Blog

  • பாவேந்தர் வாழ்த்துப்பா!

     

    மேகலா இராமமூர்த்தி

     

    அறத்தைப் பாடிய அறிஞனின் இளவலாய்

    அற்புதப் பாக்களைப் படைத்தவன் – அவன்

    திறங்கண்டு வியந்திட்ட தமிழுமே தன்

    கரம்கட்டிச் சேவகம் செய்தது!

     

    சிறுவர் மணம்கண்டு சீற்றம டைந்தேஅக்

    கொடுமையை எதிர்த்திட்ட கோமகன்!

    மறுமணம் புரிதலும் தவறில்லை என்றேநல்

    கருத்துரை வழங்கிய பாமகன்!

     

    பாடாத தேனீக்கள் ஏதிங்கே? என்றானே

    கைம்மைத் துயர்தனைக் களைந்திட

    வாடாத பூப்போன்ற மங்கை தன்னை

    வீட்டினிலே வதைத்திடுதல் தவறென்றான்!

     

    சீர்தி ருத்தமே சிந்தையில் நிறைந்தால்

    பாக்களில் கனன்றது புரட்சித்தீ!

    பார்சி றந்திட பகுத்தறி வேதுணை

    என்றே முழங்கிட்ட கவிச்சிங்கம்!

     

    தமிழேதன் மூச்சென்று எண்ணியே வாழ்ந்திட்ட

    தமிழ்க்கவிஞன் சுப்புரத் தினமன்றோ!

    அமிழ்தென்று புதுப்பெயர் தனைத்தமிழ் பெற்றதே

    பிள்ளையாய் இவனையே பெற்றதால்!

     

    தேமதுரத் தமிழ்ப்பாவால் உலகையே வென்றுதன்

    நாமமென்றும் நிலைத்திடவே வாழ்கின்றான்!

    பாமாலை சூட்டியே மகிழ்கின்றேன் நானுமப்

    பாவேந்தன் மேல்கொண்ட பக்தியால்!

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    இந்த வார வல்லமையாளர் என்ற பகுதி வல்லமையில் ஆரம்பித்து சரியாக ஒரு வருடம் ஆகின்றது. முனைவர் அண்ணா கண்ணன் இந்தப் பணியைக் கொடுக்கும்போது விளையாட்டாக ஏதோ சொல்கிறார்.. சரி, நாமும்தான் விளையாடிப் பார்ப்போமே என்றுதான் ஒப்புக்கொண்டேன். ஏனெனில் இப்படியெல்லாம் இன்னொருவர் எழுத்துக்களைப் பற்றி எழுதும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிதானவனோ, அறிவாழம் மிக்கவனோ இல்லை என்ற அடிப்படை உண்மை எனக்கு நன்றாகவே தெரியும். இருந்தும் நம்மைக் கூட நம்பி ஒருவர் இப்பணியை ஒப்படைக்கிறார், அவருடைய மனதை நாம் சங்கடப்படுத்துவானேன் என்ற எண்ணத்தில் எழுத ஒப்புக்கொண்டேன். நடுவில் ஒரு நான்கு வாரம் பணி நிமித்தம் வெளியூர் சென்றபோது பெரியவர் இன்னம்பூரார் மிகச் செவ்வனே செய்தார்.

    இன்னம்பூராராகட்டும் நானாகட்டும், நிச்சயமாக மூன்றாவது மனிதராக இருந்து, ஒரு நடுநிலை வாசகனாக மாறித்தான் இந்தப் பணியைச் செய்தோம் என்று இந்த நிமிடத்தில் எம்மால் நிச்சயமாக சொல்லமுடியும். ஆகையினால் ஒரு சிறிய மனத் திருப்தி கூட..

    இந்த இனிய கட்டத்தில் இந்த வருடத்து 52 ஆவது வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்க அடியேனும் திரு அண்ணா கண்ணனும் திருமதி பவளசங்கரியும் சேர்ந்து ஆலோசித்ததில் மூவரும் சட்டென சொன்னது கம்பராமாயண வகுப்பை ஆரம்பித்திருக்கும் திரு ஹரிகி அவர்களுக்குத்தான் என்று. மூவரும் ஒரே மனதோடு ஒரே கணத்தில் திரு ஹரிகியைப் பாராட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பது தெரியவேண்டும் என்பதற்காக இதை வெளியிடுகிறேன்.

    தித்திப்பான பால்சமுத்திரத்திலிருந்து பாலைக் கொஞ்சம் குடித்துவிட்டு அதன் ருசியில் மயங்கி, திருப்தியடையாமல் அப்படியே அள்ளி விழுங்க ஆசைப்படும் பூனையாக வால்மீகியின் ராமாயணத்தைப் பற்றி எழுதும்போது, கம்பன் தன்னை வர்ணித்துக் கொள்வார். ஆனால் அதே திருப்பாற்கடலை செந்தமிழில் இத்தனை இனிமையாகக் கொண்டுவந்ததில் கம்பரை நாம் எப்படியெல்லாம் பாராட்டவேண்டும்? அதே சமயத்தில் கம்பரைப் பாராட்டுவது என்பது அவர் எழுதிய ராமாயணத்தைப் படித்தாலே போதுமானது. கம்ப ராமாயணத்தைப் படிப்பது என வரும்போது ஒவ்வொரு பாடலுக்கும் உரை வைத்துப் பார்த்துப் படிக்கவேண்டும். உரை வைத்துப் படிக்கவேண்டும் என்று சொல்லும்போதே அந்த உரையை நன்கு தெளிந்த உரையாசிரியர் ஒருவர் கற்பித்தால் நல்லது எனத் தோன்றும்.. நன்கு தெளிந்த என்று சொல்லும்போதே அந்த உரையாசிரியருக்கு மூலநூலின் ஆழமும் நன்கு உணர்ந்தவராக இருந்தால் நமக்குக் கிடைப்பது தேனில் ஊறிய பலாச்சுளைதான் என்று சொல்லவும் வேண்டுமோ. இப்படிப்பட்ட உரையாசிரியராக உன்னத உருவமாக உருவெடுத்திருக்கும் திரு ஹரிகியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இப்படித்தான் நம்மாழ்வார் ஸ்டடி ஸர்க்கிள் என்று ஒரு குழுமத்தை இங்கே விசாகையில் நானும் திரு ஸம்பத் அவர்களும் ஆரம்பித்தோம். ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல தெளிந்த உணர்ந்த உரையாசிரியர் சரியாக அமையவில்லை என்பதில் வருத்தமே. இந்த ஆன்மிகச் செழிப்பு மிகுந்த ஆந்திரத்தில் இந்த விஷயத்தில் திரு ஹரிகியை ஒத்த சான்றோர்களின் ஆதரவு கிடைக்காதது என்பது எங்களது துரதிருஷ்டம்தான் (இத்தனைக்கும் சின்னஜீயர், பெரிய ஜீயர் எல்லோரையும் முயற்சி செய்தோம்). ஆனால் பெங்களூரு அந்த அதிருஷ்டத்தைச் செய்துள்ளது.. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வமாக உருவாகி அங்கே அன்பர்களுக்கு அந்த செல்வம் பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே எங்கள் செவியில் தேனாறு போல பாய்கிறது.

    இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு ஹரிகி மேலும் பல விருதுகள் பெற்று கௌரவிக்கப்படவேண்டும் என்பது என்னுடைய அவா. சான்றோர்களின் புலமை வீணடிக்கப்படக்கூடாது என்பதுடன் அது உரியவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற விஷயத்தில் நம் முன்னோர்கள் எப்போதுமே தெளிவாக இருந்ததானால்தான் இன்று நாம் எத்தனையோ காவியங்கள் கதைகள் பற்றிப் பேசுகின்றோம். எதிர்கால சந்ததியினரை மனதில் வைத்து எழுதப்படும் பேசப்படும் எந்த நல்ல செயலும் போற்றப்படவேண்டும் என்பதோடு திரு ஹரிகி அவர்களின் சேவைக்கு நாம் நன்றி சொல்லவும் கடமைப்பட்டுள்ளோம்.

    வாழ்க அவர் தமிழ்ப்பணி, வளர்க அவரது சேவை..

    கடைசி பாரா: அவ்வபோது நினைவுபடுத்தவேண்டும் என்பது போல சு.கோதண்டராமன் எழுதிய பாரதியின் வேதவாக்கிலிருந்து பாரதியின் முத்திரை வரிகள்:

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்
    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய
    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்
    சிந்தையே இம்மூன்றும் செய்

    அன்பு நண்பர்களே,

    கடந்த ஓராண்டு காலமாக எத்தனையோ பணிகளுக்கிடையேயும் , அடாது மழை பெய்தாலும் விடாது தொடருவோம் என்று குறிப்பிட்ட நேரத்தில் தவறாது நடுவு நிலைமையுடன் வல்லமையாளரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடைய  தனித்திறமைகளை ஆய்ந்தறிந்து எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தவறாமல் அழகாக வெளியிட்டு வரும் திரு திவாகர் அவர்களுக்கும்,  இடையில் அவசரப் பணி நிமித்தம் நான்கு வாரங்கள் தொடர முடியாத சூழலில் அதே முனைப்போடு இந்தப்பணி தடைபடாமல் செய்து முடித்த திரு இன்னம்பூரான் ஐயா அவர்களுக்கும் வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த நன்றி.

    இந்த வார வல்லமையாளராகப் பிரகாசிக்கும் திரு ஹரிகி அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    அன்புடன்

    பவள சங்கரி

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 69 (29.04.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (41)
    கதிரவனும் மறைந்தனனே;
    கார் இருளும் படர்ந்ததுவே;
    அந்திமாலையை எதிர்நோக்கியிருக்கும்
    என் குவளை போன்ற கண்களும்
    நீரைத்தான் உகுக்கின்றனவே;

    புதிய நிலா போன்ற முகம் உடையவளே!
    திங்கள் ஒளியை உமிழ்ந்து
    ஞாயிற்றின் ஒளியை விழுங்கும்
    இம்மாலைப் பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    (42)

    பறவைகள் பாட்டு அடங்கிப்போயினவே;
    பகல் பொழுது செய்யும் சூரியனும் மறைந்தனனே;
    குறைவற்ற நிறைநிலா
    என் காமநோய் அதிகரிக்கச் செய்கிறது;
    நோய்மிகுதியால் என் நீண்ட கண்கள்
    நீரைத்தான் சொரிகின்றன;
    மொட்டவிழ் மலர்கள் சூடிய
    கூந்தலை உடையவளே!
    கொடுமையான வன்மையுடன்
    என்னுயிருடன் பகைகொண்டு விளங்கும்
    இம்மங்கிய மாலைப்பொழுது
    நம்மைப் பிரிந்து சென்ற
    தலைவர் தம் நாட்டிலும் இருந்திடுமன்றோ?!

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram22.html

    படத்துக்கு நன்றி:
    http://arundhtamil.blogspot.com/

    Share
  • குட்டி தேவதை

     

    -தனுசு

     

    என்
    தோள் மீது சாய்ந்தால்
    அவளுக்கு இன்பம்
    என்
    மார் மீது படுத்தால்
    அவளுக்குப் பேரின்பம்.

    என் அணைப்பு
    அவளுக்கு ஆனந்தம்
    என் முத்தம்
    அவளுக்குப் பேரானந்தம்.

    என் மடியில் கிடப்பது
    அவளுக்குப் பிடிக்கும்
    நான் இல்லையென்றால்
    அவள் இதயம் துடிக்கும்.

    என் பெயர்
    அவளுக்கு வேதம்
    என் நெருக்கம்
    அவள் உயிரின் நாதம்

    அவள்
    எனக்குப் பிடித்த கவிதை
    அவள்
    எனக்குப் பிடித்த ஓவியம்.

    பாலூறும் முகம்
    தேனூறும் பேச்சு
    கள்ளூறும் பார்வை
    கொட்டி வைத்திருக்கும்
    இந்தப் பாவைக்கு…..

    ஒரு சின்னப் பா
    எழுத வேண்டும்
    அவளின்
    முதலாம் பிறந்த நாளுக்கு

    ஒரு வரி சொல்லுங்களேன்…..
    அவளின்
    இந்த
    அன்புள்ள அப்பாவுக்கு.

     

    படத்துக்கு நன்றி: http://kranantistraphotography.blogspot.com/

     

    Share
  • வாழ்க்கை நலம் – 7

     
    குன்றக்குடி அடிகள்

    7. முப்பால் அமைந்த திறன்

    திருவள்ளுவர் அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்று முப்பாலாக வகுத்துச் செய்தது ஏன்? இந்த வினாவுக்குப் பலர் விடையளித்துள்ளனர். பெரும்பாலோர் மரபுவழிச் சிந்தனை, பழக்க வழிப்பட்ட சிந்தனை (Conventional  thinking – Habitual thinking) நோக்கிலேயே காரணங்கள் காட்டியுள்ளனர். ஆனால், அவை அறிவியல் ஆய்வின் முன்னிற்குமா என்பது ஐயம்.

    திருவள்ளுவர் நூல் செய்யத் தொடங்கும் பொழுது எல்லோரையும் போலத்தான் நினைத்து அறத்துப்பாலை மட்டுமே செய்ய எண்ணினார். அறத்துப்பாலை இயற்றி முடிக்கும் பொழுது நூல் “ஊழிய”லில் வந்து முடிந்தது. ஊழியல் முடிந்தவுடன் திருவள்ளுவர் சிந்ததிக்கின்றார்; ஆழமாகச் சிந்ததிக்கின்றார்; வாழவேண்டிய மானுடத்தை ஊழைக்காரணங் காட்டி நடுத்தெருவில் முட்டுச் சந்தியில் நிறுத்தி விட்டுப் போகத் திருவள்ளுவர் விரும்பவில்லை.

    ஆதலால் ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலுடையதாக மானுடத்தை ஆக்க விரும்புகின்றார். ஊழை எதிர்த்துப் போராடுதல் எளிது அன்று. அதற்குரிய கருவி, காரணங்களை மானுடம் பெற்றாக வேண்டும். இந்த நோக்கத்தில்தான் பொருட்பாலைத் திருவள்ளுவர் இயற்றுகின்றார்.

    ஊழை எதிர்த்துப் போராடும் ஆற்றலை, கல்வி, கேள்வி, அறிவறிந்த ஆள்வினையுடைமை முதலிய கருவிகளை நாம் பெறத்தக்க வகையில் பொருட்பால் இயங்குகிறது. மேலும் ஊழை எதிர்த்துப் போராடும் களத்தில் போராடத்தக்க உறவினர்களையும் துணைகளையும் கூட்டுவிக்க முயற்சி செய்கிறார்; பொருட்பாலை இயக்கிச் செல்லும் திருவள்ளுவர் சமுதாயத்தில் முரண்பாடுகளையே சந்திக்கின்றார்! பெரியோரைத் தேடிப் போகின்றார்! சிறியோரே வந்து சேர்கின்றனர். நல்நட்பை நாடிச் செல்கின்றார்! ஆனால், கிடைத்ததோ தீ நட்பு! செங்கோன்மையைத் தேடிப் போகின்றார்! கிடைத்ததோ கொடுங்கோன்மை! இந்த அவல நிலை திருவள்ளுவரைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால் பொருட்பால் முடிவில் ஆற்றாமை மீதூர மானுடத்தைத் திட்டுகிறார்.

    “ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
    போஒம் அளவும்ஒர் நோய்”

    “சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோற்
    கொல்லப் பயன்படும் கீழ்”

    என்றெல்லாம் கடிந்து பேசுகின்றார்! ஆதலால், திருவள்ளுவருக்கு அன்று வாழ்ந்த மானுடத்தின் மீது கட்டுக்கடங்காத கோபம்! மீண்டும் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்திக்கின்றார்!

    அந்த ஆழ்ந்த சிந்தனையின் வடிவு, இன்பத்துப்பால் செய்ய முற்பட்டது! இன்பத்துபாலின் நிகழ்வுகளை இல்லறவியலிலும்  திருவள்ளுவர் கூறியிருந்தும் மீண்டும் இன்பத்துப்பால் செய்யமுற்பட்டதேன்? இல்லறவியலிலும் கூறியவை இல்லற வாழ்வின் செயல் முறைகள்! கோட்பாடுகள்! காமத்துப்பாலில் சொல்வது காதலின் சிறப்பு –  காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! காமம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!

    “மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்”

    என்பது திருக்குறள்.  பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை.  நன்மக்களைத் தருவது இல்லறந்தானே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையாக இரண்டு பகுதிகளாக இயக்கினார்.

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

    Share
  • மனிதனாக்க…

    செண்பக ஜெகதீசன்         

     

    சுடச்சுடத் தங்கத்தை உருக்கி

    சூடிட நகைகள் செய்கிறோம்..

    அடித்துக் கல்லைச் செதுக்கி

    அழகு சிற்பம் செய்கிறோம்..

     

    அல்லல்தான் வந்து வாழ்வில்

    ஆளாக்குகிறது மனிதனை..

    அதுதெரியாமல் கிடந்து

    அழுது சாகிறாயே மனிதனே…!

    படத்துக்கு நன்றி

    http://dawn.com/2012/05/04/china-india-no-longer-bullish-for-gold/


     

    Share
  • நாகரிக மனிதனின் வியாதிகள் (டயபடிஸ்- பாகம் 2)

    செல்வன்

    டயபடிசுக்கு என்ன காரணம் என்பது பலவருடமாக 20ம் நூற்ராண்டு மருத்துவர்களை வாட்டி வந்த குழப்பம். உலகில் பல இடங்களில் இருந்து வந்த ஆய்வுகள் பல குழப்பமான முடிவுகளை அளித்தன. உதாரணமாக “வெள்ளை சர்க்கரை உண்பதுதான் டயபடிசுக்கு காரணம். இயற்கையான தானியம், பழங்களில் இருக்கும் சர்க்கரை சத்து டயபடிசுக்கு காரணம் அல்ல” என்பது 20ம் நூற்றாண்டின் மத்தியில் மருத்துவர்களிடம் நிலவிய மூட நம்பிக்கை. இன்றும் கூட பலர் சமைக்காமல் உண்ணும் பழம், காய்கறிகள் மூலம் சர்க்கரை வராது என நம்புகிறார்கள். ஆனால் 60களில் நியூசிலாந்தில் மாவோரி பழங்குடியினரிடையே நிகழ்த்தபட்ட ஆய்வு இந்த எண்னத்தை தகர்த்தது. மாவோரிகள் பெருமளவில் டயபடிஸ், கொலஸ்டிரால், மாரடைப்பு, தொப்பை ஆகியவற்றால் பாதிப்படைந்திருந்தனர். பெண்களில் சுமார் 60% பேர் குண்டாக இருந்தனர். அவர்கள் உணவு பெரும்பாலும் நியூசி அரசு ரேஷன் மூலம் கிடைத்த விலைகுறைவான கார்போஹைட்ரேட்டுகள் நிரம்பிய உணவுதான் (ரொட்டி, மாவு, பிஸ்கட்டுகள், சீரியல்கள்). கணக்கு போட்டதில் ஒரு மாவோரி வருடம் ஒன்றுக்கு 70 கிலோ சர்க்கரையை இந்த உணவுகள் மூலம் மட்டுமே பெற்றது தெரிய வந்தது. (தினம் 200 கிராம் தானியம்,பழம், உண்டால் வருடம் 70 கிலோ சர்க்கரை நம் உணவிலும் சேரும்.) 

    டயபடிஸ் அல்லாத வேறு வியாதிகளை ஆராய்ந்து வந்தவர்களும் அது சர்க்கரையுடன் தொடர்பு கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்கள். உதாரணமாக உலகயுத்த காலத்தில் ஹாங்காங் சிறைகளில் கைதியாக அடைபட்டிருந்த க்ளீவ் எனும் மருத்துவர் அங்கிருந்த சிறைகைதிகள் ஒருவர் விடாமல் அல்சர் வியாதியால் பாதிக்கபட்டிருந்ததை அறிந்தார்.  யுத்த காலத்தில் மாமிசம் கிடைக்காததால் கைதிகளுக்கு வெறும் அரிசி உணவு மட்டுமே தினம் மூன்று வேளை வழங்கப்பட்டது. யுத்தம் தீவிரமாகி வெள்ளை அரிசி கிடைப்பது நின்று கைதிகளுக்கு விலை குறைந்த மட்டமான பழுப்பு அரிசியும், கம்பு, பார்லி முதலிய தானியங்களும் வழங்கபட்டன. பல சமயங்களில் அவர்களுக்கு உணவு கூட வழங்கபடவில்லை. ஆனால் அதிசயிக்கதக்க முறையில் வெள்ளை அரிசி சப்ளை நின்றவுடன் கைதிகளில் பெரும்பாலானோருக்கு இருந்த அல்சர் மாயமாக மறைந்தது.

    யுத்தம் முடிந்து விடுதலை ஆன மருத்துவர் க்ளீவ் அல்சரை பற்றி ஆராய்வதை வாழ்நாள் லட்சியமாக கொன்டார். உலகெங்கும் இருந்த மருத்துவர்களுக்கு கடிதம் எழுதி அல்சர் நோயாளிகளின் உனவை பற்றிய தகவலை திரட்டினார். 1962ம் வருடம் அந்த கடிதங்கலை தொகுத்து நூலாக வெளியிட்டார். அதில் பக்கம், பக்கமாக மருத்துவர்கள் கூறியதன் சாராம்சம் இதுதான்: எங்கெங்கு எல்லாம் ரொட்டியும், மாவும், வெள்ளை அரிசியும் மக்களின் பிரதான உணவாக உள்ளதோ அங்கே எல்லாம் பெப்டிக் அல்சர் மக்களை படாதபாடு படுத்துகிறது என்பதும் இந்த உனவுகளை உண்ணாதவர்களுக்கு அல்சர் இல்லை என்பதும்.

    ஆக க்ளீவ் தன் நூலில் கூறுவது இதைத்தான். உலகில் பலநாடுகளில் மக்களின் பாரம்பரிய உணவுகள் மேற்கத்தியமயமாதலின் தாக்கத்தால் மாவு, மில் அரிசி, சர்க்கரை முதலியவை சேர்க்கபட்டு உருமாற்றம் அடைந்துவிட்டன. (மில் வெள்ளை அரிசி நம் தொன்மை உணவான இட்லியை வெள்ளை நிறமாக்கியதை நினைவில் கொள்ளலாம்). மக்களின் பாரன்ம்பரிய உணவுகள் நாகரிகமடைந்ததும் நாகரிக மனிதனின் வியாதிகளான டயாப்டிஸ், அல்சர் முதலியவை அவர்களையும் வந்து அடைந்துவிட்டன. என்னதான் சத்துமிகுந்த உணவாக இருந்தாலும் அதில் சர்க்கரை, மாவு, ரொட்டி, அரிசி முதலியவற்றை சேர்த்தால்  அதன்பின் அந்த உள்ள வைட்டமின், மினரல், புரதம் எதுவுமே பொருட்டு அல்ல. அத்தகைய உணவு அதன்பின் அம்மக்களை நாகரிக மனிதனின் வியாதிகளுக்கு இட்டுசெல்லும்.

    Inline image 1

    டயபடிஸ், இதய் அடைப்பு, உடல் பருமன், ரத்த அழுத்தம், பல் வியாதி இவை அனைத்தும் நெருங்கிய தொடர்பு உடையவை. இவைகளை தனி தனியாக ஆராய்ந்த மருத்துவர்கள் பலரும் இந்த வியாதிகளுக்கு காரணம் நாகரிக உனவுகள் என்பதையும், அதில் உள்ள சர்க்கரையும் தான் என்பதை கண்டுபிடித்தார்கள். டயபடிஸ் வந்தவர்கள் டயபடிஸ் இல்லாதவர்களை விட இருமடங்கு அதிக விகிதத்தில் மாரடைப்பால் இறந்தார்கள். கிட்னி பழுதானவர்கள் பெருமளவிலானவர்க்கு டயபடிஸ் இருந்தது. பல் சொத்தை விழுந்தவர்கள் பலருக்கு டயாடிஸும், உடல் பருமனும் இருந்தன.

    மருத்துவர் ஜாஸ்லின் இதைப்பற்றி பின்வருமாறு எழுதுகிறார்

    “பல் சொத்தை, ஈறு கெடுதல் ஆகியவை நிகழ்வது ஒருவருக்கு டயபடிஸ் வருவதற்கான முக்கிய அறிகுறி” –

    சர்க்கரைசத்து நிரம்பிய அரிசி, கோதுமை உனவுகளை உண்ணும் பெண்கள் பலருக்கும் ரத்தசோகை, மாதவிலக்கு தேதி தவறுதல், பிரசவகால சிக்கல்கள், பிரசவகால மரணங்கள் ஆகியவை அதிகம் இருந்தன. இதே மருத்துவர்களே இல்லாத எஸ்கிமோ பெண்களிடையே இந்த வியாதிகள் எதுவும் இல்லை. எஸ்கிமோக்களிடையே ஐந்து வருடம் வாழ்ந்து ஐந்து வருடமும் வெறும் மாமிசம், மீன் உணவுகலையே உன்ட ஹார்வர்டு பல்கலைகழக பேராசிரியர் ஸ்டெபன்சனின் குறிப்புப்படி எஸ்கிமோ பெண்களுக்கு பிரசவ வலி என மருத் துவருக்கு சேதி வந்து அவர் அவர்கள் வீடுகளுக்கு போவதற்குள் 99% பெண்களுக்கு பிரசவம் ஆகிவிடும். ஒன்று இரண்டு குழந்தைகளை பெற்றே உடல் உருக்குலைந்து போகும் நகர்ப்புற பெண்களை கண்ட ஸ்டெபன்சன் ஏழெட்டு குழந்தைகளை பெற்றும் சர்வசாதாரணமாக கடுமையான வேலைகளை செய்யும் எஸ்கிமோ பெண்களை கண்டு மலைத்து போனதாக எழுதுகிறார்.

    எஸ்கிமோ உணவு? வருடம் 11 மாதம் வெறும் மாமிசமும், மீனும் தான். வருடம் ஓரிரு மாதம் மட்டும் அபூர்வமாக கிடைக்ககூடிய காய்கறிகள், பழங்களை கூட அவர்கள் கொழுப்பு நிரம்பிய சீல் எண்னெயில் வதக்கி எடுத்துதான் உண்பார்கள். காரணம் காய்கறிகள் கூட பழுதான உணவுகள் என்பது எஸ்கிமோ நம்பிக்கை!!!!

    (தொடரும்..)

    செல்வன்
    www.holyox.blogspot.com

    Share
  • தாய்மொழி தமிழ்.

     

    -கே.எஸ்.சுதாகர்

     

    மனோகரன் மாலை நேரங்களில்தான் அங்கு போவான். விரிவுரைகள் இல்லாத புதன், வியாழன் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவனுக்கு அங்கு வேலை காத்திருக்கும். பெரியதொரு வளவிற்குள் அந்த வீடு தனிமையில் இருக்கும். காரை கேற்றுக்குச் சமீபமாக நிறுத்திவிட்டு கொழுவியிருக்கும் கேற்றைத் திறந்து கொண்டு உள்ளே போனால், முற்றத்திலே சாய்வணைக்கதிரையில் சரிந்தபடி ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டு நியூமன் இருப்பார். நியூமன் (Robert Newman) ஒரு வெள்ளைக்காரன். கேற்றிலிருந்து வீட்டின் வாசல்வரை செல்லும் பாதையின் இருமருங்கிலும் அழகாக புல் வெட்டப்பட்டிருக்கும். சாய்வணைக்கதிரைக்குப் பக்கத்தில் ஒரு குட்டி மேசையும், இவனுக்கான கதிரையும் இருக்கும். மேசைக்குக்கீழே விரிக்கப்பட்டிருக்கும் பொலித்தீன் கடதாசி மீது சில தட்டுமுட்டுச் சாமான்களுடன் நாலைந்து புத்தகங்களும், அன்றைய புதினப்பத்திரிகையும் வாசிப்புக்காக இருக்கும்.

    இன்று நியூமனைக் காணவில்லை. மனோகரனுக்கான கதிரை போடப்பட்டிருந்தது. தயங்கியபடியே அதற்கண்மையில் போய் நின்று, சுற்றுமுற்றும் பார்த்தான். வீட்டுக்கதவு திறந்து கொண்டது. நியூமன் வெளியே வந்தார். இவனுக்காகவே ஜன்னலிற்குள்லால் பார்த்துக் கொண்டு நின்றிருப்பார் போலும்.

    “அமருங்கள். சீக்கிரம் வந்து விடுகின்றேன்” சொல்லிக்கொண்டே மீண்டும் வீட்டிற்குள் நுழைந்தார் நியூமன்.

    நியூமனிற்கு வாசித்துக் காட்டுவதுதான் மனோகரனுடைய வேலை. இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்பதில்லை. பலதும் பத்தும் இடையிடையே கதைத்துக் கொள்ளுவார்கள். பத்திரிகையை எடுத்து தலைப்புப்செய்திகளைப் படிப்பான். நியூமனிற்குப் பிடித்திருந்தால் அந்தப்பகுதியை முழுவதும் வாசிக்க வேண்டும். இல்லாவிடில் அடுத்த தலைப்பிற்குத் தாவி விடுவான். பத்திரிகை முடிந்து நேரம் இருந்தால் இலக்கியப்புத்தகங்கள் வரலாற்றுநூல்கள் படித்துக் காட்ட வேண்டும். 16ஆம் 17ஆம் நூற்றாண்டு காலத்திற்கு அவர்களின் உரையாடல் போய் வரும். நியூமனிற்கு புனைவு இலக்கியம் (fiction) பிடிப்பதில்லை. அபுனைவு இலக்கியத்தில்தான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம் என்பார்.

    மனோகரனின் ஆங்கில உச்சரிப்பு அற்புதம் என்று சொல்லுவார். மனோகரன் அவுஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த காரணத்தால் ஆங்கிலத்தை சரளமாக எழுதவும் பேசவும் முடிகிறது.

    ஆனால் தாய்மொழி தமிழ்? கேள்விக்குறியாகிவிட்டது.

    சிறுவயதில் நான்கு வருடங்கள் மனோகரன் தமிழ் படித்தான். தமிழ் படித்த போது புதிய எழுத்துகள், செய்திகளை அறிந்து கொண்டான். 4ஆம் வகுப்பு வரை சென்ற அவனை தொடர்ந்து கூட்டிச் செல்ல பெற்றோருக்கு வசதி வரவில்லை. இப்போதும் இனிமையாகத் தமிழ் கதைப்பான். ஆனால் சரளமாக எழுதவோ வாசிக்கவோ அவனால் முடியாது. சிட்னியில் இருப்பதுபோல மெல்பேர்ணில் எந்தவொரு அரச பாடசாலையிலும் தமிழ் சொல்லிக் கொடுப்பதில்லை. சனி ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் கொம்மியூனிற்றிக் கிளாசில்தான் (Community class) போய்தான் படிக்க வேண்டும்.

    அந்தப்பெரிய பங்களாவில் நியூமன் மாத்திரமே இருந்தார். அவரின் மனைவி இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நியூமனிற்கு மூப்பு காரணமாக கண்பார்வை குறைந்திருந்தாலும் தனக்குரிய வேலைகளைத் தானே செய்து வருகின்றார். மனோகரன் அங்கிருக்கும் சிலதருணங்களில் ஒரு வைத்தியர் அங்கு வந்து போவதைக் கண்டிருக்கின்றான். தவிரவும் அருகே இருக்கும் நண்பர் ஒருவர் கடையில் சில பொருட்களை வாங்கி வந்து கொடுப்பார், நியூமனுடன் உரையாடுவார்.

    சிலவேளைகளில் வாசிப்பிலும் நியூமன் ஆர்வம் காட்டமாட்டார். மனோகரனுடன் கதைத்துக் கொண்டிருப்பதைத்தான் பெரும்பாலும் அவர் விரும்புகின்றார். தனிமையில் இருப்பவருக்கு மனோகரன் ஒரு நண்பன்.

    மனோகரன் கடந்த இரண்டு மாதமாக இங்கே வந்து போகின்றான். அவனுக்கு முதல் ஒருசிலர் அங்கே வந்து போயிருக்கின்றார்கள். அவர்கள் பற்றுதலுடன் வேலை செய்யவில்லை. காசிலேதான் குறியாக இருந்தார்கள். மனோகரன் நியூமனை எப்படிச் சந்தித்தான் என்பதை உங்களுக்கு சொல்ல வேண்டும். பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது சில பகுதி நேர வேலைகளுக்கு மனோகரன் போவதுண்டு. அப்படித்தான் ஒருநாள் அந்த விளம்பரத்தைப் பார்த்தான். ‘ஆங்கிலம் நன்கு கதைக்க வாசிக்கத் தெரிந்த ஒருவர், வாரத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு தேவை.’ இதுதான் மனோகரன் பார்த்த விளம்பரம்.

    “இன்று நான் ஹொஸ்பிற்றல் போயிருந்தேன். வரும்போது நூல்நிலையம் சென்று வந்ததால் நேரம் பிந்திவிட்டது” என்று சொல்லிக்கொண்டே நியூமன் வந்து தனது இருக்கையில் அமர்ந்தார். வழமைபோல வாசிப்பு ஆரம்பமாகியது. சற்று நேரத்தில் கீழே குனிந்து, அடுக்கி வைத்திருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்தார். கண்ணை அகலத்திறந்து ஒருசேர உற்று அதைப் பார்த்தார். புத்தகத்தின் விளிம்பில் பெருவிரலைப் பதித்து வேகமாக விசிறி பக்கங்களைப் புரட்டிவிட்டு,

    “இன்று நூல்நிலையத்தில் இருந்து எடுத்து வந்தேன். பெரிய எழுத்துக்கள் கொண்ட புத்தகங்கள். large printed materials என்று இதைச் சொல்வார்கள். கண்பார்வை குறைந்த என்போன்றவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். உங்களது தாய்மொழியிலும் இப்படிப்பட்ட புத்தகங்கள் இருக்கின்றனவா?” என்று மனோகரனைப் பார்த்துக் கேட்டார்.

    அவை சாதாரண புத்தகங்களைவிட நீளமாக இருந்தன. தமிழில் இப்படியான பெரிய எழுத்துகள் கொண்ட புத்தகங்களை மனோகரன் இதுவரை காணவில்லை. சிலவேளைகளில் இருக்கலாம்.

    “உமக்கொரு செய்தியொன்று நான் சொல்ல வேண்டும். இன்றிலிருந்து உமக்குரிய ஒவ்வொருகிழமைச் சம்பளத்தையும் முன்னதாகவே தந்துவிடுவேன்” திடீரென வாசிப்பின் நடுவே பீடிகை போட்டார் நியூமன். மனோகரனுக்கு அவர் என்ன சொல்கின்றார் என்று புரியவில்லை. நியூமனின் முகத்தை உற்று நோக்கினான் அவன்.

    “எப்பவாகிலும் நீர் இங்கு வரும்போது, சிலவேளை நான் இங்கு இருக்கமாட்டேன்!”

    “ஏன் எங்காவது வெளிநாடு போகப் போகின்றீர்களா?” என்று வியப்புடன் மனோகரன் கேட்டான். புன்முறுவல் பூத்தபடியே நியூமன் தனது இரண்டு கைகளையும் உயர்த்தி மேல் நோக்கிக் காட்டினார். மனோகரன் திடுக்கிட்டுப் போனான். அவனின் நெஞ்சு சற்று வேகமாக அடித்தது. என்ன கதைப்பது என்று தெரியாமல் திக்குமுக்காடினான். திடீரென்று கேட்ட அந்த அதிர்ச்சி தரும் செய்தியை சொல்லில் விளக்கிவிடமுடியாது. அவனது திடீர் மாறுதலைக் கண்ட நியூமன் தானே பேச்சைத் தொடர்ந்தார்.

    “நான் ஒரு கான்சர் நோயாளி. சிலவேளை சொல்லாமல் கொள்ளாமல் உங்களைவிட்டுப் பிரிந்து விடக்கூடும்.”

    மனோகரன் நிலத்தை நோக்கிக் குனிந்தபடி இருந்தான். அவனால் தொடர்ந்து வாசிக்க முடியவில்லை. அழுதுவிடுவேனோ என்று பயந்தான். அவனது நிலமையறிந்த நியூமன் 15 நிமிட இடைவேளை விட்டார். வீட்டிற்குள் சென்று இரண்டுபேருக்குமாக தேநீர் தயாரித்து, ஒரு பிளேற்றில் கொஞ்ச பிஸ்கற்றும் அடுக்கி எடுத்து வந்தார். இருவருமாக பிஸ்கற்றைச் சாப்பிட்டு தேநீர் பருகிக் கொண்டார்கள்.

    “முதலில் எனக்கு ஒருவருடம் என்று சொன்னார்கள். இன்று எட்டுமாதங்கள்தான் என்று சொல்லிவிட்டார்கள். குருதிப்புற்றுநோய் வேகமாகப் பரவிவிட்டது.”

    அருகேயிருந்த ஒரு கொப்பியை நீட்டி, மனோகரனின் தொலைபேசியையும் முகவரியையும் அதில் எழுதும்படி நியூமன் சொன்னார். அவனது விபரங்களை அவர் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், அது ஒரு பிரதித்தியேகமான கொப்பி என்பதை மனோகரன் அறிந்துகொண்டான். அதில் ஏறக்குறைய பத்துப்பேரின் முகவரிகள் இருந்தன.

    அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பும்போது கவலை தோய்ந்த முகத்துடன் வெளியேறினான் மனோகரன். நியூமனை ஒருதடவையேனும் திரும்பிப் பார்க்காமல் காரை நோக்கி வேகமாக நடந்தான். அவன் போவதைப் பார்த்தபடி நியூமன் புன்முறுவலுடன் நின்றிருந்தார்.

    அவன் சிந்தனை குழம்பியது. காரை ஓட்டுவதில் கவனம் சிதறியது.

    “கெடு குறிக்கப்பட்ட ஒருவரா இத்தனை புத்தகங்களையும் அன்றாட தினசரிகளையும் வாசிக்கின்றார்!”

    மனோகரனால் நம்ப முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா?

    இரவு ஒன்பது மணியளவில் மனோகரன் வீடு திரும்பினான். அவனது அப்பா டைனிங் ரேபிளில் அவனுக்காகக் காத்திருந்தார். வேலையிலிருந்து ஓய்வு பெற்றதன் பின்னர், தினமும் அவன் வரும் வரையும் காத்திருந்து அவனுடன் இரவுச்சாப்பாட்டை சாப்பிடுவதுதான் அவரது வழக்கம். மாலை வீட்டை விட்டுப் புறப்படும் போது எப்படி இருந்தாரோ – அதே கோலத்தில் மகனுக்காகக் காத்திருந்தார். அம்மா படுக்கைக்கு நேரத்துடனே போய்விடுவார். அவர் இன்னமும் றெஸ்ற்ரோரன்ற் ஒன்றில் பகுதி நேரமாக வேலை செய்து வருகின்றார். சிலவேளைகளில் இவர்களின் அரவம் கேட்டு எழுந்து வருவார்.

    “அப்பா சாப்பிட்டீர்களா?” – “ஓம்.”

    “பொய் சொல்லாதீர்கள். அம்மாவுக்கும் உங்களுக்கும் சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன்.”

    “அம்மா இனிச் சாப்பிட மாட்டா. நாங்கள் இருவரும் சாப்பிடுவோம்.”

    இருவரும் டைனிங் ரேபிளுக்குப் போனார்கள். மனோகரன் ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டான். அப்பா நடப்பதை அவதானிக்கின்றார். சாப்பாட்டை இரண்டு தட்டுகளிற்குள்ளும் பிரிக்கின்றான் மனோகரன். ‘வைன்’ போத்தல் ஒன்றை உடைத்து, கப்பிற்குள் ஊற்றி அப்பாவிற்கு நீட்டுகின்றான். சாப்பிடத் தொடங்குகின்றார்கள்.

    “அப்ப இனி நீ ஒரு டொக்ரர் என்ன?”

    மனோகரன் சிரிக்கின்றான்.

    “அப்பா நான் உங்களிடம் ஒருவிஷயம் விஷயம் கதைக்க வேண்டும்”

    “சொல்லு?”

    “நான் தமிழ் படிக்கப் போகின்றேன்”

    அப்பா மகனை ஆச்சரியமாகப் பார்க்கின்றார்.

    “இனி எப்படி நீ சின்னப்பிள்ளையளோடை போய் இருந்து தமிழ் படிக்கப் போகிறாய்?”

    “படிப்புக்கு வயது ஏது அப்பா?”

    தமிழ் படிக்காததையிட்டு மனோகரனுக்கு இதுவரைகாலமும் கவலை இருந்ததில்லை. கவலை எல்லாம் பெற்றவர்களுக்குத்தான். எத்தனையோ வீடுகளில் பலபேரின் பாட்டா, பாட்டிமார்கள் – தங்கள் பேரப்பிள்ளைகளை – கழுத்திலே தண்ணீர்ப்போத்தலை தொங்கவிட்டு, அவர்களின் புத்தகப்பொதியை சுமந்து சென்று அவர்களுக்கு தங்களின் தாய் மொழியைக் கற்பித்தார்கள். அந்த நேரத்தில் இவர்களுக்கு மொழி பற்றிய பிரக்ஜை இருந்தபோதும் வசதி இருக்கவில்லை.

    மனோகரனை நினைத்தபடியே தந்தை சாப்பிடத் தொடங்கினார். சாப்பாட்டை மூக்கு முகம் என எல்லா இடங்களிலும் அப்பிப் பிரட்டினார். ‘வைன்’ உதடுகளில் இருந்து மகிழ்ச்சிப் பிரவாகத்தில் வழிந்தது. மனோகரன் அவரது வாயைச் சுட்டிக் காட்டி சிரிக்கத் தொடங்கினான். நீண்ட நாட்களின் பின்னர் அந்த வீட்டிலிருந்து கிழம்பிய மகிழ்ச்சியும் சிரிப்பும் அது. கதவை மெதுவாக நீக்கி பெட் ரூமிலிருந்து அம்மா எட்டிப் பார்க்கின்றாள். அவளின் அந்தப்பார்வை – அந்தக்காட்சி – இரவு என்பதையும் மறந்து அவர்கள் இருவரையும் மேலும் சிரிக்கத் தூண்டியது. அம்மா இவர்களை நோக்கி வருகின்றாள். அவர்கள் இருவருக்குமாக ‘நியூமன்’ என்ற மனிதரின் கதை காத்துக் கிடக்கின்றது.

     

     

     

    Share
  • வார ராசி பலன்!…..( 29-04-13 – 05-05-13 )

    காயத்ரி பாலசுப்ரமணியன்

     

    மேஷம்: இது நாள் வரை உங்களோடு இருந்த பிள்ளைகள் படிப்பு, பணி போன்றவற்றிற்காக, வேறிடம் செல்ல நேரிடும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள். நீண்ட நாள் நட்பில் இருந்த விரிசல் விலகுவதால் உங்கள் நட்பு வட்டத்தில் மீண்டும் மகிழ்ச்சி மலரும். இந்த வாரம் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, மாணவர்கள் விழிப்புடனிருப்பது அவசியம். கலைஞர்கள் மற்றவர்களுடன் பழகும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பியவளமான வாழ்க்கை உங்கள் வசமாகும்.

    ரிஷபம்: மாணவர்கள் தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றினால் வெற்றி என்னும் இலக்கை அடைவது என்பது உறுதியாகும். வியாபாரிகள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். மன நிம்மதியோடு வேலைகளில் ஈடுபடலாம். இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் தேவையில்லாத இடங்களிலும், நேரங்களிலும் உங்கள் விறுப்பு, வெறுப்புகளை வெளியே கொட்டாதீர்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் பணம் தண்ணீராய் செலவழிந்தாலும் கிடைக்கும் பலன் சொற்பமே.

    மிதுனம்: பணியில் இருப்பவர்கள் முக்கிய பொறுப்புள்ளவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களின் நன்மதிப்போடு வேண்டிய சலுகைகளையும் பெறலாம்.பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களுக்கு உதவும் நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது புத்திசாலித் தனம். வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை குறித்து, அதன்படி செயலாற்றினால், பணம் ,லாபம் இரண்டும் முடங்காமலிருக்கும். இந்த வாரம் தாய் வழி சொந்தங்களின் வழி ஆதரவால், தடைப்பட்ட காரியங்கள் தாமதமின்றி நல்ல விதமாக நடக்கும்.

    கடகம்: கலைஞர்களுக்கு இந்த வாரம் பயணங்கள் அதிகரிக்கும். வாய்ப்பிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்படுங்கள் . ஓய்வுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய நேரத்தை ஒதுக்க முடியும். பணியில் இருப்பவர்கள் சச்சரவு கை ஓங்கும் நேரங்களில் மௌனத்தை மேற்கொண்டால், அல்லல்கள் அருகே வராது. பங்குச் சந்தை மற்றும் புதிய முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடும் வியாபாரிகளுக்கு லாபம் சீராக வந்து கொண்டிருக்கும். மாணவர்களும், கலைஞர்களும் பேச்சைக் குறைத்து, செயலில் தீவிரம் காட்டும் அளவிற்கு ஏற்ப முன்னேற்றம் இருக்கும்.

    சிம்மம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் பிரச்னைகளைக் கையாளும் போது பதற்றமின்றி செயல்பட்டால் பாதி பிரச்னைகள் குறையும். பெண்கள் எதிர்பார்த்ததை விட செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும். வசதி வாய்ப்புகளுடன் உங்கள் கௌரவமும் உயருவதால், கலைஞர்கள் புத்துணர்ச்சியுடன் வலம் வருவார்கள். ஆரோக்கியம் பொலிவுடன் விளங்க, முதியவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடை பிடிப்பது நல்லது. இக்கட்டான சூழ்நிலைகளையும் தாண்டி முன்னேற முடியும் என்ற எண்ணமே பொது வாழ்வில் இருப்பவர்களை முன்னேற்றத்தை நோக்கி உந்தித் தள்ளும். மாணவர்கள் வதந்திகளை நம்பி முடிவெடுக்காதீர்கள்.

    கன்னி: மாணவர்கள் தெளிவான சிந்தனை, தீர்க்கமான செயல்பாடு-இரண்டையும் மேற்கொள்வதன் மூலம் உயர்வான நிலைக்கு செல்லலாம். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கலில் அவசரப் போக்கிற்கு இடம் தராமல் இருந்தால், புதிய சிக்கல்கள் உருவாகா மலிருக்கும். இந்த வாரம் பணியாளர்களிடையே அதிருப்தியான சூழல் நிலவும். எனவே பொறுப்பில் இருப்பவர்கள் எதிலும் கவனமாய் இருப்பது அவசியம். சுய தொழில் புரிபவ ர்கள் கேட்டிருந்த கடன் உதவி, சிறிது மந்த கதியில் உங்கள் இடம் தேடி வரலாம். பெண்கள் கவனிக்காமல் விட்ட ஆரோக்கிய நலிவு, பணியில் சில தடைகளை ஏற்படு த்தக் கூடும்.

    துலாம்: சொந்த பந்தங்களின் வரவு மகிழ்ச்சிக்கு இந்த வாரம் அடித்தளமாய் அமையும். பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சில் கடுமை கூடாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.தள்ளிப் போடப்பட்டிருந்த காரியங்கள் உடன் முடியும். கலைஞர் களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புக்களை நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே திறமையோடு புத்திசாலித் தனத்தையும் இணைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் மூத்தவரிடம் இணக்கமாக நடந்து கொள்ளுங்கள். குடும்பப் பிரச்னைகளைத் தீர்க்க நீங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாய் இருப்பார்கள். வியாபாரிகளுக்கு லாபம் வரும் வழிகள் மேலும் உயரும்.

    விருச்சிகம்: இந்த வாரம் வியாபாரிகளின் முன்னேற்றத்தில் இருந்த தேக்க நிலை மாறி பரபரப்புடன் செயல்படுவார்கள்.உறவுகளின் மீது பெண்கள் வீண் சந்தேகங்களை வளர்த்துக் கொண்டு அவதிப் பட வேண்டாம். கலைஞர்கள் வேண்டிய உழைப்பை நல்கினால், இது வரை எட்டாக் கனியாய் இருந்தவாய்ப்புக்கள் உங்கள் கரங்களுக்கு வந்து சேரும். உபத்திரவம் தந்தவர்கள், விலகி விடுவதால் பொது வாழ்வில் இருப்பவர்களின் செயலாற்றல் மேலும் சிறப்பாக இருக்கும். பணி புரியும் இடங்களில் வீண் பகை வளராதிருக்க, உங்கள் கோபத்தை கட்டுக்குள் வைத்து உரையாடுங்கள்.

    தனுசு: பெண்கள் இந்த வாரம் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை, மன உளைச்சல் இரண்டும் ஏற்படாது. எதிரிகள் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டை போடும் வாய்ப்பு உண்டு.கூட்டாக செயல்படும் போது மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் தவறான வழிகாட்டலுக்கு தலையசைக்காமல் இருந்தால், நிலையான நன்மைகள் உங்களை நெருங்கி வரும். முதியோர்களுக்கு பல் சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். எனவே குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

    மகரம்: சுய தொழில் புரிபவர்கள் ஏனோதானோவென்று செயல்படாமல், சீராகத் திட்டமிடுங்கள். காரிய பலிதம் கட்டாயம் உண்டு. வியாபாரிகள் ,சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். சக கலைஞர்களிடையே, கருத்து வேறுபாடு தோன்றும் வாய்ப்பிருப்பதால், பிறருக்கு ஆலோசனை வழங்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். பெண்கள் பணம் செலவழிப்பதில் கணக்காய் இருப்பதன் மூலம் கடன் தொல்லை ஏறாமல் பார்த்துக் கொள்ளலாம். இனிமையான வாக்கு மூலம் மாணவர்கள் இரட்டிப்பான நன்மை பெறலாம்.

    கும்பம்: பெண்கள் பதற்றத்திற்கு இடம் தராமல், பணிவான முறையில் உரையாடினால், குடும்பத்தில் அமைதி நிலவும். கலைஞர்கள் தீய சகவாசம், வேளை தவறிய உணவு, வீண் செலவு, ஆகிய அனைத்தையும் தவிர்த்து சீரான வழியில் சென்றால், சிக்கல்கள் ஏதும் உருவாகாது. மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தால், நல்ல பெயரும்,நல்ல மதிப்பெண்ணும் கட்டாயம் கிடைக்கும்.வியாபாரிகள் மற்றவர்களை நம்பி வேலைகளை ஒப்படைத்து விட்டு அல்லல் படாதீர்கள். தன் கையே தனக்கு உதவி என்று பணி புரிந்தால், பணிகளும், வர வேண்டிய பண வரவும் தேங்காது.

    மீனம்: கலைஞர்கள் பணியாளர்கள் முன் சொந்த விஷ்யங்களை அலசுவதை விட்டு விடுங்கள். வீண் வதந்திகள் வளராது. வாங்கிய கடன் ஓரளவு அடைவதால், பெண்கள் மகிழ்ச்சியுடன் திகழ்வார்கள். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், மாணவர்கள் நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். பணியில் இருப்பவர்கள் உங்களின் சிரமங்களை, தகுந்த நேரத்தில் எடுத்துச் சொன்னால், தீர்வுகள் கிடைப்பது எளிதாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பிற்கு வேண்டிய மருந்துகளை தவறாது உண்டு வந்தால், பிறக்கின்ற குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

    Share
  • எழுத்தாளன்

    மாதவன் இளங்கோ

    அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவு செய்துவிட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி, நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

    இரண்டு வருடங்களுக்கு முன்பு நாங்கள் ஒன்றாகப் பணிபுரிந்த அலுவலகத்தில் அவரது அறையில் இருவரும் பேசிய காட்சி என் மனத்திரையில் படமாக ஓடிக்கொண்டிருந்தது.

    அவர் மீது அளவுகடந்த மரியாதை கொண்ட நானும், என் திறமையின்  மீதும், என் மீதும் அளவுகடந்த நம்பிக்கை கொண்டிருந்த அவரும் அன்றைக்கு கடுமையாக விவாதம் செய்து கொண்டிருந்த காட்சி அது.

    கார்த்திக், யு ஆர் எ குட் ரைட்டர்! எழுது. வேண்டாம்னு சொல்லல. பட், ஜாப விட்டுட்டு விவசாயம் பண்ண போறேன்; ஃபுல் டைம் ரைட்டர் ஆகப்போறேன்னு சொல்றதெல்லாம் எனக்கு சரியா படல பா. பிலீவ் மி. ஐ ஸீ எ வெரி ப்ரைட் ஃபியூச்சர் பார் யு இன் ஐ.டி ஃபீல்ட் இட்செல்ஃப்.” என்று அறிவுரை கூறினார் பாலா.

    “ஐ நோ பாலா. பட், ஐ.டி ஈஸ் நாட் மை பேஷன். எழுத்து என்னோட கனவு.”

    “நீ இப்போ தான் எழுத ஆரம்பிச்சிருக்க. அந்த ஃபீல்டு பத்தி உனக்கு என்ன தெரியும்? அதுல இருக்கற ப்ராக்டிகல் டிஃபிகல்டீஸ், பிராப்ளம்ஸ், பாலிடிக்ஸ் எல்லாம் தெரியுமா? பப்ளிக் கன்சம்ப்ஷன் வேற.”

    “பிராப்ளம்ஸ்.. பாலிடிக்ஸ்.. இது ரெண்டும் எங்க தான் இல்ல பாலா? நம்ம கம்பனில இல்லையா? இது எல்லாத்துக்கும் மேல, நம்ம பேஷனே ப்ரொஃபெஷனா இருந்தாதான் லைஃப்ல ஒரு சாடிஸ்ஃபாக்ஷன் இருக்கும்; அதுதான் ட்ரூ சக்சச்னு நான் நெனெக்கிறேன்.”

    “அதெல்லாம் சரி பா. கோவமா பேசுறேன்னு நினைக்காத. அந்த ஃபீல்டுக்கெல்லாம் போனா பத்து பைசா கெடைக்காது. யார் இந்த காலத்துல புக்ஸ் படிக்கிறாங்க? பைஜாமா போட்டுட்டு தான் அலையணும்.”

    சக்சஸ்னாவே பணம் தானா பாலா? இந்த கம்பனில நீங்க எனக்கு ரோல் மாடல். நீங்களே இப்படி சொன்னா எப்படி?”

    “பணமும், வியாபாரமும் இல்லாத இடமே இல்ல, கார்த்திக். பி ப்ராக்டிகல். நீ தான் நான் உன்னோட ப்ரதர் மாதிரின்னு அடிக்கடி சொல்லி இருக்க. நான் அந்த ட்யூட்டிய தான் இப்போ பண்ணிட்டு இருக்கேன். தென், இட்ஸ் அப் டு யு.”

    இந்த பதினெட்டு வருஷத்து .டி அனுபவத்துல உலகம் முழுக்க சுத்தி பெற்றதும், கற்றதும், பட்டதும் போதும் பாலா. பட், தாங்க்ஸ் பார் யுவர் கன்சர்ன்ஸ்.” என்று கூறிவிட்டு .டி வேலைக்கு அன்றோடு ஒரு முழுக்கு போட்டுவிட்டேன்.

    ஆனால், இப்போது தான் புரிகிறது – அவர் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்று.

    ஐ.டி துறையில் ஒரு நல்ல வேலையில் இருந்த எனக்கெதற்கு இந்த எழுத்துக் குப்பையெல்லாம் என்று தோன்றுகிறது இன்று.

    என்னடா இவன் ‘குப்பை’ என்று அநாகரிகமாகப் பேசுகிறானே என்று நினைக்காதீர்கள். இந்த வார்த்தையை இதற்காகவெல்லாம் பயன்படுத்தலாம் என்று எனக்கு சில நாட்களாகத் தான் தெரியும். ‘சகவாச தோஷம்’ – மன்னித்து விடுங்கள். இதற்கு பின்பு ஒரு பெரிய புராணமே இருக்கிறது.

    வேலையில் இருக்கும் போதே ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதினேன். அது பெஸ்டு செல்லர் ஆகி “ஹூ மூவ்டு மை சீஸ்?” என்கிற ஆங்கிலப் புத்தகத்தின் விற்பனையையே தூக்கிச் சாப்பிட்டு விட்டது. அதைத் தமிழில் எழுவதற்கு ஒரு எழுத்தாளர் உரிமை கேட்டபோது, வேறு யாருக்கோ எதற்கு தமிழில் எழுத உரிமை தர வேண்டும்? தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வேறு ஒரு மொழிபெயர்ப்பாளரை வைத்து எழுவதை விட வேறு ஏதாவது கேவலம் இருக்க முடியுமா? அதுவும் பாரதியின் பக்தனாக இருந்துகொண்டு?

    அதனால் நானே ‘கட்டுத்தறி’ என்கிற புனைபெயரில் தமிழில் எழுதி வெளிவந்த அந்தப் புத்தகம் 1000 பிரதிகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது.

    “அறிமுக எழுத்தாளர் ஒருவருக்கு 1000 பிரதிகள் விற்பது என்பது பெரிய விஷயம், தொடர்ந்து எழுதுங்கள் தோழரே!” என்று என்னை வெகுவாய் ஊக்கப்படுத்தினார் ‘ஊற்று’ பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

    ஆங்கிலத்தில் முதலில் எழுதத் தொடங்கிய எனக்கு இது ஒரு இன்ப அதிர்ச்சி; நான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத ஒன்று. ஆங்கிலத்தில் ஒரு நாவல் எழுதி, அது பெஸ்டு செல்லர் ஆகியிருந்தாலும், எனக்கென்னவோ தமிழில் எழுதுவதுதான் மனதிற்கு இனிமை தந்தது.

    அடுத்த சில மாதங்களிலேயே ”கட்டுத்தறியின் பகடையாட்டம்” என்கிற எனது முதல் சிறுகதை தொகுப்பை ஊற்று பதிப்பகம் வெளியிட்டது. அதுவும் 1400 பிரதிகள் விற்றுப் புதிய சாதனைப் படைத்தது. 1400 பிரதிகள் விற்பதெல்லாம் ஒரு சாதனையா என்று கேட்காதீர்கள். மூன்று லட்சத்து இருபதாயிரம் பேர் வாழும் ஐஸ்லாந்து நாட்டில் கூட அந்த மொழியில் எழுதப்படும் புத்தகம் மூவாயிரத்திற்கும் மேல் விற்பனையாகும். ஆனால் உலகம் முழுவதும் சுமார் எட்டு கோடி பேர் பேசுகிற தமிழுக்கு இதுதான் நிலைமை. நம்மை விட சிறிய மாநிலமான கேரளாவில் கூட லட்சக்கணக்கில் புத்தகங்கள் விற்பனையாகின்றனவாம். ஆனால் தமிழில் இரண்டாயிரம், மூணாயிரமே ஒரு மாபெரும் சாதனையாக இருக்கிறது.

    என் எழுத்தை புத்தகங்களுக்குள் மட்டும் அடைத்து வைக்காமல், உலகம் முழுதும் உள்ள வாசகர்களுக்கு எடுத்துச் செல்லவும், அவர்களோடு தொடர்பிலிருக்கவும் எனக்கென்று ஒரு வலைதளத்தைத் தொடங்கி தொடர்ந்து எழுதி வந்தேன். ஒரு வருடத்திலேயே லட்சத்திற்கும் மேற்பட்ட  பார்வைகள் – அதிசயமாக இருந்தது. இத்தனை பேரும் ஏன் புத்தகங்களை வாங்க மாட்டேன் என்கிறார்கள்? இலவச தொலைகாட்சி, இலவச கிரைண்டர் என்பது போல் ‘இலவசமாய் இலக்கியம்’!

    திருட்டு வி.சி.டி. வந்து பிழைப்பை கெடுத்துவிட்டது என்று காட்டுக் கத்து கத்துகிறார்களே இந்த திரைப்பட உலகினர், பாவம், எழுத்தாளர்கள் எங்கே சென்று முறையிடுவார்கள்? புத்தகம் வெளியான சில நாட்களிலேயே பி.டி.எஃப் வந்துவிடுகிறது. இதில் வேறு சில ஆசாமிகள், அவர்களே எழுதியது போல பெருமையாகத் தங்கள் வலைப்பதிவில் பதிவு செய்து ஹிட்டுகளை அள்ளுகிறார்கள். நான்கு சுவருக்குள் அமர்ந்துகொண்டு தனக்குள் வேறொரு உலகத்தையே உருவாக்கி, தனக்கு வேண்டிய பாத்திரங்களை சிரிஷ்டித்து அவற்றுக்கு உயிர்கொடுத்து கதைக்குள்ளே உலாவவிட்டு தானும் ரசித்து, தன் வாசகர்களையும் மகிழ வைக்கும்  ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு சோதனை பாருங்கள்.

    சரி அதெல்லாம் நமக்கெதற்கு? என் புராணத்துக்கு வருவோம்.

    கடைசியில் என்னை ‘தெனாலி’ இதழிலேயே பத்தி எழுத அழைத்து விட்டார்கள். இதே தெனாலி குழுமத்தின் ஆங்கில வார இதழுக்கு எத்தனை முறை என் ஆங்கிலச் சிறுகதைகளை அனுப்பி இருப்பேன். ஒருமுறையாவது பிரசுரித்தார்களா? பிரசுரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அது அவர்கள் கொள்கை, விருப்பம் மற்றும் வியாபாரம் சார்ந்த விஷயம் அல்லது எனது படைப்பின் தரம் சார்ந்த விஷயம். ஆனால், ‘நன்றி. பரிசீலிக்கிறோம்.’ என்று ஒரு பதில் கடிதம் கூட அனுப்பியது கிடையாது. இப்போது ‘பத்தி’ எழுத அழைக்கிறார்கள் – எல்லாம் வியாபார உத்தி என்று நினைத்துக் கொண்டேன்.

    ஓரிரு தொலைகாட்சிச் சானல்களில் விவாத மேடைகளில் பேசவும் அழைத்தார்கள்.

    இப்படி பல திறக்குகளில் நான் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்ததால், வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏற்கனவே கூறியது போல், ஐ.டி என் பேஷனும் இல்லை. அதனால்தான் அந்த வேலையை தூக்கியெறிந்துவிட்டு, எழுத்தில் முழுமையாக கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

    நாவல்கள், வெகுஜன மற்றும் இணைய இதழ்களில் சிறுகதைகள், பத்திகள், அவ்வப்போது தொலைக்கட்சியில் விவாத மேடைகள் என்று விறுவிறுவென்று ஓடிக்கொண்டிருந்தது என்னுடைய வாழ்க்கை.

    முழு நேர எழுத்துப்பணியில் இருந்தாலும் சக எழுத்தாளர்களைப் பற்றியோ அவர்களின் புத்தகங்கள் பற்றியோ எனக்கு அவ்வளவாகத் தெரியாது. தமிழில் இலக்கியம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக படிக்காததும் அதற்கு ஒரு காரணம். இந்த ஒரு வருடமாகத்தான் நிறைய தமிழ் எழுத்தாளர்களின் புத்தகங்களை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மேலும் சில நல்ல இளம் எழுத்தாளர்கள் என் கட்டுரைகளுக்கு எழுதிய விமர்சனங்கள் மூலமாகப் பழக்கமானார்கள். சில வாசகர்கள் எனக்கு எழுதிய கடிதங்களிலேயே அவர்களின் எழுத்து திறமையைக் கண்டு வியந்து அவர்களை நிறைய எழுதுமாறு ஊக்குவித்தேன்.

    இன்னும் சில மூத்த எழுத்தாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ளும் நாளும் வந்தது.

    மூத்த எழுத்தாளர் ‘கதைராவணன்’ அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருமாறு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார் பதிப்பக ஆசிரியர் பொன்.கலையரசன்.

    “கதைராவணன். பெயருக்கேற்றார் போலவே அவருக்குப் பத்து தலைகள் தான். அவரது ஒவ்வொரு புத்தகத்தை படித்த போதும் ஒரு பத்து தேர்ந்த எழுத்தாளர்கள் சேர்ந்து எழுதியது போல உணர்ந்தேன். அவரது ஒரு புத்தகத்தை படித்தாலே பத்து புத்தகத்தை படித்ததற்குச் சமம். அதனால் தான்…” என்று விழாமேடையில் ஒரே புகழ்மழை பொழிந்து கொண்டிருந்தார் திரைப்படக் கவிஞர் ‘கற்பனையருவி’.

    அங்குதான் முதன்முதலாக எழுத்தாளர் ‘சித்தப்பா’ அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. எனக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து, அவருக்கும் அந்த விழாவுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் எதையோ படித்துக் கொண்டிருந்தார்.

    எதோ நினைத்தவர் திடீரென என் பக்கம் திரும்பி, ” உங்க பேரு?” என்றார்.

    “கட்டுத்தறி, ஐயா”

    “சோ, கவியெல்லாம் பாடுவீங்களோ?”

    “இல்லைங்க ஐயா. கவிதை எழுதினது கிடையாது. என்னோட நிஜப் பேரு கார்த்திகேயன். எங்கப்பா ரொம்ப நல்லா வெண்பா எல்லாம் எழுதுவார். மரபுக்கவிதைல அவருக்கு ரொம்ப ஈடுபாடு. அவரோட பேர் கம்பன். அதனால கட்டுத்தறினு புனைபெயர் வெச்சுக்கிட்டேன்.”

    ” மரபுக்கவிதையா? உங்கப்பா எந்த காலத்துல இருக்கார்?” என்று அவர் கேட்ட விதமும், அந்த கேலிப் பார்வையும் என்னை ‘சுருக்’ என்று ஊசியால் குத்தியது போல இருந்தது.

    அவர் தொடர்ந்தார்.

    “சரி எவ்வளவு புத்தகம் எழுதியிருக்கீங்க?”

    இவருக்கு என்னைத் தெரியுமா? இல்லை தெரியாதது போல நடிக்கிறாரா? என்று எனக்குப் பெரிய சந்தேகமே வந்துவிட்டது.

    நான் சிறிது நேரம் மௌனித்து இருந்ததை அவருக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்தார்.

    “சாரி. தமிழ்ல இப்பல்லாம் நிறைய குப்பைங்க வர ஆரம்பிச்சிடிச்சி. அதனால நான் அவ்வளவா படிக்கறதில்ல.”

    எனக்கு அங்கிருந்து எழுந்து வெளியே சென்று விடலாமா என்று தோன்றியது. இப்படியெல்லாம் கூட பேச முடியுமா? அதுவும் ஒரு மூத்த எழுத்தாளரால் என்று நொந்து கொண்டிருந்தேன்.

    “என்னென்ன புத்தகமெல்லாம் படிப்பீங்க?”

    அத்தனை மனப்போராட்டங்களுக்கு இடையிலும் பொறுமையாக, மரியாதையாக பதில் சொன்னேன்.

    “இல்லைங்கையா. தமிழில நிறைய புத்தகங்கள் படிச்சதில்ல. சங்க இலக்கியங்கள், பாரதியார், சுஜாதா – இவங்களெல்லாம் நெறைய படிச்சிருக்கேன். ஜெயமோகன், எஸ்ரா புத்தகமெல்லாம் படிச்சிட்டு இருக்கேன். இப்போ கூட ரீசன்டா என் பிரண்டு சொன்னானேன்னு அ.முத்துலிங்கம் படிச்சிட்டு இருக்கேன்”.

    “என்னய்யா தம்பி? மரபு கவிதைங்கற. சங்க இலக்கியம்கற. இந்த காலத்துக்கு வாங்க.”

    கவிஞர் கற்பனையருவி பலத்த கரவொலிகளுக்கும், சிரிப்பொலிகளுக்கும் இடையே மேடையில் இடிபோல் முழங்கிக் கொண்டிருக்க, அதை சற்றும் சாட்டை செய்யாமல் இங்கே சித்தப்பா என்னை உப்புமாவாக்கி முள்கரண்டியை வைத்துக் கிண்டிக் கொண்டிருந்தார்.

    “சர்ரியலிசம், எக்ஸ்சிஸ்டென்சலிசம் பத்தி எதாச்சும் படிச்சிருக்கீங்களா?”

    எப்படியும் அவர் என்னுடைய பதிலை எதிப்பார்க்கிறவர் போல் தெரியவில்லை. அதனால் பதில் சொல்லாமல் அவரது கேள்விகளுக்கு ‘இல்லை’ என்பது போல் அமைதியாய் தலையாட்டிக் கொண்டிருந்தேன்.

    “சார்த்தர், மார்ட்டின் ஹைடேக்கர், ஆல்பர்ட் காம்யு இவங்கள படிச்சிருக்கீங்களா?”

    “…”

    “தாஸ்தாயேவ்ஸ்கி?”

    எனக்குத் தலை சுற்றி மயக்கம் வரும்போல் ஆகிவிட்டது. அடுத்தது மொசிவேனா கசுனி, பிக்கர்லோ பேத்திரி என்று ஏதாவது பெயரைக் கேட்பாரோ என்று நினைத்துக் கொண்டே நெளிந்தேன்.

    “என்னோட புத்தகம் எதாச்சும் படிச்சிருக்கீங்களா தம்பி?”

    “இல்லைங்கையா. ஆனா, உங்களோட ‘குறுக்கு புத்தி’ நாவல் பத்தி கேள்விப்பட்டு போன வாரம் தான் வாங்கினேன். இன்னும் படிக்கல. தப்பா எடுத்துக்காதீங்கைய்யா. நான் தமிழில எழுத வந்ததே ஒரு விபத்து தான்.”

    “ஓஹோ. அது சரி. பாத்து தம்பி. உங்க புத்தகத்த படிக்கிற வாசகர்களுக்கு அது ஒரு விபத்தா முடிஞ்சிடப் போகுது! ஹா ஹா ஹா!”

    ஒவ்வொரு சொல்லும் முள்! எனக்குக் கட்டுக்கடங்காத கோபம். சி.சு.செல்லப்பா போன்றவர்கள் வாழ்ந்த இலக்கிய உலகில் இதுபோன்ற சித்தப்பாக்கள். இதில் இவருக்கு P.S.வீரப்பா சிரிப்பு வேறு. பேசாம சித்தப்பா என்பதற்குப் பதிலாக வீரப்பா என்று பெயர் வைத்து இருக்கலாம் இந்த மனிதருக்கு என்று மனதில் வைது கொண்டே மேடையை நோட்டம் விட்டேன்.

    அங்கே ‘கவிஞர். பூங்காத்து’ புயலாய்ச் சீறிக்கொண்டிருந்தார், “வே.க.முஸ்தீப் அவர்களின் வெறியன் நான். வே.க.மு-விற்குப் பிறகு என்னை மிகவும் பாதித்த எழுத்து ஐயா கதைராவணன் அவர்களுடையது என்றால் அது மிகையாகாது. வே.க.மு-வைத் தெரியாதவன் மூடன். கதைராவணன் புத்தகங்களைப் படிக்காதவன் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்றவன்.”

    “அப்ப கண்டிப்பா நான் இலக்கியத்தைப் பற்றிப் பேசவே தகுதியற்ற ஒரு மூடன்” என்று எனக்குள் உறுதிப்படுத்திக்கொண்டே திரும்புகையில் சித்தப்பாவிடம் மீண்டும் மாட்டிக்கொண்டேன்.

    “கட்டுத்தறி, உங்க புத்தக லிஸ்ட கொடுங்க. ஒரு பார்வை பாக்கறேன். இப்பல்லாம் மதிப்புரை எழுதுனு சொல்லிப் பல குப்பைகள அனுப்பறான் கலை. பத்தோட பதினொன்னு.”

    பழுக்கக் காய்ச்சிய கம்பி அது.

    என் தொண்டைக்குள்ளே இரக்கமின்றி அதைச் சொருகிக்கொண்டிருந்தார் சித்தப்பா. எனக்கு வார்த்தைகளே எழவில்லை. என் கையிலிருந்த என்னுடைய “கட்டுத்தறியின் பகடையாட்டம்” புத்தகத்தை குனிந்தபடியே பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தேன். அமைதி முகத்தில் மட்டுமே. உள்ளுக்குள் புயலடித்துக் கொண்டிருந்தது – கவிஞர். பூங்காத்தின் பேச்சைப் போல.

    நல்ல வேளை, புயல் ஓய்ந்தது.

    “அடுத்ததாக எழுத்தாளர் சித்தப்பாவை பேச அழைக்கிறேன்.” என்று மேடையிலிருந்து கலையரசனின் குரல்.

    போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது எனக்கு. மேடையில் மைக்கை சோதித்து விட்டு பேச ஆரம்பித்தார் சித்தப்பா. அதுதான் சமயமென்று நான் இரண்டு வரிசைகள் முன்னே சென்று அமர்ந்து கொண்டேன்.

    “புத்தக விழாக்கள் என்றாலே எனக்கு இப்போதெல்லாம் தலைவலி வந்து விடுகிறது….” என்று பேசத் துவங்கினார் சித்தப்பா.

    இந்த மனிதர் அடங்க மாட்டார் போலிருக்கிறது என்று அலுத்துக் கொண்டே இடது புறம் திரும்பினால் அங்கே அமர்ந்திருந்த எழுத்தாளர் ‘செங்கை சிங்கன்’ தலையில் அடித்துக் கொண்டே பார்வையை என் மேல் விட்டார்.

    “உங்களை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே?” என்றார்.

    “அப்பாடா, கடைசியா என்னை எங்கோ பாத்த மாதிரியாவது இருக்கிறதே ஒரு எழுத்தாளருக்கு” என்று நினைத்து, அதையே ஒரு பெரிய அங்கீகாரமாக எடுத்துக்கொண்டு எனது கையிலிருந்த புத்தகத்தைக் கொடுத்தேன்.

    “ஆ..ஹான். இப்போ நியாபகம் வருது. இந்த புத்தக அட்டைல தான் உங்க முகத்த பாத்து இருக்கேன். ரெண்டு மூணு நண்பர்கள் உங்கள பத்திச் சொல்லி இருக்காங்க. கலை நெறைய பேசுவார்.” என்று கூறிவிட்டு புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார்.

    எனக்கு யாரோ அறைந்தது போலிருந்தது.

    அவர் விடுவதாயில்லை. “இது தான் என் வலைதளம், கட்டுத்தறி. என்னோட புத்தகங்களை ஆன்லைன்லயே வாங்கலாம். நான் ‘சாமந்தி’ இதழ்ல எழுதின என்னோட ‘பசித்தால் படி!” தொடர கூட புத்தகமா நெக்ஸ்ட் வீக் வெளியிடறாங்க. வந்தவுடனே முடிஞ்சா படிங்க. ஆமா, சித்தப்பாவோட புத்தகமெல்லாம் படிக்கறதுண்டா?” என்று கேட்டார்.

    “இல்லைங்கையா. இப்போ தான் அவரோட குறுக்கு புத்தி..”

    “என்னது?” என்று இடைமறித்த அவரது முகத்தில் ஆயிரம் கோடி சூரிய பிரகாசம்.

    “அவரோட ‘குறுக்கு புத்தி’ நாவல வாங்கி இருக்கேன்.”

    “என்ன தலைப்பு இது? தப்பித்  தவறி கூட இனிமேல் அவன் புத்தகத்த வாங்கிடாதீங்க. வேஸ்ட் ஆப் மனி. உங்க மனச குப்பை வண்டியாக்காதீங்க. அவனெல்லாம் இருபது வருஷமா என்னத்த, எதுக்கு எழுதறான்னே தெரியல. என்னாலெல்லாம் அவன எழுத்தாளனாவே ஏத்துக்க முடியாது. அவனச் சொல்லி பிரஜோஜனம் இல்லை. இந்த முட்டா ஜனங்கள சொல்லணும். ஒன்னு சொல்லட்டுமா, கட்டுத்தறி? இன்னைக்கு தேதில தமிழ்ல ரெண்டே ரைடர்ஸ் தான் இருக்காங்க. ஒன்னு கதைராவணன். இன்னொருத்தர ஊருக்கே தெரியும்.”

    இவரை ஊருக்கே தெரியுமாம். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. பூனைக்கு பயந்து புலியிடம் மாட்டிக் கொண்டது போலிருந்தது. இது புலி அல்ல; சிங்கம்.

    அப்படியே மெதுவாக செங்கை சிங்கனின் பார்வையின் பிடியிலிருந்து நழுவி மேடை பக்கம் திரும்பினால், அங்கே சித்தப்பா பொறுமையாக பேசிக்கொண்டிருந்தார், “இந்த புத்தகத்தை படிச்சிட்டு, கதைராவணன் இதை எதுக்கு எழுதினார்னு ரொம்ப நேரம் யோசிச்சு யோசிச்சு பார்த்தேன். எனக்கு இந்த நிமிஷம் வரைக்கும் புரியல. ஆனா ஒன்னு சொல்ல முடியும். இதுவரை அவர் எழுதின மோசமான புத்தக லிஸ்டுல இது சேராது. அதுக்காக சிறந்த புத்தகம்னும் சொல்ல மாட்டேன்.”

    எனக்கு நிஜமாகவே ஒரு டார்ட் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. தலை கனத்தது – மனமும் சேர்ந்து தான்.

    இன்னொரு எழுத்தாளர், கதைராவணன் புத்தகத்தைத் தவிர மற்ற எதையெல்லாமோ பேசிவிட்டுச் சென்று விட்டார். அந்தப் புத்தகத்தைப் பாராட்ட அவருக்கு ஏனோ வாயெழவில்லை. நெஞ்சு திறந்தால் ‘தானே’ வாய் திறக்கும்.

    அந்த விழாவிலேயே என்னை மிகவும் ஈர்த்தது மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு மட்டுமே.

    விழா முடிந்தவுடன் புத்தக விற்பனை ஆரம்பித்தது. கதைராவணன் புத்தகங்களோடு சேர்த்து, ஊற்று பதிப்பகத்தின் அத்தனைப் புத்தகங்களையும் அடுக்கி வைத்திருந்தார் பொன்.கலையரசன். என்னுடைய புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தாலும் என்னால் அதற்கு மேல் அங்கு நிற்கப் பிடிக்கவில்லை.

    ஒருவரோடு மற்றொருவர் சிரித்துப் பேசுவதையே அங்கு பார்க்க முடியவில்லை. எல்லோருடைய முகங்களும் ஒருவித இறுக்கத்துடன் காணப்பட்டன. சில பேரின் முகங்கள் தீவிர மலச்சிக்கலால் அவதிப்படுகிறவர்களின் முகத்தைப் போன்று காணப்பட்டது. அவரவர்களுக்கு ஒரு வாசகக் கூட்டத்தைக் கூட்டி கருத்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    ஒரு புத்தகத்தின் அட்டையில் புன்னகைத்துக் கொண்டிருந்த சுஜாதாவை வெறித்துப் பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தபோது, ஆசிரியர் பொன்.கலையரசன் மூத்த எழுத்தாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை அழைத்து வந்து எனக்கு அறிமுகப்படுத்தினார்.

    “நீங்க நன்னா எழுதரேளாமே. சின்ன வயசுக்காரரா இருக்கேள். குட். போன வாரம் தான் உங்க புத்தகமெல்லாம் கொடுன்னு கலைகிட்ட கேட்டேன். இதோ கொடுத்திருக்கார். படிச்சிட்டு சொல்றேன். வரட்டுமா? வாழ்த்துகள்!” என்று பாராட்டி கைகுலுக்கிவிட்டுக் கிளம்பினார். பேசியது மூன்று வரியானாலும் அவரது முத்தான வார்த்தைகள் மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பேச்சில் வன்மம் மிகுந்த கேலி இல்லை, கிண்டல் இல்லை, தாக்குதல்கள் இல்லை. அன்பு தெரிந்தது; நாகரிகம் தெரிந்தது; அதனால் மரியாதை வந்தது.

    அன்று இரவு முழுக்க எனக்குத் தூக்கமே வரவில்லை.

    முதன் முறையாக நான் வேலைபார்த்த ஐ.டி நிறுவனங்களெல்லாம் சொர்க்கபுரிகளாய்த் தெரிந்தன. சக பணியாளனுக்கு விருது கிடைக்கும் போது பாராட்டுவது; தனிமனிதனை விட குழுவுக்கு மிகுந்த மதிப்பளிப்பது; இது எல்லாவற்றிற்கும் மேலாக சக மனிதனின் உணர்வுகளுக்கு மரியாதை அளிப்பது போன்ற பழைய வாழ்க்கையின் நினைவுகள் ஒவ்வொன்றாக தோன்றி மறைந்து என்னைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருந்தன. கண்டிப்பான வாடிக்கையாளர்கள் கூட மென்பொருளில் குறையிருந்தால், விளக்கி மின்னஞ்சல் அனுப்புவார்கள்; திருத்தி அனுப்புவோம். ஆனால் குப்பை என்று யாரும் கூறியதில்லையே?

    உண்மை விளம்பிகள் என்றால் எதை வேண்டுமானாலும் பொதுச்சபையில்  பேசலாமா? கருத்துச் சுதந்திரத்திற்கு எல்லையே கிடையாதா? பிறகு எதற்கு சிக்மண்டு ப்ராயிடு இட், ஈகோ, சூப்பர் ஈகோ பற்றி பேசவேண்டும். மனிதனின் மனம் எவால்வ் ஆக வேண்டாமா?

    பிடிக்காததை பிடிக்கவில்லை என்று கூறலாம்; மனதுக்கு ஒவ்வாததாக இருக்கிறது எனலாம்; எனக்குச் சரியாகப் படவில்லை என்றும், அது ஏன் என்றும் ‘விளக்கமாக’ கூறலாம்; இன்னும் சற்று நன்றாக வந்திருக்கலாம் என்கிற ஆதங்கம் மேலெழுகிறது எனலாம்; இது அவருடைய மாஸ்டர் பீஸ் இல்லை எனலாம். ஆனால், அது என்ன குப்பை என்கிற வார்த்தை? அப்படி உரைக்க ஒன்றும் இல்லையென்றால் எதையும் சொல்லாமல் அமைதி காக்க வேண்டியதுதானே? கதைகளிலும், கட்டுரைகளிலும் மட்டும் கருத்து கூறிவிட்டு, அதற்குப் புறம்பாக வெளியில் நடந்துகொள்வது இலக்கியவாதிகளுக்கு அழகா?

    வாசகர்கள் புத்தகங்களை மட்டும் பார்ப்பதில்லை. சொல்பவன் யாரெனவும் காண்கிறார்கள். கட்டுரையில் சொல்லப்படுவது ஒன்றாகவும், அதைப் படைத்தவன் செயல் ஒன்றாகவும் இருக்கும் போது அந்தப் படைப்பு ஜீவன் இழந்து விடுமல்லவா?.

    இப்படி ஏதேதோ கேள்விகள் எனக்குள்ளே அடுத்தடுத்து எழுந்து விழுந்து கொண்டிருந்தது. கேள்விகளுக்கு இடையே பாலாவின் முகமும் அவ்வப்போது எட்டி எட்டி பார்த்தது.

    சூரியனும் எட்டிப் பார்த்துவிட்டது.

    அன்று காலை பாலாவிற்கு ஒரு மின்மடல் வரையலாம் என்று முடிவுசெய்து விட்டு, எப்படி ஆரம்பிக்கலாம் என்ன எழுதலாம் என்று கண்களை மூடி நெற்றியை என் கைவிரல்களால் அழுத்தித் தேய்த்தவாறே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

    பாலா ஆறு மாதங்களுக்கு முன்னால்தான் சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்கி இருந்தார். அவரது நிறுவனத்தில் சேர விழைவதாய் கடிதம் எழுதி சரிபார்த்து விட்டு அனுப்புவதற்கு செண்ட் பட்டனை அழுத்தச் சென்றபோது என் நுண்ணறி பேசி அழைத்தது. தெரியாத எண்ணாக இருந்ததால் யாராக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

    “ஹலோ.”

    “ஹலோ நான் எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தி பேசறேன் கண்ணா.”

    “வாட் எ சர்ப்ரைஸ்? வணக்கம் ஐயா!”

    “என்னமா எழுதியிருக்கேள். நல்ல நடை. எழுத்தில ஒரு தனித்துவம் இருக்கு. அதிலும் அந்த முதல் கதை பகடையாட்டம். அசந்தே போயிட்டேன். காகிதக்குருவி கதையை முடிச்ச விதம் ரொம்ப டிபரண்ட். இது தான் மொத புத்தகம்னா யாரும் நம்பவே மாட்டா. அருமை. உங்க ரெண்டு புத்தகம் படிச்சிட்டு காலம்பர நாலு மணிக்கு தான் படுக்க போனேன். அத்தன ஈர்ப்பு அந்த எழுத்தில.”

    என்னால் நம்பவே முடியவில்லை. என்ன மாதிரி ஒரு லெஜண்டு அவர். அவரா இப்படி என்னைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறார்?

    “ரொம்ப நன்றி ஐயா. எனக்கு நோபல் பரிசே கெடைச்ச மாதிரி இருக்கு.”

    “அத விட முக்கியமான விஷயத்த சொல்லனும்னு இப்ப தோன்றது. நேக்கு எழுபத்தி அஞ்சு வயசாயிடுத்து. இன்னும் எத்தன நாளுக்கு இருப்பேன்னு நேக்கு தெரியாது. இருபத்தி அஞ்சு வயசில எழுத ஆரம்பிச்சேன். நெறைய விமர்சனங்கள். ஆனா அந்த காலத்துல எல்லாம் ‘விமர்சனமே இலக்கியம்’ மாதிரி இருக்கும். கதை கூட எழுதிடலாம், அந்த மாதிரி விமர்சனம் எழுத முடியாது. அவ்ளோ தரம் இருக்கும். கத்துக்கறதுக்கு அவ்வளோ விஷயங்கள விமர்சகர்கள் நம்ம முன்னால வந்து கொட்டுவா. ஆனா, நேத்து பன்க்ஷன்ல பாத்தேளா ஒவ்வொருத்தரும் எப்படி பேசினா? இப்பல்லாம் ‘குப்பை’ என்கிற ஒரு வார்த்தைல விமர்சனத்தையே முடிச்சிடறா. இது அவாளோட இயலாமைய காட்றது. இவாள்டல்லாம் சரக்கு இல்லையோனு கூட தோன்றது.”

    எனக்கு என்னவோ நேற்று நான் நினைத்ததையெல்லாம் அவர் டெலிபதி மூலம் கேட்டுவிட்டு பதில் சொல்வது போலவே இருந்தது. அல்லது நான் சிந்தித்துக் கொண்டிருந்த நேரமும், அவர் என் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த நேரமும் ஒன்றாக இருந்ததாலா? இதுதான் எழுத்தாளனையும், வாசகனையும் இணைக்கும் இழையா?

    நான் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்க, அவர் பேசிக்கொண்டே போனார்.

    “தமிழில என்ன வேற வார்த்தையா இல்ல? இல்ல, இவாளுக்கெல்லாம் பதப்பஞ்சம் வந்திடுத்தா? குப்பைனு ஒரு பாமரன் சொல்லலாம். ஒரு எழுத்தாளன் எப்படிச் சொல்லலாம்? அப்புறம் நமக்கு சொல்லாட்சி பத்தி பேச என்ன தகுதி இருக்கு? எழுத வரவாளையெல்லாம் இப்படி குப்பைனு தொரத்திட்டு, தமிழ் சாகுதேனு ஒப்பாரி வெக்கறதுல என்ன பிரயோஜனம். எல்லாத்துக்கும் மேல, எழுத்தாளனுக்கு பக்குவமும் பொறுப்பும் வேண்டாமோ?” என்று அவர் கேட்டவை எல்லாமே என் மனம் என்னிடம் கேட்ட கேள்விகள்.

    “இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா, யாராச்சும் விமர்சனம் பண்ணா கன்ஸ்ட்ரக்டிவா எடுத்துக்கோங்கோ. துச்சமா பாத்தாள்னா கண்டுக்காதேள். நீங்களும் யாரையும் துச்சமா பாக்காதேள். எல்லா படைப்புக்குப் பின்னாடியும் உழைப்பு இருக்கு. அத குப்பைனு சொல்ல நாம யாரு? இன்னும் சொல்லபோனா குப்பை பொறுக்கறது கூட ஒரு பூஜை மாதிரி தான். அதுவும் ஒரு தவம். செய்யும் தொழிலே தெய்வம்னா, எல்லா படைப்புமே அந்த தெய்வத்தோட சிருஷ்டி தானே? இவாள்லாம் ஒரு வகையான ரேசிஸ்ட்டுன்னு நேக்குத் தோன்றது. உயர்ந்த ஜாதி – தாழ்ந்த ஜாதி மாதிரி, உயர்ந்த இலக்கியம் – தாழ்ந்த இலக்கியம். எல்லாம் இலக்கியமும் ஒன்னுதான். முழுமையானது தான். ஆழ்வார் ‘அவரவர் இறையவர் குறைவிலர்’னு இறைவன பத்தி சொன்னது இதுக்கும் பொருந்தும். இதுல குப்பைனு சொல்றவாளோட மனசு  தான் மொதல்ல குப்பை புரியுதோ? அடிக்கடி நாம சந்திக்கணும். பேசணும். எழுதிண்டே இருங்கோ. நிறுத்தாதேள். வாழ்த்துகள்!!” என்று கூறிவிட்டு அவர் போனை அணைத்த அடுத்த நிமிடமே, நான் பாலாவுக்கு எழுதியிருந்த மின்மடலை குப்பைக்குத் (TRASH) தள்ளினேன்.

    அதே வேகத்தில் ‘இன்று புதிதாய்ப் பிறந்த’ உற்சாகத்தோடு எனது அடுத்த கதையை எழுதத் தொடங்கினேன் – ” குப்பை” என்கிற தலைப்பில்.

    Share
  • அறுமுகநூறு (11)

     

    -சச்சிதானந்தம்

    விமலன் பூத்த நெற்றிக் கண்ணால்,

    கமலம் பூத்த கந்தன் கண்கள்,

    அமிலம் போன்று வாழ்வை அறுக்கும்,

    அல்லல் நீக்கும் அறிவொளி ஆகும்!                                                                                51

     

    முற்றாத அழகும் முழுநிலவு முகமுங்கொண்டவனே,

    வற்றாத அறிவுக் கடலே நின்,

    பொற்பாதம் தொட்டு வணங்கிடு மிவ்வேழைக்குள்,

    உற்றாட உன்னை அழைக்கிறேன் வந்திடடா!                                                                52

     

    சந்தனமும் சரவணனும் சந்தங்களில் வந்தாட,

    சிந்தனையில் சிறுதவறும் இல்லாமல் கொண்டாட,

    தந்தனத்தோம் என்றுசொல்லித் தாமாகக் காலாட,

    கந்தனுற்றோம் என்றுசொல்லி மனமாடிக் கொண்டாடும்!                                             53

     

    திரி கொண்ட தீபக் கார்த்திகையில்,

    எரி கொண்ட கண்ணில் உதித்தவனை,

    அரி கண்ட அழகு மருமகனின்செவ்,

    வரி கொண்ட அடியை வணங்கிடுவோம்!                                                                        54

     

     

    மலையைச் சுற்றி நடந்திடுவோம், வண்ண

    மயிலைப் பற்றிப் பாடிடுவோம், உள்

    மனதைச் சுற்றும் முருகன் நினைவால்,

    மடைமை நீங்கி வாழ்ந்திடு வோம்!                                                                                  55

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…. (54)

    சக்தி சக்திதாசன்                                                                                                                                                                                                                                                                                                                                                                                            

    அன்பினியவர்களே !

     இனிய என் புதுவருட வாழ்த்துக்களுடன் இம்மடலில் உங்களைச் சந்தீஈஈஈஈப்பதில் மகிழ்வடைகிறேன்.

     சென்ற புதன்கிழமை மறைந்த முன்னால் பிரதமர் திருமதி மார்கிரெட் தாச்சர் அவர்களின் இறுதிச் சடங்குகள் தேசிய அளவிலான பரிமாணங்களுடன் நடைபெற்றது. இதற்குரிய செலவு ஏறக்குறைய 10 மில்லியன் ஸ்ரெலிங் பவுண்ஸ் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

     இன்றைய பொருளாதாரச் சிக்கல் நிறைந்த சூழலிலே இத்தகியத்ப்ப்ர் செலவுடன் கூடிய முன்னால் பிரதமருக்கான இறுதி நிகழ்வு மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்பட வேண்டுமா ? எனும் கேள்வி நாட்டின் பல பாகத்தில் இருந்து எழுந்தாலும்,இந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் , தொடர்ந்து அதிகாலம் பிரதமராக வீற்றிருந்து ஒரு சாதனையைப் படைத்தவர் ரெனும் வகையில் இவருக்காக இது செய்யப்படலாம் எனும் வாதம் ஜெயித்து விட்டது என்பதே உண்மையாகிறது.

     இது ஒருபுறமிருக்க பிரித்தானியப் பிரதமர் திரு டேவிட் கமரன் அவர்கள் ஒரு புதுச் சர்ச்சையைக் கிளப்பி விட்டிருக்கிறார்.

     அது என்ன என்று பார்ப்போமா?

     திருமதி தாச்சரின் பதவிக்காலம் இங்கிலாந்தை ஆக்கப்பாதையிலா அன்றி அழிவுப் பாதையிலா இட்டுச் சென்றிருக்க்க்கிறது எனும் வாதத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில் ” இன்று இங்கிலாந்தில் நாமனைவருமே “தாச்சரியவாதிகள் (Thatcherites)” “என்றொரு வாதத்தை முன்வைத்து அதைச் சுற்றி ஓர் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

     அதுசரி “தாச்சரியவாதிகள் அன்றி Thatcherites “ என்றால் என்ன ? “ தாச்சரிசம்” என்றொரு “இசம்” உண்டா ? எனும் கேள்விகள் மனதினுள்ளே பூதாகரமாக விளைகிறது.

     திருமதி தாச்சர் 1979ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற போது இங்கிலாந்தின் அரசியல் ஒரு சங்கடமான நிலையிலிருந்தது என்பது உண்மையே !

     தொழிற்சங்கங்களின் அனுசரணையுடன் கூடிய “லேபர்” கட்சியின் அரசாங்கம் “தொழிலாளர் சங்கங்களின் ” அழுங்குப் பிடியினுள் சிக்கிக் கொண்டிருந்தது.

     இங்கிலாந்தின் ஆலைகள் தொழிலாளர்களுக்கான கூலிகளை தொழிற்சங்கங்களின் ஆணப்படி உயர்த்த வேண்டி வந்ததினால் இங்கிலாந்தின் உற்பத்திப் பொருட்களின் விலை மிகவும் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருந்தது.

     அது மட்டுமின்றி தொழிற்சங்கங்களின் கெடுபிடி அதிகரித்து இருந்ததினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்வதற்கு தயங்கினார்கள்.

     இதன் விளைவாக இங்கிலாந்தில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. ஜரோப்பிய நாடுகளில் இங்கிலாந்தே மிகவும் பின் த்ங்கிய ஒரு நிலையை அடையும் அபாயம் ஏற்பட்டிருந்தது.

     இத்தகைய சஞ்சலங்களுக்காட்பட்டிருந்த மக்களின் முன்னே திருமதி தாச்சரின் தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட கன்சர்வேடிவ் கட்ச்சி முன்வைத்த கொள்கைகள் குறிப்பாக தொழிற்சங்கங்களின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் வகையிலான கொள்கைகள் மக்களைக் கவர்ந்தன.

     அதுமட்டுமின்றி தேசிய நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்தும் திட்டங்களை மிகவும் துரிதமாக நடைமுறைப்படுத்தினார் திருமதி தாச்சர்.

     தொழிற்சங்கங்களின் அதீத செல்வாக்கினால் விரக்தியடைந்திருந்த பொதுமக்கள் இவரது கொள்கைகளின் அமுலாக்கலினால் செல்வாக்கிழக்கும் தொழிற்சங்கங்களின் நிலையை வரவேற்றார்கள்.

     தொடர்ந்து பல தேசிய நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டன. பல நிறுவனங்கள் பங்குச் சந்தையில் புகுத்தப்பட்டு அந்நிறுவனங்களின் ஊழியர்கள் சீஇரிய அளவிலான பங்குகளை வாங்கி பங்குதாரர்களாக்கப்பட்டார்கள்.

     அதுவரை சாதாரண தொழிலாளர்கள் எனும் நிலையிலிருந்தவர்கள் தாம் பணிபுரியும் நிறுவனத்தில் தாம் பங்குதாரர்கள் எனும் ஓர் மாயையினால் முதாளித்துவ மனப்பான்மையை இலகுவாக ஏற்றுக்கொண்டார்கள்.

     அரசாங்கத்தின் உடமையாகவிருந்த பல வீடுகள் அவ்வீட்டில் வாடகைதாரர்களாக மலிவுவிலையில் குடியிருந்தவர்களுக்கே குறைந்த விலையில் விற்கப்பட்டது.

     அதன் மூலம் திருமதி தாச்சர் , சொந்தமாக வீடு வாங்கவே முடியாது என்ற நிலையிலிருந்த பலரை வீட்டின் சொந்தக்காரர்கள் எனும் நிலைக்கு உயர்த்தினார்.

     இது வெளிப்பார்வைக்கு ஒரு அருமையான திட்டம் போலக் காட்சியளித்தாலும் கன்சர்வேடிவ் கட்ச்சியின் முதாளித்துவ கொள்கைக்கான சில அடிப்படைத் தகமைகளை உள்ளடக்கியிருந்தது.

     அரசாங்கத்தின் உதவியுடன் அர்சாங்க மனைகளில் குறைந்த வாடகைக்கு வசித்தவர்கள் அவ்வீட்டின் சொந்தக்காரர்கள் ஆனதும் அவர்களைப் பராமரிக்கும் பளு அரசாங்கத்திற்கு குறைந்தது, அத்துடன் நாம் ஏதுமற்ற ஏழைகள் என்று எண்ணியிருந்தவர்கள் இப்போ தாம் ஒரு மனையின் சொந்தக்காரர்கள் என்று எண்ணி தம்மையும் முதலாளித்துவ கூட்டத்துடன் இணைத்துக் கொண்டார்கள்.

     இதனால் சமூகத்தினிடையே ஒரு விதமான புது மனப்பான்மை குடி கொள்ளத் தொடங்கியது. நாம், நமக்கு எனும் நிலை தொய்ந்து நான், எனக்கு எனும் நிலை கோலோச்சத் தொடங்கியது.

     இத்தகைய ஒரு மனப்பான்மை வளரத் தொடங்கிய மக்களிடையே இடதுசாரக் கொள்கைகளைப் பேசிய லேபர் கட்சி எவ்வகையிலும் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள முடியவில்லை.

     அதன் விளைவாக லேபர் கட்சி மீண்டும் அரசு கட்டில் ஏறுவதனால் தமது கொள்கைகளை இடதுசார வாதத்திலின்றும் சிறிது நகர்த்தி வலதுசார எல்லைக்குள் புகுத்த வேண்டியதாகியது. இதன் அதிஉச்ச கட்டமாகவே டோனி பிளேயர் அவர்களீஈன் கொள்கைகள் வலதுசாரத்தையே பிரதிபலித்தன.

     இத்தகைய பின்னனியில் பார்க்கும் போது பிரதமரின் க\ணிப்புச் சரியானதோ என்று எண்ணத் தோன்றும். ஆயினும் அனைவரும் தாச்சர் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளும் சமுதாயமாக இங்கிலாந்துச் சமுதாயத்தைக் கணிப்பது சரியானதாக இருக்காது.

     அனைவருமே திருமதி தாச்சர் அவர்களின் கொள்கைகளின் பாதிப்புக்களை எதிர்நோக்குபவர்களாஅக இருக்கிறார்கள் என்ற வாதம் உண்மையானது. ஆனால் அனைவரும் அவரது வழி நடப்பவர்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்க்கூடிதொன்றல்ல.

     இன்றைய காலகட்டம் வித்தியாசமானது. மிகவும் அவசர் கதியில் இலத்திரனியல் ஊடகங்களின் செயற்பாட்டுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்றைய சமுதாயத்தின் தேவைகள் பல அளவில் மாற்றங்களுக்குள்ளாகியிருக்கிறது.

     இம்மாற்றங்களை உள்வாங்கி கொள்லும் வகையில் அரசியலும் மாற்றமடைய வேண்டிய தேவைக்குள்ளாகிறது.

     இடது, வலது எனும் அன்றைய அரசியல், சோஷலிசம் , முதலாளித்துவம் என்ற இரு நிலைகளுக்குட்பட்டதுதான் இன்ரைய அரசியல் என்று கூறிவிடமுடியாது.

     இவை இரண்டையும் அனுசரிப்பதாக , இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு நிலையை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது.

     இன்றைய இளைய தலைமுறையின் அரசியலை நோக்கிய பார்வை முற்றிலும் வேறுபட்டது. வெறும் முரண்பாடு எனும் அரசியலுக்கப்பாற்பட்டு ஒருமை காணும் அரசியல் முன்னெடுக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.

     கடந்தகால அரசியலின் குழந்தைகள் நாம் என்று சொல்லிக் கொண்டிருப்பதை விடுத்து எதிர்காலத்தை நோக்கி ஒரு புது அரசியலை நகர்த்திச் செல்லும் குழந்தைகள் என்று செலாக்கம் காணும் தலைமுறையாக எமது தலைமுறையை உருமாற்ற அரசியல் தலைவர்கள் முனைவார்களா ? என்பதுவே எம்முன்னால் எழுந்து நிற்கும் கேள்வி

     மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    19.04.2013

    http://www.thamilpoonga.com

    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • உமையொருபாகன்

     

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

     

    சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுரத்தருகிலுள்ள

    அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் இங்கே கோட்டோவியமாக…

     

    ஒருபாதி ஆண்மைக்குரிய திண்மையும், உறுதியும், மறுபாதியில்

    பெண்மையின் மென்மையும், நளினமும்..

    உமையொருபாகனைச் சிலை செய்த சிற்பியின் கைவண்ணம்

    புலப்படும் வண்ணம், இருபாதிகளையும் வெவ்வேறு வண்ணப்

    பின்புலன்களில் கொடுத்தும் இணைத்துள்ளேன்…

     

    உமையொருபாகன்….

     

    ஈருடல் வேண்டோம் நாங்கள்

      என்றுமே ஒன்றாய் ஆனோம்

    ஓருடல் போதும் என்றே

       உமையொரு பாகன் ஆனாய்!

    நீருடன் நிலவைச் சூடி

       நீறணி  நீலகண்டா!

    சீருடைத் தில்லை மேவும்

      சிதம்பரா, நமச்சிவாயா!                      1

     

     

    சூரியன் ஒருகண் என்றால்

        சுடர்மதி மற்றோர் கண்ணாம்!

    வீரியத் தோளோர் பக்கம்

       விளங்குமென் தோளோர் பக்கம்,

    கூரிய மழுவோர் கையில்

       குளிர்மலர் இடமேற் கையில்

    நாரியோர் பாகம் வைத்த

      நாயகா,   நமச்சிவாயா!                                        2

     

     

    காலனை உதைத்த பாதம்

      காமனை எரித்த நேத்ரம்

    ஆலினால் கறுத்த கண்டம்

      ஆனைதோல்போர்த்தமேனி

    லீலைகள் போதாதென்றோ

       பிரமனின் சிரத்தைக் கொய்தாய்?

    சூலமும், மானும் தாங்கும்

        சுந்தரா, நமச்சிவாயா!                                       3

     

    பெண்டிரை வணங்கேன் என்று

       பெருமையே பேசிக் கொண்டு

    வண்டுருக் கொண்டு வந்தோன்

       வன்தவம்  நாணித் தாழ

    பெண்ணையோர் பங்காய் வைத்துப்

       பேரருள் காட்டி நின்றாய்

    கண்டியூர்த் தேவா, தேவி

       காதலா, நமச்சிவாயா!                                         4

           

    அமையுறு தோளி பாகா,

       அண்ணலுன் திருமுன் பெங்கள்   

    சுமையெலாம் இறக்கி வைத்தோம்.

      சுழன்றிடும் கோள்கள், மீன்கள்

    எமையினி  வருத்திடாமல்

        என்றுமே துணை இருப்பாய்!

    உமையோரு பாகம் வைத்த

        உருத்திரா, நமச்சிவாயா!                                     5

    Share
  • வசந்த நவராத்திரி நாயகி

    -சத்திய மணி

     

    ஒன்றாக இருக்கின்ற தாயானவள்

    இரண்டாக இணைகின்ற உறவானவள்

    மூன்றாக சுழல்கின்ற நிகழ்வானவள்

    நாலாக நவில்கின்ற மறையானவள்

    ஐந்தாக அருள்கின்ற வடிவானவள்

    ஆறாக சுவைக்கின்ற ருசியானவள்

    ஏழாக ரசிக்கின்ற நிறமானவள்

    எட்டாக படைக்கின்ற சித்தானவள்

    ஒன்பதாய் உண்டாக்கும் சுமையானவள்

    பத்தாகி வெற்றிக்கு பிறப்பானவள்

    இரவிலே ஒளிகாட்டும் விளக்கானவள்

    எல்லா மிடம்நிறைந்தப் பெண்தானிவள்.

     

    Share
  • பாரதியின் வேத முகம் – 8

     

    -சு.கோதண்டராமன்

    இப்போதே முக்தி

                    தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்ற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. இதையே தமிழில் அறம் பொருள் இன்பம் வீடு என்கிறோம். இவை ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் அடைய வேண்டியவை என்று கூறப்படுகின்றன.

    தரும நெறிப்படி நடக்க வேண்டும். பொருள் தேடி உண்ண வேண்டும். உலக இன்பங்களைச் சுவைக்க வேண்டும். பின் மோட்சம் அடைய வேண்டும். இந்த மோட்சம் என்ற சொல்லுக்கு விடுதலை, விடுபட்டு நிற்றல் என்று பொருள். இறந்தபின் அடைய வேண்டிய நிலை என்று தான் அனைவரும் இதற்குப் பொருள் கூறுகின்றனர்.

    ஆனால் மோட்சம் என்பது இறந்த பிறகு அடையப்பட வேண்டியது என்பது வேதத்தின் உண்மையான கருத்து அல்ல. வேதத்தின் உண்மையான கூற்றுப்படி நான்காவது புருஷார்த்தம் இறந்த பிறகு அடையும் சொர்க்கப் பதவி அல்ல, பயத்திலிருந்து விடுபடுவதையே அது குறிக்கிறது என்கிறார் விவேகானந்தர்.

    பாரதியாரின் பாடல் ஒவ்வொன்றிலும் இந்த வேதக் கருத்து ஆதார சுருதியாக ஒலிப்பதைக் கேட்கலாம்.

    மோட்சம் என்பது இறந்த பிறகு கிடைப்பது அல்ல என்பதை அவர் வாக்கிலேயே கேட்போம்.

    செத்த பிறகு சிவலோகம் வைகுந்தம்

    சேர்ந்திடலாமென்றே எண்ணியிருப்பார்

    பித்த மனிதர் அவர் சொலும் சாத்திரம்

    பேயுரையாமென்று இங்கு ஊதேடா சங்கம்

     

    இத்தரை மீதினில் இந்த நாளில்

    இப்போதே முத்தி சேர்ந்திட நாடிச்

    சுத்த அறிவு நிலையில் களிப்பவர்

    தூயவராம் என்று இங்கு ஊதேடா சங்கம்

    கவலைப்படுதலே கருநரகம்மா, கவலையற்றிருத்தலே முக்தி என்று அவரது விநாயகர் நான்மணிமாலை விளக்குகிறது.

    விடுதலை என்ற தலைப்பில் பாரதி நான்கு பாடல்கள் பாடியிருக்கிறார். நான்கில் எதுவும் அரசியல் சுதந்திரம் அடைவது பற்றியோ இறந்த பின் அடைவதாகச் சொல்லப்படும் சுவர்க்கம் பற்றியோ பேசவில்லை.

    பறையருக்கும் இங்கு தீயர் புலையருக்கும் விடுதலை என்ற பாட்டில் ஜாதி சமத்துவம், ஆண் பெண் சமத்துவம், ஏழை பணக்காரன் சமத்துவம், ஆண்டான் அடிமை என்ற வேறுபாடற்ற சமத்துவம் இவை தான் பேசப்படுகின்றன. சமத்துவமற்ற நிலையிலிருந்து விடுதலை பெறுவதே இதன் கருப்பொருள். எல்லாம் கடவுளின் ரூபங்கள் என்ற வேதக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பாரதி இந்த சமத்துவத்தை வலியுறுத்துகிறார். இது சமுதாய வாழ்வின் விடுதலை.

    மற்ற மூன்று பாடல்களிலும் பாரதி மனிதன் தன் சொந்த வாழ்வில் தானாக ஏற்படுத்திக்கொண்ட தளைகளிலிருந்து விடுதலை பெறுவதைக் கூறுகிறார்.

    உயிர்க் கூட்டங்களில் மனிதன் மட்டும் தான் உணவு தேடுவதை ஒரு சுமையான வேலையாகச் செய்து கொண்டவன். தாவரங்களோ பறவைகளோ மனிதன் அளவு அலட்டிக் கொள்வதில்லை. ஏனெனில் அவற்றின் உணவுத் தேவை சொற்பமானது. உணவு தேடுவதையும் உண்பதையும் சுமையான கடமையாகக் கருதாமல் அவை மகிழ்ச்சியாகச் செயல்படுகின்றன. மரங்களும் செடி கொடிகளும் எந்தத் தொழில் செய்து வாழ்வனவோ என்று கேட்கிறார் பாரதி.

    அவரது முக்தி இலக்கணம் சிட்டுக்குருவியினது போன்ற வாழ்க்கை தான். அது எப்படிப் பொழுது போக்குகிறது?

    முட்டை தருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி

                    முந்த உணவு கொடுத்து அன்பு செய்திங்கு

                    முற்றத்திலேயும் கழனி வெளியிலும்

                    முன் கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

                    மற்றப் பொழுது கதை சொல்லித் தூங்கிப் பின்

                    வைகறையாகு முன் பாடி விழிப்புற்று

                    விட்டு விடுதலையாகி நிற்பாய் இந்தச்

                    சிட்டுக்குருவி போலே

    சோம்பேறித்தனமாக ஒரு வேலையும் செய்யாமல் கதை பேசிப் பொழுது போக்குவது தான் முக்தி என்று பாரதி கருதுகிறாரா? அல்ல, அல்ல. அன்பு செய்து என்று ஒரு வார்த்தை போட்டிருக்கிறார் கவனியுங்கள்.

    விடுதலை என்று தலைப்பிட்ட மற்றொரு பாடலில் பாரதி கூறுகிறார்,

    ………………..பாடுபடல்வேண்டா               

                    ஊனுடலை வருத்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்

                    உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர்

    பாடுபடல் வேண்டா, ஊனுடலை வருத்தாதீர் என்று சொல்லும்போது சோம்பேறித்தனத்தைத் தான் அவர் விடுதலை என்று கூறுகிறாரோ என்று தோன்றுகிறது. அடுத்த வரியில் தொழில் அன்பு செய்தல் என்று கூறுவதைச் சற்று சிந்தித்தால் தான் உண்மையான பொருள் விளங்கும்.

    மீண்டும் விநாயகர் துதிக்குப் போவோம். அதில் கடமைகள் யாவை என்று பட்டியல் இடுகிறார். தன்னைக் கட்டுதல், பிறர் துயர் தீர்த்தல், பிறர் நலம் வேண்டுதல், இறைவனைப் போற்றுதல் இந்நான்கே பூமியில் எவர்க்கும் கடமை என்கிறார். பிறர் நலம் வேண்டுதல் என்பது மற்றவர்க்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தல் என்று பொருள். பிறர் துயர் தீர்த்தல் என்பது அதிலிருந்து வேறானது என்பது புலனாகின்றது. அங்கு அன்பு செய்தல் என்று கூறியதைத் தான் இங்கு பிறர் துயர் தீர்த்தல் என்கிறார். இது மனத்தாலோ வாய்ச் சொல்லாலோ செய்யப்படும் பிரார்த்தனை அல்ல. இது உடலால் உழைப்பதையே குறிக்கும். தனக்காக உழைக்காமல் பிறருக்காக உழைத்தால் அது ஊனுடலை வருத்தாது. அது பாடாக, சுமையாகத் தோன்றாது. எனவே தன் உணவுக்காக, தன் சுகத்துக்காக உழைக்கும்போது தான் கவலைகளும் பயங்களும் துயரங்களும் ஏமாற்றங்களும் தோன்றும். அவ்வாறின்றி பிறருக்காக உழைப்பது கவலையிலிருந்து விடுபட வழியாகிறது. அதுவே முக்தி என்பது பாரதியின் கருத்து.

    பாரான உடம்பினிலே மயிர்களைப் போல்

                    பலப்பலவாம் பூண்டு வரும் இயற்கையாலே

                    நேராக மானுடர் தாம் பிறரைக் கொல்ல

                    நினையாமல் வாழ்ந்திட்டால் உழுதல் வேண்டா

                    காரான நிலத்தைப் போய்த் திருத்த வேண்டா

                    கால்வாய்கள் பாய்ச்சுவதிற் கலகம் வேண்டா

                    சீரான மழை பெய்யும் தெய்வமுண்டு

                    சிவன் செத்தாலன்றி மண் மேல் செழுமையுண்டு

     

                    ஆதலால் மானிடர்கள் களவை விட்டால்

                    அனைவருக்கும் உழைப்பின்றி உணவுண்டாகும்

                    பேதமிட்டுக் கலகமிட்டு வேலி கட்டிப்

                    பின்னதற்குக் காவலென்று பேருமிட்டு

                    நீதியில்லாக் கள்வர் நெறியாயிற்றப்பா

                    நினைக்குங்கால் இது கொடிய நிகழ்ச்சியன்றோ

     

    தன்னைப் பற்றிக் கவலைப்படாமல் அன்பு செய்து கொண்டிருந்தால் உணவு இயற்கை கொடுக்கும் என்பதை மற்றொரு பாட்டிலும் தெளிவுபடுத்துகிறார்,

    நமக்குத் தொழில் கவிதை நாட்டுக் குழைத்தல்

                    இமைப்பொழுதும் சோராதிருத்தல் – உமைக்கினிய

                    மைந்தன் கணநாதன் நங்குடியை வாழ்விப்பான்

                    சிந்தையே இம்மூன்றும் செய்.

     

    இவ்வாறு ஊருக்கு உழைப்பதன் மூலம் தன்னைப் பற்றிய கவலையைத் துறந்து வாழும் வழியை அடைவது இவ்வுலகில் வாழும்போது தான் முடியும். அதைத் தான் பாரதி மண்ணுலகிலிருந்து வானகத்தைத் தீண்டுவது என்கிறார்.

     

    Share