமார் 320 அடி உயரத்திலிருந்து கொட்டுகின்ற அழகை நன்கு ரசிக்கலாம். ஹொகனக்கல் நீர்வீழ்ச்சி அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடம்.

காவிரி நதி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது தவிர டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்கு முக்கியமாகப் பயன்படுகின்றது. இந்த காவேரி நதிக்குப் புராண கதைகளின் படி பல்வேறு செய்திகள் சொல்லப்படுகின்றன. பிரம்மனின் புதல்வி லோபாமுத்திரை எனப்படுபவர். இவர் அகத்திய முனியின் பத்தினி என்று சொல்லப் படுகிறது. இந்த புராண வரலாற்றையொட்டி திருவையாறு அறம்வளர்த்தநாயகியின் புகழ்பாடும் “தர்மாம்பாள் குறம்” எனும் நாட்டுப்புற இலக்கியமும் பேசப்படுகிறது. தமிழில் கா என்றால் சோலை, விரி என்றால் இந்த ஆறு ஓடுமிடங்களில் இருபுறமும் பசுமையான சோலைகளை வளர்த்துக் கொண்டு போவதால் இதனை காவிரி என்றனர் என்று விளக்கம் கூறப் படுகின்றது.

குடகில் இந்த நதி உற்பத்தியாகுமிடம் ஒரு குளம் போன்ற பகுதியில் ஒரு மூலையில் சிறு கிணறு போல் அமைந்த காவிரிமாதா சந்நிதிக்கு எதிரில் ஒரு ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து பாதாளம் வழியாகப் பாய்ந்து செல்கிறது. நீராக ஓடிவரும் காவேரி சிவசமுத்திரம் எனுமிடத்தில் மின் உற்பத்தியாகி பெங்களூர் நகரத்தை ஒளிமயமாக்குகிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒரு தீவாக ஆக்கி அங்கு பள்ளி கொண்ட ரங்கநாதரை வழிபட்டு ஓடிவருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவேரி ஓடிவரும் பாதையெல்லாம் விவசாயத்துக்கு மட்டுமல்ல மக்களுக்குக் குடிக்கவும் குடிநீரைத் தந்து கொண்டு ஓடிவருகிறது. கிராமங்கள் மட்டுமல்லாமல் மண்டியா, மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் காவேரியின் குடிநீர் கிடைக்கிறது. இந்த நாட்டில் பல நதிகள் ஜீவ நதிகளாம். காவேரியும் ஜீவநதி என்கிறார்கள். தஞ்சை டெல்டா பிரதேசத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் காவேரி ஜீவநதியா என்று.

கர்நாடகம் முடிந்த மட்டும் காவிரியின் பயன்பாட்டை அனுபவித்தபின், தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அது நுழையும் பகுதி தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம். அங்கு நதி நுழையுமிடம்தான் ஹொகனக்கல். காவேரி சேலம் மாவட்டத்துள் நுழையும்போது மேட்டூரில் ஸ்டான்லி ரிசர்வாயர் என அழைக்கப்படும் மேட்டூர் அணையில் நீரைத் தேக்கி தேவைப்படும் போது அளவோடு நீரை திறந்து காவிரி பாசன டெல்டா பகுதிகள் பயனடையும் விதமாகக் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தண்ணீர் தேக்கப்படுவதோடு, மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.

மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவேரி ஈரோடு பகுதிக்கு வரும்போது அகண்ட காவேரியாக பெருகி வளர்ந்து வரும் கம்பீரம் பார்த்து ரசிக்கத்தக்கது. அங்கு பவானி நதி காவிரியோடு சேர்ந்து கொள்கிறது. பவானி நதி காவேரியில் வந்து சேரும் இடத்தில் பவானி எனும் ஊரில் கூடுதுறை என்று போற்றி அந்த சங்கத்தில் மக்கள் புனித நீராடுகின்றனர். திருமணி முத்தாறு, நொய்யல் ஆறுகளும் காவிரியில் வந்து கலக்கிறது. கரூரை அடுத்த நெரூரில் ஆம்பிராவதி என்று பெரியபுராணம் குறிப்பிடும் அமராவதி நதி காவிரியில் வந்து கலக்கிறது. ஈரோடு, கொடுமுடி, ஊஞ்சலூர், மாயனூர் என்று பல ஊர்களைக் கடந்து வந்து அங்காங்கே சில தடுப்பணைகளைத் தாண்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை வந்து அடைகிறது.

மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்ற காவிரி நதி ஊஞ்சலூர் கொடுமுடி அருகில் வடக்கு தெற்காக சிறிது தூரம் ஓடுகிறது. அப்படி ஓடுகின்ற நதி புனிதமானது என்று மக்கள் அங்கு நீராடுவது வழக்கம். ஈரோடு தொடங்கி திருச்சிராப்பள்ளி வரும் வரை காவிரி அகண்ட காவேரியாகக் காணப்படுகிறாள். மாயனூரில் காவிரியிலிருந்து நீர்ப்பாசனத்துக்காக கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு விவசாயத்துக்குக் கொண்டு செல்லப் படுகிறது. கட்டளை மேல்கரை வாய்க்கால், கீழ்கரை வாய்க்கால் என இவை அழைக்கப்படுகின்றன.

குளித்தலை தாண்டி காவிரி மேலணை எனப்படும் இடம் வந்ததும் அங்கொரு தடுப்பணையில் காவிரி இரண்டாகப் பிரிகிறது. இந்த இடம் திருச்சிக்கும் மேற்கில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கு காவிரி இரண்டாகப் பிரிகிறது அல்லவா, அதன் வடக்குப் பகுதி ஆற்றுக்கு கொள்ளிடம் என்றும், தென்பகுதி ஆற்றுக்கு காவேரி என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். மேலணையில் பிரியும் காவேரி திருவரங்கப் பெருநகரம் வந்ததும் மீண்டும் ஒன்று சேருகின்றன. இந்த இடைப்பட்ட பகுதி ஒரு தீவாகக் காணப்படும். இங்குதான் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.

குடகில் காவேரி உற்பத்தியாகி வரும் வழியில் அதனோடு இணைந்து கொள்ளும் உபநதிகளாவன, ஹைமாவதி, ஷிம்ஷா, ஆர்க்காவதி, கபினி, ஹாரங்கி, பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை.

திருச்சிக்கு அருகில் ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே ஓடும் காவிரியாற்றில் கரிகால் சோழன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அணையைக் கட்டி காவிரி நீர்ப்பாசனத்துக்கு வழிவகுத்தான். கல்லணையிலிருந்து கிழக்கே காவேரி காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வரை புனிதமான அம்மனாகக் காவேரி போற்றப் படுகிறாள். காவிரியிலிருந்து கல்லணை திறக்கப்பட்டு தண்ணீர் விடப்படும்போது வழி நெடுக மக்கள், காவேரி அம்மனை வழிபட்டு வெற்றிலை தேங்காய் பூ இவற்றை வைத்து வணங்கி கற்பூரம் காட்டி ஆற்று மணலில் இறங்கி நமஸ்கரித்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் காவிரி புனிதநதி என்பதால் அதன் மணலில் காலில் செருப்போடு கூட நடக்க மாட்டார்கள். காவிரி நதியின் கரைகளில் ரிவிட்மெண்ட் எனும் சுவர் எழுப்பி உடைப்பு எடுக்காமலும், தண்ணீர் வீணாகாமலும் பாதுகாத்து சிறு சிறு ஓடைகள் வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்குக் கொண்டு சென்று விவசாயத் தொழில் புரிந்தனர்.

கல்லணையில் பிரியும் கொள்ளிடம் வடகிழக்கு திசையாக ஓடி பரங்கிப் பேட்டைக்கு தெற்கே தேவிபட்டணம் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த கொள்ளிடம் கும்பகோணத்துக்கு வடக்கே வரும்போது அங்கு கீழணை எனும் ஒரு அணையில் நீரைத் தேக்கி அங்கிருந்து மண்ணியாறு, உப்பனாறு போன்ற ஆறுகளாகப் பிரிந்து கிழக்குப் பகுதி விவசாயத்துக்குப் பயன்படுகின்றன.

கல்லணையைத் தாண்டியதும் காவிரி பிள்ளைக்குட்டிக்காரியாக ஆகிவிடுகிறாள். ஏராளமான கிளை நதிகள் இங்கிருந்து பிரிந்து பல பகுதிகளுக்கும் விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகின்றது. வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, திருமலைராயனாறு, வீரசோழனாறு இப்படிப் பலப்பல. போதாதற்கு கல்லணைக் கால்வாய் என்று செயற்கையாக வெட்டி பாசனத்துக்காக பட்டுக்கோட்டை போன்ற மேட்டுப் பகுதிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டிருக்கிறது.

குடகில் உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக ஓடி, கடைசியில் மாயூரம் எனும் ஊரைத் தாண்டியவுடன் சின்னஞ்சிறு வாய்க்காலாக மாறி, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறாள் காவேரி.

[மறுபதிவு: நன்றி…”தி தமிழ் இந்து”  ‘ஆடிமலர்’]

படம் உதவிக்கு நன்றி: http://pagalavantamil.blogspot.com/2009/12/blog-post_984.html

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “காவேரி

  1. அரியதோர் கட்டுரையாத்து பலர் அறியாத செய்திகளைத் தந்து விரிவான உங்களின் விளக்கங்கள்.. காவேரி நதி போலவே  ஓடிவந்தது..  நன்றி  ஐயா.

    அன்புடன்..
    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *