(Peer Reviewed) அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும் (உரையாசிரியர் பரிமேலழகரின் உரைப்பண்பாடு பற்றியதோர் ஆய்வு)

0

புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
விளார் புறவழிச்சாலை, 
தஞ்சை மாவட்டம் – 613006. 
மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com


முன்னுரை

தமிழிலக்கண, இலக்கிய உரைகள் படைப்பிலக்கியங்களுக்கு நிகரான அகப்புறக் கட்டமைப்பைக் கொண்டவை அவற்றை ஒருமுறை ஓதியறிந்தாரும் இந்த உண்மையை உணர்வர், ஒப்புவர். பரிமேலழகரின் திருக்குறள் உரையும் அவற்றுள் ஒன்று. வலிமையான தரவுகளோ சான்றுகளோ இல்லாத நிலையிலும் தமிழியல் உலகத்தின் மாபெரும் மறுதலிப்புக்கு ஆளானவர். இதனால் புலமையுலகுக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பு பெரிது. ஒரு மாபெரும் இலக்கியச் செல்வத்தின் அருமை பெருமைகளை மீட்டெடுத்து ஆய்வுலகத்தின் பார்வைக்கு வைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வடிவமைக்கப்படுகிறது. அழகரின் உரைகாணும் நெறிகளில் ‘பண்பாடு காத்தல்’ என்பதும் ஒன்று.  மாறுபட்ட கருத்துக்களை அவர் கையாளும் முறை பற்றி இந்தக் கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

 • உரைவேற்றுமையும் அழகர் பண்பாடும்

    அழகர் திருக்குறள் உரையில் எந்தக் குறட்பாவிற்கான உரையிலும் தனது கருத்தே சரி என்னும் வாதத்தை முன்வைத்தார் என்பதற்கு வலிவான சான்றேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

 1. தன்னுடைய கருத்தினைப் பதிவு செய்வார்.
 2. தன்னுடைய கருத்திற்கேற்ற பாடங்களையே ஏற்பார்.
 3. மூலத்திற்கு நெருங்கி வராத கருத்துக்களைச் சுட்டுவார்.
 4. உரைநெறி பிறழ்வை இலக்கண, இலக்கியச் சான்றுகளால் மறுப்பார்.
 5. பிற உரையாசிரியர்களின் இருவகைப் புலமைச் சோர்வை எடுத்துக் காட்டுவார்.
 6. மறுக்கவும் முடியாமல் ஏற்றுக் கொள்ளவும் இயலாத நிலையில் ‘இவ்வாறு உரைப்பாரும் உளர்’ என்று சுட்டிக்காட்டி அமைவார்.

இவற்றுள் இறுதியாக அமைந்த ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்குள் அமைந்திருக்கும் உரைநிலைப் பண்பாட்டை அறிவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொள்கிறது.

1.1. பார்வையும் நோக்கும்

பார்வையும் நோக்குமாகிய இரண்டும் கண்களின் வினையே. எனினும் ‘பார்வை’ என்பது மனத்தோடும் மூளையோடும் பொருந்தாத நிலையிலும் நிகழக்கூடும். ஆனால் நோக்கு அத்தகையதன்று. ஒரு குறிக்கோளோடு பார்ப்பதைத்தான் நோக்கு என்ற சொல் குறிக்கும்.

‘அரிமா நோக்கு’ 1
‘நோக்குதற் காரணம்’ 2
‘கோல்நோக்கி வாழும் குட’ 3
‘நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள்’ 4
‘இருநோக்கு இவள் உண்கண்’ 5
‘கண்களவு கொள்ளும சிறுநோக்கம்’ 6
‘நோக்கரிய நோக்கே!’ 7
‘பருகிய நோக்கெனும்’ 8
‘மீன் நோக்கு நீள்வயல்’ 9

முதலிய இலக்கியத் தொடர்களும் நோக்கம், பார்வையின் வேறுபட்டிருப்பதைப் புலப்படுத்தக் கூடும்.

1.2. உரைப்பாரும் உளர்

பழந்தமிழிலக்கண, இலக்கிய உரைகளில் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் பெருவழக்கு. பிற உரையாசிரியர்களின் கருத்துக்களுக்கான மாறுபாட்டை எடுத்துக் காட்டுகின்ற நெறியினும்  இது வேறானது. ‘மூலத்திற்கான என் கருத்து இது. ஆனால் இவர் இப்படிச் சொல்கிறார். எதனை ஏற்பது என்பது கற்பார் கடன்’ என்பதே ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடர் உணர்த்தும் பொருளாகும். இத்தகைய நேர்வுகளில் பிற உரையாசிரியர்கள் அவ்வாறு உரைகொள்வதற்கான காரணத்தையும் சுட்டிச் செல்கிறாரேயன்றி அக்காரணமே தவறு என்று அவர் சொல்ல மாட்டார்.

1.3. ‘உரைப்பினும் அமையும்’ என்பது வேறு

உரைப்பாரும் உளர்’ என்னும் தொடரால் பரிமேலழகர் உரைப்பது ‘உரைப்பினும் அமையும்’ என்பதனினும் வேறானது. ‘உரைப்பினும் அமையும்’ என்றால் குறிப்பிட்ட குறட்பாவிற்குத் தன்னளவிலேயே பொருத்தமான வேறொரு உரையினைக் காணமுடியும் என்பதைச் சுட்டுவதாகும். ஒரு குறட்பாவின் அமைப்பு ஒன்றிற்கும் மேற்பட்ட கருத்துக்களைத் தனக்கே தோன்றும் அளவுக்கு அமைந்திருக்கிறது என்றால் பிறருக்குத் தோன்றுதல் சொல்ல வேண்டாவாயிற்று. இந்தப் பண்பின் அடிப்படையில்தான் அவர் உரைப்பாரும் உளர் என்னும் தொடரைக் கையாள்கிறார். இத்தகைய உயர்பண்பு தற்காலத்தில் காண்பதற்கு அரியது என்பதன்று. யாண்டும் இல்லையென்றே கூறலாம்.

“ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்”10

என்னும் குறட்பாவிற்கு,

“ஒற்றினானே எல்லார் கண்ணும் ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை அறியாத அரசன் வென்றியடையக் கிடந்த வேறொரு நெறியில்லை”11

என்று பொழிப்புரை எழுதி,

“இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும்.”12

என்று மற்றொரு உரை எழுதுகிறார். மேற்கண்ட உரைகளில் முன்னதில் ‘கிடந்தது’ என்பதற்கு ‘வெற்றிக்கான வழி’ என்று உரைகாணும் அழகர், பின்னதில் ‘வெற்றியே’ என்று உரைகாண்கிறார். இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம்.

“மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்”13

என்னும் குறட்பாவிற்கு,

“வானத்து மீன்கள் வேறுபாடு பெரிதாகவும் தம் மதியினையும் எம் மடந்தை முகத்தினையும் இது மதி இது முகம் என்று  அறியமாட்டாது  தம் நிலையினின்றும் கலங்கித் திரியா நின்றன”14

எனப் பொழிப்புரை எழுதி,

“இரண்டனையும் பதியிற் கலங்காத மீன்கள் அறியுமல்லது கலங்கின் மீன்கள் அறியா என்று உரைப்பினும் அமையும்.”15

என்று மற்றொரு உரை எழுதுகிறார். இவ்விரண்டு உரைகளுள் முன்னதில் மீன்களின் கலக்கமாகிய செயல் முதன்மைப்படுத்தப்படுகிறது. பின்னதில் மீன்கள் படர்க்கையாக்கப்பட்டு “இவை அறியும் இவை அறியா” என வினைமுடிபு காணப்பட்டுள்ளது. இரண்டு உரைகளும் குறட்பாவின் சொற்கிடக்கையால் அழகர் ஒருவருக்கே தோன்றியனவாம். இதிலிருந்து மாற்றுரை காண்பதிலும், மாற்றுரையை மறுக்கும் போதும் அழகர் கொண்டிருந்த பொறுப்புணர்வும் அச்சமும் சிந்திக்கற்பாலன. எடுத்தேன்  கவிழ்த்தேன் என்று எடுத்தெறிந்து உரையெழுதும் போக்கு அவர் அறியாதது. தனது கருத்து இது என்று சொல்லுவார். பிறருடைய கருத்துக்கு மூலத்தின் அடிப்படையிலேயே மறுப்புச் சொல்வாரேயன்றித் தனது கருத்தினை மையமாக வைத்து அவர் மறுப்புச் சொன்னதாகத் தகவல் இல்லை. சுய முரண்பாடு இல்லாத உரையாசிரியர் அழகர். இனிச், சில குறட்பாக்களுக்குப் பிறர் கூறும் கருத்துக்களை அவர் மதிக்கின்ற பாங்கு சுட்டும் ‘உரைப்பாரும் உளர்’ என்னும் தொடருக்கு ஆளான சில குறட்பாக்களை ஆராயலாம்.

1.3.1. செய்யாமையா? செய்யாமலா?

இருக்கின்ற பாடத்தை வைத்து உரை சொல்கிறார் அழகர். அதாவது தான் கூறும் உரைக்கேற்ற பாடத்தைக் கொள்கிறார். அதுதான் பாடமாக இருத்தல் வேண்டும் என்று நம்புகிறார். உரை எழுதுகிறார்.

“செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது”16

என்னும் குறட்பாவிற்குத்,

“தனக்கு முன் உதவி செய்யாதிருக்க ஒருவன் பிறனுக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகும் விண்ணுலகும் கைம்மாறாகக் கொடுத்தாலும் ஒத்தல் அரிது”17

எனப் பொழிப்புரை எழுதுகிறார். எழுதிக்,

“கைம்மாறெல்லாம் காரணமுடையவாகலின் காரணம் இல்லாத உதவிக்கு ஆற்றாவாயின.”18

என விளக்கவுரை தருகிறார். ‘கைம்மாறெலலாம் காரணமுடையன’ என்றால் செய்கிற உதவியெல்லாம் திரும்பிவரும் நாள் (பிரதிபலன்) எதிர்பார்த்து’ (தற்காலத் திருமணத்தில் மொய் எழுதுவதுபோல) என்பதாம்.  ஆனால் அதிகாரம் ‘செய்ந்நன்றி அறிதல்’ ஆதலின் செய்த நன்றியைப் பற்றித்தான் அதிகாரப் பொருண்மை இருத்தல் வேண்டும். இருக்கிறது. செய்வாரின் தகுதி பற்றியோ அவன் செய்வானா மாட்டானா என்னும் ஐயம் பற்றியோ செய்ய இயலாத அவன் நிலைமை பற்றியோ சிந்திக்குமாறு அவ்வதிகாரப் பொருண்மை அமையவில்லை. ‘செய்’ந்நன்றி என்பதாலேயே ‘செய்யாமல் செய்’த உதவி என்பது பாடமாயிற்று என்பது அழகர் கருத்து. ஆனால்,

“செய்யாமைச் செய்த உதவி எனப் பாடம் ஓதி மதித்து உதவ மாட்டாமை உள்ள இடத்துச் செய்த உதவி” என்று உரைப்பாரும் உளர்”19

பிற உரையாசிரியர்கள் செய்திருக்கும் உரையினைச் சுட்டிக்காட்டி அமைகிறார். இங்கே நோக்க வேண்டியவை,

 • அதிகாரப் பொருண்மையை உள்வாங்கித் தான் கொண்ட

பாடத்தின் அடிப்படையில் உரை எழுதுகிறார்.

 • பிறர் கொள்ளும் பாடத்தையும் அதனடிப்படையில்

அவர் சொல்லும் உரையையும் காட்சிப்படுத்துகிறார்.

 • அவ்வுரை பற்றிய எந்தக் கருத்தினையும்

பதிவு செய்யாமல் விடுகிறார்.

 • அவர் கொண்ட பாடம் பற்றிய தமது கருத்தினையும்

பதிவு செய்யாமல் விடுகிறார்.

‘செய்யாமை’ என்னும் மற்றவர் கொண்ட பாடமும் ‘செய்யாமல்’ என்னும் அழகர் கொண்ட பாடமும் பாடபேதங்களாக மட்டும் நிற்காமல், மற்றவரின் பார்வையையும் அழகரின் நோக்கினையும் அறிந்து கொள்ள உதவும் கருவிகளாகவும் பயன்படுகிறது.

1.3.2. ‘ஈதல்’ பண்பா? பொருட்பன்மையா?

மேல் அதிகாரப் பொருண்மையினை உள்வாங்கிச் ‘செய்தற்கு இயலாத வறியவர்கள்’ என்னும் பொருள் தரும் செய்யாமையைப் பாடபேதமாகக் கொண்டு எழுதப்பட்ட உரையினை எடுத்தோதிய அழகர் மற்றொரு இடத்தில் முந்தைய குறட்பாக்களின் சாரத்தை உள்வாங்கி உரையெழுதிய குறட்பாவையும் பிறர் தமது புலமையாற்றலால் எழுதிய பல உரைகளையும் காட்சிப்படுத்துகிறார்.

“இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான் கண்ணே உள”20

என்பது குறட்பா. ஈகை என்னும் அதிகாரத்தில் மூன்றாவதாக இடம்பெற்றிருக்கும் இந்தக் குறட்பாவிற்கு,

“யான் வறியன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்க்கண் சொல்லாமையும் அதனைத் தன் கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும் இவ்விரண்டும் குலன் உடையான் கண்ணே உளவாவன” 21

எனப் பொழிப்புரை எழுதுகிறார்.

1.3.2.1. பிறருடைய பார்வையில் ஈதல்

உரையாமை, ஈதல் என்னும் இரண்டும் தொழிலடியாகப் பிறந்த பண்புச் சொற்கள். அவ்விருவகைப் பண்புகளும் நல்ல குடியிலே பிறந்தவரிடத்தில் உளவாகும் என்பது அழகர் கொண்ட இலக்கணத்திற்கான கருத்து. ஆனால் ‘இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்’ என்பதற்கு மற்றவர் கூறும் உரைகளைப்  பின்வருமாறு தொகுத்துக் கூறுகிறார்.

1. அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும்22

2. அதனைப் பின்னும் பிறனொருவன் சென்று அவன் உரையாவகைக்
கொடுத்தல் எனவும்23

3. யான் இதுபொழுது பொருளுடையன் அல்லேன் எனக் கரப்பான்
சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல் எனவும்24

உரைப்பாரும் உளர். அவர், ’ஈதல்’ என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக உரைப்பர்.25

இந்தக் குறட்பாவில் தன்னுடைய உரைக்கு ‘ஈதல்’ என்பதை வினையடியாகப் பிறந்த பண்பாகக் கொள்கிறார் அழகர். உரையாமையும் ஈதலுமாகிய இவையிரண்டும்” (இவ்விரண்டு உயர்பண்புகளும்) என்னும் உரைப்பகுதி காண்க.

1.3.2.2. பொருட்பன்மை என்றால் என்ன?

ஈதலாகிய தொழில் ஒன்று. ஈவார்க்குப் பயன்படும் பொருள்கள் பல. எனவே தொழில் ஒன்றாயினும் ஈயப்படும் பொருள்கள் பலவாதலால் ‘ஈதல்’ என்பது பொருட்பன்மையாயிற்று. ‘தானம்’ ஒன்றுதான். அன்னதானம், சொன்னதானம், கன்னிகாதானம், பூதானம், வித்யாதானம் எனப் பல்வகைப்படுதலின் ‘ஈதல்’ என்னும் சொல்லுக்குள் அடங்கும் தானங்கள் பலவாம். இந்தக் கருத்தினை அழகர் ஏற்றுக் கொள்கிறாரா என்பது இங்கே கருத்தில்லை. இப்படிச் சொல்கிறார்கள் என்று ‘உரைப்பந்தி’ வைப்பதோடு அமைதியடைகிறார்.

1.3.2.3. அழகர் உரையின் ஆழமும் பொருத்தமும்

‘ஈகை’ என்னும் அதிகாரத்தில் ஈகையது இலக்கணம் (221), ஈதலின் சிறப்பு (222), பெறுதலின் இழிவு (222) என நிரல்பட ஆசிரியர் கூறுகிறார்.

“மேல் தீது என்றது ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவை உணர்த்தியது”26

என்னும் மூலக்கொடுமுடியில் நிற்கிறார் அழகர். அதாவது இதற்கு முந்தைய குறட்பாவில் குறிப்பிட்ட தீதினை ஒழிக்க வேண்டுமல்லவா? எது தீது? எவ்வம் உரைத்தல் தீது! அதனால் ‘உரையாமை’ என்றார். இனி நன்மையைச் செய்ய வேண்டுமல்லவா? எது நன்மை? ஈதல் நன்மை! அதனால் ஈதல் என்றார். இலன் என்னும் எவ்வம் உரையாமையும் பண்பு. தொடர்ந்து ஈதலும் பண்பு. இவ்விரண்டு பண்புகளும். நற்குடிப் பிறந்தார் மாட்டு உளவாம் எனக் கருத்துரைத்தார். ஈதல் என்பதற்கான பல்வகை அறச்செயல்கள் என்னும் பொருள் பற்றிக் கருத்துரைக்காமல் தானுண்டு தன் உரையுண்டு’ என அடக்கமாகிவிடுவதைக் காணமுடிகிறது.

1.3.3. பெருமைச் சிதைவா? நம்பிக்கைத் துரோகமா?

பிறனுக்குரிய மனையாளை விரும்புவதை வடநூல்கள் ‘பரகீயம்’ என வழங்கும். அதாவது அவளுடைய ஒப்புதலோடு நடப்பதால் பிழையில்லை என்பது கருத்து. ஆனால் திருக்குறள் அதனை அறத்துப்பாலில் வைத்து ஆராய்வதால் பாவம் என்றே வலியுறுத்துகிறது. நடப்பியலில் அது ஒருவனுக்கான பெருமையைச் சீர்குலைத்துவிடும் என்றும் சுட்டுகிறது.

“எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்” 27

என்னும் குறட்பாவிற்குக்,

“காமமயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல் எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும்?” 28

என வினாவடிவில் அமைந்த குறட்பாவிற்கு வினா வடிவிலேயே உரையெழுதியிருக்கிறார். எழுதியவர்,

‘தேரான் பிறன்’ என்பதனைத் ‘தம்மை ஐயுறாத பிறன் என்று உரைப்பாரும் உளர்”29

எனப் பிறர் கூறும் உரைப்பகுதியினைச் சுட்டிச் செல்கிறார்.

1.3.3.1. அழகரின் அரிய நோக்கு

அதிகாரம் அறத்துப்பாலில் அமைந்துள்ளதாலும் ‘பிறனில்’ என்பதற்குப் பிறன் ஒருவனுடைய மனைவி இருக்கும் இல்லம் என்னும் பொருளே சிறத்தலாலும் ‘தேரான்’ என்பதற்குத் தாம் செய்யும் பிழையை உணராதவன் என்னும் பொருள் பொருத்தமுடையது என்பதாலும் அவ்வாறு தேராமைக்குக் காமமே காரணம் என்பதாலும் ‘தம்மை ஐயுறாத பிறன்’ என்பதில் பொருட்சிறப்பு ஏதுமில்லையாதலாலும் பிறனை ஏமாற்றுதல் என்பதனினும் கணநேரக் காமத்திற்காக ‘அறவழு’ உண்டாக்கும் வடு பெரிது என்பதாலும் அழகருக்கு இவ்வாறு உரைகூற நேர்ந்தது. மேலும் இலக்கிய நுகர்வு அடிப்படையிலும் ‘எனைத்துணை’ என்பதற்கேற்பத் ‘தினைத்துணை’ என்னும் முரண் தரும்பொருள் நுட்பத்தை அழகர் சிந்தித்து உரையெழுதுவதாகக் கருதலாம்.     தினைத்துணையும் தேரான் (ஆகி) பிறனில் புகல் (செய்யின்) எனைத்துணையார் ஆயினும் என்னாம்? என்னும் உரைநடை நிரலை ‘என்னாத்த படிச்சு என்னாத்த செய்யறது?” என்னும் வழக்கோடு ஒப்புநோக்குக.

‘பிறனில் புகல்’ என்னும் காரியத்திற்குத் ‘தேராமையைக் காரணமாக்கினால்தான் அறம் சிறக்க ஏதுவாகும். ‘தேராதவனாகிய பிறன்’ என்பதனினும் ‘அறக்கழிவு’ என்பதனைத் தான் தேராமல்’ என்பது வலிமையுடைத்து. அதிகாரம் பிறனில் விழைபவனுடைய ஒழுக்கம் பற்றியதேயன்றித் ‘தம்மை ஐயுறாத பிறனைப் பற்றியதன்று’. அழகர் இந்த அளவுக்குச் செல்லவில்லை. ‘இப்படியும் உரை அமைந்திருக்கிறது’  அப்படிச் சொல்வதற்கு இடமிருக்கிறது என்ற அளவில் சுட்டி அமைதியடைகிறார்.

1.3.4. ஆவது அறிதல் என்றால் என்ன?

திருவள்ளுவர் அடையாளப்படுத்தும் பத்து உடைமைகளில் அறிவுடைமை என்பதும் ஒன்று. இவ்வதிகாரத்தில் ஐந்து பாடல்களில் அறிவின் இலக்கணம் கூறிய வள்ளுவர், தொடர்ந்து அவ்வறிவினை உடையாரது இலக்கணத்தைக் கூறுகிறார். அறிவு நுண்பொருளாதலின் அதன் உடைமையை உடையார் செய்யும் செயல்வழியேயன்றிப் பிறவழி அறிதல் இயலாதாம். எனவே எதிர்வருவதை அறியும் ஆற்றலுடையாரும் அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுபவருமே அறிவுடையார் என இலக்கணம் வகுப்பர் (427, 428). அவ்விலக்கணம் கூறும் குறட்பாக்களுள்,

“அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃதறி கல்லா தவர்”30

என்பதும் ஒன்று. இக்குறட்பாவிற்கு,

“அறிவுடையராவார் வரக்கடவதனை முன் அறிய வல்லார் அறிவிலராவார்  அதனை முன் அறிய மாட்டாதார்”

முன் அறிதல்: முன்னே எண்ணி அறிதல். அஃது அறிகல்லாமையாவது; வந்தால் அறிதல்”31

என்னும் விளக்கத்தினை அழகர் எழுதுகிறார். எழுதி,

“இனி, ‘ஆவது அறிவார்’ என்பதற்குத் ‘தமக்கு நன்மையறிவார்’ என்று உரைப்பாரும் உளர்”32

என ஆவது அறிதல் என்னும் தொடருக்குப் பிறர் காணும் உரையினைப் பதிவிடுகிறார். ஆவது என்னும் தொடருக்குச் செயப்படுபொருளாகத் தமக்கு ஆவது எனக்கொள்ளுமம் பிறருடைய உரைக்கருத்துப் பற்றி எதுவும் தெரிவிக்காது அப்படியே பதிவு செய்து விடுகிறார்.

1.3.4.1. அழகரின் அரிய நோக்கு

பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாத நிலையில் அறிவினால் உண்டாகும் பயனேதும் இல்லையாதலால் அறிவின் பயன் பிறர் நலம் பேணுதலே என்பது சொல்லாமல் பெறப்படும். தனக்கு மட்டுமன்றிப் பிறருக்கும் கேடு வரும் செயல்ளைத் தன் இருவகை அறிவாலும் உய்த்துணர்ந்து காப்பதே அறிவுடையாருக்கு இலக்கணமாக இருத்தல் இயலும்; ‘எதிரதாக் காக்கும் அறிவினார்’ என்பதும் ‘வருமுன்னர் காவாதான் வாழ்க்கை’ என்பதும் அக்கருத்தின் சாரமே! ‘ஆவது அறிவது’ என்பதற்குத் தமக்கு வரும் நன்மை என உரைகொள்வது அறிவுடைமையின் முழுப்பயனைச் சுட்டுவதாகத் தெரியவில்லை. மேலும் அவ்வுரைப்பொருள் அழகரின் உரைப்பொருளிலேயே அடங்கிவிடுகிறது என்பதையும் நோக்கினால் அழகர் உரையின் மாண்பு விளங்கும். இருப்பினும் இவற்றில் எதனையும் முன்னெடுக்காது ‘தமக்கு நன்மை அறிவார்” என்று பிறர் கூறுகின்றனர்’ என வாளா அமைந்துவிடுகிறார்.

1.3.5. அகத்திணை நுட்பம்

முப்பெரும் பொருண்மைகளுக்கு உரையெழுதியவர் அழகர். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கனுள் தொடக்கத்திலேயே ‘வீட்டை’த் தவிர்த்துவிடுகிறார். அவருடைய உரை யாண்டும் முரண்பாடு இல்லாமல் அமைந்ததற்கு இது ஒரு தலையாய காரணம். அந்த வகையில் காமத்துப் பாலுக்கு உரையெழுதுகிறபோது அகத்திணைத் தலைமக்களாகவே அவர் மாறிவிடுகிறார். அகத்திணையின் தலைமைப் பாத்திரம் தோழியே என்பது அறிஞர் முடிவு. தோழிக்கும் காதல் உண்டு. தோழி தலைவியாகிறபோது தலைவி தோழியாவாள். சுட்டி ஒருவர் பெயர்கொளாமைக்குக் காரணம் இதுதான். கண்ணகிக்குத் தேவந்தி தோழியாகலாம். ஆனால் தேவந்திக்குக் கண்ணகி தோழியாக முடியாது. இந்த அகப்பொருள் மரபை உள்வாங்கிக் கொண்டாலேயொழிய  அகத்திணை இலக்கியங்களைச் சுவைப்பது கடினம்.

1.3.5.1. அழகர் செய்துகொள்ளும் அதிகாரப் பொருளமைதி   

ஏனைய பால்களில் உள்ள அதிகாரங்களைப் பொருண்மை நிலைக்கு ஏற்பப் பகுத்து உரையெழுதும் அழகர் காமத்துப்பாலின் அதிகாரப்பகிர்வை அகத்துறைகளின் அடிப்படையில் கொள்கிறார். சான்றாக, ‘அவர் வயின் விதும்பல்’ என்னும் அதிகாரப் பொருண்மையைக் கீழ்க்கண்டவாறு பகுத்துக் கொள்கிறார்.

 • தலைமகள் காண்டல் விதுப்பினாற் சொல்லியது (1261)
 • ஆற்றாமை மிகுதலின் இடையீடின்றி நினைக்கற்பாலையல்லை, சிறிது மறக்கல் வேண்டும் என்ற தோழிக்குச் சொன்னது (1262-1264)
 • தலைமகன் வரவு கூற “ஆற்றாயாய்ப் பசக்கற் பாலையல்லை” என்ற தோழிக்குச் சொல்லியது (1265 -1267)
 • வேந்தற்கு உற்றுழி பிரிந்த தலைமகன் வினைமுடிவு நீட்டித்துழித் தலைமகளை நினைந்து தன்னுள்ளே சொல்லியது. (1270)

இந்தப் பாகுபாடு அதிகாரப் பொருண்மையை நன்கு உள்வாங்குதற்கும் ‘கூற்று யாருக்கு உரியது’ என்பதை அறிந்து கொள்வதற்கும் அதனால் வெளிப்படும் உணர்ச்சியினைத் துல்லியமாக உணர்ந்து கொள்வதற்கும் பயன்படலாம் என்பது அழகர் கருத்து. இந்த அதிகாரத்தில் வந்த ஒரு குறட்பா இப்படி அமைகிறது,

“புலப்பேன்கொல்? புல்லுவேன் கொல்லோ? கலப்பேன்கொல்?

கண் அன்ன கேளிர் வரின்”33

இந்தக் குறட்பாவிற்கு,

கண்போற் சிறந்த கேளிர் வருவராயின், அவர் வரவு நீட்டித்தமை நோக்கியான் புலக்கக் கடவேனோ? அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக் கடவேனோ? அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்?34

என்று உரையெழுதிப்,

“புலவியும் புல்லலும் ஒரு பொழுதின் கண் விரவாமையின் ‘கலப்பேன்கொல்’ என்றாள். மூன்றனையும் செய்தல் கருத்தாகலின் விதுப்பாயிற்று.” 35

என்ற விளக்கத்தையும் தருகிறார். தந்து,

“இனிக் கலப்பேன்கொல் என்பதற்கு “ஒரு புதுமை செய்யாது
பிரியாத நாட்போலக் கலந்து ஒழுகுவேனோ? என்று
உரைப்பாரும் உளர்.” 36

எனப் பிறர் கூறும் உரையைப் பதிவு செய்கிறார் அழகர்.

1.3.5.2. அழகரின் அரிய நோக்கு

தலைவியின் விதும்பலுக்குக் காரணம் தலைவனின் வரைவு நீட்டிப்பே. நீட்டித்து வந்ததால் புலப்பதா? நீட்டித்தாலும் வந்துவிட்டானே என்பதால் புல்லுவதா? புலத்தலையும் புல்லலையும் ஒரே காலத்தில் செய்ய இயலாதே? புலக்குங்கால் புல்லல் ஆகாது. புல்லுங்கால் புலத்தல் ஆகாதே என்னும் தலைவியின் தடுமாற்றத்தையும் வாராத் தலைவன் வந்துழி அவள் வெளிப்படுத்தும் உணர்ச்சி மெய்ப்பாடுகளையெல்லாம் உள்வாங்கிக் கொண்டு அழகர் உரையெழுதுகிறார். பிறர் புலத்தல், புல்லல் ஆகிய இரண்டு செயல்களின் வேறாய் இயல்பான செயலொன்றே  இருப்பதாக எண்ணி உரையெழுதினர். இலக்கணம் அறியாமையைப் போக்குவது. இலக்கியம் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது. அவ்வனுபவங்களை அழகர் தம் கற்பனையில் முழுமையாக்கித் தருகிறார். இருந்தும் பிறருடைய கருத்தினைப் பதிவு செய்வதோடு அமைந்துவிடுகிறார்.

1.3.6. ‘எனக்கு’ என்றவர் தலைவியா? தோழியா?

அழகர் தமிழ் மரபறிந்தவர். அவருடைய உரை பலவிடங்களில் இலக்கிய மரபு தழுவி அமைந்துள்ளது. திருக்குறள் ஓர் இலக்கியம். அதற்கு இலக்கிய மரபுசார்ந்த உரை பொருத்தமே. சான்றாகக் ‘கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதைச் சிலர் அறிவியல் கண்கொண்டு திறனாய்வு செய்வர். பத்தினிப்பெண்கள் மழைவேண்டின் உடன் மழை வரும் என்பது அந்நாள் சமுதாய நம்பிக்கை. இந்த நம்பிக்கை அவள் கற்பின் வலிமை பற்றிய கற்பனை மதிப்பீடு.  வான்மழை பெறல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே! என்பது இலக்கிய மரபு. அந்தக் குறட்பாவின் இறுதியில் ‘இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என்னும் அழகர் குறிப்பினைப் பலரும் நோக்குவதில்லை. இது கட்டுரைப் பொருளுக்கு நேரடித் தொடர்பு இல்லையெனினும் அழகரின் உரை, மரபு சார்ந்த உரை என்பதற்காகச் சுட்டப்பட்டது. அகத்திணை மரபில் தோழி என்பவள் செவிலியின் மகள். ‘ஒன்றித் தோன்றும் தோழி’ என்பது தொல்காப்பியம். எனவே தலைவியுடன் இருவகைக் கைகோளில் உடனிருக்கும் தோழியே கூற்றுக்கு உரியவள். தலைவியைத் தோழி ஆற்றுவதுதான் புலனெறி வழக்கமேயன்றித் தோழியைத் தலைவி ஆற்றியதற்குப் புலனெறி வழக்கம் இன்று. பிரிவின் கண் தலைமகனைத் தலைவியது ஆற்றாமை கூறித் தடுப்பது தோழியின் பணியேயன்றித் தலைவி தன் ஆற்றாமையைத் தானே வெளிப்படுத்தல் இலக்கண மரபன்று. மரபை மறக்காத  அழகர்,

“செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல்வரவு வாழ்வார்க்கு உரை”37

என்னும் குறட்பாவைப்,

‘பிரிந்து கடிதின் வருவல் என்னும் தலைமகனுக்குத் தோழி சொல்லியது”38

என்னும் துறையின் கீழ்க் கொண்டுவந்து,

“நீ எம்மைப் பிரியாமை உண்டாயின் (அதனை) எனக்குச் சொல்., அஃதொழிய (பிரிந்து போய்) நின் விரைந்து வருதல்  (சொல்வையாயின்),  (அதனை)  (அதுபொழுது) வாழ்வார்க்குச் சொல்)!”39

என்னும் பொழிப்புரை எழுதுகிறார். எழுதி,

“தலைமகளையொழித்து எனக்கு என்றாள் “தான் அவள்” என்னும் வேற்றுமையன்மையின், ………………………

இதனைத் தலைமகள் கூற்றாக்கி உரைப்பாரும் உளர்”40

என இலக்கண மரபு சுட்டுகிறார். இந்தக் கூற்றினைத் தலைவிக்கு ஆக்குவதால் ‘உரைப்புரட்சி’ எதற்கும் வாய்ப்பில்லை, தலைவிக்கும் தோழிக்குமான உரிமை ஒத்திருப்பதால்.  ஆனால் ‘அவர் அப்படிச் சொல்கிறார்., நான் இப்படிச்  சொல்லுகிறேன்.  அவர் பார்வை அத்தகையது., என் பார்வை இத்தகையது’ எனப் பிற உரையாசிரியர்களைச் சுட்டுவதோடு அமைகிறார். அழகர் இதனைத் தோழி கூற்றாக்கியதற்குக் காரணம் என்ன என்பதைச் சிந்தித்தால் சில இலக்கண மரபு. இலக்கிய மரபுகள் புலனாகும்.

“தலைவரும் விழுமம் நிலையெடுத் துரைப்பினும்
போக்கற் கண்ணும் விடுத்தற் கண்ணும்
………………………………………………………………………………………………
………………………………………………………………………………………………
ஒன்றித் தோன்றும் தோழி மேன” 41

என்னும் அகத்திணை இலக்கண மரபும்,

“எந்நாளோ நெடுந்தகாய் நீ செல்வதுஅந்நாள்
கொண்டிறக்கம் இவள் அரும்பெறல் உயிரே” 42

என்னும் இலக்கிய மரபும் அகத்திணையின் தலைமை உறுப்பினராகிய தோழியின் கூற்றுப் பகுதிகளாகக் காட்டுவது அழகரின் நினைவுக்கு வந்திருக்கக் கூடும். இவ்வாறு பொருத்தமான கூற்றுக்குரியாரை அடையாளப்படுத்துவதில் அழகருக்கு இருக்கும் ஆர்வம் அக்குறட்பாவின் இலக்கியச் சுவையை மிகுவிப்பதற்கேயன்றி வேறெதுவாயிருக்க  இயலும்?

நிறைவுரை

உரையாசிரியர் ஒருவர் தமது உரையை வலியுறுத்துங்கால் ‘ஒரு நெறியையே’ கடைப்பிடிக்கும் உரையுலகில் பண்பாட்டு அடிப்படையிலான உரைநெறியை அழகர் கடைப்பிடித்திருக்கிறார் என்பதே இதுவரை இக்கட்டுரையில் விளக்கப்பட்டவையின் சாரமாகும். ‘தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்’ என்னும் முனைப்பு பழந்தமிழ் உரையாசிரியர்களிடம் காண்பது அரிது. அழகரிடம் அது அறவேயில்லை. ‘எனக்கு இப்படித் தோன்றுகிறது’. அவருக்கு அப்படித் தோன்றுகிறது., ‘அதற்கு அது காரணம்’ என்று கூறுகிற உயர்ந்த பண்பாட்டைக் காணமுடிகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட வேறுபட்ட உரைகள் தனக்கே தோன்றுவதையும் பதிவு செய்கிறார். தனக்கான உரிமை பிறர்க்கும் உண்டு என நம்புகிறார். அவர்க்கான உரிமையை மதிக்கிறார். கவிஞர்களைச் சான்றோர்கள் என்று அழைக்கும் மரபு கிடையாது. ஆனால் சங்கப் புலவர்கள் ‘சங்கச் சான்றோர்கள்’ என அழைக்கப்படும் அந்தப் பெருமையைப் பெற்றிருந்தார்கள். அவர்களுடைய புலமைக்கு  அவர்களுடைய சான்றாண்மை தாங்கு தளமாயிருந்ததே காரணம். சங்கச் சான்றோர்களைத் தாங்கிய அதே சான்றாண்மை உரையாசிரியராகிய அழகருடைய புலமையையும் தாங்கியிருப்பதைச் சுட்டிக் காட்டுவதற்கு  இக்கட்டுரை பயன்படக் கூடும். பண்டைச் செந்தமிழ்ப் பனுவல்களுக்கு உரையியற்றிய பேரறிஞர் பலருள்ளும் தம் உரையோவிய நுட்ப வினைத்திறத்தால் எம் உள்ளங்கவர்ந்து நிற்பவர் பரிமேலழகரேயாவார்43 என்னும் நாவலர் ந.மு.வே. நாட்டார் ஐயா அவர்களின் புகழுரையோடு இக்கட்டுரை தன்னை நிறைவு செய்து கொள்கிறது.

சான்றெண் விளக்கம்

 1. பவணந்தி முனிவர்                                       நன்னூல்                                                நூ.எண். 19
 2. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                         நூ.எண். 1361
 3. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 542
 4. மேலது                                                                                                                                                கு.எண். 1068
 5. பரிமேலழகர்                                                        மேலது உரை                                   கு.எண். 1093
 6. திருவள்ளுவர்                                                      திருக்குறள்                                        கு.எண். 1092
 7. மாணிக்க வாசகர்                                          திருவாசகம் (சிவ.பு)                  வரி. 76
 8. கம்பர்                                                                          கம்பராமாயணம்                       பா.எண். 516
 9. குலசேகர ஆழ்வார்                                       பெருமாள் திருமொழி             பா.எண். 690
 10. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                          கு.எண். 583
 11. பரிமேலழகர்                                                      மேலது உரை
 12. மேலது
 13. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1116
 14. பரிமேலழகர்                                                      மேலது உரை
 15. மேலது
 16. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                            கு.எண். 101
 17. பரிமேலழகர்                                                     மேலது உரை
 18. மேலது
 19. மேலது
 20. திருவள்ளுவர்                                                   திருக்குறள்                                             கு.எண். 223
 21. பரிமேலழகர்                                                    மேலது உரை
 22. மேலது
 23. மேலது
 24. மேலது
 25. மேலது
 26. மேலது
 27. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 144
 28. பரிமேலழகர்                                                     மேலது உரை
 29. மேலது
 30. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 427
 31. பரிமேலழகர்                                                     மேலது உரை
 32. மேலது
 33. திருவள்ளுவர்                                                    திருக்குறள்                                           கு.எண். 1267
 34. பரிமேலழகர்                                                     மேலது உரை
 35. மேலது
 36. மேலது
 37. திருவள்ளுவர்                                                     திருக்குறள்                                           கு.எண். 1151
 38. பரிமேலழகர்                                                       மேலது துறைவிளக்கம்
 39. பரிமேலழகர்                                                       திருக்குறள் உரை                          கு.எண். 1151
 40. மேலது
 41. தொல்காப்பியர்                                               தொல்காப்பியம்                            நூ.எண். 985
 42. பெருங்கடுங்கோ                                            கலித்தொகை. பா.க.                   பா.எண். 5.18—19
 43. ந.மு.வேங்கடசாமி நாட்டார்                 இலக்கியக் கட்டுரைகள்        ப185

துணைநூற் பட்டியல்

1. நச்சினார்க்கினியர்
தொல்காப்பியம் பொருளதிகார உரை
தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை
மறுபதிப்பு – 1967

2. திருக்குறள் பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம்  சென்னை – 600 001
முதற்பதிப்பு – 2009

3. எஸ்.வையாபுரிப்பிள்ளை
தமிழ்ச்சுடர் மணிகள்
குமரி மலர்க் காரியாலயம்
தேனாம்பேட்டை, சென்னை – 600 018
முதற்பதிப்பு – 1949

4. புலவர் ச.சீனிவாசன்,
திருக்குறள் பரிமேலழகர் உரை அகர நிரல்
மெய்யப்பன் தமிழாய்வு மையம்,
53, புதுத்தெரு, சிதம்பரம் – 608 001
முதற்பதிப்பு – 2002

5. முனைவர் நா.பாலுசாமி
பன்முகப் பார்வையில் பரிமேலழகர்
அன்னம், நிர்மலா நகர், தஞ்சை – 613 007
முதற்பதிப்பு – 2005

6. மு.வை.அரவிந்தன்
உரையாசிரியர்கள்
8/7, சிங்கர் தெரு
பாரிமுனை, சென்னை – 600 108
முதற்பதிப்பு – 1968

7. நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார்
இலக்கியக் கட்டுரைகள்
நாவலர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்வி, கலை, பண்பாட்டு அறக்கட்டளை,
கபிலர் நகர், வெண்ணாற்றங்கரை,
தஞ்சாவூர் – 613 003


ஆய்வறிஞர் மதிப்புரை (Peer Review):

‘அடுத்தவர் பார்வையும் அழகர் நோக்கும்’ என்னும் தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளைக் முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் முன் மதிப்பீடு

1. படைப்புப் பற்றிய ஆய்வினைத் தவிர்த்துப் படைப்பாளர் மற்றும் திறனாய்வாளன் முதலியோரின் புலமை நலன்களையும் பண்புநலன்களையும் அவர்தம் படைப்புக்களைக் கொண்டே ஆராய்வது என்பது ‘அரைத்தமாவையே அரைக்கும்’ ஆய்வுலகில் ஒரு புதிய முயற்சி. பாரியைப் பாடிய கபிலரின் பாடலகளைக் கொண்டு கபிலரின் பண்புகளை ஆராய்வது போன்றது இது.

2. ‘உரை வேற்றுமையும் அழகர் பண்பாடும்’ என்னுங் குறுந்தலைப்பில் ஆய்வாளர் நிரல்படுத்தியிருப்பன பாராட்டுக்குரியன.

3. ‘உரைப்பினும் அமையும்’ என்னுந் தொடர்கொண்டு அழகர் குறட்பாவிற்கு ஒன்றுக்கு மேற்பட்ட உரைகாண் நெறியை வரவேற்பவர் என்பதை ஆய்வாளர் நிறுவியுள்ளார்.

4. ‘செய்யாமல்’ செய்யாமை என்னும் இருவேறு பாடங்களில் ‘செய்யாமல்’ என்பதையே தான் பாடமாகக் கொண்டதற்கான அழகர் கூறும் காரணத்தைக் கட்டுரையாளர் குறிப்பாகப் பெறவைத்துள்ளார்.

5. ‘ஈதல்’ என்பதைப் பிறர் பொருட்பன்மையாகக் கொணடதானாலேயே  அவ்வாறு உரைத்தனர்” என்று காட்டும் அழகர் முந்தைய குறட்பாவை நோக்கி (தீது) ஒழிதற்குரியவனையும் (நன்று) செய்தற்குரியவனையும் (குலனுடையான்) என அடையாளப்படுத்துவதற்காகவே தான் தொழில் பண்பாகக் கொண்டதை ஆய்வாளர் புலப்படுத்தியுள்ளார்.

6. ‘கலப்பேன் கொல்? என்பதனுள் கலப்புக்குரியவனவாக அழகர் சொல்லியிருப்பதையும் பிறர் கூறியிருப்பதையும எடுத்துக் காட்டும் ஆய்வாளர்  (தலைவியின்) செயலமைதியின் புரிதல் திறனைக் கற்பாருக்கே விட்டுவிடுகிறார்.

7. இலக்கிய ஆராய்ச்சி பண்பாட்டு ஆராய்ச்சியாகவும் அமையலாம் என்பதற்கும் இலக்கிய உரைக்குள் இத்தகைய பண்பாடடுக் கூறுகளும் அமைந்துள்ளன என்பதற்கும்  இக்கட்டுரை ஒரு எடுத்துக்காட்டாகக் கருதப்படலாம்.

8. ‘பார்வையும் நோக்கும் என்னும் தலைப்பில் ‘நோக்கு’ என்பதன் பொருள் விளக்கத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட சான்றுகளைத் தந்திருக்கும் ஆய்வாளர் அவற்றைப் பத்தியிலேயே நிரல்படச் சொல்லி, ‘முதலிய இலக்கண இலக்கியப் பதிவுகளிலும்’ என் அடக்கியிருக்கலாம். தரவுகளின் பெருமை (சானறுகளின்) எண்ணிக்கையால் அல்ல. தரத்தால்  தன்மையால்.


 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.