திருச்சி புலவர் இராமமூர்த்தி

‘’மறைமுனி  அஞ்சினான்போல்  மாதினைப்  பார்க்க  மாதும்
இறைவனே அஞ்சவேண்டாம்  இயற்பகை  வெல்லும்  என்ன
அறைகழல்    அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
தரையிடைப்   படுத்து   கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்  என்று’’

சேக்கிழார்பாடுகின்றார். இதன் நயத்தை இங்கே காண்போம்! இயற்பகையார் தம் மனைவியை முற்றும் துறந்து, வந்தவருக்குக் கொடுத்தபின், அம்மாது சிவவேதியராய் வந்த முனிவரைக் கண்டு அவர் இறைவனே என உணர்ந்து நின்றார். பின்னர் அவ்வேதியரிடம், ‘’இனி யான் செய்யத்தக்க பணி யாது?’’ எனக்  கேட்டு நின்ற  இயற்பகையாரிடம் ‘’இப்பெண்ணை யான் தனியே அழைத்துக் கொண்டு, உன் சுற்றத்தாரையும், இவ்வூரையும்  கடந்து செல்லும் வகையில் எனக்குத் துணையாக இருப்பாயாக!‘’ என்றார். இவ்வாறு அவ்வந்தணர் கேட்கும் வகையில் ஏதும் செய்யாது நின்றது தம் பிழை எனக் கருதி உடனே அவ்வூராருடன் போரிடுவதற்கு உரிய கவசங்களைப் பூண்டார். அவ்வூரினர், ‘’நம் ஊரில் வாழும் சிவனடியார் தம்மிடம் வந்த தூர்த்தருக்கு உரியவளாய்த் தம் மனைவியை வழங்கியதும், அப்பெண்ணை அவர் ஏற்றுக்கொண்டதும் தகாது!’’  என்று எண்ணியவராய் அவர்களைச் சூழ்ந்து தடுத்தனர்.

அவர்கள்  தம் கையில்  கிட்டிய படைக்கருவிகளை எடுத்துக்கொண்டு கடலைப் போல் அவர்களைச் சூழ்ந்து  நின்றனர். மேலும் பலர் அந்தக்  காமாந்தகாரனை, ’’இழிகுணம் படைத்தவனே! எங்கள் குலக்கொடி  போன்றவளை   இங்கேயே விட்டு நீக்கி, ஊரார் கூறும் பழியையும்  தவிர்த்து விலகி  நீ போவாயாக!’’ என்று போர்தொடுத்து  வந்தனர்.

அவர்கள் அவ்வாறு வெருட்டியது கண்டு சற்றே அஞ்சியவர்போல் நின்ற அந்த நான்மறை அந்தணர், இயற்பகையின் மனைவியாரை நோக்கினார்!

அவரும் “தலைவரே! பயப்படவேண்டாம்; அவர்களை இயற்பகை வெல்லும்“ என்று சொல்ல; இதனை ஆதரித்து ஓசையிடும் வீரக் கழலணிந்த பெருமையுடையாராகிய நாயனார் கேட்டு, “அடியேன் அவர்களை எல்லாம், உமக்கு இடையூறு செய்யாமல் நிலத்தில் வீழ்த்தி விடுகின்றேன்; தேவரீர் தளரவேண்டாம்“ என்று சொல்லிக்கொண்டே அவர்களுடன் போரிடத் தொடங்கினார்.

இப்பாடலில்  ‘’மறைமுனி’’  என்ற தொடர்  இறைவன்  முனிவராந்தன்மையை மறைத்துத் தூர்த்த வேடந்தாங்கி வந்தவர் என்ற பொருளைத் தருகிறது. இறைவன் மறைகளாலும் காணுதற்கு அரியவன்! அவனை ‘’நேரிழையைக் கலந்திருந்தே  புலன்களைந்தும் வென்றான்’’ என்று தேவாரம் பாடுகிறது.

அவர் முன்னர் அடியார் மனைவியை நாடி விரும்பியது போலவும்,  பின்னர் அஞ்சுவது போலவும் நடித்தார். அதனால் அவர் அடியாரின் மன உறுதியைச் சோதித்தமை புலப்படும். மேலும் இப்பாடலில்,

‘’இறைவனே,  அஞ்ச வேண்டாம்  இயற்பகை வெல்லும்!’’

என்ற தொடரின் பொருள் நுட்பம்  போற்றுதற்கு உரியது. மனைவியார் கணவரின் கொள்கைப் பிடிப்பை உணர்த்தும் வகையில் ‘’ இயற்பகை  வெல்லும்!’’ என்றார். அவர் அந்த  மறைமுனியை, ‘இறைவன்’ என்று புரிந்து கொண்டமையால் அவர் இறைவனை அடையும் பக்குவமம் தவமும் உடையவர் என்பதும் புலப்படும். அவ்வகையில்  தம் கணவர் என்ற உறவை நீக்கி, இறைவனுக்குத் தம்மை அர்ப்பணித்தார் ஆதலால், ‘’இயற்பகை வெல்லும்!’’ என்றார்.

நாயகிகள் தமது கணவர் பெயரைச் சொல்லலாகாது என்பது விதியும் வழக்குமாம். இங்கு அம்மையார் இப்போது தாம் இறைவனது  உடைமைப் பொருளாயினமையாலே நாயனாரிடத்து அவர் தமது கணவர் என்ற நினைப்பினை அறவே ஒழித்து நின்றார். ஆதலின் கணவரின் பெயரைக் கூறினார்! காரைக்கால் அம்மையாரின் ‘காதலாகிக்  கசிந்த’ கடவுட்பற்று  கணவரையே  வணங்க வைத்ததை, இங்கே இயற்பகையார் அடைக்கலப் பொருளாகிய மனைவியாரை வணங்கியதோடு ஒப்புநோக்கி மகிழ்தற்கு உரியது! அடுத்து மனைவியார், ‘’இயற்பகை வெல்லும்!” என்று உறுதிபடக் கூறியவுடன்,

‘’அறைகழல்’’   அண்ணல் கேளா  அடியனேன்  அவரை  எல்லாம்
தரையிடைப்   படுத்து  கின்றேன் தளர்ந்தருள்  செய்யேல்!’’

என்று கூறிப் போரிட்டதாகச் சேக்கிழார் பாடுகின்றார். இயற்பகையார் அணிந்த வீரக்கழல் ‘’இவரே வெல்வார்!’’ என்று ஒலிப்பது போலவும், ‘’புலனைந்தும் வென்றான் தன் வீரமே வீரம்!‘’ என்ற வகையில் இயற்பகையாரும் ஐம்புல ஆசையை வென்று, தாம் இறைவனாகக் கருதிய அடியார்பால் மனைவியை ஒப்படைத்த செயலைப் போற்றுவது போலவும் நயம்பட அமைந்துள்ளது. இதனை இப்புராணமே பின்னர் விளக்கும்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.