எழுத்தாளர் எஸ்பொ காலமானார்
எஸ். பொ. மீளாத் துயிலில்..!
புகழ்பெற்ற இலங்கையின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான அவுஸ்ரேலியாவில் வசித்துவந்த எஸ். பொ. என அழைக்கப்படும்
எஸ். பொன்னுத்துரை சிட்னியில் இன்று (26 – 11 – 2014 ) காலமானார்.
ஐயகோ ஐயகோ
உள்ளதைச் சொல்லும் உரத்த குரல் ஓய்ந்ததோ?
கள்ளமற்ற வெள்ளை மனம் கரைந்து மறைந்ததோ
வெள்ளமான தெள்ளு தமிழ்நடை நோய்க்கு வீழ்ந்ததோ
அள்ளக்குறையா என்அன்புக் கடலில் அலையும் ஓய்ந்ததோ
எஸ். பொ. 04 – 06 – 1932 -ல் யாழ்ப்பாணம் – நல்லூரில் பிறந்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறீஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றவர்.
இளம்வயதில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளராகச் செயற்பட்டார். பின்னர் அவர்களுடன் முரண்பட்டுத் தனித்துவமாகச் செயற்பட்டார்.
நைஜீரியாவில் கல்லூரி ஆங்கிலத்துறையில் தலைவராக பணியாற்றியவர்.
மட்டக்களப்பில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர்.
நாவல், சிறுகதை, நாடகம், கவிதை, பத்தி எழுத்து, விமர்சனம் முதலிய துறைகளில் ஆளுமைமிக்கவராக விளங்கினார்..
சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவிப்பவர் என இலக்கியத்துறையில் கணிக்கப்பட்டவர்.
இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடங்கியவர்.
பிறமொழிப் படைப்புகள் சிலவற்றைத் தமிழுக்குக் கொண்டுவந்தவர்.
”வீ” – ”அவா” – ”ஆண்மை” ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் ”தீ” – ”சடங்கு” – ”மாயினி” நாவல்களுட்பட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
இவரது சிறுகதைகள் யாவும் தொகுக்கப்பட்டு ”எஸ். பொ. கதைகள்” என்ற தொகுதியாக வெளிவந்துள்ளது.
இவரது சில சிறுகதைகளும் ”தீ” – ”சடங்கு” நாவல்களும் ”வரலாற்றில் வாழ்தல்” என்ற அதிக பக்கங்கள் கொண்ட சுய வரலாற்று நூலும் பல சர்ச்சைகளையேற்படுத்திக் கவனத்தில் கொள்ளப்பட்டவை.
சென்னையில் ‘மித்ர’ பதிப்பகத்தினை ஆரம்பித்துப் பல படைப்பாளிகளின் நூல்களையும் வெளியிட்டுள்ளார்.