சு.ரவி

வணக்கம், வாழியநலம்,

 

சிதம்பரம் கோயிலின் கீழ்க்கோபுரத்தருகிலுள்ள

அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் இங்கே கோட்டோவியமாக…

 

ஒருபாதி ஆண்மைக்குரிய திண்மையும், உறுதியும், மறுபாதியில்

பெண்மையின் மென்மையும், நளினமும்..

உமையொருபாகனைச் சிலை செய்த சிற்பியின் கைவண்ணம்

புலப்படும் வண்ணம், இருபாதிகளையும் வெவ்வேறு வண்ணப்

பின்புலன்களில் கொடுத்தும் இணைத்துள்ளேன்…

 

உமையொருபாகன்….

 

ஈருடல் வேண்டோம் நாங்கள்

  என்றுமே ஒன்றாய் ஆனோம்

ஓருடல் போதும் என்றே

   உமையொரு பாகன் ஆனாய்!

நீருடன் நிலவைச் சூடி

   நீறணி  நீலகண்டா!

சீருடைத் தில்லை மேவும்

  சிதம்பரா, நமச்சிவாயா!                      1

 

 

சூரியன் ஒருகண் என்றால்

    சுடர்மதி மற்றோர் கண்ணாம்!

வீரியத் தோளோர் பக்கம்

   விளங்குமென் தோளோர் பக்கம்,

கூரிய மழுவோர் கையில்

   குளிர்மலர் இடமேற் கையில்

நாரியோர் பாகம் வைத்த

  நாயகா,   நமச்சிவாயா!                                        2

 

 

காலனை உதைத்த பாதம்

  காமனை எரித்த நேத்ரம்

ஆலினால் கறுத்த கண்டம்

  ஆனைதோல்போர்த்தமேனி

லீலைகள் போதாதென்றோ

   பிரமனின் சிரத்தைக் கொய்தாய்?

சூலமும், மானும் தாங்கும்

    சுந்தரா, நமச்சிவாயா!                                       3

 

பெண்டிரை வணங்கேன் என்று

   பெருமையே பேசிக் கொண்டு

வண்டுருக் கொண்டு வந்தோன்

   வன்தவம்  நாணித் தாழ

பெண்ணையோர் பங்காய் வைத்துப்

   பேரருள் காட்டி நின்றாய்

கண்டியூர்த் தேவா, தேவி

   காதலா, நமச்சிவாயா!                                         4

       

அமையுறு தோளி பாகா,

   அண்ணலுன் திருமுன் பெங்கள்   

சுமையெலாம் இறக்கி வைத்தோம்.

  சுழன்றிடும் கோள்கள், மீன்கள்

எமையினி  வருத்திடாமல்

    என்றுமே துணை இருப்பாய்!

உமையோரு பாகம் வைத்த

    உருத்திரா, நமச்சிவாயா!                                     5

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உமையொருபாகன்

  1. உமையொருபாகனின் எழிலுருவை இமையாது நோக்கி மகிழ்ந்தேன். சொற்சுவையும், பொருட்சுவையும் நிறைந்த சுந்தரக் கவித்தேனையும் பருகி இன்புற்றேன். கண்ணுக்கும் கருத்துக்கும் ஒருங்கே விருந்தளிக்கும் திரு. சு. ரவி அவர்களுக்கு மனம்நிறைந்த பாராட்டுகள்!!

  2. மெய் மறக்கச் செய்யும் கவிதை வரிகள் அருமை. இறைவனைப் போற்றும் கவிதை வரிகளில் ஒரு ஆற்றல் நிறைந்திருப்பதை உணர முடிகிறது. ஓவியமும் தத்ரூபமாக உள்ளது. வாழ்த்துகள் திரு.ரவி அவர்களே.

  3. தங்களின் கரங்களிலே கலைத்தாய் கொலுவிருக்கிறாள் என்றே சொல்லத் தோன்றுகிறது. ஓவியமும் கவிதையும் ஒருங்கே தருவது என்பது சாதராண விஷயமில்லை. இறைவனின் அருட்கொடையே இது. அற்புதம்!!!. மனமார்ந்த பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *