அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! பெரானாக்கான் அருங்காட்சியகம், சிங்கப்பூர் – 32

சுபாஷிணி ட்ரெம்மல்

மலாயா இந்தோனேசிய நாடுகளுக்கு உலகின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது தொடர்ந்து நிகழ்ந்து வருவது. இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பல்லாண்டுகளாகப் பல காலகட்டங்களில் இந்தியாவிலிருந்தும் சீனாவிலிருந்தும் மக்கள் குடியேற்றம் என்பது நிகழ்ந்துள்ளது.

சீனர்களின் வர்த்தக ஈடுபாடு அவர்கள் உலக உருண்டையின் பல பகுதிகளுக்குச் செல்ல உந்துதலாக அமைந்தது. மலாயா தீபகற்பத்திற்குச் சீனர்களின் குடியேற்றம் என்பது பல காலகட்டங்களில் நிகழ்ந்திருக்கின்றது. சீனாவின் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்து மக்கள் வியாபாரம் செய்யும் நோக்கத்துடனும், உழைத்துப் பொருள் சேர்க்கும் நோக்கத்துடனும் இப்பகுதிகளுக்குப் புதிய வாழ்வை தேடி வந்திருக்கின்றனர். அப்படி வந்தவர்களில், அதிலும் குறிப்பாக 15ம் நூற்றாண்டு தொடக்கம் மலாக்கா சிங்கை ஆகிய பகுதிகளில் வந்து குடியேறியோர் தனித் தன்மை வாய்ந்தவர்களாகக் கருதப் படுகின்றனர்.

மலேசியாவைப் பொருத்தவரை சீனர்களில் பெரும்பாலானோர் ஹொக்கியான் இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இதற்கு அடுத்தார்போல அமைவது தியோச்சூ, கண்டனீஸ் இனக்குழு மக்கள்.

​மலேசியா சிங்கை ஆகிய இருநாடுகளும் இரு தனி நாடுகள் என்ற போதும் ​சிங்கப்பூர் ​மலாயா மக்களால் அன்றும் மலேசிய மக்களால் இன்றும் பிரித்துப் பார்க்க முடியாத வகையிலேயே இணைந்தே காணப்படும் நிலை உள்ளது. ஒரு வகையில் சிங்கை மலாயாவின் ஒரு பகுதியாகவே 1965ம் ஆண்டு வரை கருதப்பட்டது. மலாயா சுதந்திரம் பெற்ற போது ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியில் இடம்பெறுவது தொடர்ந்து, அதன் பின்னர் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுபட்டு 1963ம் ஆண்டு சுதந்திர மலேசியாவுடன் ​சிங்கப்பூர் ​இணைந்தாலும் இந்த நிலை நெடுநாட்கள் நீடிக்கவில்லை. 1965ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகத் தன்னை பிரகட​ன​ப்படுத்திக் கொண்டது சிங்கப்பூர். மலேசிய மக்கள் போலவே சிங்கையின் மக்கள் தொகையில் மலாய், சீன, இந்திய வம்சாவளியினர் பெரும்பான்மையினராக அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று நான் அறிமுகம் செய்யும் அருங்காட்சியகம் ​பெரானாக்கன் என அறியப்படும் ​ஒரு குறிப்பிட்ட இன மக்களின் வாழ்வியல் விஷயங்களைச் சேகரித்து வைத்துள்ள ​ ​ஓர் அருங்காட்சியகம்.

பெரானாக்கன் அருங்காட்சியகம்

பெரானாக்கன் அருங்காட்சியகம்

சிங்கையில் அமைந்திருக்கும் இந்த பெரானாக்கன் அருங்காட்சியகம் பெரானாக்கான் எனப்படும் பாபா-ஞோஞ்ஞா (baba-Nyonya) மக்களின் வாழ்க்கை முறையை விவரிக்கும் ஒரு அருங்காட்சியகம். இது சிங்கை நகரி ​ன் மையத்தில் முக்கியப் பகுதியில் அதிலும் குறிப்பாக சிங்கை நேஷனல் அருங்காட்சியகம், ஆர்க்கைவ் ஆகியவை உள்ள​ பகுதியில் அமைந்திருக்கின்றது. ​வெளிப்புரத்தில் காலணித்துவ ஆட்சியின் கட்டிட கட்டுமான வடிவத்தை கொண்டு அமைந்திருக்கும் இக்கட்டிடம் உள்ளே ​ கண்ணைக் கவரும் வர்ணங்களில் ஆன அலங்கார​ங்களையும் அரும்பொருட்களின் சேகரிப்புக்களையும் கொண்டுள்ளது. ​ இந்த அருங்காட்சியகம் அடிப்படையில் 1912ம் ஆண்டு தாவ் நான் சீன ​ப்​ பள்ளியை மாற்றி உருவாக்கப்பட்டது. 2005ம் ஆண்டு நான் சிங்கை சென்றிருந்த சமயம் இந்த அருங்காட்சியகம் சென்று பார்த்து வரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

பாபா என்பது இவ்வினத்து ஆண்களைக் குறிக்கவும், ஞோஞ்ஞா என்பது இவ்வினத்துப் பெண்களைக் குறிக்கவும் பயன்பாட்டில் உள்ள சொல். சீன ஹொக்கியன் சமூகத்தைச் சேர்ந்த இம்மக்கள் தாம் புதிதாக வந்து குடியேறிய மலாயாவில் அங்கிருந்த உள்ளூர் மக்களின் மொழி, பழக்க வழக்கங்களை உள்வாங்கிக் கொண்டும் உள்ளூரில் ​திருமணம் புரிந்து கொண்டும் உள்ளூர் மக்களோடு மக்களாக கலந்து போனவர்கள். இம்மக்களின் முகச் சாயலில் மலாய் சீன இரு ​சமூகங்களின் ​இனக்கலப்பும் மிக நன்கு தெரியும். பொதுவாக வெளிர் மஞ்சள் நிறத்தவர்கள் இவர்கள்.

​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்

​பெரானாக்கன் சமூகத்தினர் பயன்படுத்தும் நாற்காலி, கட்டில்கள்

​ஆச்சரியப்படத்தக்க வகையில் ​இவர்கள் சீனர்களிடமிருந்து, அதிலும் குறிப்பாக ஹொக்கியான் சமூகத்து சீனர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் ஒரு புதிய சமூகமாக உருவானவர்கள் என்பதே இவர்களின் தனிச்சிறப்பு.

சீன மொழியில் ஒன்றான ஹொக்கியான் மொழியின் சொற்கள் கலந்த மலாய் மொழியின் ஒரு வடிவம் இவர்கள் பேசும் மொழி. இம்மொழி இப்போது பயன்பாட்டில் மிகக் குறைந்து வருகின்ற போதிலும் இன்னமும் இல்லங்களில் பெரானாக்கான் சமூக மக்களின் அன்றாட பயன்பாட்டில் இருக்கத்தான் செய்கின்றது.

உணவுப் பாத்திரங்கள்

உணவுப் பாத்திரங்கள்

மலேசியாவின் மலாக்கா மானிலத்தி​ன் ​மலாக்கா நகரில் பெரானாக்கன் அருங்காட்சியகம் ஒன்று உள்ளது. ​அங்கும் இவ்வகை சமூகத்தினர் ஏராளமானோர் இன்றளவும் வாழ்கின்றனர். அங்கிருக்கும் அருங்காட்சியகத்தைவிட பெரியதாக உள்ளது சிங்கையில் இருக்கும் இந்த பெரானாக்கான் அருங்காட்சியகம். இங்கு பாபா-ஞோஞ்ஞா சமூகத்தினரின் புகைப்படங்கள் சில உள்ளன. திருமணச் சடங்குகளைக் காட்டும் புகைப்படங்கள், சமூக நிகழ்ச்சிகளைக் காட்டும் புகைப்படங்கள் ஆகியனவாக இவை அமைந்திருக்கின்றன. அதில் குறிப்பாக ஆண் பெண் உடைகள், திருமண உடைகள், விழாக்களில் எடுத்த புகைப்படங்கள் என இங்குள்ள சேகரிப்புக்கள் இம்மக்களின் உருவத்தோற்றம், உடையலங்காரம் ஆகியனவற்றைப் பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.

தொடரும்…

About டாக்டர்.சுபாஷிணி

டாக்டர்.சுபாஷிணி ஜெர்மனியில் Hewlett-Packard நிறுவனத்தின் ஐரோப்பிய ஆப்பிரிக்க மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தலைமை Cloud Architect ஆகப் பணி புரிபவர். இவர் மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/ என்னும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தை 2001ம் ஆண்டு முதல் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இணைந்து தொடங்கி நடத்தி வருபவர். மின்தமிழ் கூகிள் மடலாடற்குழுவின் பொறுப்பாளர். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறுபவர். வலைப்பூக்கள்: ​http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள் http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..! http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..! http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..! http://ksuba.blogspot.com - Suba's Musings http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள் http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல் http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள் http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள் http://kanaiyazhi-ezine.blogspot.com - கணையாழி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க