நவராத்திரி 2014 (1) வா!
இசைக்கவி ரமணன்
வா!
அழைக்க வேண்டுமா?
உன்னை!
நான்!
அழைக்க வேண்டுமா?
அப்போதுதான் வருவாயா?
நிலவழைத்து வந்ததா இந்த நீண்ட வானம்? தன்
நினைவழைத்து வந்ததா குயிலின் நெஞ்சில் கானம்?
மலரழைத்து வந்ததா மடியில் தேனின் மோனம்? அடி!
மகவழைக்கக் காத்திருக்குமா அன்னை நேசம்?
கண்ணெடுத்தும் பாராமல் கழனியிலே கால்பதித்துக்
கடும்வெய்யிலில் பாடுபடும் அன்னை, அவள்
கட்டிவைத்த தூளியிலே குட்டிநிலா சற்றுபுரள
கலசத்திலே பால்ததும்பும் என்னை!
கண்ணாலே அடைகாக்கும் எண்ணத்தால் அடைகாக்கும்
உண்ணாமல் காவல்செய்யும் உயிர்கள், இந்தக்
காட்சியெலாம் நீவிரித்த கவிதையல்லவா? உன்றன்
கவிதையிலே வரியெடுத்துச் சொல்லவா?
என்னைப் பெற்ற உன்னை என்றன் நெஞ்சினிலே ஏற்றிவைத்து
ஏதேதோ பெயர்கள்வைத்துக் கூவுவேன், நான்
என்னபெயர் சொன்னாலும் சொல்லுகின்ற கணத்தினிலே
உன்னைநெஞ்சில் பெற்றதைப் போல் உருகுவேன்!
அன்னியமா? நீ விருந்தா? அரசியலா? வாணிபமா?
அலட்டியது போதுமுடன் வந்திடு!
அன்புநண்பர் காத்திருக்கும் பொன்னிலாவின் முற்றத்திலே
ஆனந்தத் தமிழ்க்கவிதை தந்திடு!
23.09.2014 / செவ்வாய் / 07.45