Blog

  • நாலடியார் நயம் – 19

    நாலடியார் நயம் – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    19. பெருமை

    பாடல் 181

    ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
    காத லவரும் கருத்தல்லர்; – காதலித்து
    ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
    போவதே போலும் பொரு.

    மற்றவருக்கு ஒன்றைக் கொடுக்க
    மாட்டாது இளமையும் வீணாகக்
    கழிய ஆசை வைத்திருந்த
    காதல் பெண்டிரும் நீங்கினர்
    இன்னும் நாம் வாழ்வோமெனும்
    இச்சையை விடுத்துத் துறப்பதே
    ஆகச்சிறந்த செயல்.

    பாடல் 182

    இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
    பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; – அச்சார்வு
    நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
    என்றும் பரிவ திலர்.

    இல்வாழ்வால் இன்புற்றோம்
    இருக்கின்றோம் குறையின்றியென
    இனி வரப்போகும் துன்பமெனும்
    இடர் மறந்திருப்பர் அறிவிலார்
    இல்வாழ்க்கையின்பம் நிலையாக
    இருப்பன போல் தோன்றி
    இல்லாமல் அழிபவை எனும்
    இவ்வுண்மையை உணர்ந்தோர்
    இவ்வுலகில் எப்போதும் வருந்தார்.

    பாடல் 183

    மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
    சிறுமைப் படாதேநீர் வாழ்மின் – அறிஞராய்
    நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
    இன்றிப் பலவும் உள.

    இருந்த இடத்திலிருந்தே காரணமின்றி
    இளமை நிறம் பருவங்கள் போன்றவற்றில்
    மாற்றங்கள் பல உண்டாகுமெனவே
    மறுமைக்கு வித்தாகும் நல்லறங்களை
    மயக்கமின்றிச் செய்து துன்பமடையாமல்
    அறிவுடையோராய் வாழுங்கள்!

    பாடல் 184

    உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
    இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்
    சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
    ஆஅயம் கண்ணும் அரிது.

    மழைபெய்யாது வறண்ட காலத்தும்
    ஊற்றுநீர்க் கிணறு பிறர் இறைத்து
    உண்ணக்கொடுத்து ஊரைக்காக்குமென்பர்
    வறுமையால் தளர்ந்தபோதும் பெரியோர்
    வாரிக்கொடுப்பர் பிறருக்கு சிறியரோ
    செல்வம்மிக்க காலத்தும் தரமாட்டார்.

    பாடல் 185

    உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
    கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
    பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
    செய்வர் செயற் பாலவை.

    வெள்ளம் வரும் காலம் மிகுநீரைக் கொடுத்து
    வையகத்தோரை உண்பித்த ஆறு
    நீரற்ற காலத்தும் ஊற்றுக்குழியில்
    நீர்சுரந்து உதவுதல்போல் பெரியோர்
    தம் செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து
    தம்மாலான உதவியாற்றுவர் வறுமையிலும்.

    பாடல்186

    பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
    கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; – கருநரையைக்
    கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
    ஒன்றானும் தோன்றாக் கெடும்.

    பெரிய மலைகளையுடை
    பரந்த நாட்டின் வேந்தனே!
    பெரியோரிடம் உண்டான குற்றம்
    பெரும் வெள்ளெருதின்மேல்
    போடப்பட்ட சூடுபோல்
    தெளிவாகத் தோன்றும்
    தூயவெள்ளெருதைக் கொன்ற
    குற்றத்தைச் சிறியோர் செய்யின்
    குற்றமாகத் தோன்றாதழிந்து விடும்.

    பாடல் 187

    இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
    பயைந்த துணையும் பரிவாம் – அசைந்த
    நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
    பகையேயும் பாடு பெறும்.

    அற்பத்தனம் மிக்க நற்குணம்
    அற்றவரிடம் கொண்ட நட்பு
    வருத்தும் துன்பத்தையே தரும்
    விளையாட்டிற்குக்கூட தீய
    கெடுதலை விரும்பா நல்லவரிடம்
    கொண்ட பகையும் பெருமையைத்தரும்.

    பாடல்188

    மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
    ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; – எல்லாம்
    சலவருள் சாலச் சலமே; நலவருள்
    நன்மை வரம்பாய் விடல்.

    மென்மைக் குணமுள்ள பெண்களிடம்
    மென்மைத்தன்மை உடையவராயும்
    எதிரிகளிடம் அதைவிடுத்து
    எமனும் அஞ்சத்தக்கவராகவும்
    எல்லோரிடத்தும் வஞ்சகம் பேசுபவரிடம்
    எப்போதும் வஞ்சம் பேசுபவராகவும்
    நற்குணமுள்ளவரிடத்து நன்மையாய்
    நடப்பதும் எல்லையாயிருக்கவேண்டும்.

    பாடல் 189

    கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
    மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
    துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
    விளக்கினுள் ஒண்சுடரே போன்று.

    முகத்தைக் கடுமையாய் வைத்து
    மற்றவர் பற்றி மிகக் கடுஞ்சொல்
    பேசி அறிவை மயங்கச்செய்யினும்
    பிறர்பால் வேறுபாடின்றி தீபத்தின்
    பிரகாச ஒளிச்சுடர் போல்
    அசைவில்லாதவர் தூயமனத்தவர்.

    பாடல் 190

    முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
    பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; – அத்துற்று
    முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
    துக்கத்துள் நீக்கி விடும்.

    உண்ணத்தகும் உணவினை நாள்தோறும்
    உண்ணுமுன் இரப்போர்க்குக் கொடுத்து பின்
    உண்ணுவர் சான்றோர் அது முக்குற்றமான
    வெகுளி காமம் மயக்கத்தைப் போக்குவதுடன்
    வாழ்நாள் முழுதும் துன்பத்தினின்று காக்கும்.

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 81 (மறைமுனி)

    சேக்கிழார் பாடல் நயம் – 81 (மறைமுனி)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ‘’மறைமுனி  அஞ்சினான்போல்  மாதினைப்  பார்க்க  மாதும்
    இறைவனே அஞ்சவேண்டாம்  இயற்பகை  வெல்லும்  என்ன
    அறைகழல்    அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
    தரையிடைப்   படுத்து   கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்  என்று’’

    சேக்கிழார்பாடுகின்றார். இதன் நயத்தை இங்கே காண்போம்! இயற்பகையார் தம் மனைவியை முற்றும் துறந்து, வந்தவருக்குக் கொடுத்தபின், அம்மாது சிவவேதியராய் வந்த முனிவரைக் கண்டு அவர் இறைவனே என உணர்ந்து நின்றார். பின்னர் அவ்வேதியரிடம், ‘’இனி யான் செய்யத்தக்க பணி யாது?’’ எனக்  கேட்டு நின்ற  இயற்பகையாரிடம் ‘’இப்பெண்ணை யான் தனியே அழைத்துக் கொண்டு, உன் சுற்றத்தாரையும், இவ்வூரையும்  கடந்து செல்லும் வகையில் எனக்குத் துணையாக இருப்பாயாக!‘’ என்றார். இவ்வாறு அவ்வந்தணர் கேட்கும் வகையில் ஏதும் செய்யாது நின்றது தம் பிழை எனக் கருதி உடனே அவ்வூராருடன் போரிடுவதற்கு உரிய கவசங்களைப் பூண்டார். அவ்வூரினர், ‘’நம் ஊரில் வாழும் சிவனடியார் தம்மிடம் வந்த தூர்த்தருக்கு உரியவளாய்த் தம் மனைவியை வழங்கியதும், அப்பெண்ணை அவர் ஏற்றுக்கொண்டதும் தகாது!’’  என்று எண்ணியவராய் அவர்களைச் சூழ்ந்து தடுத்தனர்.

    அவர்கள்  தம் கையில்  கிட்டிய படைக்கருவிகளை எடுத்துக்கொண்டு கடலைப் போல் அவர்களைச் சூழ்ந்து  நின்றனர். மேலும் பலர் அந்தக்  காமாந்தகாரனை, ’’இழிகுணம் படைத்தவனே! எங்கள் குலக்கொடி  போன்றவளை   இங்கேயே விட்டு நீக்கி, ஊரார் கூறும் பழியையும்  தவிர்த்து விலகி  நீ போவாயாக!’’ என்று போர்தொடுத்து  வந்தனர்.

    அவர்கள் அவ்வாறு வெருட்டியது கண்டு சற்றே அஞ்சியவர்போல் நின்ற அந்த நான்மறை அந்தணர், இயற்பகையின் மனைவியாரை நோக்கினார்!

    அவரும் “தலைவரே! பயப்படவேண்டாம்; அவர்களை இயற்பகை வெல்லும்“ என்று சொல்ல; இதனை ஆதரித்து ஓசையிடும் வீரக் கழலணிந்த பெருமையுடையாராகிய நாயனார் கேட்டு, “அடியேன் அவர்களை எல்லாம், உமக்கு இடையூறு செய்யாமல் நிலத்தில் வீழ்த்தி விடுகின்றேன்; தேவரீர் தளரவேண்டாம்“ என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் போரிடத் தொடங்கினார்.

    இப்பாடலில்  ‘’மறைமுனி’’  என்ற தொடர்  இறைவன்  முனிவராந்தன்மையை மறைத்துத் தூர்த்த வேடந்தாங்கி வந்தவர் என்ற பொருளைத் தருகிறது. இறைவன் மறைகளாலும் காணுதற்கு அரியவன்! அவனை ‘’நேரிழையைக் கலந்திருந்தே  புலன்களைந்தும் வென்றான்’’ என்று தேவாரம் பாடுகிறது.

    அவர் முன்னர் அடியார் மனைவியை நாடி விரும்பியது போலவும்,  பின்னர் அஞ்சுவது போலவும் நடித்தார். அதனால் அவர் அடியாரின் மன உறுதியைச் சோதித்தமை புலப்படும். மேலும் இப்பாடலில்,

    ‘’இறைவனே,  அஞ்ச வேண்டாம்  இயற்பகை வெல்லும்!’’

    என்ற தொடரின் பொருள் நுட்பம்  போற்றுதற்கு உரியது. மனைவியார் கணவரின் கொள்கைப் பிடிப்பை உணர்த்தும் வகையில் ‘’ இயற்பகை  வெல்லும்!’’ என்றார். அவர் அந்த  மறைமுனியை, ‘இறைவன்’ என்று புரிந்து கொண்டமையால் அவர் இறைவனை அடையும் பக்குவமம் தவமும் உடையவர் என்பதும் புலப்படும். அவ்வகையில்  தம் கணவர் என்ற உறவை நீக்கி, இறைவனுக்குத் தம்மை அர்ப்பணித்தார் ஆதலால், ‘’இயற்பகை வெல்லும்!’’ என்றார்.

    நாயகிகள் தமது கணவர் பெயரைச் சொல்லலாகாது என்பது விதியும் வழக்குமாம். இங்கு அம்மையார் இப்போது தாம் இறைவனது  உடைமைப் பொருளாயினமையாலே நாயனாரிடத்து அவர் தமது கணவர் என்ற நினைப்பினை அறவே ஒழித்து நின்றார். ஆதலின் கணவரின் பெயரைக் கூறினார்! காரைக்கால் அம்மையாரின் ‘காதலாகிக்  கசிந்த’ கடவுட்பற்று  கணவரையே  வணங்க வைத்ததை, இங்கே இயற்பகையார் அடைக்கலப் பொருளாகிய மனைவியாரை வணங்கியதோடு ஒப்புநோக்கி மகிழ்தற்கு உரியது! அடுத்து மனைவியார், ‘’இயற்பகை வெல்லும்!” என்று உறுதிபடக் கூறியவுடன்,

    ‘’அறைகழல்’’   அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
    தரையிடைப்   படுத்து  கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்!’’

    என்று கூறிப் போரிட்டதாகச் சேக்கிழார் பாடுகின்றார். இயற்பகையார் அணிந்த வீரக்கழல் ‘’இவரே வெல்வார்!’’ என்று ஒலிப்பது போலவும், ‘’புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்!‘’ என்ற வகையில் இயற்பகையாரும் ஐம்புல ஆசையை வென்று, தாம் இறைவனாகக் கருதிய அடியார்பால் மனைவியை ஒப்படைத்த செயலைப் போற்றுவது போலவும் நயம்பட அமைந்துள்ளது. இதனை இப்புராணமே பின்னர் விளக்கும்!

    Share
  • இனச்சுடர் எழுக!

    இனச்சுடர் எழுக!

    ஏறன் சிவா

    வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார்
    மனங்களில் ஒளிவிடும் சுடரே!
    தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில்
    திடமுள மழலையாய்ப் பிறந்தாய்!
    மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர்
    அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்!
    பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப்
    பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்!

    பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப்
    புகழுடன் வளமுடன் திகழ;
    மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை
    அடைந்ததை வெறுக்கிற சிலரோ;
    நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப்
    பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்!
    எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது
    என்பதை அறிகிலார் மூடர்!

    பெருகுக விரைந்து பெருவெளி முழுதும்
    பெருகுக பெருகுக சுடரே!
    உருகுக தமிழர் உளத்தினைக் குழம்பாய்
    உருக்குக உருக்குக சுடரே!
    பருகுக பகைவர்ப் படையினை முற்றாய்ப்
    பருகுக பருகுக சுடரே!
    செருகுக தமிழ் இனச்சுடர் நெருப்பு
    திசையெலாம் எழுந்தவுண் மையை!

    Share
  • Annakannan Ideas 43: Add Credibility score

    Annakannan Ideas 43: Add Credibility score

    Media is running behind breaking news. Many media professionals are publishing stories without proper verification. So many users forwarding them, even without reading in full. How to deal with fake news / message / image / video / memes? Here is my solution.

     

    (To subscribe Annakannan’s channel in YouTube, please click here : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    அண்ணாகண்ணன் யோசனைகள் 42: Fake ID-களைத் தவிர்ப்பது எப்படி?

    Fake ID எனப்படுகிற போலிக் கணக்குகளை எப்படிக் கண்டறிவது? எப்படி தவிர்ப்பது? எப்படி தடுப்பது? இதோ என் யோசனை.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நாலடியார் நயம் – 18

    நாலடியார் நயம் – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

     18. நல்லினம் சேர்தல்

    பாடல் 171

    அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
    நெறியல்ல செய்தொழுகி யவ்வும் – நெறியறிந்த
    நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
    புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

    புத்தியில்லா வயதில் அடக்கமற்றவரோடு
    பழகி நெறியல்லாதன செய்து நேர்ந்த
    பாவங்களும் நல்லாரைக் கூடி ஒழுகலால்
    புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலில்
    படிந்த அதனின்று நீங்குதல் போல்விலகும்.

    பாடல் 172

    அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
    பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
    வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
    பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

    அறநெறி அறிவீர் அஞ்சுவீர் எமனுக்கு
    அறியார் கூறும் கடுஞ்சொல் பொறுப்பீர்
    வஞ்சனைக்குணம் வந்தடையாது காப்பீர்
    வெறுப்பீர் தீயவரின் தீச்செயலை
    வாழ்நாள் முழுதும் பெரியோரின்
    வாய்ச்சொல்லாம் அறிவுரை கேட்டு நடப்பீர்.

    பாடல் 173

    அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
    உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
    பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
    உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

    சேர்ந்தவர்களைப் பிரிவதும்
    சரிசெய்ய முடியா வியாதியும்
    மரணமும் உடல் எடுத்தார்க்கு
    உடனே வந்தெய்தலால் பழையதாய்த்
    தொடர்ந்து வரும் பிறப்பினைத்
    துன்பம் தருவது என அறியும்
    உண்மை அறிவுடையாரை என் மனம்
    உறுதியாய்ப் பற்றுவதாக!

    பாடல் 174

    இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
    பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
    பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
    நண்பாற்றி நட்கப் பெறின்.

    ஆராய்ந்து நோக்கின் பிறப்பு
    ஆறாத் துன்பம் தருவது எனினும்
    நற்குணங்கள்நிறை நல்லோரை
    நாடி எக்காலமும் நட்புகொண்டு
    நடக்கப்பெறின் இப்பிறப்பை
    எவரும் வெறுக்கமாட்டார்.

    பாடல் 175

    ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
    பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; – ஓரும்
    குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
    நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

    ஊரில் உள்ள சாக்கடைநீர்
    சிறப்புபொருந்திய நீரைச்
    சேர்ந்தக்கால் வேறுபெயரும்
    உண்டாகி பரிசுத்த நீரென
    உரைக்கப்படுதல் போல
    குலப்பெருமை இல்லாதோரும்
    குணப் பெருமையுடை
    நல்லாரைச் சேர்ந்தால்
    நிற்பர் மலை போல் உயர்ந்து.

    பாடல் 176

    ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
    அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
    குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
    குன்றன்னார் கேண்மை கொளின்.

    அழகிய இடத்தையுடை வானத்தில்
    அழகான கதிர்களையுடை சந்திரனைச்
    சேர்ந்திருப்பதால் களங்கமாகிய முயலும்
    சந்திரனைத் தொழும்போது
    சேர்த்துத் தொழப்படுமென்பதுபோல்
    குறைந்த சிறப்புடையவர்களும்
    குன்றுபோலும் நற்குணங்களுடையவரைச்
    சேரும்நேரம் மேன்மை அடைவர்.
    (சந்திரனது களங்கத்தை முயல் எனக்கூறுதல் கவிஞர்கள் மரபு).

    பாடல் 177

    பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
    நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; – தேரின்
    சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
    பெரியார் பெருமையைச் சார்ந்து.

    பாலுடன் கலந்த தண்ணீர்
    பாலாகக் கருதப்படுமேயல்லாது
    நீரின் நிறத்தை வேறுபடுத்தாது
    நன்கு ஆராய்ந்தால் நற்குணமுடைப்
    பெரியோரின் பெருங்குணத்தைச்
    சேர்தலால் சிறியோரின்
    சிறுமைக்குணமும் தோன்றாது.

    பாடல் 178

    கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
    ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
    மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
    செல்லாவாம் செற்றார்சினம்.

    பலவயல்கள் சேர்ந்த பெரிய நிலத்திலே
    மரக்கட்டையைப் பற்றி நிற்கும் புல்
    உழவரின் கலப்பைக்கு சிறிதும் அசையாது
    வலிமையற்றவராயினும் தம்மினும்
    வலிமை மிக்காரைச் சார்ந்தால்
    பகைவரின் சினம் எடுபடாமல் போய்விடும்.

    பாடல் 179

    நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
    குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; – கலநலத்தைத்
    தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
    தீயினம் சேரக் கெடும்.

    நிலவளத்தால் செழித்து வளரும்
    நெற்பயிர்போல் தாங்கள் சேரும்
    கூட்டத்தால் ஆவர் மேலானவராய்
    கடலில் செல்லும் கப்பலின் பெருமையை
    சுழற்காற்றுத் தாக்கிக் கெடுப்பதுபோல்
    தீயோர் சேர்க்கையால் கெடும்
    ஒருவரின் மேன்மை.

    பாடல் 180

    மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
    இனத்தால் இகழப் படுவர் – புனத்து
    வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
    எறிபுனந் தீப்பட்டக் கால்.

    காடு தீப்பற்றி எரியும்போது மணம்
    கமழும் சந்தனமரமும் வேங்கைமரமும்
    கருகிப்போகும் என்பதுபோல் மனதில்
    கடுகளவு குற்றமில்லா நல்லவராயினும்
    கெட்டவர் சேர்க்கையால் இகழப்படுவர்.

    Share
  • (Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

    (Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com


    முன்னுரை

    தமிழிலக்கண, இலக்கிய உரைகள் படைப்பிலக்கியங்களுக்கு நிகரான அகப்புறக் கட்டமைப்பைக் கொண்டவை அவற்றை ஒருமுறை ஓதியறிந்தாரும் இந்த உண்மையை உணர்வர், ஒப்புவர். பரிமேலழகரின் திருக்குறள் உரையும் அவற்றுள் ஒன்று. வலிமையான தரவுகளோ சான்றுகளோ இல்லாத நிலையிலும் தமிழியல் உலகத்தின் மாபெரும் மறுதலிப்புக்கு ஆளானவர். இதனால் புலமையுலகுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பெரிது. ஒரு மாபெரும் இலக்கியச் செல்வத்தின் அருமை பெருமைகளை மீட்டெடுத்து ஆய்வுலகத்தின் பார்வைக்கு வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. அழகரின் உரைகாணும் நெறிகளில் ‘பண்பாடு காத்தல்’ என்பதும் ஒன்று.  மாறுபட்ட கருத்துக்களை அவர் கையாளும் முறை பற்றி இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    • உரைவேற்றுமையும் அழகர் பண்பாடும்

        அழகர் திருக்குறள் உரையில் எந்தக் குறட்பாவிற்கான உரையிலும் தனது கருத்தே சரி என்னும் வாதத்தை முன்வைத்தார் என்பதற்கு வலிவான சான்றேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

    1. தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்வார்.
    2. தன்னுடைய கருத்திற்கேற்ற பாடங்களையே ஏற்பார்.
    3. மூலத்திற்கு நெருங்கி வராத கருத்துக்களைச் சுட்டுவார்.
    4. உரைநெறி பிறழ்வை இலக்கண, இலக்கியச் சான்றுகளால் மறுப்பார்.
    5. பிற உரையாசிரியர்களின் இருவகைப் புலமைச் சோர்வை எடுத்துக் காட்டுவார்.
    6. மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாத நிலையில் ‘இவ்வாறு உரைப்பாரும் உளர்’ என்று சுட்டிக்காட்டி அமைவார்.

    இவற்றுள் இறுதியாக அமைந்த ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்குள் அமைந்திருக்கும் உரைநிலைப் பண்பாட்டை அறிவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

    1.1. பார்வையும் நோக்கும்

    பார்வையும் நோக்குமாகிய இரண்டும் கண்களின் வினையே. எனினும் ‘பார்வை’ என்பது மனத்தோடும் மூளையோடும் பொருந்தாத நிலையிலும் நிகழக்கூடும். ஆனால் நோக்கு அத்தகையதன்று. ஒரு குறிக்கோளோடு பார்ப்பதைத்தான் நோக்கு என்ற சொல் குறிக்கும்.

    ‘அரிமா நோக்கு’ 1
    ‘நோக்குதற் காரணம்’ 2
    ‘கோல்நோக்கி வாழும் குட’ 3
    ‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ 4
    ‘இருநோக்கு இவள் உண்கண்’ 5
    ‘கண்களவு கொள்ளும சிறுநோக்கம்’ 6
    ‘நோக்கரிய நோக்கே!’ 7
    ‘பருகிய நோக்கெனும்’ 8
    ‘மீன் நோக்கு நீள்வயல்’ 9

    முதலிய இலக்கியத் தொடர்களும் நோக்கம், பார்வையின் வேறுபட்டிருப்பதைப் புலப்படுத்தக் கூடும்.

    1.2. உரைப்பாரும் உளர்

    பழந்தமிழிலக்கண, இலக்கிய உரைகளில் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் பெருவழக்கு. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களுக்கான மாறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற நெறியினும்  இது வேறானது. ‘மூலத்திற்கான என் கருத்து இது. ஆனால் இவர் இப்படிச் சொல்கிறார். எதனை ஏற்பது என்பது கற்பார் கடன்’ என்பதே ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருளாகும். இத்தகைய நேர்வுகளில் பிற உரையாசிரியர்கள் அவ்வாறு உரைகொள்வதற்கான காரணத்தையும் சுட்டிச் செல்கிறாரேயன்றி அக்காரணமே தவறு என்று அவர் சொல்ல மாட்டார்.

    1.3. ‘உரைப்பினும் அமையும்’ என்பது வேறு

    உரைப்பாரும் உளர்’ என்னும் தொடரால் பரிமேலழகர் உரைப்பது ‘உரைப்பினும் அமையும்’ என்பதனினும் வேறானது. ‘உரைப்பினும் அமையும்’ என்றால் குறிப்பிட்ட குறட்பாவிற்குத் தன்னளவிலேயே பொருத்தமான வேறொரு உரையினைக் காணமுடியும் என்பதைச் சுட்டுவதாகும். ஒரு குறட்பாவின் அமைப்பு ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்களைத் தனக்கே தோன்றும் அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால் பிறருக்குத் தோன்றுதல் சொல்ல வேண்டாவாயிற்று. இந்தப் பண்பின் அடிப்படையில்தான் அவர் உரைப்பாரும் உளர் என்னும் தொடரைக் கையாள்கிறார். இத்தகைய உயர்பண்பு தற்காலத்தில் காண்பதற்கு அரியது என்பதன்று. யாண்டும் இல்லையென்றே கூறலாம்.

    “ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
    கொற்றம் கொளக்கிடந்தது இல்”10

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒற்றினானே எல்லார் கண்ணும் ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை அறியாத அரசன் வென்றியடையக் கிடந்த வேறொரு நெறியில்லை”11

    என்று பொழிப்புரை எழுதி,

    “இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும்.”12

    என்று மற்றொரு உரை எழுதுகிறார். மேற்கண்ட உரைகளில் முன்னதில் ‘கிடந்தது’ என்பதற்கு ‘வெற்றிக்கான வழி’ என்று உரைகாணும் அழகர், பின்னதில் ‘வெற்றியே’ என்று உரைகாண்கிறார். இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம்.

    “மதியும் மடந்தை முகனும் அறியா
    பதியிற் கலங்கிய மீன்”13

    என்னும் குறட்பாவிற்கு,

    “வானத்து மீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இது மதி இது முகம் என்று  அறியமாட்டாது  தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன”14

    எனப் பொழிப்புரை எழுதி,

    “இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின் மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.”15

    என்று மற்றொரு உரை எழுதுகிறார். இவ்விரண்டு உரைகளுள் முன்னதில் மீன்களின் கலக்கமாகிய செயல் முதன்மைப்படுத்தப்படுகிறது. பின்னதில் மீன்கள் படர்க்கையாக்கப்பட்டு “இவை அறியும் இவை அறியா” என வினைமுடிபு காணப்பட்டுள்ளது. இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம். இதிலிருந்து மாற்றுரை காண்பதிலும், மாற்றுரையை மறுக்கும் போதும் அழகர் கொண்டிருந்த பொறுப்புணர்வும் அச்சமும் சிந்திக்கற்பாலன. எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று எடுத்தெறிந்து உரையெழுதும் போக்கு அவர் அறியாதது. தனது கருத்து இது என்று சொல்லுவார். பிறருடைய கருத்துக்கு மூலத்தின் அடிப்படையிலேயே மறுப்புச் சொல்வாரேயன்றித் தனது கருத்தினை மையமாக வைத்து அவர் மறுப்புச் சொன்னதாகத் தகவல் இல்லை. சுய முரண்பாடு இல்லாத உரையாசிரியர் அழகர். இனிச், சில குறட்பாக்களுக்குப் பிறர் கூறும் கருத்துக்களை அவர் மதிக்கின்ற பாங்கு சுட்டும் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்கு ஆளான சில குறட்பாக்களை ஆராயலாம்.

    1.3.1. செய்யாமையா? செய்யாமலா?

    இருக்கின்ற பாடத்தை வைத்து உரை சொல்கிறார் அழகர். அதாவது தான் கூறும் உரைக்கேற்ற பாடத்தைக் கொள்கிறார். அதுதான் பாடமாக இருத்தல் வேண்டும் என்று நம்புகிறார். உரை எழுதுகிறார்.

    “செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
    வானகமும் ஆற்றல் அரிது”16

    என்னும் குறட்பாவிற்குத்,

    “தனக்கு முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது”17

    எனப் பொழிப்புரை எழுதுகிறார். எழுதிக்,

    “கைம்மாறெல்லாம் காரணமுடையவாகலின் காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.”18

    என விளக்கவுரை தருகிறார். ‘கைம்மாறெலலாம் காரணமுடையன’ என்றால் செய்கிற உதவியெல்லாம் திரும்பிவரும் நாள் (பிரதிபலன்) எதிர்பார்த்து’ (தற்காலத் திருமணத்தில் மொய் எழுதுவதுபோல) என்பதாம்.  ஆனால் அதிகாரம் ‘செய்ந்நன்றி அறிதல்’ ஆதலின் செய்த நன்றியைப் பற்றித்தான் அதிகாரப் பொருண்மை இருத்தல் வேண்டும். இருக்கிறது. செய்வாரின் தகுதி பற்றியோ அவன் செய்வானா மாட்டானா என்னும் ஐயம் பற்றியோ செய்ய இயலாத அவன் நிலைமை பற்றியோ சிந்திக்குமாறு அவ்வதிகாரப் பொருண்மை அமையவில்லை. ‘செய்’ந்நன்றி என்பதாலேயே ‘செய்யாமல் செய்’த உதவி என்பது பாடமாயிற்று என்பது அழகர் கருத்து. ஆனால்,

    “செய்யாமைச் செய்த உதவி எனப் பாடம் ஓதி மதித்து உதவ மாட்டாமை உள்ள இடத்துச் செய்த உதவி” என்று உரைப்பாரும் உளர்”19

    பிற உரையாசிரியர்கள் செய்திருக்கும் உரையினைச் சுட்டிக்காட்டி அமைகிறார். இங்கே நோக்க வேண்டியவை,

    • அதிகாரப் பொருண்மையை உள்வாங்கித் தான் கொண்ட

    பாடத்தின் அடிப்படையில் உரை எழுதுகிறார்.

    • பிறர் கொள்ளும் பாடத்தையும் அதனடிப்படையில்

    அவர் சொல்லும் உரையையும் காட்சிப்படுத்துகிறார்.

    • அவ்வுரை பற்றிய எந்தக் கருத்தினையும்

    பதிவு செய்யாமல் விடுகிறார்.

    • அவர் கொண்ட பாடம் பற்றிய தமது கருத்தினையும்

    பதிவு செய்யாமல் விடுகிறார்.

    ‘செய்யாமை’ என்னும் மற்றவர் கொண்ட பாடமும் ‘செய்யாமல்’ என்னும் அழகர் கொண்ட பாடமும் பாடபேதங்களாக மட்டும் நிற்காமல், மற்றவரின் பார்வையையும் அழகரின் நோக்கினையும் அறிந்து கொள்ள உதவும் கருவிகளாகவும் பயன்படுகிறது.

    1.3.2. ‘ஈதல்’ பண்பா? பொருட்பன்மையா?

    மேல் அதிகாரப் பொருண்மையினை உள்வாங்கிச் ‘செய்தற்கு இயலாத வறியவர்கள்’ என்னும் பொருள் தரும் செய்யாமையைப் பாடபேதமாகக் கொண்டு எழுதப்பட்ட உரையினை எடுத்தோதிய அழகர் மற்றொரு இடத்தில் முந்தைய குறட்பாக்களின் சாரத்தை உள்வாங்கி உரையெழுதிய குறட்பாவையும் பிறர் தமது புலமையாற்றலால் எழுதிய பல உரைகளையும் காட்சிப்படுத்துகிறார்.

    “இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
    குலன் உடையான் கண்ணே உள”20

    என்பது குறட்பா. ஈகை என்னும் அதிகாரத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் இந்தக் குறட்பாவிற்கு,

    “யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்க்கண் சொல்லாமையும் அதனைத் தன் கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவ்விரண்டும் குலன் உடையான் கண்ணே உளவாவன” 21

    எனப் பொழிப்புரை எழுதுகிறார்.

    1.3.2.1. பிறருடைய பார்வையில் ஈதல்

    உரையாமை, ஈதல் என்னும் இரண்டும் தொழிலடியாகப் பிறந்த பண்புச் சொற்கள். அவ்விருவகைப் பண்புகளும் நல்ல குடியிலே பிறந்தவரிடத்தில் உளவாகும் என்பது அழகர் கொண்ட இலக்கணத்திற்கான கருத்து. ஆனால் ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு மற்றவர் கூறும் உரைகளைப்  பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.

    1. அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும்22

    2. அதனைப் பின்னும் பிறனொருவன் சென்று அவன் உரையாவகைக்
    கொடுத்தல் எனவும்23

    3. யான் இதுபொழுது பொருளுடையன் அல்லேன் எனக் கரப்பான்
    சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும்24

    உரைப்பாரும் உளர். அவர், ’ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.25

    இந்தக் குறட்பாவில் தன்னுடைய உரைக்கு ‘ஈதல்’ என்பதை வினையடியாகப் பிறந்த பண்பாகக் கொள்கிறார் அழகர். உரையாமையும் ஈதலுமாகிய இவையிரண்டும்” (இவ்விரண்டு உயர்பண்புகளும்) என்னும் உரைப்பகுதி காண்க.

    1.3.2.2. பொருட்பன்மை என்றால் என்ன?

    ஈதலாகிய தொழில் ஒன்று. ஈவார்க்குப் பயன்படும் பொருள்கள் பல. எனவே தொழில் ஒன்றாயினும் ஈயப்படும் பொருள்கள் பலவாதலால் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாயிற்று. ‘தானம்’ ஒன்றுதான். அன்னதானம், சொன்னதானம், கன்னிகாதானம், பூதானம், வித்யாதானம் எனப் பல்வகைப்படுதலின் ‘ஈதல்’ என்னும் சொல்லுக்குள் அடங்கும் தானங்கள் பலவாம். இந்தக் கருத்தினை அழகர் ஏற்றுக் கொள்கிறாரா என்பது இங்கே கருத்தில்லை. இப்படிச் சொல்கிறார்கள் என்று ‘உரைப்பந்தி’ வைப்பதோடு அமைதியடைகிறார்.

    1.3.2.3. அழகர் உரையின் ஆழமும் பொருத்தமும்

    ‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் ஈகையது இலக்கணம் (221), ஈதலின் சிறப்பு (222), பெறுதலின் இழிவு (222) என நிரல்பட ஆசிரியர் கூறுகிறார்.

    “மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவை உணர்த்தியது”26

    என்னும் மூலக்கொடுமுடியில் நிற்கிறார் அழகர். அதாவது இதற்கு முந்தைய குறட்பாவில் குறிப்பிட்ட தீதினை ஒழிக்க வேண்டுமல்லவா? எது தீது? எவ்வம் உரைத்தல் தீது! அதனால் ‘உரையாமை’ என்றார். இனி நன்மையைச் செய்ய வேண்டுமல்லவா? எது நன்மை? ஈதல் நன்மை! அதனால் ஈதல் என்றார். இலன் என்னும் எவ்வம் உரையாமையும் பண்பு. தொடர்ந்து ஈதலும் பண்பு. இவ்விரண்டு பண்புகளும். நற்குடிப் பிறந்தார் மாட்டு உளவாம் எனக் கருத்துரைத்தார். ஈதல் என்பதற்கான பல்வகை அறச்செயல்கள் என்னும் பொருள் பற்றிக் கருத்துரைக்காமல் தானுண்டு தன் உரையுண்டு’ என அடக்கமாகிவிடுவதைக் காணமுடிகிறது.

    1.3.3. பெருமைச் சிதைவா? நம்பிக்கைத் துரோகமா?

    பிறனுக்குரிய மனையாளை விரும்புவதை வடநூல்கள் ‘பரகீயம்’ என வழங்கும். அதாவது அவளுடைய ஒப்புதலோடு நடப்பதால் பிழையில்லை என்பது கருத்து. ஆனால் திருக்குறள் அதனை அறத்துப்பாலில் வைத்து ஆராய்வதால் பாவம் என்றே வலியுறுத்துகிறது. நடப்பியலில் அது ஒருவனுக்கான பெருமையைச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டுகிறது.

    “எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
    தேரான் பிறனில் புகல்” 27

    என்னும் குறட்பாவிற்குக்,

    “காமமயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல் எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்?” 28

    என வினாவடிவில் அமைந்த குறட்பாவிற்கு வினா வடிவிலேயே உரையெழுதியிருக்கிறார். எழுதியவர்,

    ‘தேரான் பிறன்’ என்பதனைத் ‘தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்”29

    எனப் பிறர் கூறும் உரைப்பகுதியினைச் சுட்டிச் செல்கிறார்.

    1.3.3.1. அழகரின் அரிய நோக்கு

    அதிகாரம் அறத்துப்பாலில் அமைந்துள்ளதாலும் ‘பிறனில்’ என்பதற்குப் பிறன் ஒருவனுடைய மனைவி இருக்கும் இல்லம் என்னும் பொருளே சிறத்தலாலும் ‘தேரான்’ என்பதற்குத் தாம் செய்யும் பிழையை உணராதவன் என்னும் பொருள் பொருத்தமுடையது என்பதாலும் அவ்வாறு தேராமைக்குக் காமமே காரணம் என்பதாலும் ‘தம்மை ஐயுறாத பிறன்’ என்பதில் பொருட்சிறப்பு ஏதுமில்லையாதலாலும் பிறனை ஏமாற்றுதல் என்பதனினும் கணநேரக் காமத்திற்காக ‘அறவழு’ உண்டாக்கும் வடு பெரிது என்பதாலும் அழகருக்கு இவ்வாறு உரைகூற நேர்ந்தது. மேலும் இலக்கிய நுகர்வு அடிப்படையிலும் ‘எனைத்துணை’ என்பதற்கேற்பத் ‘தினைத்துணை’ என்னும் முரண் தரும்பொருள் நுட்பத்தை அழகர் சிந்தித்து உரையெழுதுவதாகக் கருதலாம்.     தினைத்துணையும் தேரான் (ஆகி) பிறனில் புகல் (செய்யின்) எனைத்துணையார் ஆயினும் என்னாம்? என்னும் உரைநடை நிரலை ‘என்னாத்த படிச்சு என்னாத்த செய்யறது?” என்னும் வழக்கோடு ஒப்புநோக்குக.

    ‘பிறனில் புகல்’ என்னும் காரியத்திற்குத் ‘தேராமையைக் காரணமாக்கினால்தான் அறம் சிறக்க ஏதுவாகும். ‘தேராதவனாகிய பிறன்’ என்பதனினும் ‘அறக்கழிவு’ என்பதனைத் தான் தேராமல்’ என்பது வலிமையுடைத்து. அதிகாரம் பிறனில் விழைபவனுடைய ஒழுக்கம் பற்றியதேயன்றித் ‘தம்மை ஐயுறாத பிறனைப் பற்றியதன்று’. அழகர் இந்த அளவுக்குச் செல்லவில்லை. ‘இப்படியும் உரை அமைந்திருக்கிறது’  அப்படிச் சொல்வதற்கு இடமிருக்கிறது என்ற அளவில் சுட்டி அமைதியடைகிறார்.

    1.3.4. ஆவது அறிதல் என்றால் என்ன?

    திருவள்ளுவர் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் அறிவுடைமை என்பதும் ஒன்று. இவ்வதிகாரத்தில் ஐந்து பாடல்களில் அறிவின் இலக்கணம் கூறிய வள்ளுவர், தொடர்ந்து அவ்வறிவினை உடையாரது இலக்கணத்தைக் கூறுகிறார். அறிவு நுண்பொருளாதலின் அதன் உடைமையை உடையார் செய்யும் செயல்வழியேயன்றிப் பிறவழி அறிதல் இயலாதாம். எனவே எதிர்வருவதை அறியும் ஆற்றலுடையாரும் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவருமே அறிவுடையார் என இலக்கணம் வகுப்பர் (427, 428). அவ்விலக்கணம் கூறும் குறட்பாக்களுள்,

    “அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்”30

    என்பதும் ஒன்று. இக்குறட்பாவிற்கு,

    “அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார் அறிவிலராவார்  அதனை முன் அறிய மாட்டாதார்”

    முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது; வந்தால் அறிதல்”31

    என்னும் விளக்கத்தினை அழகர் எழுதுகிறார். எழுதி,

    “இனி, ‘ஆவது அறிவார்’ என்பதற்குத் ‘தமக்கு நன்மையறிவார்’ என்று உரைப்பாரும் உளர்”32

    என ஆவது அறிதல் என்னும் தொடருக்குப் பிறர் காணும் உரையினைப் பதிவிடுகிறார். ஆவது என்னும் தொடருக்குச் செயப்படுபொருளாகத் தமக்கு ஆவது எனக்கொள்ளுமம் பிறருடைய உரைக்கருத்துப் பற்றி எதுவும் தெரிவிக்காது அப்படியே பதிவு செய்து விடுகிறார்.

    1.3.4.1. அழகரின் அரிய நோக்கு

    பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாத நிலையில் அறிவினால் உண்டாகும் பயனேதும் இல்லையாதலால் அறிவின் பயன் பிறர் நலம் பேணுதலே என்பது சொல்லாமல் பெறப்படும். தனக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் கேடு வரும் செயல்ளைத் தன் இருவகை அறிவாலும் உய்த்துணர்ந்து காப்பதே அறிவுடையாருக்கு இலக்கணமாக இருத்தல் இயலும்; ‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ என்பதும் ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை’ என்பதும் அக்கருத்தின் சாரமே! ‘ஆவது அறிவது’ என்பதற்குத் தமக்கு வரும் நன்மை என உரைகொள்வது அறிவுடைமையின் முழுப்பயனைச் சுட்டுவதாகத் தெரியவில்லை. மேலும் அவ்வுரைப்பொருள் அழகரின் உரைப்பொருளிலேயே அடங்கிவிடுகிறது என்பதையும் நோக்கினால் அழகர் உரையின் மாண்பு விளங்கும். இருப்பினும் இவற்றில் எதனையும் முன்னெடுக்காது ‘தமக்கு நன்மை அறிவார்” என்று பிறர் கூறுகின்றனர்’ என வாளா அமைந்துவிடுகிறார்.

    1.3.5. அகத்திணை நுட்பம்

    முப்பெரும் பொருண்மைகளுக்கு உரையெழுதியவர் அழகர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் தொடக்கத்திலேயே ‘வீட்டை’த் தவிர்த்துவிடுகிறார். அவருடைய உரை யாண்டும் முரண்பாடு இல்லாமல் அமைந்ததற்கு இது ஒரு தலையாய காரணம். அந்த வகையில் காமத்துப் பாலுக்கு உரையெழுதுகிறபோது அகத்திணைத் தலைமக்களாகவே அவர் மாறிவிடுகிறார். அகத்திணையின் தலைமைப் பாத்திரம் தோழியே என்பது அறிஞர் முடிவு. தோழிக்கும் காதல் உண்டு. தோழி தலைவியாகிறபோது தலைவி தோழியாவாள். சுட்டி ஒருவர் பெயர்கொளாமைக்குக் காரணம் இதுதான். கண்ணகிக்குத் தேவந்தி தோழியாகலாம். ஆனால் தேவந்திக்குக் கண்ணகி தோழியாக முடியாது. இந்த அகப்பொருள் மரபை உள்வாங்கிக் கொண்டாலேயொழிய  அகத்திணை இலக்கியங்களைச் சுவைப்பது கடினம்.

    1.3.5.1. அழகர் செய்துகொள்ளும் அதிகாரப் பொருளமைதி   

    ஏனைய பால்களில் உள்ள அதிகாரங்களைப் பொருண்மை நிலைக்கு ஏற்பப் பகுத்து உரையெழுதும் அழகர் காமத்துப்பாலின் அதிகாரப்பகிர்வை அகத்துறைகளின் அடிப்படையில் கொள்கிறார். சான்றாக, ‘அவர் வயின் விதும்பல்’ என்னும் அதிகாரப் பொருண்மையைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்கிறார்.

    • தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது (1261)
    • ஆற்றாமை மிகுதலின் இடையீடின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும் என்ற தோழிக்குச் சொன்னது (1262-1264)
    • தலைமகன் வரவு கூற “ஆற்றாயாய்ப் பசக்கற் பாலையல்லை” என்ற தோழிக்குச் சொல்லியது (1265 -1267)
    • வேந்தற்கு உற்றுழி பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. (1270)

    இந்தப் பாகுபாடு அதிகாரப் பொருண்மையை நன்கு உள்வாங்குதற்கும் ‘கூற்று யாருக்கு உரியது’ என்பதை அறிந்து கொள்வதற்கும் அதனால் வெளிப்படும் உணர்ச்சியினைத் துல்லியமாக உணர்ந்து கொள்வதற்கும் பயன்படலாம் என்பது அழகர் கருத்து. இந்த அதிகாரத்தில் வந்த ஒரு குறட்பா இப்படி அமைகிறது,

    “புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?

    கண் அன்ன கேளிர் வரின்”33

    இந்தக் குறட்பாவிற்கு,

    கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கியான் புலக்கக் கடவேனோ? அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக் கடவேனோ? அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?34

    என்று உரையெழுதிப்,

    “புலவியும் புல்லலும் ஒரு பொழுதின் கண் விரவாமையின் ‘கலப்பேன்கொல்’ என்றாள். மூன்றனையும் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று.” 35

    என்ற விளக்கத்தையும் தருகிறார். தந்து,

    “இனிக் கலப்பேன்கொல் என்பதற்கு “ஒரு புதுமை செய்யாது
    பிரியாத நாட்போலக் கலந்து ஒழுகுவேனோ? என்று
    உரைப்பாரும் உளர்.” 36

    எனப் பிறர் கூறும் உரையைப் பதிவு செய்கிறார் அழகர்.

    1.3.5.2. அழகரின் அரிய நோக்கு

    தலைவியின் விதும்பலுக்குக் காரணம் தலைவனின் வரைவு நீட்டிப்பே. நீட்டித்து வந்ததால் புலப்பதா? நீட்டித்தாலும் வந்துவிட்டானே என்பதால் புல்லுவதா? புலத்தலையும் புல்லலையும் ஒரே காலத்தில் செய்ய இயலாதே? புலக்குங்கால் புல்லல் ஆகாது. புல்லுங்கால் புலத்தல் ஆகாதே என்னும் தலைவியின் தடுமாற்றத்தையும் வாராத் தலைவன் வந்துழி அவள் வெளிப்படுத்தும் உணர்ச்சி மெய்ப்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அழகர் உரையெழுதுகிறார். பிறர் புலத்தல், புல்லல் ஆகிய இரண்டு செயல்களின் வேறாய் இயல்பான செயலொன்றே  இருப்பதாக எண்ணி உரையெழுதினர். இலக்கணம் அறியாமையைப் போக்குவது. இலக்கியம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது. அவ்வனுபவங்களை அழகர் தம் கற்பனையில் முழுமையாக்கித் தருகிறார். இருந்தும் பிறருடைய கருத்தினைப் பதிவு செய்வதோடு அமைந்துவிடுகிறார்.

    1.3.6. ‘எனக்கு’ என்றவர் தலைவியா? தோழியா?

    அழகர் தமிழ் மரபறிந்தவர். அவருடைய உரை பலவிடங்களில் இலக்கிய மரபு தழுவி அமைந்துள்ளது. திருக்குறள் ஓர் இலக்கியம். அதற்கு இலக்கிய மரபுசார்ந்த உரை பொருத்தமே. சான்றாகக் ‘கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதைச் சிலர் அறிவியல் கண்கொண்டு திறனாய்வு செய்வர். பத்தினிப்பெண்கள் மழைவேண்டின் உடன் மழை வரும் என்பது அந்நாள் சமுதாய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவள் கற்பின் வலிமை பற்றிய கற்பனை மதிப்பீடு.  வான்மழை பெறல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே! என்பது இலக்கிய மரபு. அந்தக் குறட்பாவின் இறுதியில் ‘இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என்னும் அழகர் குறிப்பினைப் பலரும் நோக்குவதில்லை. இது கட்டுரைப் பொருளுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும் அழகரின் உரை, மரபு சார்ந்த உரை என்பதற்காகச் சுட்டப்பட்டது. அகத்திணை மரபில் தோழி என்பவள் செவிலியின் மகள். ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என்பது தொல்காப்பியம். எனவே தலைவியுடன் இருவகைக் கைகோளில் உடனிருக்கும் தோழியே கூற்றுக்கு உரியவள். தலைவியைத் தோழி ஆற்றுவதுதான் புலனெறி வழக்கமேயன்றித் தோழியைத் தலைவி ஆற்றியதற்குப் புலனெறி வழக்கம் இன்று. பிரிவின் கண் தலைமகனைத் தலைவியது ஆற்றாமை கூறித் தடுப்பது தோழியின் பணியேயன்றித் தலைவி தன் ஆற்றாமையைத் தானே வெளிப்படுத்தல் இலக்கண மரபன்று. மரபை மறக்காத  அழகர்,

    “செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
    வல்வரவு வாழ்வார்க்கு உரை”37

    என்னும் குறட்பாவைப்,

    ‘பிரிந்து கடிதின் வருவல் என்னும் தலைமகனுக்குத் தோழி சொல்லியது”38

    என்னும் துறையின் கீழ்க் கொண்டுவந்து,

    “நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் (அதனை) எனக்குச் சொல்., அஃதொழிய (பிரிந்து போய்) நின் விரைந்து வருதல்  (சொல்வையாயின்),  (அதனை)  (அதுபொழுது) வாழ்வார்க்குச் சொல்)!”39

    என்னும் பொழிப்புரை எழுதுகிறார். எழுதி,

    “தலைமகளையொழித்து எனக்கு என்றாள் “தான் அவள்” என்னும் வேற்றுமையன்மையின், ………………………

    இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்”40

    என இலக்கண மரபு சுட்டுகிறார். இந்தக் கூற்றினைத் தலைவிக்கு ஆக்குவதால் ‘உரைப்புரட்சி’ எதற்கும் வாய்ப்பில்லை, தலைவிக்கும் தோழிக்குமான உரிமை ஒத்திருப்பதால்.  ஆனால் ‘அவர் அப்படிச் சொல்கிறார்., நான் இப்படிச்  சொல்லுகிறேன்.  அவர் பார்வை அத்தகையது., என் பார்வை இத்தகையது’ எனப் பிற உரையாசிரியர்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அழகர் இதனைத் தோழி கூற்றாக்கியதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் சில இலக்கண மரபு. இலக்கிய மரபுகள் புலனாகும்.

    “தலைவரும் விழுமம் நிலையெடுத் துரைப்பினும்
    போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
    ………………………………………………………………………………………………
    ………………………………………………………………………………………………
    ஒன்றித் தோன்றும் தோழி மேன” 41

    என்னும் அகத்திணை இலக்கண மரபும்,

    “எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வதுஅந்நாள்
    கொண்டிறக்கம் இவள் அரும்பெறல் உயிரே” 42

    என்னும் இலக்கிய மரபும் அகத்திணையின் தலைமை உறுப்பினராகிய தோழியின் கூற்றுப் பகுதிகளாகக் காட்டுவது அழகரின் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். இவ்வாறு பொருத்தமான கூற்றுக்குரியாரை அடையாளப்படுத்துவதில் அழகருக்கு இருக்கும் ஆர்வம் அக்குறட்பாவின் இலக்கியச் சுவையை மிகுவிப்பதற்கேயன்றி வேறெதுவாயிருக்க  இயலும்?

    நிறைவுரை

    உரையாசிரியர் ஒருவர் தமது உரையை வலியுறுத்துங்கால் ‘ஒரு நெறியையே’ கடைப்பிடிக்கும் உரையுலகில் பண்பாட்டு அடிப்படையிலான உரைநெறியை அழகர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதே இதுவரை இக்கட்டுரையில் விளக்கப்பட்டவையின் சாரமாகும். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்னும் முனைப்பு பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அழகரிடம் அது அறவேயில்லை. ‘எனக்கு இப்படித் தோன்றுகிறது’. அவருக்கு அப்படித் தோன்றுகிறது., ‘அதற்கு அது காரணம்’ என்று கூறுகிற உயர்ந்த பண்பாட்டைக் காணமுடிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட உரைகள் தனக்கே தோன்றுவதையும் பதிவு செய்கிறார். தனக்கான உரிமை பிறர்க்கும் உண்டு என நம்புகிறார். அவர்க்கான உரிமையை மதிக்கிறார். கவிஞர்களைச் சான்றோர்கள் என்று அழைக்கும் மரபு கிடையாது. ஆனால் சங்கப் புலவர்கள் ‘சங்கச் சான்றோர்கள்’ என அழைக்கப்படும் அந்தப் பெருமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய புலமைக்கு  அவர்களுடைய சான்றாண்மை தாங்கு தளமாயிருந்ததே காரணம். சங்கச் சான்றோர்களைத் தாங்கிய அதே சான்றாண்மை உரையாசிரியராகிய அழகருடைய புலமையையும் தாங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு  இக்கட்டுரை பயன்படக் கூடும். “பண்டைச் செந்தமிழ்ப் பனுவல்களுக்கு உரையியற்றிய பேரறிஞர் பலருள்ளும் தம் உரையோவிய நுட்ப வினைத்திறத்தால் எம் உள்ளங்கவர்ந்து நிற்பவர் பரிமேலழகரேயாவார்” 43 என்னும் நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களின் புகழுரையோடு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

    சான்றெண் விளக்கம்

    1. பவணந்தி முனிவர்                                       நன்னூல்                                                நூ.எண். 19
    2. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                         நூ.எண். 1361
    3. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 542
    4. மேலது                                                                                                                                                கு.எண். 1068
    5. பரிமேலழகர்                                                        மேலது உரை                                   கு.எண். 1093
    6. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 1092
    7. மாணிக்க வாசகர்                                          திருவாசகம் (சிவ.பு)                  வரி. 76
    8. கம்பர்                                                                          கம்பராமாயணம்                       பா.எண். 516
    9. குலசேகர ஆழ்வார்                                       பெருமாள் திருமொழி             பா.எண். 690
    10. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                          கு.எண். 583
    11. பரிமேலழகர்                                                      மேலது உரை
    12. மேலது
    13. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1116
    14. பரிமேலழகர்                                                      மேலது உரை
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                            கு.எண். 101
    17. பரிமேலழகர்                                                     மேலது உரை
    18. மேலது
    19. மேலது
    20. திருவள்ளுவர்                                                   திருக்குறள்                                             கு.எண். 223
    21. பரிமேலழகர்                                                    மேலது உரை
    22. மேலது
    23. மேலது
    24. மேலது
    25. மேலது
    26. மேலது
    27. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 144
    28. பரிமேலழகர்                                                     மேலது உரை
    29. மேலது
    30. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 427
    31. பரிமேலழகர்                                                     மேலது உரை
    32. மேலது
    33. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 1267
    34. பரிமேலழகர்                                                     மேலது உரை
    35. மேலது
    36. மேலது
    37. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1151
    38. பரிமேலழகர்                                                       மேலது துறைவிளக்கம்
    39. பரிமேலழகர்                                                       திருக்குறள் உரை                          கு.எண். 1151
    40. மேலது
    41. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                            நூ.எண். 985
    42. பெருங்கடுங்கோ                                            கலித்தொகை. பா.க.                   பா.எண். 5.18—19
    43. ந.மு.வேங்கடசாமி நாட்டார்                 இலக்கியக் கட்டுரைகள்        ப185

    துணைநூற் பட்டியல்

    1. நச்சினார்க்கினியர்
    தொல்காப்பியம் பொருளதிகார உரை
    தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
    மறுபதிப்பு – 1967

    2. திருக்குறள் பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம்  சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
    தமிழ்ச்சுடர் மணிகள்
    குமரி மலர்க் காரியாலயம்
    தேனாம்பேட்டை, சென்னை – 600 018
    முதற்பதிப்பு – 1949

    4. புலவர் ச.சீனிவாசன்,
    திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
    மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
    53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
    முதற்பதிப்பு – 2002

    5. முனைவர் நா.பாலுசாமி
    பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
    அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
    முதற்பதிப்பு – 2005

    6. மு.வை.அரவிந்தன்
    உரையாசிரியர்கள்
    8/7, சிங்கர் தெரு
    பாரிமுனை, சென்னை – 600 108
    முதற்பதிப்பு – 1968

    7. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார்
    இலக்கியக் கட்டுரைகள்
    நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை,
    கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
    தஞ்சாவூர் – 613 003


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    ‘அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

    1. படைப்புப் பற்றிய ஆய்வினைத் தவிர்த்துப் படைப்பாளர் மற்றும் திறனாய்வாளன் முதலியோரின் புலமை நலன்களையும் பண்புநலன்களையும் அவர்தம் படைப்புக்களைக் கொண்டே ஆராய்வது என்பது ‘அரைத்தமாவையே அரைக்கும்’ ஆய்வுலகில் ஒரு புதிய முயற்சி. பாரியைப் பாடிய கபிலரின் பாடலகளைக் கொண்டு கபிலரின் பண்புகளை ஆராய்வது போன்றது இது.

    2. ‘உரை வேற்றுமையும் அழகர் பண்பாடும்’ என்னுங் குறுந்தலைப்பில் ஆய்வாளர் நிரல்படுத்தியிருப்பன பாராட்டுக்குரியன.

    3. ‘உரைப்பினும் அமையும்’ என்னுந் தொடர்கொண்டு அழகர் குறட்பாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகாண் நெறியை வரவேற்பவர் என்பதை ஆய்வாளர் நிறுவியுள்ளார்.

    4. ‘செய்யாமல்’ செய்யாமை என்னும் இருவேறு பாடங்களில் ‘செய்யாமல்’ என்பதையே தான் பாடமாகக் கொண்டதற்கான அழகர் கூறும் காரணத்தைக் கட்டுரையாளர் குறிப்பாகப் பெறவைத்துள்ளார்.

    5. ‘ஈதல்’ என்பதைப் பிறர் பொருட்பன்மையாகக் கொணடதானாலேயே  அவ்வாறு உரைத்தனர்” என்று காட்டும் அழகர் முந்தைய குறட்பாவை நோக்கி (தீது) ஒழிதற்குரியவனையும் (நன்று) செய்தற்குரியவனையும் (குலனுடையான்) என அடையாளப்படுத்துவதற்காகவே தான் தொழில் பண்பாகக் கொண்டதை ஆய்வாளர் புலப்படுத்தியுள்ளார்.

    6. ‘கலப்பேன் கொல்? என்பதனுள் கலப்புக்குரியவனவாக அழகர் சொல்லியிருப்பதையும் பிறர் கூறியிருப்பதையும எடுத்துக் காட்டும் ஆய்வாளர்  (தலைவியின்) செயலமைதியின் புரிதல் திறனைக் கற்பாருக்கே விட்டுவிடுகிறார்.

    7. இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு ஆராய்ச்சியாகவும் அமையலாம் என்பதற்கும் இலக்கிய உரைக்குள் இத்தகைய பண்பாடடுக் கூறுகளும் அமைந்துள்ளன என்பதற்கும்  இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படலாம்.

    8. ‘பார்வையும் நோக்கும் என்னும் தலைப்பில் ‘நோக்கு’ என்பதன் பொருள் விளக்கத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைத் தந்திருக்கும் ஆய்வாளர் அவற்றைப் பத்தியிலேயே நிரல்படச் சொல்லி, ‘முதலிய இலக்கண இலக்கியப் பதிவுகளிலும்’ என் அடக்கியிருக்கலாம். தரவுகளின் பெருமை (சானறுகளின்) எண்ணிக்கையால் அல்ல. தரத்தால்  தன்மையால்.


     

    Share
  • காம யோகா – 1

    காம யோகா – 1

    சி. ஜெயபாரதன், கனடா

    அந்தி வானம் மயங்கி, மங்கி
    களைத்துப் போனது,
    சினத்தில் கண் சிவந்து
    கதிரவனும்
    தொடுவானைக்
    குருதியில் மூழ்க்கி விட்டான்!
    பெரு நிலவு மாதரசி
    முகம் காட்டிக்
    என்னைக் கண்ணடித்தாள்!
    காமுற்றாள்!

    இருளெனும் கோழி
    அடைகாத்திட அண்ட கோளத்தை
    முட்டையாய்
    மூடினாள் இறக்கையுள்!
    உறக்கம் இல்லா
    உடல் இரண்டு தன்தன்  உயிர்த்துவ
    ஆத்மாவை அனுப்பி,
    முன்பிறப்புத் தொடர்பால்
    ஒன்றை ஒன்று தேடித் சென்று
    தழுவிக் கொண்டன!
    இடம்மாறி , உடல்மாறி, நடைமாறி
    இனிய கசப்பு
    நாடகம் நடத்தின!

    வெகு தூரத்தில் வசிக்கிறோம்
    நெருங்காமல், நீங்காமல்
    விருப்பமுடன்
    தீ காய்வார் போல வாழ்கிறோம்,
    இடைவெளி விட்டு!
    விதிவின்
    விளையாட்டு இதுதான்!
    ஒருத்திக்கு ஒருவன் வாழ்விலே
    இருப்பான்!
    ஒருவனுக்கு ஒருத்தி ஊழ்விதி!
    ஒருவரை ஒருவர்
    நித்தம்
    நினைந்து கொண்டு
    சில நேரம்,
    நேசித்துக் கொண்டு,
    சில நேரம்
    மோதிக் கொண்டு
    பேசியும், பேசாமலும்,
    தண்ணீர் ஒட்டியும் ஒட்டாத
    தாமரை இலை வாழ்வு!
    நிலையான
    நேச மில்லை  எங்கும்!
    எப்போதும்!
    ஊமைப் போர்கள் நிற்கா
    ஒருபோதும்!

    அடிக்கும் போனை, உடனே
    எடுக்காத காதல் மாது!
    பதிவுப் பேச்சை மட்டும், தவறாது
    தனியே கேட்டு மகிழும்
    இனிய மாது!
    இளம் வயதிலே அந்த நாட்களில்
    நிழலாய்ச் சுற்றி வரும்
    வாலிபக் கனவுகள் ஆயிரம்!
    இதயத்தைக்
    குத்திக் கிழித்தவை சில!
    ஆறியும்
    ஆறாத புண்கள் சில!
    கண்ணால், வாயால், காதால்,
    கனவால், நினைவால்,
    தனித்திரைக் காட்சியாய்ப்
    பன்முறை
    பார்த்துப் பார்த்து
    மீண்டும் பார்த்து மகிழும்
    தேனிலவுக்
    காட்சி மயங்கள் !
    பழுத்த, சுவைத்த, இனித்த
    பழங்கதைகள் !

    முதிய இதயங் களுக்கு  அவை
    புத்துயிர் அளிப்பவை.
    கடந்த கால
    வாலிபப் பருவ நினைவுகள்,
    முடிவற்ற
    சின்னஞ் சிறு மனத்திரைக்
    காட்சிகள்!
    சிறகு ஒடிந்த முதிய பறவை
    அவளது
    குரலினிது, வாயினிது.
    கவ்விக் கொள்ளும் கண்களின்
    காந்த சக்தி!
    கவர்ச்சி முறுவல்
    குமரி இல்லை அவள்!
    சிறகுள்ள
    தனிப்பறவை  அவன்!
    சுதந்திரம்
    தூய காதலருக்கு
    கிடைக்காத சொர்க்க புரி.

    யாரையும் ஒருத்தி நேசிக்கலாம்!
    நேசித்துத் தன்னவனாய்
    இதயக் கோவிலில்  வைத்துப்
    பூஜிக்கலாம்!
    ஜாதி, மதம், நாடு, இனம்,
    குலம், நிறம்
    உயர்ச்சி, தாழ்ச்சி, குட்டை
    நெட்டை,, தடிப்பு
    மற்றும் உற்றார், பெற்றார்
    எதிர்ப்புத் தடைகள்
    ஏது  மில்லை.
    உறவிலா  உறவாய்க்  கிடைத்தாய்
    ஒரு கொடையாய்!
    கோரிக்கை யற்றுக் கிடக்கும்
    வேரிற் பழுத்த பலா,
    நீ இப்போது.
    உன் கூண்டில் உண்டு உறங்கி,
    போகாத நாளையும்
    ஆமைப்
    பொழுதையும்
    கழுத்தைப் பிடித்து தள்ளுகிறாய்!

    பல்லாண்டு காலம்
    படுக்கையில் தனியே பல நேரம்
    உறக்கம் வராது
    புரண்டு, புரண்டு, புரண்டு
    உருண்டு கிடக்கும்
    உயிர்த்துவ உடல்கள்
    இரண்டு!
    ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு
    மனக் கனவுகளில்
    புனை கதையாய்
    புணர்ந்து கொள்ளத் துடிக்கும்
    ஈருடல்கள்,
    மேள தாள மின்றி
    இனிய
    நாதசுவர வாசிப்பின்றி
    மணந்து கொள்ள விழையும்
    மனிதப் பிறவிகள்.

    யாரவள்?
    ஈரேழு ஆண்டுகள்
    கண்ணீரில் மூழ்கினாள்!
    இராமன்
    வானோக்கிப்  போய்விட்டான்,
    கானகத்தில்
    சீதாவைத் தவிக்க விட்டு,
    தனியே விட்டு!
    தம்பி பரதன்  அடைக்கலம்
    கொடுக்க
    முன் வந்தான்,
    அன்ன மிட்ட கை அந்தக் கை!
    அரிசி கிடைக்காத
    அந்த பஞ்ச காலத்தில்
    ஆருயிர் அளித்த கை.
    அந்தக் கை!

    [தொடரும்]

    Share
  • பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    பூலாங்குறிச்சி கல்வெட்டு விளக்கம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்தில் இருப்பது தான் பூலாங்குறிச்சி மலை. இம்மலையில் மூன்று கல்வெட்டுகள் முதன்முதலாக 1979 இல் அறியப்பட்டன. அவற்றில் வலப்புற கல்வெட்டு பெரும்பாலும் சிதையாமல் முழுமையான செய்திகளை அறியும்படி 13 வரி கொண்டதாக உள்ளது. 22 வரி உள்ள இடப்புற கல்வெட்டு தொடக்கத்திலும் இறுதியிலும் சிதைந்துள்ளதால் அதன் செய்தியை தெளிவாக முழுமையாக அறியமுடிவில்லை. இதன் நடுப் பகுதியில் மட்டும் சில செய்தி சிதையாமல் உள்ளன. நடுவில் உள்ள இன்னொரு கல்வெட்டு முழுவதும் தேய்ந்துவிட்டபடியால் அதன் செய்தியை அறிய முடியவில்லை. வலப்புறக் கல்வெட்டில் குறிக்கப்படும் பச்செறிச்சில் மலை தான் இன்று பூலாங்குறிச்சி எனப்படுகின்றது. இக்கல்வெட்டுகள் தமிழியில் இருந்து வட்டெழுத்து தோன்றுகிற தொடக்க நிலை எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. மெய்யெழுத்திற்கும், எ, ஒ என்னும் உயிரெழுத்திற்கும் புள்ளி வைக்கப்பட்டுள்ளன. மிகப் பழங்காலக் தமிழ்க் கல்வெட்டில் இவையே நெடியதென அறியப்படுகின்றன. எழுத்தமைதியை கொண்டு இவற்றின் காலம் தொல்லியல் அறிஞரால் கி.பி. 5-ம் நூற்றாண்டு என முடிவு கொள்ளப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் அக்கால சமய, சமூக, அரசியல் நிலையை ஓரளவு அறிந்து கொள்ள முடிகின்றது. இனி கல்வெட்டு விளக்கம் கீழே.

    வலப்புற கல்வெட்டு:

    1. கோச் சேந்தன் கூற்றற்கு யாண்டு நூற்றுத்தொண்ணூற்றி
    2. ரண்டு நாண் முப்பத்தாறு பக்கந் தைப்பிறை நாள் ப(ன்னிரண்டு) வேள் மருகண் மகன் கடலகப் பெரும்படைத்
    3. தலைவன் எங்குமான் னொல்லையூருக் கூற்றத்து வேள்கூருப் பச்செறிச்சின் மலை மேற் செஇவித்த தேவகுலமும்
    4. முத்தூற்றுக் கூற்றத்து விளமரு(ச்) செஇவித்த தேவகுலமும் மதிரை உலவியத்தான் குளத்தின் வடபக்கத்துச் செஇவி
    5. த்த தாபதப்பள்ளியுள் (வா)சி தேவனாரு கோட்டமும் மவை அத்திக்கோயத்தாரு முள்மனையாருந் நாற்பாற்றிணைகளுந் தமக்கு காவலாக
    6. அவற்றுக்குற்றது செ(யக்) கொண்டமையால் லவற்றை வ(ழிபடுவது)ம் மவற்றுக்குப் பெயப்பட்ட அறப்புறந் நடையாட்டுவதூஞ் செயும்
    7. பாண்டங்கருஞ் சேவுக்கரும் (வி)ரும்மாச்சாரிகள்ளுந் தருமிகளுமூ(ர்) காவல் கொண்டா(ரு ஆ) ராஇந்து வைஇக்கப்பட்டாரு அல்லது வழிபடப்
    8. பெறாமையும் மவற்றுட் பச்செறிச்சி(ல்) மலைமேற் செஇவி(த்த தேவகு)லத்துக்குக் குடும்பியராவாரு குழ
    9. (லூ)ருத் துஞ்சிய உடையாரால் வேள்கூருப் பெயப்பட்ட குடும்பி(யர் வழியல்லது வேறொரு) குடும்பாடப் பெறாமையும்
    10. மத் தேவகுலத்துக் குற்றது செய்து வல்லக்குற்றந் தொழில் செய_ _க(ளு)_ _(டஞ்) செயவும் மெழுதி வைக்கென் றருள்ளித்தாரு
    11. கேட்டாருலவியப் பெருந்திணை நல்லங்கிழானெ இனங்குமானும் முலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி
    12. யு முலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தையுங் கேட்டு வந்து கூறின (னோ)லை எழுதுவான் (றம)ன் காரி
    13. கண்ணன். இது கடைப்(பி) ஓலை காற் கண்டெழுதிக் கொடுத்தேன் (வே)ண்ணாட்டான் (ந_ _ரி) நாரியங்காரி

    பக்கம் – (சுக்ல, கிருஷ்ண) பக்ஷம் எனும் நிலவின் பிரிவு; மகன் – நேரடியாக கீழ்பணிந்த வீரன், low rank subordinate warrior, சேவகன் என்பது வேந்தன் அல்லது மன்னனின் மேலாண்மையை ஏற்ற இன்னொரு ஆட்சியாளனை மட்டும் குறிக்கும்; கடலகம் – கடற்புறம்; தேவகுலம் – தேவன் இருப்பிடம், குருகுலம் குருவின் இருப்பிடத்தை குறிப்பது போல; கோட்டம் – சன்னதி, shrine; அத்திக்கோயத்தார் – காவல் புரியும் யானை அல்லது குதிரைப்படை வீரர் குழு; உள்மனையார் – ஊருள் வீடுடையோர். புறமனை என்றால் ஊருக்கு வெளியே வீடு; நாற்பாற்றிணை – நால்வகைக் குலம்; பெயப்பட்ட – வேறு இடத்தின்று அமர்த்திய; அறப்புற – நியதிப்படி, as per procedure;  நடையாட்டு – வழக்கில் பயிலுதல், usage; பாண்டங்கர் – பண்டாரக் காப்பாளர்; சேவுகர் – பிற்கால தேவரடியாரை ஒத்த அர்ப்பணிப்பு பணியாளர், dedicated worker; விரும்மாச்சாரி – ஒரு வகை கோவில் ஊழியர்; தருமி – துறவி, அறவோர்; ஆராய்ந்து – தகுதியை ஆய்ந்து; குடும்பி – பூசகர், சிலம்பில் சேடகுடும்பி என்ற சொல் பூசகரைக் குறிக்கின்றது; அருளி – ஆணையிட்டு; உலவியப் பெருந்திணை – ஆவணப்படியே செயலாக ஒப்பி ஆணைப்படுத்தும் அதிகாரி; கிழான் – வேந்தன் கீழ் மன்னன் அவன் கீழ் அரையன் அரையன் கீழ் கிழான் என்ற நாலாம் நிலை அதிகாரப் பொறுப்பு ஆட்சியாளன். ஒரு ஆவணத்தை ஆணைப்படுத்தும் அதிகாரியாக பெரும்பாலும் கிழார்களே செயல்பட்டனர்; கடைப்பி – பிடிபாடு, வழிகாட்டு நெறி, guidelines; ஓலைக்கால் – ஓலைச்சுவடி.

    விளக்கம்:  வேந்தன் சேந்தன் கூற்றனுக்கு மகுடம் ஏறிய பின் 192 ம் ஆண்டு, நாள் 36, பக்கம் தேற்பிறை 12 நாளிலில் இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. சேந்தன் கூற்றனுக்கு அடங்கிய வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் என்பவன் ஒல்லையூர்க் கூற்றத்தில் வேள்கூரின் பச்செறிச்சின் மலை மேல் எடுப்பித்த தேவகுலமான கோவிலும் முத்தூற்றுக் கூற்றத்தின் விளமரில் செய்வித்த கோவிலும் மதிரையில் உலவியத்தான் குளத்தின் வடபக்கத்தில் உள்ள தாபதப்பள்ளியில் எடுப்பித்த வாசி தேவனார் கோட்டமும் ஆகிய இம்மூன்றுக்கும் அத்திகோயத்தார், ஊருள் வாழ்வோர், நாற்பிரிவு குலம் ஆகியோரை தமக்கு காவலாக, துணையாகக் கொண்டு அவற்றுக்கு தேவையானவற்றை செய்தமையால் அவற்றில் வழிபடவும் அவற்றுக்குப் ஏற்படுத்தப்பட்ட நியதிப்படியான பூசனையை வழக்கமாக செய்யும் பண்டாரம் காப்பாளரும், அர்ப்பணிப்பு பணியாளரும், விரும்மாச்சாரிகளும், துறவியரும், ஊர் காவல் கொண்டாரும் தகுதி ஆராய்ந்து வைக்கப்பட்டவரை தவிர பிறர் வழிபாடு ஆற்றாதவாறு செய்ய வேண்டும். அதிலும் குறிப்பாக பச்செறிச்சில் மலைமேல் எடுப்பித்த கோவிலுக்கு பூசகராகின்றவர் குழலூரில் இறந்த வேந்தரால் வேள்கூருக்கு அழைத்து வந்து அமர்த்தப்பட்ட பூசகர் குடும்ப வழியினரைச் சாராத வேறொரு குடும்பத்து பூசகர் பூசனை ஆற்றக்கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அக்கோவிலுக்கு தேவையானதை செய்தும் தீங்கான செயல்களுக்கு தண்டம் விதித்தும் செயற்பட வேண்டும் என்று எழுதிவைக்கச் சொல்லி ஆணையிட்டார். இதை படைத் தலைவன் எங்குமான் சொல்லிடக் கேட்டவரான உலவியப் பெருந்திணை நல்லன்கிழான் எயினங்குமான், உலவியப் பெருந்திணை ப_ _ஆறு கிழான் கீரங்காரி, உலவியப் பெருந்திணை அம்பருகிழான் குமாரம் போந்தை ஆகிய மூவரும் இதற்கு ஒப்பி  கையெழுதிட்டு ஆணைப்படுத்தினர். இதை கேட்டு வந்து கேட்டபடி கூறினவன் ஓலை எழுதுவான் தமன் காரி கண்ணன் ஆவான். இதையே வழிகாட்டு நெறியாக ஓலைச்சுவடி கண்டு (கல்லில்) எழுதிக் கொடுத்தேன் வேண்ணாட்டான் ந_ _ரி நாரியங்காரி.

    192–ம் ஆண்டு எந்த தொடக்க ஆண்டை குறிக்கின்றது என்று தெரியவில்லை. நாற்பாற்றிணை என்பது அந்தணர், அரசர், வணிகர், உழவர் என்ற நால்வருண முறை ஆகும். நால் வருண முறையை குறிக்கும் மிகப் பழைய தமிழ்க் கல்வெட்டு இதுவே எனலாம். தாபதப்பள்ளி என்பது சமண பள்ளி ஆகும். தேவகுலம் என்பது சமணம் சாராத கோவில் ஆகும்.

    இடப்புற கல்வெட்டு:

    1. _ _ _ ந்தற்கு யாண்டு நூற்றுத் _ _ _ _ _
    2. நா(ற்) _ _ _ ர.ப_ ] _ _
    3. (னு)_ _ _ ளள் (ளை) _ _ _ _
    4. _ _ _ _ (ள்) மருகண் மகன் (க)டலகப் பெ
    5. _ _ _ _ ன் ஒல்லையூருக்கூற்(ற)
    6. _ _ _ _ _ _ _ _
    7. _ _ செ _ _ _ வகள _ _ வய _ _ _ _
    8. _ _ _ _ _ _ _ _ _
    9. (பெ)_ _ரு நிலனும் புன்செ வெள்ளேற்றான் மங்கலமென்
    10. ._ _ (ழவரும்)_ ரு…ங் கூடலூரு நாட்டுப் பிரம்மதாயஞ் சிற்றையூருப் பிரம்மதாயங்கி
    11. _ _ _ ழமையும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப்படுங்கடைய வயலென்னும்
    12. _ _ _ புலத்தவன் விற்றுக்கொண்டு கொடுத்த புன்செ நிலனு
    13. _ _ _ துப் பிரம்மதாயத்துட் பிரம்மதாயக் கிழவரா(ன)
    14. _ _ _ றாராலும் பிரம்_ _யுங் காரண்மையுமாகக் கொண்டாளுந் நீர் நிலனும் புன்
    15. _ _ லனும் பிறவுஞ்_ _ _ பாண்டி நாட்டுங் கொங்கு நாட்டும் மவரு காராண்கிழமையுங் கல
    16. க் கிழமையும் மேல்(லாண்மை) கொண்ட(ன)வும் மவருடைய காலாசமுந் தோட்டங்களும் மவரு தமரையும் ம
    17. வரு குடிகளையும் _ _ _ டையாரும் பிரம்ம தாயமுடையாருந் நாடுகாப்பாரும் புறங்காப்
    18. பாரும் முப்பு (ரு காப்பாரு) _ _ _ தாயந் நெறி அ_ _ செஇதாரு தத்தமானும் வேறு வேறு ஆஇரத்தாறுநூ
    19. று காணந் _ _ று __ டு வே_ _ ன்ற_ _ ரு கேட்டாருல வியப் பெருந்திணை நல்லகிழா னெ இனங்கு
    20. மானும் முலவி _ _ _ ம _ _ _  ங்கிழான் ளங் கூற்றனும் முலவியப் பெருந்திணை ஆலத்தூர் கி
    21. _ _ _ _ லை _ _ துவான் (றமன்வ)டுகங் குமான்_ _டைப்பி (ஒ)
    22. _ _ _(தளருக்கு)_ _ _

    விளக்கம்:   வேள்ஆன மருகண் என்பானுக்கு கீழ்படிந்த போர்வீரனான கடல்புறத்து மீனவப் பெரும் படைக்குத் தலைவனாகிய எங்குமான் ஒல்லையூர் கூற்றத்தில் செய்த செயலைக் குறிக்கின்றது. 12-ம் வரி வயலுக்கு உரிமையாளன் விற்றுக்கொடுத்த புன்செய் நிலம் பிரம்மதாயமாக ஆக்கப்பட்டதை தெரிவிக்கின்றது. அந்த பிரம்மதாயத்துள் ஒரு உரிமையாளரின் பயிர் செய்யும் உரிமை நீர், நிலம் என்பது பற்றியும் பாண்டி நாட்டிலும் கொங்கு நாட்டிலும் அவருக்கு உள்ள பயிர் செய்யும் உரிமை பற்றியும், அவருடைய கால்நடை, தோட்டம், குடிகள் பற்றியும் சொல்கின்றது.

    பிரம்ம தாயமுடையவரும், நாடுகாப்பாரும், புறங்காப்பாரும் முப்புரு காப்பாரும் தாயநெறியை காக்க வேண்டும் என்றும் இதற்கு அல்லவை செய்தாரிடம் ஆயிரத்தறுநூறு காணம் தண்டம் திரட்டவேண்டும் என்கின்றது. இதை ஆணைப்படுத்திய கிழார்கள் பெயரை குறிப்பதோடு கல்வெட்டு சிதைந்துள்ளது.

    இதன் மூலம் அக்காலத்தே பிராமணர் தமிழகத்தில் வாழ்ந்தது உறுதி செய்யப்படுவதோடு அவர் பெற்ற நிலக்கொடை அதன் பயிர் செய்யும் உரிமை பற்றி அறிய முடிகின்றது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ்1991 , பக். 67- 69.

    Share
  • பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

    மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா,
    எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி,
    அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பலம், தியாகராசா, அல்பிரட் துரையப்பா,
    தொழிலதிபர்கள் சிவானந்தன், கே. சி. தங்கராசா,
    மருத்துவர் ஆனந்தராசா, நீதியரசர் தம்பையா,

    இவர்கள் அனைவரும் ஒரே அணியில், ஒரே கருத்தில், ஒரே கொள்கையில், ஒரே கோட்பாட்டில்.

    நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டும் என்ற சிறீமாவோ அரசின் கொள்கையை முன்னெடுத்த அணியினரே இவர்கள்.

    1973 ஆம் ஆண்டு வைகாசி, ஆனி, ஆடி, ஆவணியில் கொழும்பில் பம்பலப்பிட்டி, மிலாகிரியா நிழற்சாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டங்கள் நடந்தன.

    சிறிமாவோ அரசின் சார்பானோர் ஒருபுறம்.

    யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியினர் மறுபுறம்.

    பேராசிரியர் வித்தியானந்தன், அறிஞர் யேம்சு இரத்தினம், பேராசிரியர் பத்மநாதன், திருமதி புனிதம் திருச்செல்வம், கலைஞர் வி. எசு. துரைராஜா, மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய நான், அறிஞர் அம்பிகைபாகன் எனப் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினோம்.

    அக்காலத்தில் உடல் நலக் குறைவால் வளலாயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரும் யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

    சிறீமாவோ அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆண்ட காலம். மாவை சேனாதிராசாவை ஒத்த 60க்கும் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் யாழ்ப்பாணத்திலும் சிறைகளில் தவமிருந்த காலம்.

    ஒரு நாள் மாலை. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம்.

    நாற்காலிகளை வட்டமாக அடுக்கி இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 30 தொடக்கம் 40 பேர் வரை இருந்தார்கள்.

    நான் எழுந்து பேசினேன். நீதியரசர் தம்பையா அவர்களே யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக இருந்தால், நீங்கள் தலைவராகத் தொடருங்கள் அல்லது தலைமைப் பதவியில் இருந்து விலகுங்கள், எனக் கேட்டேன்.

    கொஞ்சம் சலசலப்பு. ஆனாலும் நான் விட வில்லை. மீண்டும் என் கருத்தை வலியுறுத்தினேன். பல செய்திகளைப் பேசினோம். பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

    மறுநாள் நல்ல செய்தி. நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தொழிலதிபர் சிவானந்தர், கே. சி. தங்கராசா, மருத்துவர் ஆனந்தராசா, ஆகியோரும் விலகினார்கள். தாம் கொடுத்த நன்கொடைகளை திரும்பத் தருமாறும் கேட்டனர்.

    எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. பகை இல்லை. துரோணரின் மாணவன் அருச்சுனனுக்கு இலக்காகப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போன்று, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கொள்கையே எனக்குத் தெரிந்தது.  அதற்காகத் தலைமையிலிருந்து நீதியரசர் தம்பையாவைப் பதவி விலகக் கோரும் துணிச்சல் எனக்கு இருந்தது.

    பெட்டிப் பாம்பாக மகுடிக்குப் படம் எடுத்துச் சீறுவது போல் நடித்துப் பின் அடங்கி விடும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை.

    தந்தை செல்வாவிடம் சைவ சமயிகள் சார்பில் நான் எடுத்துக்கூறிய பல ஆலோசனைகள் அவர் கேட்டார். நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தந்தை செல்வா தலைவர் என்பதனால் அவர் சொன்ன அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

    மாற்றுக் கருத்து உண்டெனில் அதை அவரிடம் சொல்லி அந்த நியாயங்களை எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்திருக்கிறேன்.

    எனது இருபது ஆண்டுகாலத் தொடர்பில் அவர் மீதுள்ள மதிப்பு உயர்ந்தமைக்கு அவருடைய பொறுமையும் நல்ல கருத்துக்களை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவரும் பண்புமே காரணம்.

    திருச்செல்வம் மூத்த வழக்குரைஞர். 13 ஆண்டுகாலம் அவரோடு பணிபுரிந்தேன். அமைச்சராக இருந்த காலத்தில் தனி உதவியாளராகவும் இருந்தேன். அவரோடு உடன்படாத கருத்துக்களை நான் சொல்வேன். அவர் தூக்கி எறிய மாட்டார். தம்பி நீர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பார். நடைமுறைக்குக் கொண்டு வருவார்.

    தந்தை செல்வாவுக்கு நினைவுத்தூண் அமையுங்கள் என்ற கருத்தை அமிர்தலிங்கம் அவர்களிடம் முன்வைத்தேன். முதலில் தயங்கினார். வலியுறுத்தினேன், ஏற்றுக் கொண்டார். என்னையே அப்பணியைச் செய்யுமாறு பணித்தார். வெற்றிகரமாகச் செய்து கொடுத்தேன்.

    அறைக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களோடு முரண்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மாலையில் மனைவியொடு என் வீட்டுக்கு வருவார். நீங்கள் சொன்னதில் நியாயம் இருக்கிறது அதன்படி செய்வோம் என்பார்.

    அனைத்துப் போராளி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வன்முறையில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது என நேரடியாகவே அவர்களிடம் சொல்வேன். ஆனாலும் உங்களுடைய ஈடுபாடும் தியாகமும் நல்ல நோக்கமும் என் மதிப்புக்குரியன. எனவே உங்களுக்கு என்னால் முடிந்தததைச் செய்வது என் கடமை என்பேன்.

    2000ஆம் ஆண்டில் ஒரு சூழ்நிலையில் பிரபாகரன் கொண்ட கருத்தைத் தலைகீழாக மாற்றுமாறு கேட்டேன். அவர் செய்திருக்கிறார். என் அணுகுமுறையில் உள்ள தமிழ்த்தேசிய நன்மையை அவர் பின்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

    என் வாழ்நாளில் ஒரு முறையாவது தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடுகொண்ட எவரையும் அந்நியர் எவரிடமும் சுட்டிக்காட்டித் தவறிழைக்கிறார் எனச் சொல்வதில்லை.

    சரி பிழைகளைத் தளர்வுகளைத் தொய்வுகளை நடைமுறை மாற்றுகளை நமக்குள்ளே பேசலாம். அந்நியரிடம் பேசலாமா? அதுவும் அடிமை கொள்ள விழையும் அந்நியரிடம் பேசலாமா?

    அவ்வாறு பேசியவரைச் சம்பந்தன் அவர்கள் காப்பாற்றுகிறார் எனில் பெட்டிப்பாம்பாக இருக்காமல் பொங்கியெழுந்து தமிழ்த் தேசியத்திற்காகச் சம்பந்தன் அவர்களிடமே உரத்துப் பேசி, சுமந்திரனை நீக்க வேண்டிய கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

    மைத்திரிபால சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என சிவகரன், அனந்தி நான் மூவரும் ஊடகத்தாரிடம் கூறினோம். அக்கருத்து அவர்களின் தனிக் கருத்து எனக் கருதியிருக்கலாமே?

    சுமந்திரனின் கை மேலோங்கியதால் சிவகரனையும் அனந்தியையும் நீக்கினார்கள். கட்சி உடைந்தது.

    சுமந்திரன் கை மேலோங்கியதால் தமிழ்க் காங்கிரசும் ஈபிஆர்லெஎஃபும் கூட்டமைப்பில் இருந்து விலகின.

    சுமந்திரனின் கை ஓங்கியதால் அவைத் தலைவரான சிவிகே சிவஞானமே வெட்கங்கெட்டு ஆளுநரிடம் சென்றார், முதலமைச்சருக்கு எதிராக. கூட்டமைப்பை உடைப்பதற்காக.

    இன்றைய ஒருங்கிணையாத தமிழர் அரசியல் கள நிலைக்கு, இரணிலின் கைப்பாவையாகிய சுமந்திரனின் கை ஓங்கியமையே காரணம்.

    அருளம்பலம் தியாகராசா கனகரத்தினம் அல்பிரட் துரையப்பா குமாரசூரியர் என நீளும் அரசியலார் வரிசையில் சுமந்திரன் இருக்கிறார்.

    அன்று அல்பிரட் துரையப்பாவுக்குத் துணைபோன சிவிகே சிவஞானம் இன்று சுமந்திரனுக்கு துணை போகிறார். அடையாளங்கண்டு தமிழ்த் தேசியப் பயிர்களை வளர்க்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியத்தாருக்கு உண்டு.

    சுமந்திரன் இல்லாத சூழ்நிலையில் விரல்களாக வேறுபட்டாலும் கையாக இணைவோம் என வெவ்வேறு கொள்கையரும் ஒரே அணிக்கு மீள்வர். தமிழ்த் தேசியத்தார் வலிமை பெறுவர்.

    நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியில் இருந்து விலகியதால் தமிழ்த் தேசியம் ஓங்கியது. நீதியரசர் சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் சைவத் திருக்கோயில்களை அரசு கையேற்காமல் காத்தோம். இருவரது விலகலுக்கும் எனது பங்களிப்புக் காத்திரமானது.

    சுமந்திரனை விலக்குக. அல்லது நீங்களும் விலகுக எனச் சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சல் உள்ளவர்களை அழைக்கிறேன். படகு பெரிய பாறாங் கல்லுடன் மிதக்க முடியாது. பாறாங்கல்லை நீருள் தள்ளிப் படகைக் காக்க அழைக்கிறேன்.

    Share
  • ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    ஸ்ரீ பாரதீ தீர்த்த யாத்திரை – 8

    மீ. விசுவநாதன்

    குருவின் மகிமை

    சாரதா பீடம் தன்னில்
    தரவழி குருவம் சத்தை
    பாரதீ தேவி என்றே
    பக்தரும் பணிவ துண்டு!
    ஆயிரம் சான்று சொல்லி
    அவைகளை விளக்க லாம்தான்!
    தாயது அன்பை எந்தத்
    தராசினால் கணக்குப் பார்க்க? (71)

    ஒன்றி ரெண்டு காட்ட
    உயர்வு தெரியு மென்று
    இன்றி தையே இங்கு
    எளிதாய் எழுது கின்றேன்!
    தென்றல் காற்று தங்கத்
    தேரில் வருதல் போல
    தென்தி சைக்கு ஆசான்
    சீட ருடனே வந்தார்! (72)

    குருவும் சீடரும் தென்திசைப் பயணம்

    சத்திய மங்கலம் வந்தார்
    சந்திர சூரியர் போல!
    நித்தியக் கடமையாம் பூஜை
    நியமமும் உரையுமே செய்தார்!
    சத்திய உரையினைத் தங்கள்
    சன்னிதா னம்தமி ழில்தான்
    சுத்தமாய்ப் பேசிய பேச்சில்
    சொக்கியே போனதாம் சத்யம்! (73)

    பன்மொழி வித்தகர்

    பன்மொழிப் புலமை கண்டு
    பாரதீ தீர்த்தர் மீது
    பன்மொழிப் புலவோர் கூட்டம்,
    பாமரர் கூட்ட மென்று
    அன்பினால் பக்தி செய்வோர்
    ஆயிரங் கோடி என்று
    நன்றியால்க் கண்ணீர் மல்க
    நானிலம் கூறக் கேட்டேன்! (74)

    பற்றறுத் தோன்தாள் பணி

    கல்லில் வடித்த சிற்பம்
    கணக்கில் கல்லா னாலும்
    நல்லுள் ளத்துள் தானே
    ஞான ஒளியாய்த் தோன்றும்!
    சொல்லி வருவ தில்லை
    துறவு! சொல்லா மல்தான்
    மல்லி மலரைப் போல
    மனத்துள் வாசம் செய்யும் ! (75)

    அமைதி வேண்டும் என்றால்
    அன்பு பெருக வேண்டும்!
    சுமையாம் வாழ்வு தன்னை
    சுகமாய் மாற்ற வேண்டி
    தமையே மறந்து கொஞ்சம்
    தனது கண்கள் மூட
    இமையோன் சிவனைப் போல
    இருப்பார் சன்னி தானம்! (76)

    தன்னைப் பணியும் பக்தன்
    தரத்தைப் பார்க்கா வண்ணம்
    அன்னை தரத்தில் நின்று
    அருளும் உயர்ந்த வள்ளல்!
    முன்னோர் சென்ற பாதை
    மூத்தோர் செய்த புண்யம்
    என்னைப் போன்ற வர்க்கு
    எளிதாய்ச் சேர்ந்த செல்வம்! (77)

    சிக்கெனப் பற்றுக பற்றுவிட

    ஊரென அறிந்தேன் அல்லேன்
    உறவினை அறிந்தேன் அல்லேன்
    பேரெனக் கேட்கும் முன்னே
    பிரியமாய் பக்தி செய்தேன்
    தூரென இருந்த உள்ளம்
    தூயதாய் ஆவ தற்கு
    பாரதீ தீர்த்தர் பாதம்
    பணிவதே என்று ணர்ந்தேன் ! (78)

    எதிலும் ஒழுங்கு

    திருநீற்றில் நேர்த்தி; ஆடை
    திருமேனி கொள்ளல் நேர்த்தி;
    வரும்வார்த்தை எல்லாம் நேர்த்தி;
    வண்ணப்பூ வெடுத்து ஈசன்
    உருமீது மெல்ல வைத்துப்
    பூஜைசெய்யும் நேர்த்தி என்று
    தருணமெலாம் நேர்த்தி யான
    தவசியேஸ்ரீ சன்னி தானம்! (79)

    அன்பே சிவம்

    மானிடம் அன்பு காட்டி
    மயிலிடம் பரிவு கூட்டி
    தேனிபோல் நல்ல தெல்லாம்
    தேடியே தினமும் சேர்த்து
    மானிடப் பண்பு ஓங்க
    மறைவழி வாழும் யோகி
    தானினை வென்ற சான்றோர்
    பாரதீ தீர்த்தர் என்பேன். (80)

    (யாத்திரை தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(301)

    குறளின் கதிர்களாய்…(301)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(301)

    தந்தை மகற்காற்றும் நன்றி யவையத்து
    முந்தி யிருப்பச் செயல்.

    – திருக்குறள் -67 (புதல்வரைப் பெறுதல்)

    புதுக் கவிதையில்...

    தந்தையொருவன்
    தன் மகனுக்குச் செய்யும்
    நன்மை,
    தன்னைவிடவும்
    அதிகமாய் அவனைக்
    கல்வி கற்கச்செய்து
    கற்றோர் அவையில்
    முதன்மையாய் இருக்கவைப்பதே…!

    குறும்பாவில்...

    தந்தை மகனுக்குச் செய்யும் நன்மை,
    தனக்குமேலும் படிக்கவைத்து கற்றவர் சபையில்
    அவனை முதன்மைபெறச் செய்வதாகும்…!

    மரபுக் கவிதையில்...

    பொன்னாய்ப் பொருளாய்ப் பணமதாகப்
    பெரிதாய்ச் செல்வம் சேர்க்கவேண்டாம்,
    தன்னை விடவும் அதிகமாகத்
    தன்மகன் கற்றுத் தேர்ந்தேதான்
    மன்றம் நிறைந்த கற்றோர்முன்
    மதிப்பி லுயர்ந்தே முதல்நிலையில்
    நின்று நிலைக்க வைப்பதுதான்
    நன்மை தந்தை செய்வதுவே…!

    லிமரைக்கூ..

    தந்தை மகனுக்காற்றும் உதவி,
    நன்றாயவனைப் படிக்கவைத்துப் பெறச்செய்யவேண்டும்
    கற்றோரவையில் முதன்மைப் பதவி…!

    கிராமிய பாணியில்...

    செல்வத்திலயெல்லாம்
    பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
    அதப்
    பேணிக் காப்பாத்துறது
    பெத்தவுங்க கடம..

    ஒரு தகப்பன்
    தன்மகனுக்குச் செய்யிற
    பெரிய நன்ம இதுதான்,
    தன்ன விடவும் அவன
    நல்லாப் படிக்கவச்சி
    படிச்சவுங்க சபயில
    அவன மொத ஆளா
    இருக்க வைக்கிறதுதான்..

    அதால
    செல்வத்திலயெல்லாம்
    பெரியசெல்வம் பிள்ளச்செல்வம்,
    அதப்
    பேணிக் காப்பாத்துறது
    பெத்தவுங்க கடம…!

    Share
  • 11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    11ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்

    அண்ணாகண்ணன்

    2020 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 10 ஆண்டுகளை நிறைவுசெய்து 11ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பத்து ஆண்டுகளில் வல்லமை, 16,535 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,505 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 900 ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.

    கடந்த ஆண்டு, தொழில்நுட்பச் சிக்கல்களால் வல்லமை 37 நாள்கள் முடங்கியது. பெரும் முயற்சிகளுக்குப் பிறகு, மீண்டது. இப்போது செம்மையாகச் செயல்பட்டு வருகிறது. நமது வழங்கியை (Server) மாற்றினோம். தரவுகளைப் பாதுகாக்க, தரவு சேமிப்பகத்தைத் (Data back-up) தேர்ந்தோம். தொழில்நுட்ப ஆதரவு (Technical support) நிறுவனத்தைத் தேர்ந்தோம். இவையனைத்தும் கட்டணச் சேவைகள். எனினும் உரிய நேரத்தில் எழுத்தாளர்கள் நிர்மலா ராகவன், ஜெயபாரதன், மேகலா இராமமூர்த்தி, நாங்குநேரி வாசஸ்ரீ, திருச்சி புலவர் இராமமூர்த்தி ஆகியோர் வழங்கிய நன்கொடையால், தளம் நிமிர்ந்தது. கவிஞர் வித்யாசாகர், பேராசிரியர் செ.இரா.செல்வகுமார், முனைவர் நா.கணேசன், பெரியவர் இன்னம்பூரான் உள்ளிட்டோர் மேலும் நன்கொடையும் உதவிகளும் வழங்க இசைந்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் எமது உள்ளம் நிறைந்த நன்றிகள்.

    தரமான, நடுநிலையான, கூர்மையான மின்னிதழாக வல்லமை தொடர்ந்து மிளிர்ந்து வருகிறது. ஆய்வுக் கட்டுரைகளை மதிப்பிட்டு, ஆய்வறிஞர்கள் வழங்கும் மதிப்புரைகள், ஆய்வாளர்களுக்கு வழிகாட்டுதலாய் அமைகின்றன. நாம் இன்னும் நிறையப் பணிகளைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. ஆக்கப்பூர்வமான படைப்புகளையும் ஆய்வுகளையும் ஊக்குவித்து வளர்த்தெடுக்க, வல்லமை உறுதி பூண்டுள்ளது. இதற்குத் தொடர்ச்சியான நன்கொடைகள் தேவை. உங்களால் இயன்ற நிதியை அளித்து உதவுங்கள். ஆர்வமும் நேரமும் தமிழறிவும் படைத்தவர்கள், வல்லமை ஆசிரியர் குழுவில் இணையலாம். வாய்ப்புள்ளோர், வல்லமையில் விளம்பரங்கள் வெளியிடலாம்.

    வல்லமை 11ஆவது ஆண்டில் நுழைந்துள்ள இந்த நாளில் வல்லமை யூடியூப் அலைவரிசையை அறிமுகப்படுத்துகிறோம். இதில் அன்பர்கள் உறுப்பினராக இணைந்து (Subscribe), ஈடுபாட்டுடன் பங்கெடுக்க வருமாறு அழைக்கிறோம்.

    வல்லமை யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள்: http://www.youtube.com/channel/UCnjxyY8wTI3_HHFCD162IIA?sub_confirmation=1

    இதன் இடுகைகளுக்கு விருப்பக்குறியிட்டு, பின்னூட்டங்கள் அளித்து, உங்கள் நண்பர்களுக்கு இந்தப் பதிவுகளையும் அலைவரிசையையும் பகிர்ந்து, அவர்களையும் இணையுமாறு ஆற்றுப்படுத்த வேண்டுகிறோம். இந்த முயற்சியின் பயன், பலரையும் எட்ட வேண்டும் என்பதே நம் நோக்கம்.

    இந்த அலைவரிசையில் முனைவர் பா.ஜெய்கணேஷ் அவர்களின் காலந்தோறும் சங்க இலக்கியம் என்ற இணையவழி உரையை முதல் பதிவாக அளித்துள்ளோம்.

    தமிழில் மின்னாளுகை என்ற தலைப்பிலான எனது முனைவர்ப் பட்ட வாய்மொழித் தேர்வின்போது வழங்கிய திரை உரைக் காட்சித் தொடரையும் நீங்கள் காணலாம்.

    இந்த அலைவரிசை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, அறிவுப் பகிர்வு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும். ஆய்வுக் கட்டுரைகள், இளமுனைவர், முனைவர் பட்ட ஆய்வேடுகளின் சுருக்கங்களை இதில் காணொலியில் (வீடியோவில்) பதிந்து ஏற்றலாம். நீண்ட கட்டுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் முழுமையாகப் படிப்பதற்கு முன்னால், அதன் சாரத்தை ஓரிரு நிமிடங்களில் வழங்கினால், வாசகருக்கு அல்லது பயனருக்கு உதவிகரமாக இருக்கும். மேலும் இது, முழுக் கட்டுரையைப் படிப்பதற்குத் தூண்டுகோலாக அமையும். இது, ஒரு திரைப்படத்தைக் காண்பதற்கு முன்னால், அதன் முன்னோட்டத்தைப் பார்ப்பது போலாகும்.

    வாய்ப்புள்ளோர், முழுக் கட்டுரையின் செய்திகளையும் முழுமையான உரையாகவும் வழங்கலாம். இது ஒரே நேரத்தில் ஓர் உள்ளடக்கத்தைக் காணொலி வடிவிலும் எழுத்து வடிவிலும் வழங்குவதாகும். இதில், எழுத்தில் காட்ட முடியாத தொனியையும் குறிப்பையும் உணர்வுகளையும் பாவங்களையும் காட்ட இயலும். மேலும் காட்சி வடிவச் சான்றுகளையும் இதர இணையப் பக்கங்களையும் காணொலிகளையும் எடுத்துக் காட்டலாம்.

    இவை மட்டுமின்றி, தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அயல் நாடுகளிலும் பல்வேறு பயிலரங்குகள், கருத்தரங்குகள், மாநாடுகள், கூட்டங்கள் போன்றவை அன்றாடம் நடைபெற்று வருகின்றன. இந்த ஊரடங்கு காலத்தில் இவை அனைத்தும் இணையம் வழியே நடைபெறுகின்றன. மேலும் பல்வேறு பயிற்சி வகுப்புகளும் இணையத் தொடர்களும் முழு வீச்சில் நடக்கின்றன. இவை அனைத்தையும் ஆவணப்படுத்த, வல்லமை விழைகிறது. இவற்றின் முழுமையான காணொலிப் பதிவுகள், திரைஉரை காட்சித் தொடர்கள் ஆகியவற்றை இந்த அலைவரிசையில் ஆவணப்படுத்த விரும்புகிறோம்.

    அன்பர்கள் தாங்கள் உருவாக்கும் பவர்பாயின்ட் உரைகளை நமக்கு அனுப்பினால், அவற்றைக் காணொலியாக மாற்றி, வெளியிட இயலும். எனவே, காணொலிப் பதிவாக இருந்தாலும் பவர்பாயின்ட் ஆக இருந்தாலும் பிடிஎப் ஆக இருந்தாலும் எந்த வடிவில் உங்கள் காட்சியுரை இருந்தாலும் எங்களுக்கு அனுப்புங்கள். எங்கே, என்றைக்கு, எந்த நிகழ்வில் இதை வழங்கினீர்கள் என்ற விவரத்தைக் குறிப்பிட்டு அனுப்புங்கள். இவற்றை நாங்கள் உரிய முறையில் ஆவணப்படுத்துவோம். யூடியூப் அலைவரிசையில் வெளியிடுவதோடு, அவற்றை வல்லமை மின்னிதழிலும் காட்சிப்படுத்துவோம்.

    தொழில்நுட்பம் வழங்கியுள்ள அளப்பரிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி, தமிழ் உள்ளடக்கத்தையும் தமிழாய்வையும் வளர்த்தெடுக்க, வாருங்கள்.

    உங்கள் இலக்கியப் படைப்பு அல்லது ஆய்வுக் கட்டுரை அல்லது முனைவர் பட்டம் குறித்து, சுருக்கமாக / விளக்கமாகப் பேசி ஒரு பதிவை கூகுள் டிரைவ் வழியாக vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். பேச்சின் இடையே உங்கள் முனைவர் பட்ட ஆய்வேட்டினைக் காட்டலாம். அதில் உள்ள முக்கிய தரவுகள், சான்றுகளை எடுத்துக் காட்டலாம். அதன் தனிச் சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.

    வல்லமை எவ்வாறு உங்களுக்குப் பயனளிக்கின்றது என்றும் இன்னும் என்னென்ன செய்யலாம் என்றும் அன்பர்கள் கருத்துரைக்க வேண்டுகிறோம். வல்லமையின் வளர்ச்சிக்குத் துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர், ஆய்வுலகினர், எழுத்தாளர்கள், கவிஞர்கள், அறிஞர்கள், வாசகர்கள், நன்கொடையாளர்கள், தொழில்நுட்ப ஆதரவு நல்கும் எல்.கார்க்கிக் உள்ளிட்ட நண்பர்கள் என அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். படைப்புகளை வெளியிடுவதில், முனைவர் சுரேஷ் ரங்கநாதன், மிகச் சிறந்த ஒத்துழைப்பினை வழங்கி வருகிறார். பிழை திருத்துவதில் முனைவர் அருணன் கபிலன் பங்களிக்கிறார். தரமான படைப்புகளாலும் படக்கவிதைப் போட்டி முடிவுகளாலும் மேகலா இராமமூர்த்தி, வல்லமைக்கு அணிசெய்து வருகிறார். சாந்தி மாரியப்பனும் ராமலக்ஷ்மியும் உரிய படங்களைத் தேர்ந்தெடுத்து வழங்கி வருகின்றனர். வல்லமையின் மதிப்பாய்வு அறிஞர்கள், சிறப்பான மதிப்பீடுகளை வழங்கி வருகின்றனர். இவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மிகுந்த நன்றி.

    தரமான இதழாக வல்லமை தொடர்ந்து பயணிக்கும். உங்கள் அனைவரின் தொடர்ச்சியான நல்லாதரவினை வேண்டுகிறோம்.

    Share
  • உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    உன் அழகுத் தோட்டத்தில் – ஆர்.எஸ்.மணி கவிதை

    இது, கனடா ஆர்.எஸ்.மணி, 2007 மார்ச் 18 அன்று எனக்கு அனுப்பிய கவிதை. அவருடைய “Idle Tears” தொகுப்பிலிருந்து அவரே மொழிபெயர்த்த கவிதை. இந்த ஓவியத்தை வரைந்தவரும் அவரே. இந்தக் கவிதைக்கு இசையமைத்தவரும் அவரே. எனக்கு மிகவும் பிடித்த கவிதை.  – அண்ணாகண்ணன்.

    இந்தக் கவிதையை ஆர்.எஸ்.மணி குரலில் இங்கே கேட்கலாம்

     

    உன் அழகுத் தோட்டத்தில்
    ஒரு மூலையின் ஓரத்தில்
    மலராய் நான் பூத்திடுவேன்.

    உன்னுடைய மென்பாதம்
    வேறெங்கோ நடந்தாலும் – என் மனமோ
    உன்னையே சுற்றிவரும்.

    பரந்த உன் வீதியிலே – உன்
    கால்பட்ட மண்தரையில்
    பாடகனாய்த் திரிந்திடுவேன்.

    முற்றத்தில் நீஅமர்ந்து
    மலர்களைத் தொடுத்தாலும் – என் இசையோ
    உனைத் தொட்டு முத்தமிடும்.

    உன் அழகு மாளிகையில்
    ஒரு மூலைப் பிறையினிலே
    சிறுவிளக்காய் நானிருப்பேன்

    கருத்த உன் விழிகளென்னைக்
    காணாமல் இருந்தாலும் – நான் அங்கே
    காலமெல்லாம் எரிந்திருப்பேன்.

    Share
  • (Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

    (Peer Reviewed) பண்ணோடு இயைந்த மகாகவி பாரதி

    திரு. பாபு விநாயகம், நிறுவனர் மற்றும் தலைவர், உலகத்தமிழிசை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம், வாஷிங்டன் டி.சி, அமெரிக்கா.

    முனைவர். ஆ. ஷைலா ஹெலின், தமிழ்த்துறை, கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், கேரளா, இந்தியா.

    தன் எண்ணங்களையும் சிந்தனைகளையும் இலக்கிய உணர்வோடு வெளிப்படுத்துபவன் கவிஞன். எல்லாக் காலங்களிலும் எல்லா மொழிகளிலும் புற்றீசல் போல் முளைத்தெழும் கவிஞர்களுள் “மகாகவி” எனும் சிறப்புக்கு உரியவர் ஒரு சிலரே. அங்ஙனம் இவ்வுலகில் கி.பி.1882 முதல் கி.பி.1921 வரையிலாக மொத்தம் முப்பத்தொன்பது ஆண்டுகளே வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார், ஒரு மகாகவி எனும் தகுதிக்குரியவர்.

    பாரதியார் “பண்ணோடு இயைந்தவர்” என்றும், தமிழரின் மரபிசையான பண்ணிசையை மீட்டுருவாக்கிட பாரதியின் இரு பாடல்களுக்கு இக்கட்டுரையில்  பண்ணிசைக்கப்பட்டுள்ளன.

    இசையோடு இயைந்த பாரதி

    பாரதியின் பல்நோக்குப் பார்வையில் இசைசார் விளக்கங்கள் இல்லாமல் இல்லை. இசைப் பாடல்கள் பல இயற்றியும் அவற்றுள் இசை பற்றிய பல நுணுக்கங்களைக் குறிப்பிட்டும் தான் ஒரு சிறந்த இசை அமைப்பாளர்  என்பதையும் நிருபித்துள்ளார். தமிழிசைக் கலைச் சொற்களான பண், தாளம், சந்தம், பாடல், சங்கீதம் முதலியவைகளும் குழல், வீணை, முரசு, பேரிகை வெண்சங்கு ஆகிய இசைக் கருவிகளின் பெயர்களும் பாடல் வரிகளில் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளன. பாரதியார் கவிதைகளில் காணலாகும் பண் குறிப்புகளாவன:

    “பண்ணில் இனிய பாடலோடு” (விடுதலை வேண்டும்)1
    “பண்ணிலினிய சுவை பரந்த மொழியினால் ” (மனப் பீடம்)1
    “பாட்டைத் திறப்பது பண்ணாலே” (அம்மாக்கண்ணு பாட்டு)1
    “பண்ணே பண்ணே பண்ணே
    பண்ணிற் கேயோர் பழுதுண்டாயின்
    மண்ணே மண்ணே மண்ணே” (குயில் பாட்டு)1

    “பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு
    பத்தினிப் பெண்வேணும் -எங்கள்
    கூட்டுக் களியினிலே-கவிதைகள்
    கொண்டுதர வேணும்-அந்தக்
    காட்டு வெளியினிலே -அம்மா! நின்தன்
    காவலுற வேணும்;என்தன்
    பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்” (காணி நிலம் வேண்டும்)1

    “எண்ணுங் காரியங்க ளெல்லாம் – வெற்றி
    யேறப் புரிந்தருளல் வேண்டும்-பல
    பண்ணப் பெரு நிதியம் வேண்டும் -அதிற்
    பல்லோர் துணை புரிதல் வேண்டும் -சுவை
    நண்ணும் பாட்டினொடு தாளம் -மிக
    நன்றாவுளத் தழுந்தல் வேண்டும் -பல
    பண்ணிற் கோடிவகை இன்பம் – நான்
    பாடத்திறனடைதல் வேண்டும்! ( யோக சித்தி – 7)1

    “பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்
    புண்ணை யொழிப்பீர் -இந்தப்
    பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை”( கண்ணன் பிறப்பு)1

    “பண்ணில் இனிய பாடலோடு பாயு மொளியெலாம்
    பாரில் எம்மை உரிமை கொண்டு பற்றி நிற்கவே”-(விடுதலை வேண்டும்)1

    ஆகிய வரிகளுள் பண்ணிசைக் கூறுகளையும், தேசிய கீதங்கள், திருப்பள்ளி எழுச்சி பாடல்கள், தெய்வப் பாடல்கள் ஞானப் பாடல்கள், தனிப்பாடல்கள், கண்ணன் பாட்டு, தமிழர் பாட்டு, வள்ளிப் பாட்டு, காளி பாட்டு, நவராத்திரி பாட்டு முதலிய பாட்டுகளையும் பாரதி பாடியுள்ளார். பாடடினைத் தாளத்தோடு பாட வேண்டும் என்பதனை,

    “தாளம் தாளம் தாளம்
    தாளத்திற்கோர் தடையுண்டாயின்
    கூளம் கூளம் கூளம்”- (குயில் பாட்டு)1

    என்னும் பாடல் வரிகளால் அறியலாம்.

    “பாட்டினைப்போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா!
    பூதங்க ளொத்துப் புதுமைதரல் விந்தையெனில்
    நாதங்கள் நேரும் நயத்தினுக்கு நேராமோ?
    ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,
    ஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ”(குயிலும் மாடும்)1

    எனும் வரிகளினால் பாரதியார் பாடல்களின்கண் காணலாகும் ஈர்ப்பு அறியலாகிறது.

    பண்ணோடியைந்த பாரதி

    “பாட்டுக்கொரு புலவன் பாரதியடா – அவன்
    பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
    கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா!” (அமரகவி)2

    என்று கூறியுள்ள கவிமணியின் வரிகளிலிருந்து பாரதியின் பாடல்கள் பண்ணோடு பாடக்கூடியவைகளாக அமைந்திருக்கின்றன என்பதனை நன்கு உணர்ந்து கொள்ள முடிகிறது.

    “மனந் திறப்பது மதியாலே
    பாட்டைத் திறப்பது பண்ணாலே”  (அம்மாக்கண்ணு பாட்டு)1

    இவ்வரிகளில் “பாட்டைத் திறப்பது பண்ணாலே” எனும் பாரதியின் தொடர் முலம், இவரின் பாடல்கள் பண்ணின் இலக்கணம் பெற்ற பாடல் என்பது பொருள். நெஞ்சு, மிடறு, நாக்கு, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை என்னும் எட்டுப் பெருந்தானங்களில் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு எனும் எட்டு கிரியைகளால் பண்ணப்படுவதால் “பண்” எனப் பெயராயிற்று என்பதனை,

    “பாவோடணைதல் இசை என்றார், பண் என்றார்
    மேவார் பெருந்தானம் எட்டானும் – பாவாய்
    எடுத்தல் முதலாய் இருநான்கும் பண்ணிப்
    படுத்தமையால் பண்ணென்று பார்” (3:26.அடியார்க்.உரை.ப.105)3

    என அரங்கேற்றுக் காதையில் அடியார்க்கு நல்லார் பண் குறித்துக் கூறியுள்ளார்.

    பண்ணிலக்கணம்

    பண்ணிலக்கணம் என்பது பண்ணீர்மையைக் குறிப்பதாகும். பண்ணீர்மைகள் என்பன பண்ணிற்குரிய ஓசைகளாலாகிய நிறங்கள். பண்ணின் நிறங்கள் பதினொன்றும் பண்ணின் சுரங்களைப் பல்வேறு வகைகளில் இசைத்தலால் வருவன. இதனை இளங்கோவடிகள் “வக்கிரித் திட்டம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    “இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்தாங்கு
    அசையா மரபின் அதுபட வைத்து” (3:41,42.ப.63)3

    என்னும் அடிகளுக்கு ஈருரைஞர்கள் (அடியார்க்கு நல்லார்,அரும்பத உரையார்) உரைத்துள்ள விளக்கம்,

    “இவைப்புலவன் ஆளத்திவைத்த பண்ணீர்மையை முதலும், முறையும், முடிவும், நிறையும், குறையும், கிழமையும், வலிவும், மெலிவும், சமனும், வரையறை, நீர்மையும் என்னும் பதினொரு பாகுபாட்டினாலும் அறிந்து, அறிந்த வண்ணம் அவன் தாள நிலையில் எய்த வைத்த நிறம் தன் கவியினிடையேத் தோன்ற வைக்க வல்லோனாய்” (3:41,42 அடியார்க். உரை.ப.63, அரும்பத உரை.ப.108)3 என்பதாகும்.

    1. முதற் சுரம் என்பது பண்ணின் எடுப்புச் சுரம் (கிரகச் சுரம்).

    2. முறை என்பது பண்ணுக்குரிய சுரங்களின் வகைகளையும் அவை வரும் வரிசைகளையும் குறிப்பது.

    3. முடிவு சுரம் என்பது பண்ணின் முடிவு பெரும் சுரமமாகும்.

    4. நிறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் நிரம்ப நிறுத்தல் சுரத்தை குறிக்கும்.

    5. குறை என்பது ஒரு பண்ணை ஆலாபனை செய்கையில் மிகக் குறைவாக ஒலித்தற்குரிய சுரம்.

    6. கிழமை சுரம் என்பது இணை, கிளை, நட்பு என்னும் குறியறிந்து புணரும் சுரங்கள் வந்து வந்து சேரும் சுரமாகும். இதனை ஜீவ சுரம் என்பர்.

    7. வலிவு என்பது இராகத்தை வலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

    8. மெலிவு என்பது இராகத்தை மெலிவு மண்டிலத்தில் நிறுத்தி பாடுவது.

    9. சமன் என்பது சமன் மண்டிலத்தில் பண்களின் சுரங்களை இசைத்தல்

    10. வரையறை என்பது பண்ணிற்கு என வரையறுக்கப்பட்ட நெறிகளும் முறைகளுமாகும்.

    11. நீர்மை என்பது ஒவ்வொரு பண்ணுக்குரிய சுவை, உணர்வு, மெய்ப்பாடு, தாட்டு வரிசைகள் முதலியவைகளைக் குறிக்கும்.

    பண்ணிலக்கணம் அல்லது பண்ணீர்மைகள் என்பது முதல், முறைமை, முடிவு, நிறை, குறை, கிழமை, வலிவு, மெலிவு, சமன், வரையறை, நீர்மை என்னும் பதினோரு பாகுப்புகளாக வகைப்படுத்திப் பாடும் திட்டமாகும்.(தொகுதி -3.ப.248)4

    பண்ணிசையில் பாரதியார் பாடல்கள்

    தென்னக இசையியலின் சிறப்புத் தன்மைகளுள் ஒன்றான இராக முறைக்கு முன்னோடியாகத் திகழ்வது தமிழிசையின் பண்களே.(ப.48)5 இப்பண்ணிசையை மீட்டுருவாக்கம் செய்வதோடு தமிழர் தம் பாரம்பரிய இசை முறையான பண்ணிசையினை அறிந்திருத்தலின் அவசியம் உணர்ந்து மகாகவி பாரதியின் இரண்டு பாடல்களுக்குப் பண்ணிசை அமைக்கப்பட்டு இங்கே  பணிந்தனுப்பப்பட்டுள்ளன.

    1. சொல்

    பண்: செம்பாலை          இராகம்: அரிகாம்போதி              தாளம் : ஆதி

    சொல் ஒன்று வேண்டும்,தேவ சக்திகளை
    நம்முள்ளே நிலைபெறச் செய்யும் சொல் வேண்டும்.

    1.விரியும் அறிவுநிலை காட்டுவீர்-அங்கு
    வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்:
    தெரியும் ஒளிவிழியை நாட்டுவீர்-நல்ல
    தீரப் பெருந்தொழிலில் பூட்டுவீர்.

    2.“வலிமை,வலிமை”என்று பாடுவோம்-என்றும்
    வாழுஞ் சுடர்க்குலத்தை நாடுவோம்;
    கலியைப் பிளந்திடக் கை யோங்கினோம்-நெஞ்சில்
    கவலை யிருளனைத்தும் நீங்கினோம்.

    3.“அமிழ்தம்,அமிழ்தம்’‘என்று கூறுவோம்-நித்தம்
    அனலைப் பணிந்துமலர் தூவுவோம்;
    தமிழில் பழமறையைப் பாடுவோம்-என்றும்
    தலைமை பெருமை புகழ் கூடுவோம்.1

    2. முரசு

    பண்: தனாசி                இராகம்: தன்யாசி                    தாளம்: ஆதி

    வெற்றி எட்டுத் திக்கு மெட்டக் கொட்டு முரசே!
    வேதம் என்றும் வாழ்க என்று கொட்டு முரசே!
    நெற்றி யொற்றைக் கண்ணனோடே நிர்த்தனம் செய்தாள்
    நித்த சக்தி வாழ்க வென்று கொட்டு முரசே!

    1.சாதிக் கொடுமைகள் வேண்டாம்; – அன்பு
    தன்னில் செழித்திடும் வையம்;
    ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; – தொழில்
    ஆயிரம் மாண்புறச் செய்வோம்

    2.பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்;
    மண்ணுக் குள்ளே சிலமூடர் – நல்ல
    மாத ரறிவைக் கெடுத்தார்

    3.அன்பென்று கொட்டு முரசே! – மக்கள்
    அத்தனை பேரும் நிகராம்.
    இன்பங்கள் யாவும் பெருகும் – இங்கு
    யாவரும் ஒன்றென்று கொண்டால்.1

    முடிவுரை

    “பாட்டுத் திறத்தாலே-இவ்வையத்தைப்
    பாலித்திட வேணும்”1

    எனக் கூறியுள்ள மகாகவி பாரதி தன் பல்நோக்குப் பார்வையினால் இறை உணர்வு, தேச உணர்வு, விடுதலை வேட்கை, சமூக எழுச்சி, கவித்துவம், சொற்சுவை, பொருட்சுவை முதலியவைகள் அடங்கிய பல்வேறு பாடுபொருள்களில் ஆவேசப் படைப்புகளைப் படைத்து, “மகாகவி” எனும் தகைமையுடையவராக மட்டும் அல்லாது “பண்ணோடு இயைந்தோன்” என்னும் தகைமையையும் பெற்றுத் திண்மையாக விளங்குகின்றார்.

    தமிழரின் மரபிசை என்பது பண்ணிசையாகும். பண்ணிசைக் கூறுகளையும் தமிழிசையின் வேர்களைக் கொண்ட கருநாடக இசையின் கூறுகளையும் நன்கு அறிந்திருந்தமையால் பாரதி பிற புகழ்பெற்ற கவிஞர்கள் குறிப்பிடாத இப்பண்ணின் மேன்மையைத் தம் கவிதைகளுள் விரவியுள்ளார். இவரின் காலகட்டத்தில் பண்ணிசையின் ஆக்கம் விளிம்பு நிலையடைந்து, அயல் மொழியாளரின் கலப்பினால் கருநாடக இசை துளிர்விட்டுப் படர்ந்து பந்தலித்து வளரத் தொடங்கியிருந்தது.

    இயற்றமிழ் வடிவில் பல்வேறு பாடுபொருள்களை மக்களின் மனதில் உறையச் செய்வதைக்காட்டிலும் இசை வடிவின் வாயிலாக மக்கள் மனதில் பதிப்பிப்பது மிக எளிமையாது என்பதனால், மகாகவி பாரதியின் பாடல்களுள் இரண்டு பாடல்களைத் தெரிவு செய்து, தமிழரின் மரபிசையான பண்ணிசையினை மீட்டுருவாக்கும் நோக்கோடு பண்ணிசைக்கப்பட்டு உள்ளன. இப்பாடல்கள் தமிழினத்தவரின் இசையுணர்வுகள், பண்ணுணர்வுகள், கலையுணர்வுகள் முதலியவைகள் மேம்படுத்துவதோடு, தமிழரின் மரபிசையாம் பண்ணிசை மக்களிடையே மீண்டும் உயிரோட்டம் பெறும் என்பது திண்ணம்.

    துணை நின்றவைகள்

    1. பாரதியார் கவிதைகள் – http://www.tamilvu.org/library/l9100/html/l9100ba1.htm

    2. கவிமணியின் கவிதைகள்- http://www.tamilvu.org/library/l9302/html/l9302ind.htm

    3. சிலப்பதிகாரம் மூலமும் அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும்- முனைவர்.சாமிநாதய்யர்,உ.வே. தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர் ,1985.

    4. தமிழிசைக் கலைக்களஞ்சியம் தொகுதி(1-4)- சுந்தரம்.வீ.ப.கா. பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி, 2006.

    5. பண்ணும் இலயமும் – முனைவர் அங்கயற்கண்ணி.இ. அருளானந்த நகர், தஞ்சாவூர், 2010.


    ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

    பண்ணோடு  இயைந்த மகாகவி பாரதி என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன்மதிப்பீடு

    1. பாரதி இயற்றமிழ்ப் பாடல்களை (நான்குவகைப் பாக்கள் மற்றும் அவற்றின் இனங்கள் என) எழுதுகிறபோதே உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர். எனவே தம்முடைய இசைப்பாடல்களை எழுதிய போது அடைந்த உணர்ச்சி பிறழ்ந்து உணரப்பட்டுவிடக் கூடாது என்னும் எண்ணத்தால் பல பாடல்களுக்கு இராகம், மெட்டு, தாளம் எனக் குறிப்புகளைத் தந்திருக்கிறார்.

    2. அவ்வாறு குறிப்புகள் பெறாத ஆனால் பெற்றிருக்க வேண்டிய பாடலகளில் இரண்டு பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கட்டுரையாளர் இசையமைத்துத் தாளம் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருப்பது பாராட்டுக்கு உரியது.

    3. பாரதியைப் பற்றிய ஆய்வில் அவருடைய இசைப் பாடல்களைப் பற்றியன எண்ணிக்கையில் குறைவு. இவர் அப்பொருள் குறித்துத்  தமது ஆய்வுக் கடடுரையை அமைத்திருப்பது நல்ல முயற்சி.

    4. சான்றெண் விளக்கத்துள் ஓரிடத்தில் ‘குயில்பாட்டு’ எனவும் பிறிதோரிடத்தில் ‘குயிலும் மாடும்’ எனவும் குறித்திருப்பது நெறியன்று. ஆய்வில் அவசரம் கூடாது.

    5. வலிமையான தரவுகள் கொண்ட ஆய்வில்  ‘சுரமமாகும் ‘பாகுப்புக்கள்’ முதலிய தட்டச்சுப் பிழைகள் தவிர்த்திருக்கலாம். இதனால் ஆய்வுச்சாரம் குறையவில்லையாயினும் ‘பொலிவு’ குறைகிறதல்லவா?

    6. ‘மஃகான் புள்ளி முன் அத்தே சாரியை’ (தொல் 1885)  என்பதனான் மனத்தில் என்றே இருத்தல் வேண்டும் ‘மரத்தில்’ ஏறினால் ‘பழத்தைப்’ பறிக்கலாமேயன்றி ‘மரமில்’ ஏறினால் ‘பழமை’ பறிக்க இயலாது. ‘முகத்தில்’ முகம் பாரக்கலாம் ‘முகமில்’ முகம் பார்க்க இயலாது. ‘மனத்துக்கண்’ என்பது நோக்குக. ‘மனதில்’ என்பது இலக்கணமுடையதன்று

    7. பாரதியைப் பற்றிய வழக்கமான ஆய்வுத் தடம் விலகிப் புதுத்தடத்தில்  பயணிக்கும் முயற்சியும் அம்முயற்சியின் விளைவாக மகாகவியின் பாடல்களில் இரண்டினுக்கு இசையமைத்துக் காட்டியிருப்பதும் கட்டுரையின் சிறப்பை உயர்த்துகின்றன.


     

    Share