இனியதோர் ஈழத்து எழுத்தாளர் இறை உலகெய்தினார்

0

சக்தி சக்திதாசன்

ஈழத்து எழுத்தாளரும் “மித்ரா” அச்சக உரிமையாளருமான அன்பு ஐயா எஸ்.பொ அவர்கள் நேற்றைய தினம் இறைஉலகெய்தினார் எனும் துயரச் செய்தியின் பின்னனியில் அவருடனான என் நினைவுகளை இங்கு பதிவிடுகிறேன்.

ass

2005ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நிலாச்சாரல் இணைய இதழை நடத்தி வருபவரும். கண்னி மென்பொருள் வல்லுனரும், என் இனிய தோழியுமான நிலா என்றழைக்கப்படும் நிர்மலா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிர்பலங்கள் பலரை நிலாச்சாரல் இணைய இதழுக்காக பேட்டி கண்ட நேரம்.

அப்போது என் அதிர்ஷடவசமாக சென்னையிலே தங்கியிருந்தார் நேற்றுக் அவ்ய்ஸ்திரேலியாவில் காலமான அன்பு ஜயா ம் ஈழத்து எழுத்தாளர் திரு. எஸ்.பொ அவர்கள்.

சந்திப்பாரோ ? மாட்டாரோ ? எனும் ஒரு சந்தேகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் ” சக்தி சக்திதாசனா? ஆமாம் உனது எழுத்துக்களை படித்திருக்கிறேன், அச்சகத்திற்கு வா ? சிற்றுண்டி அருந்திக் கொண்டே பேசலாம் ” என்றார் அந்த அன்பு எழுத்தாளர்.

ஈழத்து இலக்கியச் சிற்பி ஒருவரை இந்தக் கற்றுக்குட்டி என்ன நேர்காணல் காணுவது ? ,அமதுக்குள் ஒரு ஆதங்கம் இருப்பினும் இத்தகைய புகழ் மிக்க என் அன்னை நாட்டு எழுத்தாளரை தமிழக மண்ணில் சந்திப்பதையிட்டு பெரு மகிழ்வோடு அவரைக் காணச்சென்றேன்.

இனிவருவது ஏற்கனவே நிலாச்சாரலில் வெளிவந்த என்னுடனான அவரது நேர்காணல். நிலாச்சாரலுக்கு என் மனமார்ந்த நன்றியறிதல்களைச் செலுத்திக் கொண்டு அதை இங்கே சந்தர்ப்பம் கருதி மீள்பிரசுரிக்கிறேன்.

இந்த நேர்காணலைத் தவிர்த்து அவர் எனக்கு தனது அனுபவம் சார்ந்த பல அறிவுரைகளைத் தந்தார். அவை என்றும் என் மனப்பெட்டகத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டேயிருக்கும்..

காலையில் 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வாருங்கள், காலைச் சிற்றுண்டி அருந்தியபடியே பேசலாம் ” என அன்பான, நட்பு மிளிர்ந்த அதிகாரமிக்க அழைப்பு. அதுவரை நான் சந்தித்திராத, சந்திக்கத் துடித்துக் கொண்டிருந்த அந்த ஈழத்து உதாரண எழுத்தாளர் அவர்களோடு நடந்த முதல் தொலைபேசி உரையாடலின்போது அவரின் வெளிப்படையான பேச்சும் அந்த நட்புணர்வும் அவர்மீது கொண்டிருந்த மதிப்பை இன்னும் பெருக்கியது.

திரு எஸ். பொன்னுத்துரை எனும் எஸ்.பொ. அவர்கள் பலவருடங்களுக்கு முன்னால் ஈழத்தை விட்டுப் புலம் பெயர்ந்திருந்தாலும் ஈழத்து இலக்கியத்தில் பிகப்பெரிய பங்கு வகிக்கிறார். சென்னையில் கோடம்பாக்கத்தில் “மித்திரா” என்னும் பதிப்பகத்தை நிறுவி, அதை இயக்கி வரும் இவர், ஆஸ்திரேலியாவை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டவர்.

மனந்திறந்து அவர் நிலாச்சாரல் வாசகர்களுக்காக அளித்த பேட்டி இதோ !

உங்களுடைய இலக்கிய ஆர்வத்தின் பின்னணி என்ன ?

என்னுடைய இலக்கிய ஆர்வம் மிகச் சிறுவயதிலேயே உருவானது. எனது முதலாவது கவிதை 14 வயதில் அச்சில் வந்தது. இதற்குக் குடும்பப் பின்னணி காரணமல்ல.மாணவர் சமுதாய இலக்கிய அரங்கில் இணைந்து , இலக்கியம் சமுதாய முன்னேற்றத்திற்கு ஓர் சரியான சாசனம் எனும் எண்ணம் கொண்டு, இளம் வயதிலேயே ஈடுபாடு வந்தது.

உங்கள் எழுத்துக்கு முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள் ?

என்மீது தாக்கம் ஏற்படுத்தியவர்களுள் பாரதியாரே முக்கியமானவர். அவரின் தாக்கமே என்னை முதலில் கவிதை எழுதத் தூண்டியது. தமிழினால் சமுதாயத்தை எந்தெந்த வகையிலெல்லாம் விழிக்கப்பண்ண முடியுமோ , அவ்வழிகளிலெல்லாம் அவரது கவிதையின் வீச்சுச் சென்றது. மாகாகவியே என்மீது தனது கவிவீச்சுத் தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

இன்றைய ஈழத்துத் தமிழ் இலக்கிய நிலை உங்களுக்கு மகிழ்ச்சிகரமாக உள்ளதா
இல்லை கவலையாக உள்ளதா ?

துணிவாகச் சொல்லுவேன் ஈழத்துத் தமிழ் இலக்கியப் படைப்புக்கள் , இலக்கியப் படைப்புக்களாக இல்லை. அதற்காக இலக்கியம் தற்காலப் போர் சார்ந்ததாகவோ அன்றி அதனைத் தவிர்த்ததாகவோ இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் தற்கால நடைமுறை பதிவுசெய்யப்படவில்லை. ஈழத்துத் தமிழ்ப் பகுதிகள் தவிர்ந்த கொழும்பு போன்ற இடங்களில் இருந்து கொண்டு வெளிவரும் ஆக்கங்கள் , அரசாங்கக் கண்காணிப்பின் கீழ், தணிக்கைக்கு உட்படுத்தப்படும்போது , எவ்வாறு மக்களின் உண்மை நிலையை உணர்த்த முடியும்? இந்த இடைவெளியைப் பயன்படுத்திச் சிலர் , வெற்றிடத்தை நிரப்புவதற்காக மட்டுமே எழுதுவது போன்றும் தென்படுகிறது .

நீங்கள் ஈழத்தை விட்டுப் புலம்பெயர வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டபோது, உங்கள்
மனதினில் விளைந்த உணர்ச்சிகள் என்ன ?

நான் ஈழத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தினால் புலம் பெயர்ந்தவனல்ல. அரசியல் காரணங்களினால் எனக்கு முறையாகக் கிடைக்க வேண்டிய பதவியுயர்வுகள் கிடைக்காமல் புறக்கணிக்கப்பட்டதாலும் மற்றும் பல அரசியல் காரணங்களினாலும் நான் ஈழத்தை விட்டுப் புலம்பெயர்ந்தேன் என்பதுவே உண்மை. 1983ம் ஆண்டு நடைபெற்ற பயங்கரங்களின் பின்னால் இனக்கலவரத்தின் பாதிப்பு கூர்மைப்படுத்தப்பட்டது. எமது பழைய தமிழ்த்தலைவர்கள் என்றுமே தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்கவில்லை. 1959ம் ஆண்டு திரு.செல்வநாயகம் செய்த ஒப்பந்தத்தின் போதுதான் ஈழத்தில் தமிழ்த்தேசியம் முன்னெடுக்கப்பட்டது. தமிழகத்தில் தமிழ் மறைந்து கொண்டிருக்கிறது , ஈழத்தமிழர்
தமிழை முதன்மைப்படுத்துகிறார்கள் என்று கேட்கும் போது மகிழ்வாக இருந்தாலும், ஈழத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தின் விளைவாகவே ஈழத்தமிழர் தமிழ்த் தேசியத்தில் தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்பதுவே உண்மை. இன்று உலகமெங்கும் தமிழ்த்தேசியம் உலகத்தமிழரால் முன்வைக்கப்படும்போது , நானும் அந்த உலகத்தமிழர்களில் ஒருவன் எனும் நிலையால் பெருமையான உணர்ச்சியே மேலோங்கியுள்ளது.

நீங்கள் தமிழ்நாட்டோடு அதிகம் தொடர்புடையவர் என்னும் நிலையில் , ஈழத்தமிழர்கள் மீதான, தமிழக மக்களின் தற்போதைய கணிப்பு என்ன என்று எண்ணுகிறீர்கள் ?

ஈழத் தமிழ் மக்கள் மீது தமிழக மக்கள் கொண்டிருந்த அனுதாபம் குறைந்து கொண்டே போகிறது. இதற்கு ராஜீவ் காந்தியின் கொலை, மற்றும் சில ஈழத்தமிழர்களின் பிழையான நடவடிக்கைகள் பத்திரிகைகளினால் பெரிது படுத்தப்படுவது போன்ற பல காரணங்கள் உண்டு.

ஈழத்தமிழ் இலக்கியங்கள் அந்தநாட்டுப் போரைச் சார்ந்ததாக இருக்கவேண்டும்
என்றொரு எதிர்பார்ப்பு இருக்கிறதா? அப்படி இருந்தால் அது சரியானதா?

இலக்கியங்களை எழுதுபவர்கள் கோபுரங்களில் இருந்து கொண்டு எழுதுவதில்லை. அவர்கள் அந்த மண்ணின் மக்களோடு வாழ்ந்து கொண்டுதான் இலக்கியம் படைக்கிறார்கள். ஆனால் அதற்காகப் படைக்கப்படும் அனைத்தும் போரைப்பற்றித்தான் இருக்கவேண்டும் என்பதல்ல.சமகால நிகழ்வுகளும் பதிவு செய்யப்படவேண்டும். மனதிலே தமிழ்த்தேசியத்தையும், ஈழத்தமிழிலக்கிய மரபுகளையும் சுமந்து கொண்டு புலம்பெயர்ந்த மக்கள் , அதை இலக்கிய நாற்றாக்கி, போராட்டத்தின் பின் ஈழத் தமிழிலக்கிய மண்ணிலே நாட்டி இலக்கியத்தைப் பேணவேண்டும் என்பதிலே நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.

ஈழத்துத் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழகத்தில் எப்படியான வரவேற்பு இருக்கிறது?

அந்தக் காலந்தொட்டு இன்றுவரை தமிழ் இலக்கியத்தின் பிறப்பிடம் தமிழகம் என்றும், அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்துதான் ஏற்றுமதி செய்யப்படவேண்டும் என்றும் எண்ணும் மனோபாவம் வணிக ரீதியாக உண்டு. ஈழத்துத் தமிழெழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு ஓர் தனி அகராதி வேண்டும் எனும் கருத்தும் உண்டு.

ஆனால் இந்த மனோபாவம் இன்று மாறிக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் தமிழகம் இன்று தமிழைத் தொலைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, இன்குலாப் போன்றவர்கள் ஈழத்துத் தமிழ் இலக்கியத்தை ரசிக்கிறார்கள், வாசிக்கிறார்கள். வணிகரீதியில் மட்டுமே நாம் பிரச்சனையை எதிர் கொள்கிறோம். இது முற்றிலுமாக மாறவேண்டும் என்பதே எனது விருப்பம்.

புலம்பெயர்ந்த படைப்புக்கள் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன?

சென்னையிலே ஒரு புத்தக வெளியீட்டு விழாவிலே, பல முன்னணி எழுத்தாளர்களின் மத்தியில் 21ம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர்ந்த தமிழர்களே தலைமைப்படுத்திச் செல்வார்கள் என உரக்கச் சொன்னவன் நான். ஆனால் தற்போது புலம்பெயர் நாடுகளிலே தமிழ் இலக்கியத்திற்கு மத முலாம் பூசப்பட்டு, பின்னிலைப் படுத்தப்படுகிறதோ என அஞ்சவேண்டியுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் என எண்ணுகிறேன்.

புலம்பெயர்ந்து வாழும் எழுத்தாளர்கள் தாம் வாழும் நாடுகளின் சூழல்களை மையப்படுத்தி
இலக்கியம் படைப்பது தமிழை முன்னேற்றும் என எண்ணுகிறீர்களா?

நிச்சயமாக ! அப்படியான ஒரு அணுகுமுறைதான் “குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓடிக்கொண்டிருக்கும்” எம்மை ஒரு உலகளாவிய ரீதிக்குக் கொண்டு வரும். மற்றைய நாட்டு மொழியைப் படித்துத்தான் அவர்களது கலச்சாரங்களை ஒரு கண்னாடியால் பார்ப்பதுபோல் இல்லாமல் எமது எழுத்தாளர்கள் தமிழிலேயே அதை வெளிக்கொணரவேண்டும். அது மட்டுமன்றி அந்தந்த நாட்டு மொழிகளில் கூடப் புலம்பெயர்ந்தவர்கள் கவிதை,கட்டுரை வரைந்து தமிழிலக்கியச் சிந்தைகளை விசாலப்படுத்த வேண்டும்.

கணணியில் தமிழ் பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன ?

இது ஒரு மிகவும் நல்ல முன்னேற்றமே ! தமிழ்நாட்டு முயற்சிகள் அதிகம் இருந்தாலும் மென்பொருளாக்கம் முதலியவற்றில் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசிக்கும் தமிழரின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது. கணன்¢யின் தேவையைக் கூட்டி வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தது உலகத்தமிழன் என்று சொன்னால் மிகையாகாது. கணணியில் தமிழ் கண்ட வளர்ச்சி வாசிக்கும் பழக்கத்தைக் கூட்டுமேயன்றிக் குறைக்காது என்பது எனது கருத்து.

புலம்பெயர்ந்த தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உங்கள் அறிவுரை என்ன?

யாருக்கும் அறிவுரை சொல்லும் தகுதி எனக்குக் கிடையாது. ஆனால் வேண்டுகோள் விடுக்கிறேன். எங்கள் யாழ்ப்பாணத்துக் காணிச்சண்டை, வேலிச்சண்டை, ஜாதிச்சண்டை அனைத்தையும் விடுத்துத் தமிழைச் சிந்தியுங்கள். உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பியுங்கள். உங்களுக்குத் தமிழ் மீது நேசம் இருக்குமானால் தயவுசெய்து ஏதாவது வகையில் தமிழ்ப்பணி செய்யுங்கள். தமிழ் நூல்களை வாங்கிப் படியுங்கள்.

அன்பு மிகுந்த வாசகப் பெருமக்கள் இந்தப் பேட்டி 2005ம் ஆண்டு இடம்பெற்றது என்பதனையும் எனது கேள்விகளும், அவரது பதில்களும் அன்றைய காலச் சூழலின் பின்னனியில் இருந்தன என்பதையும் படிக்கும் போது நினைவில் கொள்ள வேண்டுகிறேன்..

அன்பு ஜயா எஸ்.பொ அவர்களின் ஆத்மசாந்திக்காக அனைவர்க்கும் பொதுவான அந்த இறையின் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.

சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *