பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி 19
63 நாயன்மார்கள் வரலாறு – 18. சண்டேசுவர நாயனார்


“அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக்கு அடியேன்” என்று திருத்தொண்டத் தொகையில் சுந்தரமூர்த்தி நாயனார் போற்றிப் புகழ்ந்துள்ள சண்டேசுவர நாயனார் திருச்சேய்ஞலூர் எனும் சோழ வளநாட்டில் மணியாற்றங்கரையில் உள்ள ஒரு புகழ்பெற்ற திருத்தலத்தில் அவதரித்தவர். இவ்வூரில் எச்சதத்தன் என்ற ஓர் அந்தணன் வாழ்ந்தான். பவித்திரை என்பவள் அவனுடைய இல்லத்தரசி. இவர்களுக்கு விசார சர்மா எனும் திருமகன் பிறந்தார். விசார சர்மா தமது இளம் பிராயமான ஐந்து அகவையிலேயே வேத ஆகமங்களின் உட்பொருள்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார். சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற தீவிர எண்ணம், அவர் உள்ளத்தில் இருந்த சிவாகம உணர்வை வெளிப்படுத்தியது. ஏழு வயதில் அவருக்கு குல மரபின்படி உபநயனம் நடந்தது. வேதம் ஓதும் பயிற்சியில் ஈடுபட்டவருக்கு, ஆசிரியர் வேதத்தின் பொருளை கற்பிக்கும் முன்னரே இவருக்கு நன்கு விளங்கியது.
ஒரு நாள் விசார சர்மா தன் உடன் பயிலும் வேதம் ஓதும் மாணவருடன் விளையாடச் சென்றார். அப்போது பசுங்கன்றை ஈன்ற பசு ஒன்று ஆயனை முட்டியது. சினம் கொண்ட அந்த ஆயன் அதனை தடி கொண்டு அடித்தான். அதனைக் கண்ட விசார சர்மா அவனைக் கடிந்து கொண்டு மேலும் அந்த பசுவை அடிக்கா வண்ணம் தடுத்து நிறுத்தினார். உலகில் வாழும் உயிர்களில் மேன்மையுடையது பசுக்கள். எம்பெருமானும், எம்பிராட்டியாரும் உலா வரும் விடைத்தேவரின் குலமான பசுவை கருணையே இல்லாமல் அடிக்கின்றாயே என்று கூறி, இனி தாமே பசுவை மேய்க்கச் செல்வதாகவும் கூறிவிட்டார். அதன்படியே காலையிலேயே பசுக்கூட்டங்களை அழைத்து வந்து மேயச் செய்து பின் அவற்றை நிழலில் ஓய்வு கொள்ளச் செய்து, நீர் பருக வைத்து மிக்க அன்போடு நடத்தினார். மாலை மாடுகளை அவரவர் இல்லத்தில் கொண்டு சேர்த்துவிடுவார். பசுக்களை அன்புடனும், ஆதரவுடனும் பேணிக்காத்ததால் பசுக்கள் முன்னைவிட அதிகமாகப் பால் கரந்ததும் அனைவருக்கும் பெருமகிழ்ச்சியளித்தது. விசார சர்மா உள்ளத்திலோ தானே சுரந்திருக்கும் பசுவின் மடியிலிருந்து கொட்டும் பாலை சிவபெருமானுக்கு அபிசேகம் செய்து சிவபூசை செய்ய வேண்டும் என்றும் எண்ணம் தோன்றியது. மணியாற்றங்கரையில் வெண்மணலால் சிவலிங்கம் அமைத்தவர், ஆத்தி மர மலர்களையும், தளிர்களையும் சேகரித்து, பாலினால் சிவபெருமானுக்கு திருமுழுக்காட்டி , மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார்.
இதனைக் கண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசார சர்மா பாலை வீணாக்கித் தரையில் கொட்டுவதாகப் பழி கூறினான். அவர்களும் பால் வீணாவதாக நினைத்து, விசார சர்மாவின் தந்தையான எச்சதத்தனிடம் மகனை கண்டிக்கும்படி அறிவுறுத்தினார். எச்சதத்தனும் தன் மகன் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார்.
மறுநாள் மாடு மேய்க்கச் சென்ற விசார சர்மா அறியாதவாறு எச்சதத்தன் அவரைப் பின்தொடர்ந்தார். விசார சர்மாவும் வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத் திருமேனிக்கு மலர்களைத் தொடுத்து மாலையாகக் கட்டி குடங்களில் பாலை கொண்டு வந்து சிவபூசையைத் தொடங்கினார். மகனின் வழிபாட்டு முறையைக் கவனித்துக் கொண்டிருந்த ஊரார் சொன்னது சரியே எனத்தோன்ற, கோபங்கொண்டு, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்தார். அவர் ஆத்மார்த்தமாக சிவபூசையில் ஈடுபட்டிருந்ததால், எச்சதத்தன் அடித்ததைக் கூட உணரவில்லை. ஆனால் எச்சதத்தனோ சிவனுக்காக கறந்து வைத்திருந்த பாலை தன் காலால் எட்டி உதைத்ததால் அபிசேகப் பால் முழுவதும் சிந்தியது. அதனைக் கண்டதும் விசார சர்மாவும் தன்னிலை உணர்வு வந்து, சிவபூசைக்கு ஊறு விளைய வைத்ததால் தன்னருகில் இருந்த கழியை எடுத்து எச்சதத்தனின் கால்களை நோக்கி வீசினார். அந்தக் கழியானது மழுவாக மாறி எச்சதத்தனின் இரண்டு கால்களையும் வெட்டியது. எச்சத த்தன்அவ்விடத்திலேயே உயிரிழந்தார்.
ஆனாலும் நடந்தது எதையும் அறியாமல் மீண்டும் சிவலிங்கத்தைப் பூசிப்பதில் கவனம் செலுத்தினார் விசார சர்மா. பக்தியில் கட்டுண்ட சிவபெருமான் உமையோடு விடைமீது தோன்றி, எம்மீது கொண்டிருந்த பக்தியால் தந்தையையே வெட்டிச் சாய்த்த உமக்கு இனி நானே தந்தை என்று அணைத்துத் தடவி உச்சி மோர்ந்தார். இனிமேல் நாம் உண்பனவும் உடுப்பனவும் அனைத்திற்கும் உரியவனாகும் சண்டீசன் எனும் பதத்தை அளித்து தன்னுடைய திருமுடியில் இருந்த கொன்றை மாலையை விசாரசருமருக்கு அணிவித்தார். கால்களை இழந்த எச்சதத்தன் இறையருளால் சிவலோகத்தை அடைந்தார்.
இறைவனின் அருள்வாக்கின்படி, இன்றும் இறைவனுக்கு படைக்கப்படும் பொருட்களை சண்டேசுவரருக்கு படைத்து வழிபடுகின்றனர் பக்தர்கள். சிவபக்தியால் தந்தையையும் கொல்லத் துணிந்த சண்டேசுவரருக்கு ஈசனே தந்தையானார் என்பதும், ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சண்டேசுவரருக்கு தனி இடம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
.
சண்டேசுர நாயனார் புராணம் சொல்லும் கருத்து
செம்மை வெண்ணீற்று ஒருமையினார்
இரண்டு பிறப்பின் சிறப்பினார்
மும்மைத் தழலோம்பிய நெறியார் நான்கு
வேதம் முறை பயின்றார்
தம்மை ஐந்து புலனும் பின்
செல்லும் தகையார் அறுதொழிலின்
மெய்ம்மை ஒழுக்கம் ஏழு உலகும்
போற்றும் மறையோர் விளங்குவது.
பண்ணின் பயனாம் நல் இசையும்
பாலின் பயனாம் இன் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்
கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும்
வேதப் பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்
பெருமை வரம்பு உடைத்தோ.
சண்டேசுவர நாயனார் அவதரித்த சேய்ஞலூர் எனும் ஊரின் பெருமையைப் பற்றி பேசும் சேக்கிழார் பெருமான் இவ்வூரில் சிறப்புற்று விளங்கிய அந்தணர்கள் திருநீறு பூசி சிவநெறியில் நிற்கும் தன்மையர். இப்பிறப்பிலே ஞானக்கண் திறக்கப் பெற்று இருபிறப்பாளர் என்று அழைக்கப்படும் தன்மையர். முப்போதும் எரிவோம்பும் பெற்றியர். சுகேத பத்தியம், ஆசுவணீயம், தட்சிணாக்கிளி என்பனவாகிய மூன்று வேள்விகளையும் செய்பவர்கள். நான்கு வேதங்களையும் முறையாகப் பயின்றவர்கள். நாம் ஐந்து புலன்களின் வழிச்செல்கின்றோம். அவ்வூர் பெருமக்கள் தங்கள் கருத்தின் வழிப்புலன்களைச் செலுத்துவோர். ஐம்புலனும் அகத்து ஒடுக்கும் அருட்செல்வர். வேதங்களைத் தானம், ஈதல், ஏற்றல் என்ற அறுவகைத் தொழிலில் முனைவோர், சத்திய வாழ்விலும், ஒழுக்க நெறியிலும், ஏழு உலகங்களும் போற்றும் மிகச் சிறந்த அந்தணர் வாழும் ஊர் என்று சேக்கிழார் பெருமான் எண் அலங்கார வகையில் அருமையாகப் பாடியுள்ளார்.
பண்ணின் பயனாம் நல் இசையும்
பாலின் பயனாம் இன் சுவையும்
கண்ணின் பயனாம் பெருகு ஒளியும்
கருத்தின் பயனாம் எழுத்து ஐந்தும்
விண்ணின் பயனாம் பொழி மழையும்
வேதப் பயனாம் சைவமும் போல்
மண்ணின் பயனாம் அப்பதியின் வளத்தின்
பெருமை வரம்பு உடைத்தோ.
சோழர்கள் மரபில் முடிசூட்டிக் கொள்வதற்குரிய புனித தலங்களில் சேய்ஞலூரும் ஒன்றாகும். பண்ணின் பயன் நல்லிசை. பாலுக்குப் பயன் இன்சுவை. கண்ணுக்குப் பயன் கண்ணொளி. கற்ற நூல்களின் கருத்து ஐந்தெழுத்து. வானுக்குச் சிறப்பு மழை பொழிவது. வேதத்திற்குப் பயன் சைவம். மண்ணிற்குச் சிறப்பு சேய்ஞலூர் என்கிறார்.
சூரபத்மன் முதலான அரக்கர்களை ஒடுக்கித் தேவர்களின் துன்பத்தை நீக்கும் பொருட்டு, கயிலை மால்வரையிலிருந்து புறப்பட்டு தெற்கு வந்து இறங்கிய முருகப்பெருமான் மண்ணியாற்றின் தென்கரையில் வந்து இறங்கிய முருகப்பெருமான் விச்வதர்மனால் ஒரு திருநகரை உண்டாக்கினார். அங்கு சிவலிங்கம் அமைத்து சிவபூசை செய்தார். அதனாலேயே இவ்வூர் சேய்ஞலூர் என்று அழைக்கப்பட்டது என்கிறார் ஈரோடு தங்க விசுவநாதன் அவர்கள்.
திருஆப்பாடி பாலுகந்தீசுவரர் கோயிலில் எல்லா சிவாலயங்களிலும் இருப்பதைப் போல வடக்குப் பிரகாரத்தில் தெற்கு நோக்கிய சண்டேசுவரர் சந்நிதி உள்ளது. இதைத் தவிர கருவறையின் முன்னுள்ள அர்த்த மண்டபத்தில் சண்டேசுவரர் அமர்ந்து ஆத்திமர நிழலில் தனிக் கோயிலில் எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் இரண்டு சண்டேசுவரர் திருவுருவங்கள் இருப்பது சிறப்பாகும்.
திருச்சிற்றம்பலம்
