பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

மறவன்புலவு க. சச்சிதானந்தன்

பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி, இந்திரபாலா,
எழுத்தாளர்கள் டானியல், பிரேம்சி,
அரசியல்வாதிகள் குமாரசூரியர், அருளம்பலம், தியாகராசா, அல்பிரட் துரையப்பா,
தொழிலதிபர்கள் சிவானந்தன், கே. சி. தங்கராசா,
மருத்துவர் ஆனந்தராசா, நீதியரசர் தம்பையா,

இவர்கள் அனைவரும் ஒரே அணியில், ஒரே கருத்தில், ஒரே கொள்கையில், ஒரே கோட்பாட்டில்.

நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டைக் கொழும்பில் நடத்த வேண்டும் என்ற சிறீமாவோ அரசின் கொள்கையை முன்னெடுத்த அணியினரே இவர்கள்.

1973 ஆம் ஆண்டு வைகாசி, ஆனி, ஆடி, ஆவணியில் கொழும்பில் பம்பலப்பிட்டி, மிலாகிரியா நிழற்சாலையில் உள்ள அலுவலகத்தில் கூட்டங்கள் நடந்தன.

சிறிமாவோ அரசின் சார்பானோர் ஒருபுறம்.

யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்த வேண்டும் என்ற அணியினர் மறுபுறம்.

பேராசிரியர் வித்தியானந்தன், அறிஞர் யேம்சு இரத்தினம், பேராசிரியர் பத்மநாதன், திருமதி புனிதம் திருச்செல்வம், கலைஞர் வி. எசு. துரைராஜா, மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகிய நான், அறிஞர் அம்பிகைபாகன் எனப் பெரும்பான்மையோர் யாழ்ப்பாணத்தில் நடத்த விரும்பினோம்.

அக்காலத்தில் உடல் நலக் குறைவால் வளலாயில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வணக்கத்துக்குரிய தனிநாயகம் அடிகளாரும் யாழ்ப்பாணத்தில் நடத்தவேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.

சிறீமாவோ அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆண்ட காலம். மாவை சேனாதிராசாவை ஒத்த 60க்கும் கூடுதலான எண்ணிக்கையில் இளைஞர்கள் பூசாவிலும் வெலிக்கடையிலும் யாழ்ப்பாணத்திலும் சிறைகளில் தவமிருந்த காலம்.

ஒரு நாள் மாலை. பம்பலப்பிட்டி சரசுவதி மண்டபத்தில் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்ற இலங்கைக் கிளையின் கூட்டம்.

நாற்காலிகளை வட்டமாக அடுக்கி இருந்தோம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏறத்தாழ 30 தொடக்கம் 40 பேர் வரை இருந்தார்கள்.

நான் எழுந்து பேசினேன். நீதியரசர் தம்பையா அவர்களே யாழ்ப்பாணத்தில் நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை நடத்துவதாக இருந்தால், நீங்கள் தலைவராகத் தொடருங்கள் அல்லது தலைமைப் பதவியில் இருந்து விலகுங்கள், எனக் கேட்டேன்.

கொஞ்சம் சலசலப்பு. ஆனாலும் நான் விட வில்லை. மீண்டும் என் கருத்தை வலியுறுத்தினேன். பல செய்திகளைப் பேசினோம். பலர் பல கருத்துகளைச் சொன்னார்கள்.

மறுநாள் நல்ல செய்தி. நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியிலிருந்து விலகினார். தொழிலதிபர் சிவானந்தர், கே. சி. தங்கராசா, மருத்துவர் ஆனந்தராசா, ஆகியோரும் விலகினார்கள். தாம் கொடுத்த நன்கொடைகளை திரும்பத் தருமாறும் கேட்டனர்.

எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. பகை இல்லை. துரோணரின் மாணவன் அருச்சுனனுக்கு இலக்காகப் பறவையின் கண் மட்டுமே தெரிந்தது போன்று, யாழ்ப்பாணத்தில் மாநாட்டை நடத்த வேண்டும் என்ற கொள்கையே எனக்குத் தெரிந்தது.  அதற்காகத் தலைமையிலிருந்து நீதியரசர் தம்பையாவைப் பதவி விலகக் கோரும் துணிச்சல் எனக்கு இருந்தது.

பெட்டிப் பாம்பாக மகுடிக்குப் படம் எடுத்துச் சீறுவது போல் நடித்துப் பின் அடங்கி விடும் மனோநிலை எனக்கு இருக்கவில்லை.

தந்தை செல்வாவிடம் சைவ சமயிகள் சார்பில் நான் எடுத்துக்கூறிய பல ஆலோசனைகள் அவர் கேட்டார். நடைமுறைக்குக் கொண்டு வந்தார். தந்தை செல்வா தலைவர் என்பதனால் அவர் சொன்ன அனைத்தையும் ஏற்கும் மனநிலையில் நான் இருக்கவில்லை.

மாற்றுக் கருத்து உண்டெனில் அதை அவரிடம் சொல்லி அந்த நியாயங்களை எடுத்துச் சொல்லி அவரை ஏற்க வைத்திருக்கிறேன்.

எனது இருபது ஆண்டுகாலத் தொடர்பில் அவர் மீதுள்ள மதிப்பு உயர்ந்தமைக்கு அவருடைய பொறுமையும் நல்ல கருத்துக்களை ஏற்று நடைமுறைக்குக் கொண்டுவரும் பண்புமே காரணம்.

திருச்செல்வம் மூத்த வழக்குரைஞர். 13 ஆண்டுகாலம் அவரோடு பணிபுரிந்தேன். அமைச்சராக இருந்த காலத்தில் தனி உதவியாளராகவும் இருந்தேன். அவரோடு உடன்படாத கருத்துக்களை நான் சொல்வேன். அவர் தூக்கி எறிய மாட்டார். தம்பி நீர் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்பார். நடைமுறைக்குக் கொண்டு வருவார்.

தந்தை செல்வாவுக்கு நினைவுத்தூண் அமையுங்கள் என்ற கருத்தை அமிர்தலிங்கம் அவர்களிடம் முன்வைத்தேன். முதலில் தயங்கினார். வலியுறுத்தினேன், ஏற்றுக் கொண்டார். என்னையே அப்பணியைச் செய்யுமாறு பணித்தார். வெற்றிகரமாகச் செய்து கொடுத்தேன்.

அறைக் கூட்டங்களில் அமிர்தலிங்கம் அவர்களோடு முரண்பட்டு இருக்கிறேன். உங்களுக்கு அரசியல் தெரியாது என்றும் ஒருமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார். மாலையில் மனைவியொடு என் வீட்டுக்கு வருவார். நீங்கள் சொன்னதில் நியாயம் இருக்கிறது அதன்படி செய்வோம் என்பார்.

அனைத்துப் போராளி இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நான் என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்திருக்கிறேன். வன்முறையில் எனக்குக் கிஞ்சித்தும் நம்பிக்கை கிடையாது என நேரடியாகவே அவர்களிடம் சொல்வேன். ஆனாலும் உங்களுடைய ஈடுபாடும் தியாகமும் நல்ல நோக்கமும் என் மதிப்புக்குரியன. எனவே உங்களுக்கு என்னால் முடிந்தததைச் செய்வது என் கடமை என்பேன்.

2000ஆம் ஆண்டில் ஒரு சூழ்நிலையில் பிரபாகரன் கொண்ட கருத்தைத் தலைகீழாக மாற்றுமாறு கேட்டேன். அவர் செய்திருக்கிறார். என் அணுகுமுறையில் உள்ள தமிழ்த்தேசிய நன்மையை அவர் பின்பும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

என் வாழ்நாளில் ஒரு முறையாவது தமிழ்த்தேசியத்தில் ஈடுபாடுகொண்ட எவரையும் அந்நியர் எவரிடமும் சுட்டிக்காட்டித் தவறிழைக்கிறார் எனச் சொல்வதில்லை.

சரி பிழைகளைத் தளர்வுகளைத் தொய்வுகளை நடைமுறை மாற்றுகளை நமக்குள்ளே பேசலாம். அந்நியரிடம் பேசலாமா? அதுவும் அடிமை கொள்ள விழையும் அந்நியரிடம் பேசலாமா?

அவ்வாறு பேசியவரைச் சம்பந்தன் அவர்கள் காப்பாற்றுகிறார் எனில் பெட்டிப்பாம்பாக இருக்காமல் பொங்கியெழுந்து தமிழ்த் தேசியத்திற்காகச் சம்பந்தன் அவர்களிடமே உரத்துப் பேசி, சுமந்திரனை நீக்க வேண்டிய கடமை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு.

மைத்திரிபால சிரிசேனா, இரணில் விக்கிரமசிங்க கூட்டணிக்கு வாக்களிக்காதீர் என சிவகரன், அனந்தி நான் மூவரும் ஊடகத்தாரிடம் கூறினோம். அக்கருத்து அவர்களின் தனிக் கருத்து எனக் கருதியிருக்கலாமே?

சுமந்திரனின் கை மேலோங்கியதால் சிவகரனையும் அனந்தியையும் நீக்கினார்கள். கட்சி உடைந்தது.

சுமந்திரன் கை மேலோங்கியதால் தமிழ்க் காங்கிரசும் ஈபிஆர்லெஎஃபும் கூட்டமைப்பில் இருந்து விலகின.

சுமந்திரனின் கை ஓங்கியதால் அவைத் தலைவரான சிவிகே சிவஞானமே வெட்கங்கெட்டு ஆளுநரிடம் சென்றார், முதலமைச்சருக்கு எதிராக. கூட்டமைப்பை உடைப்பதற்காக.

இன்றைய ஒருங்கிணையாத தமிழர் அரசியல் கள நிலைக்கு, இரணிலின் கைப்பாவையாகிய சுமந்திரனின் கை ஓங்கியமையே காரணம்.

அருளம்பலம் தியாகராசா கனகரத்தினம் அல்பிரட் துரையப்பா குமாரசூரியர் என நீளும் அரசியலார் வரிசையில் சுமந்திரன் இருக்கிறார்.

அன்று அல்பிரட் துரையப்பாவுக்குத் துணைபோன சிவிகே சிவஞானம் இன்று சுமந்திரனுக்கு துணை போகிறார். அடையாளங்கண்டு தமிழ்த் தேசியப் பயிர்களை வளர்க்க வேண்டிய கடமை தமிழ்த் தேசியத்தாருக்கு உண்டு.

சுமந்திரன் இல்லாத சூழ்நிலையில் விரல்களாக வேறுபட்டாலும் கையாக இணைவோம் என வெவ்வேறு கொள்கையரும் ஒரே அணிக்கு மீள்வர். தமிழ்த் தேசியத்தார் வலிமை பெறுவர்.

நீதியரசர் தம்பையா தலைமைப் பதவியில் இருந்து விலகியதால் தமிழ்த் தேசியம் ஓங்கியது. நீதியரசர் சிவசுப்பிரமணியம் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகியதால் சைவத் திருக்கோயில்களை அரசு கையேற்காமல் காத்தோம். இருவரது விலகலுக்கும் எனது பங்களிப்புக் காத்திரமானது.

சுமந்திரனை விலக்குக. அல்லது நீங்களும் விலகுக எனச் சம்பந்தன் அவர்களிடம் எடுத்துக்கூறும் துணிச்சல் உள்ளவர்களை அழைக்கிறேன். படகு பெரிய பாறாங் கல்லுடன் மிதக்க முடியாது. பாறாங்கல்லை நீருள் தள்ளிப் படகைக் காக்க அழைக்கிறேன்.

1 thought on “பாறாங்கல் படகையே கவிழ்க்கும்

  1. தமிழ் நடை அழகு…
    ஒற்றுமைக்கும் தமிழனுக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி எல்லாக் கட்டங்களிலும் என்பதே புரியாத புதிர்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க