பல்லழகன் – பகுதி 13
திவாகர்
கோம்டி வீடு
“கல்யாண்! இன்னும் தூங்கலியா?”
அவன் பெருமூச்சு விடுவது அவளுக்குக் கேட்கிறது. “தூங்கறது இருக்கட்டும். இன்னும் சாப்பிடக்கூட இல்லே.”
“முரளி அங்கே இருக்காரா?”
“இல்லே அவன் நங்க நல்லூர் அவன் வீட்டுக்குப் போயிட்டான். அவனுக்கென்ன.. அவன் மனசுல இருந்த அத்தனைக் கஷ்டத்தையும் இறக்கி எனக்குக் கொடுத்துட்டு போயிட்டான். அது இருக்கட்டும்.. உங்களுக்கு முரளி சொல்றதெல்லாம் எப்படி படறது?”
“ம்ம்.. சொல்றேன்.. நீங்க என்ன பண்ணுங்க முதல்ல போய் சாப்பிட்டுட்டு வந்து பேசுங்க..
“இல்லல்ல.. என் எதிர்லயேதான் சாப்பாட்டை வெச்சிருக்கேன்.. ஆனா ஏறத்தான் மாட்டேங்குது.. நீங்க பேசுங்க கோம்டி. உங்க பேச்சைக் கேட்டுண்டே சாப்பிடறேன். ஆனா ஒண்ணுங்க உங்க மூளை அபாரமா வேலை செய்யுது.”
“சரி, சாப்பிட்டுண்டே கேளுங்க. முரளி கொலை செய்ய வாய்ப்பிருந்தும் சரியான காரணங்கள் இருந்தும் அவன் கொலை செய்யலேன்னுதான் நினைக்கிறேன். ஆனா முரளி சித்ரா பௌர்ணமியன்னிக்கு நடந்ததுன்னு சொன்னது உண்மையாக இருந்தாலும் அதுக்கப்பறம் துப்பாக்கியை உங்க பெரியப்பா எடுத்தது.. வாய்ச்சவடாலா பேசினது.. சுட்டாலும் சுடுங்க ஆனா.. இனிமே பிரியாவை சந்திக்க கண்டிப்பா வீட்டுக்கு அவரை வரவேணாம்னு சொன்னதெல்லாம் கொஞ்சம் இடிக்குது. உங்க பெரியப்பா அவ்வளோ ஈஸியா எந்த விஷயத்தையும் விடறவர் கிடையாது ”
கல்யாண் பதில் ஏதும் சொல்லவில்லை.. ‘ம் ம்’ என்று மட்டும் சொன்னான்.
“சரி, பெரியப்பாவோட இந்த மாதிரியான பொம்பிளை ஃபோபியோ இன்னும் எங்கெல்லாம் பரவி இருக்குன்னு கண்டுபிடிக்கணும்.. அதே போல சுந்தர் எதுக்காக சிதம்பரம் போய் பிரியா வீட்டுல பத்து லட்சம் கொடுத்து இதுல இன்வால்வ் ஆனான்.. அவனுக்கு இந்த பெரியப்பாவோட லீலைகள் எவ்வளோ தூரத்துக்குத் தெரியும்.. அல்லது ஜஸ்ட் பெரியப்பாவோட கோரிக்கை மேலே பணம் கொரியர் மூலமா கொடுக்கறது போல போனானான்னும் தெரியணும்.. அவன் இந்தக் கொலைல சம்பந்தம் இருக்கான்னு பாக்கணும்.. எதுக்குன்னா அவன் டிடாச்மென்ட் எங்கிற பேருல அவனை இந்த விசாரணை சர்க்கிள்லேர்ந்தே தவிர்க்கப் பாக்கறான். அதனாலதான் சந்தேகம் வருது. ஆனா அவனோ அந்த சமயத்துல ஸ்பாட்’ல இல்லங்கறது எவ்வளோ தூரம் உண்மை.. அவன் முதல்லயே சிதம்பரமோ வைத்தீஸ்வரன் கோயில் போகாம இங்கேயே இருக்கறதுக்குக் கூட சான்ஸ் இருக்கு. அப்படியே சிதம்பரம் போனா கூட அவன் பணத்தைக் கொடுத்தானாங்கறது கூட கண்டுபிடிக்கணும். அதனால முரளிக்குத் தெரியாம சிதம்பரம் போகணும். அப்படி போகறதுக்கு முன்னாடி காலைல நான் சுந்தர்கிட்டே பேசணும்.. எப்படி பொன்னம்மாவோட சித்ரா பௌர்ணமி விஷயம் முரளியைப் பேச வெச்சதோ அதுமாதிரி சிதம்பரம் ரஞ்சிதாவோட அம்மாவும் பெரியப்பா கொடுத்த பத்துலட்ச ரூபாய் விஷயமும் சுந்தரைப் பேசவைக்கும்னு நினைக்கிறேன். இன்னும் ரவி வேற என்னன்ன விஷயம்லாம் சொல்லப் போறானோ.. அவன் சுந்தரை ஃபால்லோ பண்ணிட்டிருக்கான். கல்யாண்.. நீங்க சாபிட்டுட்டுப் படுங்க.. நாளைக்கான விஷயத்தை நாளைக்குப் பாத்துக்கலாம்.. ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயம் கிடைச்சாலும் கொலைக்கான நேரடியான விவரம் கிடைக்கலே. முரளிகிட்டே கொஞ்ச நாள் ஜாக்கிரதையா பழகுங்க..”
அவன் உம் உம் என சொன்னதிலிருந்து சாப்பிடுகிறான் என்பது புரிந்தது.
“சரி சாப்பிடுங்க.. நான் நாளைக்கு மத்யானமா உங்களைப் பாக்கறேன்.. குட் நைட்.”
என்று சொல்லிவிட்டு ஃபோனைக் கட் செய்தாள். “பாவம்.. பெரியப்பா இவ்வளோ பெரிய காமாந்தகன்னு தெரிஞ்சவுடனே அப்செட் ஆயிட்டான்.. சாதாரண காமாந்தகன் இல்லடா மகா அயோக்கியத்தனமான காமப் பிசாசுன்னு தெரிஞ்சா இவன் என்ன செஞ்சுப்பானோ.. அடடா.. இந்த சுமதியைப் பற்றி கல்யாண்கிட்ட கேட்கலையே.. சரி, நாளைக்குப் பார்த்துப்போம்.. ஆனா முரளி சுமதியைப் பத்திப் பேசறச்சே ஒண்ணும் சொல்லலியே.. பார்க்கணும் நாளைக்கு..”
என வாய்விட்டுச் சொன்னவள் கண்ணை மூடிப் படுக்க ஆரம்பித்தாள். அதற்குள் இன்னொரு ஃபோன் வந்தது. ரவிதான் பேசினான். அவன் அவளிடம் ஏதோ சொல்லச் சொல்ல நிதானமாகக் கேட்டாள்.
‘தேங்க்ஸ்டா ரவி, எனக்கு எப்பவுமே சுந்தர் மேல சந்தேகம் உண்டுதான்.. நீ சொன்னபடி அந்தம்மா பேரு என்ன சொன்னே சூடாமணி இல்லே.. அவங்க நம்பர் அனுப்பு. நான் பேசறேன், அத்தோட அந்த ஆசிரமத்துப் பெயர் சொல்லமாட்டேன்.. இந்த போலீஸ் பேரைச் சொல்லி பேசவெச்சுட்டா போச்சு. எதுக்கும் இன்ஸ்பெக்டர் மோகன்கிட்ட சொல்லி சுந்தர்கிட்டே பேசச் சொல்றேன். ஆனா போலீஸ் ரொம்ப விசாரிக்காது. அவங்களுக்கு இந்தக் கேஸ் எப்போ முடிக்கலாம்னுதான் இருக்கு,, டோண்ட் வொர்ரி.. குட் நைட்.’ ஃபோனை வைத்தாள்.
அடுத்த நாள் காலை பதினோறு மணியளவில் எக்ஸ்ப்ரஸ் மால் இரண்டாவது மாடி.. கூடவே தோழி சாந்தியுடன் ஒரு கடையில் நுழையப் பார்த்தவள் சட்டென அந்தக் கடை வாயிலில் நின்று நிதானித்தாள். சாந்தி கவனித்தாள் அவளை.
“என்னடி அப்படியே நின்னுட்டே..”
“இருடி.. உள்ளே கல்யாண் இருக்கான்”
“யாரு அந்த பல்லழகனா? இருக்கட்டுமே.. பார்த்தா நல்லதுதானே.. சிரிச்சாதான் கஷ்டம்..”
“இல்லடி.. நீ கொஞ்சம் பின்னாடி வா.. உள்ளே போகாம வெளியே கண்ணாடி மூலமா பாருடி.. அவன் கூட யாருன்னு பாக்கணும்.. அந்த பொம்பிளை யாருடி.. இன்னும் மூஞ்சியைக் காமிக்கலே,, பின்னாலே திரும்பிப் பார்த்தாதான் தெரியும்.. ஒருவேள இவதான் பிரியாவா.. அவன் அண்ணின்னு நினைக்கிறேன்..”
“யாரு.. அந்த முரளி பொண்டாட்டின்னு சொன்னியே.. அவளா இவ..?”
“இருக்கலாம்.. ஆனா இவன் எதுக்காக இவளை அழைச்சுண்டு வரணும்? ஹேய் அவ திரும்பிப் பாக்கறா.. இவளா.. இவ நம்ம சுமதி இல்லே.? அட, அதோ பாருடி உங்கண்ணன் ரவி கூட அவன் கூட எதையோ டிரெஸ் எடுக்கிறான். அட, ரவி எவ்வளோ உரிமையோட அவளைத் தொட்டு டிரஸ் மேட்ச் பண்றான் பாருடி! ”
“ஆமாண்டி நம்ம சுமதியேதான்.. ரவியும் கல்யாணும் சுமதிக்குத் ஏற்கனவே தெரியுமா?”
“பார்த்து ரொம்ப நாளாச்சு. எஸ்.. திஸ் இஸ் சுமதி.. அட இவளா.. அவங்க பெரியப்பா இந்தப் பொண்ணை இன்னும் விடலியா? இவ விஷயம் எவ்வளோ தூரம் கல்யாணுக்குத் தெரியும்? இவளோட விஷயம் தெரியும்னா இவனுக்கு அப்போ நம்ம கிலினிக்ல நடந்த விஷயம் தெரியுமா? ரவிக்கு எவ்வளோ விஷயம் தெரியும்? அல்லது தெரியாதது மாதிரி நம்மகிட்டயே நடிக்கிறாங்களா? இவகிட்ட இன்ஸ்பக்டர் வேற போகச் சொல்லி பேசச் சொன்னாருடி.. அது வேற யாரோ சுமதின்னு நினைச்சுண்டிருந்தேன். இவளுடைய கதைதான் நமக்குத் தெரியுமே.. கல்யாண்கிட்டே சுமதி எப்படி மாட்டினா.. அன்னிக்கு இன்ஸ்பெக்டர் இவளை சந்தேகமா பேசறச்சே கல்யாண் சுமதிக்கு சப்போர்ட்டா பேசினானே.. (அப்போது அவர்கள் மூவரும் பில் கவுண்டர் அருகே வருகிறார்கள்) “யேய் சாந்தி!. பாருடி நிறைய வாங்கியிருக்காங்க.. அவ பரம்பரைக்கும் மேலே வரும். ஏய் அவன் வர்றாண்டி.. கொஞ்சம் நம்மளை மறைச்சுக்கலாம். கல்யாணுக்கு மட்டுமில்லே.. சுமதிக்கும் நம்மளைத் தெரியுமே.. ரவியையும் கூப்பிடாதே.. நான் இப்போ அவங்களை பார்க்க விரும்பலே.”
என்று சொன்ன கோம்டி தன் தோழியுடன் அடுத்துள்ள கடையின் உள்ளே நுழைந்தாள். கல்யாணும் ரவியும் கூட வந்தப் பெண்மணியும் தன்னைக் கடந்த உடன் அவர்களறியாமல் பின் தொடர்ந்தாள். கீழே வந்தவுடன் அவன் ஃபோனில் அழைக்க சில நிடங்களில் அங்கே ஒரு ஊபெர் டாக்ஸி வந்தது. அதில் மூவரும் பின் சீட்டில் அமர்ந்து கொள்ள அந்த வண்டி போகத் தொடங்கியது.
சாந்தியும் கோம்டியும் வேடிக்கை பார்த்தாலும் கோம்டி ஏனோ அவர்களை அதற்கு மேலும் பின் தொடர விரும்பவில்லை.
“சரிடி.. சீக்கிரம் உன் டிரஸ் செலக்ஷனை முடிச்சுடலாம்.. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. போகணும்.”
கோம்டி வீடு (க்லினிக்) மதிய வேளையில் கோம்டி தனியாக உட்கார்ந்து குறிப்பு எடுத்துக் கொள்ளும்போது அவளுக்கு ஃபோன் வருகிறது.
கல்யாண் பேசினான்.
“கோம்டி! வீட்டுலதானே இருக்கீங்க.. உடனே நம்ம வீட்டுக்கு வந்தால் சுந்தருடன் பேசலாம்! ரவியும் இங்கதான் இருக்கான்.” .
ஒரு நிமிடம் யோசித்தாள். “சரி, இப்போ மணி ரெண்டாகுது.. அரை மணி நேரம் லேட்டானா பரவாயில்லையா? வருகிறேன்.. அவர் அங்க இருப்பாரா.. ஏதாவது மீடிங்க்னு போயிடுவாரா?” என்றாள்.
“இல்லே.. இருக்க வெக்கிறேன்.” ஃபோனை வைத்தான்.
அவள் இன்னொருவருக்கு ஃபோன் செய்தாள். “எப்படி இருக்கீங்க சூடாமணி அம்மா? சௌக்கியமா இருக்கீங்களா? எனக்கு உங்க நம்பரை சென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் உங்க ஊர் போலீஸ் மூலமா வாங்கிக் கொடுத்தார். நாம ஃபோன்லயே பேசலாமா.. இல்லே நேர வந்தா பேசுவீங்களா? எப்படி சௌகரியம்? இப்போ நான் தனியா இருக்கேன். என் பக்கத்துல யாரும் கிடையாது.. ஆனா சிதம்பரம் எனக்குத் தெரியாத ஊரு. யாராவது தெரிஞ்ச போலீஸைத்தான் துணைக்கு அழைச்சுட்டு வரணும்..”
“ஐய்யய்யோ இதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு தூரம் சிரமத்தோட வரணும்? உங்களுக்கு என்ன தேவையோ சொன்னீங்கன்னா பதில் சொல்லிடறேம்மா.. உங்க பேரு?”
“என் பேரு கோம்டி.. இது வாட்ஸப் கால்தான்.. இதையே வீடியோ காலா மாத்தி பேசலாமா? உங்களுக்கும் என் மேல நம்பிக்கை வரும்..”
வீடியோவில் அந்த சூடாமணி வந்தாள்.
“சரி, இருக்கட்டும்.. நான் நேரா விஷயத்துக்கு வரேன் சூடாமணி.. உங்களுக்கு கந்தசாமியை எவ்வளோ வருஷமா தெரியும்?”
“எந்த கந்தசாமிம்மா?” அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள் சூடாமணி.
“இதோ பாருங்க சூடாமணி.. நான் முடிஞ்சவரைக்கும் உங்களையும் உங்க பொண்ணு பிரியாவையும் காப்பாத்ததான் முயற்சி பண்றேன்.. நீங்க கோ ஆபரேட் பண்ணலேன்னா சிதம்பரம் போலீஸ் துணையோட உங்களை சென்னை அழைச்சுட்டுவந்து போலீஸ் ஸ்டேஷன்ல வெச்சுதான் விசாரிப்பாங்க.. உங்க இஷ்டம்..”
அவள் கை எடுத்து கும்பிட்டாள். “அம்மா இல்லேம்மா.. எனக்கு எதுக்கும்மா வீண்தொந்தரவெல்லாம். அந்த கந்தசாமியைப் பத்தி பேசவே வேணாம்னுதான் அப்படிச் சொன்னேன்மா.. நான் திருச்சில இருக்கறச்சே பழக்கம்மா அவர். அங்க ஒரு பெரிய அனாதைக் குழந்தைங்க காப்பகம்னு இருக்கு. அங்க பல வருஷமா வேலை பார்த்தேன்மா. ஏன்னா புருஷன் குடிகாரன்.. அவனையும் பாத்துக்கணும்.. அதுக்காக அந்த காப்பகத்துல கிட்டத்தட்ட மானேஜர் மாதிரி வேலை. அங்க கந்தசாமி அடிக்கடி வருவார். குழந்தைங்க மருத்துவச் செலவையெல்லாம் ஏத்துப்பார். அதுவும் பெண்குழந்தைங்கன்னா அடிக்கடி வெளியே அழைச்சுண்டு போய் ஊரெல்லாம் சுத்திக் காண்பிப்பார். அப்போதான் பழக்கம்மா.. அந்தக் காப்பகத்துலேர்ந்து மேல்படிப்பு படிக்க வெக்கிறேன்னு சில பொண் குழந்தைகளை தன்னோட செலவுல மெட்ராஸ்ல தெரிஞ்ச ஹாஸ்டல்ல வெச்சுப் படிக்க அனுப்பி வெச்சாரு. எங்க வீட்டுக்கு வந்து என் பொண்ணைப் பார்த்தார். அடிக்கடி வர ஆரம்பிச்சாரு.. அவருக்கு அப்பவே வயசு அம்பத்து அஞ்சோ அறுபதோ கூட இருக்கும். ஒருதடவை நான் வீட்ல இல்லாதப்ப என் பொண்கிட்ட மயக்க மருந்து கொடுத்து அத்துமீறிட்டார்மா. அவளுக்கு வயசு இருபதுதான்மா.. காலேஜ் ஃபைனல் வருஷம் போயிண்டிருந்தா.. எனக்கு இந்த விஷயம் தெரிஞ்சவுடனே சத்தம் போட்டேன்மா.. அவரு பயமுறுத்தினாரு. நாங்கல்லாம் பணக்காரங்க இல்லம்மா.. அடுத்த வாரமே நாங்க வேலையை விட்டுட்டு வீட்டைக் காலி பண்ணிண்டு எங்க ஊரு சிதம்பரம் வந்துட்டோம். ஆனாலும் அவரு விடலே.. என் பொண்ணு ரொம்ப முரண்டு பிடிச்சா.. அழுதாம்மா.. ஆனா பணம் பத்தையும் செய்யும்.. அவரு எங்க மூஞ்சில பணத்தை அள்ளி வீசினார்மா.. நாங்க வேற வழியில்லாம பொறுக்கிக்கினோம்..” அவள் அழுதாள். அழுதபடி இருந்தவள் புடவைத் தலைப்பால் முகத்தைத் துடைத்தபடி பேசினாள்.
“புரியுது.. மேலே சொல்லுங்க சூடாமணி”
“இந்த உலகத்துல எப்படி பிறந்தாலும் ஏழையா பொறக்கக்கூடாதம்மா.. அப்படி ஏழை வீட்ல பொறந்தாலும் அழகான பொண்ணா பொறக்கக்கூடாதும்மா.. அதனால் இத்தனையும் அனுபவித்தோம். பணம்தான்மா குற்றம் செஞ்சது. அந்தப் பணம் எங்க வாழ்க்கை சுகமா போறதுக்குத் தேவை. என் பொண்ணு நல்லா படிச்சவ.. ஆனா அவ இவரை மனசார ஏத்துக்கலை. ஆனா இந்த மாதிரி கொடுமை அவளுக்கு பிடிக்கலை.. வேற வழியில்லாம வயசு வித்தியாசம் ஜாஸ்தியானாலும் பரவாயில்லே.. இந்தாளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லச் சொன்னா.. இவரும் அப்படி பண்றேன்னு ஒரு வருஷகாலம் அப்படியே சொல்லிச் சொல்லி ஏமாத்தினாரும்மா. என் பொண்ணு ஒத்துக்காம சண்டை போட்டா.. எழுதி வெச்சுட்டுத் தற்கொலை பண்ணிப்பேன்னு அழுதா.. வேற வழியில்லாம அவரே ஏற்பாடு பண்றேன்னு சொல்லி அவர் உறவுக்கார பையனுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சார்மா.
“மிஸ்டர் முரளிதானே அவர் பேரு?”
“ஆமாம்மா.. ஆனா அத்தோட விட்டாரா.. நாலஞ்சு மாசத்துக்கு மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தாரு. கலியாணம் பண்ணிய பொண்ணைத் திரும்பவும் எங்கிட்டயே அனுப்பறேன்னு சொல்லி அஞ்சு லட்சம் பணம் கொடுத்தாரு. இனிமே பிரியாவைத் தானே பாத்துக்கறேன்னும் சொல்லிட்டுப் போயிட்டாரு. இது நடந்தவுடனே என் பொண்ணுக்கு ஃபோன் போட்டுப் பேசினேன்மா. அந்த ஆள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுன்னு தெளிவா சொல்லிடுத்து. பிரியா இப்போ மகிழ்ச்சியா கல்யாணம் ஆகி முழுகாம இருக்குது.. அதனால அவளே சொல்லிட்டா.. ‘இனிமே அந்தாளு பத்தி எந்தப் பேச்சும் தேவையில்லே.. அந்தாளைப் பத்திப் பேசினா அம்மா பொண்ணு உறவைக் கூட கட் பண்ணிடுவேன். ஜாக்கிரதை.. ன்னு கண்டிப்பா சொல்லிட்டாம்மா’ என் பொண்ணு. நான் அப்படியே சந்தோஷமா இரும்மா’ன்னு சொல்லிட்டேன்மா.. அவ்வளவுதான்.. அதுக்கப்பறம் நாங்க கந்தசாமியோட எந்தத் தொல்லையுமில்லாமதான் இப்போவரைக்கும் இருக்கோம். போனவாரம் அந்த ஆளை யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு சொல்லி மூணாம் நாள் போலீஸ்க்காரன் வந்து சொல்லிட்டு ரஞ்சிதான்னு இங்க யாராவது இருக்காங்களான்னு கேட்டாங்க.. அப்படி யாரும் இல்லே.. இந்த கந்தசாமி என் பொண்ணை அப்படித்தான் கூப்பிடுவாருன்னு தெரியும்.. ஆனாலும் ரஞ்சிதா புஞ்சிதா உறவெல்லாம் போனவுடனே அந்தப் பேருல என்ன இருக்குன்னு அப்படி சொல்லிட்டோம்.. இவ்வளவுதான்மா..”
“சூடாமணி! உனக்கு கந்தசாமி போனவாரம் அதாவது கொலை நடந்த அன்னிக்கு மத்தியானம் பத்துலட்சம் அனுப்பிச்சாரா? யாராவது வந்து கொடுத்தாங்களா?”
“ஐய்யய்யோ.. அப்படியெல்லாம் ஒரு பைசா வாங்கல்லம்மா.. எப்போ என் பொண்ணு சொல்லிடுத்தோ.. அப்பவே அந்தக் கந்தசாமி உறவுல்லாம் போயிடுச்சும்மா.. ஆறு மாசம் முன்னாடி கொடுத்த அஞ்சு லட்சம் பணம் கூட அப்படியே வெச்சுருக்கேன்மா.. சந்தர்ப்பம் வரச்சே திருப்பிக் கொடுக்கணும்னுதான். அப்படிப்பட்டவ எதுக்கும்மா அவங்கிட்டே நான் பணம் வாங்கணும்? எங்க குலதெய்வம் சாட்சியா, என் பொண்ணுக்குப் பொறக்கப்போற குழந்தை மேல சாட்சியா சொல்லறேன்மா.. சத்தியமா ஒரு பைசா நான் வாங்கலே.. அப்படி பணம் கொடுக்கவும் யாரும் வரல்லேம்மா” அவள் அழுதுகொண்டே தன் கையை தலைமேல் வைத்துப் பேசினாள்.
“சரி சூடாமணி.. எனக்கு இன்னொரு விஷயம் தெரிஞ்சாகணும். திருச்சிலேர்ந்து பொண்குழந்தைகளை மெட்ராஸ் அனுப்பிவெச்சு படிக்க வெப்பார்னு சொன்னியே.. அந்த இடம் சென்னையில இப்போ எங்க இருக்குன்னு சொல்லமுடியுமா?”
“முடியும்மா.. ஆனா அந்த ரிகார்ட் திருச்சிலதான் இருக்கு. எனக்கு அந்தப் பொண்ணுங்க பேரெல்லாம் நல்லாவே ஞாபகம் இருக்கு. நான் எல்லா விவரமும் கேட்டு வாட்ஸ் ஆப்’லியே கொஞ்ச நேரத்துல அனுப்பறேன்மா.. எதுக்கும்மா.. எல்லாரும் சின்னக் குழந்தைங்கம்மா.. என்னா வயசு 12, 13 இருக்கும் இப்போ..”
“இருக்கட்டும் ஒரு விசாரணைக்குதான்.. நீ விவரம் அனுப்பு.. வேற ஏதாவது கேள்வி கேட்கணும்னா நான் உன்னைக் கூப்பிடறேன். சரி வெச்சுடு..”
தொடரும்
