குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று

0

கவிஞர் காவிரி மைந்தன்

வந்த கோபம் வடிந்துமுடிவதற்குள் வாழ்க்கையில் பாதி தொலைந்து போகிறது என்று முன்பொரு நாள் நான் எழுதியது நினைவலைகளில்!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

கணவன் – மனைவி இருவருக்கும் இடையே குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குழந்தைகளின் மனதை எப்படி பாதிக்கின்றது என்பதை திரைப்படம் அன்றே எடுத்துச் சொல்லியிருக்கிறது! குறிப்பாக இந்தப் பாடல் கவிஞர் கண்ணதாசனின் வரையோவியம்!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்றுsuseela
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

இவர்களுக்கெல்லாம் ஞானம் எப்படி வந்திருக்கிறது பாருங்கள்.. பல நூறு பக்கங்களில் எழுதிவைத்தாலும் அடங்கிடாத பிரச்சினைகளுக்கு ஒரு சில வரிகளிலேயே தீர்வு எழுதிவைத்ததுபோல இருக்கிற பாடல்! சொல்லப்போனால் இல்லற வாய்ப்பாடு இதுவென்று கூட எடுத்துக் கொள்ளலாம். அதையும் குழந்தையின் வாயிலாகவே வெளிப்படுத்தியிருப்பது இன்னும் அருமை!

பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது kaviri
பிறந்து வந்த போது நெஞ்சம் திறந்திருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது – அந்தப்
பிள்ளையோடு தெய்வம் வந்து குடியிருந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது
வயது வந்த போது நெஞ்சில் மயக்கம் வந்தது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது – அங்கு
வாழ்ந்திருந்த தெய்வம் கொஞ்சம் விலகிச் சென்றது

கருப்பு வெள்ளையில் வெளியான திரைச்சித்திரத்தில் குட்டி பத்மினி.. தோன்றும் காட்சி.. வெள்ளையாய் இருந்த குழந்தை மனது வயதாக ஆக.. நிறம் மாறுகிறது! குழந்தை மனதில் குடியிருந்த தெய்வம் பிறகு அந்த இடத்தைவிட்டு விலகுகின்றது என்னும் நிதர்சனங்கள் பாடல்வாயிலாக நம் நெஞ்சங்களைத் தொடும்போது உண்மை சுடுகிறதல்லவா?

கோபம்.. வந்த கோபம் வடிந்துமுடிவதற்குள் வாழ்க்கையில் பாதி தொலைந்து போகிறது என்று முன்பொரு நாள் நான் எழுதியது நினைவலைகளில்! இந்த கோபத்தின் விளைவுகள் பெரும்பாலும் நன்மை பயப்பதில்லை! மாறாக.. மன அழுத்தம், இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு என பல்வேறு நிலைகளுக்கு நம்மைத் தள்ளிவிடுகின்றது! இதையெல்லாம் உணர்ந்து வாழத் தெரிந்துவிட்டால்.. இன்பமயமாகிவிடும் வாழ்க்கை!

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது – நம்
உள்ளம் என்னும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது – பேசிக்
கலந்து விட்டால் கோபம் மாறி நேசமாகுது

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார்
பிள்ளைகளாய் இருந்தவர் தான் பெரியவரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார் – அந்தப்
பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம்
கள்ளமில்லா உள்ளத்தினால் பிள்ளைகளெல்லாம் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார் – என்றும்
கண்ணெதிரே காணுகின்ற தெய்வங்களானார்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
நடந்ததெல்லாம் நினைப்பதெல்லாம் துயரம் என்று
ஞானிகளும் மேதைகளும் சொன்னார் அன்று
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று

பாடல்: குழந்தையும் தெய்வமும்
திரைப்படம்: குழந்தையும் தெய்வமும்
பாடியவர் . பி. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
ஆண்டு: 1965

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.