Blog

  • காற்று வாங்கப் போனேன்! (44)

    கே. ரவி

    இப்பொழுதெல்லாம் கவிஞன் என்று ஒருவன் தன்னைச் சொல்லிக் கொண்டால், மரபுக் கவிதைகள் எழுதும் கவிஞனா, இல்லை, புதுக்கவிதைகள் எழுதும் கவிஞனா என்ற கேள்வி உடனே கேட்கப்படுகிறது. பெரிய விவாதங்களைத் தவிர்த்து எளிமையாகச் சொல்வதென்றால், தமிழ் யாப்பிலக்கண நூல்களில் சொல்லப்படும் செய்யுள் வகைகளில் எழுதப்படும் கவிதைகள் மரபுக் கவிதைகள் எனவும், அப்படியின்றி எந்த யாப்பிலக்கணக் கட்டுப்பாடுகளுக்கும் அடங்காமல், கிட்டத்தட்ட உரைநடை வடிவில் எழுதப்படும் வெளிப்பாடுகள் புதுக்கவிதைகள் எனவும் பொதுவாகக் குறிக்கப் படுகின்றன.

    நான், சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்ந்த போது சரியாகத் தமிழ் எழுதக் கூடத் தெரியாமல் இருந்த கதையையும், ஆனால் எட்டாம் வகுப்பில் நுழையும் போது தமிழில் கவிதை எழுதுபவனாக மாறிவிட்ட ரசவாதம் பற்றியும் முன்பே அளந்து கொட்டிவிட்டேன். ஏறக்குறைய மூன்று மாதங்களில் அப்படியொரு மாற்றம் ஏற்படும் வண்ணம் என் நாவில் தேன்பிலிற்றிய தேவதை யாரோ, தெரியவில்லை. எல்லாம் பராசக்திதானே!

    எட்டாம் வகுப்பில் நுழையும் போது கவிஞனாக மட்டுமன்றித் தமிழ் இலக்கணம் ஓரளவு படித்த புலவனாகவும் மாறியிருந்தேன். திரு.கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என்ற ஆசிரியர் எங்களுக்குத் தமிழ் இலக்கணம் பயிற்றுவித்தார். அவரிடம் பயின்ற போது, இலக்கணத்தின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்து கொண்டேன். இலக்கணம் என்பது என்றைக்குமே மாறா விதிகளின் தொகுப்பு இல்லை, காலத்துக்கு ஏற்ப, மக்கள் பேசும் மொழிக்கு ஏற்ப, எழுதும் நடைக்கு ஏற்ப, அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் விதிகளின் தொகுப்பே என்பதைப் புரிந்து கொண்டேன். இலக்கண விதி ஒவ்வொன்றின் பின்னணியிலும் அந்த விதிக்கான காரணம், அல்லது, தேவை மறைந்திருப்பதை விளங்கிக் கொண்டேன். அந்த விதிகள், மக்கள் மொழியிலிருந்தும், படைப்பாளிகளின் எழுத்துகளில் இருந்தும் தேர்வு செய்யப் பட்டுத் தொகுக்கப் படும் உண்மையை அறிந்து கொண்டேன். இந்த அடிப்படைக் கருத்துகளை என் ஆசிரியர் கிருஷ்ணராமானுஜம் பிள்ளை என் நெஞ்சில் ஆழமாகப் பதித்ததால், கல்லூரி சென்ற பிறகு, தமிழ்க்கடல் என்றே போற்றப்படும் ஒரு மிகப் பெரிய தமிழ்ப் பேராசிரியரிடமே தமிழ் இலக்கணம் பற்றி எதிர் கருத்துச் சொல்லும் அளவுக்குத் துணிந்தேன்.

    Arv11968-69, விவேகானந்தா கல்லூரியில், புகுமுக வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதெல்லாம் அப்படியோர் வகுப்பு இருந்ததாம், அதற்கு ஆங்கிலத்தில் பி.யூ.சி. என்று பெயராம்! அப்போது நான் எழுதிய இலக்கணக் குறிப்பு ஒன்றைத் தவறு என்று சொல்லி என் தமிழாசிரியர் அதற்கு மதிப்பெண் தரவில்லை. நான் அவரிடம் வாதம் செய்தும் பயனில்லை. வகுப்பு முடிந்ததும் அந்த விடைத்தாளை எடுத்துக் கொண்டு தமிழ்த்துறைத் தலைவர், தமிழ்க்கடல் என்று குறிப்பிட்டேனே, பேராசிரியர் ஜகன்னாதாச்சாரியாரிடம் சென்றேன். நான் விடுவதாக இல்லை. அது வெறும் வகுப்புத் தேர்வுதான், பொதுத் தேர்வு இல்லை. ஆனால், அந்தக் குறிப்புத் தவறென்றால் அது எனக்கு இழுக்கு இல்லை, எனக்குத் தமிழ் இலக்கணம் சொல்லித் தந்த கிருஷ்ணராமானுஜம் பிள்ளைக்கு இழுக்கு என்றுணர்ந்து விடாப்பிடியாக ஜகன்னாதாச்சாரியார் வரும் வரை காத்திருந்தேன். அவர் வந்ததும் விடைத்தாளை அவரிடம் தந்து விளக்கினேன். ” ஏந்தெழில் இராமன்” என்ற சொற்றொடரில் முதற்சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு வரைக என்ற கேள்விக்கு, முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று நான் எழுதியதை ஆசிரியர் தவறு என்று அடித்து விட்டு அது வினைத்தொகை என்று கூறி எனக்கு மதிப்பெண் தர மறுத்துவிட்ட விவரத்தை அவரிடம் சொன்னேன். “அட, விடுப்பா! பத்துக்கு இரண்டு மதிப்பெண் போனால் போகட்டும்” என்றார் அவர். நான் விடவில்லை. மதிப்பெண் முக்கியம் இல்லை சார், எனக்குத் தமிழ் சொல்லித் தந்த ஆசானின் மதிப்புப் பிரச்சினை இது என்று நான் சொன்னதும், பலே, இங்கே கொண்டா என்று என் விடைத்தாளை வாங்கிச் சற்று நேரம் பார்த்துவிட்டு, “நீ சொல்வதை ஒப்புக் கொள்ள முடியவில்லையே. ‘ஏந்தெழில்’ என்பது வினைத்தொகை தானே. அத்துடன் தமிழ் இலக்கணத்தில் முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை கிடையாதே!” என்று அவர் சமாதானம் செய்ய முயலும் போது, கல்லூரி முதல்வரிடம் இருந்து அவசர அழைப்பு வரவே, அவர் சென்று விட்டார். நான் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டேன். அன்று மாலை வகுப்புகள் முடிந்ததும் ஒருவன் வந்து என்னை ஜகன்னாதாச்சாரியார் அழைப்பதாகத் தெரிவித்தான். விடைத்தாளுடன் ஓடினேன். மீண்டும் அதை வாங்கிப் பார்த்து விட்டு, நீ இப்படிக் குறிப்பு வரைந்ததற்குக் காரணம் சொல்லு என்றார். நான் சொன்னேன்: ஏந்திய எழில், ஏந்தும் எழில், ஏந்தப் போகும் எழில் என்று பொருள் கொண்டால் அது வினைத்தொகை. ஆனால் அதை அப்படிப் பொருள் கொள்ள என் மனம் இடம்தரவில்லை. எழிலை ஏந்துகின்ற இராமன் என்றுதான் பொருள் கொள்ளத் தோன்றுகிறது. எழிலை ஏந்துகின்ற என்பது முன்பின்னாகவும், இரண்டாம் வேற்றுமை உருபான ‘ஐ” மறைந்தும் இருப்பதால் ‘ஏந்தெழில்’ என்பதை முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என்று எழுதினேன், ஏந்து இராமன் என்றிருந்தால் அதை வினைத்தொகை என்று போட்டிருப்பேன் என்று நீண்ட பிரசங்கம் செய்தேன். ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “முன்பின்னாகத் தொக்க இரண்டாம் வேற்றுமைத் தொகை என ஒன்று இலக்கணத்தில் இல்லையே!” என்று அவர் கேட்டார். அதற்கு நான் இலக்கியத்தில் இருக்கிறதே என்றேன். சரி, இந்தத் தொடர் கம்பராமாயணத்தில் வருகிறது. இதே போல் வேறு இலக்கியத்தில் எங்காவது உண்டா என்று கேட்டார். உடனே சொன்னேன், பெரிய புராணத்தில் “ஏந்துபூம் பந்தர்” என்ற சொற்றொடர் வருகிறதே என்று. ஜகன்னாதாச்சாரியார் என் விடைத்தாளில் தம் கைப்பட என் இலக்கணக் குறிப்புக்கு முழுமதிப்பெண் போட்டுக் கொடுத்த்து விட்டு, மறுநாள் என் வகுப்புக்கு வந்து இது பற்றிச் சொல்லிப் பாராட்டி ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டுச் சென்ற நிகழ்ச்சியை நான் மறக்க முடியுமா?

    கிட்டத்தட்ட ஜகந்நாதாச்சாரியார் சாயலில் ‘தமிழ் ப்ரொபஸர் தாத்தாச்சாரியார்’ என்ற தலைப்பிட்டுப் பல்லாண்டுகளுக்கு முன் நண்பன் சு.ரவி வரைந்த ஒரு கோட்டோவியத்தை இங்கே பார்த்து ரசிக்கலாம்.

    arv

    இன்னொரு நிகழ்ச்சியைச் சொல்கிறேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன் ஏதோ ஒரு கடிதத்தில், ‘மாக்கவிஞன் பாரதி’ என்றுநான் எழுதியிருந்ததைப் படித்து விட்டு நான் மிகவும் மதிக்கும் ஒரு நண்பர், ‘மாகவி’ என்பதுதான் சரி, மாக்கவி என்று நான் எழுதியது தவறு என்று சொன்னதாக நண்பர் சுப்பு என்னிடம் சொன்னதும் அந்த நண்பரையே தொலைபேசியில் அழைத்து, அப்படி எழுதும் துணிவைக் கவிச்சக்கரவர்த்தியே எனக்குத் தந்தான் என்று சொல்லிவிட்டு, கம்பராமாயணத்தில் வரும், “தெய்வ மாக்கவி மாட்சி தெரிக்கவே” என்ற வரியை நினைவு படுத்தினேன். அவரும் சமாதானம் அடைந்தார் என்று நினைக்கிறேன்.

    ஆண்டுதோறும், பாரதி பிறந்தநாளை ஒட்டி வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் விழாவை, “பாரதித் திருவிழா” என்றே எழுதி வந்தேன். பெயர்ச்சொல்லுக்குப் பிறகு ஒற்று மிகாது என்று பல புலவர்கள் எடுத்துரைத்தும் நான் மாற்றிக் கொள்ளவில்லை. இலக்கணத்தை விடவும் த்வனியில் அதிக ஈடுபாடு கொண்டதாலோ என்னவோ எனக்கு பாரதித் திருவிழா என்று சொல்லும் போது கிடைக்கும் உணர்ச்சி, ‘பாரதி திருவிழா’ என்றால் கிடைக்கவில்லை என்று தோன்றியது. மேலும், கந்தனுடைய புராணம் கந்த புராணம் என்று இருந்தாலும், கந்தனாகிய கடவுள் என்பதைக் கந்தக் கடவுள் என்றுதானே சொல்கிறோம். அது போல், இந்த விழாவை பாரதியுடைய விழா என்பதைக் காட்டிலும், பாரதியாகிய திருவிழா, அதாவது, பாரதியையே ஒரு திருவிழாவாகக் கொண்டாடும் வைபவம் என்று கொண்டால் அதை பாரதித் திருவிழா என்றுதானே சொல்ல வேண்டும்! சிவக்கொழுந்து, ராமச்சந்திரன், கிருஷ்ணப் பிரேமி, என்ற சொற்றொடர்களை என்ன சொல்வது? ஒரு வேளை ஈறுகெட்டு, அதாவது, கடைசி எழுத்து மறைந்து வருவதால், ஒற்று மிகலாம் என்பார்களோ? அப்படியானால், ‘சக்திக் கனல்’ என்பதற்கு என்ன சமாதானம்? ‘கண்ணகி காப்பியம்’ என்பது சரி. ஆனால், ‘கண்ணகித் தெய்வம்’ என்பதுதானே சரி! அப்படித் தானே ‘பாரதித் திருவிழா’? நானே என் மனத்துக்குள் வாதங்களை அடுக்கி வைத்திருந்தேன். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், நான் பெரிதும் மதிக்கும் ஒரு கவிஞர், சிந்தனையாளர், குலோத்துங்கன் என்ற முனைவர் வா.செ.குழந்தைசாமி, தம் உடல்நிலையையும் பொருட்படுத்தாமல், இந்தப் பிரச்சினை குறித்து இரண்டு பக்கங்களுக்கு எனக்கு ஒரு கடிதம் எழுதி மாற்றச் சொன்னதும் மறுபேச்சுப் பேசாமல், “பாரதி திருவிழா” என்று மாற்றி விட்டேன். இலக்கணத்தை விட, த்வனியை விட, நட்பும், நாகரிகமும், பெரியோரை மதித்தலும் முக்கியம் இல்லையா? ‘மானுட யாத்திரை’ என்ற அரிய காப்பியம் வடித்த அந்த மாபெரும் புலவர் சொல்லை என்னால் தட்ட முடியவில்லை.

    ஒருமுறை, பகுத்தறிவுப் பாசறை நண்பர்கள் குழுமியிருந்த இடத்தில் போய், நான் கடவுள் பற்றிச் சில கருத்துகள் பேசி விட்டேன். நான் பேசிக் கொண்டிருந்த போதே ஒரு நண்பர் எழுந்து, என்னை மறுத்துக் கருத்துரைத்தார். நான் என் வாதங்களை எடுத்து வைக்க இடம்தராமல் சற்றுக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். உடனே நான், சரி ஐயா, கடவுள் இல்லை என்று சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் அப்படியே சொல்லிவிட்டுப் போகிறேன், எனக்குக் கடவுள் இருக்கிறார் என்று சொல்வதை விட நம் நட்பு முக்கியம் என்று சொல்லிவிட்டு, நான் இல்லை என்று சொல்வதால் கடவுள் நிச்சயம் கோவித்துக் கொள்ள மாட்டார் என்றதும் அந்த நண்பரே சிரித்து விட்டார்.

    வாதமே தொழிலாக அன்றாடம் செய்து வரும் நான் வாதத்தால் நட்பை இழக்க எப்போதும் உடன்பட்டதில்லை. எனக்குக் கருத்தை விட மனிதர்கள் முக்கியம். பாரதி ஒரு கவிதையில் சொல்கிறானே:

    அஞ்சுதலைப் பாம்பென்பான் – அப்பன்

    ஆறு தலை என்று மகன் சொல்லிவிட்டால்

    நெஞ்சு பிரிந்திடுவார் – பின்பு

    நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்

    நான் இவ்வளவு பீடிகை போட்டது மரபுக் கவிதை, புதுக் கவிதைப் போராட்டத்துக்குள் செல்வதற்குத்தான். மரபுவழியில் மட்டுமே எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தால் எப்படி ஒரு கவிதை உயிரற்றுப் போக வாய்ப்புண்டோ, அப்படியே, மரபை மீறித்தான் எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தாலும் நிகழக் கூடும். கவிதை எப்படி வருகிறதோ, அது எந்த வடிவத்தை ஏற்றுக் கொண்டு வருகிறதோ அதை அப்படியே வரவேற்க முடிந்தாலே போதும். பிறக்கப் போகும் ஒரு குழந்தையின் வடிவம் இப்படியெல்லாம்தான் இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்து, அப்படிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தாயால் முடியுமா? ஆனால், குழந்தை பிறந்த பிறகு அதற்குப் பெயர் சூட்டி, ஆடை, அணிகலன்கள் அணிவித்து, அழகு செய்து, பார்த்து ரசிக்க அன்னைக்கு உரிமையும் உண்டு, அது சாத்தியமும் கூட.

    யாப்பிலக்கணப் படியே கவிதையொன்று எழுத வேண்டும் என்ற தீர்மானத்தோடு ஒருவன் கவிதை எழுத உட்கார்ந்தால் அந்தக் கவிதையில் உயிர் இருக்குமா?

    கொஞ்சம் சந்தம், கொஞ்சம் சரித்திரம், கொஞ்சம் பாலியல் உணர்ச்சி என மூன்றும் கலந்த ஒரு கவிதை வேண்டும் என்று கேட்டதும் கணினி இரண்டு வரிகள் தந்ததாக சுஜாதா ஒரு கதையில் எழுதியிருப்பார்:

    கதவைத் திறந்து கவனித்து வந்த ராஜராஜ சோழன்

    விதவைக்கு முத்தம் பதினெட்டுத் தந்த ராஜராஜ சோழன்

    முயன்று எழுதப்பட்ட கவிதைகள் இப்படித்தான் அமையும். கவிதை எழுதும் போது, அடுத்த வரியில் என்ன சொற்கள் வருமோ என்று தெரியாமல் முதல் வரியில் தொடங்கி, அந்த வரிகள் எங்கே போய் முடியப் போகின்றன என்று புரியாமல் அந்தக் கவிதையின் போக்கில் சென்று, முடிந்த பிறகு அதைப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ள முயன்று, முயன்று, முழுதாகப் புரிந்து கொள்ள முடியாமல் தோற்றுப் போய்க் கொஞ்சம் புரிந்தது விட்டது போல் கற்பித்துக் கொண்டு, மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லி மகிழும் கவிதைகளின் சுகமே தனி. சரிதானே மனோன்மணி! புத்தி சிகாமணியை அவன் போக்கில் விட்டால் கணினி தந்த கவிதை போலத்தான் கவிதைகள் வரும்.

    பிறக்கும் குழந்தைக்கு எப்படி வடிவிலும், குணங்களிலும் பெற்றோர்களின் சாயல் இருக்குமோ, அந்த அளவுக்கு நான் எழுதும் கவிதைகளில் என் அறிவு, என் மனம் ஆகியவற்றின் சாயல் இருக்கத்தான் செய்யும். அவ்வளவே! சிகாமணி-மனோன்மணியின் கூட்டுத் தயாரிப்புத்தானே என் கவிதைகள்! அவர்களின் சாயல் என் கவிதைகளுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், என் கவிதைகள் அந்தச் சாயல்களைக் கடந்தவை. சாயல்கள் வெறும் சாயங்களே!

    யாப்புக்கு ஒத்து வர வேண்டும் என்ற முயற்சியில் தேவையற்ற சொற்களைப் பெய்வதால்தான் மரபுக் கவிதைகளுக்கு எதிர்ப்பியக்கமாகப் புதுக்கவிதை இயக்கம் மலர்ந்தது. பாரதி வசன நடையில் நல்ல கவிதைகள் எழுதித் தொடக்கி வைத்த பாதையில் பிச்சமூர்த்தியும், சி.சு.செல்லப்பாவும் அடித்தளம் போட்டுக் கட்டிடம் கட்டவும், அதில் வசிக்க குபுகுபுவென்று எத்தனைக் கவிஞர்கள் நீ, நான் என்று போட்டி போட்டுக் கொண்டு வந்து விட்டனர்! தற்போது, புதுக்கவிதை என்பது வெறும் ஒரு வடிவப் புரட்சி இல்லை, அதன் உள்ளடக்கமே தனி என்பதாக அந்தத் துறையை மேலும் வளம் செய்து கொண்டிருக்கும் பலர், கவிக்கோ அப்துல் ரஹ்மான், கவிஞர் ஈரோடு தமிழன்பன், கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியன், கல்யாண்ஜி போன்ற பல நல்ல கவிஞர்கள் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

    “புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற அருமையான நூலைப் படைத்த அமரர் வல்லிக்கண்ணனை நினைத்துக் கொள்கிறேன். எனக்குத் தெரிந்து, ஆண் புகைப்படத்தை அட்டையில் போடுவதே இல்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த குமுதம் பத்திரிகை தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தது வல்லிக்கண்ணனின் நூல் சாகித்ய அகதெமியின் பரிசு பெற்ற போதுதான் என்று நினைக்கிறேன். அதற்காகக் குமுதம் நிருபர் பால்யூ அரும்பாடு படவேண்டியிருந்தது. கடைசியில் அவர் முயற்சி வென்றது. குமுதம் தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டது. அதுவும் கொஞ்சம்தான் தளர்த்திக் கொண்டது. ஆம், ஒரு பெண் புகைப்படத்துடன் வல்லிக்கண்ணன் புகைப்படத்தைச் சேர்த்து அட்டையில் போடக் குமுதம் இசைந்தது. பால்யூ, ஒரு வெற்றிப் புன்னகையுடன், வல்லிக்கண்ணனை எங்கள் வீட்டுக்கு அழைத்து வந்து ஷோபனாவை விட்டு அவரைப் பேட்டி காணச் செய்து, இருவர் புகைப்படத்தையும் அடுத்த வாரக் குமுதம் அட்டைப் படத்தில் போடச் செய்தது ஒரு வரலாற்று நிகழ்ச்சி இல்லையா?

    Arrv2

    அதெல்லாம் இருக்கட்டும், வைதாரையும் வாழ வைப்பவன் என்று இறைவனைச் சொல்வது வழக்கம். எனக்கென்னவோ, கவிதையில் வைதால் மேலும் அருள் செய்வான் இறைவன் என்றே தோன்றுகிறது. இறைவனை விடுங்கள். ஒரு நல்ல கவிதை ரசிகனான மனிதன் அப்படித்தான். ஒரு தமிழாசிரியர், வகுப்புக்கு வந்ததும் நோட்ஸ் கொடுத்து எழுது என்று எங்களைத் தினமும் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். தாங்கவில்லை சாமீ! ஒருநாள், அவர் வகுப்புகு வரும் முன்பே, கரும்பலகையில் ஒரு குறட்பா எழுதி வைத்து விட்டேன்:

    தாராதீர் நோட்ஸெமக்குத் தந்தீரேல் நீரிங்கு

    வாராதீர் வன்சொல் பட

    அந்த ஆசிரியர் வந்ததும் அதைப் படித்துவிட்டு, யார் எழுதியது என்று கேட்டார். எல்லாரும் மெளனம் சாதித்தோம். சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும் என்று அவர் அச்சுறுத்தியதும், நான் எழுந்து நின்றேன். “ஓ! நான் முழுதும் சொல்லும் வரைக் காத்திருக்காமல் எழுந்து நின்று விட்டாயே. சொல்லாவிட்டால் எல்லாருக்கும் தண்டனை கிடைக்கும், சொல்லி விட்டால் எழுதிய மாணவனுக்குப் பாராட்டுக் கிடைக்கும் என்று சொல்ல நினைத்தேன்” என்றார், திரு. ராமமூர்த்தி என்ற அந்த ஆசிரியர். யார் ‘ஏந்தெழில்’ இலக்கணக் குறிப்புக்கு எனக்கு மதிப்பெண் தர மறுத்தாரோ, யாரை மீறிச் சென்று துறைத் தலைவரிடம் நான் மதிப்பெண் பெற்று வந்தேனோ, அதே ராமமூர்த்தி என்ற ஆசிரியர்தான், அவரை விமர்சித்து நான் எழுதிய குறட்பாவை ரசித்துப் பாராட்டினார்.

    கவிதை ரசிப்பதற்கே! அதில் சோகம் விளைந்தாலும், வீரம் வெளிப்பட்டாலும், சினமே பொங்கிக் கனன்றாலும், குதூகலம் நிரம்பி வழிந்தாலும், கவிதை ரசிப்பதற்கே!

    (தொடரும்)

    Share
  • மங்கள் பாண்டே

    — தஞ்சை வெ.கோபாலன்.

    Mangal-Pandey1857 வரலாற்றில் முத்திரை பதித்துவிட்ட ஆண்டு. கிழக்கிந்திய கம்பெனியார் பொருள்களை விற்பனை செய்ய இந்தியாவில் காலடி எடுத்து வைத்துவிட்டு, இங்கு நாடுபிடிக்கத் தொடங்கினர். கிழக்கிந்திய கம்பெனிக்கு சேவகம் செய்ய ஆங்கில படைகளைத் தவிர இந்திய வீரர்களைக் கொண்ட படைகளையும் தயாரித்து வைத்திருந்தனர். இதில் நடந்த கொடுமை, ஆங்கில சிப்பாய்களின் ஊதியத்துக்கும், சலுகைகளுக்கும், சீருடையிலும் மலைக்கும் மடுவுக்குமான ஏற்றத்தாழ்வு காட்டியிருந்தனர். மகாராஜாக்களைப் போல ஆங்கில சிப்பாய்கள் மின்னிக் கொண்டிருந்த நேரத்தில் பரதேசிகளைப் போல ஆடைகள் அணிந்து சேவகம் செய்யும் அடிமை இந்தியர்களைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கும். அந்த வரலாற்றுப் பின்னணியில் வட இந்திய பிரதேசங்களில் கிழக்கிந்திய கம்பெனியாரின் படைகளில் ஊழியம் புரிந்த இந்திய சிப்பாய்கள் தங்கள் அந்நிய எஜமானர்களின் ஆதிக்கத்தையும், அராஜகத்தையும், அடக்குமுறைகளையும் எதிர்த்து ஓர் ஆயுதப் புரட்சியைத் தோற்றுவித்தனர். அதனை அவர்கள் சிப்பாய் கலகம் என்றனர், நம்மவர்கள் அதை முதல் இந்திய சுதந்திரப் போர் என்றனர்.

    என் அடுத்த வீட்டில் வசிக்கும் பள்ளிக்கூட மாணவன் வாசலில் அமர்ந்து வரலாற்றுப் பாடத்தை உரக்கப் படித்துக் கொண்டிருந்தான். “சிப்பாய் கலகம் வங்காளத்தில் இருந்த பாரக்பூரில் இருந்த படைத் தளத்தில் பணியாற்றிய ஒரு பிராமண சிப்பாய், மங்கள் பாண்டே என்பவனுடைய துப்பாக்கி வேட்டை அடுத்து வட இந்தியா முழுவதும் கலகம் பரவியது” என்று படித்துக் கொண்டிருந்தான். என் நினைவு இந்த குறிப்பிட்ட வரிகளிலேயே மூழ்கிப் போயிற்று. மங்கள் பாண்டே எனும் வீரன் தன் மேலதிகாரியைச் சுட்டுக் கொன்றான்; அவனை ஆங்கில அதிகாரிகள் தண்டித்தனர்; தொடர்ந்து இந்திய சிப்பாய்கள் கலம் செய்யத் தொடங்கினர் சரிதான். ஆனால் அந்த மங்கள் பாண்டே எனும் வீரனுக்கு “பிராமண சிப்பாய்” (Mangal Pande, a Brahmin Soldier) என்றே அத்தனை வரலாற்று ஆசிரியர்களும் அடைமொழி கொடுக்க என்ன காரணம். அதற்கு விடை காண்பது ஒன்றும் அத்தனை சிரமமான காரியமாக இல்லை. நொடிப்பொழுதில் காரணத்தைக் கண்டுபிடிக்க முடிந்தது.

    ஆங்கில அதிகார வர்க்கமும், ஆங்கில அடிவருடிகளான வரலாற்று ஆசிரியர்களும் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக உருவான சிப்பாய் புரட்சி என்பது அரசியல் ரீதியானதோ, அல்லது நிர்வாக ரீதியானதோ ஏற்பட்டது அல்ல. மகாகவி பாரதி சொன்னதைப் போல, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?” என்றானல்லவா. ஆயிரம் வேற்றுமைகளுக்கிடையே அத்தனை பேரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நேரத்தில் இவர்களுக்குள் பிரிவினையைத் தோற்றுவித்துப் பிரித்தாளும் சூழ்ச்சியில் எல்லா இந்தியர்களையும் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் அடிமைப் படுத்த முடிந்ததே! அதே பிரித்தாளும் சூழ்ச்சியை இங்கேயும் கையாளும் முயற்சியே இந்த அறிவிப்பு. இந்திய சிப்பாய்களின் புரட்சி எந்த நிர்வாக குறைபாடுகளாலோ, ஏற்றத் தாழ்வினாலோ ஏற்பட்டது அல்ல. இந்திய சிப்பாய்களில் இந்து சிப்பாய்கள் மாட்டுக் கொழுப்பு தடவிய தோட்டாக்களை ஏற்க மறுத்தனர், இஸ்லாமிய சிப்பாய்கள் பன்றிக் கொழுப்புத் தடவிய தோட்டக்களை ஏற்க மறுத்தனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு சநாதனி பிராமண சிப்பாய் ஆங்கில படைத் தளபதியைச் சுட்டுக் கொன்றதும், இந்து சநாதனிகளும், இஸ்லாமிய சிப்பாய்களும் தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட ஆங்கில ஆதிக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர் என்பது அவர்களது எண்ணம். அதாவது இது மதங்கள் சம்பந்தப்பட்ட கலகம், இது அரசியல் காரணங்களுக்காக ஏற்பட்டது அல்ல என்பதை நிலைநாட்ட வேண்டுமென்பது அவர்கள் அவா. ஆக அவர்கள் மீது நிர்வாகத் தவறுகள் எதுவும் இல்லை, இந்தியர்கள் மத ரீதியான யுத்தத்தைத் தொடுத்தனர் என்று சொல்லத்தான் மங்கள் பாண்டேக்கு “பிராமண சிப்பாய்” என்ற அடைமொழியைக் கொடுத்திருக்க வேண்டும். போகட்டும், அன்று அடிமை புத்தி கொண்டவர்கள்தான் அப்படிச் சொன்னார்கள் என்றால், இன்றை வரலாற்றுப் புத்தகங்களிலும் அப்படியேவா எழுத வேண்டும்?

    சரி! இந்தப் பிரச்சனையை இதோடு விட்டுவிட்டு அந்த மங்கள் பாண்டேயைப் பற்றி சிறிது பார்ப்போம். ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டு, முதுகு வளைந்து, வெள்ளையனை ‘துரை’ என்றும், வெள்ளைக்காரிகளை ‘துரைசாணி’ என்றும் அழைத்து தரையோடு தரையாக குனிந்து வளைந்து வணக்கம் செலுத்தும் இந்திய சிப்பாய்கள் ஆங்கில கம்பெனியாரிடம் வயிற்றுப் பிழைப்புக்காக வேலைக்குச் சேர்ந்தனர். அவனும் அதைத்தான் எதிர்பார்த்தான். சிப்பாய் மட்டத்தில் மட்டுமல்லாமல், பின்னர் இந்திய நிர்வாகத் துறையில் பணியாற்ற இங்கிலாந்திலிருந்து எத்தனை வெள்ளையர்களை அழைத்து வர முடியும். இங்கிருக்கும் கருப்பர்களுக்கு ஓரளவு கல்வியைக் கொடுத்து, அவர்களைத் தங்களுக்குப் பணிபுரிய பயன்படுத்திக் கொள்ளலாமே என்றுதான் ஆங்கில அரசு லார்டு மெக்காலேயைக் கொண்டு ஒரு கல்வித் திட்டத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்தது. அவர்கள் எண்ணம் பெருமளவில் பயனளித்தது. கல்வி கற்ற இந்தியர்கள், தங்கள் பாரம்பரிய உடைகளைக் களைந்துவிட்டு, கோட்டு சூட்டு அணிந்து வெள்ளையனின் நிழலாக இந்திய தேசபக்தர்களுக்கு எதிராக இருந்து வந்தனர். அப்படிப் போய் அவர்களிடம் பணியாற்றி சேவகம் செய்த குறிப்பிட்ட இனத்தார் எல்லா பதவிகளையும் அபகரித்துக் கொண்டுவிட்டனர், எங்களுக்கு இடமே இல்லை என்று மற்றவர்கள் 1915இல் ஓர் இயக்கம் தோற்றுவித்து, அது எங்கெல்லாம் போய், என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கிறது என்பதையும் இப்போதும் பார்க்கிறோம்.

    லார்டு மெக்காலேயின் கல்வித் திட்டத்தால் கல்வி பயின்ற அத்தனை பேருமே ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்யப் போய்விடவில்லை. அவர்கள் கற்ற கல்வி அவர்களை அந்நிய சக்திகளுக்கு எதிராகப் போராடும் தேசபக்தர்களாகவும் அதிக அளவில் உற்பத்தி செய்யத் தொடங்கின. அப்படிப்பட்ட வரிசையில் அந்தக் காலத்து தேசபக்தர்கள் ஏராளம். அப்படிப்பட்ட ஒருவர்தான் மங்கள் பாண்டே.

    பாரக்பூர் வங்காளத்தில் உள்ள ஒரு ராணுவ முகாம். அங்கு பணியாற்றிய 19ஆவது இந்திய படைப் பிரிவில் மங்கள் பாண்டே இருந்தார். அங்கிருந்த 34ஆவது படைப் பிரிவிலுள்ள வீரர்களும், 19ஆவது பிரிவில் இருந்த வீரர்களும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக பொங்கி எழுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். இப்படிப்பட்ட வீரர்களை ரகசியமாகச் சந்தித்து நானா சாஹேப், மெளல்வி அகமத் ஷா, அலி நக்ஹிகான் போன்றவர்கள் கம்பெனி படை வீரர்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் புரட்சி செய்யத் தூண்டி வந்தனர். அவர்களுடைய பேச்சுக்களில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, இந்த நாட்டின் பாரம்பரிய பெருமையைக் காக்கவும், நமது பண்பாடு, கலாசாரம் இவைகளைக் காலில் போட்டு மிதித்திடும் இந்த மிலேச்சர்களுக்குத் தக்க பாடம் கற்பிக்கவும் மங்கள் பாண்டே சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்.

    வெடி மருந்துகள் குவித்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு பெரிய கட்டடத்தில் ஒரு சிறு தீச்சுடர் பட்டால் போதாதா? அப்படிப்பட்ட தீச்சுடராகத் தான் இருக்க வேண்டுமென மங்கள் பாண்டேக்கு ஆர்வம். அதற்கு ஏற்றார்போல ஆங்கில கம்பெனி படை அதிகாரிகள் இந்திய சிப்பாய்களிடம் பசுவின் கொழுப்பு, பன்றியின் கொழுப்பு ஆகியவை தடவிய தோட்டாக்களைக் கொடுத்து உபயோகிக்கப் பணித்தனர். துப்பாக்கியின் கொக்கியை வாயால் இழுத்து தோட்டாக்களை உள்ளே செலுத்த வேண்டும். அப்படிச் செய்யும்போது தோட்டாக்களில் தடவிய மாட்டு, பன்றிக் கொழுப்புகள் இவர்கள் வாயில் படும். அதனை அவர்கள் விரும்பவில்லை. ஹிந்து, இஸ்லாமிய வீரர்கள் சமயம் பார்த்திருந்தனர்.

    இங்கு இந்தியாவின் வடக்குப் பிரதேசங்களிலும் குறிப்பாக பாரக்பூரிலும் சிப்பாய்கள் மத்தியில் கொதிநிலை அதிகரித்து வருவதை ஆங்கிலேயர்கள் உணர்ந்து விட்டனர். அப்படி ஏதேனும் இவர்கள் அசம்பாவித சம்பவத்துக்குத் தயாராகிவிட்டால், அவர்களை அடக்குவதற்கென்று கல்கத்தாவிலிருந்தும், பர்மாவிலிருந்தும் ஏராளமான படைகளைக் கொண்டு வந்து குவித்து வைத்திருந்தனர். தங்களைப் பாதுகாக்க வெளியிலிருந்து படைகள் வந்துவிட்ட பின் துணிந்து 19ஆம் பிரிவு சிப்பாய்களிடமிருந்த துப்பாக்கிகளையும் மற்ற ஆயுதங்களையும் பிடுங்கிக் கொண்டு அவர்களை நிராயுதபாணிகளாக ஆக்கிவைத்தனர்.

    1857ஆம் வருஷம் மார்ச் மாதம் 29ஆம் தேதி. தன்னுடைய படைப்பிரிவில் நடந்து கொண்டிருந்த வைகளைப் பார்த்து கொதித்துப் போன மங்கள் பாண்டே, தன்னுடைய துப்பாக்கியைப் பிடுங்கிக் கொள்ளுவதற்கு முன்பாகத் தான் ஏதேனும் செய்துவிட வேண்டுமென்கிற வெறியோடு, தன் துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பிக் கொண்டு வேகமாக ராணுவ அணிவகுப்பு மைதானத்துக்குள் நுழைந்தார். அங்கு அணிவகுத்து நின்றிருந்த இந்திய சிப்பாய்களை நோக்கி அவர் “சகோதர வீரர்களே! நம்மையும், நம் மத உணர்வுகளையும் மதிக்காமல் அவமதிக்கும் இந்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வீறுகொண்டு எழுந்திடுவீர்! இந்து கடவுளர் மீதும், அல்லாவின் மீதும் ஆணையிட்டு அழைக்கிறேன், சகோதரர்களே நம்மை அடிமைப்படுத்தி மிருகங்களைப் போல நடத்தும் இந்த அந்நியர்கள் மீது பாய்ந்து சின்னாபின்னப் படுத்துங்கள். இவர்களைத் துரத்திவிட்டு நமது நாட்டை மீண்டும் பழைய உன்னத நிலைக்கு உயர்த்திடுவோம். செயல்படுங்கள்!” என்று உரக்கக் கூவினார்.

    அப்போது அந்த படைவீரர்களின் அணிவகுப்பை நடத்திக் கொண்டிருந்தவன் சார்ஜெண்ட் மேஜர் ஹ்யூசன் என்பான். மங்கள் பாண்டே திடுதிப்பென்று மைதானத்துக்குள் வந்து தூண்டிவிடுவதைக் கண்ட மேஜர் மங்கள் பாண்டேயைக் கைது செய்யும்படி வீரர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால் படைத் தளபதி ஹ்யூசனின் ஆணையை ஏற்று பாண்டேயைக் கைது செய்ய எவரும் முன்வரவில்லை.

    சிறிது அமைதி நிலவியது. தன் ஆணை ஏற்கப்படவில்லை என்பதை உணர்ந்த மேஜர் ஹ்யூசன் கோபத்தில் கொதித்துப் போனான். என்ன செய்வதென்று புரியாத நிலையில் மங்கள் பாண்டேயின் துப்பாக்கி வேட்டுச் சத்தம் எழுந்தது. அதிலிருந்து புறப்பட்ட தோட்டாக்கள் ஹ்யூசன் உடலில் பாய்ந்து அவனது உயிரைக் குடித்துவிட்டது.

    இவற்றையெல்லாம் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு ஆங்கில தளபதி லெஃப்டினென்ட் பாக் என்பான் தன்னுடைய குதிரையைத் தட்டிவிட்டு மிக வேகமாக பாண்டேயை நெருங்கி வந்தான். தன் அருகில் அவன் குதிரை மீது வரும்வரை பொறுத்திருந்த பாண்டே, தன் வாளால் அவனை ஓங்கி வெட்டித் தரையில் சாய்த்தார்.

    மற்றொரு அதிகாரி தன்னுடைய துப்பாக்கியை தூக்கி தோளில் அடிக்கட்டையைத் தாங்கிக் கொண்டு மங்கள் பாண்டேயைக் குறிபார்த்தான். இதை கவனித்த அணிவகுப்பில் நின்றிருந்த ஒரு இந்திய சிப்பாய் தனது துப்பாக்கியைத் திருப்பிக் கொண்டு அடிக்கட்டையால் அவன் தலையில் ஓங்கி அடிக்க, அவனும் மண்டை உடைந்து கீழே விழுந்து உயிரை விட்டான்.

    இவ்வளவையும் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த மேலதிகாரியான கர்னல் வீலர் என்பான் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான சிப்பாய்களை விட்டு மங்கள் பாண்டேயைக் கைது செய்ய உத்தரவிட்டான். பாண்டேயைக் கைது செய்ய அந்த சிப்பாய்கள் மைதானத்தின் மத்திய பகுதிக்கு ஓடிவந்தனர். அப்போது அணிவகுப்பில் இருந்த இந்திய சிப்பாய்கள் ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர். “மங்கள் பாண்டேயைத் தொடாதே! இந்த உத்தம பிராமணன் மீது கைவைக்க அனுமதிக்க மாட்டோம். அவன் ரோமத்தைக் கூட உங்களால் தொடமுடியாது” என்று கலகம் செய்தனர்.

    அணிவகுப்பு மைதானம் கலகலத்துப் போயிற்று. ரத்த வெள்ளத்தில் மைதானத்தின் நடுவே சில ஆங்கில அதிகாரிகள். அவர்களைக் கொல்ல காரணமாயிருந்த மங்கள் பாண்டே வெறி பிடித்தவர் போல கையில் துப்பாக்கியையும், வாளையும் வைத்துக் கொண்டு கண்கள் சிவக்க நின்று கொண்டிருந்தார். அணிவகுத்த சிப்பாய்கள் வேறு ஆங்கிலேயர்களுக்கு எதிராக தாக்குதலுக்குத் தயாராக நிற்கின்றனர். இந்த காட்சிகளைக் கண்டு அதிர்ந்து போனார்கள் ஆங்கில அதிகாரிகள். கர்னல் வீலர் பயந்து தன் பங்களாவை நோக்கி ஓட ஆரம்பித்தான். அப்போது கைகள் ரத்தத்தால் கழுவப்பட்டு நிற்கின்ற மங்கள் பாண்டே கரங்களை உயர்த்தி, “சகோதரர்களே! செயல்படுங்கள்! நம்மை இழிவு செய்த பரங்கியருக்கு பாடம் கற்பிப்போம்” என்று உரக்கக் கத்தினார்.

    மைதானத்தில் நடந்த செய்திகள் ஜெனரல் ஹியர்சே என்பாருக்குச் சென்றடைந்து அதிர்ச்சியை உண்டாக்கியது. அவர் தன் நம்பிக்கைக்குரிய ஆங்கில படை வீரர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு அணிவகுப்பு மைதானத்தை நோக்கி ஓடிவந்தார். அப்படி வந்த ஆங்கில வீரர்களின் எண்ணிக்கையைக் கண்டும், அவர்களது நோக்கத்தையும் புரிந்து கொண்ட மங்கள் பாண்டே, என்ன ஆனாலும் இந்த மிலேச்சர்கள் கையில் அகப்பட்டுக் கொள்வதைக் காட்டிலும் உயிர்த்தியாகம் செய்துகோள்வதே மேல் என்று நினைத்துத் தன் துப்பாக்கியால் தன்னையே சுட்டுக் கொண்டார். காயமடைந்து மைதானத்தில் சுருண்டு விழுந்த பாண்டேயை ஆங்கில வீரர்கள் தூக்கிக் கொண்டுபோய் வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

    மீதமிருந்த ஆங்கில சிப்பாய்கள் மைதானத்தில் நடந்த எதிர்பாராத நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்டு அவரவர் கூடாரங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

    உடல்நிலை குணமடைந்த மங்கள் பாண்டே ராணுவ நீதிமன்றத்தின் முன்பாக குற்றவாளியாகக் கொண்டுபோய் நிறுத்தப்பட்டார். அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்டன. அவருடைய இந்த செயலுக்கு யார் தூண்டுதல், யார் யார் அவருக்குத் துணையாக இருந்தார்கள். யாருடைய வழிகாட்டுதலில் அவர் இப்படிச் செய்தார் என்றெல்லாம் கேட்டும் அவர் யார் பெயரையும் சொல்லவில்லை. தன்னால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆங்கில அதிகாரிகளிடம் தனக்குத் தனிப்பட்ட எந்த விரோதமும் கிடையாது என்றார். தான் பிறந்த நாட்டைக் காப்பாற்றவும், தங்கள் கலாச்சாரங்களுக்கு அவமரியாதை நேரிடுவதை எதிர்த்தும் தான் இந்தப் போரில் ஈடுபட்டதாகக் கூறினார்.

    தன் தேசத்துக்காகவும், தங்கள் மத உணர்வுகள் புண்படுவதை எதிர்த்தும் மங்கள் பாண்டே தனிப்பட்ட முறையில் இந்த எதிர்ப்பைக் காட்டினார். ஒரு புனிதப் போரில் ஈடுபட்டு சிறைப்பட்ட அந்த மாவீரன் மீது விசாரணை நடந்தது. ஒரு நாயைக் கொல்வதானாலும் தீர விசாரித்துத் தீர்ப்பு வழங்குவதுதான் ஆங்கிலேயர்களின் தர்மம் என்று அவர்கள் உரத்த குரலில் சொல்லி வந்தார்கள் அல்லவா? அதை நிரூபிப்பதைப் போல மங்கள் பாண்டேயை நீதிமன்றத்தில் தீர விசாரித்து முடித்து அவருக்கு தூக்கு தண்டனை வழங்கினர். பாண்டேயை 1857 ஏப்ரல் 8ஆம் தேதி தூக்கிலிட முடிவு செய்தனர். ஒரு கைதியைத் தூக்கிலிட வேண்டுமானால் முன்கூட்டியே தூக்கிலிட ஒரு நபரை அவர்கள் முடிவு செய்ய வேண்டும். அப்படி பாண்டேயைத் தூக்கிலிட பாரக்பூரில் எவருமே முன்வரவில்லை. அதனால் கல்கத்தாவுக்குச் சொல்லியனுப்பி அங்கிருந்து கூலிக்கு ஒருவரை அழைத்து வந்தனர்.

    1857 ஏப்ரல் 8ஆம் தேதி விடியற்காலை. சிறையிலிருந்து மங்கள் பாண்டேயை ஏராளமான சிப்பாய்கள் காவலோடு அழைத்து வந்தனர். ஒரு மாவீரனைப் போல மங்கள் பாண்டே தலை நிமிர்ந்து தூக்கு மேடை மீது ஏறினார். கூலிக்கு மாரடிக்க வந்த தூக்கிலிடுவோன் தன் பணியைச் செய்து முடித்தான். தூக்குக் கயிறு பாண்டேயின் கழுத்தை இறுக்கியது. இந்த தேசத்துக்காக முதல் வேட்டு வெடித்த மங்கள் பாண்டேயின் உயிர் அவர் உடலைவிட்டுப் பிரிந்தது.

    மகாபாரதப் போருக்கு பலியிட ஒரு அரவான் கிடைத்தான். பாரத புண்ணிய பூமியின் சுதந்திரப் போருக்கு ஒரு மங்கள் பாண்டே கிடைத்தார். இந்திய மண்ணில் கோடானு கோடி பேர் பிறந்து வாழ்ந்து மறைந்தாலும் மங்கள் பாண்டே போன்ற மாவீரனின் பெயர் இன்றளவும் மக்கள் நெஞ்சங்களில் நிறைந்திருப்பதற்கு அவனது தேசபக்தியும், மகத்தான தியாகமுமே காரணம். தேசபக்தியின் விளைவாக நடந்தது இந்த நிகழ்ச்சிகள். ஆங்கில வரலாற்றாசிரியர்கள் எழுதியுள்ளபடி ஒரு சநாதனியின் பழிவாங்கும் செயல் அல்ல என்பதை இந்திய மக்கள் உணர்ந்தாக வேண்டும். வாழ்க மங்கள் பாண்டே புகழ்!

    கட்டுரை ஆக்கம்:
    தஞ்சை வெ.கோபாலன், இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
    28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, தஞ்சாவூர் 613007.
    # 9486741885.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    “மகோதரன் அன்னை, மகாதேவர் பாகி,
    சகோதரன் கண்ணனின் சார்பாய், -சகாய,
    எருதேறி வந்தாள், இமவான் குமாரி,
    திருநாள் நவராத் திரி”….கிரேசி மோகன்….

    Share
  • அம்மையும் நீயே!

    பவள சங்கரி

    10461319_599716563472336_3628801855800448289_n

    அம்மையும் நீயோ இப்புவியும் உன்னதோ
    உன்னைநினைந்தே தமிழை ஓதினேன் – என்னை
    கனிந்தேற்றுக் கொள்ளாத நாயகியுண்டோ உண்டோ
    செருக்கேற்றுக் கொள்ளாத கவிஞனும்!

    Devi_Kanya_Kumari

    தேவி பிறந்தவூர் அலைகடல் சூழுமூர்
    சிற்றாடையும் சிந்தூரமும் மாணிக்கமும் சூடியவள்
    புன்னகையும் புதுப்பொலிவும் பூமணமும் நித்தம்
    நிறைதலம் நீள்கடல் நாயகியே!

    Share
  • படமும் பாடலும்

    கிரேசி மோகன்

    crazy

     

    “பால்கொடுத்தாய் சம்பந்த பிள்ளைக்குப் பண்ணிசைக்க,
    வேல்கொடுத்தாய் மைந்தனுக்கு வெற்றிபெற, -தாள்கொடுத்தாய்
    அய்யன் இடமிருந்து அய்யோ பதியோட;
    பையன் எனக்களிவாய்ப் பாக்கு”….கிரேசி மோகன்….

    மார்கண்டேயனுக்காய் ஈசன் எமனை(அய்யோ பதி) உதைத்தது அம்பாள் இருக்கும் இடது கால்….
    காளிதாசனுக்கும், காளமேகத்துக்கும் தன் திருவாய் தாம்பூலம்(பாக்கு)….

     

    Share
  • நவராத்திரி திருப்பதிகம்

    சந்தர் சுப்ரமணியன்

    —————–

    maa-durga-devi-navratri-wallpaper-258

    துர்க்கை

    நெருப்பின் வடிவெழு நீலி! பயங்கரி!
    .. நீளும் உறவென நின்றவளே!
    வருத்தும் முறையுள வாழ்வின் வழிவரும்
    .. வன்மை தொலைந்திட வாழ்த்திநலம்
    இருக்கும் வகையினில் என்றும் சுகந்தரும்
    .. இன்பம் தழைத்திட இவ்வுலகைத்
    திருத்தி அமைத்தினி சீர்மை துலங்குநற்
    .. சேமம் நிலைபெறச் செய்குவையே! (1)

    கரத்தி லொருபடை, கண்ணிற் பெருஞ்சினங்
    .. காட்டி உலகினைக் காப்பவளே!
    உரத்த குரல்வழி ஓலம் ஒலித்திட
    .. ஓங்கும் வறுமையில் ஏழையர்கள்
    இரக்கும் நிலைதனை ஏகும் படியவர்க்(கு)
    .. இன்னல் இழைத்திடும் ஈனரவர்
    சிரத்தை அறுத்தகச் சிந்தை தனிலுறை
    .. தீமை அழித்தருள் செய்குவையே! (2)

    துரத்தி அசுரனின் தொல்லை அறச்செயும்
    .. துர்க்கே! சுடரொளித் தீப்பிழம்பே!
    அரக்க மனிதரின் ஆழ்ந்த மனத்தெழும்
    .. ஆலம் அழித்துல காள்பவளே!
    சுரக்கும் அமுதெனத் தோன்றி உளத்தெழு
    .. சோகம் கரைத்திடும் தூயவளே!
    சிரத்தை மனத்தெழ தேடித் தொழுபவர்
    .. தேவை நிறைவுறச் செய்குவையே! (3)

    இலக்குமி

    தெரிக்கும் திருவளர் செல்வத் திருமகள்!
    .. தீராத் திரவியத் தீம்பொருளே!
    அரிக்கும் பிணியென ஆன வறுமையின்
    .. ஆழப் புதைகுழி ஆழ்ந்தவரின்
    வருத்தம் விலகிட, வாட்டும் வினையற,
    .. வாடா வளம்பெற, வாழ்விலினி
    சிரிக்கும் படிஅவர் சேர்க்கும் அரும்பொருள்
    .. தேயா துயர்ந்திடச் செய்குவையே! (4)

    பெருத்த நிதியளே! பேறே! வளங்களைப்
    .. பேணிப் பெருக்குநற் பேரருளே!
    உருக்கும் வெயிலிடை உண்ணும் பொருள்பல
    .. ஓயா துயர்ந்திட ஓர்வழியாய்க்
    கருத்த முகில்பல காட்டி அதன்வழி
    .. காய்மண் குளிர்ந்திடக் காத்தருளி,
    தெரிக்கும் கதிர்வளம் சேர்ந்த கழனிகள்
    .. செழிக்கும் படியினி செய்குவையே! (5)

    பொருட்கள் தனிலிருப் போளே! பொலிதரு
    .. பொன்னே! திருவளர் பூமகளே!
    பெருக்கும் பெருநிதி! பிள்ளை பிறப்பெனும்
    .. பேற்றை அளிக்குநற் பேரனையே!
    செருக்கும் படையமை தீரச் செழுமையே!
    .. தேடும் விசயமென் றானவளே!
    விருப்பின் வழியுமை வேண்டி விழைபவர்
    .. வேண்டும் படிஅருள் செய்குவையே! (6)

    சரஸ்வதி

    கருத்தில் அமைபொறி காக்கும் கலைமகள்!
    .. கல்விக் கடலெனக் காணறிவே!
    சுருக்க உரையெனத் தோயுங் கருவினில்
    .. தோதாய்ப் புதுச்சுவை தோன்றநிதம்
    விரித்துப் பொருள்பல விளக்கும் அதிசய
    .. விந்தை விளைக்குநல் வித்தகத்தைச்
    சிரத்துள் புதைமதி சீராய்ச் செயும்வழி
    .. தேரும் வகைபெறச் செய்குவையே! (7)

    விரிந்த மலர்மிசை வீணை தடவிட
    .. வேதன் துணையென வீற்றவளே!
    நிருத்தம் உடல்பெற நீளும் நயமதை
    .. நிற்கும் நரம்பினுள் நிரப்புதலும்
    பொருந்தும் இசைவரும் போது புதுக்கவி
    .. பூக்கப் புனைவதும் போற்பலவாய்ச்
    செருக்குங் கலைஞரின் தேடும் இயல்பினைத்
    .. தேர்ந்து தெளிந்திடச் செய்குவையே! (8)

    புரிந்த கலைகளில் பூக்கும் திறன்மிகப்
    .. போந்த புதுச்சுவை பூணழகே!
    சொரிந்த அமுதென சொல்லில் வடிந்துளம்
    .. சொக்கும் படிசெயும் தூய்தமிழே!
    விரைந்த விரல்படும் வேளை விழையுநல்
    .. வீணை இசையென வீற்றவளே!
    தெரிந்த கலைகளில் தேர்ந்த புதுமைகள்
    .. சேர்க்கும் வளம்பெறச் செய்குவையே! (9)

    விழைவு

    கருத்து பொது;வெளிக் காட்டும் முறைபொது;
    .. கண்டு கவிதையில் மூவருக்கும்
    விருத்த வழிதனில் விண்டு விளக்கிடும்
    .. வேலை எமதென வேண்டுகிறேன்!
    பொருத்த முளதெனின் போகம் அறிவறம்
    .. பொய்யா வகையினி பூவுலகில்
    வருத்தம் முடிவுற வாழ்வில் வளமுடன்
    .. வாழ மனிதரை வாழ்த்துகவே! (10)

    Share
  • அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!

    பவள சங்கரி

    thirukaiyur

    அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
    இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
    ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
    உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!

    பழமைக்கோலம் பரிதியின் தவம்
    புதுமையில் புகுந்தால் புவிநாசம்
    பழமையும் புதுமையும் பரிதிக்கேது
    சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!

    பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
    பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
    மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
    அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!

    தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
    பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
    நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
    காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

    அம்பிகையின் மலர்பாதங்களை சரணடைந்தோர் என்றும் துன்பக்கடலில் துவண்டுவிடுவதில்லை. இன்பமும், துன்பமும் இல்லா இன்னமுதம் அவள் பாத கமலம். எத்தனை எத்தனை அவதாரங்கள்.. எழில்மிகு வண்ணக்கோலங்கள் அவள் தோற்றம். அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டரின் வாழ்க்கைச் சரிதமே அதற்கு ஆதாரம். அன்னையைச் சரணடைந்து, பித்தராய்த் திரிந்த பட்டர், காணும் பெண்களனைவரையும், அபிராமி அன்னையின் அவதார உருவமாகவேக் கண்டின்புற்றார்.

    about-temple-banner

    அபிராமி அந்தாதி பாடலை உள்ளம் உருகப் பாடிப்பரவச் செய்தவர், அபிராமிப்பட்டர். இவர் பிறந்த ஊர் அன்னை பராசக்தி அபிராமவல்லியாக அடியவர்க்கு அருள்பாலிக்கும் திருக்கடையூர். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களின் சிறப்பானதொன்றுதான் திருக்கடையூர். என்றும் பதினாறு என்ற வரம் பெற்ற மார்கண்டேயரை அன்னை பராசக்தி, எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய வரலாறு சுவையானது. எமதர்மன், மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய அத்தருணத்தில், அப்பாலகன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்திருமேனியின் மேல்வந்து வீழ்ந்தது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமானாரின் சகதர்மினி அன்னை பராசக்தி சிவலிங்கத்தில் தோன்றினாள். ஈசனின் இடப்பாகம் உறையும் சக்திதேவி சிவலிங்கமாக வீற்றிருக்கும் தம் கணவர் மீது விழுந்த பாசக் கயிறு, தம் மீது விழுந்ததாகவேக் கருதி கோபமுற்றார் அம்பிகை. அதனால் எமனைத்தம் இடது காலால் எட்டி உதைத்தார் பெருமானார். ஆம், தன் மனைவியின் மனதை வேதனை அடையச் செய்த எமனை, அன்னைக்கேயுரிய தனது இடது பகுதியின் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன். இப்படி மார்கண்டேயனை காப்பாற்றிய அன்னை அபிராமவல்லி, என்றென்றும் பக்தர்களை காக்கவும் காத்திருக்கிறாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே அன்னையை வழிபடுவோரை வழிநடத்திச்செல்கிறது என்பதே நிதர்சனம்!

    images (5)

    இதுபோன்று பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை அபிராமவல்லிமீது பித்தரான ஒருவரை ‘பைத்தியக்காரன்’ என்று அவ்வூர் மக்கள் பேசினார்கள். அபிராமிபட்டர் என்ற அந்த மகான் சிறந்த தேவி உபாசகர். தாம் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்துக் கொண்டும் இருப்பார். இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் கீர்த்தியை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினார் இறைவன், ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேசுவரரை தரிசிக்கும்பொருட்டு திருக்கடையூர் கோயிலுக்குத் தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்ற நிலையைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை எனும் திருக்கோலத்தையும் தம் கண்ணாரக் கண்டு இன்புற்றதோடு, இடைப்பட்ட ஏனைய கிரந்திகளனைத்தையும் கடந்து, சகஸ்ராரத்தில் ஒளிமயமாகத் திகழும் லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தார். ஆனால் இதன் மகத்துவம் அறியாத சாதாரணர்கள், இவர் ஏதோ துர்தேவதையை ஆராதனை செய்து வந்த காரணத்தினாலேயே இப்படி பித்தராகி, ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டு, தீய வழியில் சென்றுவிட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

    ஒரு நாள் தஞ்சை அரசர், ராஜா சரபோஜி தை அமாவாசை தினத்தன்று, பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூருக்குத் தரிசனம் பெற வேண்டி வந்தார். அவ்வேளையில், அபிராமி அம்மன் சந்நிதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதும் என்று வித்தியாசமாக செய்துகொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களோ தங்களுக்குள்ளாக, ‘மன்னர் வந்திருப்பதுகூட அறியாமல், மன்னரை வணங்கவும் செய்யாமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே’ என கூறிக்கொண்டிருந்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், ‘இவர் ஒரு பித்தர். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுபவர்’ என்றனர். மன்னரும் இதைச் சோதிக்க எண்ணியதால், சுப்ரமணிய ஐயரிடம், ‘இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?’ என்று கேட்டார்.

    அன்னையின் காட்சியின் பேரானந்தத்தை உள்ளூரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டரின் செவியில், அமாவாசை என்ற சொல் மட்டும் விழ, அவரும், ‘இன்று பௌர்ணமி அல்லவோ?’ என்று சொல்லிவிட்டார். அனைவரும், ஏளனத்துடன் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மன்னரும் மக்கள் சொன்னதும் சரிதான் என்று நினைத்தவாறு சென்றுவிட்டார். ஆனாலும் அரண்மனை திரும்பிய மன்னருக்கு, அவருடைய தோற்றமே, திரும்பத் திரும்ப கண்ணெதிரே வந்தது. அன்று பெளர்ணமி என்று சுப்பிரமணிய ஐயர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னையறியாமல் கண்ணயர, கருவறையின் அபிராமி அன்னை அவர் கண்ணெதிரே தோன்றியதோடு, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். ‘ஆகா, இது பூரண நிலவன்றோ! முழுமதி சுடர் விட்டு பிரகாசிக்கின்றது பாருங்கள்’ என்று சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தபோது, அவர் உடல் அச்சத்தில் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

    இந்தப் புராணக் கதையை மற்றொரு விதமாகவும் கூறுவர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாகக் கூறாதவர் அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொன்னதாகச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் தீயை மூட்டி அதன் மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, ‘அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்’ என்று சூலுரைத்து அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கியதாகவும் கூறுவார்கள். ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்’ என்று துவங்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், பேராச்சரியமாக, ‘விழிக்கே அருளுண்டு’ என்ற 79-வது பாடலின் போது மங்கிய அம்மாலைப் பொழுதில் அபிராமி அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் காட்சி கொடுத்து, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்னையின் அருளால் பட்டரும் மனம் தெளிவுற்று, அன்னையின் அருளைப் போற்றி, துதிப்பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் நல் அனுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அற்புதமாக பொழிய ஆரம்பித்தது. மன்னரும் பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் பரிசளித்தார்.

    abhirami

    விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
    வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
    பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
    குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!

    தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
    மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
    இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
    கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

    கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
    ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
    காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
    ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

    (அபிராமி அந்தாதி)

     

    அபிராமி அந்தாதி 108 முத்தான பாடல்கள் கொண்டது. அன்னையை வழிபடுபவர் வாழ்வின் சகல செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வர் என்பது ஐதிகம்.

    Share
  • நவராத்திரி நாயகிகள்…

    -செண்பக ஜெகதீசன்

    3 devis

     

     

     

     

     

     

     

    வல்லமை தந்திடும் மலைமகளை
         வாழ்த்திப் போற்றி வலுவடைவோம்,
    நல்ல பொருள்தரும் அலைமகளை
         நாமம் சொல்லி வாழ்த்திடுவோம்,
    கல்வி தந்திடும் கலைமகளைக்
         கால மெல்லாம் போற்றிடுவோம்,
    எல்லாம் பெற்றே இன்பமுற
         என்றும் பணிவோம் இவர்பதமே…! 

    Share
  • மஹாளயபட்ச நன்னாள் – ஒரு புதிய சிந்தனை

    — ரஞ்சனி நாராயணன்.

    மஹாளய அமாவாசைநன்றிக் கடன்!

    புரட்டாசி மாத அமாவாசை மஹாளய அமாவாசை எனப்படுகிறது. இந்த நிறைந்த நாளே நவராத்திரியின் ஆரம்ப நாள். அதுமட்டுமில்லாமல் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நமது நன்றிக்கடனை நாம் செலுத்தும் நாளும் இதுவே.

    பல மில்லியன் ஆண்டுகளாக இந்தப் பூமியில் மனித இனம் இருந்து வருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அந்த தலைமுறை மனிதர்கள் எல்லோருமே நமது இன்றைய வாழ்விற்கு ஏதோ தவிர்க்க முடியாத ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இன்றைக்கு நாம் பேசும் மொழி, நாம் உடுத்தும் உடை, நாம் வசிக்கும் வீடுகள், நமது நடை என்று எல்லாமே அவர்களிடமிருந்து நாம் கற்றவைதான். நாம் பெற்றவைதான், இல்லையா?

    இந்தப் பூமியில் விலங்குகள் மட்டுமே இருந்துவந்த காலத்தில் உண்பது, உறங்குவது, இனப்பெருக்கம் இவற்றினூடே தங்களைக் கொல்லவரும் எதிரிகளிடமிருந்து தப்பிப்பது இவையே முக்கியமானவைகளாக இருந்தன. பின் மெதுமெதுவே  விலங்குகள் பரிணாமம் பெறத் தொடங்கின. அகலமாக வளர்ந்தவைகள் எழுந்து நிற்கத் தொடங்கின.  மூளை, வளர்ச்சி பெறத் தொடங்கியவுடன், பல்வேறு திறன்களும் வளரத் தொடங்கின… ஒரு செல் பிறவியாக இருந்த உயிரினம் பல செல் பிறவியாக, மனிதனாக பரிணாமம் பெற்றது. மனித இனத்தின் மிக முக்கியமான பரிணாமம் தன்னைச்  சுற்றியிருக்கும் பொருள்களை பல்வேறு வகைகளில் அவன்  பயன்படுத்தத் தொடங்கியது தான். இந்த எளிமையான திறன் தான் பிற்காலத்திய தொழில் நுட்பங்களுக்கு அடிகோலியது. தன் கைகளை மட்டுமே நம்பியிருந்தவன் மரக்கிளைகளை ஆயுதமாகக் கொண்டு தன்னை எதிர்த்து வந்த எதிரியுடன் போரிட்டபோது நுட்பவியலின் கதவுகள் திறந்தன. தன்னைச் சுற்றியுள்ள பல பொருட்களையும் கொண்டு தன் வாழ்வை மேம்படுத்திக்கொள்ள ஆரம்பித்தான் மனிதன். இதுவே மனித இனத்தின் நீடித்த வாழ்வின் ஆரம்பம் எனலாம்.

    விலங்குகளைப் போல இருந்த மனிதன் மெதுமெதுவே தன் வாழ்வை செப்பனிட்டுக் கொள்ள ஆரம்பித்தான். இதனால் விலங்குகளைவிட சிறந்த வாழ்வு அவனுக்குக் கிடைத்தது. தனக்கென தங்குமிடம் வேண்டுமென விரும்பியதால் கட்டிடங்கள் வர ஆரம்பித்தன. கட்டடக்கலை இப்போது வானுயர வளர்ந்திருப்பதற்கு என்றோ பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் யாரோ ஒருவரின் மனதில் தோன்றிய ‘தனக்கென ஒரு இடம் வேண்டும்’ என்ற எண்ணம். குளிர், வெயில், மழை இவற்றிலிருந்து உடலை காக்க விரும்பியதால் உடைகள் வடிவமைக்கப்பட்டன. இந்த உலகத்தில் மனிதனாலேயே பலவும் நிகழ்த்தப்பட்டன. இரண்டு கற்கள் உரசும்போது ஏற்பட்ட தீப்பொறியால்  அதுவரை பச்சையாகத் தின்னப்பட்ட உணவு சமைக்கப்பட்ட உணவானது. காலங்கள் செல்லச்செல்ல சமைக்காத உணவை பதப்படுத்தவும், சமைத்த உணவை பாதுகாக்கவும் மனிதன் கற்றான். அதுவே இப்போது நமக்குக் கிடைக்கும் தயார் நிலை உணவிற்கு முன்னோடி.

    ‘பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்’
    ‘எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்’

    கண்டுபிடிப்புகள் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன; அவைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் நவீனப்படுத்தப்பட்டன; மேம்படுத்தப்பட்டன.  இன்னும் மேம்படுத்தலுக்கு இடமும் அளித்தன. என்னைப்போல தையல் கலையை அறியாத தையல்களும் இன்று தைத்த உடைகளை அணிவதற்கு எப்போதோ ஒரு தலைமுறையில் தைத்து உடுத்த வேண்டும் என்ற உந்துதலுடன் பிறந்த ஒரு மனிதனோ மனுஷியோ தானே காரணம். தான் தைத்து உடை உடுத்தியதுடன் தையற்காரர் என்ற ஒரு தலைமுறையையும் உருவாக்கிய தலைமுறைக்கு நாம் எல்லோருமே கடன்பட்டிருக்கிறோமே! தயார் நிலை ஆடைகளை தைக்கும் தொழிற்சாலை நடத்தும் வியாபாரிகளும், அங்கு தைக்கும் பெண்களும், அவற்றை விற்கும் கடைக்காரர்களும் யாரோ ஒரு புண்ணியவானுக்கு / புண்ணியவதிக்கு பட்ட கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள்!

    சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதால் அல்லவா இன்று போக்குவரத்து நெருக்கடியில் நாம் சிக்கித் தவிப்பது தினசரி நடவடிக்கை ஆகிவிட்டது! எண்களில் ஜீரோவைக் கண்டுபிடித்து எண்ணற்ற கணித மேதைகளை உருவாக்கியிருக்கிறார்கள், நம் முன்னோர்கள். என்னைப் போன்ற கணித வெறுப்பாளர்களையும் உருவாக்கியதும் அவர்களே. மருத்துவ உலகில் எத்தனை எத்தனை அரிய கண்டுபிடிப்புகள்! நமது வாழ்நாளின் அளவு நீண்டிருப்பதற்கு எத்தனையெத்தனை முன்னோர்கள் காரணம்!

    இன்றைக்கும் பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன; நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் இவை நிச்சயம் பயன்படும். ஆனால் இன்று நிலைமை மாறியிருக்கிறது. நம்மிடையே யாருக்கு என்ன நேர்ந்தால் நமக்கென்ன என்று ஒரு அலட்சியம். இருக்கும் வளத்தையெல்லாம் நாமே பயன்படுத்திக் கொண்டுவிடவேண்டும் என்ற ஒரு சுயநலம் பிறந்துள்ளது.

    ‘உலகம் பிறந்தது எனக்காக
    ஓடும் நதிகளும் எனக்காக
    மலர்கள் மலர்வது எனக்காக
    அன்னை மடியை விரித்தாள் எனக்காக’

    எல்லா இயற்கை வளங்களும் நமக்காகவே இறைவனால் படைக்கப்பட்டன என்பது உண்மை.  ஆனால் நாம் அவற்றைப் பாதுகாக்கத் தவறிவிட்டோம். நதி நீர் மாசு படிந்துவிட்டது; காற்று அசுத்தமாகிவிட்டது; பல நதிகள் இருந்த இடமே தெரியாமல் வறண்டு போய்விட்டன. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு நீர் வேண்டாமா? நமது பேரக்குழந்தைகள், அவர்களது பேரக்குழந்தைகள் நல்ல நீர் குடிக்க வேண்டாமா? நல்ல காற்றை சுவாசிக்க வேண்டாமா? ‘இருக்கும் நல்லவற்றையெல்லாம் நீங்கள் அனுபவித்து விட்டீர்கள். எங்களுக்கு அழுக்கு நீரையும் அசுத்தக் காற்றையும் விட்டுவிட்டுச் செல்லுகிறீர்களே’ என்று நம் இளைய தலைமுறைகள் கேட்கும் முன் விழித்துக் கொள்வோம்.

    நாம் நமது முந்தைய தலைமுறைகளுக்கு நன்றி சொல்லும் இந்த மஹாளய பட்ச தினத்தில் நம் வருங்கால சந்ததியினரையும் மனதில் கொள்வோம். அவர்களது நலன்களையும் பாதுகாக்க உறுதி பூணுவோம். அவர்களும் நாளை இன்று நாம் செய்வதுபோல நமக்கு நன்றிக் கடன் செலுத்துவார்கள் முழு மனதுடன்.

    படம் உதவிக்கு நன்றி: http://jaghamani.blogspot.com/2013/08/blog-post_6.html

    Share
  • நவராத்திரி

    ரா.பார்த்தசாரதி

    நங்கையருக்காகக்   கொண்டாடும்  ஒன்பதுநாள்   ராத்திரி
    பெண்களை  மதித்துக் கொண்டாடும் ராத்திரி,
    சிறு பெண்களையும், மற்ற பெண்களையும் போற்றும் ராத்திரி,
    பொம்மைகளை வைத்துக் கொண்டாடும் ராத்திரி!

    முதல் நாள் நவராத்திரி பூசை சிறுமியர்களுக்கே உரியதாம்,
    சுவாசினி எனும் மூத்த சுமங்கலிக்கும் உரியதாம்
    கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றின் தலைவிகளாம்
    கலைமகள், அலைமகள், மலைமகள் எனும் தெய்வங்களாம்!

    பெண்ணே  உலகில் சக்தியின்  வடிவமாகும்
    நாட்டையும், வீட்டையும், காக்கும் தெய்வமாகும்
    சக்திக்கு  இடப்பக்கம் அளித்தவர் அர்த்தனாரீஸ்வரராகும்
    பெண் தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடுவதே  நவராத்திரியாகும்!

    நவராத்திரி என்றாலே எல்லாப் பெண்டிருக்கும் ஓர் சுப ராத்திரி
    அலங்காரங்களும், பாட்டும், கேளிக்கையும் நிறைந்த ராத்திரி
    தொன்றுதொட்டுப் பெண்களுக்காகவே நடத்தப்படும் விழா
    பெண்மைக்கு மதிப்பும், நல்வாழ்வும் அளிக்கட்டுமே இந்நவராத்திரி விழா!

    Share
  • “மழைப்பாறை” நாவலை முன்வைத்து

    எஸ்.வி.வேணுகோபாலன்

    வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை உறையச் செய்துவிடும். சில திரைப்படங்கள் உங்களை நாட்கணக்கில் தூங்கவிடாது வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும். ஆனால் இவற்றிலிருந்து விடுபட எத்தனையோ அடுத்தடுத்த நிகழ்வுகள், வேறு வேறு கேளிக்கைகள், புதிய நூல் அனுபவங்கள் என்று தப்பி வெளியேறிவிட முடியும். காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக உதறித் தள்ள முடியாத அடையாளங்களோடு பிறந்து வாழ நேர்கிற மனிதர்கள் அவற்றிலிருந்து எப்படி விடுபட?

    unnamedமற்ற நூல்களைப்போல் அத்தனை இலகுவாய்க் கடந்துவிடாத பக்கங்களை அண்மையில் வாசிக்க நேர்ந்தது. நூலின் கட்டமைப்பு முக்கிய காரணம். அதைவிட முக்கியமான அம்சம், நான் அதிகம் அறிந்திராத இனக்குழுவைச் சார்ந்த மக்களது வாழ்க்கைதான் கதைக்களம். ‘சலவான்‘ நாவலால் அறியப்பட்டிருக்கும் பாண்டியக்கண்ணனின் இரண்டாவது நாவலான “மழைப்பாறை” பல கேள்விகளையும், விவாதங்களையும் எழுப்பிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது.

    குறவர் என்றால் பொதுவான புரிதல் நரிக்குறவர்களைப் பற்றியதாகவே இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 28 வகைக் குறவர்கள் உள்ளனர் என்று ஓர் ஆய்வு சொல்கிறது. தங்களது வாழிடத்தையும், தங்களது வாழ்வாதாரங்களையும் பறி கொடுத்த குறவர்கள் வனப்பகுதியிலிருந்து சமவெளிப் பகுதிக்குப் பெயர்ந்து பல்வேறு தொழில்களால் தங்களது பிழைப்பைத் தேடிக் கொண்டிருக்க, அவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றப் பரம்பரை அடையாளம், தீண்டாமை, சாதிய இழிவு உள்ளிட்டவற்றால் அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகளின் ஓர் ஆவேசத் தீற்றலாக வந்திருக்கிறது  “மழைப்பாறை” என்று கொள்ள முடி யும்.

    நாவல் முன்னும் பின்னுமாக காலக் கணக்கைப் புரட்டிப் போட்டபடி கதையை மொழிகிறது. ஆய்வாளர் இளைஞர் சிவகுமார் இந்த நாவலில் காலம் கலைத்துப் போடப்பட்டிருக்கிறது என்று நேர்த்தியாக வருணித்திருந்தார். கந்தன் பள்ளிக் கூடம் செல்லும் சிறுவனாகக் காலையில் கண் விழிக்கும் இடத்தில் தொடங்குகிறது கதை. இடையே கந்தன் நிகழ்காலத்தில் நடுத்தர வயதினராகப் பேசப்படுபவராகவும் இருக்கிறார். கதை கந்தனுக்கு முந்தைய தலைமுறையோடும், கந்தனோடும், கந்தனுக்குப் பல தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கையின் சாட்சியமான நாட்டார் தெய்வத்தோடும் ஒரு சேர நடை நடந்து காட்டுகிறது. இன வரைவியலின் உட்கூறுகள் போலும், ஓர் இனக்குழுவின் பண்பாட்டுச் சுவடு களாலும் எழுப்பப்படும் இந்தக் கதை, வரலாற்றில் பதிவாகாமலே போய்விட்ட தீனக் கதறல்கள், ஆதிக்கத்தின் வன்ம சேட்டைகள் உள்ளிட்டவற்றை மௌனமாக ஓடிக் கொண்டிருக்கும் ஆற்று நீரிலிருந்தும், அணையாத நெருப்புக் கங்குகளிலிருந்தும் தேடி எடுத்து முன்வைக்கிறது.

    கதை என்று தொடர்ச்சியாக எதையும் தொடங்கி வைத்து, வளரக் காட்டி, முடித்து வைக்கும் வகைப்பட்ட நாவல் இல்லை “மழைப்பாறை. ” ‘எங்களது வாழ்க்கை இன்னது’ என்று கைப்பற்றி இழுத்து இதயத் துடிப்பை நேரடியாக உணரவைப்பது போல் சொல்லும் வகையிலானது.

    படிக்கும் ஆர்வமும், துடிப்பும், திறமையுமுள்ள கந்தனை அவனது வறிய குடும்பச் சூழலும், கீழ்மைப்படுத்தப்பட்டிருக்கும் சமூகப் பின்புலமும் அங்கீகரமற்றவனாக நிறுத்துவதோடு, மிக இயல்பான ஒன்றாக அவன் மோசமாக நடத்தப்படுவதில் வெளிப்படுகிறது. தேர்வு எழுதப் போகும் அவன், விடைத்தாள் வாங்கக் காசில்லாமல், கழிப்பறை சுத்தம் செய்யும் வேலையிலிருக்கும் தாயை நாடி ஓடுவதையும், சுத்தம் செய்த கைகளாலேயே காசையும், சோறையும் பெற்றுக் கொள்ளவேண்டிய அவளது அவலத்தையும் நாவல் முன்னிறுத்துகிறது. இத்தனைப் பாடுகளுக்குப் பிறகு பள்ளிக்குள் நுழையும் அவனிடம் தேர்வு எழுதும் தகுதியை எதிர்பாராத ஆசிரியர் உலகம் பள்ளியில் அவனையே கழிப்பறை சுத்தம் செய்ய வைப்பதை மிக தன்னியல்பாக நிகழ்த்துகிறது.

    ஒரு சூழ்நிலையில் ஊரைவிட்டு வெளியேறி திருட்டு ரயிலேறிச் செல்லும் போதும், டிக்கெட் பரிசோதகருக்குத் தப்பி ஓடி ஒளிய கந்தனுக்குக் கழிப்பறைதான் கிடைக்கிறது. இடையே எங்கோ இறங்கி வயிற்றுப்பசிக்குச் சோறு கேட்கும் இடத்தில், யாரோ செய்த களவுக்கு இவனைப் பிடித்துப் போகும் காவல்துறை இவன் சாதிப் பெயரைக் கேட்டதுமே முடிவுக்கு வந்துவிடுகிறது இவன்தான் திருடன் என்று.

    இயற்கையின் இயல்பான மலர்தலாக நிகழும் பூப்பெய்தும் பருவம், குறவர் இனப் பெண்களின் வாழ்வில் தீயின் தீண்டுதலாக நிகழ்தலின் காலத்தை நாவல் வெவ்வேறு பெண்களின் கதை வழியாக ஆதிக்க சாதி வாலிபர்களின் காம வெறியை அவர்கள் எதிர்கொண்டதை பதைபதைக்கப் பேசுகிறது. ஊருக்குப் புறத்தே குடிலில் இராப்பொழுதில் சடங்கு சம்பிரதாயமாகத் தங்கவைக்கப் படுகையில் வல்லுறவுக்கு ஆட்படும் பெண், சீமெண்ணெய் விளக்கு தவறி விழுந்து குடிசை பற்றி எரிந்த விபத்தில் சிக்கியதாக அடுத்த நாள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மரித்துப் போகும் கடந்த காலத்தின் கதையை, நிகழ்காலத்திலும் மருத்துவமனையில் பார்க்கிறார் கந்தன்.

    கந்தன் தனது உயிராகக் கருதியிருந்த அக்கா லட்சுமியின் திருமணம், நூறு கிலோ இறைச்சி கொண்ட ஆண் பன்றியை (சலவான்) ஆயுதமின்றி விரட்டிப் பிடித்துக் கொன்று தூக்கி வந்து முறைப்படி தகுதி நிரூபிக்கும் முத்துப் பாண்டியுடன் நிகழ்கிறது. அந்தப் போராட்டம் அத்தனை நேரடி விவரிப்பாக அமைகிறது. சடங்குகள், சம்பிரதாயங் கள் குறித்த விவரிப்புகள் ஒரு புறம் முழுமையாக இடம் பெறும் நாவலில், அவற்றிலிருந்து மாறுபட்டு நடக்க முயற்சி மேற்கொள்ளும் கந்தனையும் காட்டுகிறது. குறிப்பாக தமது மகள் பூப்பெய்தும் பொழுதில் பாரம்பரிய சடங்குகளைச் செய்யாது பார்த்துக் கொள்கிறார் அவர்.

    கந்தன் குடும்பத்தோடு குலதெய்வ பூஜைக்குப் புறப்படும் பயணத்தினூடே அவரது இளமைக் காலக் காதலும், சாகசமும், அதன் சோக முடிவும் சாதிய பொருளடக்கத்தோடு வந்து போகிறது. ஆனாலும் தமக்கு மேல் கட்டுமானத்தில் இருக்கும் சாதிப் பெண்ணோடு ஒரு சூழலின் நிமித்தம் நடைபெறும் திரு மணத்தின் பதற்றக் காட்சிகளும் பின்னோக்கி அழைத்துச் சென்று சொல்லப்படுகின்றன.

    சாதி கடந்து நீதியோடு நடந்து கொள்ளும் மனிதர்களும், அப்படியான நேரங்களும் – காவல் நிலையத்திலும் கூட, நாவலில் இடம் பெறவே செய்கின் றன. ஆனால் சாதியின் முடிச்சு எத்தனை இறுக்கமானது என்பது கந்தனை அவன் திறமை பாராட்டப்பட்டபோதும் ஊர் நாடகக் குழுவில் நடிக்க விடாது சாதுரி யமாக கழித்துக்கட்டும் விதத்தில் உரத்துச் சொல்லப்படுகிறது.

    சந்தனம் – கூடம்மாள் தம்பதியினரே கந்தன் குடும்பத்தின் பல தலைமுறைக்கு முந்தைய சாதியக் கொடுமையால் பழி வாங்கப்பட்ட அடையாளம். ஆடையுருவி அவமானத்துக்கு உள்ளாக்கப்படும் கூடம்மாளின் வெஞ்சினம் கண்ணகி கதைபோலவே ஊரைத் தண்டிக்கிறது. வல்லுறவுக்கு அலைந்த ஆதிக்க சாதியினரை அவர்களது காமத்தின் எதிர்முனையிலிருந்து விரட்டி விரட்டித் திண்டாட வைத்துத் திணறடிக்கிறது. ஓய்ந்துபோய் மண்டியிட்டுப் புலம்பி மன்றாடி மன்னிப்பு கேட்கும் ஜமீன் சார்ந்த மக்களைக் கொண்டே தனக்கு சிலை வடிக்க வைத்து மறைந்து போகிறாள் கூடம்மாள்.

    அந்தக் கோயிலில் வந்து நின்று கந்தன் குடும்பம் கும்பிடுமிடத்தில் நாவல் முற்றுப் பெறுகிறது. கூடம்மாளை தண்டித்துத் தீர்ப்புச் சொல்லும் பாலியல் வக்கிரமான ஜமீன் பாத்திரமும் கூட, அவளது சினத்தால் அலைந்தழியும் ஊராரின் வெறிக்குத் தப்ப முடியாத இடத்தைப் பேசுகையில் அவர் அலியாக மாறினார் என்ற விவரிப்பு கேள்விக்குள்ளாகிறது. சொந்த வாழ்வனுபவத்தை முடிந்தவரை பதிவு செய்யும் வேட்கை ஆசிரியருக்கு இருந்திருக்கலாமோ என்று சில இடங்களில் தோன்றியது. காலத்தைக் கலைத்துப் போட்டு எழுதப்படும் ஒரு நாவலை மிக எளிதாக நகர்த்தி வாசிக்க முடியாதது போலவே, அது ஏற்படுத்தும் மன அதிர்வு களைக் கடப்பதும் எளிதானதன்று. அடுத்த நாவலுக்கான முயற்சியில் இறங்கும் நம்பிக்கை பாண்டியக் கண்ணனுக்கு அதுவே ஏற்படுத்தி இருக்கிறது என்பதும் வரவேற்புக்குரியது.

    ************

    நன்றி: இலக்கிய சோலை: தீக்கதிர் (செப் 22, 2014)

    காயங்களை யார் அறிவார்?

    குறப்புத்தி’ என்கிறீர்கள். ‘குறப்பய மாதிரி முழிக்கிறான்’ என குழந்தையைக் கொஞ்சுகிறீர்கள். ‘குறவன் புத்தி சும்மா இருக்குமா?’ என்கிறீர்கள். அன்றாட வாழ்வில், குற்ற உணர்ச்சி எதுவும் இன்றி நீங்கள் உதிர்க்கும் சொற்கள் ஒவ்வொன்றும், சமூகத்தின் அடிமட்டத்தில் வாழும் குறவர் இன மக்களைக் குறிவைத்துக் காயப்படுத்துவதை நீங்கள்அறிவீர்களா?” – 
    தீர்க்கமாகக் கேட்கிறார் மணிக்கோ. பன்னீர்செல்வம்.
    பாரதி தம்பி எழுதிய கட்டுரையிலிருந்து –

    நன்றி: ஆனந்த விகடன் (17 11 2010)

    Share
  • கேள்வி பிறந்தது அன்று .. – கவியரசு கண்ணதாசன் – பச்சை விளக்கு பாடல் – இங்கே பவனி வருகிறது பாரீர்..

    கவிஞர் காவிரிமைந்தன்

    ஒரு கவிஞனின் கடமை அன்றைய தினத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல.. சமுதாயத்தின் நாளைய தேவைகளையும் கணக்கில் கொண்டுதான் படைப்பியலில் ஈடுபடவேண்டும். முண்டாசுக்கவிஞன் பாரதியின் கவிதைகள் வேள்வித்தீயை மனதில் வளர்த்து விடுதலை தாகத்தை மேலும் தூண்டியது.. சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப்பள்ளு பாடியவன் அவனன்றோ? மொழியின்மீதுள்ள பற்றால், இனத்தின்மீதுள்ள பாசத்தால்.. பாரதி வழிவந்த பாவலன் பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்னும் அடைமொழி அடைந்ததும் அவர்தம் எண்ணப்பயிரில் ஊடுருவிக்கிடந்த உயிரோட்டம் எல்லாம் இனமொழி உணர்வை மக்கள் மனதில் அதீதமாய் வளர்த்ததன்றோ?

    kaviriவழிவழி வந்த கவிஞர் பரம்பரையில் கண்ணதாசன் என்னும் கவிமன்னவன் தன் கருத்துக்களை முத்துக்களாய் பதித்ததெல்லாம் திரைப்பாடல்கள் முதலான தன் களங்கள் எல்லாவற்றிலும்தான்! பச்சை விளக்கு திரைப்படத்தில்.. அவர் பாடல் எழுதிய போது.. கேள்வி பிறந்தது அன்று.. என்கிற பாடல் எண்ணத்தில் மலர்ந்திருக்கும் அழகினைப் பாருங்கள். எத்தனை எத்தனை சிந்தனைச் சிறகுகள் கவிதை வானத்தில் வலம்வருகின்றன.. காணுங்கள்..

    ஒரு சராசரி திரைப்படப்பாடலாசிரியரால் இத்தனை வளமான கருத்துக்களை கோர்த்தெடுக்க முடியாது.

    தீண்டாமைச் சட்டம் வந்ததனை பாட்டுவரிகளால் பதித்து வைத்திடும் சாதுர்யம் அவருக்கல்லவா கைவந்தது?

    அறிவியல் உலகின் கண்டுபிடிப்புகள்.. கவிஞரின் கையில் வார்த்தெடுக்கப்பட்ட வரிகளாய் மாறும்போது அதில் மலர்ந்திடும் உண்மைகள் எத்தனை எத்தனை?

    தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் விளக்கங்கள் திரைப்பாடலிலும் தரமுடியும் என்று நிறுவ வருகிறார்.. கண்ணதாசன்!

    ஆம்.. கேள்வி பிறந்தது அன்று.. அதற்கான பதில்கள் கிடைத்தன இன்று!!

    kavir

    பாடல்: கேள்வி பிறந்தது அன்று
    திரைப்படம்: பச்சை விளக்கு
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
    ஆண்டு: 1964

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
    ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
    அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
    என்றொரு காலம் ஏங்கியதுண்டு
    இன்று கிடைதது பதில் ஒன்று
    இன்று எவனும் பேதம் சொன்னால்
    இரண்டு வருடம் ஜெயில் உண்டு.

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
    வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
    மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
    என்றொரு காலம் ஏங்கியதுண்டு
    இன்று கிடைத்தது பதில் ஒன்று
    ஞானம் பிறந்து வானில் பறந்து
    மீண்டு வந்தான் உயிர் கொண்டு

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
    குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
    குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
    படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
    நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை

    கேள்வி பிறந்தது அன்று நல்ல
    பதில் கிடைத்தது இன்று
    ஆசை பிறந்தது அன்று
    யாவும் நடந்தது இன்று

    http://www.youtube.com/watch?v=qEYUPGfhjJo

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    அம்மாடை விட்டால் அடிமேயும், ஆதலால்,
    சும்மாடாய் தோளில் சுமக்கிறான் -ப்ரும்மாண்டன்;
    நாத பிரும்மத்தின் ,பாதக் கவலைபார்,
    தூதுக்கு வேண்டுமே தாள்!’’….கிரேசி மோகன்….

    Share
  • நவராத்திரி 2014 (1) வா!

    இசைக்கவி ரமணன்

    tiree.shakti.r.k..jpg_480_480_0_64000_0_1_0

    வா!
    அழைக்க வேண்டுமா?
    உன்னை!
    நான்!
    அழைக்க வேண்டுமா?
    அப்போதுதான் வருவாயா?

    நிலவழைத்து வந்ததா இந்த நீண்ட வானம்? தன்
    நினைவழைத்து வந்ததா குயிலின் நெஞ்சில் கானம்?
    மலரழைத்து வந்ததா மடியில் தேனின் மோனம்? அடி!
    மகவழைக்கக் காத்திருக்குமா அன்னை நேசம்?

    கண்ணெடுத்தும் பாராமல் கழனியிலே கால்பதித்துக்
    கடும்வெய்யிலில் பாடுபடும் அன்னை, அவள்
    கட்டிவைத்த தூளியிலே குட்டிநிலா சற்றுபுரள
    கலசத்திலே பால்ததும்பும் என்னை!
    கண்ணாலே அடைகாக்கும் எண்ணத்தால் அடைகாக்கும்
    உண்ணாமல் காவல்செய்யும் உயிர்கள், இந்தக்
    காட்சியெலாம் நீவிரித்த கவிதையல்லவா? உன்றன்
    கவிதையிலே வரியெடுத்துச் சொல்லவா?

    என்னைப் பெற்ற உன்னை என்றன் நெஞ்சினிலே ஏற்றிவைத்து
    ஏதேதோ பெயர்கள்வைத்துக் கூவுவேன், நான்
    என்னபெயர் சொன்னாலும் சொல்லுகின்ற கணத்தினிலே
    உன்னைநெஞ்சில் பெற்றதைப் போல் உருகுவேன்!
    அன்னியமா? நீ விருந்தா? அரசியலா? வாணிபமா?
    அலட்டியது போதுமுடன் வந்திடு!
    அன்புநண்பர் காத்திருக்கும் பொன்னிலாவின் முற்றத்திலே
    ஆனந்தத் தமிழ்க்கவிதை தந்திடு!

    23.09.2014 / செவ்வாய் / 07.45

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இன்று கேசவ் கண்ணன் போர்க்கோலத்தில்”
    ———————————————————————–

    crazy

    “பேரெழில் பச்சைமால், நீரலை விட்டாயர்
    சேரியில் சென்றுப சுக்களுடன், -ஒரினமாய்,
    Forever வாழ்ந்தாலும், பாரதம் செய்வதற்கு,
    தேரவர் ஓட்டத் தயார்”….கிரேசி மோகன்….

    Share