நாலடியார் நயம் – 19
நாங்குநேரி வாசஸ்ரீ
19. பெருமை
பாடல் 181
ஈதல் இசையாது இளமைசேண் நீங்குதலால்
காத லவரும் கருத்தல்லர்; – காதலித்து
ஆதுநாம் என்னும் அவாவினைக் கைவிட்டுப்
போவதே போலும் பொரு.
மற்றவருக்கு ஒன்றைக் கொடுக்க
மாட்டாது இளமையும் வீணாகக்
கழிய ஆசை வைத்திருந்த
காதல் பெண்டிரும் நீங்கினர்
இன்னும் நாம் வாழ்வோமெனும்
இச்சையை விடுத்துத் துறப்பதே
ஆகச்சிறந்த செயல்.
பாடல் 182
இற்சார்வின் ஏமாந்தேம் ஈங்கமைத்தேம் என்றெண்ணிப்
பொச்சாந்து ஒழுகுவார் பேதையார்; – அச்சார்வு
நின்றன போன்று நிலையா எனவுணர்ந்தார்
என்றும் பரிவ திலர்.
இல்வாழ்வால் இன்புற்றோம்
இருக்கின்றோம் குறையின்றியென
இனி வரப்போகும் துன்பமெனும்
இடர் மறந்திருப்பர் அறிவிலார்
இல்வாழ்க்கையின்பம் நிலையாக
இருப்பன போல் தோன்றி
இல்லாமல் அழிபவை எனும்
இவ்வுண்மையை உணர்ந்தோர்
இவ்வுலகில் எப்போதும் வருந்தார்.
பாடல் 183
மறுமைக்கு வித்து மயலின்றிச் செய்து
சிறுமைப் படாதேநீர் வாழ்மின் – அறிஞராய்
நின்றுழி நின்றே நிறம்வேறாம் காரணம்
இன்றிப் பலவும் உள.
இருந்த இடத்திலிருந்தே காரணமின்றி
இளமை நிறம் பருவங்கள் போன்றவற்றில்
மாற்றங்கள் பல உண்டாகுமெனவே
மறுமைக்கு வித்தாகும் நல்லறங்களை
மயக்கமின்றிச் செய்து துன்பமடையாமல்
அறிவுடையோராய் வாழுங்கள்!
பாடல் 184
உறைப்பருங் காலத்தும் ஊற்றுநீர்க் கேணி
இறைத்துணினும் ஊராற்றும் என்பர்; – கொடைக்கடனும்
சாஅயக் கண்ணும் பெரியார்போல மற்றையார்
ஆஅயம் கண்ணும் அரிது.
மழைபெய்யாது வறண்ட காலத்தும்
ஊற்றுநீர்க் கிணறு பிறர் இறைத்து
உண்ணக்கொடுத்து ஊரைக்காக்குமென்பர்
வறுமையால் தளர்ந்தபோதும் பெரியோர்
வாரிக்கொடுப்பர் பிறருக்கு சிறியரோ
செல்வம்மிக்க காலத்தும் தரமாட்டார்.
பாடல் 185
உறுபுனல் தந்துல கூட்டி அறுமிடத்தும்
கல்லூற் றுழியூறும் ஆறேபோல்; – செல்வம்
பலர்க்காற்றிக் கெட்டுலந்தக் கண்ணும் சிலர்க்காற்றிச்
செய்வர் செயற் பாலவை.
வெள்ளம் வரும் காலம் மிகுநீரைக் கொடுத்து
வையகத்தோரை உண்பித்த ஆறு
நீரற்ற காலத்தும் ஊற்றுக்குழியில்
நீர்சுரந்து உதவுதல்போல் பெரியோர்
தம் செல்வத்தைப் பலருக்கும் கொடுத்து
தம்மாலான உதவியாற்றுவர் வறுமையிலும்.
பாடல்186
பெருவரை நாட! பெரியேர்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; – கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும் சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும்.
பெரிய மலைகளையுடை
பரந்த நாட்டின் வேந்தனே!
பெரியோரிடம் உண்டான குற்றம்
பெரும் வெள்ளெருதின்மேல்
போடப்பட்ட சூடுபோல்
தெளிவாகத் தோன்றும்
தூயவெள்ளெருதைக் கொன்ற
குற்றத்தைச் சிறியோர் செய்யின்
குற்றமாகத் தோன்றாதழிந்து விடும்.
பாடல் 187
இசைந்த சிறுமை இயல்பிலா தார்கண்,
பயைந்த துணையும் பரிவாம் – அசைந்த
நகையேயும் வேண்டாத நல்லறிவி னார்கண்
பகையேயும் பாடு பெறும்.
அற்பத்தனம் மிக்க நற்குணம்
அற்றவரிடம் கொண்ட நட்பு
வருத்தும் துன்பத்தையே தரும்
விளையாட்டிற்குக்கூட தீய
கெடுதலை விரும்பா நல்லவரிடம்
கொண்ட பகையும் பெருமையைத்தரும்.
பாடல்188
மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்து
ஒன்னாருள் கூற்றுட்கும் உட்குடைமை; – எல்லாம்
சலவருள் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல்.
மென்மைக் குணமுள்ள பெண்களிடம்
மென்மைத்தன்மை உடையவராயும்
எதிரிகளிடம் அதைவிடுத்து
எமனும் அஞ்சத்தக்கவராகவும்
எல்லோரிடத்தும் வஞ்சகம் பேசுபவரிடம்
எப்போதும் வஞ்சம் பேசுபவராகவும்
நற்குணமுள்ளவரிடத்து நன்மையாய்
நடப்பதும் எல்லையாயிருக்கவேண்டும்.
பாடல் 189
கடுக்கி ஒருவன் கடுங்குறளைப் பேசி
மயக்கி விடினும் மனப்பிரிப்பொன் றின்றித்
துளக்க மிலாதவர் தூய மனத்தர்;
விளக்கினுள் ஒண்சுடரே போன்று.
முகத்தைக் கடுமையாய் வைத்து
மற்றவர் பற்றி மிகக் கடுஞ்சொல்
பேசி அறிவை மயங்கச்செய்யினும்
பிறர்பால் வேறுபாடின்றி தீபத்தின்
பிரகாச ஒளிச்சுடர் போல்
அசைவில்லாதவர் தூயமனத்தவர்.
பாடல் 190
முன்துற்றுந் துற்றினை நாளும் அறஞ்செய்து
பின்துற்றுத் துற்றவர் சான்றவர்; – அத்துற்று
முக்குற்றம் நீக்கி முடியும் அளவெல்லாம்
துக்கத்துள் நீக்கி விடும்.
உண்ணத்தகும் உணவினை நாள்தோறும்
உண்ணுமுன் இரப்போர்க்குக் கொடுத்து பின்
உண்ணுவர் சான்றோர் அது முக்குற்றமான
வெகுளி காமம் மயக்கத்தைப் போக்குவதுடன்
வாழ்நாள் முழுதும் துன்பத்தினின்று காக்கும்.