நவராத்திரி திருப்பதிகம்
சந்தர் சுப்ரமணியன்
—————–
துர்க்கை
நெருப்பின் வடிவெழு நீலி! பயங்கரி!
.. நீளும் உறவென நின்றவளே!
வருத்தும் முறையுள வாழ்வின் வழிவரும்
.. வன்மை தொலைந்திட வாழ்த்திநலம்
இருக்கும் வகையினில் என்றும் சுகந்தரும்
.. இன்பம் தழைத்திட இவ்வுலகைத்
திருத்தி அமைத்தினி சீர்மை துலங்குநற்
.. சேமம் நிலைபெறச் செய்குவையே! (1)
கரத்தி லொருபடை, கண்ணிற் பெருஞ்சினங்
.. காட்டி உலகினைக் காப்பவளே!
உரத்த குரல்வழி ஓலம் ஒலித்திட
.. ஓங்கும் வறுமையில் ஏழையர்கள்
இரக்கும் நிலைதனை ஏகும் படியவர்க்(கு)
.. இன்னல் இழைத்திடும் ஈனரவர்
சிரத்தை அறுத்தகச் சிந்தை தனிலுறை
.. தீமை அழித்தருள் செய்குவையே! (2)
துரத்தி அசுரனின் தொல்லை அறச்செயும்
.. துர்க்கே! சுடரொளித் தீப்பிழம்பே!
அரக்க மனிதரின் ஆழ்ந்த மனத்தெழும்
.. ஆலம் அழித்துல காள்பவளே!
சுரக்கும் அமுதெனத் தோன்றி உளத்தெழு
.. சோகம் கரைத்திடும் தூயவளே!
சிரத்தை மனத்தெழ தேடித் தொழுபவர்
.. தேவை நிறைவுறச் செய்குவையே! (3)
இலக்குமி
தெரிக்கும் திருவளர் செல்வத் திருமகள்!
.. தீராத் திரவியத் தீம்பொருளே!
அரிக்கும் பிணியென ஆன வறுமையின்
.. ஆழப் புதைகுழி ஆழ்ந்தவரின்
வருத்தம் விலகிட, வாட்டும் வினையற,
.. வாடா வளம்பெற, வாழ்விலினி
சிரிக்கும் படிஅவர் சேர்க்கும் அரும்பொருள்
.. தேயா துயர்ந்திடச் செய்குவையே! (4)
பெருத்த நிதியளே! பேறே! வளங்களைப்
.. பேணிப் பெருக்குநற் பேரருளே!
உருக்கும் வெயிலிடை உண்ணும் பொருள்பல
.. ஓயா துயர்ந்திட ஓர்வழியாய்க்
கருத்த முகில்பல காட்டி அதன்வழி
.. காய்மண் குளிர்ந்திடக் காத்தருளி,
தெரிக்கும் கதிர்வளம் சேர்ந்த கழனிகள்
.. செழிக்கும் படியினி செய்குவையே! (5)
பொருட்கள் தனிலிருப் போளே! பொலிதரு
.. பொன்னே! திருவளர் பூமகளே!
பெருக்கும் பெருநிதி! பிள்ளை பிறப்பெனும்
.. பேற்றை அளிக்குநற் பேரனையே!
செருக்கும் படையமை தீரச் செழுமையே!
.. தேடும் விசயமென் றானவளே!
விருப்பின் வழியுமை வேண்டி விழைபவர்
.. வேண்டும் படிஅருள் செய்குவையே! (6)
சரஸ்வதி
கருத்தில் அமைபொறி காக்கும் கலைமகள்!
.. கல்விக் கடலெனக் காணறிவே!
சுருக்க உரையெனத் தோயுங் கருவினில்
.. தோதாய்ப் புதுச்சுவை தோன்றநிதம்
விரித்துப் பொருள்பல விளக்கும் அதிசய
.. விந்தை விளைக்குநல் வித்தகத்தைச்
சிரத்துள் புதைமதி சீராய்ச் செயும்வழி
.. தேரும் வகைபெறச் செய்குவையே! (7)
விரிந்த மலர்மிசை வீணை தடவிட
.. வேதன் துணையென வீற்றவளே!
நிருத்தம் உடல்பெற நீளும் நயமதை
.. நிற்கும் நரம்பினுள் நிரப்புதலும்
பொருந்தும் இசைவரும் போது புதுக்கவி
.. பூக்கப் புனைவதும் போற்பலவாய்ச்
செருக்குங் கலைஞரின் தேடும் இயல்பினைத்
.. தேர்ந்து தெளிந்திடச் செய்குவையே! (8)
புரிந்த கலைகளில் பூக்கும் திறன்மிகப்
.. போந்த புதுச்சுவை பூணழகே!
சொரிந்த அமுதென சொல்லில் வடிந்துளம்
.. சொக்கும் படிசெயும் தூய்தமிழே!
விரைந்த விரல்படும் வேளை விழையுநல்
.. வீணை இசையென வீற்றவளே!
தெரிந்த கலைகளில் தேர்ந்த புதுமைகள்
.. சேர்க்கும் வளம்பெறச் செய்குவையே! (9)
விழைவு
கருத்து பொது;வெளிக் காட்டும் முறைபொது;
.. கண்டு கவிதையில் மூவருக்கும்
விருத்த வழிதனில் விண்டு விளக்கிடும்
.. வேலை எமதென வேண்டுகிறேன்!
பொருத்த முளதெனின் போகம் அறிவறம்
.. பொய்யா வகையினி பூவுலகில்
வருத்தம் முடிவுற வாழ்வில் வளமுடன்
.. வாழ மனிதரை வாழ்த்துகவே! (10)
Super! Well written!
Su.Ravi
நல்ல கவிதையொன்று படித்த மனநிறைவு பெற்றேன் சந்தர். சொல்லோட்டம், கருத்தோட்டம் இரண்டுமே அற்புதம். வாழ்த்துகள். கே.ரவி