Blog
-
திருமால் திருப்புகழ் (57)
கிரேசி மோகன்
தான தன தானத் தான தன தானத்
தான தன தானத் -தனதான….——————————————————————————————————————–
“ஞான வழி தேடிச் சோணை மலை நாடிப்

ஓவியம் : கிரேசி மோகன போன ரம ணேசத் -தவராஜன்,
போல யம தூதப் பாச வலை மீளப்,
பாழும் உல கேகித் -தவியாது,
நானொ ழிவி சாரத் தால றிசி வாயத்
தேனொ ழுக, மாயப் -புலநாகம்
வாயு மிழு ஆலத் தாலு டலம் ரோகத்
தாலி டும யானத் -திடைசேரா,
மோன அனு பூதிக் கூட ருள வாஅக்
கோகு லமு லாவிப் -பசுமேய
பீலி மயில் சூடிப், பீத கமு ராசப்,
பீடு நடை யோடுக் -குழலூதி,
கானில் வெயி லேறப், ப்ராணி நலம் பேணக்,
கூடி உற வாடிப், -புவிவாழ்வில்
பால னுரு வாயப் பாக வத லீலைக்
காக, அவ தாரப் -பெருமாளே”
———————————————————————————————————படத்திற்கு நன்றி :
http://lalitkr007.deviantart.com/art/krishna-india-authentic-104817999
-
என்னதான் இருக்கிறது வேதத்தில்? – 2
வேதக் கடல்
சு.கோதண்டராமன்
வேத இலக்கியம் என்பது கடல் போன்றது. நான்கு வேதங்கள், அவை ஒவ்வொன்றிலும் ஸம்ஹிதை, பிராமணங்கள், ஆரண்யங்கள், உபநிடதங்கள் என நான்கு கிளைகள், இவற்றைப் புரிந்து கொள்வதற்கு உதவும் அங்கங்களான சிக்ஷா, சந்தஸ், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜ்யோதிஷம், அத்துடன் இதிகாச, புராணங்களையும், ஸ்மிருதிகளையும் படித்து முடித்தால் தான் ஓரளவுக்கு இந்து சமயத்தை அறிந்து கொள்ள முடியும். இத்தனையும் படித்துத் தெரிந்து கொள்ள முற்படுவது பாற்கடலை நக்கியே குடித்துத் தீர்த்து விடுவேன் என்று ஒரு பூனை சொல்வதற்கு ஒப்பாகும். இவற்றை முழுமையாகக் கற்பதற்கு ஒரு ஆயுள் போதாது என்பதைப் பாமரன் அறிந்தான். எனவே வேதத்தின் சாரம் போன்ற விஷயத்தைத் தெரிந்து கொண்டால் முழு வேதத்தையும் பற்றிய ஒரு தெளிவு கிடைக்கலாம் என்று நம்பினான்.
ஸ்மிருதிகளும் இதிகாச புராணங்களும் வேதத்துக்கு விரோதமாக இருந்தால் வேதம் சொல்வதே இறுதித் தீர்ப்பு என்று காஞ்சி மஹா ஸ்வாமிகள் சொல்லியிருக்கிறார்கள். மேலும், வேதங்களை நம்பு. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்துகொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று பாரதியும் கூறுகிறார். எனவே இந்து சமயத்தின் வேரை அறிந்து கொள்ள வேதத்தை மட்டும் படித்தாலே போதுமானது என்ற எண்ணம் ஏற்பட்டது.
வேதத்தில் நான்கு பாகங்கள் உள்ளன – ஸம்ஹிதை, பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் என்று. அவற்றில் ஸம்ஹிதை ஒன்று தான் தெய்வ அருளால் ரிஷிகளின் வாக்கில் தோன்றிய அருட்பாடல்கள். மற்ற பாகங்கள் எல்லாம் ஸம்ஹிதைப் பகுதிக்கு பிற்கால அறிஞர்கள் தந்த விளக்கங்களே. பிராமணம், ஆரண்யகம், உபநிஷத் எழுதியவர்கள் தங்கள் கருத்தை, விருப்பத்தை ஒட்டியே ஸம்ஹிதைக்கு வியாக்கியானம் செய்திருக்கிறார்கள். பிற்காலத்தவர்களது கருத்தினால் பாதிக்கப்படாமல் வேதத்தின் சுய ரூபத்தைத் தரிசிக்க விரும்பின அவனுக்கு வழிகாட்டியது பாரதியின் கூற்று.
உபநிஷத்துக்கள் வேதாந்தம் என்ற பெயர் படைத்தன. அதாவது வேதத்தின் நிச்சயம். இவை வேத ரிஷிகளால் சமைக்கப்பட்டனவல்ல. பிற்காலத்தவரால் சமைக்கப்பட்டன. ஸம்ஹிதைகள் என்றும் மந்திரங்கள் என்றும் சொல்லப்படுவனவே உண்மையான வேதங்கள். அவையே ஹிந்து மதத்தின் வேர். அவை வசிஷ்ட வாமதேவாதி தேவ ரிஷிகளின் கொள்கைகளைக் காட்டுவன. உபநிஷத்துகள் மந்திரங்களுக்கு விரோதமல்ல. அவற்றுக்குச் சாஸ்திர முடிவு. அவற்றின் சிரோபூஷணம். ஆனால், பச்சை வேதமென்பது மந்திரம் அல்லது ஸம்ஹிதை எனப்படும் பகுதியேயாம். —மகாகவி பாரதி
எனவே பச்சை வேதமாகிய ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது. அதிலும் நான்கு இருக்கின்றனவே. படித்துப் பார்த்த போது, சாம ஸம்ஹிதையில் 1800 ரிக் ஸம்ஹிதைப் பாடல்களும் இதர துதிகள் 75உம் இருப்பது தெரிய வந்தது. அந்த 75 இலும் மற்ற 1800 பாடல்களில் சொல்லப்படாத சிறப்பான எதுவும் கூறப்படவில்லை. சாம வேதத்தில் உள்ள மந்திரங்களைப் பார்த்தால் அவற்றில் பெரும்பாலானவை, ரிக் வேத சூக்தங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் முதல் மந்திரங்களை எடுத்துத் தொகுக்கப் பட்டவையாக இருப்பதைப் பார்க்கிறோம்.
சாமம் தனி வேதமாகப் பெயரிடப்பட்டிருந்தாலும், அது ரிக் வேதத்தின் சுருங்கிய வடிவமாகவே இருப்பதால் அதை நீக்கிவிட்டு மற்ற மூன்று ஸம்ஹிதைகளை மட்டும் படித்தால் போதுமானது என்ற முடிவுக்கு வந்தான்.
அதர்வ வேதம் காலத்தால் மிகப் பிற்பட்டது. (இது வியாசரால் தொகுக்கப்பட்டதா அல்லது அவருக்குப் பிற்காலத்தியதா என்பது தெரியவில்லை. பண்டைய இலக்கியங்களில் முதல் மூன்று வேதங்களே குறிப்பிடப்பட்டிருப்பதால் இதை அறிகிறோம்.) இதில் உள்ள பாடல்களில் 50 சதவீதம் ரிக் வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவை. அத்துடன் பகைவரை அழித்தல், விஷக் கடிக்கு மந்திரித்தல், நோய்க்கு மருத்துவம் முதலிய ஆன்மிக ரீதியாகக் குறைந்த முக்கியத்துவம் உடைய விஷயங்களே காணப்படுவதால் அதுவும் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.
யஜுர் வேதத்தில் கிருஷ்ண யஜுர், சுக்ல யஜுர் என்று இரண்டு வகை உண்டு. சுக்ல யஜுர் என்பது முற்றிலும் செய்யுள் வடிவில் உள்ளது. கிருஷ்ண யஜுர் பிராமணம் என்று அழைக்கப்படும் உரைநடையும் மந்த்ரம் என்று அழைக்கப்படும் செய்யுளும் கொண்டது. இந்த இரண்டு வகை மந்திரங்களிலும் ரிக் வேதப் பாடல்கள் பெருமளவில் கலந்துள்ளன. எனவே மற்ற வேதங்களை விடக் காலத்தால் முந்தியது ரிக் வேதம். மற்ற வேதங்களின் தாய் என்றும் சொல்லலாம்.
காலத்தால் பிற்பட்ட யஜுர் வேதம் ரிக் வேதத்தில் சொல்லாமல் விடுபட்டுப் போனவற்றைச் சொல்கின்றதா அல்லது ரிக்கில் சொல்லப்பட்டதையே விளக்கமாகச் சொல்கின்றதா என்பது ஒரு கேள்வி. எப்படி இருந்தாலும் தாய் வேதத்தின் கருத்துக்கு முரண்பாடான செய்திகள் அதில் இருக்கக் கூடாது என நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது யஜுர்வேதம் ரிக்குகளை வேள்விக்குப் பயன்படும் வகையில் மாற்றி அமைத்துள்ளது என்பதை அறிகிறோம். உதாரணமாக,
अप्स्वन्तरमृतप्सु भेषजमपामुत प्रशस्तये । देवा भवत वाजिन: ரிக் ஸம். 1.23.19
நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்களே வலிமை பெறுங்கள்.
இந்த மந்திரம் யஜுர் வேதத்தில் சற்றே உரு மாறி வருகிறது.
अप्स्वन्तरमृतमप्सु भेषजमपामुत प्रशस्तिष्वश्वा भवथ वाजिन: தைத்ரிய ஸம்ஹிதை 1.7.74
நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரின் புகழ்ச்சிகளில், குதிரைகளே, வலிமை பெறுங்கள்.
தேவர்கள் என்பதற்குப் பதிலாகக் குதிரைகள் என்ற சொல் இடம் பெறுகிறது. இதைத் தொடர்ந்து வாஜபேய யாகம் செய்வது குறித்த செய்திகள் தொடர்கின்றன. எனவே யாகம் செய்வதற்கேற்ப ரிக் மந்திரத்தை உருமாற்றிப் பயன்படுத்தியுள்ளனர் என்பது தெரிகிறது.
யஜுர் வேதத்தின் பெரும்பாலான பிராமண(உரைநடை)ப் பகுதிகளைப் படித்துப் பார்த்தால் அவை அருள் நிலையில் எழுதப்பட்டதாக இராமல், புராணக் கதைகளைக் கூறுவதாகவும், வேள்வி முறையை விளக்குவதற்கே எழுதப்பட்டனவாகவும் தோன்றுகின்றன. உதாரணத்திற்கு இந்த உரைநடையைப் பாருங்கள்.
யஜுர் 2.3.5 – பிரஜாபதிக்கு 33 பெண்கள். அவர்களை அவர் சோமனுக்குக் கொடுத்தார். அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவர்கள் கோபித்துக் கொண்டு திரும்பினர். சோமன் தொடர்ந்து சென்று அவர்களைத் தருமாறு கேட்டான். பிரஜாபதி தரவில்லை. அவர் எல்லோரையும் சமமாக நடத்துவேன் என்று சத்தியம் செய் என்றார். அவன் அவ்வாறு செய்தான். அவர் பெண்களைத் திருப்பி அனுப்பினார். மீண்டும் அவன் ரோஹிணியுடன் மட்டும் சேர்ந்திருந்தான். அவனுக்கு நோய் வந்துவிட்டது. அவன் அவர்களை மரியாதையுடன் அணுகினான். அவர்கள் சொன்னார்கள், எங்கள் எல்லாரையும் சமமாக நடத்து என்று சொல்லிவிட்டு அவர்கள் அவனுக்காக ஆதித்யர்களுக்கு யாகம் செய்தனர். அவர்கள் அவனை நோயிலிருந்து மீட்டனர்.
யஜுர் 6.3.10 – வேள்வியில் பசுவை அர்ப்பணித்து விட்டு யஜமானன் அதன் மேல் ஒரு புரோடாசத்தை (அப்பத்தை) போடுகிறான். நிச்சயமாக அவன் அதன் அதனுடைய கொழுப்பைக் கொண்டு யாகம் செய்கிறான். வபையைக் கொண்டு யாகம் செய்து முடித்தபின், அவன் புரோடாசத்தைக் கொண்டு யாகம் செய்கிறான். புரோடாசமே வலிமை. நிச்சயமாக அவன் பசுவின் மத்ய பாகத்தில் வலிமையைப் போடுகிறான். நிச்சயமாக, அவன் பசுவின் உடலில் வெட்டப்பட்ட பாகத்தை மூடுகிறான்……….
எனவே, யஜுர் வேதம் மூல வேதத்தின் கருத்தைத் திசை திருப்பி அழைத்துச் செல்வது அறியப்படுகிறது. அதை நீக்கிவிட்டு ரிக் ஸம்ஹிதையை மட்டும் படித்தாலே வேதத்தின் உண்மையான சொரூபத்தை அறியலாம் என்ற முடிவுக்கு வந்தான்.
படங்களுக்கு நன்றி:
http://sidthan.blogspot.in/2013/07/blog-post_5797.html
-
குறளின் கதிர்களாய்…(24)
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டிக் கொளல்.
-திருக்குறள் -401(கல்லாமை)
புதுக்கவிதையில்…
காயுருட்டி விளையாடக்
களம் வேண்டும்,
குழி அமைக்குமுன்னே
காயுருட்டல் வீண்தானே..
கற்றவர் அவையில்
உற்ற நூற்கள்
கல்லாமல் பேசுபவரின்
கதை இதுதானே…!
குறும்பாவில்…
களம் அமைத்தபின் காயுருட்டு,
கற்றுத் தேர்ந்தபின்
கற்றோர்முன் வாதாடு…!
மரபுக்கவிதையில்…
களமது அமைத்தாங்குக் குழிசெய்து
காயது உருட்டுதல் விளையாட்டு,
விளங்கிடும் கருத்திதுதான் வாழ்க்கையிலும்
வித்தை கற்றிடும் கல்வியிலும்,
தெளிவுடன் தெரிந்திடத்தான் பலநூலும்
தெரிந்து கற்றிடாமல் செல்லாதே,
தெளிவாய்க் கற்றறிந்தோர் சபையினிலே
தெரிந்ததைச் சொல்லித்தான் வாதிடவே…!
லிமரைக்கூ…
அரங்கம் அமைத்தபின் விளையாடச் செல்,
அவைநிறைந்த கற்றோர்முன்
அளவாய்நூல் கற்காமல் செல்லாதே நில்…!
கிராமியப் பாணியில்…
வெளயாடு வெளயாடு
விருப்பம்போல வெளயாடு,
அரங்கத்த தயார்பண்ணி
அப்புறமா வெளயாடு,
வெளயாடு வெளயாடு
விருப்பம்போல வெளயாடு..
அதுபோல
ஒரயாடு ஒரயாடு
படிச்சோர்கிட்ட ஒரயாடு,
படிச்சித் தெரிஞ்சி ஒரயாடு
படிச்சித் தெளிஞ்சி ஒரயாடு..
இப்போ,
ஒரயாடு ஒரயாடு
விருப்பம்போல ஒரயாடு…!
http://www.thechessstore.com/product/SAB008FE/Indian-Theme-Chess-Set-with-Chess-Board.html
-
காதல் சிறகை காற்றினில் விரித்து
கவிஞர் காவிரி மைந்தன்
எண்ணிய வண்ணமெல்லாம் இதயம் பறக்க நினைக்கும் பருவம் இந்தக் காதல் பருவம்! வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதைப்போல் மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க உயிர்ப்பூ சிலிர்க்கும்! இன்னுமிதைப் பற்றி எத்தனையோ புலவர்கள்.. கவிஞர்கள்.. படைப்பாளிகள் கொட்டிக் கவிழ்த்தபின்னும் கொள்ளையாய் கிடக்கிறது இந்தக் காதல் சுரங்கம்! இதய அரங்கிலிருந்து துவங்கும் இந்த ரகசியப் பாதையில் இருவரின் சந்திப்பு.. இமைகளின் படபடப்பு! இயற்கையின் படைப்பில் ஜீவன் உள்ளது என்பதற்கு காதல் மட்டும்தான் சத்திய சாட்சி!!
இளமையின் அரசல் புரசலான விஷயமல்ல.. இதயங்களின் பரிவர்த்தனை! ஆலாபனை! அன்பில் இருமலர்கள் ஒரே நேரத்தில் மலரும் விசித்திரம்! ஆனால் உண்மை!! கண்கள் நான்கும் கவிதை பாடும்! இமைகள் இருப்பது அப்போதுதான் இருவருக்கும் தெரியவரும்!! ஒரு முறை பார்வை நேரடியாய் விழுந்துவிட்டால் ஒரு கோடி கிடைத்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும்! மறுபார்வை பார்ப்பதற்குள் தடைகள் வந்துவிட்டால் மனமிரண்டும் தத்தளிக்கும்! மறு ஜென்மமே எடுக்கும்!
எனக்காகப் பிறந்தவள் நீ என்றே பல்லவி பிறக்கும்!
உனக்காகவே வாழ்கிறேன் நான் என்றே சரணம் தொடரும்!அன்பின் பிணைப்பை அப்படியே அர்த்தப்படுத்த எந்த மொழியிலும் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும் வலிமையில்லை! அனுபவத்தில் கண்டபின்னும் சொல்லச் சொன்னால் அனுபவித்துப் பார் என்றே வார்த்தை வரும்! சர்வ மதங்களின் கூட்டுப்பிரார்த்தனை நடத்த வேண்டுமென்றால் முதலில் காதல் மாநாடு போடுங்கள் – சர்வ மனங்களையும் இணைத்துவிடலாம்!
கல்லால்.. சிமெண்ட்டால்.. இரும்பினால் எல்லாம் பாலங்கள் கட்டுவார்கள்.. காதலில் மட்டும்தான் எண்ணங்களால் பாலம் அமைத்திடலாம் என்கிறார் கண்ணதாசன் எனச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.
ஒரு முறை கவிஞர் வைரமுத்து வானொலியில் வழங்கிய தேன் கிண்ணத்திலிருந்து வார்த்தெடுத்த வார்த்தை முத்துக்கள் இதோ..
“உன் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால்.. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு அனைவரும் விலகிச் சென்றுவிடுங்கள் என்றே கேட்பேன்!”
அது என்ன? இப்பாடலை ஒலிபரப்பும்போது அந்த முள் ஒலித்தகட்டின்மீது சுற்றுகிறதா? இல்லை.. இதயத்தின் மீது சுற்றுகிறதா? அன்பர்களே.. ஒரு கவிஞனின் ரசனையில் இப்பாடல் பெற்றுள்ள இடம் பார்த்தீர்களா? காதல் ரசம் அல்ல! அன்பின் மழை! காம ஊற்றல்ல! பரிவின் உச்சம்!!
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
கண்ணதாசனே.. இன்றும் என்றும் உன்னை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஏன் தெரியுமா?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
யாரிடமிருந்து வரும் இவ்வார்த்தைகள்? கடல் வானம் உள்ள வரை என்பார்கள்.. உறவும் பிரிவும் உள்ளவரை உன் பாடல்கள் உலா வரும் என்றே போற்றி மகிழ்கிறேன்!
தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா
ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாலும் பழமும் திரைப்படம் 1961 – கவியரசு கண்ணதாசன் –
விஸ்வநாதன் ராமமூர்த்தி – ஏ.பீம்சிங் –
சிவாஜி கணேசன் – பி.சரோஜாதேவி (சரவணா பிலிம்ஸ்).. -
திருமால் திருப்புகழ் (56)
கிரேசி மோகன்
கட்டவாக்கம் விஸ்வரூப நரசிம்மப் பெருமாள்’’
——————————————————————————————தத்ததான தனதான தத்ததான தனதான
தத்ததான தனதான -தனதான….———————————————————————————————————————–
பித்தமோடு கபவாதம், ரத்தசோகை குதமூலம்,
விஸ்வரூப நரசிம்மர்
நன்றி : சுப்பிரமணியன்உப்புசீனி உயர்வாகி -தடியூனி,
எட்டுநாலு புதையீறு பற்களாட, நரைமேவ
சொட்டையான தலைநோவில் -விழிசோர,முத்தவ்யாதி கிழமாகி, சத்திலாது பிணமாக,
கொட்டுமேள மனையாளும், -மகனோடு,
கட்டிஓல மிடகாடு உற்றபோது,
’’ஒருகாதும்
அற்றஊஸி’’ வருமோசொல்-துணையாக.குப்பைமேனி தனிலாடும் தப்புநானின் விபரீதம்
செப்பலோசை இசையாலே-ரமணேசர்,
அப்பளாமை இடுவேளை, புத்திகூற அழகாயி(தாயார் அழகம்மை)
உற்றஞானம், அடியேனும்-பெறவேணும்.அப்பன்கேள, ஒருதூணில் நெட்டைமாலன் உளதாக,
அச்சிறானின் மொழிவாழ, -பலதூணில்
பக்தராஜன் மனம்போல, பெத்தசாமி(விஸ்வரூப) வடிவான
கட்டவாக நரசீய -பெருமாளே
————————————————————————–– -
திருமால் திருப்புகழ் (55)
கிரேசி மோகன்
——————————————-
தத்ததன தனன தான தன தத்ததன தனன தான தன,
தத்ததன தனன தான தன -தனதான….—————————————————————————————————————–
’’அத்திகிரி’’ என்றழைக்கப்படும் காஞ்சி நகர் வரத ராஜப் பெருமாள்….
————————————————————————————————————–பூவிருந்தவல்லி மூன்று கருட சேவை
”உற்றவுற வழுகை வீடு வரை, கட்டியம னையழுகை வீதிவரை,

பெற்றதுகள் அழுகை காடு வரை,-அதனாலே,
எத்தனெமன் எருமை ஏறி வர, செத்தவுட லெனபி ராணம் விடு
வித்தவனி டம்நசி கேத னென -சமராடி,குற்றமர ணபயம் சாக, நகர் விட்டருணை அசல ஆல மரம்
பற்றிவளர் கொடிகு மார குரு -ரமணேசர்,
சொற்படிஉ லகிலு லாவி நிதம், கற்பனைம னமுரை பேத மற,
பக்தியிலு னதனு பூதி பெற -அருள்வாயே.வெற்றியுடன் மயிலில் ஏறி பகை,யுற்றுவரும் பதும சூர னுயிர்,
விட்டமர உலகி லேள, உமை -அளிவேலை
விட்டெறிவி ழியிமை யாம கள்கு றத்தியும் உலவு தோளன்,சிவ
சக்தியினி ளையகு மாரன், குகன் -முறைமாம.கற்பறிய மனைவி ஜான கிநெ ருப்பில்நனை, நெறியி னோன்ர விகு
லத்தில்வரு, திலக மான ரகு -அவதார
அத்தனையும் நினது தேச மதில், எத்தகைய வரமும் தூவும் பதி
அத்திகிரி வரத ராஜ னெனும் -பெருமாளே
—————————————————————————————————————-படங்களுக்கு நன்றி:
http://narasimhar.blogspot.in/2013_06_01_archive.html
http://3.bp.blogspot.com/-JpI6obm7jyY/UarITyThTVI/AAAAAAAAOLM/EnYYiAjsfG0/s1600/pg21.jpg
-
சிறப்பு தரும் சித்திரைப் புத்தாண்டு
ராஜராஜேஸ்வரி ஜெகமணி
சித்திரை மாதத்தின் முதல் நாள் புத்தாண்டாக
சிறப்புறக் கொண்டாடுகிறோம்..நாம் மட்டுமல்ல ..இயற்கை அன்னையும் பழுத்த பழைய இலைகளை உதிர்த்து மண்ணுக்கு உரமாக்கிவிட்டு பச்சைப்பசும் இலைத்தளிர் ஆடைகளை அணிந்து கண்களிக்கும் வண்ணம் காட்சிதருகிறாள்…
மரம் முழுக்க இலைகளே தெரியாமல் சரக்கொன்றை மரம் தங்கநகைகளை தாராளமாக அணிந்த புதுமணப்பெண்ணாய் ஏராள புன்னகையொடு வரவேற்பதைக் கண்குளிரக்காணும்போதே சித்திரை பிறக்கப்போகிறது என கட்டியம் கூறும்..
வாகை மரத்தின் பூக்கள் சித்திரையை சாமரம் வீசி வரவேற்கும்..
அப்போதுதான் முட்டையிலிருந்து வெளிவந்து அனுபவம் கற்காத இளம் குஞ்சுப்பற்வைகள் கண்திறந்ததும் செந்நிறமலர்கள் மரம் முழுவதும் பூத்திருப்பதைப் பார்த்து காடே தீப்பற்றிவிட்டதோ என அலறி தாயின் சிறகிற்குள் தஞ்சமடைந்து மழலை மிழற்றுவதைக் கேட்டு இயற்கை அன்னை ஆனந்தமடைந்து தன் வண்ணமலர்களால் அர்ச்சித்து மண் மகளையும்
நதி மகளையும் பூவாடை போர்த்துகிறாள்..வேப்பம்பூக்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்து மணம்பரப்பி மகிழ்ச்சியூட்டும்..
சித்திரை முதல்நாளில் வேப்பம்பூக்களையும் , வாழைப்பழத்தையும் ,கரும்பு சர்க்கரையும் , புளிப்புக்கு சிறிது மாங்காயும் கலந்து அறுசுவையாக முதல் உணவாக எடுத்துக்கொள்வது ஆண்டுமுழுவதும் பிணிகளை அறுத்து நோய் எதிர்ப்புச்சக்தியை தரும் என்பது நம்பிக்கை..
முக்கனிகளும் கனிந்து வாசம் வீசும் திருநாள்..
சித்திரையின் முதல் நாளில் நித்திரைநீங்கி எழுந்ததும் முதல்காட்சியாகக் காணும் கனிகாணல் நிகழ்ச்சி ஆண்டின் மங்களகரமான தொடக்கத்திற்கு அச்சாரமாக திகழ்கிறது..
பெரியோர்களிடம் ஆசிபெற்று கைநீட்டம் என்று நாணயம் பெறுதல் செல்வ வளம் ஆண்டுதோறும் சிறப்பாக இருப்பதை குறிக்கிறது..
ஆலயங்களில் சிறப்புப்பூஜைகளும் , நாணயம் பெறுதலும் இறைவனின் அருளை பெற்றுத்தருகிறது..
சித்திரைப்புத்தாண்டு அன்று சிறப்பு விருந்து உணவுகளும் பூஜை அறை அலங்காரங்களும் அன்று தொடங்கும் உறுதியான முதலடி ஆண்டு தோறும் தொடர்ந்து வருவதான தன்னம்பிக்கையைத்தருகிறது..!
சித்திரை மாதத்தில் புத்தாண்டு தொடங்குவது என்பது வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் அடிப்படையாகக் கொண்டது.
இயற்கையை ஒட்டி, சித்திரை மாதத்தைத் தொடக்க மாதமாகக் கொண்டமைந்ததமிழ்புத்தாண்டு தினத்தன்று வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரிப்பது வழக்கம்.
பூஜை அறையில் உள்ள படங்களை மங்களகரமான மஞ்சள் நிற மலர்களால் மலர்களாலும் ரூபாய் நாணயங்களினாலும், பழங்களினாலும் அலங்கரித்து வருடத்தின் முதல்நாள் இவற்றில் கண் விழித்தால் வீட்டில் மங்களம் பொங்கும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.
வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக மஞ்சள் நிற பூக்கள் அதிகமாய் பூத்துக்குலுங்கும். பூக்களினால் பூஜை அறையை அலங்கரிக்கிறோம்..
தாமரை மலரில் லட்சுமி தேவி வாசம் செய்கிறாள் என்பதால் நடுநாயகமாக லட்சுமி தேவியின் படத்தை வைத்து தாமரை மலர்களால் அலங்கரிக்கலாம்.
கோடை காலத்தில் அதிகம் கிடைக்கும் மாங்கனி. பசும் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே கண்ணைப் பறிக்கும்.
அதேபோல் ஆரஞ்சு, எலுமிச்சை, வெள்ளரிக் கனி,போன்றவைகளை தட்டில் வைத்து நடுவில் சிகரம் வைத்ததுபோல மாதுளம் பழங்களையோ, ஆப்பிள் பழங்களையோ அடுக்கலாம்.
செல்வத்தின் திரு உருவான லட்சுமி தேவி வீட்டில் வாசம் செய்ய தாம்பாளத்தில் சில்லறை நாணயங்களைக் கொட்டி அதனைச் சுற்றி ரூபாய் நோட்டுக்களை அடுக்கலாம்
பலவகை பழங்களை ஒரு தட்டில் வைத்து அலங்கரித்து மையப்பகுதியில் புதிய ரூபாய் நோட்டுக்களை வைத்து, அதன் மேல் தங்க, வெள்ளி நகைகளை வைத்து அலங்கரிப்பார்கள்.
வருடப்பிறப்பிற்கு முதல்நாள் இரவே பூஜை அறையில் ஒரு கண்ணாடியை வைத்து அதன் முன்பாக இந்த பழத்தட்டினை வைத்து விடுவார்கள்.
விடிந்த உடன் குழந்தைகளின் கண்களை மூடிக்கொண்டு பூஜை அறைக்கு அழைத்து செல்லும் அம்மா அந்த பழத்தட்டிலும், கண்ணாடியிலும் விழிக்கச் சொல்வார்கள்.
இதுபோன்ற மங்கலப் பொருட்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அன்றைய தினம் கனி காணுதலும், கை நீட்டம் நிகழ்ச்சியும் புது வருட தினத்தன்று உற்சாகத்தைத் தருவது ஆண்டு முழுதும் தொடரும்
-
இந்த வார வல்லமையாளர்!
இந்த வார வல்லமையாளர்!
ஏப்ரல் 14 , 2014
வல்லமையாளர்கள் பலர் நிறைந்த இவ்வுலகில், சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலக்கட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்ட…..
**************************************************************************************
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு சொ.வினைதீர்த்தான் அவர்கள்
**************************************************************************************
முத்துச்சிவிகை; முத்துக்கள் இழைத்து அலங்கரித்த பல்லக்கு. இதனை ஒருவரை பெருமை படுத்த வழங்கியதாக தமிழ் இலக்கியங்கள் அறிவிக்கின்றன. செங்குந்தர் குலத்தைப் போற்றி ‘தக்கயாகப் பரணி’ இலக்கியம் படைத்த ஒட்டக்கூத்தருக்கு செங்குந்தர்கள் மனம் மகிழ்ந்து முத்துச்சிவிகை அளித்து அவரைப் பெருமைப் படுத்தினார்கள் என்பது வரலாறு.பெண்ணாடகம் சென்று வழிபட்ட பின்னர் நெல்வாயில் அரத்துறையைத் தரிசிக்க திருவுள்ளம் கொண்டார் திருஞானசம்பந்தர். செல்லும் வழியில், மாலைப் பொழுதாகிவிட, களைப்பு மேலிட திருமாறன்பாடியில் இரவு தங்கினார். அவ்வூர்வாசிகளின் கனவில் தோன்றிய சிவன், “எனது பக்தன் சம்பந்தன் களைப்பு மேலிட சத்திரத்தில் உறங்குகின்றான். அவனுக்காக எமது கோயிலில் முத்துச்சிவிகை, முத்துச் சின்னம், முத்துக்குடை முதலியவற்றை அளித்துள்ளோம். அவற்றை அவனுக்கு வழங்கி என்னிடம் அழைத்து வருக,” என ஆணையிட்டார். விழித்தெழுந்த அவ்வூர் மக்கள் கனவில் தோன்றிய சிவன் உரைத்தபடியே கோயிலில் முத்துச்சிவிகை, குடை, சின்னம் ஆகியவை இருக்கக் கண்டு வியந்து, அவற்றுடன் சென்று சம்பந்தரை வரவேற்றதாக திருமாறன்பாடி தலவரலாற்றில் கூறப்படுகிறது.
இந்த திருமாறன்பாடி நகரில் உள்ள அருணா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் 170 மாணவ மாணவியருக்குத் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பு அமைந்தது இந்த வார வல்லமையாளர் திரு. சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு.
காரைக்குடியைச் சேர்ந்த திரு. வினைதீர்த்தான் அவர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்தவர். பணி ஓய்விற்குப் பிறகு, தனது பொழுதை பயனுள்ள வகையில் பல தன்னார்வப் பணிகளில் செலவிட்டு வருகிறார். அவற்றில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது போல பள்ளி மாணவர்களுக்கு தன் முன்னேற்றப் பயிலரங்கங்கள் நடத்துவதும் ஆகும். இம்முறை இப்பள்ளியில் பயிலரங்கம் நடத்திய பொழுது மாணவச் செல்வங்களின் மனதில் பதியும் வண்ணம் அவ்வூர் தல வரலாற்றையும், முத்துச் சிவிகையையும் தொடர்பு படுத்தி உரையாடி இருப்பது அவர் வல்லமையில் பகிர்ந்து கொண்ட அவரது கட்டுரை [http://www.vallamai.com/?p=44002] அறியத் தருகிறது. அதில், முத்துச்சிவிகையை அடைவதை குறிக்கோளை அடைவதுடன் ஒப்பிட்டுள்ளார். இதன் பிறகு அவ்வூரில் பயிலரங்கத்தில் பங்கேற்ற மாணவர்கள் எக்காலமும் இப்பயிலரங்கம் குறிப்பிட்டதை மறக்க வழியுண்டா? இனி இப்பயிற்சிகளைப் பற்றி அவரே விவரித்ததை வழங்குவதே பொருத்தமாக இருக்கும். அக்கட்டுரையில் இருந்து சில வரிகள் கீழே…..“பயிலரங்கில் முதற் செய்தியாகத் தல வரலாறைப் பகிர்ந்துகொண்டு முயற்சியும் ஆர்வமும் இருந்தால் என்ன நிகழும் என்பதற்கு இத்தலமே ஒரு காட்டு என்று சுட்டினேன். முத்துச்சிவிகை என்பது என்ன? அது குறிக்கோளை எளிதல் அடைய உதவும் ஒரு சாதனம். அந்த ஊர்தி நமக்குத் தருவது குறிக்கோளை நோக்கியான வேகமான நகர்வு. குடையும், பொற்சின்னமும் குறிப்பது ஒரு உயரிய, கௌரவ, சமுதாய அடையாளம். முயற்சியும், பயிற்சியும், கொண்ட குறிக்கோளில் தணியாத ஆர்வமும் மாணவர்களிடமிருந்தால் அவர்களுக்குச் சமுதாயத்தில் ஏற்றமும், கௌரவமும், வாழ்வில் உயர்வும் ஏற்படுமென்பதற்குத் திருஞான சம்பந்தர் வாழ்க்கை நிகழ்வை மனதில் எண்ணி அயராது முயல வேண்டுமென்றேன்.
அடுத்து அந்தக் குறிக்கோளின் வரையறையை S M A R T வழியில் விளக்கிக் குறிக்கோளை நிர்ணயித்தலை எடுத்துக்கொண்டேன். 4 “M” Goals – Micro, Mini, Middle, Mega goals – 1.ஒவ்வொரு நாளுக்கான செயல்பாடுகள் 2. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் எடுத்தல் 3. அடுத்துப் பட்டப் படிப்பு வாய்ப்புக்கள், படிப்பினைத் தெரிவு செய்தல், பட்டம் பெறல் 4. அடுத்த நீண்ட காலக் குறிக்கோளான தொழிலும் வாழ்வும் சமுதாயப் பணிகளும் என்ற நோக்கில் பயிற்சி அமைந்தது.
S W O T – பலம், பலவீனம், வாய்ப்புக்கள், தடங்கல்கள் என்ற வகையில் மாணவச் செல்வங்களை எண்ணிப் பார்க்கச் செய்தேன். அவர்களைத் தன் திறமைகளையும், துணையாக அமையக் கூடியவர்கள் உதவக் கூடிய வழிகளையும் பட்டியிலிட வைத்தேன். பலவீனங்களையும் பட்டியலிட்டார்கள். பலத்தைப் பெருக்கும் வழிகளும் பலவீனத்தைத் தவிர்க்கவுமான வழிகளும் அவர்களே கூற ஆராயப்பட்டன. பலம் பெருகும்போது சந்தர்ப்பங்கள் “மடி தற்றித் தான் முந்துறும்” என்பது போல வந்தெய்துகின்றன என்பதை உணர்த்தினேன்.”
ஓய்வு பெற்றாகிவிட்டது, இனி சாய்வு நாற்காலியில் சாய்ந்தமர்ந்து, தினசரிகள் சில படித்து, அரட்டைகள் பல அடித்து பொழுதைக் கழிக்கலாம் என்று இயல்பாகத் தோன்றும் எண்ணத்தைத் தவிர்த்து, ஓய்வு காலத்தை பயனுள்ளதாக மாற்றி வாழ்ந்து வரும், தனது செயலின் வழியாக பிற பேரிள மக்களுக்கு முன்மாதிரியாகவும், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் செயலாற்றி வரும் சொ.வினைதீர்த்தான் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[ இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
-
சிறப்பாக வரவேற்போம் !
எம்.ஜெயராமசர்மா … மெல்பேண்
சித்திரைப் புத்தாண்டை
சிறப்பாக வரவேற்போம்
எத்திக்கும் இன்பம்பொங்க
இறைவனிடம் வரம்கேட்போம்
முத்திக்கு வித்தாக
முன்னிற்கும் கணபதியை
சொத்தான தமிழ்கொண்டு
துதிபாடி நிற்போமே
கோவில்சென்று கும்பிட்டு
குறையெல்லாம் போக்கிடுவோம்
குலதெய்வ வழிபாட்டை
குடும்பத்துடன் செய்திடுவோம்
நாலுபேர் மனம்மகிழ
நயமாக நடந்திடுவோம்
நாடுசெழிக்க வேணுமென்று
நாம்வேண்டி நிற்போமே
பட்சணங்கள் பலசெய்து
பாசமொடு பகிர்ந்துண்போம்
இஷ்டமுடன் கூடிநின்று
எல்லோர்க்கும் விருந்துவைப்போம்
கஷ்டமெலாம் போகவென்று
கடவுளைநாம் வேண்டிடுவோம்
துஷ்டகுணம் ஓடிவிட
தூய்மையுடன் நின்றிடுவோம்
அன்னைதந்தை போற்றிடுவோம்
அனைவரையும் அரவணைப்போம்
சின்னத்தனம் அத்தனையும்
சிதறியோடச் செய்துநிற்போம்
சொன்னயமாய்ப் பேசிநிற்போம்
சுற்றமெலாம் சூழநிற்போம்
என்னாளும் எம்மனத்தில்
இரக்ககுணம் ஓங்கட்டும் -
ஈழநாட்டு சித்தர் சிவயோகசுவாமி – பகுதி 2:
இரமேஷ் சிவநாதன்

சிவயோகசுவாமி தன் குருநாதர் செல்லப்பசுவாமியைப்பற்றி யோகசுவாமி தன் அடியார்களிடம் விவரித்திருக்கிறார். “ பிறரை நாம் கவரவேண்டும் என்றால் அவர்களுக்குப் பெரும்பாலும் ஏதாவது பிடித்த ஒரு பொருளைக் கொடுத்து கவர்வோம். ஆனால் என் குருநாதன் என்னிடமுள்ள எல்லாவற்றையும் கழற்றியெறிந்து போட்டு என்னைக் காந்தம்போல் கவர்ந்திழுத்தான். என்னை சேவை செய்யவோ, முன்னே நிற்கவோ, எதிர்காலத்தைத் தெரிந்துகொள்ளவோ, சித்திகள் பெற்றிருக்கவோ, பிற யோகியர் அல்லது சாதுக்களிடம் பழகவோ அவர் விடவில்லை. அவர் என்னை சுற்றித்திரியக்கூட விடவில்லை” என்று கூறியிருக்கிறார்.
செல்லப்பசுவாமி யோகநாதரிடம் தான் குரு என்று ஒருநாளும் கூறியதில்லை. அப்படி யெல்லாம் அவரிடம் பேசியதும் கிடையாது. ஆனால் யோகநாதனை நாளும் பக்குவப்படுத்திக்கொண்டு வந்தார். யோகசுவாமியும் செல்லப்பரின் எண்ணங்களுக்கு ஒப்ப, குணத்துக்கு, உணர்வுக்கு ஒப்ப, திட்டங்களுக்கு, பேச்சுக்கு, நடையுடைக்கு ஏற்ப குருசொற்படி நடந்துகொண்டு, குரு வாயிலிருந்து அவ்வப்போது உதிரும் அமுதமொழிகளைக் கேட்டு பரவசப்பட்டுக்கொண்டிருந்தார்.
யோகசுவாமியின் மனம், மொழி, மெய் ஆகியன எல்லாம் ஒருமுக சிந்தனையுடன் ஒழுக்கத்தோடிருக்க செல்லப்பர் பழக்கினார். சற்றேனும் ஆணவம், குணக்கேடுகள் இருந்தாலும் அவற்றை சீடனுக்குத் தெரியாமலேயே உணரா வண்ணம் உடனே செல்லப்பர் தகர்த்தெறிந்துவிடுவார். யோகசுவாமியின் பொறிபுலன்கள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் ஆகிய அனத்தும் மெய்ப்பொருள் ஒன்றைத்தவிர வேறு எதிலும் சார்த்திருக்கக்கூடாது என்பதில் செல்லப்பர் மிக கவனமாக இருந்தார்.
குருநாதரோடு இருக்கும்போதெல்லாம் ஓய்வு என்பதில்லை, ஒரு திட்டமுமில்லை, ஒரு வழக்கமுறையுமில்லை. செல்லப்பரோடு ஒருநாள் வாழ்ந்தாலும் அது யோகசுவாமிக்கு பல்லாண்டு அனுபவத்துக்கு நிகராக இருந்தது.
பொறிபுலன்களுக்கு அடிமையாகாமல் மனம் பக்குவப்படவும் சிந்தை திரியாமல் ஏகாக்கிரமாக இருக்கவும் செல்லப்பர் பல வழிகளைக் கையாண்டு யோகசுவாமிகளைப் பழக்கினார். நல்லூர் கோயில் தேரடியில்தான் இருவரும் இருந்தனர். சிலசமயங்களில் சொந்தமாக சமைத்து சாப்பிடுவதுண்டு. காய்கறி வாங்க யோகசுவாமியை ஏறக்குறைய இரண்டு மணிநேரம் நடந்தே கூட்டிச்செல்வார் செல்லப்பர். சந்தையில் தனக்கு மிகவும் பிடித்த கத்தரிக்காயை வாங்கிக்கொண்டு வந்து பானையில் போட்டு சோற்றொடு சமைப்பார்கள். சமையல் மணம் மூக்கைத் துளைத்து யோகசுவாமியின் வாயில் உமிழ் சுரந்தாலும் உடனே பானயை உடைத்துவிடுவார். அன்று அவ்வளவுதான். சாப்பாடு ஏதுமில்லை .இப்படி மனத்தை பொறிபுலங்களுக்கு அடிமையாகாமல் அதிலிருந்து விலகி நிற்க, மனவடக்கப் பயிற்சி அடிக்கடி கொடுத்து யோகநாதனைப் பக்குவப்படுத்திக்கொண்டே வந்தார் செல்லப்பர்.ஒருமுறை வடக்கே இருக்கும் கீரிமலைக்கு குருவும் சீடரும் நடந்தே சென்றனர். பலமணிநேரம் வெய்யிலில் நடந்து கீரிமலையை அடந்தனர். கடுமையான வெயில் என்பதால் போனதுமே கீரிமலைக் குளத்தில் குளித்துவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டுவந்தார் யோகசுவாமி. கீரிமலையும் வந்துசேர்ந்தாயிற்று. செல்லப்பரும் யோகசுவாமியும் குளத்துக்கு அருகே சென்றனர். குளத்தில் போய்விழவேண்டும் என்று யோகசுவாமிக்கு ஆசை.
உடனே செல்லப்பர் “ என்ன குளத்தைப் பார்க்கத்தானே வந்தோம். பார்த்தாயிற்று, வா போகலாம்” என்று சட்டென திரும்பி நடந்து சென்றுவிட்டார். குருசென்றுவிட்டால் பிறகு சீடருக்கு அங்கே என்ன வேலை?
இப்படி புத்தி சுவாதீனம் அற்றவரைப்போலவே, பைத்தியக்காரன், விசரனைப்போலவே சுமார் நாற்பது ஆண்டுகள் தன் சுய ரூபத்தைக் காட்டாமலே தன் குருநாதன் செல்லப்பன் சென்றுவிட்டான் என்று யோகசுவாமி கூறியிருக்கிறார். ஆனால் கூடவே இருந்த யோகசுவாமிக்கு மட்டுமே அவர் ஒரு மாபெரும் சித்தர் என்ற உண்மை தெரிந்திருந்தது. அவரை ராஜகுரு என்றே வர்ணித்திருக்கிறார்.
1915ல் செல்லப்பசுவாமிகளின் மறைவுக்குப்பிறகு அவரின் அருள்வாக்குகளை ஞானமுத்துக்களாகக் கோர்த்து வெளியே கொண்டுவந்தவர் யோகசுவாமிகள். குரு உபதேசித்த அதே மகாவாக்கியங்களை அடியார்களுக்கும் போதித்தார்.
நற்சிந்தனைப் பாடல்கள் ஒன்றில் தன் சற்குரு செல்லப்பசுவாமியைப் பற்றி யோகசுவாமி குறிப்பிட்டிருப்பதாவது:
ஒருகறியும் ஒருசோறும் ஆக்கியுண்ணும் ஆசான்
ஒருபொல்லாப்பு மில்லையென்றான் உணர்.
ஓதாமல் வேதம் உணர்ந்த குருநாதன்
உண்மை முழுதுமென்றான் உணர்.
நாமறியோம் என்ற நல்ல திருவாக்கை
நாமறியச் சொன்னான் நய.
முடிந்த முடிவென்று முன்னாளில் ஆசான்
அடியவர்முன் சொன்னா னறி.
தேரடியில் வீற்றிருப்பான் சிரிப்பான் சினந்திடுவான்
ஆரறிவார் என்பா னவன்.
ஒருநாள் அதிகாலை நான்கரை மணிக்கு முதன்முறையாக சந்திக்க வந்த ஒருவரை உட்காரவைத்து சுமார் ஒரு மணிநேரம் வழக்கமான தியானத்துக்குப்பின் அவர் உபதேசித்தது:
“ ஒருவருக்கும் ஒரு குறையுமில்லை. உன்னைப் போலத்தான் நான். என்னைப் போலத்தான் நீ, நூதனமொன்றுமில்லை. எல்லாம் எப்பவோ முடிந்த காரியம். எண்ணாயிரம் வருஷங்களுக்கு முன்னே, டெல்லிமாநகரில், செப்புத் தகட்டிலே எழுதிவைத்திருக்கு. அதன்படி நடக்கும். எமக்கென்ன கவலை? பிரபஞ்சம் முழுவதையும் படைத்தவன் அவன். காப்பவனும் அவன். அழிப்பவனும் அவன். எனக்கும் உனக்கும் வேலை சும்மா இருத்தல்தானே. இரவில் நீ நித்திரைக்குப் போனபின் நடப்பது ஒன்றும் உமக்குத் தெரியாது. உன் வீடு வாசல், பொருள் பண்டம், காசு பணம், ஆடு மாடு யாவுக்கும் காவல் யார்? ஆரோ ஒருவன் இவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கிறான்தானே? காலையில் எழுந்தவுடன் நீ ஏன் என் வீடு, என் மாடு, என் மனைவி, என் பிள்ளையென்று எல்லாவற்றையும் உனது தலைப்பொறுப்பென்று நினைத்துக் கூத்தாடுவான்? இரவில் காப்பாற்றியவன் பகலில் காப்பாற்ற மாட்டானா? “ என்று அவருக்குக் கூறினார்.
அதிசயங்கள் பல சுவாமிகள் நடத்தியிருந்தாலும் தன் யோகசக்திகளை அவர் ஒரு போதும் வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதில்லை. ஒருமுறை இரண்டு பயணிகள் பஸ்ஸில் ஏறி வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றனர். அப்போது யோகசுவாமிகளும் வவுனியாவில் நின்று கொண்டிருந்ததைக் கண்டனர். ஆனால் சுவாமிகள் பஸ்ஸில் ஏறவில்லை. பின்னர் பஸ் யாழ்ப்பாணம் அடைந்தபோது யோகசுவாமிகள் திடீரென அங்கே நின்று கொண்டிருக்கக் கண்டனர். வாயடைத்துப் போயினர். தமக்குள் அவர்கள் ‘இவர் மகா சித்தர். பஸ் ஏறாமலே அவர் இங்கு வந்துவிட்டார்!” என்று பேசிக்கொண்டதை யோகசுவாமிகளுக்கும் கேட்டதாம்.
“ பஸ் வண்டியிருக்கு. புகைவண்டியிருக்கு, நான் ஏன் ஆகாயத்தில் ஒருவருங் காணாமல் பறக்கவேணும்? “ என்று சொல்லி சுவாமிகள் பக்தர்களிடம் சொல்லி சிரித்தாராம்.
இதேபோல் இன்னொரு சம்பவம் . சுவாமிகள் ஆண்டுதோறும் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம்வரை யாத்திரைக்கு நடந்தே செல்வது வழக்கம். அப்படி அந்த ஆண்டும் யோகசுவாமிகள் சென்றிருப்பார் என்று நினைத்த ஓர் அன்பர் (யாழ்ப்பாணத்தில் அந்த நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அவர் அடிக்கடி யோகசுவாமியை சென்று தரிசிப்பது வழக்கம்.) சுவாமி இல்லாவிட்டால் என்ன? நாம் போய் அவர் குடிலை தரிசனம் செய்தாலே போதும் என்று நினத்து அங்கு சென்றிருக்கிறார். சென்றவர்க்கு ஆச்சரியம். சுவாமிகள் குடிசையில்தான் இருந்தார். “உடம்பு சுகமில்லை அதனால் யாத்திரை போகவில்லை” என்று அவர்களை வரவேற்று, அமர்த்தி, சற்றுநேரம் பேசிவிட்டு அனுப்பிவிட்டார்.
ஓரிரு நாட்கள் கழித்து கதிர்காம யாத்திரைக்கு சென்றுவந்த அன்பர் ஒருவர் அங்கே படக்காட்சிகள் எடுத்திருந்தார். அதை இவரும் பார்த்தபோது ஆச்சரியத்திலும் ஆச்சரியம். யோகசுவாமிகள் கதிர்காமத்திலும் இருந்திருக்கிறார். அங்கே சமயச் சொற்பொழிவும் ஆற்றியது படச்சுருளில் பதிவாகி இருந்தது. இப்படி ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் இருக்கும் அற்புத யோகசக்திகளைப் பெற்றிருந்தாலும் அவர் அதை பெரிதுபடுத்திக் கொள்ளவில்லை.
வறுமை, துன்பம், கல்வி குடும்பப் பிரச்னைகள் என்று அன்போடும் பக்தியோடும் வந்த அன்பர்களுக்கு உதவியும் ஆலோசனையும் வழங்கிட அவர் தவறவில்லை.
ஒருமுறை தன் பெண்பிள்ளயின் திருமணத்தை நடத்திவைக்க பணமில்லாமல் ஒருவர் சுவாமியிடம் வந்தார். ஒன்றும் பேசாமல் அழுதுகொண்டிருந்தார். அவரை “இடரினும் தளரினும்” என்ற தேவாரப் பதிகத்தை முழுதும் பாடச் சொன்னார் சுவாமிகள். அப்படியே அவரும் அப்பதிகத்தை மனமுருகப் பாடிமுடித்ததும், ஓர் கார் வந்து வாசலில் நின்றது. வந்தவர் தான் சுவாமியின் அருளால் மலாயா நாட்டுக்குப் போனதாகவும் அங்கே அவருக்கு ரயில்வேயில் நல்ல வேலை கிடைத்ததாகவும், சுவாமிக்கு நன்றி செலுத்தும் வகையில் தன் சேமிப்பிலிருந்து முப்பது தங்கக் காசுகள் செய்து கொண்டுவந்திருப்பதாகவும் கூறி, ஒரு தட்டில் அதை சுவாமியிடம் கொடுத்தார். சுவாமிகள் உடனே அதை தேவாரம் பாடியவரிடம் கொடுத்து, “ பார்த்தாயா உன் பாட்டு சிவபெருமான் காதில் விழுந்து உனக்கு பொற்காசுகள் அனுப்பியிருக்கிறார். சந்தோஷமாக பிள்ளை திருமணத்தை நடத்தி முடி,” என்று வாழ்த்தியனுப்பினார்.
ஆத்ம தொண்டு செய்வதிலும் அவர் முன்னிலை வகித்தார். சிவதொண்டன் நிலையத்தைத் தொடக்கிவைத்து அது ஆன்மீகப் பயிற்சி மெற்கொள்ளும் இடமாகவும், சும்மா இருக்க மனத்தைப் பழக்கவும், தியானம் செய்யவும், ஞானதானத்தை புத்தகங்கள்மூலம் பரப்பவும் வழிகோலினார். சிவதொண்டன் என்ற ஒரு பத்திரிகையும் அன்பர்களை தொடங்கச் செய்தார். அதில் அன்பர்களின் ஆத்ம அனுபவங்களும், அவர்கள் பெற்ற உபதேசங்களும், சுவாமிகளின் நற்சிந்தனை பாடல்களும் வசனங்களும் இடம்பெற்றுள்ளன.
முதல் இதழில் சுவாமிகளின் நற்சிந்தனையின் ஒரு பகுதி: “ நமது உயிருக்குயிராய் இருப்பவர் கடவுளே. ஆகையால் நாம் அவருடைய உடைமை. அவருடைய அடிமை. நம்முடைய அசைவெல்லாம் அவருடைய அசைவே. நாம் அவரை ஒருபோதும் மறந்திருக்க முடியாது. நமக்கு ஒரு குறைவுமில்லை. நாம் என்றுமுள்ளோம். எங்குமிருக்கிறோம். எல்லாமறிவோம். இப்படியே நாம் சிந்தித்து சிந்தித்துக் கீழ்மையான குணங்களைப் போக்கி, மேலான தெய்வ தத்துவத்தை அடைவோமாக.”
சிவயோகசுவாமிகளின் சீடர்களில் மிக முக்கியமாகக் கருதப்படுபவர் அமெரிக்கா ஹவாயைச் சேர்ந்த சிவாயசுப்பிரமுனியசுவாமி. செல்லப்பசுவாமிகள் தன் தலையில் ஓங்கியடித்து தீட்சை வழங்கியதுபோல, யோகசுவாமிகளும் ஆன்மீக சாதனையில் மிகவும் பக்குவப்பட்ட நிலையில் இருந்த தன் அமெரிக்க சீடருக்கும் முதுகில் ஓங்கி அடித்து ஞானதீட்சையளித்தார். அவருக்கு ‘சிவாய சுப்பிரமுனியசுவாமி’ என்ற தீட்சா நாமத்தை வழங்கி, முதுகில் அடித்த அந்த ஓசை அமெரிக்காவில் கேட்கட்டும். பல கோயில்கள் நீ கட்டுவாய். பலருக்கு நீ உணவளிப்பாய்” என்றார்.
யோகசுவாமியின் வாக்கு தவறவில்லை. அமெரிக்காவில் கவாய் தீவில் ஒரு ஆதீனத்தை அமைத்து, சிவாலயத்தை எழுப்பி, இந்துயிசம் டுடேய் என்ற சஞ்சிகை மூலமும், பல சமய புத்தகங்கள் மூலமும், பலருக்கும் ஞான உணவை அளித்துக் கொண்டடிருக்கிறார்கள்.
-
புத்தாண்டு வாழ்த்து…
வெற்றி என்றும் தொடர்ந்திடவே
‘விஜய’வைத் தொடர்ந்து ‘ஜய’வரவில்,
நெற்றி வேர்வை சிந்திடவே
நிலத்தில் உழைக்கும் தோழருடன்
சுற்றம் நட்பு எல்லோரும்
சீரும் சிறப்பும் பலநலனும்
பெற்றே என்றும் வாழ்கவென
புதிய ஆண்டில் வாழ்த்துவமே…!
-
சித்திரையே வருக!
விப்ரநாராயணன்சித்திரையே வருக—என்றன்
நித்திரை நீங்கி விழித்திட—சித்திரையே
அல்ல லுற்றேன் தெளிந்தே னல்லேன்
அலைந்து திரிந்தேன் உணர்ந்தே னல்லேன்
வல்வினைகள் சூழ்ந்தன வருந்தினேன் அல்லேன்
நல்லெண்ணங்கள் தோன்றி நன்மைகள் செய்திட—சித்திரையேநூல்கள் பல படித்தேன் கல்வி பெறவில்லை
நூறு ஆலயங்கள் சென்றேன் பக்தி வரவில்லை
மொழிகள் பல கற்றேன் பேசத் தெரியவில்லை
விழிப்புடன் என்றும் வாழ இறைவன் அருள் பெற—சித்திரையேநல்லோர்கள் குழுவில் சேர்ந்து நலம்பெறவும்
எல்லோருடனும் இணைந்து நற்பணிகள் செய்யவும்
கல்லாதவர்கள் கல்விகற்க துணை புரியவும்
பொல்லாதவர்கள் திருந்தி மதிநலம் பெற்றிட—சித்திரையேஇன்பம் வந்தாலும் துன்பம் வந்திடினும்
அன்புடன் சமமாய் வாழும்நிலை பெறவும்
நன்பனாய் நல்லாசிரி யனுமாய் அனைவர்க்கும்
அன்பனாய் வாழ பரந்தாமன் அருள்கிட்டிட –சித்திரையே -
மனசு
இறுக்கிக்கட்டிச் சரமாய்
தொடுத்தபின்னும்
மணம்பரப்பும் மலர்போல
அடக்கிப்பின்னலிட்டும்
அடங்கமறுக்கும்
முன் உச்சிமுடிபோல
குடம்குடமாய் நீர்விட்டும்
மழையை விரும்பும்
மலர்ச்செடிபோல
எத்தனையோ மனிதர்கள்
அருகில் இருந்தும்
தொலைதூரத்திலிருக்கும்
உன்னையே எதிர்பார்க்கும்,
மனசு.


















