இனச்சுடர் எழுக!

ஏறன் சிவா
வான்தரும் சுடர்போல் வண்டமிழ் இனத்தார்
மனங்களில் ஒளிவிடும் சுடரே!
தீந்தமிழ் என்னும் தென்னவள் வயிற்றில்
திடமுள மழலையாய்ப் பிறந்தாய்!
மீன்புலி வில்லை ஏந்திய வேந்தர்
அரியணைக் கட்டிலில் தவழ்ந்தாய்!
பைந்தமிழ் மக்கள் தோள்களில் ஏறிப்
பாரெலாம் ஊர்வலம் புரிந்தாய்!
பொன்னிறத் தட்டில் பொலிவுறு மணியாய்ப்
புகழுடன் வளமுடன் திகழ;
மண்பிறப் பில்..நீ மாபெரும் பிறப்பை
அடைந்ததை வெறுக்கிற சிலரோ;
நற்றமிழ் மொழியை நவில்வதால் தமிழ்த்தாய்ப்
பிள்ளைமேல் இனக்கொலை தொடுத்தார்!
எற்றைக்கும் சுடரை இருள்கரம் மறைக்காது
என்பதை அறிகிலார் மூடர்!
பெருகுக விரைந்து பெருவெளி முழுதும்
பெருகுக பெருகுக சுடரே!
உருகுக தமிழர் உளத்தினைக் குழம்பாய்
உருக்குக உருக்குக சுடரே!
பருகுக பகைவர்ப் படையினை முற்றாய்ப்
பருகுக பருகுக சுடரே!
செருகுக தமிழ் இனச்சுடர் நெருப்பு
திசையெலாம் எழுந்தவுண் மையை!