நாங்குநேரி வாசஸ்ரீ

 18. நல்லினம் சேர்தல்

பாடல் 171

அறியாப் பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறியல்ல செய்தொழுகி யவ்வும் – நெறியறிந்த
நற்சார்வு சாரக்கெடுமே வெயில்முறுகப்
புற்பனிப் பற்றுவிட் டாங்கு.

புத்தியில்லா வயதில் அடக்கமற்றவரோடு
பழகி நெறியல்லாதன செய்து நேர்ந்த
பாவங்களும் நல்லாரைக் கூடி ஒழுகலால்
புல்லின்மேல் படிந்த பனிநீர் வெயிலில்
படிந்த அதனின்று நீங்குதல் போல்விலகும்.

பாடல் 172

அறிமின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல்.

அறநெறி அறிவீர் அஞ்சுவீர் எமனுக்கு
அறியார் கூறும் கடுஞ்சொல் பொறுப்பீர்
வஞ்சனைக்குணம் வந்தடையாது காப்பீர்
வெறுப்பீர் தீயவரின் தீச்செயலை
வாழ்நாள் முழுதும் பெரியோரின்
வாய்ச்சொல்லாம் அறிவுரை கேட்டு நடப்பீர்.

பாடல் 173

அடைந்தார்ப் பிரிவும் அரும்பிணியும் கேடும்
உடங்குடம்பு கொண்டார்க்கு உறலால் – தொடங்கிப்
பிறப்பின்னாது என்றுணரும் பேரறிவி னாரை
உறப்புணர்க அம்மாஎன் நெஞ்சு.

சேர்ந்தவர்களைப் பிரிவதும்
சரிசெய்ய முடியா வியாதியும்
மரணமும் உடல் எடுத்தார்க்கு
உடனே வந்தெய்தலால் பழையதாய்த்
தொடர்ந்து வரும் பிறப்பினைத்
துன்பம் தருவது என அறியும்
உண்மை அறிவுடையாரை என் மனம்
உறுதியாய்ப் பற்றுவதாக!

பாடல் 174

இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும்
பிறப்பினை யாரும் முனியார் – பிறப்பினுள்
பண்பாற்றும் நெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும்
நண்பாற்றி நட்கப் பெறின்.

ஆராய்ந்து நோக்கின் பிறப்பு
ஆறாத் துன்பம் தருவது எனினும்
நற்குணங்கள்நிறை நல்லோரை
நாடி எக்காலமும் நட்புகொண்டு
நடக்கப்பெறின் இப்பிறப்பை
எவரும் வெறுக்கமாட்டார்.

பாடல் 175

ஊரங் கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்; – ஓரும்
குலமாட்சி யில்லாரும் குன்றுபோல் நிற்பர்
நலமாட்சி நல்லாரைச் சார்ந்து.

ஊரில் உள்ள சாக்கடைநீர்
சிறப்புபொருந்திய நீரைச்
சேர்ந்தக்கால் வேறுபெயரும்
உண்டாகி பரிசுத்த நீரென
உரைக்கப்படுதல் போல
குலப்பெருமை இல்லாதோரும்
குணப் பெருமையுடை
நல்லாரைச் சேர்ந்தால்
நிற்பர் மலை போல் உயர்ந்து.

பாடல் 176

ஒண்கதிர் வான்மதியம் சேர்தலால் ஓங்கிய
அங்கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம்
குன்றிய சீர்மைய ராயினும் சீர்பெறுவர்
குன்றன்னார் கேண்மை கொளின்.

அழகிய இடத்தையுடை வானத்தில்
அழகான கதிர்களையுடை சந்திரனைச்
சேர்ந்திருப்பதால் களங்கமாகிய முயலும்
சந்திரனைத் தொழும்போது
சேர்த்துத் தொழப்படுமென்பதுபோல்
குறைந்த சிறப்புடையவர்களும்
குன்றுபோலும் நற்குணங்களுடையவரைச்
சேரும்நேரம் மேன்மை அடைவர்.
(சந்திரனது களங்கத்தை முயல் எனக்கூறுதல் கவிஞர்கள் மரபு).

பாடல் 177

பாலோடு அளாயநீர் பாலாகும் அல்லது
நீராய் நிறந்தெரிந்து தோன்றாதாம்; – தேரின்
சிறியார் சிறுமையும் தோன்றாதாம், நல்ல
பெரியார் பெருமையைச் சார்ந்து.

பாலுடன் கலந்த தண்ணீர்
பாலாகக் கருதப்படுமேயல்லாது
நீரின் நிறத்தை வேறுபடுத்தாது
நன்கு ஆராய்ந்தால் நற்குணமுடைப்
பெரியோரின் பெருங்குணத்தைச்
சேர்தலால் சிறியோரின்
சிறுமைக்குணமும் தோன்றாது.

பாடல் 178

கொல்லை இரும்புனத்துக் குற்றி யடைந்தபுல்
ஒல்காவே யாகும் உழவர் உழுபடைக்கு;
மெல்லியரே யாயினும் நற்சார்வு சார்ந்தார் மேல்
செல்லாவாம் செற்றார்சினம்.

பலவயல்கள் சேர்ந்த பெரிய நிலத்திலே
மரக்கட்டையைப் பற்றி நிற்கும் புல்
உழவரின் கலப்பைக்கு சிறிதும் அசையாது
வலிமையற்றவராயினும் தம்மினும்
வலிமை மிக்காரைச் சார்ந்தால்
பகைவரின் சினம் எடுபடாமல் போய்விடும்.

பாடல் 179

நிலநலத்தால் நந்திய நெல்லேபோல் தத்தம்
குலநலத்தால் ஆகுவர் சான்றோர்; – கலநலத்தைத்
தீவளி சென்று சிதைத்தாங்குச் சான்றாண்மை
தீயினம் சேரக் கெடும்.

நிலவளத்தால் செழித்து வளரும்
நெற்பயிர்போல் தாங்கள் சேரும்
கூட்டத்தால் ஆவர் மேலானவராய்
கடலில் செல்லும் கப்பலின் பெருமையை
சுழற்காற்றுத் தாக்கிக் கெடுப்பதுபோல்
தீயோர் சேர்க்கையால் கெடும்
ஒருவரின் மேன்மை.

பாடல் 180

மனத்தால் மறுவில ரேனும்தாம் சேர்ந்த
இனத்தால் இகழப் படுவர் – புனத்து
வெறிகமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனந் தீப்பட்டக் கால்.

காடு தீப்பற்றி எரியும்போது மணம்
கமழும் சந்தனமரமும் வேங்கைமரமும்
கருகிப்போகும் என்பதுபோல் மனதில்
கடுகளவு குற்றமில்லா நல்லவராயினும்
கெட்டவர் சேர்க்கையால் இகழப்படுவர்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க