அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!

1

பவள சங்கரி

thirukaiyur

அர்த்தநாரியாய் ஆருத்ரனாய் ஆதவனாய்
இடுகாட்டு நாயகனாய் இகம்பர அதிபதியாய்
ஈரேழுலகின் ஈடில்லா ஈசனின் இடப்பாகம்
உரையும் ஊழிமுதல்வனின் நாயகியே! அபிராமி அன்னையே!!

பழமைக்கோலம் பரிதியின் தவம்
புதுமையில் புகுந்தால் புவிநாசம்
பழமையும் புதுமையும் பரிதிக்கேது
சுட்டெரிக்கும் சூதையும் சூழ்வினையையும்!!

பரிதிக்கே ஒளியாய் ஓங்கிய உத்தமியே
பங்கயத் தேரில் பதவிசாய் பவனிவரும்
மங்கையர்கரசியே மாதவச் செல்வியே
அங்கையர்கண்ணி அம்மையே! ஆனந்தமே!!

தஞ்சமென்று சரண் புகுந்தோர் நெஞ்சமெலாம்
பஞ்சமில்லா பேரருள் புகுத்தி வஞ்சமெல்லாம்
நீக்கியருள் மழைமேகமாய் புவியனைத்தையும்
காத்தருள் அகிலாண்ட நாயகியே! அபிராமியே!

அம்பிகையின் மலர்பாதங்களை சரணடைந்தோர் என்றும் துன்பக்கடலில் துவண்டுவிடுவதில்லை. இன்பமும், துன்பமும் இல்லா இன்னமுதம் அவள் பாத கமலம். எத்தனை எத்தனை அவதாரங்கள்.. எழில்மிகு வண்ணக்கோலங்கள் அவள் தோற்றம். அபிராமி அந்தாதி அருளிய அபிராமிப்பட்டரின் வாழ்க்கைச் சரிதமே அதற்கு ஆதாரம். அன்னையைச் சரணடைந்து, பித்தராய்த் திரிந்த பட்டர், காணும் பெண்களனைவரையும், அபிராமி அன்னையின் அவதார உருவமாகவேக் கண்டின்புற்றார்.

about-temple-banner

அபிராமி அந்தாதி பாடலை உள்ளம் உருகப் பாடிப்பரவச் செய்தவர், அபிராமிப்பட்டர். இவர் பிறந்த ஊர் அன்னை பராசக்தி அபிராமவல்லியாக அடியவர்க்கு அருள்பாலிக்கும் திருக்கடையூர். சோழவள நாட்டின் காவிரிக்கரையில் உள்ள சிவாலயங்களின் சிறப்பானதொன்றுதான் திருக்கடையூர். என்றும் பதினாறு என்ற வரம் பெற்ற மார்கண்டேயரை அன்னை பராசக்தி, எமதர்மனிடமிருந்து காப்பாற்றிய வரலாறு சுவையானது. எமதர்மன், மார்கண்டேயர் மீது பாசக்கயிற்றை வீசிய அத்தருணத்தில், அப்பாலகன் ஓடிச்சென்று சிவலிங்கத்தைக் கட்டிக்கொண்டான். எமன் வீசிய பாசக்கயிறு சிவலிங்கத்திருமேனியின் மேல்வந்து வீழ்ந்தது. கடுங்கோபம் கொண்ட சிவபெருமானாரின் சகதர்மினி அன்னை பராசக்தி சிவலிங்கத்தில் தோன்றினாள். ஈசனின் இடப்பாகம் உறையும் சக்திதேவி சிவலிங்கமாக வீற்றிருக்கும் தம் கணவர் மீது விழுந்த பாசக் கயிறு, தம் மீது விழுந்ததாகவேக் கருதி கோபமுற்றார் அம்பிகை. அதனால் எமனைத்தம் இடது காலால் எட்டி உதைத்தார் பெருமானார். ஆம், தன் மனைவியின் மனதை வேதனை அடையச் செய்த எமனை, அன்னைக்கேயுரிய தனது இடது பகுதியின் காலால் எமனை எட்டி உதைத்தார் இறைவன். இப்படி மார்கண்டேயனை காப்பாற்றிய அன்னை அபிராமவல்லி, என்றென்றும் பக்தர்களை காக்கவும் காத்திருக்கிறாள் என்ற ஆழ்ந்த நம்பிக்கையே அன்னையை வழிபடுவோரை வழிநடத்திச்செல்கிறது என்பதே நிதர்சனம்!

images (5)

இதுபோன்று பல்வேறு அற்புதங்களை நிகழ்த்திய அன்னை அபிராமவல்லிமீது பித்தரான ஒருவரை ‘பைத்தியக்காரன்’ என்று அவ்வூர் மக்கள் பேசினார்கள். அபிராமிபட்டர் என்ற அந்த மகான் சிறந்த தேவி உபாசகர். தாம் பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அபிராமியின் அம்சமாகவே கருதுவார். எப்போதும் அபிராமி அன்னையையே தியானித்துக் கொண்டும் இருப்பார். இவரின் பக்தியை சோதிக்கவும், இவரின் கீர்த்தியை உலகுக்கு உணர்த்தவும் விரும்பினார் இறைவன், ஒருநாள் சரபோஜி மன்னர், திருக்கடையூர் அமிர்த கடேசுவரரை தரிசிக்கும்பொருட்டு திருக்கடையூர் கோயிலுக்குத் தன் பரிவாரங்களுடன் வந்தார். அரசர் வந்தது கூட தெரியாமல், அம்பாள் சன்னதியில் அபிராமி பட்டர் தியானத்தில் அமர்ந்திருந்தார். யோக முறையில் அம்பிகையைத் துதித்து வந்த அவர் சரியை, கிரியை என்ற நிலையைக் கடந்து யோகநிலையின் ஆதார பீடங்களில் யாமளை எனும் திருக்கோலத்தையும் தம் கண்ணாரக் கண்டு இன்புற்றதோடு, இடைப்பட்ட ஏனைய கிரந்திகளனைத்தையும் கடந்து, சகஸ்ராரத்தில் ஒளிமயமாகத் திகழும் லலிதையின் திருவருளைப் பரிபூரணமாய் உணர்ந்து அந்த ஆனந்த வெள்ளத்தில் திளைத்திருந்தார். ஆனால் இதன் மகத்துவம் அறியாத சாதாரணர்கள், இவர் ஏதோ துர்தேவதையை ஆராதனை செய்து வந்த காரணத்தினாலேயே இப்படி பித்தராகி, ஆசாரங்கள் அனைத்தையும் கைவிட்டு, தீய வழியில் சென்றுவிட்டார் என்று சொல்லித் தூற்ற ஆரம்பித்தனர்.

ஒரு நாள் தஞ்சை அரசர், ராஜா சரபோஜி தை அமாவாசை தினத்தன்று, பூம்புகார் சென்று முகத்துவாரத்தில் நீராடிவிட்டு, திருக்கடவூருக்குத் தரிசனம் பெற வேண்டி வந்தார். அவ்வேளையில், அபிராமி அம்மன் சந்நிதியில் சுப்ரமணிய ஐயர் நின்று கொண்டு அம்பிகையைப் பார்ப்பதும், தொழுவதும், கண்ணீர் பெருக்குவதும் என்று வித்தியாசமாக செய்துகொண்டிருந்தார். சுற்றி இருந்தவர்களோ தங்களுக்குள்ளாக, ‘மன்னர் வந்திருப்பதுகூட அறியாமல், மன்னரை வணங்கவும் செய்யாமல் தனக்குத் தானே பேசிக் கொள்ளுவதும், சிரித்துக் கொள்ளுவதும், அழுவதுமாய் இருக்கிறாரே’ என கூறிக்கொண்டிருந்தார்கள். மன்னர் இவர் யாரெனக் கேட்டதும், ‘இவர் ஒரு பித்தர். தம் குல ஆசாரங்களை எல்லாம் கைவிட்டுவிட்டு பரிவார சக்தியான ஏதோ ஓர் தேவதையை வழிபடுபவர்’ என்றனர். மன்னரும் இதைச் சோதிக்க எண்ணியதால், சுப்ரமணிய ஐயரிடம், ‘இன்று அமாவாசை எவ்வளவு நாழிகை உள்ளது?’ என்று கேட்டார்.

அன்னையின் காட்சியின் பேரானந்தத்தை உள்ளூரக் கண்டு களித்துக்கொண்டிருந்த பட்டரின் செவியில், அமாவாசை என்ற சொல் மட்டும் விழ, அவரும், ‘இன்று பௌர்ணமி அல்லவோ?’ என்று சொல்லிவிட்டார். அனைவரும், ஏளனத்துடன் கைகொட்டி சிரிக்க ஆரம்பித்துவிட்டனர். மன்னரும் மக்கள் சொன்னதும் சரிதான் என்று நினைத்தவாறு சென்றுவிட்டார். ஆனாலும் அரண்மனை திரும்பிய மன்னருக்கு, அவருடைய தோற்றமே, திரும்பத் திரும்ப கண்ணெதிரே வந்தது. அன்று பெளர்ணமி என்று சுப்பிரமணிய ஐயர் கூறிய வார்த்தைகளும் காதிலே ஒலித்த வண்ணம் இருந்தன. முன் மாலைப் பொழுது. சற்றே களைப்புடன் அமர்ந்திருந்த மன்னர் தன்னையறியாமல் கண்ணயர, கருவறையின் அபிராமி அன்னை அவர் கண்ணெதிரே தோன்றியதோடு, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீச, அது விண்ணிலே சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டு சென்று நிலவாக அமர்ந்ததைக் கண்டார் மன்னர். ‘ஆகா, இது பூரண நிலவன்றோ! முழுமதி சுடர் விட்டு பிரகாசிக்கின்றது பாருங்கள்’ என்று சுப்ரமணிய ஐயரின் குரலும் கேட்டது. மன்னன் கண்விழித்தபோது, அவர் உடல் அச்சத்தில் நடுங்கியது. பெருந்தவறு செய்துவிட்டோம் என உணர்ந்தார் மன்னர்.

இந்தப் புராணக் கதையை மற்றொரு விதமாகவும் கூறுவர். மன்னர் அன்றைய திதியைக் கேட்டதும், சரியாகக் கூறாதவர் அன்றிரவுக்குள்ளாக பட்டர் பெளர்ணமியைக் காட்டவேண்டும் எனவும், இயலாவிட்டால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் தீர்ப்பு சொன்னதாகச் சிலரும், வேறு சிலர் மன்னரிடம் சரியான திதியைக் கூறாமல் தடுமாறிய பட்டர் அவமானத்தால் மனம் வருந்தி அரிகண்டம் பாடத் தொடங்கியதாகவும், அப்போது அபிராமியின் சந்நிதியில் ஒரு குழி வெட்டி அதில் தீயை மூட்டி அதன் மேல் ஒரு விட்டத்தில் இருந்து நூறு கயிறுகளால் ஆன ஓர் உறியைத் தொங்க விட்டு அதன் மேல் ஏறி, ‘அம்பிகை எனக்குக் காட்சி கொடுத்து இந்தப் பழியை நீக்காவிட்டால் என் உயிரை விடுவேன்’ என்று சூலுரைத்து அபிராமி அந்தாதியைப் பாடத் தொடங்கியதாகவும் கூறுவார்கள். ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம்’ என்று துவங்கும் இந்த அந்தாதிப் பாடல்களில் ஒவ்வொரு பாட்டின் இறுதியிலும் ஒவ்வொரு உறியின் கயிறாக பட்டர் அரிந்து கொண்டு வந்ததாகவும், பேராச்சரியமாக, ‘விழிக்கே அருளுண்டு’ என்ற 79-வது பாடலின் போது மங்கிய அம்மாலைப் பொழுதில் அபிராமி அன்னை பட்டருக்கு மட்டுமின்றி அவ்வூரில் உள்ள அனைவருக்கும் காட்சி கொடுத்து, தன் காதுத் தோட்டைக் கழற்றி வீசி எறிந்து பெளர்ணமியை வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. அன்னையின் அருளால் பட்டரும் மனம் தெளிவுற்று, அன்னையின் அருளைப் போற்றி, துதிப்பாடல்கள் இயற்றலாயினார். அந்தாதி முறையில் இயற்றப் பட்ட இப்பாடல்கள் அன்னையின் சிறப்பைப் புகழ்ந்தும், பட்டரை உலகத்தோர் இகழ்ந்து கூறியும், அன்னையின் அருளால் அவர் பெற்று வரும் நல் அனுபவச் சிறப்பையும் வர்ணிக்கும் விதத்தில் பாடல்கள் அற்புதமாக பொழிய ஆரம்பித்தது. மன்னரும் பட்டரின் வீடு சென்று அவரை வணங்கித் தாம் கண்ட கனவைக் கூறி பட்டரின் மன்னிப்பையும் கோரினார். பட்டரும் இது அன்னையின் திருவருள் என எண்ணி மகிழ்ந்தார். மன்னரால் அபிராமி பட்டர் என அழைக்கப் பட்டதோடு அல்லாமல், அவருக்கு மானியமாகச் சில விளை நிலங்களையும் மன்னர் பரிசளித்தார்.

abhirami

விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம் சொன்ன
வழிக்கே வழிபட நெஞ்சுண்டே எமக்கவ்வழி கிடக்கப்
பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் கயவர் தம்மோடென்ன கூட்டினியே!

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

கூட்டியவா, என்னைத் தன் அடியாரில் கொடிய வினை
ஓட்டியவா, என் கண் ஓடியவா தன்னை உள்ளவண்ணம்
காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டிய வா நடம் ஆடகத் தாமரை ஆரணங்கே!

(அபிராமி அந்தாதி)

 

அபிராமி அந்தாதி 108 முத்தான பாடல்கள் கொண்டது. அன்னையை வழிபடுபவர் வாழ்வின் சகல செல்வங்களையும் பெற்று இன்பமாக வாழ்வர் என்பது ஐதிகம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அந்தாதியும், அபிராமிப்பட்டரும்!

  1. மிக்க நன்றி. அபிராமி அந்ததியைக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் படித்து வருகிறேன். இந்த நூலை இதுவரை மூன்று முறை அச்சிட்டு இலவசமாக விநியோகித்து வந்திருக்கிறேன். இப்போதும் எனது பெயர்த்தி பிரியதர்ஷினியின் திருமணத்துக்காக அதனை மூலம் உரையுமாக அச்சிட கொடுத்திருக்கிறேன். அதன் பிரதியைத் தங்களுக்கு அனுப்பியுள்ளேன். எனக்கு அபிராமி அந்தாதியின் மீது பிடிப்பு உண்டானதற்குப் பல காரணங்கள் இருப்பினும் ஒரு காரணம்; நான் சிறுவயது பையனாக இருந்தபோது கார்த்திகை சோமவாரத்தில் திருக்கடவூர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் நடக்கும். அப்போது கூட்டம் இப்போது போல் இல்லை. என்னைப் போன்ற சிறுவர்கள் ஒவ்வொரு சங்காக எடுத்துக் கொண்ட் போய் அர்ச்சகரிடம் அபிஷேகத்துக்குக் கொடுப்போம். முடிவில் எங்களுக்கு ஒரு அணா கொடுப்பார்கள். அதற்கு மிட்டாய் வாங்கி சாப்பிட்டுவிட்டு மூன்று மைல் தூரத்தில் இருக்கும் எங்கள் கிராமம் தில்லையாடிக்கு நடந்து செல்வோம். அந்த நினைவு பசுமையாக இன்னமும் மனதில் இருக்கிறது. அபிராமி அந்தாதியோடு அபிராமி அம்மைப் பதிகமும் இணைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.