கேள்வி பிறந்தது அன்று .. – கவியரசு கண்ணதாசன் – பச்சை விளக்கு பாடல் – இங்கே பவனி வருகிறது பாரீர்..
கவிஞர் காவிரிமைந்தன்
ஒரு கவிஞனின் கடமை அன்றைய தினத்திற்கான தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்ல.. சமுதாயத்தின் நாளைய தேவைகளையும் கணக்கில் கொண்டுதான் படைப்பியலில் ஈடுபடவேண்டும். முண்டாசுக்கவிஞன் பாரதியின் கவிதைகள் வேள்வித்தீயை மனதில் வளர்த்து விடுதலை தாகத்தை மேலும் தூண்டியது.. சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று ஆனந்தப்பள்ளு பாடியவன் அவனன்றோ? மொழியின்மீதுள்ள பற்றால், இனத்தின்மீதுள்ள பாசத்தால்.. பாரதி வழிவந்த பாவலன் பாரதிதாசன் புரட்சிக்கவிஞர் என்னும் அடைமொழி அடைந்ததும் அவர்தம் எண்ணப்பயிரில் ஊடுருவிக்கிடந்த உயிரோட்டம் எல்லாம் இனமொழி உணர்வை மக்கள் மனதில் அதீதமாய் வளர்த்ததன்றோ?
வழிவழி வந்த கவிஞர் பரம்பரையில் கண்ணதாசன் என்னும் கவிமன்னவன் தன் கருத்துக்களை முத்துக்களாய் பதித்ததெல்லாம் திரைப்பாடல்கள் முதலான தன் களங்கள் எல்லாவற்றிலும்தான்! பச்சை விளக்கு திரைப்படத்தில்.. அவர் பாடல் எழுதிய போது.. கேள்வி பிறந்தது அன்று.. என்கிற பாடல் எண்ணத்தில் மலர்ந்திருக்கும் அழகினைப் பாருங்கள். எத்தனை எத்தனை சிந்தனைச் சிறகுகள் கவிதை வானத்தில் வலம்வருகின்றன.. காணுங்கள்..
ஒரு சராசரி திரைப்படப்பாடலாசிரியரால் இத்தனை வளமான கருத்துக்களை கோர்த்தெடுக்க முடியாது.
தீண்டாமைச் சட்டம் வந்ததனை பாட்டுவரிகளால் பதித்து வைத்திடும் சாதுர்யம் அவருக்கல்லவா கைவந்தது?
அறிவியல் உலகின் கண்டுபிடிப்புகள்.. கவிஞரின் கையில் வார்த்தெடுக்கப்பட்ட வரிகளாய் மாறும்போது அதில் மலர்ந்திடும் உண்மைகள் எத்தனை எத்தனை?
தனியுடைமைக்கும் பொதுவுடைமைக்கும் விளக்கங்கள் திரைப்பாடலிலும் தரமுடியும் என்று நிறுவ வருகிறார்.. கண்ணதாசன்!
ஆம்.. கேள்வி பிறந்தது அன்று.. அதற்கான பதில்கள் கிடைத்தன இன்று!!
பாடல்: கேள்வி பிறந்தது அன்று
திரைப்படம்: பச்சை விளக்கு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
ஆண்டு: 1964
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ? ஓ
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா? ஆ
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும் ம்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
http://www.youtube.com/watch?v=qEYUPGfhjJo