Blog

  • ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : நீர் ஊர்தி விருத்தி செய்தல் -2

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

     

    ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் :  
    நீர் ஊர்தி விருத்தி செய்தல் -2

    jay3

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    (1847-1922)

    “இந்த சக்தியை என்ன வென்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அது எங்கும் நிலவுகிறது என்பதை நான் அறிவேன். தனக்கு என்ன வேண்டும் என்பதை ஆழ்ந்து தெளிவாக அறிந்து, அதைக் கண்டுபிடிக்கும் வரை ஈடுபட்டு, இடையே தளர விடாமல் விடா முயற்சியில் தேடும் ஒரு மனிதனுக்கு மட்டுமே அச்சக்தி கிடைக்கிறது!”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

    “மகத்தான கண்டுபிடிப்புகள், மேன்மைப்பாடுகள் யாவும் பலரது பங்கெடுப்பு, கூட்டுப் பணிகளால்தான் ஏறக்குறைய பூர்த்தியாகி வருகின்றன. இருட்டடித்த ஒரு பாதைக்கு நான் ஒளிகாட்டியவனாக பெருமைப் படுத்தப் படலாம். ஆனால் மேற்கொண்டு அவை செம்மை ஆவதை நோக்கும் போது, மெய்யாகப் பெருமை பிறர்க்கு உரியது, எனக்கில்லை என்பதை நான் உணர்கிறேன்.”

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
    ‘

    படைப்பு வேலைக்கு, ஆக்க உணர்வு ஒரு சதவீதம்!

    வேர்க்கும் விடா முயற்சி, தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’

    தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

    ‘நீராவி எஞ்சினையும், மின்சாரத் தந்தியையும் நன்றாகப் புரிந்த நிபுணர், அவற்றை விட மேம்பட்ட சாதனங்களை அடுத்துப் படைக்க வேண்டும் என்று முற்படுவதில் தமது வாழ்வைக் கழிப்பார்’.

    ஜார்ஜ் பெர்னாட்ஷா  [‘மனிதனும், உயர்மனிதனும்’ நாடகம் (1903)]

     

    முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! எடிஸன் பிறந்த நாள்: பிப்ரவரி 11, 1847. பெல் பிறந்த நாள்: மார்ச் 3, 1847. எடிஸன் பெல்லை விட இருபது நாட்கள் முன்பு பிறந்தவர். எடிஸன் கண்டுபிடித்துக் காப்புரிமைப் பதிவு செய்தவை, 1000 சாதனங்களுக்கு மேற்பட்டவை! பெல் கண்டுபிடித்துக் காப்புரிமை பதிந்தவை, 30 சாதனங்களே ஆயினும் இருவரும் ஒரு சதவீத ஆக்க உணர்வு கொண்டு, மீதி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் விடா முயற்சியில் வேர்வை சிந்தி உழைத்தவர்கள். அவர்கள் கண்டுபிடித்த சாதனங்கள் யாவும் நுணுக்க மானவை. மகத்தானவை. உலக மாந்தரால் மதிக்கப்படுபவை. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மின்சக்திப் பயன்பாட்டுச் சாதனங்களைப் படைத்து, மின்சார யந்திர யுகத்துக்கு அடித்தள மிட்டவர்கள்! இருவரும் சமகால நிபுணரானாலும், ஒருவருக் கொருவர் பகைமை பாராட்டாது ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தனர் என்பது பாராட்டுதற்குரியது.

    இருவரிலும் எடிஸன் கண்டுபிடித்தவை எண்ணிக்கையில் மிகை யானது. முக்கியமாக மின்சாரக் குமிழி, மின்சார ஜனனி, மின்சார் மோட்டர், மின்சார இருப்புப் பாதைத் தொடர்வண்டி, தொலைபேசி வாய்க்கருவி, ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி காமிரா ஆகியவை. பெல் கண்டுபிடித்தவை: பதினெட்டுக் காப்புரிமைப் பதிவுகள் அவரது தனிப் பெயரில். பிறகு அடுத்த பனிரெண்டு பதிவுகளில் அவர் ஒரு கூட்டாளி. அவற்றில் 14 பதிவுகள் தொலைபேசி, தந்தி ஏற்பாடுகளைச் சேர்ந்தவை. நான்கு ஒளிநார்ப்பேசி [Photophone], ஒன்று கிராமஃபோன் [Phonograph], ஐந்து வான ஊர்திகள் [Aerial Vehicles], நான்கு நீர்வாயு விமானங்கள் [Hydroair Planes], இரண்டு ஸெலினியம் மின் கலங்கள் [Selenium Cells]. 1888 இல் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் [National Geographic Magazine] ஆரம்பக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார்.


    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் வாலிப வாழ்க்கை

    அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்பட்டார். 2004 ஆம் ஆண்டுத் தேர்ந்தெடுப்பில் கனடாவின் பத்து மகத்தான மனிதர்களில் ஒருவராகப் பாராட்டப் பட்டார். பெல் ஸ்காட்டிஷ் மண்ணில் பிறந்தவர் ஆயினும், அமெரிக்கக் குடிமகனாகிக் கனடாவில் குடியேறித் தனது நீர் விமானங்களையும், ஆகாய விமானங்களையும் சோதனை செய்தவர். கனடாவில் அவர் வாழ்ந்த நோவாஸ் கோஷியாவின் கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக்கில் [Baddeck, Nova Scotia, Canada] அவரது நினைவுக் காட்சி சாலை நிறுவகம் செய்யப் பட்டுள்ளது.

    1847 ஆம் ஆண்டு மார்ச் 3 இல் பெல் ஸ்காட்லந்தில் இருக்கும் எடின்பர்க் நகரில் பிறந்தார். தந்தையார் பெயர், அலெக்ஸாண்டர் மெல்வில் பெல். அவரது பாட்டனார் லண்டனிலும், தந்தையுடன் பிறந்தவர் டப்ளினிலும், தந்தையார் எடின்பர்கிலும் நாவன்மை, பேச்சுக்கலை வல்லுநராகப் [Professed Elocutionists] பணியாற்றி வந்தனர். தந்தையார் பேச்சுக்கலை நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இளைஞர் பெல் எடின்பர்க் ராயல் உயர்நிலைப் பள்ளியில் படித்து, ஓராண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஓராண்டு இங்கிலாந்தின் பாத்தில் உள்ள ஸோமர்செட்ஷயர் கல்லூரியில் உரையாளராகப் பணி செய்தார். ஸ்காட்லந்தில் இருக்கும் போதே தன் தாயின் செவிடு நிலையைச் சீர்ப்படுத்த, இளைஞர் பெல் ஒலித்துறை விஞ்ஞானத்தில் [Science of Acoustics] தன் கருத்தைச் செலுத்தினார்.

    அப்போதே வாலிபர் பெல் தொலைபேசி அமைப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.1870 இல் பெல்லுக்கு 23 வயதாகும் போது, பெல் குடும்பத்தினர் கனடாவுக்கு புலப்பெயர்ச்சியாகி, அண்டாரியோ மாநிலத்தின் பிரான்ட்ஃபோர்டு நகரில் [Brantford, Ontario, Canada] குடியேறினர். கனடாவில் வாழ்ந்த போது தொலைத் தகவல் யந்திரங்களில் கவனத்தைச் செலுத்தித் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். மின்சார முறையில் இசை ஒலியை நெடுந்தூரம் அனுப்பும், ஒரு புதிய பியானோவைப் படைத்தார். 1873 இல் தந்தையுடன் மாண்டிரியால் சென்ற போது, ஊமைகளுக்குப் பயன்படும் ‘வடிவப் பேச்சு முறையைச் ‘ [Visible Speech System] சொல்லிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது! அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஊமைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் வாலிபர் பெல்லுக்குக் காத்திருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது.

    பாஸ்டனில் அவரது தொலைபேசி ஆய்வுகளைத் தொடர்ந்து, 1876 மார்ச் 7 ஆம் தேதி தனது முன்னோடித் தொலைபேசியைப் படைத்தார். அது இசைத் தொனியைக் கம்பிகளில் அனுப்பியதுபோல், குரல் பேச்சையும் தொலைவில் அனுப்பிக் கேட்க உதவியது. அதற்கு நிதி உதவி செய்தவர், அவரது வருங்கால அமெரிக்க மாமனார். அமெரிக்கா பெல்லின் முதல் தொலைபேசிக்கு அளித்த காப்புரிமை எண்: 174,465. பெல்லின் அடுத்த படைப்பு: ஒளிநார்ப்பேசி [Photophone]. ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை அது. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவலில் [Fibre Optics] கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி பெற்ற செலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான பண்பு: ஒளிச்சக்தியின் சார்புக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால், படிக மின்தடை மிகையாகிறது. அது வெளிச்சத்தில் இருக்கும் போது, படிக மின்தடை குறைவாகிறது. அடிப்படை நியதி என்ன வென்றால், தொலைபேசி முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனியை மாறுபடுத்தும் போது, செலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனி ஒளிக்கற்றை மூலம் அனுப்பப்படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசி 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது.

    நீரில் எழும்பி விரையும் நீர் ஊர்திகள்

    பலருக்கு ஏர்ஃபாயில்ஸ் அல்லது வாயு வழுக்கி [Airfoils] என்றால் என்ன வென்று தெரிந்திருக்கலாம். ஆகாய விமானம் வானோக்கி எழுந்திடவும், இறங்கிடவும் உதவும் ‘வாயு வழுக்கி ‘ இறக்கைகள் ஒருவித ஏர்ஃபாயில்கள் தான். ‘வாயு வழுக்கிகள் ‘ ‘வாயு இயக்கிப் ‘ பண்புகளைக் [Aerodynamic Properties] கொண்டவை. ஆகாய விமானத்தில் இருபுறமும் உள்ள இறக்கைகள் வாயு வழுக்கி வடிவில் அமைக்கப் பட்டவை. வேகமாய்த் தரையில் ஏகிடும் போது மூக்கைத் தூக்கி விமானத்தை மேலே எழச் செய்பவை, இறக்கைகளில் அமைக்கப் பட்டுள்ள வாயு வழுக்கிகள். வாயு வழுக்கிகள் விமானத்தை உயரத்தில் ஏற்றவும், உயரத்திலிருந்து இறக்கவும் பயன்படுகின்றன. அதே போன்று ‘நீர் வழுக்கிகள் ‘ [Hydrofoils] நீரில் படகு செல்லும் போது படகின் உடம்பை [Hull] மேலே தூக்கவும், கீழே இறக்கவும் செய்பவை. நீர் வழுக்கிக் கால்களைப் பெற்றுள்ள படகு [Hydrofoil Boat] இரு முறைகளில் இயங்குகின்றன. 1. சாதாரணப் படகுபோல் இயற்கையான தன்மையில் நீரில் படகு உடம்பு ஓரளவு இறங்கி மிதந்து செல்வது. 2. நீர் வழுக்கிகள் மட்டும் மூழ்கிப் படகு உடம்பு முழுவதும் நீருக்கு மேல் எழுந்து விரைவது.

    சாதாரணம் படகின் பெருத்த உடம்பு நீரில் ஓரளவு மூழ்கி யிருப்பதால், நீர் நகர்ச்சிக்காக ஆற்றல் விரைய மாகிறது. ஆதலால் அது மெதுவாகச் செல்கிறது. ஆனால் நீர் வழுக்கிகள் தூக்கியுள்ள படகு நீருக்கு மேலாக இருப்பதால், உராய்வு குன்றிப் படகு வேகமாகச் செல்கிறது. அதாவது குறைந்த குதிரைச் சக்தி யுள்ள மின்சார மோட்டார் [Lower Horse Power (H.P.) Motor] நீர் வழுக்கிப் படகை [Hydrofoil Boat] வெகு வேகமாகத் தள்ளுகிறது. நீர் வழுக்கிப் படகு, நீர் வாகனம் அல்லது நீர் ஊர்தி [Watercraft or Waterplane] என்றும் அழைக்கப் படுகிறது.படகின் கால்கள் போல் உள்ள நீர் வழுக்கிகள், விமானத்தின் இறக்கைகளில் உள்ள வாயு வழுக்கிகளை விட மிகவும் சிறியவை. காரணம் நீரானது வாயுவைப் போல் 1000 மடங்கு திணிவு [Density] உள்ளது! நீர் திண்மை யானதால், விமானம் போன்று அதி விரைவில் ஓடாமல், சிறிதளவு வேகத்திலே படகை நீரின் மேலே தூக்கி விடலாம்! நீரில் படகும் செல்லும் போது, நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கிய நிலையில் மட்டுமே படகை மேலே தூக்கி வேகமாய்த் தள்ள முடியும். நீரை விட்டு நீர் வழுக்கிகள் பிரியும் போது, தொப்பென படகின் உடம்பு நீரில் விழுந்து சேதமாகி விடலாம்! படகு உடையா திருப்பின், நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கி, சீரான வேகம் அடையும் போது, மீண்டும் படகின் உடம்பு நீரை விட்டு மேலே தூக்கப்படும்!

    விமானத்துக்கு முப்புறக் கட்டுப்பாடு [Thrust, Lift, Rudder (Pitch, Roll, Yaw)] உள்ளது போல், நீர் வழுக்கியும் முப்பக்கங்களில் ஆட்சி செய்யப்பட வசதிகள் தேவைப் படுகின்றன. மேலும் விமானத்தைப் போலின்றி, நீர் வழுக்கிப் படகு நீரில் ஓரளவு குறிப்பிட்ட ஆழத்தைத் தொடர்ந்து நிலைப் படுத்த வேண்டும்! தற்கால ஜெட் விமானங்களுக்கு சுமார் 40,000 அடி எல்லை வரை உயர வீச்சு [Altitude Range] உள்ளது போல், நீர் வழுக்கிப் படகைத் தாங்கும் தூண் அல்லது கால் [Strut] உயர அளவே வரையறையாக இருக்கிறது.நவீன வர்த்தகத் துறை நீர் வழுக்கிப் படகுகள் ஏணி வழுக்கிகளைக் [Ladder Foils] கொண்டவை. படகின் பின்னுள்ள ஏணி அமைப்பில் வழுக்கிகள் மற்றும் திசைதிருப்பிகள் [Rudders] இணைக்கப் பட்டுள்ளன.

    படகுக்கு உந்து விசை [Thrust] கொடுக்க இரண்டு சுழலிகள் [Twin Rotors or Propellers] பிணைக்கப் பட்டிருக்கின்றன. மேல் எழுச்சியைத் தருபவை, நீர் வழுக்கிகள். படகு நீரில் முன்னோக்கி விரையும் போது, நீர் வழுக்கிகள் நீரோட்டத்தில் எழுச்சியை உண்டாக்கிப் படகைத் தூக்குகின்றன. நீர் ஊர்திகள் [Watercrafts (Hydrofoil Boats)] வேறு, வாயு மெத்தை ஊர்திகள் [Hovercrafts] வேறு. இரண்டு ஊர்திகளிலும் படகு உடம்பு [Hull] நீருக்கு மேலே தூக்கப்படினும், அவை எழும்பும் பொறி நுணுக்க முறைகள் முற்றிலும் மாறுபட்டவை! நீர் ஊர்தியில் நீர் வழுக்கிகள் படகுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் போது, வாயு மெத்தை ஊர்தியில், வாயு அடுக்கு [Layer of Air] எழுச்சியைக் கொடுக்கும்.


    பெல் குழுவினரும் மற்றோரும் அமைத்த நீர் ஊர்திகள்

    1861 ஆம் ஆண்டிலேயே நீர் வழுக்கித் தட்டுகள் இங்கிலீஷ் கால்வாயில் வெற்றிகரமாகச் சோதிக்கப் பட்டன என்று அறியப்படுகின்றது. 1906 மார்ச்சில் பெல், சையன்டிபிக் அமெரிக்கன் இதழில் நீர் வழுக்கி முன்னோடி நிபுணர் வில்லியம் மீச்சம் [William Meacham] எழுதிய கட்டுரையைப் படித்ததாகத் தெரிகிறது. பெல்லும் அவரது கூட்டாளி கேசி பால்டுவினும் [Casey Baldwin] 1908 ஆம் ஆண்du வேனிற் காலத்தில் நீர் வழுக்கிச் சோதனைகளில் முற்பட்டதாக அறியப்படுகிறது. அவரது குறிக்கோள் விமானம் நீரில் ஓடி நீரிலிருந்தே மேலேற முடியுமா என்பதற்கு ஆய்வுகள் நடத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் மேலும் இத்தாலியப் படைப்பாளி என்ரிகோ ஃபார்லனினியின் பணிகளைப் பற்றியும் படித்தார்கள்.1906 இத்தாலிய நிபுணர் என்ரிகோ ஃபார்லனினி [Enrico Forlanini] முதன்முதலில் ஏணிப்படி வழுக்கிகள் [Ladder System Foils] கொண்ட 60 H.P. ஆற்றலுள்ள எஞ்சின் ஓட்டும் இரண்டு உந்துசக்தி சுழலிகளைப் பூட்டிய ஒரு நீர் ஊர்தியை படைத்தார். சோதனையின் போது அவ்வாகனம் மணிக்கு 42.5 மைல் வேகத்தில் சென்றது. 1909 இல் பெல் குழுவினர் தமது புதுவித நீர் வழுக்கிப் படகைத் தயாரித்து ஆராய்ந்தனர். 1910-1911 ஆண்டில் ஐரோப்பிய சுற்றுப் பிரயாணம் செய்த பெல் குடும்பத்தினரும், பால்டுவினும் இத்தாலிக்குச் சென்று, என்ரிகோ ஃபார்லனினி தயாரித்த நீர் ஊர்தியில் பயணம் செய்தனர். துரித இரயில் பயணம் போல் சுகமாக இருந்தது என்று பெல்லின் மனைவி மேபெல் [Mabel] தனது புதல்வி எல்ஸியுக்கு [Elsie] எழுதி யிருக்கிறார். வாகனத்தின் வேகம்: 45 mph. நீரில் ஊர்தி போகும் போது, அன்னம் நீந்தியது போல் நீர் கலங்காமல் இருந்திருக்கிறது.

    1911 கோடையில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது HD1 நீர் ஊர்தியை அமைத்துச் சோதனை செய்தார். அவர் வாகனத்தில் பயன்படுத்தியது வாயுச் சுழலிகள் [Air Propellers]. கிடைத்த வேகம்: மணிக்கு 50 மைல் (50 mph). அட்லாண்டிக் பெருங்கடலில் எஞ்சின் இல்லாமலே, மாபெரும் நீர் வழுக்கிகள் கொண்ட பயணப் படகை ஒழுங்காக ஓட்டிவர முடியும் என்று பெல் கருதினார். அடுத்து 1912 அக்டோபரில் HD2 நீர் ஊர்தியை பெல் குழுவினர் தயாரித்தனர். அதன் கட்டமைப்புத் தளவாடங்களில் [Equipment] ஒன்று முறிந்து, வாகனம் முடமானது. 1913 இல் தயாரிக்கப் பட்ட HD3 வாகனம் விமானத்தைப் போன்று காணப் பட்டது. அது சரியாக இயங்காமல் பெல்லுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அமெரிக்கக் கடற்படை துறைக்கு [United States Navy Dept] HD3 வாகன இயக்க முறைகள் திருப்பி அளிக்க வில்லை. 1919 இல் 400 H.P. ஆற்றலுடைய லிபர்டி எஞ்சின் [Liberty Engine] பூட்டியுள்ள HD4 நீர் ஊர்தியைப் பெல் குழுவினர் அமைத்தார்கள். ரெனால்டு எஞ்சின்கள் மாட்டிய போது வேகம் 54 mph கிடைத்தது. இரண்டு 350 H.P. லிபர்டி எஞ்சின் பூட்டிய போது, கிடைத்த வேகம் 70.86 mph; அடுத்த 10 ஆண்டுகளாக யாரும் அந்த வேகத்தை மிஞ்ச வில்லை. அந்த நீர் ஊர்தி கனடாவின் கேப் பிரிடன் தீவில் உள்ள பெடாக்கில் பெல் குடும்பத்தினர் வாழ்ந்த போது [Lakes near Baddeck] சோதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது
    .
    1950 இல் தயாரிக்கப் பட்ட XCH4 கார்ல் படகு [XCH4 Carl Boat] கடல் விமானம் [Seaplane] என்று அழைக்கப் பட்டது. அது பயன்படுத்தியது 250 H.P. ஆற்றல் கொண்ட இரட்டை எஞ்சின்கள். போயிங் கம்பெனி 1960 மத்திம ஆண்டு காலங்களில் 425 H.P. ஆற்றல் உள்ள போயிங் வெப்ப வாயு டர்பைனைப் [Boeing Gas Turbine Engine] பயன்படுத்தி சுமார் 52 mph வேகத்தை எட்டியது.(பறக்கும் வான ஊர்தி கண்டுபிடிப்புப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்.

    [கட்டுரை தொடரும்]

    *************

    தகவல்:

    1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

    2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

    3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

    4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

    5. Encyclopaedia of Britannica (1978)

    6. The Children ‘s Encyclopedia of Science (1985)

    7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

    8. The Living World of Science in Colour (1966)

    9. Britannica Concise Encyclopedia [2003]

    10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

    11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

    12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

    13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு

    (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

    14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

    *******************

    jayabarathans@gmail.com [S. Jayabarathan (December 6, 2009)]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கேசவ், இன்றைய கண்ணனில், கண்ணனைவிட அவன் கொலுவிருக்கும் மாடம் எனக்கு, முதல் மூன்று ஆழ்வார்கள்,
    பொய்கையார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் சந்தித்த சத்திரத்து அறையை நினைவூட்டியது….அந்த அறையில் ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்….ஆழ்வார்கள் மூவரும் நின்றபோது, வானம் கருத்து மழை பெய்ததாம்….அப்போது மேக ஸ்யாமளன் அமானுஷ்யமாக அசரீரி ரூபத்தில் மூவருக்கு இடையே நின்று நெருக்கினானாம்….இந்தக் கதை நினைவுக்கு வர….!

    crazy

    “ஒருவர் படுக்க இருவர் அமர
    வருகை புரிந்தவரால் நிற்க -ஒருயிரவில்,
    பொய்கைபேய் பூதத்தார், பின்னிப் பிணைந்திட,
    செய்த மழையோன் சரண்’’….கிரேசி மோகன்….

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(132)

    – சக்தி சக்திதாசன்.

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள்.

    எத்தியோப்பியா நாட்டிலே ஒரு சமநிலப் பிரதேசத்திலே தோன்றிய மனித சமுதாயம் இன்று உலகைப் பல கண்டங்களாகப் பிரித்து வெவ்வேறு கலாச்சாராப் பின்னணிகளுடன் தமது வாழ்க்கையை நிலை நிறுத்தியுள்ளார்கள்.

    மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் அவர்களின் வாழ்க்கை விரிவடைந்த விகிதாச்சாரமும் உலகின் காலநிலை மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் நடந்தேறியுள்ளது என்பதே விஞ்ஞான உலகின் தீர்ப்பு.

    இன்று உலகின் பல பாகங்களிலும் வாழும் மனிதர்கள் தமது முன்னோர்களின் ஆதிகால வாழ்க்கை முறையையும், தாம் இன்று வாழும் நிலைக்கு வந்தடைந்த பாதையின் நெளிவு சுளிவுகளையும் ஆய்ந்தறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

    அதன் வழி உலகின் பல பாகங்களில் வாழும் பல சமுதாயங்கள் பலவகையிலான அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவ்வகையிலான அகழ்வாராய்ச்சிகளின் மூலமாகவும், பெரிய கட்டிடங்களின் அத்திவாரங்களுக்காக நிலங்களை வெட்டும் போது, தற்செயலான கண்டு பிடிப்புகளின் மூலம் மறைந்து போன பல சமுதாயங்களிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்ட வண்ணம் இருக்கின்றன.

    என்ன, எங்கே இழுத்துச் செல்கிறது சக்தியின் இந்தப் பீடிகை என்று எண்ணத் தோன்றுகிறது இல்லையா ?

    சில வருடங்களுக்கு முன்னால் என் மனைவி பணிபுரியும் நிறுவனத்தின் கிளை மூடப்பட்டு பலருக்கு வேலை பறிபோனது. தெய்வாதினமாக அக்கிளையில் பணிபுரிந்தவர்களில் மிஞ்சிய இருவரில் என் மனைவியும் ஒருவரானார். ஆனால் அவரின் அலுவலகம் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து 120 மைல்கள் தள்ளியுள்ள “ரஹ்பி (Rugby) “ எனும் இடத்திற்கு மாற்றப்பட்டது.

    ப்ராஜெக்ட் மனேஜர் பதைவியிலிருக்கும் என் மனைவிக்கு இரண்டு நாட்கள் அலுவலகத்திலும் மீதமாயிருக்கும் மூன்று நாட்கள் இல்லத்திலிருந்து ( வாடிக்கையாளர்களை சந்திக்காத போது) பணிபுரியும் சலுகை அளிக்கப்பட்டது. ஆக என் மனைவு வாரத்தில் ஒருநாள் காலை 6 மணிக்கு கிளம்பி தனது அலுவலகம் செல்வார் அன்றைய இரவு அங்குள்ள விடுதி ஒன்றில் தங்கி அடுத்தநாள் காலை மறுபடி அலுவலகம் சென்று மாலையில் திரும்பி எமது இல்லம் வருவார்.

    rugbyஅப்படி அவர் அங்கு செல்லும் வேளைகளில் எனக்கு அலுவலகத்தில் விடுமுறை எடுக்க வசதி இருந்தால் நானும் அவருடன் ரஹ்பி செல்வது உண்டு. அப்படி நேற்றைய முந்தினம் காலை அவர் தனது அலுவலகம் செல்லும் போது நானும் சென்றேன்.

    பகலில் அவர் அலுவலகம் போனதும் நான் ஹோட்டல் அறையில் தங்கி ஓய்வெடுப்பேன். இல்லையானால் அங்குள்ள சில இடங்களைச் சென்று பார்ப்பது வழக்கம். அப்படி இம்முறை நான் சென்று பார்க்க விழைந்த இடம் ரஹ்பி நகரத்தின் நூதனசாலையாகும். அவர்களின் பொதுஜன நூலகத்துடன் சேர்ந்த வகையில் நூதனசாலையும், படக் கண்காட்சி நிலையமும் அமைந்துள்ளது.

    20141125_131343[1]இந்நூதனசாலையில் வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மிகவும் விசித்திரமானவை. பண்டைய காலத்தில் ஒருவருடைய நிலத்தினுள் மற்றொருவர் அனுமதியின்றி நிழைவது மிகவும் அதீதமான குற்றமாகக் கணிக்கப்பட்ட காலமது. “உத்தரவின்றி உட்பிரவேசியாதீர் ” என்னும் பாதகையத் தாங்கியிருப்பன போலும். அப்படி நுழைந்த யாரும் பிடிக்கப்பட்டால் தண்டனையாக அவர்களைப் பிணைப்பதற்கான இருப்புச் சட்டம் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    மேலும் பலவகையான காட்சிப் பொருட்கள் அதாவது 1930ம் ஆண்டு தொடங்கி 1990கள் வரை “ரஹ்பி” எனும் அந்த இடத்தில் வாழ்ந்தவர்கள் உபயோகப்படுத்திய சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்நூதனசாலையில் அவர்கள் சேகரிக்கிம் பொருட்கள் அப்பகுதியில் வாழ்வோரிடமிருந்தே பெறப்படுகிறது. அப்படியே அக்கண்காட்சியைப் பார்த்துக் கொண்டே வலம் வந்து கொண்டிருந்தேன். அப்போது கண்களில் ” ரால்ஸ் ராய்ஸ் ( Rolls Royce) “ எனும் பிரசித்தி பெற்ற கம்பெனியின் இயந்திரம் ஒன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    640px-Tripontium_bathouse_remainsஅப்பகுதியில் நடைபெறும் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டு பிடிக்கப்பட்ட ரோமானிய காலச் சமுதாயத்தின் அடையாளங்கள் பல அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மிகவும் அதிசயமான முறையில் அந்நாளைய ரோமானியச் சமூகம் வெப்பௌ அறைய எப்படி நிர்மாணித்திருந்தார்கள் என்பதும் விளக்கப்பட்டிருந்தன. இந்த இடம் அன்றைய ரோமன் இங்கிலாந்தில் “ட்ரப்பொண்டியம் (Tripontium)“ என்று அழைக்கப்பட்டது.

    20141125_131727[1]அது மட்டுமின்றி அன்றைய ரோமன் சமூகத்தினரின் ஆபரணங்கள், உடையமைப்புகள் என்பன பற்றியும் விரிவான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய ரோமன் மக்களினது இறை நம்பிக்கை பற்றியும் குறிக்கப்பட்டுள்ளது. மனிதரின் அன்றாட வாழ்க்கையில் தெய்வங்களின் ஈடுபாட்டால் மற்ரங்கள் நிகழ்கின்றன என்று அன்றைய ரோமானிய சமூகம் நம்பியது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தக் குறிப்பிட்ட சமூகத்தினரினது புராதனச் சின்னங்களின் கண்டுபிடிப்பு அவர்களின் வாழ்க்கை முறைகளை பற்றிய ஒரு சிறுகுறிப்பு உள்ளடங்கிய வீடியோ கண்காட்சி ஒன்று ஏறத்தாழ 4 நிமிட நேர வரையிலானது அங்கே காட்சிக்காக நிறுவப்பட்டுள்ளது.

    தமது முன்னோர்கள் நாம் வாழும் இன்றைய நிலைக்கு வரும் பாதையில் சந்தித்தவைகள் எவை என்பதை தம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாத்து அதை அனைவரின் கண்காட்சிக்காக இலவசமாகக் கட்டணமின்றி அனுமதிலும் இந்நாட்டவரின் இக்குணாதிசயம் மிகவும் போற்றப்படக்கூடிய ஒன்று.

    இப்படியான ஒரு மனப்பான்மை கொண்டவர்களால் தான் தமது நாட்டைப் பற்றிய பெருமையைப் பாதுகாத்துக் கொள்ள முடிகிறது. அப்படி எம் நாட்டின் மீது நாம் பெருமை கொண்டால்தான் அதனைச் சுத்தமாக வைத்திருப்பது கொண்டு அதற்கான காரியங்களை எதுவித ஊழலுமின்றி புரியக்கூடிய மனோநிலை கிடைக்கிறது.

    அப்படியாயின் நாம் எமது புராதானச் சினக்களையும், முன்னோர்களிம் சரித்திரத்தையும் எப்படிப் பேணுகிறோம் ? சிந்திக்க வைக்கும் கேள்வி இல்லையா ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • என்னதான் இருக்கிறது வேதத்தில்?– 33

    –சு.கோதண்டராமன்.

     

    நீர், ஒளி, பசுக்கள்

    BRAHMIN_VEDAS_by_VISHNU108

     

    மூன்று வகையான உருவகங்களும் பொருந்தாத மந்திரங்களும் உண்டு. கீழே வருவனவற்றைப் பாருங்கள்.
    பசுக்களை விரும்பி அங்கிரஸ்கள் உட்கார்ந்தார்கள். அமர வாழ்வுக்கான பிரார்த்தனைகளை இயற்றினர். ருதத்தின் (தர்மத்தின்) மூலம் அவர்கள் பல மாதங்கள் செய்த முயற்சி மகத்தானது. (3.31.9)
    அங்கிரஸ்கள் பிரார்த்தனைகள் மூலம் மலைகளைப் பிளந்து பசுக்களை மீட்டனர். (6.65.5)
    இந்திரா, குத்ஸனுக்காக நீ வைகறைப் பொழுதுகளைக் கொடுத்து நீரைப் பெருக விட்ட போது, உன்னிடம் நட்புக் கொண்ட புரோஹிதர்கள் ருதத்தை (தர்மத்தை) மனதில் கொண்டு வலனைக் கொன்றார்கள். (10.138.1)
    இந்திரா, பசுக்களை நாடும் எங்களுக்கு பசுச் செல்வம் பற்றிய அறிவைத் தருகிறாய். (1.33.1)
    இந்திரா, நீ யாரை விரும்புகிறாயோ, அவரிடம் பசுவை ஓட்டி வருகிறாய். (1.33. 3)
    இருட்டுக்கு அப்பால் எந்த ஒளிமயமான உணவு உள்ளதோ, அதை எங்களுக்குக் கொடு. (1.46.6)
    இருட்டு நீரைத் தடுத்தது. (1.54.10)
    இந்திரன் தன் நண்பர்களின் உதவியோடு பசுக்களைப் பின் தொடர்ந்தார், இருளில் மறைந்து கிடந்த சூரியனை வெளிப்படுத்தினார். (3.39.5)
    மேற்கண்ட மந்திரங்களில், பசு என்பது ஞான ஒளியின் குறியீடு என்றும் சரமா என்னும் நாய் மனிதனின் உள்ளுணர்வின் குறியீடு என்றும் அரவிந்தர் கூறுகிறார்.

    அக்னி மறைத்து வைக்கப்பட்ட நீரையும், ஒளியையும், பசுக்களையும் (अपः, स्वः, गाः) கண்டுபிடித்தார். (5.14.4)
    சோமன் நீர் ஒளி பசுக்களை அடைய விரும்புகிறார். (9.90.4)
    சோமனே, எனக்கு நீர் ஒளி பசுக்களைத் தருவீராக. (9.91.6)
    மேலே காட்டியது போன்று பல இடங்களில் நீர், ஒளி, பசுக்கள் (ஆப, ஸ்வர், கோ) மூன்றும் சேர்த்துப் பேசப்படுகின்றன. அரவிந்தர் கூற்றுப்படி பசுவை ஞான ஒளி என்று கொண்டால் ஆப என்னும நீரையும் ஸ்வர் என்னும் ஒளியையும் எப்படிப் பொருள் கொள்வது? தெய்விக இன்பங்கள் என்ற அவரது விளக்கம் நமக்குத் தெளிவு தரவில்லை.

    இம் மூன்றுமே இறை அருளின் வெவ்வேறு நிலைகளைக் குறிக்கும் சொற்கள் என்று கொண்டால் இந்தப் பிரச்சினை தீர்ந்து விடுகிறது.

    எல்லா உயிர்களுக்கும் அடிப்படையில் உணவு முதலான உடல் தேவைகள் உள்ளன. மனிதரில் சிலர், பாரதி காட்டும் வேடிக்கை மனிதர்கள், இந்த உணவு நாட்டம் மட்டுமே கொண்டுள்ளனர். இதற்கு மேம்பட்ட நிலை ஒன்று உண்டு என்பதை உணராமலே வாழ்ந்து ஒரு நாள் கூற்றுக்கு இரையாகிறார்கள்.

    பல மனிதர்கள் இதோடு நிறைவு அடைவதில்லை. மற்றவரை விட மேம்பட்டு வாழ விரும்புகிறார்கள். அடுத்தவரை விடச் செல்வத்தில், வலிமையில், கல்வி கலைகளில் மேலோங்க முயல்கிறார்கள். சிலர் மட்டும் சாதனைகள் புரிந்து புகழ் பெற்று இறப்புக்குப் பின்னும் பிறரால் போற்றப்படும் நிலையை அடைகிறார்கள். வேதத்தில் பெரும்பாலான இடங்களில் இந்த தேவ நிலை, அமரத்துவம், ஸ்வர் என்னும் ஒளியே மனிதனின் லட்சியமாகக் காட்டப்பட்டுள்ளது.

    புகழை நாடுபவர்கள் அதற்கு மேல் நிலை ஒன்று இருப்பதை அறியார். சில மனிதருக்கு மட்டும் புகழ் நிலைக்கும் மேலான நிலை ஒன்று இருக்கக் கூடும் என்பது உள்ளுணர்வால் தெரிகிறது. தேவர்களுக்கெல்லாம் மேலான பரம் பொருள் ஒன்று இருக்க வேண்டும் எனக் கருதுகிறார்கள். அது பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், அதனோடு இணைய வேண்டும் என்ற பேரவா கொள்கிறார்கள்.

    ஆனால் அதை அடைவது எளிதல்ல. மனிதனின் உலகியல் அறிவு அவனை மேல் நோக்க விடாமல் செய்கிறது.

    நேற்று எனக்கு உதவி செய்தவருக்கும், நாளை எனக்கு நிச்சயமாக உதவி செய்யக் கூடியவருக்கும் மட்டுமே நான் உதவி செய்வேன் என்று சொல்வது வணிக புத்தி. இதை நாம் இறைவனிடமும் காட்டுகிறோம். திருமணம் கை கூடினால் அபிஷேகம் செய்கிறேன், வேலை கிடைத்தால் 108 தேங்காய் உடைக்கிறேன் என்று வேண்டுவதும், இன்னின்ன தானம் செய்தால் இன்னின்ன நன்மை கிடைக்குமென்று நம்புவதும் அந்த வணிக புத்தியால் தான். இதனால் சிறு சிறு நன்மைகளைக் குறிக்கோளாகக் கொள்கிறோமே அன்றி உயர்ந்த லட்சியமாகிய நமக்கு உரிமையான பேரானந்தத்தை இழக்கிறோம். இந்த வணிக புத்தியைக் கொன்றால் தான் பேரானந்தமாகிய பசுக் கூட்டங்கள் நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பதைத் தான் தேவர்கள் பணியைக் கொன்று பசுக்களை மீட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    அங்கிரஸ்கள் தங்கள் உள்ளுணர்வால் ஆனந்தம் இருக்குமிடத்தை அறிந்தனர். உழைப்பாலும், நற்செயல்களாலும், பிரார்த்தனைகளாலும் மலையைப் பிளந்தனர், பசுக்களை அடைந்தனர் என்ற (1.83.4, 1.71.2) மந்திரங்கள் பெரும் முயற்சி செய்து பல தடைகளைக் கடந்து இறை அனுபவம் பெற்ற அங்கிரஸ்கள் மற்றவர்கள் பேரானந்தம் அடைய இதையே பாதையாக அமைத்தனர் என்பதையே காட்டுகின்றன.

    இறைவன் என்ன செய்கிறான்? உணவு நாட்டம் கொண்டவனுக்கு உணவு கிடைக்கச் செய்கிறான். இதற்கு மானிடன் பெருமுயற்சி செய்யத் தேவை இல்லை. கல்லினுட் தேரைக்கும் கருப்பை அண்டத்து உயிர்க்கும் புல்லுணவு அளித்துக் காக்கும் இறைவன் அதற்கு ஏதேனும் தடை ஏற்படும்போது அதை நீக்கி உணவு கிடைக்க அருள் புரிகிறான். இது தான் இந்திரன் விருத்திரனைக் கொன்று நீரைப் பெருக விட்ட கதை.

    ஸ்வர் என்பதும் ஜ்யோதி என்பதும் புகழைக் குறிக்கின்றன. இந்தப் புகழ் ஜ்யோதியை மறைக்கும் தஸ்யு யார்? ஜ்யோதியை எவராவது மறைக்க முடியுமா? ஆம். நமது கையிலுள்ள குடை மறைக்கக் கூடும். நாம் அமைத்துக் கொண்ட வீடு மறைக்கக் கூடும். நாம் கண் இமைகளை மூடினால் கூட ஜ்யோதி புலப்படாமல் போகும். நம் புகழை மறைக்கும் தஸ்யு வெளியில் இல்லை. நம்மிடத்தில் தான் இருக்கிறான். ராட்சசர்களைப் பற்றிப் பார்க்கும் போது ராட்சசர் என்பார் நம் மனத்தில் உள்ள தீய பண்புகள் தான் என்று பார்த்தோம். நாம் விரும்பிய போதும் முயன்ற போதும் புகழ் பெற முடியாமல் தடை செய்பவை சோம்பல், கவலை, கோபம், பயம், பொய், ஆசை ஆகிய நம் மனத்தில் உள்ள பகைவர்களே. இந்தப் பகைவர்களை வென்று நாம் புகழ் பெற வழி காட்டுகிறான் இறைவன். இது தான் தேவர்கள் தஸ்யுக்களை வென்று ஜ்யோதியை மீட்ட கதை.

    முதல் நிலையில் நீர் கிடைக்காத துன்பம் நாம் வேண்டாமலே நீக்கப்படுகிறது. இரண்டாவது நிலையில் புகழ் இல்லாத நிலை நம்முடைய மனத்தைத் தூய்மை செய்து கொண்டால் போய் விடுகிறது. மூன்றாவது நிலையில் பேரானந்தம் பிறர் நலனுக்கான நற்செயல்கள் செய்வதில் உழைப்பதாலும், பிரார்த்தனைகளாலும் கைகூடுகிறது. இந்த மூன்றுமே மனிதர்க்குத் தேவை என்பதைத் தான் நீர், ஒளி, பசு தருக என்று வேண்டும் மந்திரங்கள் தெரிவிக்கின்றன.

    படம் உதவி: http://vishnu108.deviantart.com/art/BRAHMIN-VEDAS-160338756

    Share
  • சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்…

    -தாரமங்கலம் வளவன்

    சுடுமணலில் என் வெற்றுக் கால்கள்
    தவித்தபோது ஓங்கி வளர்ந்த ஆலமர நிழலாய்
    நீ நின்றாய்
    ஓடி வந்து உன் நிழலில் இளைப்பாறினேன்!

    சொட்டு நீர் கிடைக்குமா என்று தாகத்தில்
    என் நாக்கு வறண்ட போது
    பொங்கி வரும் நீரூற்றாய்
    நீ என் தாகம் தணித்தாய்!

    நான் சரிந்த போது என்னைத் தாங்கிப் பிடித்தாய்
    துவண்ட போது தோள் கொடுத்தாய்
    உன் அரவணைப்பை உதறித்தள்ளி ஓடியபோதும்
    என் பின்னால் ஓடி வந்தாய்!

    இன்று…
    நான் ஓடியது வெற்று ஓட்டம்
    என்பது புரிந்து விட்டது!
    என் ஓட்டம் நின்று விட்டது…
    திரும்பிப் பார்க்கிறேன்
    நீ தூரத்தில் தள்ளாடித் தள்ளாடி வருகிறாய்!

    முன்பு போல்
    உன்னிடம் வேகம் இல்லை
    காரணம் முதுமை என்கிறாய்!

    நேற்றை விட இன்று
    உன் நிழல் எனக்குக் கண்டிப்பாய்த் தேவை
    உனக்கு மூப்பும் சாவும் வரக்கூடாது
    என்றும்
    என்னுடன் நீ வர வேண்டும்!

    Share
  • குடிமுழுதும் காத்துவிடு !

        -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          படிபூசை செய்து உனை
          பாடி நிதம் அடியார்கள்
          அடிதொழுது நிற்கின்றோம் – ஐயப்பா         ayyappan
          எங்கள் குடிமுழுதும்
          காத்து விடு – ஐயப்பா!

          அனுதினமும் பாடி உனை
          அடிதொழுது பரவி விடும்
          அடியவரின் மனதில் உறை – ஐயப்பா
          கொடிய வினை எமையகல
          குடிமுழுதும் விடிவு பெற
          அனுதினமும் அருள் தருவாய் – ஐயப்பா!

          மடிமீது குழந்தை என
          தினமும் உனைப் பார்க்கிறோம்
          மனம் இரங்கி வந்திடுவாய் –  ஐயப்பா
          தலைமீது கால் வைத்து
          தமியேனைக் காக்க என
          சடுதியாய் வந்து விடு  – ஐயப்பா!

          தேடி உனை நாடிவர
          கூடி வரு வினையகல
          ஓடி வரு அடியவரைப் பாராயோ
           பாதமது தந்து எமைக் காவாயோ!

          மலையேறி வரு மடியார்
          மனதிலுறை எண்ண மெலாம்
          உனது நினை வல்லவோ ஐயப்பா
          உன்முமதைக் காட்டிவிடு மெய்யப்பா!

           படியேறிப் பதம் பணிந்து
           பலமுறையும் துதி பாடி
           அடிதொழுது நிற்கின்றோம் ஐயப்பா
           அருள்புரிந்து காத்துவிடு ஐயப்பா!

    Share
  • ஒரு அமெரிக்கக் குழந்தையின் சோகக் கதை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவின் நியுயார்க் நகர் மருத்துவமனை ஒன்றில் போன வாரம் இரண்டு வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது. இந்தக் குழந்தை போன வாரம்தான் ‘இறுதியாக’ இறந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்பே அக்குழந்தையின் மூளை செயலற்றுப் போய் அது இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர் . குழந்தை இறந்த பின்பு தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த போராட்டத்தால் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் ஆணைப்படி அந்தக் குழந்தையை செயற்கைக் கருவிகள் மூலம் உயிரோடு வைத்திருந்தனர். அந்தக் குழந்தையின் கதை ஒரு சோகக் கதை.

    அக்குழந்தையின் பெயர் தையா ஸ்ப்ருயில்-ஸ்மித் (Thaiya Spruill-Smith). இக்குழந்தைக்கு சாதாரணமாக மற்றக் குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத ப்ரோக்கோலி (broccoli) என்ற காய்கறி மிகவும் பிடிக்கும். மிக்கி மௌஸின் ஜோடியான மின்னி மௌஸைப் (Minnie mouse) பிடிக்கும். ‘ஸ்பேஸ் ஜேம்’ (Space Jam) என்ற சினிமாப் படத்தைப் பார்க்கப் பிடிக்கும். மாற்றாந் தகப்பனால் முரட்டுத்தனமாக உலுக்கப்பட்டு கட்டிலில் தூக்கி எறியப்பட்டதால் மூளையிலும் மற்ற இடங்களிலும் காயமுற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தாள். தாய்க்கும் தகப்பனுக்கும் இடையே முற்றியிருந்த பிரச்சினையால் இக்குழந்தையின் பிரேத பரிசோதனை, நல்லடக்கம் எல்லாம் பிரச்சினை தீர்ந்த பிறகுதான் நடந்தன.

    தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளியிலேயே இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு தொடர்ந்தது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.. அதனால்தானோ என்னவோ ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு என்ன ஆயிற்றோ இருவருக்கும் ஒருவரையொருவருக்குப் பிடிக்காமல் போய் தனித் தனியே வாழத் தொடங்கினர். தையாவின் தாய் ஆதாம் என்ற மற்றொருவரை மணந்துகொண்டபின் தன் மகள் மாற்றாந் தகப்பனால் துன்புறுத்தப்படலாம் என்று அஞ்சி தையாவின் தகப்பன் குழந்தை தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுவரை தையா தாயோடு இருந்துவந்தாள். எப்போதாவது தகப்பனோடு சில நாட்களைக் கழிப்பாள். ஒரு முறை தையாவின் தந்தை தையாவை தன் வீட்டிற்குப் பதிலாகத் தன் தாயின் வீட்டில் நான்கு நாட்கள் வைத்திருந்தார். தான் அப்படிச் செய்ததற்குக் காரணம் தையா தாயிடம் போக விரும்பாததே என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் குறித்திருந்த நாட்களுக்கு மேல் குழந்தையை வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். தையாவின் தந்தைக்குக் கெட்ட சகவாசம் இருக்கிறது என்றும் அவன் தன்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான் என்றும் இதனால் தையாவைத் தகப்பனின் பொறுப்பில் இருக்கவிடுவது சரியில்லை என்றும் தையாவின் தாய் நீதிமன்றத்தில் வாதிட்டாள். தாயும் தந்தையும் குழந்தை தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருந்தபோது குழந்தை இறந்த துயரச் சம்பவம் நடந்தது.

    மறுமுறை கருவுற்ற தையாவின் தாய் தன்னுடைய முன்னாள் காதலனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக வேறு வீட்டிற்கு மாற விரும்பினாள். அதற்குரிய வேலைகளைச் செய்ய வெளியே செல்ல வேண்டியிருந்தது. குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்றால் அதிக நேரம் ஆகலாம் என்பதாலும் மேலும் கணவன் அந்தச் சமயம் வீட்டில் இருந்ததாலும் குழந்தையை வீட்டில் விட்டுச் சென்றாள். தாய் தன்னை அப்படி விட்டுச் சென்றபோது குழந்தை அழுதிருக்கிறது. ஆயினும் வேறு வழியில்லாமல் விட்டுச் சென்றிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய் திரும்பி வந்தபோது தையா தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள். சில மணி நேரம் கழித்து எழுந்தவள் பேசியிருக்கிறாள். ஆனால் தான் விரும்பிய எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடவில்லை. மறு நாள் காலையில் எழுந்தபோது குழந்தை நார்மலாக இல்லை. குழந்தையின் மூச்சு தாறுமாறாக இருந்தது. ஆம்புலன்ஸைக் கூப்பிட்டுக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே குழந்தை இறந்துவிட்டது. தாய் வெளியே சென்ற பிறகு தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தையாவை தையாவின் மாற்றாந் தகப்பன் தூக்கிப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கியிருக்கிறான். பின் கட்டிலில் தூக்கி வீசியிருக்கிறான். இதை அவனே பின் ஒப்புக்கொண்டான்.

    குழந்தை இறந்த பிறகு தாய்க்கு அவளுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்து அவை பல குழந்தைகளுக்குக் கிடைத்து அதன் மூலம் தன் மகள் உலகில் பல காலம் வாழ்வாள் என்று எண்ணினாள். தையாவின் தந்தைக்கோ மகளின் உடலைத் துண்டுபோடுவது பிடிக்கவில்லை. ‘என் மகளின் அழகிய கண்கள் அப்படியே இருக்க வேண்டும். அவள் எப்படி இருந்தாளோ அப்படியே இறந்த பிறகும் இருக்க வேண்டும்’ என்றார்.

    தையாவின் உடல் உறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று தாயும், கொடுக்கக் கூடாது என்று தந்தையும் சண்டை போட்டதால் இந்தத் தகராறு முடியும்வரை தையாவை ‘உயிரோடு’ வைத்திருக்க வேண்டும் என்றும் அவளுடைய உடலில் இருக்கும் இணைப்புகளை அகற்ற வேண்டாம் என்றும் நீதிமன்றம் மருத்துவமனைக்கு ஆணையிட்டது. இரண்டு பெற்றோர்களின் சம்மதம் இருந்தாலொழிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாது என்று சட்டம் இருப்பதால் இந்த ஆணை. கடைசியாக, தந்தைக்கு வெற்றி கிடைத்தது. தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமலே அவளுடைய உடல் புதைக்கப்பட்டது.

    தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்தாலாவது அவளுடைய வன்முறை இறப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

    ஜெயகாந்தன் தன்னுடைய சிறு கதை ஒன்றில் குழந்தைகள் எப்படிக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றனர் என்பதை இப்படிக் குறிப்பிடுவார்: …இருவருக்கும் பொதுவானதாய், இருவரிலிருந்தும் பிரிக்க முடியாததுமாய்…..அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தக் கூற்று எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் 40 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத ஜோடிகளுக்குப் பிறக்கின்றன. குடும்பம் என்ற சமூக நிறுவனம் (Social Institution) அமெரிக்காவில் சிதைந்துகொண்டு வருவதால் குழந்தைகள் தாய், தகப்பன் என்று இரண்டு பெற்றோரோடு வாழும் வாய்ப்பை இழந்து வருகின்றன. இப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுள்ள இரண்டு பெண்கள் அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழும்போது அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் இருவரும் ஒரே பாலைச் (gender) சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை. தாய், தந்தையரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் சமூகம் குழந்தைகளின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    Share
  • நாகர்கள் 2

    விசாலம்

    ரீமா தான் ஒரு வாரம் லீவு கேட்டபடி தன் ஊர் சென்றாள். பின் அவள் திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.  மறு நாள் அவள் வந்தாள். அவள் தாமதமாக வந்ததற்கான காரணம் கேட்டேன். நாகாலாந்தில்    எல்லா வேலைகளும் பெண்களே செய்யும் நிலைமை. ஆகையினால் வருவதில் தாமதமாகிவிட்டது என்றாள்.

    “ஏன் ரீமா? அப்படி என்னென்ன  வேலைகள் நீங்கள் செய்யவேண்டும்?”

    “காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு வர குடங்களுடன் வெகு தூரம் நடக்க வேண்டும். காட்டுப்பக்கம் போய் மரங்களிலிருந்து சுள்ளிகள், மரக்கட்டைகள் வெட்டி எடுத்து தலையில் சுமந்து வரவேண்டும். வீடு வந்தவுடன் எல்லோருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். பின் கள் காய்ச்ச வேண்டும். பின் நிலத்திற்குப் போய்  விதை விதைத்தல், களையெடுத்தல் என்ற பல வேலை.  பின் வீட்டிற்குத் திரும்பியவுடன்  ஆடை நெய்ய வேண்டும். இப்படி உழைப்பைத்தவிர வேறு ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை.”

    “நீங்கள் கழுத்து முழுவதும் பல பாசி மணிகள், குண்டு குண்டு மணிகள் அணிகிறீர்கள். தவிர உங்கள் நாட்டியத்தில் பலர் மிருகத்தின் தலைப்பகுதியை அணிகிறார்களே!”

    “ஆமாம்  மேடம்  எங்கள் ஆண்கள் மிருக வேட்டைக்குச் சென்று  அதன் தலையை கொய்து எடுத்து வரும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களது  வீரம் வெளிப்படுகிறது. தவிர அவர்கள்  இதை மிக கௌரவமாகப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது போல் மிருகத்தின் தலை வீட்டின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வரவேற்கும்.  காட்டெருமை, கரடி, மான், புலி என்று பல மிருகங்களின் தலைகள் வீட்டு அறையில் மாட்டப்பட்டிருக்கும். அப்படி மிருகத்தின் தலையைத் துண்டிக்காத ஆணை  எங்கள் ஜாதியில் பசு என்றும்  பெண்ணென்றும் கேலி செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் இது போன்ற வேட்டை தடுக்கப்பட்டிருக்கிறது.”

    ” ரீமா  உன்னுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் திருமணம் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக  உள்ளேன்.”

    ” எங்கள்  பிரிவில் ஆண் ஆதிக்கம் அதிகம், பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. அவள் தாயாகி, குழந்தைகள் சுமந்து, உணவு தயாரித்து

    தன் சம்பாத்தியத்திற்கு உல்லன்  ஷால் அல்லது துணி நெய்து  உழைக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுக்க வேண்டுமென்றாலும் அதை ஆண்மகன் தான் எடுப்பான். பெண்களுக்கு அதில் உரிமை இல்லை. எங்கள் ஜாதியில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவிலேயே இருக்கும் ஒரு  பெண்ணை  அந்தப்பிரிவில் இருக்கும் ஆண் மணம் புரியக்கூடாது.”

    “ஆமாம் இது எங்களுக்கும் உண்டு. ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்ய மாட்டார்கள். அவர்கள் உறவு சகோதர சகோதரி ஆகும்.”

    ” எங்கள் ஜாதியில்  வயது வந்த  பிள்ளைகள், பெண்களை  ஊர் எல்லைப்பகுதியில் எழும்பி இருக்கும் ஒரு கட்டிடத்தில் அனுப்பிவிடுவார்கள். இந்த இடத்தின் பெயர் “மொருங்க்”.

    நாகா கலாசாரத்தில் இந்த வயது வருபவர்கள் இங்கு வந்து  பல பெரியவர்களிடமிருந்து  இந்த கலாசாரத்தைக் கற்க வேண்டும். அவர்களது சடங்குகள், நாட்டியங்கள், கலைகள் எல்லாம்  நாட்டுப்பாடல் மூலமாகவும் பிரசங்க மூலமாகவும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும். அங்கு சிற்பக்கலை, மரவேலை, நெசவு எல்லாமே படிக்க வேண்டும். தவிர எதாவது முக்கிய சமாசாரமாக  இறப்பு, பிறப்பு,  பூஜை, அபாயம் போன்ற செய்திகளை .    பெரிய பேரிகை அடித்து அந்தக்கிராமம் முழுவதும் சொல்லி வரவேண்டும். பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்படும்.”

    “அது சரி. காதலைப் பற்றி சொல்லவே இல்லையே!”

    “அங்காமி என்ற பிரிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அதை அவனது தந்தையிடம் சொல்ல வேண்டும். தந்தை தன் நண்பனை அனுப்பி பெண் வீட்டு சம்மதத்தைக் கேட்பார். பெண் வீட்டில் சம்மதித்தால் தந்தை ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அது  உங்களுக்கு மூட நம்பிக்கையாகக்கூட தோன்றும்.”

    “அப்படி என்ன நிகழ்ச்சி! கேட்க  ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே!”

    “ஒரு கோழியைக்கொண்டு வந்து நல்ல நேரம் பார்த்து அதன் குரல்வளையை நெரிப்பார். அப்போது அதன் கால்கள் துடித்து சில திசைகளில் குறுக்க முறுக்கிக்கொள்ளும். அது சுபமான  முறுக்காக இருந்தால் அந்தத் திருமணம் நிச்சயிக்கப்படும். ‘

    “அப்பப்பா  என்ன கஷ்டம் ஒரு காதலுக்கு! ஒரு பறவை பலியா?  பெண்ணிடம் சம்மதம் கேட்கமாட்டார்களா? “

    “பெண்ணும் இந்த  வரனைத் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எப்படி என்றால் அவள் மூன்று நாட்களுக்குள்  கெட்ட கனவு கண்டால் அதைக்காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்தமுடியும்.”

    “அப்பாடி  நல்ல வேளை! கொஞ்சமாவது சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களே  அதுவரை  மகிழ்ச்சிதான்”  என்று சிரித்தபடி அவளைப் பார்த்தேன். அவளும் மிகவும் வெகுளியாக சிரித்தாள். பின் தொடர்ந்தாள்,

    “எங்கள் ஜாதியில் கோன்யாக் என்ற பிரிவில் இருப்பவர்கள் அரச பதவி போல் முக்கிய ஸ்தானத்தில் இருப்பார்கள். அவர்கள் மட்டும் தங்கள் பிரிவிலேயே பெண் எடுக்கலாம். அதாவது ராணி போல் வரும் பதவியில் அதே வம்சம் தொடர்ந்து வரும். இந்த சலுகை  இந்த  கோன்யாக் என்ற பிரிவுக்கு மட்டுமே உண்டு.”

    “இது எதனால் ஏற்பட்டது ரீமா?”

    “ஓ! அதுவா அதற்கும் ஒரு கதை உண்டு. எங்கள் நாட்டு முதல் மனிதன் நிக்தோகா. இவன் திருமணம் செய்துக்கொண்டான். அவனுக்கு ஆறு மகன்கள் பிறந்தன. ஆனால் முதல் மகனுக்கு மட்டும் மணமகள் கிடைத்தாள். மற்ற  சகோதரர்கள் தங்களுக்கும் திருமணம் ஆகும் என்று பொறுத்திருந்தும் ஆகவில்லை. இதனால் வீட்டில் சண்டை வந்து அவர்கள் வீட்டை விட்டுப்போய் அன்னியத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் தான் இந்த வழக்கம் வந்ததாம்.”

    “எங்களது போல் உங்களுக்கும்  எல்லாவற்றுக்கும் ஒரு கதை

     இருக்கிறது. சரி மேலே சொல்லு. திருமணம் எப்படி நடக்கும் ?”

    அவள் மேலே தொடர்ந்தாள்…

    Share
  • இனியதோர் ஈழத்து எழுத்தாளர் இறை உலகெய்தினார்

    சக்தி சக்திதாசன்

    ஈழத்து எழுத்தாளரும் “மித்ரா” அச்சக உரிமையாளருமான அன்பு ஐயா எஸ்.பொ அவர்கள் நேற்றைய தினம் இறைஉலகெய்தினார் எனும் துயரச் செய்தியின் பின்னனியில் அவருடனான என் நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன்.

    ass

    2005ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நிலாச்சாரல் இணைய இதழை நடத்தி வருபவரும். கண்னி மென்பொருள் வல்லுனரும், என் இனிய தோழியுமான நிலா என்றழைக்கப்படும் நிர்மலா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிர்பலங்கள் பலரை நிலாச்சாரல் இணைய இதழுக்காக பேட்டி கண்ட நேரம்.

    அப்போது என் அதிர்ஷடவசமாக சென்னையிலே தங்கியிருந்தார் நேற்றுக் அவ்ய்ஸ்திரேலியாவில் காலமான அன்பு ஜயா ம் ஈழத்து எழுத்தாளர் திரு. எஸ்.பொ அவர்கள்.

    சந்திப்பாரோ ? மாட்டாரோ ? எனும் ஒரு சந்தேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

    மிகுந்த மகிழ்ச்சியுடன் ” சக்தி சக்திதாசனா? ஆமாம் உனது எழுத்துக்களை படித்திருக்கிறேன், அச்சகத்திற்கு வா ? சிற்றுண்டி அருந்திக் கொண்டே பேசலாம் ” என்றார் அந்த அன்பு எழுத்தாளர்.

    ஈழத்து இலக்கியச் சிற்பி ஒருவரை இந்தக் கற்றுக்குட்டி என்ன நேர்காணல் காணுவது ? ,அமதுக்குள் ஒரு ஆதங்கம் இருப்பினும் இத்தகைய புகழ் மிக்க என் அன்னை நாட்டு எழுத்தாளரை தமிழக மண்ணில் சந்திப்பதையிட்டு பெரு மகிழ்வோடு அவரைக் காணச்சென்றேன்.

    இனிவருவது ஏற்கனவே நிலாச்சாரலில் வெளிவந்த என்னுடனான அவரது நேர்காணல். நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றியறிதல்களைச் செலுத்திக் கொண்டு அதை இங்கே சந்தர்ப்பம் கருதி மீள்பிரசுரிக்கிறேன்.

    இந்த நேர்காணலைத் தவிர்த்து அவர் எனக்கு தனது அனுபவம் சார்ந்த பல அறிவுரைகளைத் தந்தார். அவை என்றும் என் மனப்பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டேயிருக்கும்..

    காலையில் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாருங்கள், காலைச் சிற்றுண்டி அருந்தியபடியே பேசலாம் ” என அன்பான, நட்பு மிளிர்ந்த அதிகாரமிக்க அழைப்பு. அதுவரை நான் சந்தித்திராத, சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்து உதாரண எழுத்தாளர் அவர்களோடு நடந்த முதல் தொலைபேசி உரையாடலின்போது அவரின் வெளிப்படையான பேச்சும் அந்த நட்புணர்வும் அவர்மீது கொண்டிருந்த மதிப்பை இன்னும் பெருக்கியது.

    திரு எஸ். பொன்னுத்துரை எனும் எஸ்.பொ. அவர்கள் பலவருடங்களுக்கு முன்னால் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்திருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் பிகப்பெரிய பங்கு வகிக்கிறார். சென்னையில் கோடம்பாக்கத்தில் “மித்திரா” என்னும் பதிப்பகத்தை நிறுவி, அதை இயக்கி வரும் இவர், ஆஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்.

    மனந்திறந்து அவர் நிலாச்சாரல் வாசகர்களுக்காக அளித்த பேட்டி இதோ !

    உங்களுடைய இலக்கிய ஆர்வத்தின் பின்னணி என்ன ?

    என்னுடைய இலக்கிய ஆர்வம் மிகச் சிறுவயதிலேயே உருவானது. எனது முதலாவது கவிதை 14 வயதில் அச்சில் வந்தது. இதற்குக் குடும்பப் பின்னணி காரணமல்ல.மாணவர் சமுதாய இலக்கிய அரங்கில் இணைந்து , இலக்கியம் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் சரியான சாசனம் எனும் எண்ணம் கொண்டு, இளம் வயதிலேயே ஈடுபாடு வந்தது.

    உங்கள் எழுத்துக்கு முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள் ?

    என்மீது தாக்கம் ஏற்படுத்தியவர்களுள் பாரதியாரே முக்கியமானவர். அவரின் தாக்கமே என்னை முதலில் கவிதை எழுதத் தூண்டியது. தமிழினால் சமுதாயத்தை எந்தெந்த வகையிலெல்லாம் விழிக்கப்பண்ண முடியுமோ , அவ்வழிகளிலெல்லாம் அவரது கவிதையின் வீச்சுச் சென்றது. மாகாகவியே என்மீது தனது கவிவீச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

    இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளதா
    இல்லை கவலையாக உள்ளதா ?

    துணிவாகச் சொல்லுவேன் ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் , இலக்கியப் படைப்புக்களாக இல்லை. அதற்காக இலக்கியம் தற்காலப் போர் சார்ந்ததாகவோ அன்றி அதனைத் தவிர்த்ததாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்கால நடைமுறை பதிவுசெய்யப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வெளிவரும் ஆக்கங்கள் , அரசாங்கக் கண்காணிப்பின் கீழ், தணிக்கைக்கு உட்படுத்தப்படும்போது , எவ்வாறு மக்களின் உண்மை நிலையை உணர்த்த முடியும்? இந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் , வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமே எழுதுவது போன்றும் தென்படுகிறது .

    நீங்கள் ஈழத்தை விட்டுப் புலம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபோது, உங்கள்
    மனதினில் விளைந்த உணர்ச்சிகள் என்ன ?

    நான் ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் புலம் பெயர்ந்தவனல்ல. அரசியல் காரணங்களினால் எனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பதவியுயர்வுகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாலும் மற்றும் பல அரசியல் காரணங்களினாலும் நான் ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தேன் என்பதுவே உண்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரங்களின் பின்னால் இனக்கலவரத்தின் பாதிப்பு கூர்மைப்படுத்தப்பட்டது. எமது பழைய தமிழ்த்தலைவர்கள் என்றுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை. 1959ம் ஆண்டு திரு.செல்வநாயகம் செய்த ஒப்பந்தத்தின் போதுதான் ஈழத்தில் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழ் மறைந்து கொண்டிருக்கிறது , ஈழத்தமிழர்
    தமிழை முதன்மைப்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது மகிழ்வாக இருந்தாலும், ஈழத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் விளைவாகவே ஈழத்தமிழர் தமிழ்த் தேசியத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை. இன்று உலகமெங்கும் தமிழ்த்தேசியம் உலகத்தமிழரால் முன்வைக்கப்படும்போது , நானும் அந்த உலகத்தமிழர்களில் ஒருவன் எனும் நிலையால் பெருமையான உணர்ச்சியே மேலோங்கியுள்ளது.

    நீங்கள் தமிழ்நாட்டோடு அதிகம் தொடர்புடையவர் என்னும் நிலையில் , ஈழத்தமிழர்கள் மீதான, தமிழக மக்களின் தற்போதைய கணிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

    ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு ராஜீவ் காந்தியின் கொலை, மற்றும் சில ஈழத்தமிழர்களின் பிழையான நடவடிக்கைகள் பத்திரிகைகளினால் பெரிது படுத்தப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு.

    ஈழத்தமிழ் இலக்கியங்கள் அந்தநாட்டுப் போரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்
    என்றொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அது சரியானதா?

    இலக்கியங்களை எழுதுபவர்கள் கோபுரங்களில் இருந்து கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் அந்த மண்ணின் மக்களோடு வாழ்ந்து கொண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் அதற்காகப் படைக்கப்படும் அனைத்தும் போரைப்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதல்ல.சமகால நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவேண்டும். மனதிலே தமிழ்த்தேசியத்தையும், ஈழத்தமிழிலக்கிய மரபுகளையும் சுமந்து கொண்டு புலம்பெயர்ந்த மக்கள் , அதை இலக்கிய நாற்றாக்கி, போராட்டத்தின் பின் ஈழத் தமிழிலக்கிய மண்ணிலே நாட்டி இலக்கியத்தைப் பேணவேண்டும் என்பதிலே நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

    ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் எப்படியான வரவேற்பு இருக்கிறது?

    அந்தக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியத்தின் பிறப்பிடம் தமிழகம் என்றும், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும் எண்ணும் மனோபாவம் வணிக ரீதியாக உண்டு. ஈழத்துத் தமிழெழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஓர் தனி அகராதி வேண்டும் எனும் கருத்தும் உண்டு.

    ஆனால் இந்த மனோபாவம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகம் இன்று தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இன்குலாப் போன்றவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை ரசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். வணிகரீதியில் மட்டுமே நாம் பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இது முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

    புலம்பெயர்ந்த படைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

    சென்னையிலே ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே, பல முன்னணி எழுத்தாளர்களின் மத்தியில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களே தலைமைப்படுத்திச் செல்வார்கள் என உரக்கச் சொன்னவன் நான். ஆனால் தற்போது புலம்பெயர் நாடுகளிலே தமிழ் இலக்கியத்திற்கு மத முலாம் பூசப்பட்டு, பின்னிலைப் படுத்தப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன்.

    புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தாம் வாழும் நாடுகளின் சூழல்களை மையப்படுத்தி
    இலக்கியம் படைப்பது தமிழை முன்னேற்றும் என எண்ணுகிறீர்களா?

    நிச்சயமாக ! அப்படியான ஒரு அணுகுமுறைதான் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்” எம்மை ஒரு உலகளாவிய ரீதிக்குக் கொண்டு வரும். மற்றைய நாட்டு மொழியைப் படித்துத்தான் அவர்களது கலச்சாரங்களை ஒரு கண்னாடியால் பார்ப்பதுபோல் இல்லாமல் எமது எழுத்தாளர்கள் தமிழிலேயே அதை வெளிக்கொணரவேண்டும். அது மட்டுமன்றி அந்தந்த நாட்டு மொழிகளில் கூடப் புலம்பெயர்ந்தவர்கள் கவிதை,கட்டுரை வரைந்து தமிழிலக்கியச் சிந்தைகளை விசாலப்படுத்த வேண்டும்.

    கணணியில் தமிழ் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன ?

    இது ஒரு மிகவும் நல்ல முன்னேற்றமே ! தமிழ்நாட்டு முயற்சிகள் அதிகம் இருந்தாலும் மென்பொருளாக்கம் முதலியவற்றில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழரின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது. கணன்¢யின் தேவையைக் கூட்டி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது உலகத்தமிழன் என்று சொன்னால் மிகையாகாது. கணணியில் தமிழ் கண்ட வளர்ச்சி வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டுமேயன்றிக் குறைக்காது என்பது எனது கருத்து.

    புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

    யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்துக் காணிச்சண்டை, வேலிச்சண்டை, ஜாதிச்சண்டை அனைத்தையும் விடுத்துத் தமிழைச் சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பியுங்கள். உங்களுக்குத் தமிழ் மீது நேசம் இருக்குமானால் தயவுசெய்து ஏதாவது வகையில் தமிழ்ப்பணி செய்யுங்கள். தமிழ் நூல்களை வாங்கிப் படியுங்கள்.

    அன்பு மிகுந்த வாசகப் பெருமக்கள் இந்தப் பேட்டி 2005ம் ஆண்டு இடம்பெற்றது என்பதனையும் எனது கேள்விகளும், அவரது பதில்களும் அன்றைய காலச் சூழலின் பின்னனியில் இருந்தன என்பதையும் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..

    அன்பு ஜயா எஸ்.பொ அவர்களின் ஆத்மசாந்திக்காக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

    சக்தி சக்திதாசன்

    Share
  • துணிந்து நில்! தொடர்ந்து செல்! தோல்வி கிடையாது தோழி!

    பவள சங்கரி

    catching-moon
    நெஞ்சம் படபடக்க கண்கள் இருண்டு நாக்கு வறண்டு
    ஓ.. பயங்கரம் என் படகு மோதியது பாறையில்
    தவிர்க்க முடியாததை ஏற்பதுதானே சாத்தியம்
    வெளியேறும் வழியறிந்து மனம் தெளிந்தேன்
    அமைதியில் திளைக்க மோனத்தில் ஆழ்ந்தேன்
    எதையும் தாங்கும் இதயம் பெற்றேன்

    என்னை வீழ்த்தியதை எதிர்த்து நின்றேன்
    அச்சம் துறந்தேன் துணிவு பெற்றேன்
    இடியென முழங்கிய என் அதிரடிக்குரலை
    கேட்டீர்களா நீங்கள்! இப்போது இல்லையது
    நிமிர்ந்து நின்றேன், துணிந்து முயன்றேன்
    கடந்து வந்துவிட்டேன், தயாராகிவிட்டேன்
    பார்க்கும் அனைத்தும் இதமாய், பதமாய்
    இனிமையாய், உன்னதமாய், உய்த்தது.

    ஆம், கூரியப் பார்வையும் பெற்றேன்
    போராடும் குணமும்கூடப் பெற்றேன்
    தீயிலும் தாண்டவமாடுவேன்
    கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
    மலையோடும் மோதுவேன்
    பனியிலும் சிறகு விரிப்பேன்
    வெற்றியின் சிகரம் நானென்ற
    உறுமல் கேட்கலாம் நீங்கள்
    இன்னும் உரக்க, உரக்க
    சிம்மத்தின் கர்ஜனையாக
    என் உறுமல் கேட்கலாம்
    வெற்றிக்கனியை எட்டிப்பறிக்கும்
    என் ஆழ்ந்த மூச்சின் ஓசை
    மிதந்து வரலாம் காற்றோடு

    வண்ணத்துப் பூச்சியாய் பறந்து திரிகிறேன் இப்போது
    தேனீயாய்ச் சேகரித்தேன் – என் இன்ணுணர்வுகளை
    தொட்டேவிட்டேன் சிகரம் – அடிமட்டத்திலிருந்து

    வீழ்த்த வீழ்த்த வீழாமல் நிமிர்ந்தேன்
    தூசியாய் துயரங்களை ஊதியபடி
    உரக்கக் கேட்கும் குரல் என்னுடையதே
    இடியென முழங்கும் எம்குரலைக் கேட்டீரோ
    பொறுத்ததெல்லாம் போதுமென பொங்குவேனினி

    பெற்றேன் வேங்கையின் கூரிய பார்வை
    போராடும் குணமும்கூடப் பெற்றேன்
    தீயிலும் தாண்டவமாடுவேன்
    கடலிலும் எதிர்நீச்சல் போடுவேன்
    மலையோடும் மோதுவேன்
    பனியிலும் சிறகு விரிப்பேன்
    வெற்றியின் சிகரம் நானென்ற
    உறுமல் கேட்கலாம் நீங்கள்
    இன்னும் உரக்க, உரக்க
    சிம்மத்தின் கர்ஜனையாக

    வெற்றி முழக்கம் எட்டுத்திக்கும் எதிரொலிக்கும்
    அச்சம் துறந்தேன் ஆனந்தமாய் அங்குசம் பெற்றேன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”ராஜகோ பாலன் ரமண ரகுராமன்,
    ஆஜானு பாகன் அரவிந்த -லோசனன்,
    தேஜோ மயன்தாயின் தாம்புக்கும், தாலாட்டு
    ஜோஜோக்(கு) அடங்கிடும் சேய்’’….கிரேசி மோகன்….

    Share
  • சொர்க்கம் வேண்டாம்!

     

    சொறிபிடித்த தெருநாயின் சிறுகதைகள்:

     சொர்க்கம் வேண்டாம்!

    ஒரு அரிசோனன்

     நான்தான் உங்களுக்கு முன்னமேயே அறிமுகமான சொறிபிடித்த தெருநாய்!  நான் ஒரு கதை சொல்லி அது வெளிவந்தாலும் வெளிவந்தது, நான் மிகவும் பெரிய ஆள் –இல்லையில்லை, பெரிய நாய் ஆகிவிட்டேன்!  இப்பொழுது எனக்குச் சாப்பாட்டுக்குக் குறைவே இல்லை! கதை சொல்லும் நாய் என்று  ஒவ்வொரு தாய்மாரும், தந்தைமாரும் எனக்குக் கொஞ்சம் சாப்பாடு போடுகிறார்கள்!  என் எடைகூட ஏறிவிட்டது.  சொறிகூட கொஞ்சம் குறைந்துவிட்டது.  என்னைப் புகைப்படம் வேறு எடுத்து ஒரு அம்மையார் முகநூலில் போட்டிருக்கிறார் என்றால்  பாருங்களேன்! என் நிறம்கூட கொஞ்சம் மேருகேறியிருக்கிருக்கிறது.

    therunaai

    நன்கு உணவு கிடைப்பதால் தெருவெங்கும் சுற்றி அலைந்த களைப்பு தீர,  என்னால் சிறிது தூங்கி, சிந்திக்கக்கூட முடிகிறது.  அப்படிச் சிந்தித்தபோது என் முன்னோர் நாய் மேற்கொண்டு சொன்ன ஒரு கதை நினைவுக்கு வந்தது.  அதை நான் சொல்லுகிறேன், கேளுங்களேன்!

    .பஞ்சபாண்டவர்கள், பாஞ்சாலியுடன் எப்படி சொர்க்கத்திற்குச் சென்றார்கள், கடைசியில் தர்மபுத்திரரும், என் முன்னோர் நாயும்தானே மிஞ்சினார்கள் தர்மபுத்திரர் தேவேந்திரனின் இரத்தத்தில் செல்ல முடிவு செய்து அதில் ஏறிக்கொண்டார்.  இரதமும் சொர்க்கம் சென்றது என்று முன்பே சொல்லி இருக்கிறேன்.  அதற்குப் பின்னால் என்ன ஆயிற்று என்று இப்பொழுது சொல்கிறேன்…

    சொர்க்கம் நெருங்க நெருங்க தர்மபுத்திரருக்கு ஒரே உற்சாகம்.  தன் தம்பிகளையும், பாஞ்சாலியையும் அங்கு சந்திக்கப் போகிறோம் என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, அவர்களுடன் என்ன பேசவேண்டும், தங்களைத் தொடர்ந்துவந்த என் முன்னோர் நாய் தனது தந்தையான எமதர்மன்தான் என்று அவர்களிடம் சொல்லி, அவர்கள் முகம் எப்படி மாறப் போகிறது என்பதைக் காணவேண்டும் என்று பலவிதமான எண்ண அலைகளில் மூழ்கினார்.

    மேலும், சொர்க்கம் எப்படி இருக்கும், அது பூவுலகம் மாதிரி இருக்குமா, கதைகளில் வர்ணித்தவண்ணம் இருக்குமா, அல்லது எதிரே பார்க்காதவகையில் தன்னை வியப்பில் ஆழ்த்துமா என்று சிந்தித்துத் தனது மனதில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தார், எதற்குமே பரபரப்பு அடையாத தர்மபுத்திரர்.

    கடைசியில் சொர்க்கமும் வந்து சேர்ந்தது.  சொர்க்க வாசல் கதவும் திறந்தது.VLUU L200  / Samsung L200

    அங்கு கண்ட காட்சி தர்மபுத்திரரைத் திகைக்க வைத்தது.

    துரியன் விதம்விதமான, இதுவரை அவர் பார்த்தே இராத, கண்ணைப்பறிக்கும் புத்தாடையை அணிந்திருந்தான்.  ஆடையில் முத்தும், மணியும், மரகதமும், வைரமும், வைடுரியமும், பதிக்கப்பட்டு, தங்க இழைகளும் ஊடாடப்பட்டு இருந்ததால், அவனை ஒரும் ஒளிரும் தெய்வமாகவே காட்டியது.

    தர்மபுத்திரரால் தனது கண்களையே நம்பமுடியவில்லை.

    எனவே, கண்களைக் கசக்கிவிட்டுக்கொண்டு மீண்டும் பார்த்தார்.  அங்கு அழகிய, பொன்னாலான அரியணையில் அமர்ந்திருந்தான் துரியனேதான்.  அவனுக்கு அடுத்த அரியணையில், அட்டணக்கால் போட்டு அமர்ந்து, அட்டகாசமாய்ச் சிரித்துக்கொண்டு இருந்ததும் அவனது இளையோன் துச்சாதனன்தான்.  அடிக்கடி மீசையைவேறு நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

    தருமரை இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.  தங்கள் பேச்சே அவர்களுக்குப் பெரிதாக இருந்தது.

    தர்மருக்குத் தலை சுற்றியது.

    “அதர்மிகளான, அதர்மத்திற்கே ஆசான்களான, அதற்கு இலக்கணம் வகுத்த இவர்கள் சொர்க்கத்தில் நுழைந்தவுடனே கண்ணில் தென்படுகிரார்களே!” என்று கவலையுற்றார்.

    “ஒருவேளை இது நரகமோ?  நரகமே இப்படி இருந்தால், சொர்க்கம் எப்படிச் சிறப்பாக இருக்கும்!” என்று எண்ணிப்பார்த்து அவர் மனம் வியப்படைந்தது.

    “சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லாமல் தேவேந்திரன் தன்னை எதற்கு நரகத்திற்கு அழைத்துவந்திருக்கிறார்?” என்று எண்ணிய தருமர், “விண்ணவர் கோனே!  இது எந்த இடம், சொர்க்கமா, நரகமா?” என்று வினவினார்.

    அவரை வியப்புடன் நோக்கிய தேவேந்திரர், “தருமபுத்திரா!  ஏன் இந்தக் கேள்வி?  நரகத்தின் நாயகன் உனது தந்தையான எமதருமன்தான்!  எமக்கு அங்கு செல்ல அனுமதி இல்லை.  அளப்பிலா இன்பத்தையே நல்கும் எனது சொர்க்கத்தை விடுத்து, உன்னை நரகத்திற்கு ஏன் அழைத்துவரப் போகிறேன்?” என்று சிறிது சினங்கலந்த குரலில் கேட்டார்.

    “துரியனும், அவனது இளையோனும் இங்கு இருக்கிறார்களே, தேவேந்திரரே!”

    “அவர்கள் போரிட்டு மடிந்தார்கள் அல்லவா!  எனவே அவர்களுக்கு வீரசொர்க்கம் கிடைத்திருக்கிறது!” என்ற விடை வந்தது.

    “இருப்பினும்…” என்று இழுத்தார் தர்மர்.

    ஏன் என்பதுபோல் புருவத்தை உயர்த்தினார் தேவேந்திரன்.

    “அவர்கள் முறையற்ற விதத்தில் போர்செய்தார்களே!”

    “அவர்கள் அடைந்தது மரணம் வீர மரணம்தானே!  அதற்குரிய நற்பலன் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது!”

    வாயை மூடிக்கொண்டார் தருமபுத்திரர்.

    திருதராடிரனின் மைந்தர்களான கௌரவர்கள் நூறு பேரும் சொர்க்கத்தில், சுகத்தை அனுபத்துக்கொண்டு, ஆனந்தம் காண்பது அவருக்குக் குழப்பமாகவே இருந்தது.  சகுனிகூட அங்கு காணப்பட்டான்.  ஆயினும் கர்ணன் அங்கு காணப்படவில்லை.

    எனவே, தேவேந்திரனிடம் வினவினார் தர்மர்.  “விண்ணவர் கோனே!  வீரமரணம் அடைந்தவர்கள் என்று சொல்லப்பட்ட கௌரவர்கள் அனைவரையும் இங்கு காண்கிறேன்.  ஆயினும், அவர்கள் பக்கம் கடைசிவரை நின்ற — வீரத்தில் நிகரற்ற என் தமையன் — கதிரவனின் மகனான கர்ணன் இங்கு இல்லையே, ஏன்?”

    “அவன் கௌரவர்களைப் போன்று ஒரு கொள்கைக்காக, சத்திரிய நெறிக்காகவா போரிட்டு மடிந்தான்?  அருச்சுனன் மேல்கொண்ட வெறுப்பினால் எண்ணற்ற தவறுகளை, அறமில்லாச் செயல்களை அல்லவா செய்தான்! அவன் கொடுத்த தைரியத்தில்தானே துரியன் அடாத செய்கைகளைச் செய்ய முனைந்தான்!  அதுமட்டுமா!  தீயில் உதித்த பாஞ்சாலியை வேசி என்றும், அவள் துகிலை உரியவேண்டும் என்று துரியனைத் தூண்டியதும், துரியனை தீநெறிக்குச் செல்ல வழிவகுத்ததும் அவன்தானே! தவறு செய்பவனைவிட தவறு செய்யத் தூண்டியவனுக்குத்தான் தண்டனை அதிகம்!”  தேவேந்திரரிடமிருந்து வெடித்துச் சிதறின சொற்கள்.

    “என் இளையோர்களான பீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், எங்கள் மனைவியான பாஞ்சாலி – இவர்கள் எங்கே?  அவர்களை நான் பார்க்கவேண்டும்!”  தருமரின் குரலில் இருந்த அழுத்தம் தேவேந்திரரையே ஒருகணம் அதிரச் செய்தது.

    தருமரை ஏறஇறங்கப் பார்த்துக்கொண்டே, “அவர்கள் இங்கு இல்லை!” என்று மெதுவாகக் கூறினார் தேவேந்திரர்.

    “இல்லையா?  பின் எங்கே?”  தருமர் குரலில் சிறிது உஷ்ணம் இருந்தது.  “எனக்கு உடனே தெரிந்தாகவேண்டும்!”

    “அவர்களுக்கு இப்போது இங்கு இடமில்லை, தர்மா!  உனக்குத்தான் இங்கு முழு இடம்!  இங்கு இருக்கும் எல்லா சுகபோகங்களையும் நீ அனுபவித்துக்கொண்டு காலங்காலமாக இங்கு இருக்கத் தடையில்லை!”

    “மழுப்பல் வேண்டாம், விண்ணவர் கோனே!  அவர்கள் எங்கே என்று எனக்குத் தெரிந்தாகவேண்டும்!”

    தருமரின் கோபம் தேவேந்திரரையே திணற அடித்தது.

    மென்று விழுங்கிக்கொண்டு, “அவர்கள் நரகத்தில் இருக்கிறார்கள்.  உன்னை அங்கு அழைத்துச்செல்ல எனக்கு அனுமதி இல்லை.” என்ற தேவேந்திரர் தலையைக் குனிந்துகொண்டார்.

    “அதைப்பற்றி எனக்குக் கவலை இல்லை, விண்ணவர் கோனே!  நான் நரகத்தின் நாயகரான எமதர்மராஜனின் மகன்.  நீங்கள் சொல்லும் சமாதானத்தில் —  துரியனும் அவன் உடன்பிறப்புகளும் வீரமரணம் அடைந்ததால் வீரசொர்க்கம் அடையத் தக்கவர்கள், ஆனால் வீரத்தின் விளைநிலமான என் உடன்பிறப்புகள், மாவீரன் சாத்தகி முதலானோருக்கு வீரசொர்க்கம் இல்லை என்பதில் –- எனக்குச் சற்றும் உடன்பாடு இல்லை.

    “போர் முடிந்ததும் என் அன்னை குந்தி தேவியார் என்னைக் கர்ணனுக்கும் நீத்தார் சடங்கு செய்யச்சொல்லி, அவன் எனக்குத் தமையன் என்பாதை விளக்கினார்.  என் நண்பர்கள், உடன்பிறப்புகள் இல்லாத சொர்க்கம் எனக்குத் தேவை இல்லை.  இது அறநெறி கொண்டு ஒழுகுவோர் ஏகும் சொர்க்கபுரி அல்ல.  என்னைபொருத்தவரை இது நரகமே. என் உடன்பிறப்புகளும், மனைவியும் இல்லாத இந்த சொர்க்கம் எனக்கு வேண்டவே வேண்டாம்.  அவர்கள் இருக்குமிடத்தைச் சொல்லி, அங்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்!  நான் இதுவரை பின்பற்றிய என் அறநெறியின்மீது ஆணை! என்னை யார் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்ல இயலுமோ, அவரை உடனே இங்கு தருவழையுங்கள்!”

    தருமரின் தாங்கொணாச் சினம் தேவேந்திரரையே நடுங்க வைத்தது.

    dharmar in hell hell 1

    அவர் ஒரு எமதூதனை சொர்க்கத்தின் வாசலுக்கு வரவழைத்து, தருமபுத்திரரை அவனுடன் அனுப்பி வைத்தார்.

    கல்லும், முள்ளும் நிறைந்த பாதையில் அவனுடன் நடந்து சென்றார் தருமர்.

    இருண்ட ஒரு நிலப்பரப்பை அவர்கள் அடைந்தனர்.

    அங்கு கை, கால்கள் துண்டிக்கப்பட்ட, தலையில்லாத முண்டங்களும், அவற்றிலிருந்து பெருகி ஓடும் குருதி ஆறும் நிரம்பி இருந்தன. சித்திரவதைப்படும் ஜென்மங்களின் கூக்குரல் ஒலி காதுகளைக் கிழித்தது.  நிண நாற்றமும், முடை நாற்றமும் மூச்சை முட்டியது.  உயிருடன் இருக்கும் ஆடையற்ற மனிதர்களை — அவர்கள் கதறக் கத –, கூரிய பற்கள் உடைய — மனதினால் நினைத்தும் பார்க்க முடியாத அளவுக்குப் பயங்கரமான, கொள்ளிக்கண்களை உடைய பிராணிகள் கடித்துத் தின்றுகொண்டு இருந்தன.  கழுகுகளும், கோட்டங்களும், நரிகளும், ஓநாய்களும் இடும் ஓலம் அந்த இடமெல்லாம் எதிரொலித்தது.

    விசித்திரமான உடலையும், இறக்கைகளையும், ஒளிரும் எலும்புக்கூடுகள் ஆங்காங்கே தெரியும் உடலும் உள்ள ஜந்துகள் விர்,விர்ரென்று அங்குமிங்கும் இதயத்தை நடுங்கவைக்கும் ஒலிகளை எழுப்பிக்கொண்டு பறந்தன.  அவை அருகில் வரும்போது பிணவாடை வீசி, வயிற்றைப் புரட்டியது.

    வெப்பக்காற்றினால் உடலெங்கும் வேர்வை பெருகியது.

    hell 2

    “அண்ணா, அண்ணா!” என்றும், “தம்பி, தம்பி!” என்றும், “,ஐயனே, அறநெறியின் குலக்கொழுந்தே என்னவரே!!” என்றும் அவருக்கு மிகவும் பழக்கமான குரலில் பரிதாபமான ஓலங்கள் கேட்டான்.

    “யார்?”  அவரையும் அறியாமல் தருமரின் வாய் ஒலி எழுப்பியது.

    “நான்தான் அண்ணா பீமன்!”

    “நான் அருச்சுனன்!”

    “நான் நகுலன், இவன் சகாதேவன்!”

    “ஐயனே, நான்தான் உங்கள் பாஞ்சாலி!”

    “யுதிட்டிரா, நான்தான் கர்ணன்!”

    குரல்கள் சேர்ந்து ஒலித்தன.

    தலையில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார் தருமர்.

    மெல்ல எழுந்து, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

    hell 3

    ஒருவர் பின் ஒருவராக, அங்கு சிதறிக்கிடக்கும் பிணக் குவியல்களுக்கு நடுவிலிருந்து மெல்ல எழ ஆரம்பித்தனர் அறுவர்.  அங்கு சிந்திக் கிடக்கும் செங்குருதிச் சகதியில் பலமுறை வழுக்கி விழுந்து, எழுந்து நின்றனர்.

    அவர்களைக் கண்டு திகைத்து நின்றுவிட்டார் தருமர்.

    தான் அவர்களை முன்பு பார்த்தபோது இருந்த அழகு எங்கே, கம்பீரம் எங்கே, வீரம் எங்கே?  எலும்புக்கூட்டுக்குத் தோலைப் போர்த்தியது போல இருக்கும் இவர்களா தமது உடன்பிறப்புகள்?  அழகுக்கே இலக்கணமான பாஞ்சாலியா இவள்?  ஒரு தடவை கண்டாலே வாழ்நாள் முழுதும் கிறங்கவைக்கும் அழகுடைத்த இவளா இப்படி அவலட்சணமாக, ஒருமுறை பார்த்தாலே முகத்தைத் திருப்பிக்கொள்ளும் அளவுக்குக் கோரமாகக் காட்ச் அளிக்கிறாள்!

    இது நிஜமா, அல்லது தனது மனமே நரகத்தின் குழப்பத்தால் சித்துவிளையாட்டு விளையாடுகிறதா?

    தன்னுடன் வந்த எமதூதனைப்பார்த்து புருவத்தை உயர்த்தினார்.

    “தர்மப் பிரபுவே!  இவர்கள் உங்கள் அண்ணன், தம்பிகள், மனையாட்டிதான்!” என்று பணிவாகப் பதில் வந்தது.

    கல்லாய்ச் சமைந்து நின்றுவிட்டார் அவர்.

    “ஏன்?” பெரிதாக வெடித்தது அவர் குரல்.

    “இந்த அநீதியை நான் பொறுக்கமாட்டேன்.  நான் இதுவரை பின்பற்றிய அறநெறி உண்மை என்றால் – நல்லோர்கள் நற்கதி அடைவார்கள் என்பது உண்மை என்றால் – இங்கு இவர்கள் இப்படிப்பட்ட கொடிய நரகத்தில் உழலுவது அறநெறியே அல்ல!  என் வாழ்நாளில் நான் கடைப்பிடித்த தருமத்தின் மீது ஆணையிடுகிறேன்!  இந்த அநீதியைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும் சரி – எந்தக் கடவுளர்களாக இருந்தாலும் சரி – அவர்களுக்கு எமதர்மராஜனின் மகனான நான் ஒரு சாபத்தை…..”

    அவரது வாயைப் பொத்தியது ஒரு கரம்.

    yudhisthira_passes_the_test

    தருமர் தலையைத் திரும்பிப் பார்த்தால்….

    தேவேந்திரர் நின்றுகொண்டிருந்தார்.  அதுமட்டுமா?  தருமரின் தந்தை எமதர்மராஜன், சிவன், பிரம்மா, விஷ்ணு, மாருத், அஸ்வினி தேவதைகள், இன்னும் பல தேவர்களும், கடவுளர்களும் நின்றுகொண்டிருந்தார்கள்.  கொடிய நரகம் மறைந்து, இனிய சொர்க்கம் தோன்றியது.

    “அறநெறியின் உறைவிடமான நீ இப்படிக் கோபம் கொண்டு சபித்தால், சொர்க்கம், நரகம் எல்லாம் அழிந்துபோய்விடும்.  மாந்தர்களின் அதர்மத்தைக் கட்டுப்படுத்த இயலாது போகும்.” என்று திருவாய் மலர்ந்து அருளினார் இறைவனான உருத்திரன்.  எமதர்மனை அவர் பொருட்செறிவுடன் பார்த்தவுடன், அவர் பேச ஆரம்பித்தார்.

    “மகனே தர்மா!  நீ இதுவரை கண்டது ஒரு மாயத் தோற்றமே!  உன் உடன்பிறப்புகளோ, மனைவியோ, உனக்காக அறத்தை நிலைநிறுத்தப் போரிட்ட எவருமோ நரகத்தில் இல்லை.  அவர்கள் சொர்க்கத்தில் இருக்கிறார்கள்.”

    “பின் ஏன் தந்தையே, எனக்கு இப்படிப்பட்ட மாயத்தோற்றம் காண்பிக்கப்பட்டது?”

    “உனது ஆசானான துரோனாச்சரியாரை வீழ்த்த, நீ ஒரு பொய்த்தோற்றத்தைக் கற்பித்து மயங்கி நிற்கச் செய்தாய் அல்லவா!  அந்தப் பொய்த்தோற்றத்தை உருவாக்கியதற்காகவே உனக்கு முதலில் நரக வேதனையும், உன் உடன்பிறப்புகள், மனைவி, உற்றார்கள் நரகத்தில் உழளுவதுபோன்றதுமான ஒரு பொய்த்தோற்றம் காண்பிக்கப்பட்டது.

    “உன் உடன்பிறப்புகளும் அறநெறியை நிலைநிறுத்த, போர்நெறியை மீறினர்.  பாஞ்சாலியின் சபதத்தினால் பீமன் போர்நெறியை மீறி, துரியனின் தொடையைப் பிளந்து கொள்ள நேரிட்டது. எனவே சிறிது நேரம் அவர்களும் நரகத்தில் உழல நேரிட்டது.  இனி அவர்கள் சொர்கத்தில்தான் காலம் கழிப்பார்கள்.  வீர மரணம் அடைந்ததால் கௌரவர்கள் முதலில் சிலகாலம் சொர்க்கத்தில் இருந்துவிட்டுப் பின்னர் அவர்களின் தீச்செயல்களுக்காகக் கடும் நரகத்தில் நீண்டகாலம் வாடுவார்கள்.  .

    “ஒருவர் அதிகமாய்ச் செய்த நற்செயலுக்கோ, அல்லது தீச்செயலுக்கோ உள்ள பயனை அவர்கள் பிற்காலத்திலேதான் அனுபவிப்பார்கள்.  அறத்தை அதிகமாகச் செய்பவர்கள் வெய்யிலுக்குப்பின் நிழல் போல துன்பத்திற்குப்பின் நல்லின்பத்தையும், தீச்செயலுக்குத் துணைபோகிறவர்கள், தாம் செய்த சில நற்செயலுக்காக சிறிதுகாலம் இன்பம் துய்த்துவிட்டுப் பிறகு கொடுமையான நரகத்திலும் உழல்வார்கள். இதுவே அறநெறியின் விதியாகும்.

    “செல், மகனே, செல்!  சொர்க்கத்தில் உன்னை எதிர்நோக்குபவர்களுடன் இனிதுவாழச் செல்!” என்று ஆசி நல்கினார்.  இனிய இசை முழங்கியது…

    …”சனியனே!  நடு ராத்திரியில் ஏன் ஊளையிடுகிறாய்?”  என்ற ஆதட்டலைத் தொடர்ந்து ஒரு கல் என் மீது விழுந்தது.  துடித்து எழுந்தேன் நான்.

    போதும் சாமி, போதும்.  உங்களுக்கு சொர்க்கத்தைப்பற்றி கதை சொல்லிச் சொல்லி, கல்லெறி வாங்க முடியாது சாமி!  நான் கதை சொல்வது சிலர் காதில் ஊளையாகக் கேட்டால் அதற்கு நான் என்ன சாமி செய்ய முடியும்?  நான் இனி தூங்கினால் போலத்தான்!  ஆளை —  இல்லையில்லை, இந்த நாயை விடுங்கள் சாமி!  நான் என் பிழைப்பை பார்க்கப் போகிறேன்!”

    **************************************

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • எழுத்தாளர் எஸ்பொ காலமானார்

    எஸ். பொ. மீளாத் துயிலில்..!

    aspo

    புகழ்பெற்ற இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவில் வசித்துவந்த எஸ். பொ. என அழைக்கப்படும்
    எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – 11 – 2014 ) காலமானார்.

    ஐயகோ ஐயகோ

    உள்ளதைச் சொல்லும் உரத்த குரல் ஓய்ந்ததோ?
    கள்ளமற்ற வெள்ளை மனம் கரைந்து மறைந்ததோ
    வெள்ளமான தெள்ளு தமிழ்நடை நோய்க்கு வீழ்ந்ததோ
    அள்ளக்குறையா என்அன்புக் கடலில் அலையும் ஓய்ந்ததோ

    எஸ். பொ. 04 – 06 – 1932 -ல் யாழ்ப்பாணம் – நல்லூரில் பிறந்தவர்.

    அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறீஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றவர்.
    இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.

    நைஜீரியாவில் கல்லூரி ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றியவர்.
    மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.

    நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளில் ஆளுமைமிக்கவராக விளங்கினார்..
    சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர் என இலக்கியத்துறையில் கணிக்கப்பட்டவர்.
    இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடங்கியவர்.

    பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.

    ”வீ” – ”அவா” – ”ஆண்மை” ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ”தீ” – ”சடங்கு” – ”மாயினி” நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
    இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ”எஸ். பொ. கதைகள்” என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.

    இவரது சில சிறுகதைகளும் ”தீ” – ”சடங்கு” நாவல்களும் ”வரலாற்றில் வாழ்தல்” என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.

    சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”குழலூது கின்றான் குளிர்மேக வண்ணன்,
    கழலதை கன்றுக்குக் காட்டி, -விழலுக்(கு)
    இறைக்கா தவன்இறை யாதவன் ராகம்,
    தரைக்கான கீதகோவிந் தம்’’….கிரேசி மோகன்….

    Share