விசாலம்

ரீமா தான் ஒரு வாரம் லீவு கேட்டபடி தன் ஊர் சென்றாள். பின் அவள் திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன.  மறு நாள் அவள் வந்தாள். அவள் தாமதமாக வந்ததற்கான காரணம் கேட்டேன். நாகாலாந்தில்    எல்லா வேலைகளும் பெண்களே செய்யும் நிலைமை. ஆகையினால் வருவதில் தாமதமாகிவிட்டது என்றாள்.

“ஏன் ரீமா? அப்படி என்னென்ன  வேலைகள் நீங்கள் செய்யவேண்டும்?”

“காலையில் எழுந்ததும் தண்ணீர் கொண்டு வர குடங்களுடன் வெகு தூரம் நடக்க வேண்டும். காட்டுப்பக்கம் போய் மரங்களிலிருந்து சுள்ளிகள், மரக்கட்டைகள் வெட்டி எடுத்து தலையில் சுமந்து வரவேண்டும். வீடு வந்தவுடன் எல்லோருக்கும் உணவு தயாரிக்க வேண்டும். பின் கள் காய்ச்ச வேண்டும். பின் நிலத்திற்குப் போய்  விதை விதைத்தல், களையெடுத்தல் என்ற பல வேலை.  பின் வீட்டிற்குத் திரும்பியவுடன்  ஆடை நெய்ய வேண்டும். இப்படி உழைப்பைத்தவிர வேறு ஒன்றும் எங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை.”

“நீங்கள் கழுத்து முழுவதும் பல பாசி மணிகள், குண்டு குண்டு மணிகள் அணிகிறீர்கள். தவிர உங்கள் நாட்டியத்தில் பலர் மிருகத்தின் தலைப்பகுதியை அணிகிறார்களே!”

“ஆமாம்  மேடம்  எங்கள் ஆண்கள் மிருக வேட்டைக்குச் சென்று  அதன் தலையை கொய்து எடுத்து வரும் வழக்கம் உண்டு. இதனால் அவர்களது  வீரம் வெளிப்படுகிறது. தவிர அவர்கள்  இதை மிக கௌரவமாகப் பார்க்கிறார்கள். ஒவ்வொரு வீட்டிலும் இது போல் மிருகத்தின் தலை வீட்டின் முகப்பில் அலங்கரிக்கப்பட்டு வரவேற்கும்.  காட்டெருமை, கரடி, மான், புலி என்று பல மிருகங்களின் தலைகள் வீட்டு அறையில் மாட்டப்பட்டிருக்கும். அப்படி மிருகத்தின் தலையைத் துண்டிக்காத ஆணை  எங்கள் ஜாதியில் பசு என்றும்  பெண்ணென்றும் கேலி செய்வார்கள். ஆனால் இப்போதெல்லாம் இது போன்ற வேட்டை தடுக்கப்பட்டிருக்கிறது.”

” ரீமா  உன்னுடைய திருமணம் காதல் திருமணமா? உங்கள் திருமணம் பற்றி தெரிந்துக்கொள்ள ஆவலாக  உள்ளேன்.”

” எங்கள்  பிரிவில் ஆண் ஆதிக்கம் அதிகம், பெண்களுக்கு சுதந்திரம் கிடையாது. அவள் தாயாகி, குழந்தைகள் சுமந்து, உணவு தயாரித்து

தன் சம்பாத்தியத்திற்கு உல்லன்  ஷால் அல்லது துணி நெய்து  உழைக்க வேண்டும். எந்த தீர்மானம் எடுக்க வேண்டுமென்றாலும் அதை ஆண்மகன் தான் எடுப்பான். பெண்களுக்கு அதில் உரிமை இல்லை. எங்கள் ஜாதியில் பல பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவிலேயே இருக்கும் ஒரு  பெண்ணை  அந்தப்பிரிவில் இருக்கும் ஆண் மணம் புரியக்கூடாது.”

“ஆமாம் இது எங்களுக்கும் உண்டு. ஒரே கோத்திரத்தில்  திருமணம் செய்ய மாட்டார்கள். அவர்கள் உறவு சகோதர சகோதரி ஆகும்.”

” எங்கள் ஜாதியில்  வயது வந்த  பிள்ளைகள், பெண்களை  ஊர் எல்லைப்பகுதியில் எழும்பி இருக்கும் ஒரு கட்டிடத்தில் அனுப்பிவிடுவார்கள். இந்த இடத்தின் பெயர் “மொருங்க்”.

நாகா கலாசாரத்தில் இந்த வயது வருபவர்கள் இங்கு வந்து  பல பெரியவர்களிடமிருந்து  இந்த கலாசாரத்தைக் கற்க வேண்டும். அவர்களது சடங்குகள், நாட்டியங்கள், கலைகள் எல்லாம்  நாட்டுப்பாடல் மூலமாகவும் பிரசங்க மூலமாகவும் அவர்களுக்குக் கற்றுத்தரப்படும். அங்கு சிற்பக்கலை, மரவேலை, நெசவு எல்லாமே படிக்க வேண்டும். தவிர எதாவது முக்கிய சமாசாரமாக  இறப்பு, பிறப்பு,  பூஜை, அபாயம் போன்ற செய்திகளை .    பெரிய பேரிகை அடித்து அந்தக்கிராமம் முழுவதும் சொல்லி வரவேண்டும். பெண்களுக்கென்று தனி இடம் ஒதுக்கப்படும்.”

“அது சரி. காதலைப் பற்றி சொல்லவே இல்லையே!”

“அங்காமி என்ற பிரிவில் ஒரு ஆண் ஒரு பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்தால் அதை அவனது தந்தையிடம் சொல்ல வேண்டும். தந்தை தன் நண்பனை அனுப்பி பெண் வீட்டு சம்மதத்தைக் கேட்பார். பெண் வீட்டில் சம்மதித்தால் தந்தை ஒரு நிகழ்ச்சியை நடத்துவார். அது  உங்களுக்கு மூட நம்பிக்கையாகக்கூட தோன்றும்.”

“அப்படி என்ன நிகழ்ச்சி! கேட்க  ரொம்ப ஆர்வமாக இருக்கிறதே!”

“ஒரு கோழியைக்கொண்டு வந்து நல்ல நேரம் பார்த்து அதன் குரல்வளையை நெரிப்பார். அப்போது அதன் கால்கள் துடித்து சில திசைகளில் குறுக்க முறுக்கிக்கொள்ளும். அது சுபமான  முறுக்காக இருந்தால் அந்தத் திருமணம் நிச்சயிக்கப்படும். ‘

“அப்பப்பா  என்ன கஷ்டம் ஒரு காதலுக்கு! ஒரு பறவை பலியா?  பெண்ணிடம் சம்மதம் கேட்கமாட்டார்களா? “

“பெண்ணும் இந்த  வரனைத் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். எப்படி என்றால் அவள் மூன்று நாட்களுக்குள்  கெட்ட கனவு கண்டால் அதைக்காரணம் காட்டி இந்த திருமணத்தை நிறுத்தமுடியும்.”

“அப்பாடி  நல்ல வேளை! கொஞ்சமாவது சுதந்திரம் கொடுத்திருக்கிறார்களே  அதுவரை  மகிழ்ச்சிதான்”  என்று சிரித்தபடி அவளைப் பார்த்தேன். அவளும் மிகவும் வெகுளியாக சிரித்தாள். பின் தொடர்ந்தாள்,

“எங்கள் ஜாதியில் கோன்யாக் என்ற பிரிவில் இருப்பவர்கள் அரச பதவி போல் முக்கிய ஸ்தானத்தில் இருப்பார்கள். அவர்கள் மட்டும் தங்கள் பிரிவிலேயே பெண் எடுக்கலாம். அதாவது ராணி போல் வரும் பதவியில் அதே வம்சம் தொடர்ந்து வரும். இந்த சலுகை  இந்த  கோன்யாக் என்ற பிரிவுக்கு மட்டுமே உண்டு.”

“இது எதனால் ஏற்பட்டது ரீமா?”

“ஓ! அதுவா அதற்கும் ஒரு கதை உண்டு. எங்கள் நாட்டு முதல் மனிதன் நிக்தோகா. இவன் திருமணம் செய்துக்கொண்டான். அவனுக்கு ஆறு மகன்கள் பிறந்தன. ஆனால் முதல் மகனுக்கு மட்டும் மணமகள் கிடைத்தாள். மற்ற  சகோதரர்கள் தங்களுக்கும் திருமணம் ஆகும் என்று பொறுத்திருந்தும் ஆகவில்லை. இதனால் வீட்டில் சண்டை வந்து அவர்கள் வீட்டை விட்டுப்போய் அன்னியத்தில் திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் தான் இந்த வழக்கம் வந்ததாம்.”

“எங்களது போல் உங்களுக்கும்  எல்லாவற்றுக்கும் ஒரு கதை

 இருக்கிறது. சரி மேலே சொல்லு. திருமணம் எப்படி நடக்கும் ?”

அவள் மேலே தொடர்ந்தாள்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *