Blog

  • கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும், வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமிழும், மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் –  குடும்ப விழாக்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வத்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார்கழி பீடை உடையது அல்ல –   பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும், திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு – சிவன் அடியாரும், திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலையோடு, பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் – சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச்சியார். சைவசமய குரவர்போல் – வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார்.  பெரியாழ்வாரின் மகளாய் திருமாலின் அருளினால் வாய்த்தவர்.

    திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள். ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ்வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் – அவர்கள் திருமாலை நோக்கும் விதமும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும், போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர்களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும், உணர்வுகளும், பெண்மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் – அமுதத் தமிழாய், சங்கத் தமிழாய், காதல்த்தமிழாய், கற்கண்டுத் தமிழாய், அணைக்கும் தமிழாய், ஈர்க்குந்தமிழாய், படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் – பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது – விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.

    “திருப்பாவை” என்பது மார்கழியின் மகத்துவம், அந்தத் திருப்பாவையினை தமிழுக்கு, பக்தி உலகுக்கு வழங்கியவர் கோதை நாச்சியாரான ஆண்டாளே. மார்கழியில் மாலவனைப் போற்றிப் பாடும் பாங்கில் – பக்தியை, காதலை, அறிவியலை , வாழ்க்கை முறையை, தமிழ்ச் சுவையை, சமூகவியலை, இயற்கையை,  என்று பலவற்றை ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை வாயிலாக வழங்கி வரமாக்கி இருக்கிறார். திருப்பாவையினை சைவர்களும் படிக்கலாம். பக்தியினை ஊட்டும் மருந்து திருப்பாவையில் இருக்கிறது. பக்தி என்பது பரந்தது விரிந்தது. ஆண்டாளின் பக்தியும் அப்படியானதே. சைவத் தமிழ் உலகில், சைவப் பக்திப் பெருவெளியில் காரைக்கால் ஈந்திட்ட அம்மை போலவேதான் — வைணவப் பக்திப் பெருவெளியில் ஆண்டாள் நாச்சியாரும் வந்து அமைகிறார் என்பதை மனமிருத்துதல் வேண்டும். நால்வருக்கே வழிகாட்டி காரைக்காலம்மைமையார். ஆழ்வார்களும் அவர்கள் பின்வந்த வைணவப் பெரியவர்களும் ஏற்றிப் போற்றப்படும் வகையில் வந்தமைந்தவர்தான் ஆண்டாள் நாச்சியார். காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்தார் திருமாலோ ஆண்டாள் நாச்சியாரை தன் அருகிலேயே அணைத்துக் கொண்டார். காரைக்கால் அம்மையார் பெண்ணழகை பேயுருவாக்கிட சிவனிடம் வேண்டினார். கோதைநாச்சியார் தன்னழகை மானிடர்க்கு ஈயாது மாலவனுக்கே ஈந்தார். அத்தனைக்கும் வித்து பக்தி ஒன்றேதான்.

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே, நமக்கே பறை தருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய்.

    என்று திருப்பாவையை ஆண்டாள் நாச்சியார் ஆரம்பிக்கின்றார். முப்பது பாடல்கள் முத்தாக, கோதை தந்த சொத்தாக பக்தியுலகுக்கு வாய்த்திருக்கிறது. முதலாம் பாடலிலிருந்து பதினைந்தாம் பாடல்வரை துயில் கொண்டிருக்கும் தோழியரை எழுப்பும் விதமாய் திருப்பாவை அமைந்திருக்கிறது. மார்கழியில் பாவை நோன்பினை நோற்பதை மங்கையர் மனமிருத்த வேண்டும் என்பதை ஆண்டாள் நாச்சியார் பல வகைகளில் காட்டும் பாங்கும், அதற்காக தன்னுடன் வருமாறு தோழியரான மங்கையரை, அதிகாலை துயில் எழுப்புவதாகவும் அமையும் திருப்பாவைப் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அது மட்டுமல்ல திரு மாலின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியும் நிற்கின்றன.

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிகைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையயத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

    பாவை நோன்பினை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பக்குவத்தை ஆண்டாள் நாச்சியார் மிகவும் நுட்பமாய் மனத்தில் பதியும் வண்ணம் இங்கே விபரித்து நிற்கிறார்.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    ஓங்கி உலகளந்த உத்தமன் என்று திருமாலைக் காட்டும் பாங்கு ஆண்டாளின் பக்தியின் உச்சம். அத்துடன் பாவை நோன்பினைக் கடைப்பிடித்தால் விளையும் நற்பலன்களையெல்லாம் பட்டியல் படுத்திக் காட்டுகிறார். “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” ஆண்டாள் நாச்சியாரின் முத்திரையாய் ஒளிர்கிறதல்லவா!

    ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
    ஆழுயுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மிம்மி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்தேலோர் எம்பாவாய்

    மழை எப்படி உருவாகிறது என்னும் அறிவியலை ஆண்டாள் நாச்சியார் இங்கே காட்டும் நுட்பம் வியப்பாய் இருக்கிறதல்லவா! பக்தியுடன் அறிவியலை இணைக்கும் கோதைத் தமிழைக் கோண்டாடி மகிழ்வது எம் தலையாய கடனல்லவா !

    “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய்”

    ” ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்”

    “உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்”

    ஆண்டாள் நாச்சியாரின் அகம் எப்படிப் பார்க்கிறது! பார்க்கும் பார்வையும், அதனூடாய் வெளிப்படுத்தும் காட்சியும் சுவையோ சுவையாய் சொக்க வைக்கிறதல்லவா!

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    கோலே விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் !

    ஆண்டாள் நாச்சியார் மணிவண்ணனைப் போற்றி மனமிருத்தி மகிழுகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணியோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார்
    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    கூடாரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா உன்னை நோக்கிய நோன்பினால் எமக்குக் கிடைப்பதுதான் பேரின்பம். புகழோ ஆபரணங்களோ எமக்குப் பெரிதல்ல கோவிந்தா! உன்னை எண்ணி நின்று பிரசாதத்தை கூடியிருந்து உண்ணுவதே பேரின்பமாகும்.

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்ணோம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னோடு
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    நாங்கள் யாவருமே அறிவில்லாதவர்கள். பசுக்கூட்டம் வழிசென்று வாழ்பவர்கள். ஆயர்குலக் கொழுந்தே உன்னால் வைகுண்டத்தையே காணுகின்றோம். அந்தப் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. கோவிந்தா நீயோ குறை ஒன்றுமே இல்லாதவன். உனது உயர்வு தெரியாது சிறு பிள்ளைகளாய் உன்னை ஒருமையில் அழைத்தும் இருக்கிறோம். எங்கள் சிறுமைகளை மன்னித்து எங்களுடன் உறவாய் இருப்பதை மட்டும் விட்டுவிடாதே!

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழே பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனகேநாம் ஆசெய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    ஏழேழ் பிறவிக்கும் எங்களுடனே இருந்துவிடு. உந்தன் உறவை துண்டித்து மட்டும் விட்டுவிடாதே. உந்தன் பொற்றமரை அடியினைப் போற்றியே நிற்கின்றோம். எங்களின் விரத்தத்தை ஏற்றிவிடு கோவிந்தா. எந்த ஒரு பொருளும் எங்களுக்குப் பொருட்டல்ல. எங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த சின்ன நோன்பை கோவிந்தா ஏற்றுக் கொண்டு எங்களை உன்னயல் வைத்திடுவாய் என்று ஆண்டாள் நாச்சியார் மனமுருகி வேண்டி நிற்கிறார்.

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

    தான் மனமுருகிப் பக்தியுடன் எம்பெருமான் நாராயணன் அருளைப், புகழை, பாடிய “சங்கத்தமிழ் மாலை” முப்பதையும் தப்பாமல் பாடினால் செல்வத்திருமாலின் திருவருளால் இன்புற்ரு வாழ்வார்கள் என்று உறுதி மொழியாய் உரைத்து நிறைவு செய்கிறார் திருப்பாவையினை ஆண்டாள் நாச்சியார்.

    திருவாடிப் பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே:
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே,
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே:
    *பெரும்பூதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே,
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே:
    உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே:
    மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே:
    வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே*

    வைணவத்துக்கு வாய்த்த பெருஞ் சொத்து ஆண்டாள் நாச்சியார். மானிட இன்பங்களை, பக்தியில் திளைத்த ஆண்டாள் நாச்சியார் – இறையுடன் கலக்கும் மாறாப் பேரின்பமாய் ஆக்கி விடுகிறார். ஆண்டாள் நாச்சியாரின் நோக்கும் போக்கும் பேரின்பக் காதலாகவே பேருருக் கொள்ளுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கோவிந்தனை கொழுநன் ஆக்கிய பெருமையினை கோதை நாச்சியார் பெற்றுக் கொள்ளுகின்றார். கோவிந்தன் மேல் கொள்ளும் காதலை எடுத்துரைக்க ஆண்டாள் நாச்சியார் எடுத்தாளும் தமிழ்தான் அவரை அனைவரின் அகத்திலும் அமர்த்தி விடுகிறது. பக்தியின் பரவசத்தைப் பக்குவத்தை பாங்குடன் வெளிப்படுத்த அமுதத் தமிழை ஆண்டாள் நாச்சியார் கையாண்ட பாங்கு அனைவரையும் அவர் பக்கம் திருப்பியே விட்டது. எனவே “கோதைத் தமிழ் கொண்டாடும் தமிழாய்” ஆகியே விட்டது.

    Share
  • பல்லழகன் – பகுதி 13

    திவாகர்

     

    கோம்டி வீடு

     

    “கல்யாண்! இன்னும் தூங்கலியா?”

     

    அவன் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்கிறது. “தூங்கறது இருக்கட்டும். இன்னும் சாப்பிடக்கூட இல்லே.”

     

    “முரளி அங்கே இருக்காரா?”

     

    “இல்லே அவன் நங்க நல்லூர் அவன் வீட்டுக்குப் போயிட்டான். அவனுக்கென்ன.. அவன் மனசுல இருந்த அத்தனைக் கஷ்டத்தையும் இறக்கி எனக்குக் கொடுத்துட்டு போயிட்டான். அது இருக்கட்டும்.. உங்களுக்கு முரளி சொல்றதெல்லாம் எப்படி படறது?”

     

    “ம்ம்.. சொல்றேன்.. நீங்க என்ன பண்ணுங்க முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க..

     

    “இல்லல்ல.. என் எதிர்லயேதான் சாப்பாட்டை வெச்சிருக்கேன்.. ஆனா ஏறத்தான் மாட்டேங்குது.. நீங்க பேசுங்க கோம்டி. உங்க பேச்சைக் கேட்டுண்டே சாப்பிடறேன். ஆனா ஒண்ணுங்க உங்க மூளை அபாரமா வேலை செய்யுது.”

     

    “சரி, சாப்பிட்டுண்டே கேளுங்க. முரளி கொலை செய்ய வாய்ப்பிருந்தும் சரியான காரணங்கள் இருந்தும் அவன் கொலை செய்யலேன்னுதான் நினைக்கிறேன். ஆனா முரளி சித்ரா பௌர்ணமியன்னிக்கு நடந்ததுன்னு சொன்னது உண்மையாக இருந்தாலும் அதுக்கப்பறம் துப்பாக்கியை உங்க பெரியப்பா எடுத்தது.. வாய்ச்சவடாலா பேசினது.. சுட்டாலும் சுடுங்க ஆனா.. இனிமே பிரியாவை சந்திக்க கண்டிப்பா வீட்டுக்கு அவரை வரவேணாம்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இடிக்குது. உங்க பெரியப்பா அவ்வளோ ஈஸியா எந்த விஷயத்தையும் விடறவர் கிடையாது ”

     

    கல்யாண் பதில் ஏதும் சொல்லவில்லை.. ‘ம் ம்’ என்று மட்டும் சொன்னான்.

     

    “சரி, பெரியப்பாவோட இந்த மாதிரியான பொம்பிளை ஃபோபியோ இன்னும் எங்கெல்லாம் பரவி இருக்குன்னு கண்டுபிடிக்கணும்.. அதே போல சுந்தர் எதுக்காக சிதம்பரம் போய் பிரியா வீட்டுல பத்து லட்சம் கொடுத்து இதுல இன்வால்வ் ஆனான்.. அவனுக்கு இந்த பெரியப்பாவோட லீலைகள் எவ்வளோ தூரத்துக்குத் தெரியும்.. அல்லது ஜஸ்ட் பெரியப்பாவோட கோரிக்கை மேலே பணம் கொரியர் மூலமா கொடுக்கறது போல போனானான்னும் தெரியணும்.. அவன் இந்தக் கொலைல சம்பந்தம் இருக்கான்னு பாக்கணும்.. எதுக்குன்னா அவன் டிடாச்மென்ட் எங்கிற பேருல அவனை இந்த விசாரணை சர்க்கிள்லேர்ந்தே தவிர்க்கப் பாக்கறான். அதனாலதான் சந்தேகம் வருது. ஆனா அவனோ அந்த சமயத்துல ஸ்பாட்’ல இல்லங்கறது எவ்வளோ தூரம் உண்மை.. அவன் முதல்லயே சிதம்பரமோ வைத்தீஸ்வரன் கோயில் போகாம இங்கேயே இருக்கறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. அப்படியே சிதம்பரம் போனா கூட அவன் பணத்தைக் கொடுத்தானாங்கறது கூட கண்டுபிடிக்கணும். அதனால முரளிக்குத் தெரியாம சிதம்பரம் போகணும். அப்படி போகறதுக்கு முன்னாடி காலைல நான் சுந்தர்கிட்டே பேசணும்.. எப்படி பொன்னம்மாவோட சித்ரா பௌர்ணமி விஷயம் முரளியைப் பேச வெச்சதோ அதுமாதிரி சிதம்பரம் ரஞ்சிதாவோட அம்மாவும் பெரியப்பா கொடுத்த பத்துலட்ச ரூபாய் விஷயமும் சுந்தரைப் பேசவைக்கும்னு நினைக்கிறேன். இன்னும் ரவி வேற என்னன்ன விஷயம்லாம் சொல்லப் போறானோ.. அவன் சுந்தரை ஃபால்லோ பண்ணிட்டிருக்கான்.  கல்யாண்.. நீங்க சாபிட்டுட்டுப் படுங்க..  நாளைக்கான விஷயத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்.. ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் கிடைச்சாலும் கொலைக்கான நேரடியான விவரம் கிடைக்கலே. முரளிகிட்டே கொஞ்ச நாள் ஜாக்கிரதையா பழகுங்க..”

     

    அவன் உம் உம் என சொன்னதிலிருந்து சாப்பிடுகிறான் என்பது புரிந்தது.

     

    “சரி சாப்பிடுங்க.. நான் நாளைக்கு மத்யானமா உங்களைப் பாக்கறேன்.. குட் நைட்.”

     

    என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தாள். “பாவம்.. பெரியப்பா இவ்வளோ பெரிய காமாந்தகன்னு தெரிஞ்சவுடனே அப்செட் ஆயிட்டான்.. சாதாரண காமாந்தகன் இல்லடா மகா அயோக்கியத்தனமான காமப் பிசாசுன்னு தெரிஞ்சா இவன் என்ன செஞ்சுப்பானோ.. அடடா.. இந்த சுமதியைப் பற்றி கல்யாண்கிட்ட கேட்கலையே.. சரி, நாளைக்குப் பார்த்துப்போம்.. ஆனா முரளி சுமதியைப் பத்திப் பேசறச்சே ஒண்ணும் சொல்லலியே.. பார்க்கணும் நாளைக்கு..”

     

    என வாய்விட்டுச் சொன்னவள் கண்ணை மூடிப் படுக்க ஆரம்பித்தாள். அதற்குள் இன்னொரு ஃபோன் வந்தது. ரவிதான் பேசினான். அவன் அவளிடம் ஏதோ சொல்லச் சொல்ல நிதானமாகக் கேட்டாள்.

     

    ‘தேங்க்ஸ்டா ரவி, எனக்கு எப்பவுமே சுந்தர் மேல சந்தேகம் உண்டுதான்.. நீ சொன்னபடி அந்தம்மா பேரு என்ன சொன்னே சூடாமணி இல்லே.. அவங்க நம்பர் அனுப்பு. நான் பேசறேன், அத்தோட அந்த ஆசிரமத்துப் பெயர் சொல்லமாட்டேன்.. இந்த போலீஸ் பேரைச் சொல்லி பேசவெச்சுட்டா போச்சு. எதுக்கும் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட சொல்லி சுந்தர்கிட்டே பேசச் சொல்றேன். ஆனா போலீஸ் ரொம்ப விசாரிக்காது. அவங்களுக்கு இந்தக் கேஸ் எப்போ முடிக்கலாம்னுதான் இருக்கு,,  டோண்ட் வொர்ரி.. குட் நைட்.’ ஃபோனை வைத்தாள்.

     

    அடுத்த நாள் காலை பதினோறு மணியளவில் எக்ஸ்ப்ரஸ் மால் இரண்டாவது மாடி.. கூடவே தோழி சாந்தியுடன் ஒரு கடையில் நுழையப் பார்த்தவள் சட்டென அந்தக் கடை வாயிலில் நின்று நிதானித்தாள். சாந்தி கவனித்தாள் அவளை.

     

    “என்னடி அப்படியே நின்னுட்டே..”

     

    “இருடி.. உள்ளே கல்யாண் இருக்கான்”

     

    “யாரு அந்த பல்லழகனா? இருக்கட்டுமே.. பார்த்தா நல்லதுதானே.. சிரிச்சாதான் கஷ்டம்..”

     

    “இல்லடி.. நீ கொஞ்சம் பின்னாடி வா.. உள்ளே போகாம வெளியே கண்ணாடி மூலமா பாருடி.. அவன் கூட யாருன்னு பாக்கணும்.. அந்த பொம்பிளை யாருடி.. இன்னும் மூஞ்சியைக் காமிக்கலே,, பின்னாலே திரும்பிப் பார்த்தாதான் தெரியும்.. ஒருவேள இவதான் பிரியாவா.. அவன் அண்ணின்னு நினைக்கிறேன்..”

     

    “யாரு.. அந்த முரளி பொண்டாட்டின்னு சொன்னியே.. அவளா இவ..?”

     

    “இருக்கலாம்.. ஆனா இவன் எதுக்காக இவளை அழைச்சுண்டு வரணும்? ஹேய் அவ திரும்பிப் பாக்கறா.. இவளா.. இவ நம்ம சுமதி இல்லே.? அட, அதோ பாருடி உங்கண்ணன் ரவி கூட அவன் கூட  எதையோ டிரெஸ் எடுக்கிறான். அட, ரவி எவ்வளோ உரிமையோட அவளைத் தொட்டு டிரஸ் மேட்ச் பண்றான் பாருடி! ”

     

    “ஆமாண்டி நம்ம சுமதியேதான்.. ரவியும் கல்யாணும் சுமதிக்குத் ஏற்கனவே தெரியுமா?”

     

    “பார்த்து ரொம்ப நாளாச்சு. எஸ்.. திஸ் இஸ் சுமதி.. அட இவளா.. அவங்க பெரியப்பா இந்தப் பொண்ணை இன்னும் விடலியா? இவ விஷயம் எவ்வளோ தூரம் கல்யாணுக்குத் தெரியும்? இவளோட விஷயம் தெரியும்னா இவனுக்கு அப்போ நம்ம கிலினிக்ல நடந்த விஷயம் தெரியுமா? ரவிக்கு எவ்வளோ விஷயம் தெரியும்? அல்லது தெரியாதது மாதிரி நம்மகிட்டயே நடிக்கிறாங்களா? இவகிட்ட இன்ஸ்பக்டர் வேற போகச் சொல்லி பேசச் சொன்னாருடி.. அது வேற யாரோ சுமதின்னு நினைச்சுண்டிருந்தேன். இவளுடைய கதைதான் நமக்குத் தெரியுமே.. கல்யாண்கிட்டே சுமதி எப்படி மாட்டினா.. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் இவளை சந்தேகமா பேசறச்சே கல்யாண் சுமதிக்கு சப்போர்ட்டா பேசினானே..  (அப்போது அவர்கள் மூவரும் பில் கவுண்டர் அருகே வருகிறார்கள்) “யேய் சாந்தி!. பாருடி நிறைய வாங்கியிருக்காங்க.. அவ பரம்பரைக்கும் மேலே வரும். ஏய் அவன் வர்றாண்டி.. கொஞ்சம் நம்மளை மறைச்சுக்கலாம். கல்யாணுக்கு மட்டுமில்லே.. சுமதிக்கும் நம்மளைத் தெரியுமே.. ரவியையும் கூப்பிடாதே.. நான் இப்போ அவங்களை பார்க்க விரும்பலே.”

     

    என்று சொன்ன கோம்டி தன் தோழியுடன் அடுத்துள்ள கடையின் உள்ளே நுழைந்தாள். கல்யாணும் ரவியும் கூட வந்தப் பெண்மணியும் தன்னைக் கடந்த உடன் அவர்களறியாமல் பின் தொடர்ந்தாள். கீழே வந்தவுடன் அவன் ஃபோனில் அழைக்க சில நிடங்களில் அங்கே ஒரு ஊபெர் டாக்ஸி வந்தது. அதில் மூவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள அந்த வண்டி போகத் தொடங்கியது.

     

    சாந்தியும் கோம்டியும் வேடிக்கை பார்த்தாலும் கோம்டி ஏனோ அவர்களை அதற்கு மேலும் பின் தொடர விரும்பவில்லை.

    “சரிடி.. சீக்கிரம் உன் டிரஸ் செலக்ஷனை முடிச்சுடலாம்.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. போகணும்.”

     

    கோம்டி வீடு (க்லினிக்) மதிய வேளையில் கோம்டி தனியாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது அவளுக்கு ஃபோன் வருகிறது.

     

    கல்யாண் பேசினான்.

    “கோம்டி! வீட்டுலதானே இருக்கீங்க.. உடனே நம்ம வீட்டுக்கு வந்தால் சுந்தருடன் பேசலாம்! ரவியும் இங்கதான் இருக்கான்.” .

     

    ஒரு நிமிடம் யோசித்தாள். “சரி, இப்போ மணி ரெண்டாகுது.. அரை மணி நேரம் லேட்டானா பரவாயில்லையா? வருகிறேன்..  அவர் அங்க இருப்பாரா.. ஏதாவது மீடிங்க்னு போயிடுவாரா?” என்றாள்.

     

    “இல்லே.. இருக்க வெக்கிறேன்.” ஃபோனை வைத்தான்.

     

    அவள் இன்னொருவருக்கு ஃபோன் செய்தாள். “எப்படி இருக்கீங்க சூடாமணி அம்மா? சௌக்கியமா இருக்கீங்களா? எனக்கு உங்க நம்பரை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உங்க ஊர் போலீஸ் மூலமா வாங்கிக் கொடுத்தார். நாம ஃபோன்லயே பேசலாமா.. இல்லே நேர வந்தா பேசுவீங்களா? எப்படி சௌகரியம்? இப்போ நான் தனியா இருக்கேன். என் பக்கத்துல யாரும் கிடையாது.. ஆனா சிதம்பரம் எனக்குத் தெரியாத ஊரு. யாராவது தெரிஞ்ச போலீஸைத்தான் துணைக்கு அழைச்சுட்டு வரணும்..”

     

    “ஐய்யய்யோ இதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு தூரம் சிரமத்தோட வரணும்? உங்களுக்கு என்ன தேவையோ சொன்னீங்கன்னா பதில் சொல்லிடறேம்மா.. உங்க பேரு?”

     

    “என் பேரு கோம்டி.. இது வாட்ஸப் கால்தான்.. இதையே வீடியோ காலா மாத்தி பேசலாமா? உங்களுக்கும் என் மேல நம்பிக்கை வரும்..”

     

    வீடியோவில் அந்த சூடாமணி வந்தாள்.

    “சரி, இருக்கட்டும்.. நான் நேரா விஷயத்துக்கு வரேன் சூடாமணி..  உங்களுக்கு கந்தசாமியை எவ்வளோ வருஷமா தெரியும்?”

     

    “எந்த கந்தசாமிம்மா?” அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் சூடாமணி.

     

    “இதோ பாருங்க சூடாமணி.. நான் முடிஞ்சவரைக்கும் உங்களையும் உங்க பொண்ணு பிரியாவையும் காப்பாத்ததான் முயற்சி பண்றேன்.. நீங்க கோ ஆபரேட் பண்ணலேன்னா சிதம்பரம் போலீஸ் துணையோட உங்களை சென்னை அழைச்சுட்டுவந்து போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சுதான் விசாரிப்பாங்க.. உங்க இஷ்டம்..”

     

    அவள் கை எடுத்து கும்பிட்டாள். “அம்மா இல்லேம்மா.. எனக்கு எதுக்கும்மா வீண்தொந்தரவெல்லாம். அந்த கந்தசாமியைப் பத்தி பேசவே வேணாம்னுதான் அப்படிச் சொன்னேன்மா.. நான் திருச்சில இருக்கறச்சே பழக்கம்மா அவர். அங்க ஒரு பெரிய அனாதைக் குழந்தைங்க காப்பகம்னு இருக்கு. அங்க பல வருஷமா வேலை பார்த்தேன்மா. ஏன்னா புருஷன் குடிகாரன்.. அவனையும் பாத்துக்கணும்.. அதுக்காக அந்த காப்பகத்துல கிட்டத்தட்ட மானேஜர் மாதிரி வேலை. அங்க கந்தசாமி அடிக்கடி வருவார். குழந்தைங்க மருத்துவச் செலவையெல்லாம் ஏத்துப்பார். அதுவும் பெண்குழந்தைங்கன்னா அடிக்கடி வெளியே அழைச்சுண்டு போய் ஊரெல்லாம் சுத்திக் காண்பிப்பார்.  அப்போதான் பழக்கம்மா.. அந்தக் காப்பகத்துலேர்ந்து மேல்படிப்பு படிக்க வெக்கிறேன்னு சில பொண் குழந்தைகளை தன்னோட செலவுல மெட்ராஸ்ல தெரிஞ்ச ஹாஸ்டல்ல வெச்சுப் படிக்க அனுப்பி வெச்சாரு. எங்க வீட்டுக்கு வந்து என் பொண்ணைப் பார்த்தார். அடிக்கடி வர ஆரம்பிச்சாரு.. அவருக்கு அப்பவே வயசு அம்பத்து அஞ்சோ அறுபதோ கூட இருக்கும். ஒருதடவை நான் வீட்ல இல்லாதப்ப என் பொண்கிட்ட மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிட்டார்மா. அவளுக்கு வயசு இருபதுதான்மா.. காலேஜ் ஃபைனல் வருஷம் போயிண்டிருந்தா.. எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடனே சத்தம் போட்டேன்மா.. அவரு பயமுறுத்தினாரு. நாங்கல்லாம் பணக்காரங்க இல்லம்மா.. அடுத்த வாரமே நாங்க வேலையை விட்டுட்டு வீட்டைக் காலி பண்ணிண்டு எங்க ஊரு சிதம்பரம் வந்துட்டோம். ஆனாலும் அவரு விடலே.. என் பொண்ணு ரொம்ப முரண்டு பிடிச்சா.. அழுதாம்மா.. ஆனா பணம் பத்தையும் செய்யும்.. அவரு எங்க மூஞ்சில பணத்தை அள்ளி வீசினார்மா.. நாங்க வேற வழியில்லாம பொறுக்கிக்கினோம்..” அவள் அழுதாள். அழுதபடி இருந்தவள் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி பேசினாள்.

     

    “புரியுது.. மேலே சொல்லுங்க சூடாமணி”

     

    “இந்த உலகத்துல எப்படி பிறந்தாலும் ஏழையா பொறக்கக்கூடாதம்மா.. அப்படி ஏழை வீட்ல பொறந்தாலும் அழகான பொண்ணா பொறக்கக்கூடாதும்மா.. அதனால் இத்தனையும் அனுபவித்தோம். பணம்தான்மா குற்றம் செஞ்சது. அந்தப் பணம் எங்க வாழ்க்கை சுகமா போறதுக்குத் தேவை. என் பொண்ணு நல்லா படிச்சவ.. ஆனா அவ இவரை மனசார ஏத்துக்கலை. ஆனா இந்த மாதிரி கொடுமை அவளுக்கு பிடிக்கலை.. வேற வழியில்லாம வயசு வித்தியாசம் ஜாஸ்தியானாலும் பரவாயில்லே.. இந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொன்னா.. இவரும் அப்படி பண்றேன்னு ஒரு வருஷகாலம் அப்படியே சொல்லிச் சொல்லி ஏமாத்தினாரும்மா. என் பொண்ணு ஒத்துக்காம சண்டை போட்டா.. எழுதி வெச்சுட்டுத் தற்கொலை பண்ணிப்பேன்னு அழுதா.. வேற வழியில்லாம அவரே ஏற்பாடு பண்றேன்னு சொல்லி அவர் உறவுக்கார பையனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார்மா.

     

    “மிஸ்டர் முரளிதானே அவர் பேரு?”

     

    “ஆமாம்மா.. ஆனா அத்தோட விட்டாரா.. நாலஞ்சு மாசத்துக்கு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தாரு. கலியாணம் பண்ணிய பொண்ணைத் திரும்பவும் எங்கிட்டயே அனுப்பறேன்னு சொல்லி அஞ்சு லட்சம் பணம் கொடுத்தாரு. இனிமே பிரியாவைத் தானே பாத்துக்கறேன்னும் சொல்லிட்டுப் போயிட்டாரு. இது நடந்தவுடனே என் பொண்ணுக்கு ஃபோன் போட்டுப் பேசினேன்மா. அந்த ஆள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுன்னு தெளிவா சொல்லிடுத்து. பிரியா இப்போ மகிழ்ச்சியா கல்யாணம் ஆகி முழுகாம இருக்குது.. அதனால அவளே சொல்லிட்டா.. ‘இனிமே அந்தாளு பத்தி எந்தப் பேச்சும் தேவையில்லே.. அந்தாளைப் பத்திப் பேசினா அம்மா பொண்ணு உறவைக் கூட கட் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.. ன்னு கண்டிப்பா சொல்லிட்டாம்மா’ என் பொண்ணு. நான் அப்படியே சந்தோஷமா இரும்மா’ன்னு சொல்லிட்டேன்மா.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் நாங்க கந்தசாமியோட எந்தத் தொல்லையுமில்லாமதான் இப்போவரைக்கும் இருக்கோம். போனவாரம் அந்த ஆளை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லி மூணாம் நாள் போலீஸ்க்காரன் வந்து சொல்லிட்டு ரஞ்சிதான்னு இங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க.. அப்படி யாரும் இல்லே.. இந்த கந்தசாமி என் பொண்ணை அப்படித்தான் கூப்பிடுவாருன்னு தெரியும்.. ஆனாலும் ரஞ்சிதா புஞ்சிதா உறவெல்லாம் போனவுடனே அந்தப் பேருல என்ன இருக்குன்னு அப்படி சொல்லிட்டோம்.. இவ்வளவுதான்மா..”

     

    “சூடாமணி! உனக்கு கந்தசாமி போனவாரம் அதாவது கொலை நடந்த அன்னிக்கு மத்தியானம் பத்துலட்சம் அனுப்பிச்சாரா? யாராவது வந்து கொடுத்தாங்களா?”

     

    “ஐய்யய்யோ..  அப்படியெல்லாம் ஒரு பைசா வாங்கல்லம்மா.. எப்போ என் பொண்ணு சொல்லிடுத்தோ.. அப்பவே அந்தக் கந்தசாமி உறவுல்லாம் போயிடுச்சும்மா.. ஆறு மாசம் முன்னாடி கொடுத்த அஞ்சு லட்சம் பணம் கூட அப்படியே வெச்சுருக்கேன்மா.. சந்தர்ப்பம் வரச்சே திருப்பிக் கொடுக்கணும்னுதான். அப்படிப்பட்டவ எதுக்கும்மா அவங்கிட்டே நான் பணம் வாங்கணும்? எங்க குலதெய்வம் சாட்சியா, என் பொண்ணுக்குப் பொறக்கப்போற குழந்தை மேல சாட்சியா சொல்லறேன்மா.. சத்தியமா ஒரு பைசா நான் வாங்கலே.. அப்படி பணம் கொடுக்கவும் யாரும் வரல்லேம்மா” அவள் அழுதுகொண்டே தன் கையை தலைமேல் வைத்துப் பேசினாள்.

     

    “சரி சூடாமணி.. எனக்கு இன்னொரு விஷயம் தெரிஞ்சாகணும். திருச்சிலேர்ந்து பொண்குழந்தைகளை மெட்ராஸ் அனுப்பிவெச்சு படிக்க வெப்பார்னு சொன்னியே.. அந்த இடம் சென்னையில இப்போ எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?”

     

    “முடியும்மா.. ஆனா அந்த ரிகார்ட் திருச்சிலதான் இருக்கு. எனக்கு அந்தப் பொண்ணுங்க பேரெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு.  நான் எல்லா விவரமும் கேட்டு வாட்ஸ் ஆப்’லியே கொஞ்ச நேரத்துல அனுப்பறேன்மா.. எதுக்கும்மா.. எல்லாரும் சின்னக் குழந்தைங்கம்மா.. என்னா வயசு 12, 13 இருக்கும் இப்போ..”

     

    “இருக்கட்டும் ஒரு விசாரணைக்குதான்.. நீ விவரம் அனுப்பு.. வேற ஏதாவது கேள்வி கேட்கணும்னா நான் உன்னைக் கூப்பிடறேன். சரி வெச்சுடு..”

     

    தொடரும்

     

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 20

     

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 19. திருநாவுக்கரசு நாயனார் (பகுதி – 1)

     

    திருநாவுக்கு அரசுவளர்

      திருத்தொண்டின் நெறிவாழ

    வருஞானத் தவமுனிவர்

      வாகீசர் வாய்மைதிகழ்

    பெருநாமச் சீர்பரவல்

      உறுகின்றேன் பேருலகில்

    ஒருநாவுக்கு உரைசெய்ய

     ஒண்ணாமை உணராதேன். 

    உழவாரத் தொண்டர் என்று போற்றப்படும், தேவார மூவருள் இரண்டாமவரான திருநாவுக்கரசர் நாயனார் பைந்தமிழோடு பல கலைகளையும் கற்றுத் தேர்ந்த பெருமகனார். இவர் சமண சமயம் சார்ந்தபோது, ‘தரும சேனர்’ என்ற பட்டப் பெயரோடு திகழ்ந்தவர். இப்பெருமான் தமிழையும், கலைகளையும் சிவபரம்பொருளாகக் கண்டு மகிழ்ந்து உளம் கனிந்து பாடுகின்றார்.  சிவபெருமானையே ஆசிரியன் என்றும் தமிழன் என்று கூறி மகிழ்வது அழகு. திருநாவுக்கரசு நாயனாரை சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்டத் தொகையில் “திருநின்ற செம்மையே செம்மையாகக் கொண்ட திருநாவுக்கரையன் தன் அடியார்க்கும் அடியேன்” என்று போற்றுகின்றார்.

    “தேவாரப்பதிகத்தைப் பாடினபடியால், நீ இனி நாவுக்கரசு என்ற பெயருடன் உலகில் நிலைத்திருப்பாய்” என்று சிவபெருமானார் அசரீரி வாக்கு அருளினார். திருஞானசம்பந்த நாயனார், இந்நாயனாரை ‘அப்பர்’ (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், இவர் தாண்டகம் எனும் விருத்த வகையைப் பாடியமையால் தாண்டக வேந்தர் என்றும் அழைக்கப்படுகின்றார்.
    கி.பி. ஏழாம் நூற்றாண்டு ஆரம்பத்தில் திருமுனைப்பாடி (நடுநாடு) நாட்டில், திருவாமூரில், குறுக்கையர் குடி எனும் சைவ வேளாளர் குலத்தில் புகழனார் மற்றும் மாதினியார் தம்பதியினருக்கு மூத்த குழந்தையாக திலகவதியார் எனும் திருமகளும், இரண்டாவதாக ஒரு ஆண் மகவும் அவதரித்தனர். இந்த ஆண் மகவுக்கு மருள்நீக்கியார் எனும் திருநாமம் சூட்டப்பெற்றது.

    திருநாவுக்கரசர் அவதரித்த திருமுனைப்பாடி எனும் திருத்தலம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தேவாரம் பாடிய மூவர் பெருமக்களான, திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரில் இருவர் அவதரித்த தலம் திருமுனைப்பாடி.

    “மண்மேல் நம்மைச் சொற்றமிழ்ப் பாடு என சிவபெருமானே கேட்க ஆலால சுந்தரரும் அருந்தமிழால் பாடினார். கல் மிதக்கச் செய்தும், மறைக்கதவம் திறந்தும், பாம்பு கடித்த பாலகனைப் பாரறிய எழுப்பியும் பெருமானே சால நீ பசித்தாய்” எனக் கூறிக் கட்டமுது கொடுக்கக் கன்னித்தமிழால் கல்லும் கரைந்துருகக் கவி பாடிய நாவுக்கரசுப் பெருமானும், ஆரூரரும் அவதாரம் செய்த நாடு இந்நாடு என்பது பெருஞ்சிறப்பாகும்.

    அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்

    பிறந்தருள உளதானால் நம்மளவோ? பேருலகில்

    சிறந்த்திரு முனைப்பாடி திறம்பாடும் சீர்பாடு

    என்கிறார் சேக்கிழார் பெருமான். சைவம் சார்ந்து அடியவர் பெருமக்களைப் பாடுவதே தம் பிறவிப் பயன் என்று கருதிய நாவுக்கரசர், ‘தொண்டர் புராணம்’ பாடினார். புகழ்மிக்க சான்றோர்களும் அருளாளர்களும் தோன்றும் நாடு வளம் கொழிக்கும் என்ற வகையில் நாவரசர் திரு அவதாரம் செய்த திருமுனைப்பாடி எனும் பதி வளமோடிருப்பதில் வியப்பேதுமில்லையே?

    மாசற்ற மதியினைப்போல் வளர்ந்து வந்த மருள் நீக்கியாரின் தமக்கை திலகவதியாரின் பன்னிரண்டாம் அகவையில், பண்டைய நாளின் வழக்கப்படி திருமணப் பேச்சு ஆரம்பித்தது. அறிவும் அழகும் நற்குணமும், குடிச்சிறப்பும் ஒருங்கே அமையப்பெற்ற கலிப்பகையார் என்ற வேளாண் குடித்தலைவருக்கு திலகவதியாரை மணமுடிக்க விரும்பி பெரியோர் சிலரை புகழனார்பால் அனுப்பினர். தந்தையாரும் தம் அருமை மகளைக் கொடுக்க இசைவளித்து அனுப்பினார்.

    இச்சமயத்தில் வடநாட்டு மன்னன் ஒருவன் படையெடுத்து வர கலிப்பகையாரும் கடமை பெரிதென வடநாடு நோக்கி படை கொண்டு சென்றவர் நீண்ட நாட்கள் நடந்த போரால் திரும்பவில்லை. இதற்கிடையே நாவுக்கரசரின் பெற்றோரும் நோய்வாய்ப்பட்டு இறையடி சேர்ந்தனர். பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்தனர். போர்க்களம் சென்ற கலிப்பகையாரும் வீர மரணம் அடைந்தார்.

    பெற்றோர் கலிப்பகையாருக்கு மணமுடிக்க இசைந்ததால், தான் அவருக்கே உரியவள் ஆதலால் தன் உயிரை அவர் உயிரோடு இசைவிக்கத் துணிந்தார் அக்கன்னி திலகவதியார் எனும் கற்புக்கரசி. அதுகண்ட மருள்நீக்கியார் தம் தமக்கையார் திருவடிகளில் விழுந்து, தாய்க்குத் தாயான தமக்கையும் உயிர் துறக்கத் துணிந்தால் தாமும் அதற்கு முன் உயிர் துறப்பேன் என்று சபதமேற்றார் மருள்நீக்கி. நெக்குருகி நின்ற திலகவதியாரும் தம்பியார் உளவாக வேண்டும் என்ற விருப்பினால், நூல் தங்காது அனைத்துயிர்க்கும் அருள் தாங்கி இம்பர் மனைத்தவம் புரிய முடிவெடுத்தார்.

    தம்பியார் உளர் ஆக வேண்டும்

      என வைத்த தயா

    உம்பர் உலகு அணைய உறு

      நிலை விலக்க உயிர் தாங்கி

    அம் பொன் மணி நூல் தாங்காது

      அனைத்து உயிர்க்கும் அருள் தாங்கி

    இம்பர் மனைத் தவம்

      புரிந்து திலகவதியார் இருந்தார். 

    இவ்வம்மையாரையே திருப்புகழ் எனும் தேனமுதத்தில் அருணகிரியார்,

    “மாது புகழை வளர்க்கும் திருவாமூர்” என்று போற்றினார்.

    மனைத்தவம் புரிந்த தமக்கையார் தம் தம்பியாரை கல்வி கேள்விகளில் மிக்க சான்றோனாக வளர்த்தார். தமிழகத்தில் அப்போது சமணம் தலைத்தூக்கியிருந்த காலம். உலக நிலையாமை, செல்வம் நிலையாமை என நிலையாமையையே நிலைக்களனாகக் கொண்டது சமணம். மருள்நீக்கியாரின் வாழ்வியல் சூழலில் ஏற்பட்ட பேரிழப்புகள் அவர்தம் மனத்தில் பெருஞ்சுமையாக நிலையாமையை எண்ணி எண்ணிச் சுழன்றது. நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கையல்லேன் எனத் தேர்ந்து கொல்லாமை மறைந்தொழுகும் சமண சமயம் சாய்ந்தார். சமண சமய நூல்கள், வேத நூல்கள் கற்று ‘தரும சேனர்’ எனும் புதிய பெயரோடு, சமண மதத்துறவியாகவும், அச்சமண மடாதிபதிகளில் ஒருவராகவும் ஆனார். அந்நாளில் பாடலிபுத்திரம் (இந்நாள் கடலூர்) எனும் ஊர் சமண சமயத் தலைவர்களின் தலைமை இடமாகவும் புகலிடமாகவும் இருந்தது. சமண சமயக் கொள்கைகளை விளக்கி மக்களை அச்சமயத்தின்பால் ஈர்த்தார்.

    தம்பியாரின் இந்நிலைக் கண்ட தமக்கையாரோ சிந்தை நொந்தார். மனம் தாளாது இருந்தவர் திரு அதிகை வீரட்டானம் என்னும் திருத்தலத்தை அடைந்து அங்கு ஒரு திருமடம் அமைத்து வீரட்டானப் பெருமானுக்கு திருப்பணி செய்து அப்பெருமானைப் புகழ்ந்து பாடி வழிபட்டு இருந்தார். தம்பியாகிய மருள்நீக்கி சைவம் நீங்கச் சமணம் சார்ந்து வாழும் பெருந்துயரை எம்பெருமானிடம் முறையிட்டு, தம்பி மீண்டும் சைவம் வரல் வேண்டும், அதற்குத் திருவருள் புரிய வேண்டும் என்று அனுதினமும் வேண்டி வழிபட்டு நின்றார்.

     மன்னு தபோ தனியார்க்குக் கனவின்

      கண் மழ விடையார்

    உன்னுடைய மனக் கவலை ஒழி

      நீ உன் உடன் பிறந்தான்

    முன்னமே முனியாகி எனை

      அடையத் தவம் முயன்றான்

    அன்னவனை இனிச் சூலை மடுத்து

      ஆள்வம் என அருளி. 

    சூலை நோயால் மருள்நீக்கியை ஆட்கொள்வோம் என்று திலகவதியாரின் கனவில் தோன்றி அருள்பாலித்துச் சென்றார் சிவபெருமான். தருமசேனராம் மருள்நீக்கியின் வயிற்றில் ஏற்பட்ட சிறிது வலி பன்மடங்காகப் பெருகி சமணத் துறவிகளின் மந்திரங்களுக்கும், மருந்துகளுக்கும் கட்டுப்படாமல் உயிர் போவது போன்ற வலியால் துடிதுடிக்கச் செய்தது. தாய்க்குத் தாயான தமக்கையாரின் நினைவு வர அவரை உடனே காண விழைந்தார். நம்பிக்கைக்குரிய ஒரு சமையல்காரரை அனுப்பி தமக்கையாருக்கு செய்தி சொல்லச் செய்தார்.

    நன்று அறியா அமண் பாழி

      நண்ணுகிலேன் எனும் மாற்றம்

    சென்று அவனுக்கு உரை

      என்று திலகவதியார் மொழிய

    அன்று அவனும் மீண்டு போய்ப்

      புகுந்தபடி அவர்க்கு உரைத்தான். 

    செய்தி கொண்டு போனவன் தமக்கையோடு வருவான் எனக் காத்திருந்த தருமசேனர் தனியாக வந்தவரைப் பார்த்து திடுக்கிட்டு கேட்டபோது, அம்மையார் அங்கு வர மறுத்த செய்தியைக் கூறினார். சூலை நோயிலிருந்து விடுவிக்க இயலாத சமண மதத்தை நம்பி இனியொரு பயனும் இல்லை என்று உணர்ந்து தமக்கையாரின் திருவடியையே சரணமாக அடைவேன் என்று சூலுரைத்து, அனைத்தையும் விடுத்து, வெள்ளாடை தரித்து திருவதிகைக்குக் கிளம்பினார்.

     அவ் வார்த்தை கேட்டலுமே அயர்வு

      எய்தி இதற்கு இனி யான்

    எவ்வாறு செய்வன் என

      ஈசர் அருள் கூடுதலால்

    ஒவ்வா இப் புன் சமயத்து

      ஒழியா இத்துயர் ஒழியச்

    செவ்வாறு சேர் திலக வதியார்

      தாள் சேர்வன் என.

    தம்பியாரின் நிலை கண்டு வருந்திய திலகவதியார், அவருக்குத் திருநீறளித்து வீரட்டானப் பெருமானைத் தரிசித்து வரப் பணித்தார். திருக்கோயிலை வலம் வந்து வணங்கி எழுந்த மருள்நீக்கியார் உள்ளுணர்வு உந்த செந்தமிழ்ப் பதிகம் பாடலானார். திலகவதியாரின் ஆலோசனைப்படி தருமசேனர் சிவபெருமான் மேல் “கூற்றாயினவாறு விலக்ககிலீர்” என்னுந் தேவாரத் திருப்பதிகத்தைப் பாடியருளினார்.

    நீற்றால் நிறைவு ஆகிய மேனியுடன் நிறை

      அன்பு உறுசிந்தையில் நேசம் மிக

    மாற்றார் புரம் மாற்றிய வேதியரை

      மருளும் பிணி மாயை அறுத்திடுவான்

    கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்

      எனநீடிய கோதில் திருப்பதிகம்

    போற்றால் உலகு ஏழின் வரும் துயரம்

      போமாறு எதிர் நின்று புகன்றனரால்.

    உடனே சூலைநோய் நீங்கிற்று.

    கூற்றாயின வாறுவி லக்ககிலீர்

      கொடுமைபல செய்தன நானறியேன்

    ஏற்றாயடிக் கேஇர வும்பகலும்

      பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

    தோற்றாதென் வயிற்றின் அகம்படியே

      குடரோடு துடக்கி முடக்கியிட

    ஆற்றேன் அடியேன்அதி கைக்கெடில

      வீரட்டா னத்துறை அம்மானே. 

    அந்தப் பாடலின் இனிமையில் கரைந்த சிவபெருமான், “செந்தமிழ்ச் சொல் மலர்களால் ஆன திருப்பதிகமாகிய பாமாலையை நீ பாடியமையால் இன்று முதல் உன் நாமம் திருநாவுக்கரசு என ஏழு உலகமும் ஏத்துக” என அசரீரியாக வானில் ஓர் ஒலி ஒலித்தது.

    சிவாலயங்களுக்கு மக்கள் செல்வது குறைந்து, ஆலயங்கள் அனைத்தும் கவனிப்பாரின்றி செடி கொடிகள் முளைத்து  சிதைந்து போன கட்டடங்களாக ஆன நிலையில்தான் தருமசேனரான மருள்நீக்கியார் சைவத்துக்கு மீண்டார். கோயில் கோபுரங்களில் மரம் வளர்ந்து தகர்த்தது. கோயிலைச் சுற்றிலும் புல்லும் பூண்டும் முள் செடியும் வளர்ந்தன. மக்கள் செல்லவே அஞ்சும் நிலை ஏற்பட்ட இந்த நேரத்தில்தான் அப்பரடிகள் சைவம் சார்ந்தார். அது முதல் திருநாவுக்கரச நாயனார் சைவத் தொண்டு செய்யலானார். தம் கரங்களில் புல், பூண்டு அகற்றும் ‘உழவாரம்’ என்ற கருவியை எடுத்துச் சென்று ஆலயத் திருப்பணிகளை செய்து மக்களையும் அவ்வழியில் ஆற்றுப்படுத்தினார். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே கொள்கின்றனர்.

    திருவதிகை சென்ற தங்கள் சமண மதத் தலைவர் தமக்கையாரிடம் சென்று சைவம் சார்ந்தார் என்ற செய்தியை அறிந்த சமணர் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். பின் பல்லவ மன்னனிடம் சென்று, தருமசேனர் சூலைநோய் என்று பொய் கூறி சைவ சமயம் சேர்ந்ததால் நம் சமண சமயம் தாழ்ந்தது எனக்கூறி அவரைக் கோபமூட்டினர். மன்னனும் தன் ஆணையை மீறிய அவனைத் தண்டித்து ஒறுத்தல் வேண்டும் என்றார். நாவுக்கரசரை கைது செய்து வரும்படியும் ஆணையிட்டார். மன்னனின் ஆணையை ஏற்று அமைச்சர்களும், அதிகாரிகளும் திருவதிகை நோக்கிச் சென்று, நாவுக்கரசுப் பெருமான் திருமடத்தில் அவரைப் பார்த்து, பல்லவ மன்னனின் ஆணையைப் பற்றிக் கூறினர்.

    நாவுக்கரசரும் “மறு மாற்றத் திருத்தாண்டகம்” எனும் செந்தமிழ்ப் பாமாலையால் பதிலளித்தார்.

    நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்

            நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்

    ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்

            இன்பமே எந்நாளுந் துன்ப மில்லை

    தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான

            சங்கரனற் சங்கவெண் குழையோர் காதிற்

    கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்

            கொய்ம்மலர்ச்சே வடியிணையே குறுகி னோமே.

    ஆனால் அமைச்சர்களும் சேவகர்களும் அப்பரடிகள் திருவடியில் வீழ்ந்து, மன்னவன் ஆணையை நிறைவேற்றாவிட்டாலும், மன்னன் தங்களை தண்டிக்காமல் இருப்பதற்காகவாவது வரவேண்டும் என்று பணிந்து வேண்டினர். அப்பரடிகளும் இறைவன் சிவபெருமான் உடனிருக்க அங்கு செல்வதில் தடையில்லை என்று கூறி பல்லவன் அரண்மனை நோக்கிச் சென்றார். பல்லவ மன்னனோ நாவுக்கரசரை சந்திக்காமலேயே விசாரிக்காமலே தண்டனை அளித்தான்.

    நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்பு கொதிக்க வைக்கும் அறை) அடைத்து வைத்தான். தில்லைக் கூத்தப்பெருமான் திருவடியை நினைந்து வழிபட்டவருக்கு எந்தத் தீங்கும் நேராது உயிர் பெற்றார்.

    மாசில் வீணையும் மாலை மதியமும்
    வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
    மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
    ஈச னெந்தை யிணையடி நீழலே.

    எனப் பாடினார். எட்டு நாட்கள் கடந்து நீற்றறையை நீக்கியபோது இறையருளால் நாவரசர் அன்றலர்ந்த செந்தாமரை போல் புன்னகைத் தவழும் திருமுகத்தோடு காட்சியளித்தார்.

    அடுத்ததாக நஞ்சு கலந்த பாலடிசில் பருகத் தந்தனர்.

    துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே
    அஞ்செழுத் தோதில் நாளு மரனடிக் கன்ப தாகும்
    வஞ்சனைப் பாற்சோ றாக்கி வழக்கிலா வமணர் தந்த
    நஞ்சழ தாக்கு வித்தார் நனிபள்ளி யடிக ளாரே.

    அந்த நஞ்சும் அவரை ஒன்றும் செய்யவில்லை.

    அடுத்ததாக யானையை விட்டு மிதிக்கும்படி ஆணையிட்டான். ஆனால் அந்த யானை அவரை வணங்கிச் சென்றது. இதனால் வேறு வழி இன்றி திருநாவுக்கரசு நாயனாரை ஒரு கல்லில் கட்டி கடலில் வீசும்படி அரசன் ஆணையிட்டான்.

    சொற்றுணை வேதியன் சோதி வானவன்,
    பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினு,
    நற்றுணை யாவது நமசி வாவே.

    என்று வீரம் பொங்கப் பாடினார் திருநாவுக்கரசு நாயனார். இதனால் கட்டிய கல் பூவாக மாறி கடலில் மிதந்து வந்தது. திருநாவுக்கரசு நாயனாரும் கரை வந்து சேர்ந்தார். சிவபெருமானின் அருளைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனம் மாறி இறுதியில் பல்லவ மன்னனும் சைவ சமயத்தைத் தழுவினான். அப்பரடிகளின் திருவடிகளில் வீழ்ந்து சமணம் விட்டு சைவம் சார்ந்தான். அவனால் உருவாக்கப்பட்ட சமணப் பள்ளிகளையும் பாழிகளையும் இடித்துத் தகர்த்து அக்கற்களைக் கொண்டே ‘குணபரவீச்சுரம்’ என்னும் திருக்கோயில் கட்டினான்.

    தொடரும்

     

     

     

    Share
  • ஒரு வாசகம் (சிறுகதை)

    முனைவர் த. ஆதித்தன்
    இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    அலுவலகத்தில் இருந்து மாலை வீடு திரும்பும் வழியில் தேநீர் அருந்துவதற்காகச் சாலையோரக் கடையில் வண்டியை நிறுத்தினார் கதிர். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பலகாரங்களின் மணம் ஈர்த்தது.

    “பருப்பு வடை கொடுங்க” என்றார். காகிதத் துண்டினுள் வைத்து கடைக்காரர் கொடுத்த வடையை வாங்கியபடி அங்கே சாலையோரம் போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தார். வடையைப் பிய்த்து வாயினுள் திணித்தார். மணம் தந்த ஈர்ப்பு ஒருபுறம், அதன் முறுமுறுப்பும், பருப்பு, மசாலா இவற்றின் சுவை ஒரு புறமும் என ஈர்ப்பினை அதிகரிக்க அனுபவித்து உண்டார்.

    “சார் அப்படியே ஸ்டாங்கா ஒரு இஞ்சி டீ”. சென்ற மாதம் ஒரு நாள் ஊருக்குத் தபால் அனுப்புவதற்காக இக்கடையின் அருகில் இருக்கும் கொரியர் அலுவலகத்திற்கு வரும் போதுதான் இக்கடைக்கு முதன் முறையாக வந்தார். பதார்த்தங்களின் மணமும், சுவையும் ஈர்க்க இப்பொழுது அடிக்கடி வரும் வாடிக்கையாளர்.

    பக்கத்தில் இருந்த நாற்காலியில் மாலைநேர நாளிதழ்கள் இருந்தன. ஒன்றை எடுத்து பெரிய எழுத்துகளில் இருக்கும் தலைப்புகளைப் படித்தப்படி கடைசிப் பக்கம் வரவும், வடை சாப்பிட்டு முடிக்கவும், கடைக்காரப் பையன் தேநீரைக் கொண்டு கொடுக்கவும் சரியாக இருந்தது.

    கடையில் கூட்டம் குறைவுதான். இருந்தாலும் வாடிக்கையாளர்கள் கல்லாப் பெட்டி அருகில் அட்டையில் ஒட்டியிருக்கும் கியூ.ஆர் கோட் என்னும் விரைவுத் துலக்கிக் குறியீட்டை செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து, பணம் செலுத்தும் போது வரும் ஒலி, சாலையில் செல்லும் வாகனங்களின் ஓசை, கடையின் முன் அமர்ந்ததும், நடந்தபடியும், போனில் எதை எதையோ பேசிக் கொண்டிருப்பவர்களின் சப்தம் போன்றவை ஒன்று சேர்த்து எழும்பும் ஓசை அவனுள்  இசையாக ஊடுருவியது. அதை ரசித்தபடி தேநீரைக் குடித்து முடித்தார்.

    அங்கிருந்த நபர்களின் முகங்களை ஏனோ இன்று கவனித்தார். அவரை அறியாமல் கண்கள் அவர்களை ஆராய்ந்தது. யாரும் தவறுதலாக எடுத்துவிடக்கூடாது என தோன்றியது. உடனே, “சார் பருப்பு வடை நல்லா இருக்கு. இன்னொரு வடை எடுத்துக்கிறேன்” என்றபடி எடுத்தார்.

    சாப்பிட்டபடியே பார்வையைப் பரவவிட்டார்.  வரும்போது எல்லாம் பார்க்கும் கூட்டம்தான்.  இன்று உன்னிப்பாகக் கவனிக்கும் போது இயல்பாய் இல்லாமல் இருந்தது.  நாற்காலியில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தபடி வடையைக் கொஞ்சம் கொஞ்சமாக மென்று தின்றுகொண்டே கடைக்கு வந்திருந்தவர்களைக் கவனிக்கும்போது, திடீரென கவனத்தில் உறைத்தது.  அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் விலைஉயர்ந்த ஆடை அணிந்து நாகரிகமாகவும், பகட்டுடனும் தோன்றினார்கள்.  அவர்கள் இங்கு ஏன் வருகிறார்கள் என்று எண்ணி ஆச்சரியப்பட்டார்.  காரணம்,  இந்த சாலையோரக்கடை அப்படியொன்றும் உயர்ந்ததாகத் தோன்றவில்லை.  மீண்டும் மீண்டும் அவரது கண்கள் அவர்களின் முகங்களை நோக்கியே சென்றன.  பெரும்பாலானவர்களின் விரலிடுக்குகளில் சிகரெட். அவர்களின் கண்கள் இலேசாகச் சிவந்து இருப்பது அதிர்ச்சியளித்தது.  சிலர் பான்மசாலா பாக்கெட்களைத் திறந்து பகிர்ந்து கொண்டனர்.  பார்வைக்கு எங்குமே தென்படாத அப்பொருள்களைக் கடைக்காரர் மறைவாக வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து எடுத்துக்கொடுப்பதும் இன்றுதான் அவர் கண்களில் பட்டது.  அதிர்ச்சியுடனே சாப்பிட்டதற்கான தொகையைக் கடைக்காரரிடம் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

    *******

    வீட்டிற்கு வந்ததும் உடைமாற்றி, கைகால்களை அலம்பிக்கொண்டு, முன்அறையில் ஷோபாவில் உட்கார்ந்தார்.  தொலைக்காட்சியை இயக்கினார்.  போதைப் பொருட்களுக்கு எதிரான அரசின் விளம்பரம் ஓடியது.  ஆத்திரத்துடன் தொலைக்காட்சியை அமர்த்தினார்.  அவரது அறைக்குள் வந்த மனைவி,

    “டீ குடிக்கிறீங்களா? கொண்டு வாரேன்”

    “வேண்டாம், வரும்போது கடையிலேயே குடிச்சிட்டேன்.  நீ குடிச்சியா….. பையன் எங்க”?

    “புதுசா கேக்குறீங்க பையன பற்றி….. வளந்திட்டானுல…. முன்னால போல இல்லனு  தோணுது….. ”

    “என்னாச்சு”

    “உங்களுக்கு எப்போதும் ஆபீஸ் ஆபீஸ்னு,  நானும் வீட்டுப்வேலைய பார்த்திட்டு டெய்லரிங் ஒர்க் பார்க்கிறதால சோர்ந்து போயிடுறேன்”.

    “என்ன சொல்லவர்ற….. ஒழுங்கா சொல்லு… ”

    “எப்பொழுதும் போல லேப்டாப் ஓப்பன் பண்ணி ஆபீஸ் ஒர்க்க பார்க்க வேண்டியதுதானே, புதுசா என்ன கேள்வி”?

    “திட்டுறியா? அல்லது கோபிச்சுக்கிறியா”?

    “ஒங்கள திட்டமுடியுமா? அல்லது  உங்ககிட்ட கோபிச்சுக்கத்தான் முடியுமா”?

    “நிறுத்து  … நேரடியா விசயத்த சொல்லு…” அவள் கதிரின் அருகில் வந்து அமர்ந்தாள்.

    கண்கள் கலங்கின.. “அவனுக்குப்  படிப்புல கவனம் குறைஞ்சமாதிரி தெரியுது… ஆறாம் வகுப்பு வந்தாச்சு.  அதுக்கு ஏத்த பொறுப்பும் இல்ல… ஒழுங்கா சாப்பிடறதும் இல்ல…. வந்ததுமே கதவ சாத்திகிட்டு தூங்கிடுறான்.  கேட்டா சோர்வா இருக்குங்கிறான்..”

    “சரி சின்னப் பையன்தான.. நான் பாக்குறேன்.. சாப்பிட்டானா? ”

    “ஸ்கூல்ல இருந்து வந்த உடனேயே பசிக்கிதுன்னான்.. யூனிஃபார்ம் கூட மாத்தல… கிச்சனுக்குப் போயி நாலு பிரட்ட எடுத்து ஜாம் தடவி சாப்பிட்டுட்டு படுக்கப் போயிட்டான்… ”

    “படிக்க சொன்னியா? ”

    “ஸ்கூல்லயே படிச்சிட்டானாம். போன வருசம்னா நீங்க ஆபீஸ் போகும்போது அவன ஸ்கூல்ல விட்டுட்டு போவீங்க.. இப்போ ஸ்கூல் வேன்ல அனுப்புறோம்.  ஆறே முக்காலுக்கே வேன் வந்திருது.  காலையிலேயும் அவன் ரெடியாகி வேனுக்குப் போறதுக்குதான் நேரம் சரியா இருக்கு…. ”

    “காலையில நான்கு மணிக்கு எழுந்திரிக்கணும்.. எழுந்திரிக்க வைக்கணும்”.

    “சரிதான்.. அவன் குழந்தைங்க….. பத்துவயசுதான ஆகுது.  இருந்தாலும் ஹோம்வொர்க் இருந்தா காலையிலேயே எழுந்திருச்சி பண்ணிடுறான்.. ”

    “ம்….. கவனிக்கிறேன்”   என்றபடி மகனின் அறைக் கதவைத் திறந்தார்.  மனைவியும் உடன் வந்தாள்.  கட்டில் அருகில் புத்தகப்பை திறந்த நிலையில் இருந்தது.  கட்டிலில் படுத்திருந்த முருகன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான்.   அவள்,

    “பாத்தீங்களா  யூனிஃபாம்ம மாத்திட்டு படுன்னு சொன்னா…. சட்டய கழற்றவே இல்ல… நிக்கர மட்டும் கழற்றியிருக்கான், அதையும் கட்டில்லேயே போட்டிருக்கான்.  பீரோக்குள்ள எவ்வளவு துணி இருக்கு, நீங்களாவது ஒண்ண எடுத்து போட்டுவிடுங்க..  எனக்கு டெய்லரிங் ஒர்க் இருக்கு… வர்ரேன்…” என்றபடி சென்றுவிட்டாள்.

    கதிர் கட்டிலில் சரிந்து  படுத்திருந்த மகனைத் தூக்கி நேராகப் படுக்கவைத்தார்.  தினமும் காலையில் மட்டுமே, அதுவும் புறப்படும் போக்கில் மகனைப் பார்ப்பதோடு சரி.  அவனோடு அமர்ந்து பேசி பல மாதங்கள் இருக்கும் போல் தோன்றியது.  கட்டிலில் கிடந்த சீருடை கால்சட்டையையே போட்டு விடுவோம் என்று அதை எடுக்க முயன்றார்.  அதன் ஒரு பாக்கெட் பகுதி மகனின் ஒரு கைப்பிடிக்குள் இருந்தது.  விரல்களைப் பிரித்து எடுத்தார்.  கால்சட்டையில் மாட்டியிருந்த பெல்ட்டை கூட கழற்றாமல் விட்டிருந்ததைப் பார்த்து வெறுப்பானார்.  பெல்ட்டை நீக்கி அருகில் இருந்த மேசையில் வைத்தார்.  கால்சட்டையை மாட்டிவிடுவதற்காக உதறினார்.  அதன் பாக்கெட்டிலிருந்து பான்மசாலா பாக்கெட் வெளியில் விழுந்தது.  அதைக் கையில் எடுத்தப்படியே அதிர்ச்சியில் கட்டிலில் அமர்ந்தார்….

    தலை சுற்றியது.   நம்ம குழந்த, ஆறாவது படிக்குற பையன் பாக்கெட்ல….. அவரால் ஜீரணிக்க முடியவில்லை… ஆழ்ந்து தூங்கும் பையனைப் பார்த்தபடியே இருந்தார்….

    அறைக்குள்ளே வந்த அவர் மனைவி,  “எவ்வளவு நேரமா மகனையே பார்த்திட்டு இருப்பீங்க…  நிக்கர போட்டுவிட்டுட்டு வராம, உங்க அழகுராசாவ ரசிச்சிட்டே இருக்கீங்க போலருக்கு…. பாசம் பொங்குது…. ”

    எதுவும் பேசாமல் போர்வையைப் போர்த்திவிட்டுவிட்டு கால்சட்டையைப் பான்மசாலா பாக்கெட்டோடு கையில் எடுத்தபடி எழுந்திருந்தார்….

    மீண்டும் அவர் மனைவி, “சரி சின்னபையன்தான… படுத்துகிடட்டும்,  நிக்கர அழுக்குத் துணிகள போடுற கூடையில போட்டிருங்க…. ”

    “இவனா சின்னப்பையன்…..” என்று தொடங்கியவர் சட்டென்று நிறுத்திக் கொண்டார்.  தனது அதிர்ச்சியையும், பதட்டத்தையும் மனைவிக்குக் கடத்தவேண்டாம்.  மெதுவாகச் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்தபடி அங்கிருந்து நகர்ந்தார்..

    “நீங்க அவன்கூட நேரம் செலவு பண்ணினாதான…. வேகமா வளர்ந்திட்டான்…  அவன் வளர்ந்திருக்கிறதயே  இண்ணைக்குத்தான் பாக்கிறதுபோல சின்னபையனாங்கிறீங்க…..  ம்   ஆனா எண்ணைக்கும் அவன் நமக்குக் குழந்தைதாங்க”  என்றபடி நகர்ந்தாள்.

    எதையும் அவர் உள்வாங்கும் மனநிலையில் இல்லை.. அதிர்ச்சியில் இருந்து மீளமுடியவில்லை.  கடும் ஆபத்தான நிலையில் நிற்பதைப் போல தோன்றியது.  பான்மசாலா பாக்கெட்டை மறைத்து வைத்துவிட்டு, கால்சட்டையை அழுக்குத்துணிகள் போடும் கூடையில் போட்டுவிட்டு திரும்பும்போது,

    “சாப்பாடு ரெடி, சாப்பிடலாம்  வாங்க… ” என்றாள்.  வலி  நிறைந்த உள்ளத்தோடு பின்னால் சென்றார்.

    *******

    மறுநாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கதிர் எழுந்துவிட்டார்.  மனைவி   “இண்ணைக்கு லீவுதான…. கொஞ்ச நேரம் படுங்க… ”   என்றாள்

    “நீ ரெஸ்ட் எடு… நான் உறுப்பினரா இருக்கிற பன்னாட்டு நண்பர்கள் சங்கம் சார்பா, நகராட்சி பூங்காவ கிளீன் பண்றோம்… ஆறு மணிக்கு ஆரம்பிக்கிறோம்…  அப்போதான் வாக்கிங் வர்ரவங்ககிட்டேயும் விழிப்புணர்வ ஏற்படுத்தமுடியும், அங்கேயே டிபன் சாப்பிட்டிடுவேன்.  உங்க இரண்டுபேருக்கு மட்டும் சமைச்சுக்கோ… ” என்றபடி தயாராகத் தொடங்கினார்.

    மகன் படுத்திருந்த அறையை எட்டிப் பார்த்தார்… இன்னும் தூங்கிக்கொண்டிருந்தான்.. மனதுக்குள் இருந்த அதிர்ச்சி, கோபமாக மாறியிருந்தது.  அவனை எழுப்பி ஏண்டா.. எனக்கேட்டு ஓங்கி அறையலாம் போல் இருந்தது.

    அடக்கிக் கொண்டார்… தயாரானதும் மனைவியிடம்,  “கதவ உள்பக்கமாகப் பூட்டிக்கோ… நான் கிளம்புறேன்…” என்றபடி பதில் எதிர்பாராமல் வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினார்.

    பூங்கா அருகில் செல்லும்போதே நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் இருந்தது புலப்பட்டது..  வண்டியை நிறுத்திவிட்டு வேகமாகச் சென்றார்.  வா வா என நண்பர்கள் அழைத்தனர்.  விழிப்புணர்வு நிகழ்வுக்கான பதாகையை இருவர் விரித்துப் பிடித்தனர்.   அதன் பின்னால் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் புகைப்படத்திற்காக நிற்க தொடங்கினர்.  இவரும் சேர்ந்து கொண்டார்.  அருகில் தூய்மைப்படுத்துவதற்கான உபகரணங்கள் இருந்தன.  புகைப்பட நிகழ்வு முடிந்ததும் தன்னார்வலர்கள் உபகரணங்களை எடுத்துக்கொண்டு தூய்மைப் பணியில் இறங்கினர். சிலர் அங்கு வந்து செல்பவர்களிடம் விழிப்புணர்வுக்கான துண்டு பிரசுரங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.  எதிலும் மனம் லயிக்காததால் பூங்காவினுள் கட்டப்பட்டிருந்த சிமெண்ட் இருக்கையில் அமர்ந்தார்.  சில நிமிடங்களில் அருகில் இருந்த இருக்கையில், நடைபயிற்சியை முடித்த இரண்டு கல்லூரி மாணவர்கள் வந்தமர்ந்தனர்.  ஒருவன் சட்டைப்பையில் இருந்து பான்மசாலா பாக்கெட்டை எடுத்து சிறிது கையில் கொட்டினான்.  இது கண்ணில் பட்டதும் கதிர்க்குப் படபடப்பு அதிகமாயிற்று.  அதற்கிடையில் ஒருமாணவன்,

    “ஏண்டா இப்படி போதைக்கு அடிக்ட் ஆயிட்டே…. விட முயற்சி பண்ணுடா…. ”

    “ஸ்கூல்ல வைச்சே பழகினதுடா….. விட முடியல…. என்றபடி பான்மசாலாவை வாயினுள் வைத்தான்…. ”

    “வீட்ல கண்டுபிடிக்கலயா?  …… ”

    “எங்கப்பா எப்போதும் ஆபீஸ், ஆபீஸ்னு ஆபீஸ் வொர்க்கிலேயே இருப்பார்… லீவு நாளுனா இதோ சர்வீஸ்ங்கற  பேர்ல பன்னாட்டு நண்பர்கள் சங்கம் பண்றாங்களே…. இதேபோல போயிடுவாரு…… “வீட்ட எங்க கவனிச்சாரு…. அவருக்கு வீட்டையும் ஆபீசையும் பேலன்ஸ் பண்ணத் தெரியலடா… ”

     “சோசியல் சர்வீசும் தேவதானடா….. இதோ பாரு சிறப்பா… பண்றாங்களேடா…..”

    “தெரியலடா உனக்கு… சர்வீஸ் நூறு ரூபாய்க்குப் பண்ணுனா ஆயிரம் ரூபாய்க்கு விளம்பரம், அவங்களுக்கான சாப்பாடுனு செலவு பண்ணுவாங்கடா….”

    “கொஞ்சமாவது நல்லது நடக்குதா இல்லையா? …. ”

    “டேய் முதல்ல… அவங்கவங்க வீட்ட ஒழுங்கா கவனிக்காங்களான்னு பார்த்தா உனக்குப் புரியும்…. ஒவ்வொரு வீடும் நல்லபடியா இருந்தாலே சமுதாயம் நல்லாயிடும்டா…. மாற்றம், சர்வீஸெல்லம் ஒவ்வொரு வீட்ல இருந்தும் வரணும்டா…. அங்கிருந்தே தொடங்கணும்டா….. ”

    “நீ போதைக்கு அடிமையானதுல ஒங்க அப்பாவுக்குப் பங்கு இருக்குங்கிறியா?….. ”

    “கண்டிப்பா….. ஊருக்கும், நாட்டுக்கும் உண்மையிலேயே நல்லது  செய்றதுன்னா வீட்ல உள்ள குழந்தைகள நல்ல தலைமுறையா உருவாக்குறதுதான்.  வீட்ல எங்ககூட நேரம் செலவுபண்ணி கவனிச்சிருக்க வேண்டாமா?  எங்க மாற்றத்த கண்டுபிடிச்சி திருத்துறத விட்டுட்டு…. சொல்வாங்களே  கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானத்த கிழிச்சிட்டு வைகுண்டம் போக ஆசப்பட்ட கதைன்னு…..  அது போலத்தான் இவங்க சேவையெல்லாம்”.

    “உனக்கே நல்லா தெரியுதேடா…..  இது கெட்டதுணு விட்டுட வேண்டியதுதானே….”

    “இப்போ முத்திப்போச்சுடா….. ஸ்கூல்ல படிக்கும்போது திருந்தியிருந்தா  ஈசியா இருந்திருக்கும்…..”

    “கண்டிப்ப மட்டுமே காட்டுற அப்பாவுக்கு எங்கிட்ட அன்பா, அரவணைப்பா நடந்துக்ற,  புரிஞ்சிக்கிற பக்குவம் இல்ல…. என்னாலயும் அவங்க ஓடுற ஓட்டத்துல டிராவல் பண்ண முடியல…. பிடிக்காம ஒதுங்கி ஒதுங்கி போனதுலதான் இப்படி மாட்டிக்கிட்டேன்டா….”

    “அதுக்காக சர்வீஸ் பண்றதையும், சோசியல் கான்ட்றிபூயூசனையும்  குறை சொல்லலாமா”?

    “சரியான இடத்துல போடுற உழைப்புத்தான் பயன்தரும்.  அதேபோல நுனிமரத்துல இருந்திட்டு அடிமரத்த வெட்டுறது போலத்தான். குடும்பத்த பார்க்காம, சமுதாயத்த திருத்த வருவதும், அடுத்த எலக்சன பற்றி மட்டுமே, அதுதான் அடுத்த தேர்தல்ல வெற்றி பெறுவத மட்டுமே முதன்மையா நினைக்கிறவங்க ஆட்சிக்கு வந்தா இப்படித்தான்…. அவங்ககிட்ட அடுத்த தலைமுறைய பற்றி நினைக்குற எண்ணம் எப்படி இருக்கும்…. அவங்க எப்படி போதையில்லாத சமுதாயம் உருவாகவும், இளைய சமுதாயம் இப்படி அடிமையாகாம இருக்கவும், பாடுபட போறாங்க…. எப்படி போதைய ஒழிக்க போறாங்க?   வாய்ப்பில்ல…. அதுவர பெற்றோர்களுக்குத்தான் அந்தபொறுப்பு…  வீட்ட பாத்திட்டு அப்புறமா பொதுவெளிக்கு வரலாம்…. நல்லா புரிஞ்சுக்கோ ஒவ்வொரு வீடும் நல்லா இருந்தா நாடுதானா நல்லாயிடும்….”

    அவர்களின் உரையாடல் தொடர்ந்தது கொண்டிருந்தது. மாணவர்களின் பேச்சு கதிரின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது.  எழுந்தார் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம், வீட்டிற்கு அவசரமாகச் செல்ல வேண்டியிருப்பதாகச் சொல்லிவிட்டு புறப்பட்டார். ஒவ்வொரு வீடும் நல்லாயிருந்தா நாடும் நல்லாயிருக்கும்ங்குற  மாணவனின் வாசகம் மனதுக்குள் மீண்டும் மீண்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது….

    *******

    வீட்டின் முன் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார் கதிர்.  ஷோபாவில் அமர்ந்து காப்பி அருந்திக் கொண்டிருந்த மனைவி கதிரைப் பார்த்ததும்,  “ஏன்ன உடனே வந்திட்டீங்க….. ”

    “ஆமா… அங்க ஒர்க் ஆரம்பிச்சாச்சி, நம்ம காம்பௌண்ட்டுக்குள்ள, வீட்டைச் சுற்றி இருக்கிற தோட்டத்தைச் சுத்தப்படுத்தலாம்னு தோணுச்சு… அதான் வந்துட்டேன்… பையன் எழுந்திருச்சிட்டானா? ”

    “லீவுதான தூங்கட்டும்னு தான் விட்டுட்டேன்…. “சாப்பிட்டுவிட்டு வந்திடுவேன்னு சொன்னீங்களே…. ”

    “இல்ல நாம மூணுபோரும் சேர்ந்தே வீட்ல சாப்பிடலாம்னுதான்……”

    “சந்தோசம்…. பஸ்ட் நீங்க ஒரு கப் காப்பி குடிங்க…. எடுத்திட்டுவாறேன்…. அப்புறம் டிபனுக்கு என்ன பண்ணலாம்னு பார்ப்போம்…. ”

    “ஓங்கையால எதசெய்தாலும் அது தேவாமிர்தம் போலத்தான் இருக்கும்…..”

    “போலத்தான் இருக்கும்னா…. தேவாமிர்தமா இருக்காது….”

    “அய்யய்யோ என்ன விட்டுடு” என்றபடி தோட்டத்தைச் சீர்செய்ய அரிவாள், மண்வெட்டி, துடைப்பம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வெளியே வந்தார் கதிர்.

    “சமையல முடிச்சிட்டு நானும் ஜாயின் பண்ணிக்கிறேன்….” என்றபடி சமையல்கட்டினுள் நுழைந்தாள்.

    கதிர் தோட்டத்தைப் பார்த்தார்.  மலர்ந்த பூக்கள் உதிர்ந்து கிடந்தன….  அம்மலர்களின் ஊடே முதிர் இலைகளும் விழுந்து கிடந்தன.  செடிகளில் ஒழுங்காக வெட்டபடாத  கிளைகள் வெளிநீட்டிக் கொண்டிருந்தன.  குறு மரங்களில் காய்ந்த கிளைகள் இருந்தன.   தரையில்  தண்ணீர் சென்று வரும் கால்வாயும், மணல் பாத்தியும் சிதைந்து போயிருந்தன.  அங்கிருந்த செடிகளிலும், மரங்களிலும் இலைகள் அசைவது நின்றன.  காற்றடிக்கவில்லை மழை வருவதற்கு முந்தைய புழுக்கம் பரவிஇருந்தது.  விதவிதமான செடிகளும், பூக்களும் பச்சைப் போர்வையாக வரவேற்கையில் புழுக்கம்  பெரிதாகப்படவில்லை.

    தோட்டத்தின் உயிர்ப்பை மேலும் அழகாக்க கதிர் களத்தில் இறங்கினார்.  முதலில் களைச்செடிபோல வளர்ந்திருந்த புல்களை அப்புறப்படுத்தி ஒருமுனையில் குவித்துவைத்தார்.  ஊடுகிளைகளையும் கத்தரித்தார்.  தரையில் கிடந்த உதிர்ந்த பூக்களையும், இலைதழைகளையும் பெருக்கி ஒன்றாகச் சேர்த்து வைத்து அழுத்தினார்.

    உடைந்திருந்த இரண்டு தொட்டிகள், பிற குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டு, தூய்மை செய்வதற்குப்பயன்பட்ட கருவிகளைச் தண்ணீர் விட்டு சுத்தம் செய்தார்.  அப்போது அங்கு குப்பைக்கூடையுடன் வந்த அவரது மனைவி, “வீட்ட சுத்தமா பெருக்கியாச்சி, கூடையில இருக்கிற குப்பைய காம்பவுண்டுக்குள்ள தூரமா போட்டு எரிக்கப்போறேன்.  நீங்க சேத்து வைச்சிருக்கிற வேஸ்ட்டையும் அதுல போட்டு எரிச்சிடவா?

    “நல்லது அப்படியே செய்….. ”

    “இப்பத்தான் தோட்டம் தோட்டம்போல இருக்கு….. உங்க கைவண்ணத்துல தோட்டமே அருமையா மாறிட்டுது… ”

    “சரி சரி நான் குளிச்சிட்டு வந்திடுறேன்…. ”

    குளித்துவிட்டு, புதிய உடைகளை மாற்றிய கதிர் முன்னறையில் ஷோபாவில் உட்கார்ந்தார். கையில் காப்பியோடு வந்த கதிரின் மனைவி… அதை அவரிடம் கொடுத்துவிட்டு, “குடிங்க…. சீக்கிரமா டிபன் ரெடியாயிரும்….” என்றபடி அருகில் உட்கார்ந்தாள்.

    “பையன் என்ன பண்றான்… எழுந்திரிச்சிட்டானா? ”

    “ம்….. இப்பதான் பிரஸ்.. பேஸ்ட் எடுத்திட்டு பாத்ரூம் போயிருக்கான்… ”

    “அவனபற்றித்தான் கவலையா இருக்கு… வர்ற திங்கள்கிழமையில இருந்து நான் ஆபீஸ் போகும்போது நானே ஸ்கூல்ல கொண்டு விட்டுட்டு வந்திடுறேன்… 8.45 மணிக்கு கிளம்பினா போதும்…. ஈவினிங் மட்டும் நீ  ஸ்கூல்ல இருந்து உன் ஸ்கூட்டரில் கூட்டிட்டு வந்திர முடியுமா”?

    “ஓ.கே. நல்ல ஐடியாதான்… நமக்கு வேன் ஃபீஸ் மிச்சம்.   அதவிட படிக்கிறதுக்கு டைம் கிடைக்கும்.. ”

    “நான் அவங்க கிளாஸ் டீச்சர்கிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுறேன்…  வரும் வாரத்தில் இருந்து வேன் வேண்டாம்னு சொல்லிடுறேன்”.

    “காலையில இரண்டு மணிநேரம் பையனுக்கு மட்டுமல்ல நமக்கும் கிடைக்குது… ”

    “ஆமா… இன்னொரு சர்ப்பிரஸ்”

    “வீட்டச்சுத்தி கிலின் பண்ணியிருக்கீங்களே அதுவே சர்ப்பிரைஸ்தான்.. ”

    “ம்….. இண்ணைக்கு டிபன் சாப்பிட்டதும் நாம மூணுபேரும் வெளியூருக்கு….. புரியல…. பிக்னிக் போறோம்…. ”

    “என்ன திடீர்னு….. எந்த ஊருக்கு”?

    “அத நாம மூணுபேரும் டிபன் சாப்பிடும்போது பேசி முடிவெடுப்போம்…உங்க ரெண்டு பேரோட முடிவுத்தான் என்னோட முடிவு… ஒருநாள் மட்டும் வெளியே தங்குறமாதிரி பிளான் பண்ணலாம்… ”

    “உங்க பையன் இதகேட்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க போறான்…. குக்கர் விசில் வர சத்தம் கேட்குது… டிபன் ரெடியாயிடுச்சி… நான் வெளியே கூட்டி வைச்சிருக்கிற குப்பைகளைக் கொளுத்திவிட்டிறேன்… நீங்க சிரமத்தப்பாக்காம உங்க பையன ரெடி பண்ணுங்க… இந்த செய்தி தெரிஞ்சா அவனாவே ரெடியாயிருவான்…. ”

    குளியலறையில் இருந்து வெளியேவந்த முருகன், “ரெடியாயிக்றேன்…” உடனே….. அப்படினா தனியா சொல்ல வேண்டியதில்ல…….ஃபுல்லா கேட்டியா….” என்றார் கதிர்.

    “நீங்களே ஸ்கூல்ல கொண்டு விடப்போறதுல இருந்து எல்லாத்தையும் கேட்டேன்… ஐயம் ரியலி ஹேப்பி அப்பா…. ” என்றபடி அப்பாவைக் கட்டிக் கொண்டான்…  கதிரும் அணைத்துக் கொண்டார்.  ஆனால் முகம் மன அழுத்தத்தோடு காட்சியளித்தது.  அன்பாலும், அரவணைப்பாலும் முருகனை மாற்றிவிட வேண்டுமே என்னும் உணர்வு மனதுக்குள் கவலையாய் பரவியிருந்தது.

    “பையனைக் கொஞ்சுறது இருக்கட்டும்… குளிச்சிட்டு, நான் புதுசா தைத்த சட்டையும், நிக்கரும் மேசையில இருக்கு…. போடச் சொல்லுங்க… நேற்று போட்ட யூனிஃபாம் சட்டையிலேயே மகாராசா நிக்கிறாரு…. ” என்றபடி அம்மா எழுந்திருந்து தோட்டத்திற்குச் சென்றாள்.

    கதிரின் அணைப்பில் இருந்து சட்டென விலகி படுக்கையறை நோக்கி ஓடினான் முருகன்.

    “என்னாச்சுடா….” என்றார் கதிர்.

    “இல்லப்பா என் யூனிஃபார்ம் நிக்கர்…. எங்கப்பா..” என்றபடி கட்டில் முழுவதும் தேடினான். போர்வையை எடுத்து உதறினான், கட்டிலின் அடியில் குனிந்து பார்த்தான்.

    “அழுக்குத் துணியெல்லாம் போடுற கூடையில போயி பாரு… அங்க கிடக்கு”  என்றதும் வேகமாகச் சென்றான்… கூடையை நோக்கி…. கூடையின் மேலேயே கிடந்தது நிக்கர்.

    எடுத்து அதன் பாக்கெட்டுக்குள் கைவிட்டுத் தேடினான். மறு பாக்கெட்டுக்குள்ளும் தேடினான்.  எதுவும் இல்லை. உடலெல்லாம் குப்பென வியர்த்தது. தந்தையைப் பார்த்தான். அவர் கையில் இருந்த அலைபேசியை இயக்கி ஏதோ செய்துக் கொண்டிருந்தார். உண்மையில் அவன் செய்கைகளைத்தான் அவன் அறியாமல் கவனித்துக் கொண்டிருந்தார் கதிர்.  அவன் எதை தேடுகிறான் என்பதையும் அறிந்தே மவுனம் காத்தார்.

    அவன் அழுக்குத்துணிகள் இருந்த கூடைக்குள் கைகளைவிட்டு துழாவினான்.  கூடை மூடியை ஒரு கையால் தன்னோடு அணைத்துக் கொண்டு கூடையைச் சரித்து, துணிகளைத் தனித்தனியே பிரித்து சோதித்தான்.  அவன் தேடியது கிடைக்கவில்லை. கூடையில் இருந்த தூசு வியர்வை ஈரத்தில் நனைந்திருந்த சட்டையில் ஆங்காங்கே ஒட்டிக் கறையாகத் தெரிந்தது.

    “கதிர் மகனிடம், எத தேடுற இவ்வளவு பதட்டமா”?

    “இல்லப்பா ஒரு முக்கியமான….. பேப்பரூ…. நிக்கர் பாக்கெட்டுக்குள்ள…. இருந்துது…. கா ….. ண்….ல….. ”  என தடுமாறியபடியே சொன்னான்.

    “வீட்டுக்குள்ள வேறுயாருவரப்போறா….. மூணு பேர்தான் இருக்கோம்….  ஒழுங்கா தேடுனா கிடைக்கும்… ” இன்னும் அதிகமாக வியர்த்தது முருகனுக்கு. மீண்டும் படுக்கையறைக்குச் சென்று தரையில் படுத்தபடி உன்னிப்பாகக் கட்டிலுக்கு அடியில் பார்த்தான். அதற்கிடையில் மறைத்து வைத்திருந்த பான்மசாலா பாக்கெட்டை கதிர் எடுத்தபடி வெளியே தோட்டத்திற்குள் வந்தார். அவர் மனைவி பெரும்பாலான குப்பைகளைக் கூட்டி வைத்து தீயிட்டுக்கொண்டிருந்தாள். அது எரிய ஆரம்பித்திருந்தது.  “நான் குளிச்சிட்டு வந்திடுறேன்”  என்றபடி அவள் வீட்டிற்குள் நுழைந்தாள்.  கதிர் பான்மசாலா பாக்கெட்டை நெருப்பில் போட்டார். வீட்டிற்குள் வந்தார். ஷோபாவில் அமர்ந்தபடி சன்னல் வழியே எரியும் குப்பையைப் பார்த்துக் கொண்டிருந்தார்.  முருகனைப் பார்த்த அம்மா, “என்னடா இப்படி நிக்குற…. படபடப்பும், பரபரப்புமா….. ”

    “இல்லம்மா…. ஒரு…. பேப்பர காணல….. ”

    “எப்பவும் பரபரப்பா இருக்கிற உங்க அப்பாவே அமைதியாயிருக்காரு … எவ்வளவு பெரிய மாற்றம் நமக்கு அனுசரணயா வேற…. எம் மனசும் அமைதியாயிருச்சி….. “டேய் ஏண்டா…. சட்டைய எல்லாம் ஈரமாக்கி அழுக்காக்கி…… துவைச்சா போகுமாடா ….  முதல்ல கழட்டுடா”  என்றபடி அருகில் சென்று சட்டையைக் கழற்றி கூடையில போட்டாள் அமைதியாக நின்றான் முருகன்.

    “முதல்ல போய் குளிச்சிட்டு வாடா…. அப்புறமா அப்பாவும் பிள்ளையுமா தேடலாம்…. ”என்றபடி  உள்ளறைக்குள் சென்றாள்.

    கதிர், “இப்போதான் பெருக்குன குப்பையெல்லாம் தோட்டத்து சருகுகளோடு சேர்த்து  கொளுத்திவிட்டுருக்கா உங்கம்மா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே தோட்டத்திற்கு ஓடினான்.

    நெருப்பினுள் பாதி எரிந்த நிலையில் பான்மசாலா பாக்கெட் தெரிந்தது. குளிர்ந்த காற்று வேகமாக அடிக்கத் தொடங்கியிருந்தது.  அதில் நெருப்பு அணைவதும், பற்றுவதுமாக இருந்தது.  குனிந்து கையால் பாக்கெட்டை நெருப்பினுள் தள்ளிவிட்டான்.  காற்றடிப்பதால் விழுந்து கொண்டிருந்த சருகுகளையும், சரியாகக் கூட்டிப் பெருக்காமல்விட்ட காகிதக் குப்பை போன்றவற்றையும் வேகமாகப் பொறுக்கி எடுத்து எரியும் நெருப்பில் போட்டபடி இருந்தான் முருகன்.

    அனைத்தையும் சன்னல் வழியே கதிர்பார்த்துக்கொண்டிருந்தார்.  தோட்டம் முழுவதும் அங்கும் இங்கும் ஓடி அனைத்து குப்பைகளையும் சேகரித்து நெருப்பில் போட்டுக்கொண்டிருந்தான். வீதியில் செல்வோர், வருவோர் யாரும் முருகன் கண்ணிற்குத் தெரிவது போல் இல்லை. குப்பைகள் எரிவதிலேயே கவனமாக இருந்தான்.  அதே தெருவில் இரண்டு வீடுகள் தாண்டி அவனுடன் வகுப்பில் படிக்கும் இராமனின் வீடு இருந்தது.  இராமனின் தாத்தா தெருவழியாகச் செல்லும் போது, “முருகன் காலையிலேயே கிளீனிங் ஒர்க்கா”?  என்றபடி சென்றார்.  எதுவும் காதில் விழவில்லை.  குப்பைகள் முழுவதுமாக எரிந்து தணிந்தது.  முருகனின் படபடப்பும் தணிந்திருந்தது.  அப்பொழுது காம்பௌண்ட் வாசல் பக்கத்தில் குப்பைக் கூடையோடு சென்று கொண்டிருந்த இராமன்,  “முருகா”  என்றான்.  அப்பொழுதுதான் இயல்பான முருகன் வாசல்பக்கம் சென்றான்.  மழையும் மெதுவாகத் தூற தொடங்கிற்று.

    “எப்போ நல்லவனா மாறின….. எங்க தாத்தா உன்ன புகழ்ந்து சொன்னதோட, குப்பைக் கூடையைக் கொடுத்து தெருமூலையில இருக்கிற தொட்டியில கொட்டிட்டு வரச்சொல்லிட்டாரு.  சரி குளுந்த காற்று அடிக்குதே இப்படி நிக்குற….” என்றபடி சிரித்தான்.  மழை திடீரென வேகமெடுத்து பெய்யத்தொடங்கியது.  முருகன் வெட்கம் மேலிட   “குளிக்கப்போறேண்டா”   என்றபடி வீட்டை நோக்கித் திரும்பினான்.  இராமன்  “வாறேண்டா”  என்றபடி ஓடினான்.

    முருகன் மழையில் நனைந்தபடி தோட்டத்தைப் பார்த்தான்.  குப்பைகள் நீங்கி சுத்தமாக இருந்தது.   மழையின் குளிரைவிட   எப்போ நல்லவனா மாறின    என்ற இராமனின் வாசகம் இதயத்தைக் குளிர்வித்தது.  குழந்தை மனது மேலிட, வீட்டு மாடியிலிருந்து குற்றால அருவிபோல விழும் மழைநீரில் குளிக்க தொடங்கினான்.

    குளித்து, உடைமாற்றிவிட்டு வந்த முருகனின் தாயார் கதிரிடம்,  “பையன கவனிச்சிங்களா…..  எங்க? ”

    “வெளியில  பாரு…… ”

    இருவரும் வாசலுக்கு வந்தனர்…..

    “ஷவர் குளியலைவிட அருமையா இருக்கு…. சோப் குடுக்கிறீங்களா….” என்றான் முருகன்… “சீக்கிரமா குளி…. அம்மா புது டிரஸ்…..  வைத்திருக்கிறா… டிபன் சாப்பிட்டுட்டு பிக்னிக்குக்கு பிளாள் பண்ணனும்… ” என்றார் கதிர்.

    மழையில் புழுதியெல்லாம் அடங்கிபோயிருந்தது.  மழையின் வாசத்தோடு இளம் தளிர்களும், பூக்களும் காற்றில் வாசம் பரப்பின……

    *******

    Share
  • கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் – 16

    சக்தி சக்திதாசன்

    கண்ணதாசன் பாடல்களில் ஆன்மீகம் எனும் பார்வையில் இன்று பார்க்கப்போகும் பாடல்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே…

    பருவம் என்னும் காற்றிலே..
    பறக்கும் காதல் தேரிலே
    ஆணும் பெண்ணும் மகிழ்வா..ர்
    சுகம் பெறுவா..ர்
    அதிசயம் காண்பார்
    நாளை உலகின் பாதையை இன்றே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே..
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
    வடிவம் மட்டும் வாழ்வதே..ன
    இளமை மீண்டும் வருமா..
    மணம் பெறுமா..
    முதுமை..யே சுகமா…
    காலம் போகும் பாதையை
    இங்கே யார் காணுவார்

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலேஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    சூறை காற்று மோதினா..ல்
    தோணி ஓட்டம் மேவு..மோ
    வாழ்வில் துன்பம் வரவு
    சுகம் செலவு இருப்பது கனவு..
    காலம் வகுத்த கணக்கை இங்கே
    யார் காணுவார்..

    ஆசையே அலை போலே
    நாமெல்லா..ம் அதன் மேலே
    ஓடம் போலே ஆடிடுவோமே
    வாழ்நாளிலே..

    கண்ணதாசன் பாடல்களில் ஆசை, வாழ்க்கை, காலம், இளமை, முதுமை போன்ற மனித வாழ்வின் அடிப்படை உண்மைகள் மிக எளிய உவமைகளில் வெளிப்படுகின்றன.

    “ஆசையே அலை போலே” என்ற பாடலில் அவர் ஆசையை அலைக்கு ஒப்பிட்டு, மனிதனை ஓடமாகக் காட்டுகிறார்.

    இது அலைபோல் அசையும் ஆசையின் நிலையற்ற தன்மை மற்றும் அதன் மீது மனிதன் வாழ்நாள் முழுவதும் ஆடிக்கொண்டிருக்கும் நிலையைக் காட்டுகிறது.

    இங்கு அவர் ஆன்மீக அறிவின் அடிப்படை உண்மையை ஆசை நிலையற்றது, வாழ்க்கை ஒரு பயணம் மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    இந்தப் பாடல் கண்ணதாசனின் தத்துவப்பாடல்களில் ஒன்று.

    வாழ்க்கையின் சுழற்சியை இளமை, காதல், முதுமை, துன்பம், சுகம், காலம் அனைத்தையும் ஆசையின் அலை என்ற மைய உவமையில் இணைத்து, மனிதன் வாழ்வின் பாதையை ஆராய்கிறார்.

    பாடல் சமூகப்பாடல் போலத் தோன்றினாலும், அதன் உள்ளே ஆன்மீக சிந்தனை ஆழமாகப் பதிந்துள்ளது.

    “ஆசையே அலை போலே… நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே”

    ஆசை என்பது அலை போல நிலையற்றது, எப்போதும் அசையும்.

    அதிலே மனிதனி ஓடம் போல ஆசையின் மீது ஆடிக்கொண்டிருப்பவன்.

    ஆன்மீகப் பொருளாக இதிலே வாழ்க்கை ஆசையின் அலைகளால் இயக்கப்படுகிறது.

    அதிலிருந்து விடுபடுதல் தான் உண்மையான சாந்தி என அழகாக எடுத்துரைக்கிறார்

    “பருவம் என்னும் காற்றிலே… பறக்கும் காதல் தேரிலே”

    இளமை என்றால் காற்றாகவும் காதல் என்பதை அது அசைக்கும் தேர் என்கிறார்.

    ஆணும், பெண்ண மகிழ்ச்சி, சுகம், அதிசயம் எனும் உணர்வுகளினூடாக காலத்தின் ஓட்டத்தோடு பயணிக்கிறார்கள்.

    ஆன்மீகப் பொருளாக இளமை, காதல், சுகம் அனைத்தும் தற்காலிகமமானவை அவை நிலையற்றவை என்று சிந்திக்க வைக்கிறார்.

    “வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதே”

    வாழ்க்கை அது காலத்தோடு தீர்ந்தத ஆனால் அங்கே உடல் வடிவம் மட்டும் வாழ்கிறது.

    இளமை அது மீண்டும் வராது அபடியாயின் முதுமை சுகமா? என்கிறார் கவியரசர்.

    ஆன்மீகப் பொருள் இங்கே உடல் நிலையற்றது எனவும் ஆன்மா மட்டுமே நிலைத்தது எனவும் வாழ்வின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.

    “சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ”

    வாழ்க்கை என்பதை தோணியாகவு
    ம் விதியை சூறை காற்று என்றும் கொண்டால் விளைவு துன்பமே !

    இந்நிலையில் சுகம் செலவுவாகவும் துன்பம் வரவாகவும் கொண்ட ஒரு வாழ்க்கை கணக்கின் தத்துவமாகத் தருகிறார்.

    ஆன்மீகப் பொருள் இங்கே துன்பம்–சுகம் இரண்டும் வாழ்க்கையின் இயல்பான இரு முகங்கள் அவற்றை சமமாக ஏற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

    கண்ணதாசன் சமூகப்பாடல்கள் மனித வாழ்வின் உண்மைகளை வெளிப்படுத்தும் போது, அவற்றில் ஆன்மீக அடுக்குகள் இயல்பாகவே கலந்து விடுகின்றன.

    ஆசை, காதல், சுகம், துன்பம் போன்ற சமூக அனுபவங்களை அவர் ஆன்மீக உவமைகளால் விளக்குகிறார்.

    “ஆசையே அலை போலே” பாடலில், ஆசை–அலை, மனிதன்–ஓடம், வாழ்க்கை–தோணி என்ற உவமைகள் சமூக அனுபவத்தையும் ஆன்மீக உண்மையையும் இணைக்கின்றன.

    இதன் மூலம் அவர் சமூகப் பாடல்களை ஆன்மீகப் பாடல்களாக மாற்றுகிறார், அதாவது வாழ்க்கை அனுபவம் என்பது ஆன்மீகப் பயணம் என்பதை உணர்த்துகிறார்.

    “ஆசையே அலை போலே” என்பது வெறும் சமூகப் பாடல் அல்ல.

    அது ஆசையின் நிலையற்ற தன்மை, வாழ்க்கையின் சுழற்சி, சுக–துன்ப சமநிலை, உடலின் நிலையற்ற தன்மை ஆகியவற்றை ஆன்மீகமாக வெளிப்படுத்தும் பாடல்.

    கண்ணதாசன் சமூகப்பாடல்களில் கூட ஆன்மீக அறிவை நுட்பமாக இணைத்து, மனிதனை சிந்திக்க வைக்கும் கவிஞராக திகழ்கிறார்.

    Share
  • நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    சைவத்தைத் தமிழைத்  தம்முயிராய் எண்ணி
    வையத்தில் பலரும் வந்தார்கள் தந்தார்கள்
    திருமுறைச் செல்வர்கள் அளவிலாத் தந்தார்கள்
    அவர்வழியைத் தொடர்ந்து வந்தார்கள் சிலபேர்கள்

    நாயன்மார் வழியைத் தடம்பற்றி நின்று
    நல்லைநகர் நாவலரும் நற்றடத்தைப் பதித்தார்
    நற்றமிழை அணைத்தார் நம்சைவம் காத்தார்
    கற்றபடி நடந்தார் கடவுளையே நினைத்தார்

    நீறணியும் குடும்பம் நேர்மையுடை குடும்பம்
    நாவலரின் குடும்பம் நல்லதொரு குடும்பம்
    சைவமொடு தமிழை தாங்கிவிடும் குடும்பம்
    சன்மார்கம் நிறைந்த நாவலரின் குடும்பம்

    தமிழோடு சைவம் தானவர்கள் சொத்து
    சைவத்தை அவர்கள் உயிராக நினைத்தார்
    நாவலரின் மனத்தில் பதிந்தநல் விதையாய்
    நம்சைவ மூன்றி வேர்விட்டு நின்றதே

    சைவத்தைக் காத்திட தனையீந்தார் நாவலர்
    சைவத்தைப் பரப்பிடத் தலமையினை ஏற்றார்
    சைவத்தைத் தடுப்பாரை தூக்கியே எறிந்தார்
    சைவத்தின் காவலனாய் தலைநிமிர்ந்து நின்றார்

    மாற்றுமத போதனையை மறுத்துரைத்து நின்றார்
    மாற்றுமதத் தலைமைகளை மண்கெளவச் செய்தார்
    சைவத்தின் மேன்மைகளை சகலருக்கும் சொன்னார்
    சன்மார்க்க வழிநடந்து சாதித்தார் நாவலரும்

    கற்பவைகள் கற்றார் கசடறவே கற்றார்
    மற்றவர் விளங்க மறுதலியா உரைத்தார்
    சொற்கள் சுவையாக சுள்ளென்று உறைக்க
    கருத்தோடு சொற்கள் கணக்கின்றிப் பெருகின

    நீறணிந்த நெற்றியுடன் நிமிர்ந்தநற் பார்வையுடன்
    நாவலரும் வந்தார் நம்சைவம் காத்தார்
    பாவலரும் பண்டிதரும் நாவலரைப் பார்த்து
    தேவார முதலிகளே வந்ததாய் நினைத்தார்

    ஐந்தாங் குரவராய் ஆக்கினார் நாவலரை
    அரன்நாமம் சொல்லியே நாவலரும் வாழ்ந்தார்
    அறமேந்தி வாழ்ந்தார் ஆன்மீகம் அணைத்தார்
    அன்னைத் தமிழுக்கு அரும்பணிகள் ஆற்றினார்

    இலக்கியத்தை இலக்கணத்தை ஏந்தினார் நாவலர்
    எழுத்துப் பிழையினை எதிரியாய் பார்த்தார்
    சொற்பிழை தவிர்த்தார் நற்றமிழ் விதைத்தார்
    தமிழன்னை சிறக்கவே தமிழ்த்தொண்டு செய்தார்

    கல்வியைக் கண்ணாய்க் கருதென்று மொழிந்தார்
    கற்பதற்கு வசதியாய் நூல்களை எழுதினார்
    பள்ளிகளை நிறுவினார் பாடநூல்கள் ஈந்தார்
    தெள்ளுதமிழ் உள்ளமெலாம் நிறைந்திடவே செய்தார்

    நாவலரின் வசனநடை நற்றமிழின் வரமாகும்
    வசனநடை  கைவந்த வல்லாளர் நாவலரே
    அவர்நடையை தமிழறிஞர் அனைவருமே போற்றுகிறார்
    போற்றுகின்ற நாவலரை ஏற்றியே வாழ்த்திடுவோம்

    ஈழத்தில் சைவம் எழுந்தோங்கி நிற்பதற்கு
    காரணமாய் காவலனாய் நாவலரே நிற்கின்றார்
    நாவலர் வரவாலே நம்சைவம் பிழைத்தது
    நாவலர் பெருமானை நாமென்றும் போற்றுவமே !

    Share
  • பல்லழகன் – பகுதி 12

    திவாகர்

     

    “மாமா உங்களை எதிர்த்து எப்போதுமே பேசாதவன் நான். நீங்க வந்து இந்தப் பொண்ணு கழுத்துல தாலி கட்டுடா’ன்னீங்க.. நான் யோசிக்காம கட்டினேன். என் எதிர்கால வாழ்க்கையைப் பத்திக் கூட யோசிக்காம நீங்க சொன்னதைத்தான் செஞ்சேன். ஆனா அவளோடு குடும்பம் நடத்தக்கூடாதுன்னு நீங்க ஒரு வார்த்தை சொல்லலே.”

     

    “டேய்.. டேய் என்னடா சொல்லறே?”

     

    “ஆமாம் மாமா.. தாலி கட்டின ஒரு பெண்ணை நான் கூட்டிண்டு வீட்ல ஒத்தரை ஒத்தர் தனியாவா பாத்துண்டிருக்க முடியும்..? பிரியா அழகான பொண்ணு. அத்தோட அறிவுள்ள பொண்ணு.. நான் ஒரு முட்டாள்.. உங்க வளர்ப்புல வளர்ந்தவன் இல்லே.. வேறெப்படி இருக்கமுடியும். நாய் மாதிரி நன்றி உள்ளவனாகத்தான் இருக்கமுடியும். அந்த நாயாதான் அவள் பின்னாடி அன்னிக்குப் போனேன். ஆனா பிரியா படிப்படியா என்னை மாத்தி எனக்குப் புத்திமதி சொல்லி நாயா இருந்த என்னை ஒரு மனுஷனா ஆக்கினா.. ‘

     

    முரளி கொஞ்சம் நிறுத்தினான். பெருமூச்சு விட்டான். கோபம் அதிகமாக இருந்த மாமாவிடம் நெருங்கி கொஞ்சம் நிதானமாகப் பேசினான்.

     

    ‘நீங்க அப்பப்போ இங்க வீட்டுக்கு வரட்டுமா வரட்டுமான்னு கேக்கற போதெல்லாம் நான் வேணாம்.. வேணாம் மாமான்னு தடுத்தேன். ‘இப்போ ரஞ்சிதா இல்லே மாமா அவ பிரியாமுரளி’ன்னு பேரை மாத்திண்டான்னு சொன்னேன். நீங்க கண்டுக்கவே இல்லை.. எந்த எழவானாலும் பேரை வெச்சுக்கட்டுமே..ன்னு அலட்சியமா சொன்னீங்க.. ஆனாலும் குடும்பம்னு வந்துட்டா ஒரு ஆண்மகன் தன் குடும்பத்துக்கு எப்போதுமே விசுவாசமா உண்மையா இருக்கணுமா இல்லையா.. பிரியாவே ஒரு வார்த்தை சொன்னா.. ‘நான் மாமாவோட பலவந்தப்படுத்தப்பட்டு வேறே வழி தெரியாம பைத்தியம் மாதிரி அவஸ்தைப்பட்டேன். வாஸ்தவம்தான். ஆனா இப்போதான் கணவன் மனைவி உறவுங்கிறது என்ன ஒரு அழகான உறவுன்னு புரியுது. இதோ பாருங்க.. உங்களுக்கும் எனக்கும் அது என்ன காரணத்தாலோ கல்யாணம்னு ஒண்ணு நடந்திடுச்சு. இப்போ காலம் மாறிடுச்சு. இரண்டு மனம் ஒத்துப் போறவங்கதான் கணவன் மனைவியா ரொம்ப நாள் வாழமுடியும். அப்படி ஒத்துப் போகலைன்னா டைவோர்ஸ் வாங்கிண்டு அவரவர் பாதைல நடக்கணும். இதுக்கு இப்போ சமூக அங்கீகாரம் கூட பலமா கிடைச்சாச்சு. பெண்களும் பழைய மாதிரி இல்லாம சுயமா சிந்திச்சு மானத்தோட மரியாதையோட செயல் படற காலம் இது. இப்போ என்ன? கொஞ்ச நாள் உங்க மாமா கூட ‘லிவ் இன்’ மாதிரி இருந்தேன். ஆனா கலியாணம் பண்ணிக்காம இருந்தேன். இப்போ பிரிஞ்சாச்சு. அதாவது இது கூட டைவோர்ஸ் மாதிரித்தானே.. ஒரு டைவோர்ஸியான என்னை நீங்க ரிஜிஸ்டர் விவாகம் பண்ணிண்டீங்க.. இப்போ சட்டப்படி கணவன் மனைவி.. நான் என் கணவன்கிட்டே உண்மையா இருப்பேன். அப்படியே நீங்களும் இருந்தீங்கன்னா நம்ம புது வாழ்க்கையை தென்றல் போல ஆனந்தமா கழிப்போம்’ன்னு சொன்னா மாமா.”

     

    “அடேய் பைத்தியக்காரா.. நீ நிஜமாவே லூஸாடா.. அவ அப்படி சொன்னா நம்பிடுவியா? டேய்.. ஒரு தற்காலிகமா அரேஞ்ச்மென்ட் தேவை.. அதுக்காக உன்னை அப்படி அவளுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சேன். இப்போ அவ ஆடற நாடகப் பேச்சைக் கேட்டுட்டு நீ அவ காலடில போய் விழலாமாடா.. டேய்.. பொம்பளை பேச்சை எல்லாம் மதிக்கலாமாடா.. மதிச்சா நம்மை மிதிச்சுடுவாங்கடா.. மடையா.. இப்போ என்ன ஆச்சு.. எங்க போய் ஒளிஞ்சுண்டா.. வரச் சொல்லுடா நான் அவளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கறேன். ரெண்டு வேளை சோத்துக்கு வழியில்லாத குடும்பம் அது…. அந்தக் குடும்பத்துக்கு இவளுக்காக லட்சம் லட்சமா செலவு பண்றேண்டா.. வரச் சொல்லுடா அவளை.. இல்லே நான் போய் இழுத்து வரேன்.”

     

    “மாமா.. அவ ஆஸ்பத்திரிக்குப் போயிருக்கா..”

     

    “ஆஸ்பத்திரியா.. எதுக்கு?”

     

    “மாமா..“ என்று இழுத்தான். “குடும்பம் நடத்துறேன்னு சொன்னேன் இல்லே.. அதான் அவளுக்கு இப்போ மூணாவது மாசம்..”

     

    “புரியுதுடா.. “

     

    கந்தசாமி கோபத்தோடு பின் கையைக் கட்டிக்கொண்டு அங்குமிங்கும் நடந்தார். கொஞ்ச நேரம் வரை பேசாமல் அப்படி நடந்தவர் ஏதோ முடிவுக்கு வந்தவர் போல முகத்தை வைத்துக்கொண்டு முரளியின் அருகே சென்றார்.

     

    “முரளி, இன்னிக்கு நீ ஆஸ்பத்திரிக்குப் போகாதே.. ஆனா நாளைக்குப் போகற.. போயிட்டு அவளோட வயித்தை க்லீன் பண்ணிடறே.. புரியுதா.. எனக்கும் புரியுது.. பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா எரியத்தான் செய்யும்.  நான் ஒரேயடியா உங்களை நம்பியது என் தப்புதான். ஆனா இது உனக்கு இது கடைசி எச்சரிக்கை.. இனிமே அவகிட்டே நெருங்காதே.. ஒரு மாசம் போகட்டும். அவ ரெஸ்ட் எடுக்கட்டும். அவளை அவ ஊருக்கே அனுப்பிச்சிடலாம். அவங்கம்மா ஒழுங்கா எங்கிட்டே அனுப்பிடுவாங்க.. நீ என்ன பண்றே.. அவ ஊருக்குப் போன உடனே அதைக் காரணம் காட்டி ஒரு டைவோர்ஸ் அப்ளிகேஷன் போட்டா டைவோர்ஸ் வாங்கித் தரேன். அதுக்கப்பறம் நல்ல குடும்பத்துல பார்த்து உனக்கு ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வெக்கறது என் பொறுப்பு.. ஆனா ஒண்ணு இந்த விஷயம் யாருக்கும் அதாவது முக்கியமா சுந்தருக்கோ அல்லது கல்யாணுக்கோ தெரியவே கூடாது.. சரியா?”

     

    முரளி ஒன்றும் சொல்லவில்லை. பெரியப்பா வீட்டை விட்டு வெளியே போனார்.

     

    நினைவுகள் திரும்பின. மறுபடியும் கல்யாண் வீடு

     

    கல்யாண் தலையை ஆட்டினான், “ச்சே.. இதுவும் ஒரு வாழ்க்கையாடா.. டேய் முரளி, பயப்படாம சொல்லு. நீ இதுக்கப்பறம் அவர் எல்லை மீறக்கூடாதுன்னு கொலை பண்ணிட்டியா? சொல்லுடா.. தயங்காம சொல்லு.. அன்னிக்கு ராத்திரி நடந்தப்பறம் அவரால சும்மா இருக்கமுடியாதே.. வஞ்சம் கொண்ட பாம்பு மாறி அலைஞ்சாராடா.. சீச்சீ கேக்கவே அருவறுப்பா இருக்குடா..”

     

    முரளி இதைக் கேட்டதும் காதை மூடிக்கொண்டான்.

    “டேய் கல்யாண்.. நான் ஏண்டா அவரைக் கொலை பண்றேன்.. இல்லைடா நான் ஸத்தியமா எங்கம்மா மேலே சத்தியமா நான் கொலை பண்ணலே..”

     

    “அப்போ பிரியா பண்ணிட்டாளாடா?”

     

    “ஐய்யய்யோ அவ பேரை இழுக்காதேடா.. அவ மனசுல தங்கம்டா.. ரொம்ப ஸாஃப்ட் கூட.. நிஜமாவே சொல்லறேன்.. அவ பழசு எல்லாத்தையும் மறந்து புது வாழ்க்கை வாழணும்னுதானே ஆசைப்படறவ. அவ எதுக்குடா கொலை பண்றா?”

     

    கோம்டி குறுக்கிட்டாள்.

    “அப்போ நீங்களும் இல்லே.. பிரியாவும் இல்லேன்னு கச்சிதமா சொல்லறீங்க.. ஆனா இந்தக் கதையை போலீஸ் கேட்டாக்க இந்த கேஸ் ஃபைலை ஈஸியா மூடிடுவாங்க மிஸ்டர் முரளி.. கொலைப் பழியை உங்க ரெண்டு பேர் மேலயும் போட்டுட்டு நீங்க ரெண்டு பேரும் வஞ்சம் வெச்சு செஞ்சுட்டாங்கன்னு எப்படியாவது சொல்லி ஜெயில்ல போட்டுடுவாங்க”

     

    “ஐய்யோ அப்படியெல்லாம் பயமுறுத்தாதீங்க கோம்டி..”

     

    “பின்னே எப்படித்தான் இதை சால்வ் பண்றது? சரி, அதுக்கப்பறம் உங்க மாமா எப்படி பிஹேவ் பண்ணினார். அதைச் சொல்லுங்க உங்க மனைவி இந்த விஷயத்தை எப்படி டீல் பண்ணாங்க?”

     

    “மேடம்! அதுக்கப்பறம் ஒரு மாசம் கழிச்சு என்னை மறுபடியும் இவன் பெரியப்பா பிரியாவைப் பத்தி கேக்கறச்சே நான் கண்டிப்பா சொல்லிட்டேன்.” அவன் நினைவுகள் மறுபடியும் பின்னோக்கிச் சென்றன.

     

    கந்தசாமியின் வீடு.

     

    “இதோ பாருடா முரளி! உனக்கும் எனக்குமுள்ள உறவு ரொம்ப பாசமானது. இதுல பொண்ணுங்க மத்தில புகுந்து குழப்பக்கூடாது. நீ இன்னமும் அவளை ஊருக்கு அனுப்பலே. ஏன் அனுப்பலே? அத முதல்ல செய்யு! அதுக்கப்பறம் எனக்குத் தெரிஞ்ச வக்கீல்கிட்ட நான் பேசறேன்.. டைவோர்ஸ் வாங்கிடணும்.. இந்தக் கல்யாணமே என் சுய நலத்துக்காக ஒரு வியாபாரம் போல பண்ணி வெச்சுட்டேன்.. அதனால உனக்கு இன்னொரு பொண்ணு பார்த்துட்டேன். மாரேஜ் பீரோ மூலம்தான் பார்த்தேன். எல்லாமே நல்லா அமைஞ்சிருக்கு. அவளைக் கல்யாணம் பண்ணிண்டு சுகமா இரு., சரிதானா?”

     

    “மாமா.. இனிமே கல்யாணம் எல்லாம் நான் செஞ்சுக்கறதா இல்லே.. அதோட நான் பிரியாவை டைவோர்ஸ் பண்றதாவும் இல்லே.. இது முடிஞ்சு போன விஷயம். இதைப் பத்திப் பேசி நமக்குள்ள ஒரு பிரச்சினையை உருவாக்கிக் கொள்ள வேணாம் மாமா..”

     

    “என்னடா பெரிய பிரச்சினை..   டேய் மடையா.. உனக்கு எத்தனை தடவை சொல்வேன். அவ என் ஆள்டா.. எனக்காக என்னோட சௌகரியத்துக்காக வேண்டி நீ அதுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பேங்கிற நம்பிக்கையில இந்தக் கல்யாணம் நடந்ததுடா.. இதோ பார்.. நீ என்ன பிரச்சினையை எதிர்பார்க்கறே? ரஞ்சிதா ஏதாவது தற்கொலை பண்ணிக்குவா இல்லே கோர்ட்டுக்குப் போவா.. இப்படில்லாம் பிரச்சினை எதிர்பாக்கறியா? நீ கவலைப்படாதேடா.. நான் அவளை உன் வாழ்க்கைல புகுத்தினவன்.. நானே அவளை வெளியே கிளப்பிடறேன். அப்பறமா நீ புதுக் கல்யாணம் பண்ணிண்டு சந்தோஷமா இரேண்டா..”

     

    “இல்ல மாமா! இனிமே எனக்கு லைஃபே என் பிரியா’தான்னு உங்கள்ட்ட எத்தனையோ தடவை சொல்லிட்டேன். இப்பவும் சொல்லறேன்.. பிரியாதான் என் பொண்டாட்டி..  பழசையெல்லாம் ஒரேயடியா மறந்துடுங்க.. அவ வயசு என்ன.. உங்க வயசு என்னன்னு நினைச்சுப் பாருங்க.. சட்டப்படி கூட எங்களுக்குதான் சாதகமா இருக்கு.  நீங்க இந்த விஷயத்தை மறக்கத்தான் வேணும். இல்லன்னா நான் கல்யாண்கிட்டயோ இல்லே வேற இடத்திலயோ ஏன், பிரியாவே சொல்லற மாதிரி போலீஸ்கிட்டயோ மத்யஸ்தம் செஞ்சுக்கப் போவேன்.. சொல்லிட்டேன்.. நீங்க இந்த விஷயத்தைப் பத்தி பேசறதோ இல்லே எங்க வீட்டுக்கோ வரவேணாம்.”

     

    “என்ன மறுபடியும் சொல்லு.. கல்யாண்கிட்ட மத்யஸ்தம் போவியா.. போலீஸ்கிட்ட போவியா? அடேய்.. அடேய்.. என்னையே பயமுறுத்தறியாடா.. என்னைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்.. இதோ பார்.. யார்கிட்டே பேசறேன்னு தெரிஞ்சுதான் பேசறியா? நான் பொல்லாதவன்,, ரொம்ப ரொம்ப ரொம்ப பொல்லாதவன்..  நீ கல்யாணைப் பாக்கறதுக்கு இல்லே போலீஸ்கிட்ட போகறதுக்கு முன்னாடியே உன்னை சுட்டுப்போட்டு நம்ம தோட்டத்துலயே புதைச்சுடுவேன்.” என்றவர் கோபத்துடன் தன் பீரோவிலிருந்து கைத்துப்பாக்கியை எடுக்கிறார்.

     

    “சொல்லுடா.. சொல்லு.. இப்போ சொல்லு.. உனக்கு அந்த கேடுகெட்ட ரஞ்சிதா முக்கியமா இல்லே நான் முக்கியமா? சொல்லுடா..”

     

    முரளி கலங்கினாலும் அவரிடம் வருகிறான்.

    “மாமா.. நீங்க வளர்த்தீங்க.. உங்களுக்கு உரிமை இருக்கு.. என்னைக் கொன்னு போட்டுப் புதைச்சுடுங்க.. என்னைக் கல்யாணம் பண்ணின பிரியாவுக்கு கடைசி வரைக்கும் அவ மானத்தை பெருமையை காக்க போராடித்தான் செத்தேன்னு ஒரு திருப்தியும் இருக்கும். உங்க பேச்சைக் கேட்டு கட்டின பொண்டாட்டியையே அதுவும் என் பிரியாவை கூட்டிக்கொடுக்கற கேவலமான வாழ்க்கையே எனக்கு வேணாம்.. அப்படி ஒண்ணு ஆச்சுன்னா நான் தற்கொலைதான் பண்ணிப்பேன்.. அதனால உங்க கையாலே சாகறதுல எனக்குப் பயமே இல்ல.. சுடுங்க மாமா..”

     

    அவன் அழுகிறான். மாமாவுக்கு வெறுப்பு வருகிறது..

     

    “அடச்சீ போடா.. போடா.. என் கண் முன்னால இனிமே வராம எங்கயாவது போடா.. வாழ்க்கையும் வியாபாரமும் ஒண்ணுதாண்டா.. போ.. போ..”

     

    நினைவுகள் மறுபடி கல்யாண் இல்லத்தில்

     

    “நான் அன்னிக்கு அப்படி தைரியமா அப்படி சொல்லிட்டுப் போயிட்டேன். வீட்டையும் காலி பண்ணி நங்க நல்லூர்ல ஒரு வீடு பார்த்து அங்க நாங்க செட்டில் ஆயிட்டோம். பத்து நாள் ஆச்சு.. மாமாவுக்கு ஜுரம் வந்து படுத்துட்டாராம். பொன்னம்மாவை வெச்சு எனக்கு ஃபோன் பண்ணினார். சுந்தரும் வரச் சொன்னான். அவனுக்கு இந்த விஷயம்லாம் கொஞ்சமும் தெரியாதுன்னா கூட மாமா உடல் சுகமில்லேன்னு தெரிஞ்சு வந்திருக்கிறான். நானும் போனேன். கையைப் பிடிச்சுண்டுட்டார். “கல்யாண் வரணும்டா.. அவன் வந்துட்டா அவனுக்கு பொறுப்பெல்லாம் கொடுத்துட்டு நான் பாட்டுக்கு காசி ராமேஸ்வரம் போயிடறேன்’னு சொன்னார். கல்யாண் வர்றவரைக்குமாவது என்னை அடிக்கடி வந்து பாத்துக்கச் சொன்னார். ‘வளர்த்த பாசம் கூப்பிடுதுடா.. வாடா’ அப்படின்னு அழுதார். அவ்வளவுதான்.. நான் வழக்கப்படி எங்க ஆஃபீஸ் விட்டவுடன் சாய்ங்காலம் இங்க கிண்டில வந்து பார்த்துட்டு அவரோட ஷேர் சமாசாரம்லாம் சொல்லுவார்.. அதை இங்க கம்ப்யூட்டர்ல காமிப்பார்.. நானும் சில திருத்தங்களை நோட் பண்ணிட்டுப் போயிடுவேன், ஆனா சாப்பாடெல்லாம் கூட உட்கார்ந்து சாப்பிடறதில்லே.. கொலை நடந்த அன்னிக்கு வாக்கிங்காக அதிகாலைல வரச் சொன்னார். ரெண்டு பேரும் வாக்கிங்க் போனோம். அப்படி போகறச்சேதான் நடந்ததெல்லாம் மறந்துட்டேன்.. கல்யாண் நாளைக்குக் காலைல வர்றான். சுந்தர்கிட்ட கார் இருக்கு.. ரெண்டு பேரும் போய் அவனை அழைச்சிண்டு வாங்க.. அவனோட பேருல தாத்தாவோட சொத்தை எழுதணும்.. உனக்கும் சுந்தருக்கும் கூட என் சொத்துலேர்ந்து கொஞ்சம் பங்கு தரச் சொல்லி கல்யாண்கிட்டே பேசறேன். உங்க மூணு பேரை விட்டா எனக்கு யார் இருக்காங்க..” அப்படில்லாம் பேசினார். இனிமே பிரியா விஷயத்துல தான் குறுக்கே வரமாட்டேன்னு சொன்னாரு. ‘சாயங்காலம் ஆஃபீஸ் விட்டதும் வாடா.. இன்னும் நிறையப் பேசணும் உங்கிட்டே’ அப்படின்னு. தலையாட்டிட்டு நான் வீட்டுக்குப் போயிட்டு டிபன் சாப்பிட்டுட்டுதான் ஆஃபீஸ் போனேன். சாயங்காலம் ஆறரை மணிக்கு சாதாரணமா இங்க வீட்டுக்குள்ளே நுழையறச்சே வீடு உள்ளே தாள் போடாம மூடிண்டிருந்தது. என்னடா இதுன்னு உள்ள நுழைஞ்சு பார்த்தா மாமா ரத்த வெள்ளத்துல ஹால்ல கிடக்காரு. உடனேயே போலீஸ்க்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். அவ்வளவுதான்.. அவரை யாரோ அஞ்சு அஞ்சறை வாக்குல கொலை பண்ணியிருக்காங்கன்னு போஸ்ட் மார்ட்டத்துல சொல்லறாங்க. நான் ஆறரை மணிக்குதான் இங்கே நுழைஞ்சேன். எனக்கு ஒரே ஒரு உறுத்தல் என்னன்னா இந்த கலியாண ஒப்பந்தமும் பிரியாவோட பழைய கதையும் வெளில தெரிஞ்சா அனாவசியமா எங்க மேல பழி வந்துடுமேன்னுதான் பயந்தேன்.”

     

    “ஸோ.. அந்தப் பழி வராதவாறு சுமதி மேல இன்ஸ்பெக்டர்கிட்ட திருப்பி விட்டீங்க இல்லே? சரி, இந்த சுமதி யாரு?” கோம்டி நிதானமாகவே கேட்டாள்.

     

    “தெரியாதுங்க உண்மையில.. ஆனா எங்க மாமாவை ஒரு தடவை அங்க அழைச்சுண்டு போனேன். என்னைக் காருலயே இருக்க வெச்சுட்டு ஏதோ பேசிட்டு வந்தார்.. வீட்டுக்குத் திரும்பி வர வழியிலே திரும்பவும் சுமதி வீட்டுக்கு காரைத் திருப்பி விடச் சொன்னார். அங்க அவ வீட்ல என்ன நடந்ததோ தெரியலே.. ரொம்ப இறுக்கமான முகத்தோட வந்தார். இன்னும் சொல்லப் போனா சித்ரா பௌர்ணமி அன்னிக்கு பிரியா மேல எவ்வளோ கோபம் இருந்ததோ அந்த கோபமான முகத்தை அவர்கிட்டே அன்னிக்குப் பார்த்தேன். எங்கிட்டயே சொன்னார்.. “இந்த பொம்பளங்க எப்பவுமே இப்படித்தாண்டா..”ன்னு சொன்னார். நான் ரொம்ப விசாரிக்கலே.. திரும்பவும் எங்க பிரியா விஷயம் எடுத்துடுவாரோன்னு பயந்துட்டேன். ஆனா சுமதிகிட்டேயும் இவர் வம்பு வெச்சிருக்கணும்டா கல்யாண்.. அதனாலதான் இன்ஸ்பெக்டர்கிட்ட சொன்னேன். எனக்கு என்னன்னா இந்த மனுஷன் எங்கியாவது அடிபடணும்னு மனசுக்குள்ளயே ஆசை இருக்குடா.. எனக்கும் பிரியா சுமதி மாதிரி பெண்கள் கனெக்ஷன் நிறைய வெச்சுருக்கார்னு சந்தேகம் வந்ததுடா.. யாராவது கோபத்துல சுட்டுப் போட்டுருப்பாங்கன்னுதான் நினைக்கிறேன்.”

    கோம்டி தன் கை வாட்சைப் பார்த்துக் கொண்டாள். எழுந்து கொண்டாள்.

     

    “சரி மிஸ்டர் முரளி உங்க விஷயம் முடிஞ்சவரைக்கும் வெளியே வராம பாத்துக்கறோம். ஆனா வேற எந்த விஷயம் கிடைச்சாலும் எங்கிட்டே முதல்ல சொல்லணும்.”

     

    கல்யாண் சற்று இடிந்துபோன நிலையில் இருந்ததைக் கவனித்தாள் கோம்டி.

     

    “என்ன சார்.. உங்க பெரியப்பா பத்தி யோசிக்கிறீங்களா..  எல்லாத்தையும் எல்லாரையும் விசாரிக்கணும்.. இன்னும் என்னென்ன விஷயம்லாம் வரப் போகுதோ.. நான் வரட்டா?” கொஞ்சம் பரிவோடுதான் சொன்னாள்.

     

    அவன் தலையசைத்தான். அவள் எதிரில் உள்ள தன் இல்லத்துக்குச் சென்றாள்..

     

    இரவு படுக்கப் போகுமுன் ஒருமுறை கல்யாணுக்கு ஃபோன் செய்தாள்.

    தொடரும்

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 19

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 18. சண்டேசுவர நாயனார்

     “அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழ்ந்துள்ள சண்டேசுவர நாயனார் திருச்சேய்ஞலூர் எனும் சோழ வளநாட்டில் மணியாற்றங்கரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருத்தலத்தில் அவதரித்தவர். இவ்வூரில் எச்சதத்தன் என்ற ஓர் அந்தணன் வாழ்ந்தான். பவித்திரை என்பவள் அவனுடைய இல்லத்தரசி. இவர்களுக்கு விசார சர்மா எனும் திருமகன் பிறந்தார். விசார சர்மா தமது இளம் பிராயமான ஐந்து அகவையிலேயே வேத ஆகமங்களின் உட்பொருள்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற தீவிர எண்ணம், அவர் உள்ளத்தில் இருந்த சிவாகம உணர்வை வெளிப்படுத்தியது. ஏழு வயதில் அவருக்கு குல மரபின்படி உபநயனம் நடந்தது. வேதம் ஓதும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கு, ஆசிரியர் வேதத்தின் பொருளை கற்பிக்கும் முன்னரே இவருக்கு நன்கு விளங்கியது.

    ஒரு நாள் விசார சர்மா தன் உடன் பயிலும் வேதம் ஓதும் மாணவருடன் விளையாடச் சென்றார். அப்போது பசுங்கன்றை ஈன்ற பசு ஒன்று ஆயனை முட்டியது. சினம் கொண்ட அந்த ஆயன் அதனை தடி கொண்டு அடித்தான். அதனைக் கண்ட விசார சர்மா அவனைக் கடிந்து கொண்டு மேலும் அந்த பசுவை அடிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தினார். உலகில் வாழும் உயிர்களில் மேன்மையுடையது பசுக்கள். எம்பெருமானும், எம்பிராட்டியாரும் உலா வரும் விடைத்தேவரின் குலமான பசுவை கருணையே இல்லாமல் அடிக்கின்றாயே என்று கூறி, இனி தாமே பசுவை மேய்க்கச் செல்வதாகவும் கூறிவிட்டார். அதன்படியே காலையிலேயே பசுக்கூட்டங்களை அழைத்து வந்து மேயச் செய்து பின் அவற்றை நிழலில் ஓய்வு கொள்ளச் செய்து, நீர் பருக வைத்து மிக்க அன்போடு நடத்தினார். மாலை மாடுகளை அவரவர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவார். பசுக்களை அன்புடனும், ஆதரவுடனும் பேணிக்காத்ததால் பசுக்கள் முன்னைவிட அதிகமாகப் பால் கரந்ததும் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியளித்தது. விசார சர்மா உள்ளத்திலோ தானே சுரந்திருக்கும் பசுவின் மடியிலிருந்து கொட்டும் பாலை சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து சிவபூசை செய்ய வேண்டும் என்றும் எண்ணம் தோன்றியது. மணியாற்றங்கரையில் வெண்மணலால் சிவலிங்கம் அமைத்தவர், ஆத்தி மர மலர்களையும், தளிர்களையும் சேகரித்து, பாலினால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டி , மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார்.

    இதனைக் கண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசார சர்மா பாலை வீணாக்கித் தரையில் கொட்டுவதாகப் பழி கூறினான். அவர்களும் பால் வீணாவதாக நினைத்து, விசார சர்மாவின் தந்தையான எச்சதத்தனிடம் மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார். எச்சதத்தனும் தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.

    மறுநாள் மாடு மேய்க்கச் சென்ற விசார சர்மா அறியாதவாறு எச்சதத்தன் அவரைப் பின்தொடர்ந்தார். விசார சர்மாவும் வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி குடங்களில் பாலை கொண்டு வந்து சிவபூசையைத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக் கொண்டிருந்த ஊரார் சொன்னது சரியே எனத்தோன்ற, கோபங்கொண்டு, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்தார்.  அவர் ஆத்மார்த்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால், எச்சதத்தன் அடித்ததைக் கூட உணரவில்லை.  ஆனால் எச்சதத்தனோ சிவனுக்காக கறந்து வைத்திருந்த பாலை தன் காலால் எட்டி உதைத்ததால் அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசார சர்மாவும் தன்னிலை உணர்வு வந்து, சிவபூசைக்கு ஊறு விளைய வைத்ததால் தன்னருகில் இருந்த கழியை எடுத்து எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினார்.  அந்தக் கழியானது மழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சத த்தன்அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.

    ஆனாலும் நடந்தது எதையும் அறியாமல் மீண்டும் சிவலிங்கத்தைப் பூசிப்பதில் கவனம் செலுத்தினார் விசார சர்மா. பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையோடு விடைமீது தோன்றி, எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டிச் சாய்த்த உமக்கு இனி நானே தந்தை என்று அணைத்துத் தடவி உச்சி மோர்ந்தார். இனிமேல் நாம் உண்பனவும் உடுப்பனவும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டீசன் எனும் பதத்தை அளித்து தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்தார். கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தார்.

    இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவரருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். சிவபக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசுவரருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசுவரருக்கு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.

    .

    சண்டேசுர நாயனார் புராணம் சொல்லும் கருத்து

     

    செம்மை வெண்ணீற்று ஒருமையினார்

      இரண்டு பிறப்பின் சிறப்பினார்

    மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு

      வேதம் முறை பயின்றார்

    தம்மை ஐந்து புலனும் பின்

      செல்லும் தகையார் அறுதொழிலின்

    மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும்

      போற்றும் மறையோர் விளங்குவது.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ.

    சண்டேசுவர நாயனார் அவதரித்த சேய்ஞலூர் எனும் ஊரின் பெருமையைப் பற்றி பேசும் சேக்கிழார் பெருமான் இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய அந்தணர்கள் திருநீறு பூசி சிவநெறியில் நிற்கும் தன்மையர். இப்பிறப்பிலே ஞானக்கண் திறக்கப் பெற்று இருபிறப்பாளர் என்று அழைக்கப்படும் தன்மையர். முப்போதும் எரிவோம்பும் பெற்றியர். சுகேத பத்தியம், ஆசுவணீயம், தட்சிணாக்கிளி என்பனவாகிய மூன்று வேள்விகளையும் செய்பவர்கள். நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றவர்கள். நாம் ஐந்து புலன்களின் வழிச்செல்கின்றோம். அவ்வூர் பெருமக்கள் தங்கள் கருத்தின் வழிப்புலன்களைச் செலுத்துவோர். ஐம்புலனும் அகத்து ஒடுக்கும் அருட்செல்வர். வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும், ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர் வாழும் ஊர் என்று சேக்கிழார் பெருமான் எண் அலங்கார வகையில் அருமையாகப் பாடியுள்ளார்.

    பண்ணின் பயனாம் நல் இசையும்

      பாலின் பயனாம் இன் சுவையும்

    கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்

      கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்

    விண்ணின் பயனாம் பொழி மழையும்

      வேதப் பயனாம் சைவமும் போல்

    மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்

      பெருமை வரம்பு உடைத்தோ. 

    சோழர்கள் மரபில் முடிசூட்டிக் கொள்வதற்குரிய புனித தலங்களில் சேய்ஞலூரும் ஒன்றாகும். பண்ணின் பயன் நல்லிசை. பாலுக்குப் பயன் இன்சுவை. கண்ணுக்குப் பயன் கண்ணொளி. கற்ற நூல்களின் கருத்து ஐந்தெழுத்து. வானுக்குச் சிறப்பு மழை பொழிவது. வேதத்திற்குப் பயன் சைவம். மண்ணிற்குச் சிறப்பு சேய்ஞலூர் என்கிறார்.

    சூரபத்மன் முதலான அரக்கர்களை ஒடுக்கித் தேவர்களின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, கயிலை மால்வரையிலிருந்து புறப்பட்டு தெற்கு வந்து இறங்கிய முருகப்பெருமான் மண்ணியாற்றின் தென்கரையில் வந்து இறங்கிய முருகப்பெருமான் விச்வதர்மனால் ஒரு திருநகரை உண்டாக்கினார். அங்கு சிவலிங்கம் அமைத்து சிவபூசை செய்தார். அதனாலேயே இவ்வூர் சேய்ஞலூர் என்று அழைக்கப்பட்டது என்கிறார் ஈரோடு தங்க விசுவநாதன் அவர்கள்.

    திருஆப்பாடி பாலுகந்தீசுவரர் கோயிலில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கருவறையின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பாகும்.

    திருச்சிற்றம்பலம்

     

     

    Share
  • சுயநலத்துடன் பழகிய நண்பன்!! (நீதி கதை)

    ஏ. எஸ். கோவிந்த ராஜன்

    ஒரு ஊரில் மோகன், சூர்யா என்ற இரு நெருங்கிய நண்பர்கள் இருந்தனர். மோகன் எந்தவொரு எதிர்பார்ப்பும், சுயநலமின்மையும் இல்லாதவர். ஆனால், சூர்யா கொஞ்சம் சுயநலம் உள்ளவர். மோகன் இதை அறியாமல் சூர்யாவை முழுவதுமாக நம்பினார். சூர்யா அடிக்கடி மோகனிடம் ஐம்பது, நூறு என்று கடன் வாங்குவார். ஆனால், திருப்பித் தராமல் காலம் கடத்துவார்.

    மோகனின் மனைவி, ஏன் உங்கள் நண்பர் கேட்கும் போதெல்லாம் கடன் கொடுக்கிறீர்கள். அவரோ திருப்பித் தருவதில்லை. நாம் என்ன வசதியாகவா இருக்கிறோம்? நாமும் கஷ்டத்தில் தானே இருக்கிறோம். நான் இப்படிச் சொல்வதால் உங்கள் நண்பரை குறை சொல்வதாய் நினைக்க வேண்டாம் என்பாள். மோகன் அதை கண்டுகொள்ள மாட்டார். மோகன் மனைவியும் அதற்கு மேல் எதுவும் பேச மாட்டாள்.

    வழக்கம்போல் ஒருமுறை சூர்யா, மோகனிடம் ஆயிரம் ரூபாய் கடன் கேட்டார். மோகனிடம் அவ்வளவு பணம் இல்லை. தன்னிடம் பணம் இல்லையென்று கூற முடியாமல் இருந்தார். மோகன் தன் மனைவியிடம் கூறியபோது அவள், நம்மிடம் ஆயிரம் ரூபாய் இல்லை என்று உங்கள் நண்பரிடம் கூறிவிடலாம் என்றாள்.

    உடனே மோகன், அப்படி எல்லாம் கூற முடியாது என்றான். பின் தன் நண்பனுக்காக வீட்டிலிருந்த உடைந்துபோன தங்க மோதிரம் ஒன்றை அடகு வைத்து ஆயிரம் ரூபாயை வாங்கி நண்பன் சூர்யாவிடம் கொடுத்தார். மோதிரத்தை அடகு வைக்க இருவருமே சென்றனர். இதனால் மோகனுக்கும் அவன் மனைவிக்கும் சண்டையே வந்துவிட்டது.

    பல மாதங்களாகியும் சூர்யா மோகனிடம் வாங்கிய பணத்தை திருப்பித் தரவில்லை. மோகனும் அவனிடம் கேட்கவில்லை.

    மோகனின் மனைவி, பணத்தை திருப்பி கேட்காவிட்டால் தன் தாய் வீட்டுக்குப் போய்விடுவதாக பயமுறுத்தியதால், மிகவும் பணிவாகவே தன் நண்பனிடம் பணம் பற்றிக் கேட்டார். கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் சூர்யாவிற்கு கோபம் வந்துவிட்டது. ஆனால், கோபத்தை வெளிக்காட்டாமல் பணத்தை திருப்பித் தருவதாகக் கூறினார். அப்போது சூர்யாவிடம் பணம் இருந்தது. ஆனால், பணத்தை திருப்பித் தர மனம் வரவில்லை.

    ஒருநாள் இருவரும் இரவு படம் பார்த்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் வந்த பாதையில் ஆள் நடமாட்டமே இல்லை. திடீரென ஒரு திருடன் அவர்கள் எதிரே வந்து கத்தியைக் காட்டி கையில் உள்ள பணத்தை தரும்படி கூறினான்.

    மோகனிடம் பத்து ரூபாய் மட்டுமே இருந்தது. ஆனால் சூர்யாவிடம் ஆயிரம் ரூபாய் இருந்தது. உடனே சூர்யா தனது பாக்கெட்டிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து உனக்குக் கொடுக்க வேண்டிய ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொள் என்றார். உனக்குக் கொடுக்கவேண்டிய கடனை இப்போதே அடைத்துவிட்டேன் என்று கூறி அப்பணத்தை மோகனின் கைகளில் வலுக்கட்டாயமாக கொடுத்துவிட்டார். திருடனும் மோகனின் கையிலிருந்து பணத்தைப் பிடிங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

    நல்ல வேலையாக நான் பிழைத்தேன். எப்படியும் திருடன் நம்மிடமிருந்து ஆயிரம் ரூபாயைப் பறித்துச் சென்றிருப்பான். நமக்கு நஷ்டமாகியிருக்கும். நல்லவேளை பணத்தை மோகனிடம் கொடுத்ததால் நமது கடனும் தீர்ந்தது என்று நிம்மதியாக இருந்தான். மோகனின் பணம்தானே திருடுப்போனது. நமக்கொன்றும் நஷ்டமில்லையே. தான் நன்றாக சிந்தித்து செயல்பட்டோம் என தன்னைத்தானே புகழ்ந்து கொண்டார், சூர்யா.

    அப்போது தான் மோகன், சூர்யாவின் மோசமான எண்ணத்தை புரிந்து கொண்டார். அச்சமயம் தன் மனைவி கூறிய சொற்கள் எல்லாம் நினைவுக்கு வந்தது. நீயெல்லாம் ஒரு நண்பனா? உன்னைப் பற்றி இப்பொழுது நன்றாக புரிந்து கொண்டேன். உன்னைப் போல் ஒரு சுயநலமான நண்பன் இனி எனக்குத் தேவை இல்லை. ஆயிரம் ரூபாயை இழந்ததன் மூலம் எனக்கு நல்ல பாடம் கிடைத்தது. இனி உன் பொய்யான நட்பு எனக்குத் தேவையில்லை என்று சொல்லி வேகமாக வீடு வந்து சேர்ந்தார், மோகன்.

    நீதி : யார் நல்லவர் என்பதை நமது கடினமான சூழ்நிலையில் தான் புரிந்துக்கொள்ள முடியும்.

    Share
  • பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    புரட்சிக்கும் பாரதி புதுமைக்கும் பாரதி
    அயர்ச்சியை நாளும் அகற்றினான் பாரதி
    துணிவுக்கும் பாரதி துடிப்புக் பாரதி
    பணிவுக்கும் பாடினான் பக்திக்கும் பாடினான்

    தமிழன்னை ஈன்ற தவப்புதல்வன் பாரதி
    தமிழதனை அமுதமாய் கண்டவன் பாரதி
    தமிழொன்றே பெருமை எனவுரைத்தான் பாரதி
    தலைநிமிர வாழப் பலவுரைத்தான் பாரதி

    பன்மொழிகள் கற்றான் பற்றினான் தமிழை
    பக்தியை மனத்தில் இருத்தினான் பாரதி
    கடவுளை நம்பினான் கண்ணியம் காத்தான்
    கடமையைச் செய்யென கட்டளை இட்டான்

    வேதம் படித்தான் புராணம் படித்தான்
    வேண்டாக் கருத்தை விலக்கியே நின்றான்
    பாதகம் கடிந்தான் பக்குவம் உரைத்தான்
    பார்க்கும் அனைத்திலும் பரம்பொருள் கண்டான்

    நாத்திகம் பேசிடும் ஆத்தீகன் பாரதி
    வேண்டா அனைத்தையும் விலக்கிடச் சொன்னான்
    கடவுளை வெறுத்திடச் சொல்லவும் இல்லை
    கள்ளம் போக்கிடல் கட்டாயம் என்றான்

    கண்ணனைப் பாடினான் சக்தியைப் பாடினான்
    கீதையை மனத்தில் இருத்தியே வாழ்ந்தான்
    பாரத தேசத்தைப் பராசக்தி என்றான்
    மண்ணினைத் தெய்வமாய் மனமதில் கொண்டான்

    பாரதி சிந்தனை பரந்தது விரிந்தது
    பாப்பாவைப் பாடுவான் பரமனைப் பாடுவான்
    ஏய்த்திடு மாந்தரை இகழ்ந்துமே பாடுவான்
    எவருக்கும் அஞ்சா பாடினான் பாரதி

    வள்ளுவன் கம்பனை மனமதில் இருத்தினான்
    இளங்கோக் கவிஞனை ஏந்தியே நின்றான்
    தெள்ளிய திருமுறை உள்ளத்தி லிருத்தினான்
    திருமால் அடியார் பாடலும் விரும்பினான்

    வேதிய குலத்தில் பிறந்தவன் பாரதி
    வேதம் நன்றாய்க் கற்றவன் பாரதி
    சாதியை எதிர்த்து சன்னதம் கொண்டு
    சமத்துவம் பேசி நின்றவன் பாரதி

    பாட்டில் புரட்சி செய்தவன் பாரதி
    ஏட்டில் புரட்சியை காட்டியே நின்றவன்
    நாட்டில் புரட்சிக்கு வித்தினை விதைத்தவன்
    நற்றமிழ் கவிஞனாய் ஒளிர்கிறான் பாரதி

    அஞ்சா நெஞ்சனாய் பாரதி வாழ்ந்தான்
    அவனிடம் சரஸ்வதி ஐக்கிய மாகினாள்
    அன்னைத் தமிழில் கவிமழை பொழிந்தான்
    அனைத்தும் தமிழின் பொக்கிஷம் ஆனது

    பாஞ்சாலி சபதம் வியந்திட வைக்கும்
    கீதையின் சிந்தனை உயர்ந்திடு படைப்பே
    குயிலின் பாட்டு பாரதி தத்துவம்
    ஆத்தி சூடியோ அவனது வித்துவம்

    பாப்பாப் பாட்டு எத்தனை அறிவுரை
    கேட்கக் கேட்க கருத்துகள் விரிந்திடும்
    பாரதி வரமாய் தமிழுக்கு வாய்த்தான்
    பாரதி பாட்டை பக்குவப் படுத்துவோம்!

    Share
  • எழுவதே இயல்பு

    எழுவதே இயல்பு

    திரிவேணி சுப்ரமணியம்
    கோயம்புத்தூர்

    எல்லாம் முடிந்ததாய்
    ஆங்காரமாய் எழும்
    மனதின் பேரிரைச்சல்
    தாளாமல் கண்களை மூடுகிறேன்.
    நெருப்புக் குழம்பில் வீழும்
    நீர்த் துளிகளாய்
    மனதில் வழிகிறது கண்ணீர்.
    அழுகையின் முடிவில்
    சுயம் எழுந்து
    முழங்குகிறது கம்பீரமாய்.
    வாழ்வதை விட வலுவாய்
    எழுவது இயல்பாகிறது!!

    Share
  • பல்லழகன் – பகுதி 11

    திவாகர்

    “ஆமாண்டா.. ஆமா.. என் பொண்டாட்டி பிரியாவைத்தான் சொல்லறேன். அவர்கிட்ட அவ ஏற்கனவே ஏமாந்து போனவ. அப்படி ஏமாந்தவ இவரைக் கோர்ட்ல இழுப்பேன்.. கேஸ் போடுவேன் இல்லேன்னா தற்கொலை பண்ணிண்டு இவரை மாட்டிவிடுவேன்னு பயமுறுத்தியவுடனே அவளை சமாதானப்படுத்த எனக்கு அவளைக் கல்யாணம் பண்ணி வெச்சாரு.. அது கூட சாதாரண ரிஜிஸ்டர் கல்யாணம்தான். நம்ம உறவுக்காரங்களைக் கூட கூப்பிடலேன்னு உனக்குத் தெரியுமே. நீ வைசாக்ல இருந்தே.. அப்போதான்  உங்க பெரியப்பா உனக்கு ஃபோன் பண்ணி இந்த மாதிரி ‘முரளி அவனே ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணிண்டு வந்து என் முன்னாடி நிக்கிறாண்டா.. வேற என்ன பண்ண முடியும்.. ஆசீர்வாதம் பண்ணேண்டா’ன்னு என் முன்னாடியே பேசினவரு. சரி, நான் எதுக்காக ஒத்துண்டேன்னா சிம்பிள்.. அவர் எங்கிட்டே உண்மையைச் சொன்னார்.. அவர் சொன்னவிதம் அவருக்குச் சாதகமா சொன்னார். பிரியாவை பெரியப்பா ‘ரஞ்சிதா’ன்னு கூப்பிடுவார். அதாவது இந்த ரஞ்சிதா’ங்கிற பொண்ணுகிட்ட ஏதோ ஒருதடவை தான் மயங்கிட்டுப் போய் அவளோடு இருந்ததாகவும் ஆனா அவ அதைப் பயன்படுத்திக் கல்யாணம் செய்ய இவரை வற்புறுத்துவதாவும் அப்படி இல்லைன்னா தற்கொலை பண்ணிண்டு அதுக்குக் காரணம் இவருதான்னு எழுதிடுவேன்னு பயமுறுத்தினா.. ஆனா நான் கல்யாணம்லாம் பண்ணிக்க முடியாதுடா முரளி.. நீ எனக்கு உதவி பண்ணனும். எனக்குப் பதிலா நீ அவளுக்கு தாலி கட்டு. ரிஜிஸ்டர் பண்ணிக்கோ. ரெண்டு வருஷமானா நீ அவளை விவாகரத்து பண்ணிடலாம். நான் ரஞ்சிதாகிட்டே பேசறேன். இது சும்மா ஒரு  ஸ்டாப்-கேப்  அரேஞ்ச்மென்ட்தான். அதுவும் ரஞ்சிதாவுக்கு திருப்திகரமா இருக்கும்னுதான். இதுக்கு நான் உதவி பண்ணினா தான் சுயமா சம்பாதிச்ச சொத்துல  பாதியும் பத்து லட்சம் கேஷும் உடனடியா தர்றதா சொன்னாருடா. அப்போ எனக்கு பணம் ரொம்ப அவசரம்னதாலே அதுவும் பேருக்குதான் நான் ஹஸ்பண்ட் அத்தோட இது டெம்போரரி அர்ரேஞ்ச்மென்ட்கிறதாலே பத்து லட்ச ரூபாய் கேஷ் வாங்கிண்டு இந்த ஏற்பாட்டுக்கு ஒத்துக்கினேண்டா..”

    “அடச்சீ.. இது மானங்கெட்ட வாழ்க்கைன்னு உனக்குத் தெரியலியாடா?”

    “தெரியும்டா.. ஆனா ஒரு டிராமா ஆடற மாதிரி கேட்டது என்னை வளர்த்த மாமாடா. எனக்கும் அப்போதைய அவசர தேவை பணம்டா.. இது ஏதோ ஒரு ஸ்டாப் கேப் ஏற்பாடுதானே.. ஆனா இந்த கல்யாணத்துக்கப்பறம் ரஞ்சிதா முழுசா மாறிட்டாடா.. அவ ஒரிஜினல் பேரு பிரியா.. மாமாதான் ரஞ்சிதான்னு புதுசா மாத்தினாராம் ஆனா இனிமே தான் பிரியாமுரளின்னுதான் அவ பேருன்னு சொன்னா. ‘இனிமே உங்களோடதான் என் வாழ்க்கை. தயை செஞ்சு உங்க மாமாவோட சம்பந்தம் இனிமே நமக்குத் தேவையில்லே.. நடந்தது நடந்து போச்சு, விவாகரத்து பண்ணி மறுவிவாகம் பண்ணினா மாதிரி நான் நினைச்சுக்கறேன்.  இனிமே நான் உங்களோட உறுதியான உண்மையான மனைவி நான். இதை உங்க மாமாகிட்டே என் முடிவாச் சொல்லிடுங்க ஆனா அவர் சுலபத்துல ஒப்புக்க மாட்டார்.. அவரு ஒரு மாதிரியான  பொம்பளை பைத்தியம்.. நானே அவர் என்னை விட்டுப் போயிடணும்னு நினைச்சுதான் தற்கொலை அது இதுன்னு சொல்லி பயமுறுத்தப் பார்த்தேன். ஆனா அந்த ஆள் பயப்படலே. நானும் இனிமே ஏன் பயப்படணும்? நாம் கலியாணமான தம்பதிங்க.. நம்ம வாழ்க்கையை நாம அனுபவிப்போம்’ அப்படின்னு  சொல்லிட்டா. போகப் போக நாங்க ரெண்டு பேரும் ஒத்தரை ஒத்தர் புரிஞ்சுண்டு வாழ ஆரம்பிக்கறச்சே மாமா நடுவுல வந்தாருடா.. ‘முரளி, இப்படியெல்லாம் என்னைத் தவிக்க வெக்கலாமா? உன் வீட்டுக்கு அழைச்சுண்டு போடா.. ரஞ்சிதா மேல நான் உயிரையே வெச்சுருக்கே’ன்னு எங்கிட்டே நச்சரிக்க ஆரம்பிச்சாரு. மாமாகிட்ட நான் சொல்லிட்டேன். எப்படியோ கல்யாணம்னு முடிஞ்சுபோச்சுன்னு நானும் அவளும் இப்போதான் நிம்மதியா புருஷன் பொண்டாட்டியா வாழ ஆரம்பிச்சிருக்கோம். நீங்க தயைசெய்து தலையிடாதீங்க மாமா’ன்னு சொல்லிட்டேன்.”

    திடீரென கோம்டி குறுக்கிட்டாள்.

    “அது சரி மிஸ்டர் முரளி, உங்க மனைவி பேரு ஒரிஜினலா ரஞ்சிதா இல்லையா அப்போ?.. அவங்க சிதம்பரத்துல கீழவீதில இருந்தாங்களா..”

    “அது பழைய கதை.. என் மனைவியோட பிறந்த ஊர் சிதம்பரம். அவளோட அம்மா அங்கேதான் இருக்கா. ஆமாம். கீழவீதிதான். ஆனா என் மனைவி பேரே பிரியாதான். சர்டிஃபிகேட் எல்லாம் பிரியாதான். ஏன் மேரேஜ் சர்டிஃபிகேட் கூட பிரியா’ன்னுதான் கையெழுத்துப் போட்டா.. மேரேஜ் சமயத்துல நான் இதைப் பெரிசா கண்டுக்கலே.. மாமா பேச்சைக் கேட்டு முதல்ல இதுல நான் சம்பந்தமே இல்லாத மாதிரி இருந்தேன். ஆனா மாமா கூப்பிடற அந்த ரஞ்சிதா இல்லே இப்போ. பிரியாமுரளியா என்னோட அன்பா குடுத்தனம் பண்றா.. இப்போ அவளுக்கும் அவ குடும்பத்துக்கும் கூட எந்த சம்பந்தமுமில்லே..”

    “சரி, இப்போ பொன்னம்மா கதைக்குப் போவோமா.. அந்த சித்ரா பௌர்ணமி ராத்திரி விஷயத்துக்கு போகலாமா..?”

    கோம்டி கேட்டதும் தலையாட்டினான். அவன் நினைவு அந்த நாள் இரவுக்குப் போனது.

    சித்ரா பௌர்ணமி, முரளியின் வீடு.. இரவு ஆரம்பித்த நேரம். கையில் ஒரு பெரிய காரியருடன் உள்ளே நுழைகிறார் கந்தசாமி.

    “முரளி.. முரளிக் கண்ணா.. என்னடா நீ கூப்பிடாமயே நான் வந்திருக்கேன் அப்படின்னு பார்க்கிறயாடா? பரவாயில்லே.. நீ கூப்பிடாட்டி என்னடா.. நீ யாரு? உன்னை வளர்த்து ஆளாக்கினவனே நான்தானேடா.. வா இன்னிக்கு இங்கதான் நான் சாப்பிடப் போறேன். பொன்னம்மாவை ஹெல்ப்க்கு வரச் சொல்லி இருக்கேன். இப்போ வந்துடுவா”

    பிரியா வருகிறாள்.

    “மாமா.. இங்க ஏன் வந்தீங்க? உங்களை வரவேண்டாம்னு இவர்கிட்டே சொல்லி அனுப்பியிருந்தேனே.. தயை செய்து முதல்ல வெளியே போங்க..”

    “முரளி என்னடா இது என் ரஞ்சிதாவா இப்படியெல்லாம் பேசறா? மாமா’ன்னு கூப்பிடறா.. நான் வெளியே போகணுமாம் என்னடா இது புதுசா இருக்கு? “

    பிரியா சப்தமிடுகிறாள்.

    “இல்லே.. நான் இப்போ அந்த ரஞ்சிதா இல்லே.. அவ செத்துப் போயாச்சு.. நான் பிரியா.. பிரியாமுரளி.. நீங்க வெளியே போய்தான் ஆகணும். இல்லே போலீஸைக் கூப்பிடுவேன்.”

    சிரித்தார் கந்தசாமி.

    “இதோ பாரு ரஞ்சிதா! போலீசு.. அது இது எல்லாம் எங்கிட்டே எதுக்கு பூச்சாண்டி காமிக்கறே.. நம்ம முரளி நாமெல்லாம் இப்போ சேர்ந்து சாப்பிட்டதுக்கப்பறம் அவன் என் வீட்டுக்குப் படுக்கப் போயிடுவான். எனக்கு  மத்தியானம்தான் இன்னிக்கு சித்ரா பௌர்ணமின்னு ஞாபகம் வந்துச்சு.  ரெண்டாம் வருஷம் நம்ம சித்ரா பௌர்ணமி வைபவத்தை சிதம்பரத்துல உங்க அம்மா வீட்ல கொண்டாடினோமே.. எல்லாம் மறந்துட்டியா.. நான் அந்த இன்பமான இரவை மறக்கலே.. மறக்கவும் முடியாது. உங்கம்மாதான் எல்லா ஏற்பாடும் உங்க வீட்டு மொட்டை மாடில கச்சிதமா பண்ணினாளே.. உனக்குத் தெரியுமா உங்கம்மாவுக்கு சமீபத்துல கூட அஞ்சு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். எல்லாம் யாருக்காக? என் ரஞ்சிதாவுக்காகத்தான்.”

    பிரியா கத்தினாள்.

    “முரளி.. முதல்ல உங்க மாமாவை நீங்க வெளியே துரத்துங்க.. இதோ பாருங்க மிஸ்டர் கந்தசாமி.. எனக்கும் எங்கம்மாவுக்கும் உறவு எப்பவோ அறுந்து போச்சு. அதேமாதிரி  இனிமே எனக்கும் உங்களுக்கும் எந்த உறவுமில்லே.. நான் உங்க வளர்ப்பு முரளியோட அன்பு மனைவியா வாழ்ந்துட்டிருக்கேன்.. தயை செய்து எங்க குடும்ப வாழ்க்கையைக் கெடுக்காதீங்க..”

    “ஆமாம் மாமா.. நான் ஏற்கனவே நிறைய தடவை உங்களுக்குச் சொன்னதுதான். இப்போ பிரியா என்னோட பொண்டாட்டி. தாலி கட்டியிருக்கேன் நான். அவளைப் பாதுகாக்கவேண்டியது என் பொறுப்பு. எங்களுக்கு நீங்கதான் கலியாணம் செஞ்சு வெச்சிங்க. தயை செய்து பழசையெல்லாம் மறந்து எங்களுக்கு ஆசீர்வாதம் கொடுத்து எங்களை வாழவிடுங்க.”

    “மடையா! இவ உன் பிரியா இல்லே.. என்னோட ரஞ்சிதா.. நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியவ. ஏன் அவளே என்னைக் கல்யாணம் பண்ணிக்கத்தானே சொன்னவ.. இல்லேன்னு சொல்லச் சொல்லு.. முரளி.. நீ குழந்தை.. உனக்கு ஒண்ணும் தெரியாது.. இதோ பார். இது ஒரு காண்ட்ராக்டு, இதுல நீ அந்த காண்டிராக்டர்.. உனக்குப் பணம் கொடுத்தாச்சு. உன் வேலை என்னவோ அதை செஞ்சுருக்கே.. அவ்வளவுதான்.. நீ நகரு சொல்லறேன்!” கந்தசாமி அவளருகே சென்று அவள் கன்னத்தைப் பிடித்தார். அவளோ அவரைப் பிடித்துப் பின்னால் தள்ள அவர் பின்வாங்கினார்.

    அப்போதுதான் பொன்னம்மா கதவைத் தட்டி உள்ளே நுழைந்தாள். அவள் அங்கு நடந்த விஷயங்கள் புரியாததால் அங்குள்ள டைனிங்க் டேபிளில் இருந்த கேரியரை ஒவ்வொரு கப்பாக எடுத்து வைத்துவிட்டு பிரியாவைக் கேட்டாள்.

    “பிளேட்லாம் எடுத்து வையுங்கம்மா.. எங்க வெச்சிருக்கற சொல்லு. நான் கொண்டாறேன்”, என்று சமையலறை பக்கம் சென்றாள். அவளோடு வந்த பிரியாவும் அங்கே வந்து அழுதாள். அவள் கண்ணீர் பெருக நின்ற நிலை பொன்னம்மாவுக்கு இரக்கம் தந்தது.

    “எதுக்கும்மா அழறே.. வாம்மா.. நான் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்.. ஐய்ய அழுவாதேம்மா..” குரலைக் கேட்டு முரளி உள்ளே வந்தான். பிரியாவிடம் அமைதியாகப் பேசினான்.

    “அழாதே பிரியா.. வா.. சாப்பிடலாம்..பொன்னம்மா பறிமாறுவா..” என்றவன் அவள் காதருகே வந்தவன் மெல்லப் பேசினான். “நான் சாப்பிட்டவுடனே அவரை அனுப்பிச்சுடறேன்.. நீ பயப்படாம வா..”

    மூவரும் டைனிங்க் டேபிளில் சாப்பிடுகையில் மெதுவாக ஆனால் சர்வ சாதாரணமாகப் பேசினார் கந்தசாமி.

    “முரளி! நாம சாப்பிட்டதும் என்ன பண்றே? பொன்னம்மாகிட்டே பாத்திரம் கொடுத்தனுப்பாதே.. அவளையும் சாப்பிடச் சொல்லிட்டு நீ என்ன பண்றேன்னா கீழே என் காரை எடுத்துண்டு நம்ம வீட்டுக்குப் போயிட்டு ஜாலியா படுத்துத் தூங்கு. நான் ராத்திரி இங்க இருக்கேன். காலைல நீ வரச்சே சீக்கிரம் வந்துட்டியானா ரெண்டு பேரும் சேர்ந்து வாக்கிங்க் போகலாம். ஏன் வேணுமின்னா ரஞ்சிதா கூட நம்ம கூட ஜாயின் பண்ணலாம். என்ன ரஞ்சிதா கண்ணு.. உனக்கும் ஓகேயா?”

    பிரியா திடீரென பாதிச் சாப்பாட்டில் எழுந்தாள். கந்தசாமியை ஒரு முறை முறைத்துவிட்டுச் சென்றாள்.

    சாப்பிட்டதும் பொன்னம்மாள் சொல்லிக்கொண்டு வெளியே கிளம்பினாள்.  கூடவே வெளியே வந்த பிரியா, பொன்னம்மாளை கையைப் பிடித்து நிறுத்தினாள்.

    “தயவு செய்து என்னை விட்டுட்டு போகாதே பொன்னம்மா. நீயும் என்னோட இங்க தங்கு பொன்னம்மா ப்ளீஸ்..”

    “ஐய்யய்யோ என்னம்மா நான் எப்படி உங்க கூட தங்கறது?.”

    “இல்லே பொன்னம்மா.. என்னை இப்போ நீதான் இந்த வெறிபிடிச்சவங்கிட்டேயிருந்து காப்பாத்தணும். தயவு செஞ்சி நீ இங்க ஒரு ராத்திரி என்னோட படுத்துக்கோ.. நாளைக்கு நான் எங்க ஊருக்குப் போயிடறேன்.”

    பொன்னம்மா காலைப் பிடித்து அழுதாள் பிரியா. அவளுக்கு ஏதோ புரிந்தது.

    “ஏம்மா ஒரு காரியம் பண்றியா?”

    “எதை நீ சொன்னாலும் கேக்கறேன். இன்னிக்கு ஒரு ராத்திரி உதவி பண்ணு பொன்னம்மா?”

    “நீ கீழ மயக்கம் போட்ட மாதிரி விழு”

    பிரியா உடனே “அம்மா’ எனச் சொல்லிக்கொண்டே கீழே விழுந்தாள். உடனே பொன்னம்மா கூவ ஆரம்பித்து விட்டாள். ‘ஐய்யோ இந்தப் பொண்ணு கீழ வியுந்துடுச்சே.. என்று கத்தினாள். உடனே முரளி வெளியே வந்தான். அவளைத் தாங்கிக் கொண்டே அவள் தலை அவன் தோள் மேல் சாய மெல்ல சாலைக்கு வந்து பொன்னம்மாவையும் அவளையும் சேர்த்து ஆட்டோவில் பக்கத்திலிருக்கும் ஆஸ்பத்திரிக்கு போகச் சொன்னான், அவளும் அப்படியே செய்ய ஆட்டோ வேகமாகப் போனவுடன் மேலே வந்தான்.

    மறுபடியும் கல்யாண் வீடு.

    முரளி சொன்ன அத்தனையும் கல்யாணும் கோம்டியும் கேட்டார்கள். கோம்டி புன்னகைத்தாள்.

    “உங்க நிலைமை எனக்குப் புரியுது மிஸ்டர் முரளி. இப்போ வரைக்கும் நீங்க சொன்னதை வெச்சுப் பார்க்கிறபோது பாசவலையில சிக்கித் தவிச்சு வேற வழியில்லாம ஒருவிதமான விசித்திர வாழ்க்கையை அனுபவிச்சிருக்கீங்க.. சரி அதுக்கப்பறம் அன்னிக்கு ராத்திரி ஏன் நீங்க யாரும் பிரியாவைப் பார்க்க ஹாஸ்பிடல் போகலே.. பிரியாவுக்கு ஒரு ஆபத்துன்னா நீங்க ஓடிப்போயிருக்கணுமே.”

    “சரிதான் ஆனா பிரியாவை தூக்கிண்டு போகறச்சேயே அவன் காதுல ஒரு வார்த்தை முனகினா.. அவ சொன்னபடி செஞ்சதினாலே நான் போகலே.”

    மறுபடியும் முரளி பழைய இடத்துக்கு தன் நினைவுகளைக் கொண்டு போனான்.

    முரளி வீட்டின் வாசலறை.

    பிரியாவைக் கஷ்டப்பட்டு தோளில் சாய்த்தபோது அவன் காதருகே மெல்ல முனகினாள்.

    “இன்னிக்கு எப்படியாவது ஹாஸ்பிடல்ல நான் படுத்துண்டு நாளைக்கு வரேன். நீங்க அந்தாளை ஏதாவது சொல்லித் துரத்தி விட்டாதான் என் மூஞ்சில மறுபடி முழிக்கமுடியும்.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்.”

    அவன் தலைய ஆட்டிக்கொண்டே அவளையும் பொன்னம்மாவையும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு வீட்டுக்குள் வந்தான். அங்கே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்த கந்தசாமி உறுமினார்.

    “என்ன நாடகம்டா இது.. என்னாச்சு அவளுக்கு.. ம்.. நீ கூட நம்மளோட டேர்ம்ஸ் அண்ட் கண்டிஷனை மறந்துட்டியா.. நானும் போனா போறதுன்னு இவ்வளோ நாள் பொறுத்துண்டிருந்தேன்.. ஏண்டா மடையா.. என் வீக்னெஸ் எல்லாம் சொல்லித்தாண்டா உனக்குக் கல்யாணம் பண்ணேன். உனக்கு அதுக்காக பணமும் கொடுத்தேன், பத்து லட்ச ரூபாய்டா.. சுளையா கேஷாக் கொடுத்தேனேடா.. நீ என்னடான்னா பேரை மாத்திட்டேன் ஊரை மாத்திட்டேன், வாழ்க்கை சுகமா போறது.. அப்படியே விடுங்கன்னு கெஞ்சறே.. நோ நோ.. நீ இந்த பொம்பளைக்கு மயங்கிட்டியா சொல்லுடா.. எனக்குத் தெரிஞ்சாகணும்.”

    முரளி கொஞ்சம் மௌனம் சாதித்து விட்டுப் பேசினான்.

    தொடரும்

    Share
  • சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஓடும் வரை ஓட வேண்டும்
    உழைக்கும் வரை உழைக்க வேண்டும்
    வாடி நிற்போர் நிலை கண்டால்
    மனம் உவந்து வழங்க வேண்டும்

    மண் வாழப் பொருள் வேண்டும்
    மகிழ்ச்சி பொங்கப் பொருள் வேண்டும்
    கண் துஞ்சா உழைத்த பொருள்
    கை இருக்க அறம் வேண்டும்

    மற்றவர் வதையாக வந்திட்ட  எப்பொருளும்
    எத்தனை இருந்தாலும் இன்பமாய் ஆகாது
    கண்ணீரும் ரத்தமும் கலந்திட்ட  பொருளாலே
    களிப்புற்று நின்றிட்டால் கருணையே அழித்துவிடும்

    மாடிமனை கோடிபணம் வாய்ப்பார்கள் மகிழ்வார்கள்
    தேடியோடி சேர்த்ததெலாம் திசைமாறாப் போகுமுன்னர்
    வீடுதோறும் வாசற்படி விட்டகன்று போவதில்லை
    கேடுகெட்ட செயலென்றும் கிட்டவிடா மனநிறைவை

    மனம் வருந்தா உழைத்த பொருள்
    மன நிறைவை உவந் தளிக்கும்
    மனம் வருந்த குவிந்த பொருள்
    வாழ் வெல்லாம் பெருந் துயரே

    ஏழைகள் அழுதால் எல்லாமே அழிந்திடுமே
    ஏழைகள் அழுதகண்ணீர் கூர்வாளை ஒக்குமே
    ஏழைகளை வதைக்காமல் இரக்கத்தை இழக்காமல்
    வருகின்ற அத்தனையும் வளமாகத் தானிருக்கும்

    அடித்துக் குவிக்கும் பொரு ளெல்லாம்
    எடுக்க எடுக்க பெருந் துயரே
    அடுத்தவ ரழுகையில் வந்த பொருள்
    கெடுக்கு மென்பதை மனம் எடுப்போம்

    உடம்பினை விட்டு உயிர் போனால்
    தேடிய அனைத்தும்  கூட  வருமா
    செல்வாக் கிழந்து செருக் கிழந்து
    செல்லாக் காசாய் சிதை செல்வாய்

    தேடிய பொருள்கள் உனைப் பார்க்கா
    திரண்ட உறவுகள் கூட வரார்
    உந்தன் இருப்பிடம் மயானம் ஆகி
    ஒன்றுமே இல்லா நீ செல்வாய்

    சிந்தித்து நாமும் தெளிவடைதல் எக்காலம்
    தொந்தி சரியுமுன்னே தூய்மையுறல் எக்காலம்
    பொருளாலே அருளிழக்கும் போக்கினை மாற்றாமல்
    பொழுதினைப் பொருள்தேட செலவிடுதல் முறையாமோ !

    Share
  • பெரிய புராணம் எனும் பேரமுதம்  – பகுதி 18

     

    63 நாயன்மார்கள் வரலாறு – 17. திருநாளைப்போவார் நாயனார்

    நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்றுநாளைப்

    போவா னவனாம் புறத்திருத் தொண்டன்றன் புன்புலைபோய்

    மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான்

    மாவார் பொழிறிக ழாதனூ ரென்பரிம் மண்டலத்தே

     

        நன்மைதிகழ் மேற்கானாட் டாத னூர்வாழ

            நந்தனார் புறத்தொண்டர் நாளைப் போகப்

        பொன்மலிதென் புலியூர்க்கென் றுரைப்பார் புன்கூர்ப்

            பொய்கையமைத் தடலேறு பிரிய நோக்கி

        வன்மதில்சூழ் தில்லையிறை யருளால் வாய்ந்த

            வண்டழலி னிடைமூழ்கி மறையோர் போற்ற

        மின்மலிசெஞ் சடைமுனியா யெழுந்து நாதன்

            விளங்குநடந் தொழமன்றுண் மேவி னாரே.

    சுந்தரமூர்த்தி நாயனார் திருத்தொண்ட தொகையில் “செம்மையே திருநாளைப் போவாருக்கும் அடியேன்” என்று போற்றும் நந்தனார், சோழமண்டலத்தில், கொள்ளிட நதியின் அருகிலுள்ள மேற்காநாட்டில், நீர்வளமும், நிலவளமும் மிக்கதாய் விளங்கிய ஆதனூர் என்ற சிற்றூரில் புலையர் குலத்தில் அவதரித்தவர்.

    பகர்ந்துலகு சீர் போற்றும்

      பழைய வளம் பதியாகும்

    திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன்

      செழுமணிகள் திரைக் கரத்தால்

    முகந்து தர இரு மருங்கும்

      முளரி மலர்க் கையேற்கும்

    அகல் பணை நீர் நன்னாட்டு

      மேற்காநாட்டு ஆதனூர்

    வயல் வளம் நிறைந்த இவ்வூரில் வானுயர்ந்த மாட மாளிகைகள் நிறைந்தும், செல்வத் திருமகளின் பேராசிகளினால் கொழிக்கும் பேறு பெற்ற மக்கள் வாழும் ஊர் என்று போற்றிப் புகழ்கிறார் சேக்கிழார் பெருமான்.

    வயல் வளமும் செயல் படு

      பைந் துடவையிடை வருவளமும்

    வியலிடம் எங்கணும் நிறைய

      மிக்க பெரும் திருவினவாம்

    புயலடையும் மாடங்கள் பொலிவு

      எய்த மலியுடைத்தாய்

    அயலிடை வேறு அடி நெருங்கக்

      குடி நெருங்கி உளது அவ்வூர்.

    நந்தனார் பிறந்த ஆதனூர் எனும் அவ்வூரின் செல்வச் செழிப்பை மட்டுமல்லாமல், அவ்வூரின் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் இடங்களான புயல் தங்கும் இடங்களும் நல்கிய குடிசைகளையும், புலைப்பாடியின் அழகினையும்  காட்சிப்படுத்திச் சமுதாய வேறுபாடுகளை மன வேதனையுடன் சுட்டிக் காட்டுவதையும் காணலாம்.

    இத்தகைய சேரிப்பகுதிகளின் புலையர்களின் ஊர்த்தலைமையாக பதவியேற்று ஒப்பற்ற தலைவராக வாழ்ந்தவர். உலகியல்பின்படி இல்லாமல் சிவன்பால் அதீத பக்தி கொண்ட செம்மையான சிந்தை கொண்டவர். சிவபெருமானின் மீது சிறுவயது முதலே மாறாத பக்தி கொண்டு திகழ்ந்தவர், சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோயிலுக்குத் தம்மால் இயன்ற அளவு அருந்தொண்டு ஆற்றி வந்தார். இறைவனின் கோவில்களுக்கு நேரடியாகச் சென்று சிவதொண்டு புரிய முடியாதபோது தம்முடைய இயற்தொழிலொடு இணைந்த சிவதொண்டினை செய்து வந்தார். கூலி வேலை செய்தும், முரசுகளுக்கு தோல் தைத்து கொடுத்தும் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, சிவபெருமானுடைய கோயில்களுக்கு பயன்படுத்தும் பேரிகைகளுக்காக போர்வைத்தோல், விசிவார், ஆராதனைப் பொருளான கோரோசனை போன்ற நறுமணப் பொருள்களை இறைவனுக்காகக் கொடுப்பதற்காக, நந்தனார் ஒவ்வொரு நாளும் கோயில்களை நோக்கிச் செல்வார். கோயில் வாயிலில் நின்று, தாம் கொணர்ந்த பொருட்களைக் கொடுத்துவிட்டு, அங்கு நின்றபடியே கோயிலைப் பார்த்து ஆடிப் பாடி மகிழ்வார். கோயிலையும், கோபுரத்தையும் தரிசித்து இன்பமுறுவது அவருக்கு மகிழ்ச்சி.

    நந்தனாருக்கு மயிலாடுதுறை அருகே உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவலோகநாதரைத் தரிசித்து, தம்மால் இயன்ற அளவு திருப்பணிகள் செய்து மகிழ வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. பாடல் பெற்ற தலமான திருப்புன்கூர், வைத்தீசுவரன் கோயில் என வழங்கு புள்ளிருக்கு வேளூர்க்கு 2 மைல் தொலைவில் அமைந்துள்ள திருத்தலம். புன்கு எனும் புங்க மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட தலம் என்பதால் இது புன்கூர் எனப் பெயர் பெற்றது. நந்தனார் இக்கோயிலை அடைந்தவுடன் அன்பின் மேலீட்டால் உள்ளம் உருகி, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தோட திருக்கோயிலைச் சுற்றிச் சுற்றி வலம் வந்து ஆடிப்பாடி கோயில் முன் நின்றார்.

    அப்போது சிவலோகநாதரின் முன்னால் இருந்த பெரிய நந்தி சிவலோகநாதரைப் பார்க்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருந்தது. நந்தனார் தாம் தேடி வந்த சிவபெருமானின் தரிசனம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கண் கலங்கி வேதனையுடன் நின்றார். பின்னர் வாசலிலிருந்து திருப்புன்கூர் ஈசனை நினைத்து மனமுருகிப் பாடினார். மனம் கனிந்த சிவபெருமான் நந்தனார் மீது இரக்கம் கொண்டு சற்று வலதுபுறம் விலகி இருக்குமாறு நந்திதேவருக்கு ஆணையிட்டார். இறைவனின் ஆணைப்படி நந்திதேவர் விலகியதும் நந்தனாருக்கு சிவலோகநாதரின் தரிசனம் அற்புதமாகக் கிடைத்தது. இன்றும் நந்தி இத்தலத்தில் விலகியிருப்பதைக் காணலாம். சிவலோக நாதரைப் ஆடிப் பாடி ஆனந்தக் கூத்தாடியவர், திருக்கோயிலை பன்முறை வலம் வந்தார். பின்னர் அவ்வூரைச் சுற்றி வருகையில் ஒரு பள்ளம் இருப்பதைக் கண்டார். பள்ளத்தைப் பார்த்ததும் நந்தனார் ஊற்றுக்கேற்ற பள்ளமான அவ்விடத்தைச் சீராக வெட்டிக் குளமாக்கத் தீர்மானித்தார். இரவென்றும் பகலென்றும் பாராமல் சிவநாமத்தைச் சிந்தையிலேகொண்டு தம்முடைய உடல் வலிமையால் அவ்விடத்தில் குளத்தை வெட்டி முடித்த பின்புதான் மன நிறைவோடு ஆதனூருக்கு திரும்பினார்.

    இவ்வாறு பல தலங்களுக்குச் சென்று, தொண்டு புரிந்து வந்த நந்தனாருக்குத் தில்லை சிதம்பர நடராசரைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆனால் மிகப்பெரிய கோயிலான அதில் வெளியில் இருந்து ஆடலரசனை தரிசிக்க முடியாது என நினைந்து வருந்தினார். ஆனாலும் இரவும், பகலுமாக தில்லை நாதரையே எண்ணி எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். இருந்தாலும் ‘நாளைப் போவேன்’ என்று துணிவார். ஆனால் பொழுது புலர்ந்ததும், அக்கால கட்டுப்பாட்டினை நினைந்து புறப்படாமல் நின்று விடுவார். மறுபடியும் அவரது உள்ளம் உந்த, ‘நாளைக்குப் போகலாம்’ என்று ஆறுதல் அடைவார். மீண்டும் ஆவல் எழும் போதெல்லாம் “நாளைப் போவேன்” என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொள்வார். இவ்வாறு நாளைப் போவேன், நாளைப் போவேன் என்று ஒவ்வொரு நாளாகக் கழித்துக் கொண்டிருந்தார். இதனால் எல்லோரும் நந்தனாரை திருநாளைப் போவார் என்று அழைத்தனர்.

    தில்லை செல்லாவிட்டால் தம் வாழ்நாள் வீண் என்ற எண்ணம் நந்தனாருக்கு ஏற்பட, ஒருநாள் துணிவு கொண்ட நெஞ்சத்தோடு தில்லைக்குப் புறப்பட்டார். தில்லையை அடைந்தவர், கோவிலின் மதிற்சுவர் அருகே வேத ஒலியும், வேள்விப் புகையும் வருவதை உணர்ந்தார். கோவிலுக்குள் சென்று இறைவனின் திருநடனத்தைக் காண்பதற்குத் தமக்கு தகுதி இல்லையே என்று மனமுருகியவர் மதி‌லை வணங்கி, இரவும் பகலும் திருமதி‌‌லையே வலம் வந்துகொண்டிருந்தார். சோர்வு மிகுதியால் கோவிலின் அருகே படுத்து உறங்கிவிட்டார்.
    அப்போது நந்தனாரின் கனவில் தோன்றிய நடராசர், நந்தனே உன் விருப்பப்படி உமக்கு அமைக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்து முப்புரிநூலோடு நம் காட்சி காண வருவாய் என அருள் செய்தார். அதே சமயத்தில் அங்குள்ள தில்லைவாழ் அந்தணர்கள் கனவிலே தோன்றி என்னை வழிபட்டு மகிழும் நந்தனார் “மதிலின் புறத்தே படுத்திருக்கிறான்” நீவிர் அவனை அழைத்து வந்து தீயிடை மூழ்கச் செய்து என் சந்நிதிக்கு அழைத்து வாருங்கள் என்று ஆணையிட்டார்.
    துயிலெழுந்த நந்தனார் இறைவனின் அருளை எண்ணி வியந்தவர் ஆனந்தக் கூத்தாடினார். மறுநாள் தில்லைவாழ் அந்தணர்கள் மகிழ்ச்சியோடு எழுந்து நடராசப் பெருமான் பணித்தபடி மதிலின் புறத்தே இருந்த நந்தனாரைக் கண்டு “அம்பலத்தரசன் ஆணையை நிறைவேற்ற நாங்கள் வந்துள்ளோம்” பெருமான் பணித்ததற்கு ஏற்ப நீங்கள் மூழ்கி எழுவதற்காக தீ மூட்டித்தருகிறோம். நீங்கள் “நெருப்பிடை மூழ்கி எழுக” என்று வேண்டிக் கொண்டனர். “இறைவனின் ஆணைப்படி நடக்கட்டும்” என்று நந்தனார் கூறினார்.

    அந்தணர்கள் திருமதிலின் தெற்கு வாயிலுக்கு புறத்தே நெருப்பை மூட்டி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.  மூட்டிய தீயினை வலம் வந்து நடராசப் பெருமானை சிந்தையில் நிறுத்தி தீயினுள் மூழ்கி எழுந்த நந்தனார் உருத்திராட்சமாலையும், முப்புரி நூலும் தரித்த தேகப்பொலிவுடன் திருவெண்ணீறு அணிந்து மாமுனிவர் கோலத்துடன் தீயிலிருந்து வெளிப்பட்டார். நந்தனார் இறைவன் ஆணை வழி உருவாக்கப்பட்ட செந்தீயில் மூழ்கி எழுந்தபோது நந்தனார் பிரம்மனைப்போல் எழுந்தார் என்றார் சேக்கிழார். தில்லைவாழ் அந்தணர்கள் நந்தனாரின் அருள் வடிவத்தைக் கண்டு, அகமகிழ்ந்து அவரை வாழ்த்தி வணங்கினர். வானவர் மலர் மாரி பொழிந்தனர். சிவகணங்கள் வேதம் முழங்கினர். நான் மறைகள் ஒலித்தன. தில்லைவாழ் அந்தணர்கள் உடன் சென்றார் திருநாளைப் போவார் நாயனார். தம்மை கனவில் அழைத்த கூத்த பெருமான் சந்நிதியை நோக்கிச் சென்றார். பெருமானார் நடமாடும் மன்றுள் சென்றார். யாரும் நந்தனாரைக் காணமுடியவில்லை. கூத்த பெருமானின் மலரடிகளில் உறையும் பேரின்ப வாழ்வைப் பெற்றார்.

    தில்லை வாழ் அந்தணரும் உடன்

      செல்லச் சென்று எய்தி

    கொல்லை மான் மறிக் கரத்தார்

      கோபுரத்தைத் தொழுது இறைஞ்சி

    ஒல்லை போய் உட்புகுந்தார் உலகு

      உய்ய நடம் ஆடும்

    எல்லையினைத் தலைப்பட்டார்

      யாவர் களும் கண்டிலரால்.

     

    திருநாளைப்போவார் நாயனார் புராணம் சொல்லும் கருத்து

    பிறந்த குலத்திற்கும், இறை அன்பிற்கும் தொடர்பில்லை என்று நிரூபித்தவர் திருநாளைப் போவார் நாயனார்.

    ஐயரே அம்பலவர் அருளால்

      இப் பொழுது அணைந்தோம்

    வெய்ய அழல் அமைத்து உமக்குத்

      தர வேண்டி என விளம்ப

    நையும் மனத் திருத் தொண்டர்

      நான் உய்ந்தேன் எனத் தொழுதார்

    தெய்வ மறை முனிவர்களும் தீ

      அமைத்த படி மொழிந்தார்

    ஐயர் என்பது பிறப்பு வழி வருவதல்ல. வாழ்வில் உயரிய செந்நெறியால் பெறுவது என்பதே நம் தமிழர்களின் கொள்கை. ஒரு புறம் மாட மாளிகையையும், பிறிதொருபுறம் குடிசைகளும் இருப்பதனை சமுதாய வேறுபாடுகளாகக் காட்சிப்படுத்துகிறார் சேக்கிழார் பெருமான். 12-ம் நூற்றாண்டில் வரலாற்றுத் தகவலாகப் பதிவு செய்யப்படும், ஊர் எல்லையில் வயற்காட்டினை ஒட்டி அமைந்த சேரிக்குடில்களைப் பற்றி எடுத்துக்காட்டுகிறார். மிகப்பழமையான வீட்டின் கூரைகளின் மீது கரைக் கொடிகள் படர்ந்திருக்கும். கோழிக் குஞ்சுகளும், நாய்க்குட்டிகளும் வலம் வந்து கொண்டிருக்கும். கரிய நிறமுடைய சிறுவர்கள் தங்கள் இடுப்பில் இரும்பினாலான அரைஞாணைக் கட்டிக்கொண்டுள்ளனராம்.  இத்தகைய சேரி வாழ்க்கை முறையை இன்றும் காண முடிவதும் வேதனைக்குரிய செய்தியாகும்.

    அன்றைய சமுதாய அமைப்பின் காரணமாக மிகச்சிறந்த சிவபக்தரான நந்தனார் கோயிலுக்குள் செல்ல முடியவில்லை. வெளியே நின்று அழுது தொழுது இசையால் பாடிப் பெருமான் காட்சி கிடைக்கவில்லையே என சிந்தை நொந்த சமுதாயக் கொடுமையை விளங்கச் செய்கிறார். சேக்கிழார் பெருமான் ஐயர் என்ற சொல்லாட்சியை, தாழ்த்தப்பட்டவர்களாகத் தீண்டத்தகாதவர்களாக மக்கள் நினைத்தவர்களையே ஐயரே என அழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் பிறப்புவழி ஐயர்களாகக் கருதப்பட்டவர்களைக் கொண்டே அழைக்க வந்தார். பிறப்பு வழி அந்தணர்களாக யாரையும் ஐயரே என்று விளக்கவில்லை.

    திருநாளைப்போவார், தனது சாதியின் காரணமாக சமூகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இறைவனின் தாமரைப் பாதங்களில் மகிழ்ந்த ஒரு சிறந்த பக்தர். கோயில்களுக்கு வெளியே எங்கு கண்டாலும் நின்று, பாடுவார், பாடுவார், ஆடுவார், எங்கும் நிறைந்திருக்கும் அந்த மகிமையில் மகிழ்ச்சி அடைவார். ஆனந்தத்தினால் ஆடல் பாடல்கள் புண்ணியம் என்பது,

    நிருத்த மெந்தைமுன் யாவர் நிகழ்த்தினும்

     விரித்த பானு வயுதம் விரிகதிர் 

    பொருந்து தேரிற் புலவ ரரம்பையர்  

    கருத்தி னாடகங் காண்பர் சிவபுரி.

    நாயன்மார்களில் பண்ணார்ந்த இன்தமிழால் இசைத்தொண்டு செய்தவர்கள், திருநாளைப்போவார், ஆனாயர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், பரமனையே பாடுவார் ஆகிய நால்வர் ஆவர்.

    திருச்சிற்றம்பலம்.

     

     

     

    Share
  • சேலத்தில் தீபத் தூண்

    சேலத்தில் தீபத் தூண்

    அண்ணாகண்ணன்

    சேலம், கரிய பெருமாள் மலையின் உச்சியில் உள்ள கரிய பெருமாள் கோவிலுக்கு இன்று சென்றேன். பெருமாள் சந்நதிக்கு நேர் எதிரே தீபத் தூண் இருந்தது. அதன் உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான கிண்ணம் பொருத்தப்பட்டிருந்தது. தீபம் ஏற்ற, பக்கவாட்டில் ஏணிப் படியும் இருந்தது. நெடுங்காலமாகத் தீபம் ஏற்றியதன் அடையாளமாக, எண்ணெய்க் கறைகளும் இருந்தன.

    திருப்பரங்குன்றத்தில் இருப்பது எல்லைக்கல் என்போர், இதைக் கவனிக்க வேண்டும். அதே போன்ற தூண், அதே வடிவத்தில், உயரத்தில் பல இடங்களில் அமைந்துள்ளது. இந்தத் தூண், மலை உச்சியில் ஒரே இடத்தில் தான் அமைந்துள்ளது. எல்லை நெடுகிலும் இந்தக் கல்லை நடவில்லை. முக்கியமாக, சேலத்தில் அது தீபத் தூணாகவே பயன்பாட்டில் இருக்கிறது. திக்கெட்டும் காண, திரியில் தீபம் ஏற்றுங்கள். வரலாற்றைத் திரிக்காதீர்கள்.

    Share