சி. ஜெயபாரதன், கனடா

அந்தி வானம் மயங்கி, மங்கி
களைத்துப் போனது,
சினத்தில் கண் சிவந்து
கதிரவனும்
தொடுவானைக்
குருதியில் மூழ்க்கி விட்டான்!
பெரு நிலவு மாதரசி
முகம் காட்டிக்
என்னைக் கண்ணடித்தாள்!
காமுற்றாள்!

இருளெனும் கோழி
அடைகாத்திட அண்ட கோளத்தை
முட்டையாய்
மூடினாள் இறக்கையுள்!
உறக்கம் இல்லா
உடல் இரண்டு தன்தன்  உயிர்த்துவ
ஆத்மாவை அனுப்பி,
முன்பிறப்புத் தொடர்பால்
ஒன்றை ஒன்று தேடித் சென்று
தழுவிக் கொண்டன!
இடம்மாறி , உடல்மாறி, நடைமாறி
இனிய கசப்பு
நாடகம் நடத்தின!

வெகு தூரத்தில் வசிக்கிறோம்
நெருங்காமல், நீங்காமல்
விருப்பமுடன்
தீ காய்வார் போல வாழ்கிறோம்,
இடைவெளி விட்டு!
விதிவின்
விளையாட்டு இதுதான்!
ஒருத்திக்கு ஒருவன் வாழ்விலே
இருப்பான்!
ஒருவனுக்கு ஒருத்தி ஊழ்விதி!
ஒருவரை ஒருவர்
நித்தம்
நினைந்து கொண்டு
சில நேரம்,
நேசித்துக் கொண்டு,
சில நேரம்
மோதிக் கொண்டு
பேசியும், பேசாமலும்,
தண்ணீர் ஒட்டியும் ஒட்டாத
தாமரை இலை வாழ்வு!
நிலையான
நேச மில்லை  எங்கும்!
எப்போதும்!
ஊமைப் போர்கள் நிற்கா
ஒருபோதும்!

அடிக்கும் போனை, உடனே
எடுக்காத காதல் மாது!
பதிவுப் பேச்சை மட்டும், தவறாது
தனியே கேட்டு மகிழும்
இனிய மாது!
இளம் வயதிலே அந்த நாட்களில்
நிழலாய்ச் சுற்றி வரும்
வாலிபக் கனவுகள் ஆயிரம்!
இதயத்தைக்
குத்திக் கிழித்தவை சில!
ஆறியும்
ஆறாத புண்கள் சில!
கண்ணால், வாயால், காதால்,
கனவால், நினைவால்,
தனித்திரைக் காட்சியாய்ப்
பன்முறை
பார்த்துப் பார்த்து
மீண்டும் பார்த்து மகிழும்
தேனிலவுக்
காட்சி மயங்கள் !
பழுத்த, சுவைத்த, இனித்த
பழங்கதைகள் !

முதிய இதயங் களுக்கு  அவை
புத்துயிர் அளிப்பவை.
கடந்த கால
வாலிபப் பருவ நினைவுகள்,
முடிவற்ற
சின்னஞ் சிறு மனத்திரைக்
காட்சிகள்!
சிறகு ஒடிந்த முதிய பறவை
அவளது
குரலினிது, வாயினிது.
கவ்விக் கொள்ளும் கண்களின்
காந்த சக்தி!
கவர்ச்சி முறுவல்
குமரி இல்லை அவள்!
சிறகுள்ள
தனிப்பறவை  அவன்!
சுதந்திரம்
தூய காதலருக்கு
கிடைக்காத சொர்க்க புரி.

யாரையும் ஒருத்தி நேசிக்கலாம்!
நேசித்துத் தன்னவனாய்
இதயக் கோவிலில்  வைத்துப்
பூஜிக்கலாம்!
ஜாதி, மதம், நாடு, இனம்,
குலம், நிறம்
உயர்ச்சி, தாழ்ச்சி, குட்டை
நெட்டை,, தடிப்பு
மற்றும் உற்றார், பெற்றார்
எதிர்ப்புத் தடைகள்
ஏது  மில்லை.
உறவிலா  உறவாய்க்  கிடைத்தாய்
ஒரு கொடையாய்!
கோரிக்கை யற்றுக் கிடக்கும்
வேரிற் பழுத்த பலா,
நீ இப்போது.
உன் கூண்டில் உண்டு உறங்கி,
போகாத நாளையும்
ஆமைப்
பொழுதையும்
கழுத்தைப் பிடித்து தள்ளுகிறாய்!

பல்லாண்டு காலம்
படுக்கையில் தனியே பல நேரம்
உறக்கம் வராது
புரண்டு, புரண்டு, புரண்டு
உருண்டு கிடக்கும்
உயிர்த்துவ உடல்கள்
இரண்டு!
ஒன்றை ஒன்று கட்டிக் கொண்டு
மனக் கனவுகளில்
புனை கதையாய்
புணர்ந்து கொள்ளத் துடிக்கும்
ஈருடல்கள்,
மேள தாள மின்றி
இனிய
நாதசுவர வாசிப்பின்றி
மணந்து கொள்ள விழையும்
மனிதப் பிறவிகள்.

யாரவள்?
ஈரேழு ஆண்டுகள்
கண்ணீரில் மூழ்கினாள்!
இராமன்
வானோக்கிப்  போய்விட்டான்,
கானகத்தில்
சீதாவைத் தவிக்க விட்டு,
தனியே விட்டு!
தம்பி பரதன்  அடைக்கலம்
கொடுக்க
முன் வந்தான்,
அன்ன மிட்ட கை அந்தக் கை!
அரிசி கிடைக்காத
அந்த பஞ்ச காலத்தில்
ஆருயிர் அளித்த கை.
அந்தக் கை!

[தொடரும்]

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க