நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவின் நியுயார்க் நகர் மருத்துவமனை ஒன்றில் போன வாரம் இரண்டு வயது குழந்தை ஒன்று இறந்துவிட்டது. இந்தக் குழந்தை போன வாரம்தான் ‘இறுதியாக’ இறந்தாலும் அதற்கு ஒரு வாரம் முன்பே அக்குழந்தையின் மூளை செயலற்றுப் போய் அது இறந்துவிட்டதாக டாக்டர்கள் அறிவித்துவிட்டனர் . குழந்தை இறந்த பின்பு தாய்க்கும் தந்தைக்கும் இடையே நடந்த போராட்டத்தால் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தின் ஆணைப்படி அந்தக் குழந்தையை செயற்கைக் கருவிகள் மூலம் உயிரோடு வைத்திருந்தனர். அந்தக் குழந்தையின் கதை ஒரு சோகக் கதை.

அக்குழந்தையின் பெயர் தையா ஸ்ப்ருயில்-ஸ்மித் (Thaiya Spruill-Smith). இக்குழந்தைக்கு சாதாரணமாக மற்றக் குழந்தைகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காத ப்ரோக்கோலி (broccoli) என்ற காய்கறி மிகவும் பிடிக்கும். மிக்கி மௌஸின் ஜோடியான மின்னி மௌஸைப் (Minnie mouse) பிடிக்கும். ‘ஸ்பேஸ் ஜேம்’ (Space Jam) என்ற சினிமாப் படத்தைப் பார்க்கப் பிடிக்கும். மாற்றாந் தகப்பனால் முரட்டுத்தனமாக உலுக்கப்பட்டு கட்டிலில் தூக்கி எறியப்பட்டதால் மூளையிலும் மற்ற இடங்களிலும் காயமுற்று இரண்டு நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இறந்தாள். தாய்க்கும் தகப்பனுக்கும் இடையே முற்றியிருந்த பிரச்சினையால் இக்குழந்தையின் பிரேத பரிசோதனை, நல்லடக்கம் எல்லாம் பிரச்சினை தீர்ந்த பிறகுதான் நடந்தன.

தாயும் தந்தையும் ஆரம்பப் பள்ளியிலேயே இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருந்தனர். ஒரு குழந்தையைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு அவர்கள் நட்பு தொடர்ந்தது. ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை.. அதனால்தானோ என்னவோ ஒரு குழந்தையைப் பெற்ற பிறகு என்ன ஆயிற்றோ இருவருக்கும் ஒருவரையொருவருக்குப் பிடிக்காமல் போய் தனித் தனியே வாழத் தொடங்கினர். தையாவின் தாய் ஆதாம் என்ற மற்றொருவரை மணந்துகொண்டபின் தன் மகள் மாற்றாந் தகப்பனால் துன்புறுத்தப்படலாம் என்று அஞ்சி தையாவின் தகப்பன் குழந்தை தன் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுவரை தையா தாயோடு இருந்துவந்தாள். எப்போதாவது தகப்பனோடு சில நாட்களைக் கழிப்பாள். ஒரு முறை தையாவின் தந்தை தையாவை தன் வீட்டிற்குப் பதிலாகத் தன் தாயின் வீட்டில் நான்கு நாட்கள் வைத்திருந்தார். தான் அப்படிச் செய்ததற்குக் காரணம் தையா தாயிடம் போக விரும்பாததே என்று கூறினார். ஆனால் நீதிமன்றம் குறித்திருந்த நாட்களுக்கு மேல் குழந்தையை வைத்திருந்ததற்காகக் கைதுசெய்யப்பட்டார். தையாவின் தந்தைக்குக் கெட்ட சகவாசம் இருக்கிறது என்றும் அவன் தன்னைக் கொன்றுவிடுவதாகப் பயமுறுத்தினான் என்றும் இதனால் தையாவைத் தகப்பனின் பொறுப்பில் இருக்கவிடுவது சரியில்லை என்றும் தையாவின் தாய் நீதிமன்றத்தில் வாதிட்டாள். தாயும் தந்தையும் குழந்தை தங்கள் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என்று  நீதிமன்றத்தில் வழக்காடிக்கொண்டிருந்தபோது குழந்தை இறந்த துயரச் சம்பவம் நடந்தது.

மறுமுறை கருவுற்ற தையாவின் தாய் தன்னுடைய முன்னாள் காதலனின் நச்சரிப்பிலிருந்து தப்புவதற்காக வேறு வீட்டிற்கு மாற விரும்பினாள். அதற்குரிய வேலைகளைச் செய்ய வெளியே செல்ல வேண்டியிருந்தது. குழந்தையை தன்னோடு அழைத்துச் சென்றால் அதிக நேரம் ஆகலாம் என்பதாலும் மேலும் கணவன் அந்தச் சமயம் வீட்டில் இருந்ததாலும் குழந்தையை வீட்டில் விட்டுச் சென்றாள். தாய் தன்னை அப்படி விட்டுச் சென்றபோது குழந்தை அழுதிருக்கிறது. ஆயினும் வேறு வழியில்லாமல் விட்டுச் சென்றிருக்கிறாள். ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய் திரும்பி வந்தபோது தையா தூங்கிக்கொண்டிருந்திருக்கிறாள். சில மணி நேரம் கழித்து எழுந்தவள் பேசியிருக்கிறாள். ஆனால் தான் விரும்பிய எதையும் கேட்டு வாங்கிச் சாப்பிடவில்லை. மறு நாள் காலையில் எழுந்தபோது குழந்தை நார்மலாக இல்லை. குழந்தையின் மூச்சு தாறுமாறாக இருந்தது. ஆம்புலன்ஸைக் கூப்பிட்டுக் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அன்று இரவே குழந்தை இறந்துவிட்டது. தாய் வெளியே சென்ற பிறகு தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தையாவை தையாவின் மாற்றாந் தகப்பன் தூக்கிப் பிடித்து முரட்டுத்தனமாக உலுக்கியிருக்கிறான். பின் கட்டிலில் தூக்கி வீசியிருக்கிறான். இதை அவனே பின் ஒப்புக்கொண்டான்.

குழந்தை இறந்த பிறகு தாய்க்கு அவளுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்து அவை பல குழந்தைகளுக்குக் கிடைத்து அதன் மூலம் தன் மகள் உலகில் பல காலம் வாழ்வாள் என்று எண்ணினாள். தையாவின் தந்தைக்கோ மகளின் உடலைத் துண்டுபோடுவது பிடிக்கவில்லை. ‘என் மகளின் அழகிய கண்கள் அப்படியே இருக்க வேண்டும். அவள் எப்படி இருந்தாளோ அப்படியே இறந்த பிறகும் இருக்க வேண்டும்’ என்றார்.

தையாவின் உடல் உறுப்புகளைக் கொடுக்க வேண்டும் என்று தாயும், கொடுக்கக் கூடாது என்று தந்தையும் சண்டை போட்டதால் இந்தத் தகராறு முடியும்வரை தையாவை ‘உயிரோடு’ வைத்திருக்க வேண்டும் என்றும் அவளுடைய உடலில் இருக்கும் இணைப்புகளை அகற்ற வேண்டாம் என்றும் நீதிமன்றம் மருத்துவமனைக்கு ஆணையிட்டது. இரண்டு பெற்றோர்களின் சம்மதம் இருந்தாலொழிய குழந்தைகளின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முடியாது என்று சட்டம் இருப்பதால் இந்த ஆணை. கடைசியாக, தந்தைக்கு வெற்றி கிடைத்தது. தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்படாமலே அவளுடைய உடல் புதைக்கப்பட்டது.

தையாவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருந்தாலாவது அவளுடைய வன்முறை இறப்பிற்கு ஒரு அர்த்தம் இருந்திருக்கும்.

ஜெயகாந்தன் தன்னுடைய சிறு கதை ஒன்றில் குழந்தைகள் எப்படிக் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் பாலமாக விளங்குகின்றனர் என்பதை இப்படிக் குறிப்பிடுவார்: …இருவருக்கும் பொதுவானதாய், இருவரிலிருந்தும் பிரிக்க முடியாததுமாய்…..அமெரிக்காவைப் பொறுத்தவரை இந்தக் கூற்று எவ்வளவு பொருந்தும் என்று தெரியவில்லை. ஏனெனில் அமெரிக்காவில் 40 சதவிகிதம் குழந்தைகள் திருமணமாகாத ஜோடிகளுக்குப் பிறக்கின்றன. குடும்பம் என்ற சமூக நிறுவனம் (Social Institution) அமெரிக்காவில் சிதைந்துகொண்டு வருவதால் குழந்தைகள் தாய், தகப்பன் என்று இரண்டு பெற்றோரோடு வாழும் வாய்ப்பை இழந்து வருகின்றன. இப்போது ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடுள்ள இரண்டு பெண்கள் அல்லது இரண்டு ஆண்கள் சேர்ந்து வாழும்போது அவர்கள் தத்து எடுத்து வளர்க்கும் குழந்தைகளுக்குப் பெற்றோர் இருவரும் ஒரே பாலைச் (gender) சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுமா என்று தெரியவில்லை. தாய், தந்தையரின் உரிமைகளைப் பற்றிக் கவலைப்படும் சமூகம் குழந்தைகளின் நலனையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.