காதல் சிறகை காற்றினில் விரித்து
கவிஞர் காவிரி மைந்தன்
எண்ணிய வண்ணமெல்லாம் இதயம் பறக்க நினைக்கும் பருவம் இந்தக் காதல் பருவம்! வண்ண வண்ண மலர்கள் பூத்துக்குலுங்குவதைப்போல் மனசுக்குள் உற்சாகம் ஊற்றெடுக்க உயிர்ப்பூ சிலிர்க்கும்! இன்னுமிதைப் பற்றி எத்தனையோ புலவர்கள்.. கவிஞர்கள்.. படைப்பாளிகள் கொட்டிக் கவிழ்த்தபின்னும் கொள்ளையாய் கிடக்கிறது இந்தக் காதல் சுரங்கம்! இதய அரங்கிலிருந்து துவங்கும் இந்த ரகசியப் பாதையில் இருவரின் சந்திப்பு.. இமைகளின் படபடப்பு! இயற்கையின் படைப்பில் ஜீவன் உள்ளது என்பதற்கு காதல் மட்டும்தான் சத்திய சாட்சி!!
இளமையின் அரசல் புரசலான விஷயமல்ல.. இதயங்களின் பரிவர்த்தனை! ஆலாபனை! அன்பில் இருமலர்கள் ஒரே நேரத்தில் மலரும் விசித்திரம்! ஆனால் உண்மை!! கண்கள் நான்கும் கவிதை பாடும்! இமைகள் இருப்பது அப்போதுதான் இருவருக்கும் தெரியவரும்!! ஒரு முறை பார்வை நேரடியாய் விழுந்துவிட்டால் ஒரு கோடி கிடைத்துவிட்ட ஆனந்தம் கிடைக்கும்! மறுபார்வை பார்ப்பதற்குள் தடைகள் வந்துவிட்டால் மனமிரண்டும் தத்தளிக்கும்! மறு ஜென்மமே எடுக்கும்!
எனக்காகப் பிறந்தவள் நீ என்றே பல்லவி பிறக்கும்!
உனக்காகவே வாழ்கிறேன் நான் என்றே சரணம் தொடரும்!
அன்பின் பிணைப்பை அப்படியே அர்த்தப்படுத்த எந்த மொழியிலும் ஆயிரமாயிரம் வார்த்தைகளுக்கும் வலிமையில்லை! அனுபவத்தில் கண்டபின்னும் சொல்லச் சொன்னால் அனுபவித்துப் பார் என்றே வார்த்தை வரும்! சர்வ மதங்களின் கூட்டுப்பிரார்த்தனை நடத்த வேண்டுமென்றால் முதலில் காதல் மாநாடு போடுங்கள் – சர்வ மனங்களையும் இணைத்துவிடலாம்!
கல்லால்.. சிமெண்ட்டால்.. இரும்பினால் எல்லாம் பாலங்கள் கட்டுவார்கள்.. காதலில் மட்டும்தான் எண்ணங்களால் பாலம் அமைத்திடலாம் என்கிறார் கண்ணதாசன் எனச் சுட்டிக் காட்டுகிறார் முனைவர் சரசுவதி ராமனாதன் அவர்கள்.
ஒரு முறை கவிஞர் வைரமுத்து வானொலியில் வழங்கிய தேன் கிண்ணத்திலிருந்து வார்த்தெடுத்த வார்த்தை முத்துக்கள் இதோ..
“உன் வாழ்வின் கடைசி ஆசை என்னவென்று கேட்டால்.. இந்தப் பாடலை ஒலிக்கவிட்டு அனைவரும் விலகிச் சென்றுவிடுங்கள் என்றே கேட்பேன்!”
அது என்ன? இப்பாடலை ஒலிபரப்பும்போது அந்த முள் ஒலித்தகட்டின்மீது சுற்றுகிறதா? இல்லை.. இதயத்தின் மீது சுற்றுகிறதா? அன்பர்களே.. ஒரு கவிஞனின் ரசனையில் இப்பாடல் பெற்றுள்ள இடம் பார்த்தீர்களா? காதல் ரசம் அல்ல! அன்பின் மழை! காம ஊற்றல்ல! பரிவின் உச்சம்!!
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
கண்ணதாசனே.. இன்றும் என்றும் உன்னை நேசிக்காமல் இருக்க முடியவில்லை.. ஏன் தெரியுமா?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
யாரிடமிருந்து வரும் இவ்வார்த்தைகள்? கடல் வானம் உள்ள வரை என்பார்கள்.. உறவும் பிரிவும் உள்ளவரை உன் பாடல்கள் உலா வரும் என்றே போற்றி மகிழ்கிறேன்!
தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்வாயா
ஊர் உலகம் போற்ற வரும் என் உத்தமனைக் காண்பாயோ
இன்று மணம் முடித்த ஏந்திழைப் போல் நான் இங்கே
சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
எண்ணங்களாலே பாலம் அமைத்து
இரவும் பகலும் நடக்கவா
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி
இரு கை கொண்டு வணங்கவா
இரு கை கொண்டு வணங்கவா
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
முதல் நாள் காணும் புதுமணப் பெண் போல்
முகத்தை மறைத்தல் வேண்டுமா
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
முறையுடன் நடந்த கணவர் முன்னாலே
பரம்பரை நாணம் தோன்றுமா
பரம்பரை நாணம் தோன்றுமா
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது
அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால்
பேச மறந்து சிலையாய் இருந்தால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காதல் சிறகை காற்றினில் விரித்து
வான வீதியில் பறக்கவா
கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில்
கண்ணீர் கடலில் குளிக்கவா
கண்ணீர் கடலில் குளிக்கவா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பாலும் பழமும் திரைப்படம் 1961 – கவியரசு கண்ணதாசன் –
விஸ்வநாதன் ராமமூர்த்தி – ஏ.பீம்சிங் –
சிவாஜி கணேசன் – பி.சரோஜாதேவி (சரவணா பிலிம்ஸ்)..
http://www.youtube.com/watch?