Blog

  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர்!

    ஆகஸ்ட் 4, 2014

    இவ்வார வல்லமையாளர்
    வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்

    kamatchi

    இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது.  ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை.  விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர்.  பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத்  தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.

    இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி  அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி” அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

    காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப்  படிப்பு நின்று போயிருக்கிறது.  அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட  ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்  (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன்  போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.

    திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து  மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது.  பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.  காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com)  வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.

    ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது  தனது 82 ஆவது வயதிலும்  தொடர்ந்து  “சொல்லுகிறேன்”  என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள்,  நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது  இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின்  வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

    ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து  அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார்.  அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.  “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார்.  அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்  படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

    அன்னையர் தினத் தொடர்வு

    என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா  நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில்  விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும்,  என்பதால்,  சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள்.  ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..

    ……. மற்றொரு பதிவில் …….

    அது ஒருகாலம்.  குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள்   கண்டு பிடித்த காலம் அது என்றும்  சொல்லலாம். எங்கு நோக்கினாலும்    ஒரு வயதுக் குழந்தைகள்  வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி  இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை.,   மாதமொரு  முறை  ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல    வார்த்தை  டாக்டர்  சொல்ல  வேண்டுமே  என்று  வேண்டும் தாயின்  உள்ளங்கள்.

    பத்துரூபாய் மருந்து என்றால்   பாப்பையா மருந்து.   வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால்  ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி  ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..

    அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள்.  அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதத்வருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க  ‘இணையப்பாட்டி’ போல  காமாட்சி அம்மையார்  எழுதி வருகிறார்.  இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ  தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

     

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

     

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 130

    -மலர் சபா

    மதுரைக்காண்டம் – 02: வேட்டுவவரி

    உரைப்பாட்டு மடை

    முன்றிலின் சிறப்பு

    நெற்றியில் கண்ணுடைய சிவபெருமான்
    தம் இடப்பாகத்தில் கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…

    மணம் வீசும் சுரபுன்னை மரமும்,
    நாரத்தையும் வரிசையாக ஒழுங்குபட நின்றன.
    ஆச்சா மரமும் சந்தன மரமும்
    உயர்ந்தோங்கி வளர்ந்திருந்தன.                     goddess durga for silambu 4th august
    எவ்விடத்தும் சேவும் மாவும்
    நெருங்கி வளர்ந்து நின்றன.

    பிறையை உடைய சடை கொண்ட
    கொற்றவையின் முன்றிலின் இடத்து
    வேங்கை மரங்கள் சிவந்த பொன் போன்ற
    பூக்களைச் சிந்தி நின்றன.
    நல்ல இலவமரங்கள் தம் கிளைகளில் பூத்த
    செம்மலர்களை உதிர்த்துக் குவித்தன.
    புன்க மரங்கள் வெள்ளைப் பொரி போன்ற
    பழம்பூக்களை உதிர்த்து நின்றன.

    திருமாலுக்கு இளைவளாகிய
    கொற்றவையின் முன்றிலின் இடத்து…
    வெண்கடம்பும் பாதிரியும் புன்னையும்
    மணம் வீசும் குராவும் கோங்கமும்
    பூத்துக் குலுங்கின.
    அவற்றின் கிளைகளில் வண்டுக்கூட்டம் முழங்கி
    யாழ் போல் இசைக்கும்.

    வள்ளிக்கூத்து

    துர்க்கை அணியும் அணியை எல்லாம்
    தாமும் அணிந்துகொண்டு நிற்கும்
    இப்பொன் வளையணிந்த குமரி
    முன்னர் செய்த தவம்தான் எதுவோ?
    பொன்வளையணிந்த இம்மாது பிறந்த குடிப்பிறந்த
    வில்லேந்தும் மறவர் குலமே சிறந்த குலம்.

    கொற்றவையின் அழகினை ஒத்ததாக
    அழகு கொண்ட, பாம்பினைப் போன்ற அல்குலை உடைய
    இக்குமரி செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடிக்கண் தோன்றிய
    அம்பெய்தும் வில்லினையுடைய
    எம் வேட்டுவக் குலமே சிறந்த குலமாகும்.

    தாவும் கலைமானை ஊர்தியாகக் கொண்ட
    கொற்றவையின் கோலம் கொண்டு நிற்கும்
    அழகிய வளையணிந்த இவள் செய்த தவம்தான் எதுவோ?
    இவள் பிறந்த குடியில் தோன்றிய
    மூங்கில் வில்லினையுடைய
    மறவர் குலமே சிறந்த குலமாகும்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  01 –  06
    http://www.chennailibrary.com/**iymperumkappiangal/**silapathikaram6.html

    படத்துக்கு நன்றி:
    http://allgodstuff.blogspot.in/2014/02/durga-maagif_8787.html

     

    Share
  • அர்ச்சனை -2

    –சு.கோதண்டராமன்.

    ram_worship_god_shiva

     

    யஜுர் வேதத்தின் ருத்ரம் என்னும் தோத்திரம் இந்து சமய இலக்கியத்தின் மிகப் பழமையான அருச்சனை என்ற சிறப்பைப் பெறுகிறது. இறைவனின் ஒவ்வொரு பெயருடனும் நம என்ற இணைப்புச் சொல் கொண்ட மந்திரம் வேதத்தில் இது ஒன்றே. அதனால் இது நமகம் என்றும் அழைக்கப்படுகிறது.

    ருத்ரனின் பல விதமான சிறப்புப் பெயர்களைக் கூறி ஒவ்வொன்றுடனும் நம என்று சொல்லப்படுகிறது. அப்படி 273 முறை நமஸ்காரம் செய்யும் இதில் 226வதாக வருவதுதான் நம சிவாய என்ற மந்திரம். மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருளுடையது. இதற்கு அடுத்த மந்திரம் சிவதராய. மேலதிக மங்கலம் உடையாருக்கு வணக்கம் என்ற பொருள் படுவது.

    இதில் ருத்ரனின் தோற்றத்தைக் குறிக்கும் பெயர்களாக வருபவை- தங்கக் கையர், கருங் கேசத்தர், ஆயிரம் கண்ணர், பூணூல் அணிந்தவர், தலைப்பாகை கொண்டவர், செம்மேனியர்  என்று பல உள்ளன.

    வாளேந்தியவர், அம்புக் கையர், அழகிய நாணேற்றிய வில்லினர்,  காலாட்படை தலைவர்,  எதிரிகளை குத்தித் துளைத்து அடித்து அழ வைக்கின்றவர் என்று அவரது போர்த்திறமையைப் புகழ்ந்து பேசும் நமகங்கள் பல.

    துன்பம் துடைப்பவர், பாபத்தை அழிப்பவர், அருள் மழை பொழிபவர், இம்மை மறுமை இன்பம் தருபவர் என்ற பெயர்கள் அவரது உயர் பண்புகளைக் காட்டுகின்றன.

    வில்லாளிகள், நாணேற்றுபவர்கள், நாணை இழுப்பவர்கள், அம்பு ஏந்தியவர்கள், குறி நோக்கி அம்பு எய்துபவர்கள், படை தலைவர்கள், எதிரியைக் கிழிப்பவர்கள் என்று அவர் பன்மையில் வணங்கப்படும்போது  அவர் பல்லாயிரம் வடிவத்துடன் தோன்றுவதை அறிகிறோம்.

    காலத்தால் மிகப் பழமையானது என்பதைத் தவிர, இந்த அருச்சனைக்கு மற்றொரு சிறப்பும் உண்டு. இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான் என்பதை இது சொல்லும் முறை வித்தியாசமானது.

    மணல் திட்டு, ஓடும் நீர் முதலான எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் என்று கூறாமல் மணல் திட்டே வணக்கம், ஓடும் நீரே வணக்கம்,  களர் நிலமே வணக்கம்  என்று இவ்வகையில் சுக்கான் பூமி, மாட்டுக் கொட்டகை, வீடு, கட்டில், ஒலி, எதிரொலி என்று பல பொருள்களுக்கு வணக்கம் கூறுகிறது. பொருளுக்குள் இறைவன் மறைந்து இல்லை, பொருளே இறைவன் என்கிறது இது.

    மந்திரியாகவும் அவைத் தலைவராகவும் விளங்குபவரும் அவரே. மற்றும் வணிகர், தச்சர், குயவர், விராதன் (புலையன்) என்று எல்லா வகை மனிதராகவும் அவரே காட்சி தருகிறார். குதிரை, நாய் முதலான மிருகங்களும் அவரே. இந்த எல்லா உயிர்களுக்கும் வணக்கம் தெரிவிப்பதிலிருந்து எல்லாமே  இறைவனாகப் போற்றப்பட வேண்டியவை என்பது விளக்கப்படுகிறது.

    கருங் கழுத்தர்- வெள்ளைக் கழுத்தர், சடையர்- மொட்டையர், மூத்தவர்- இளையவர், பச்சை இலை- காய்ந்த சருகு, மழைநீர்- மழையின்மை என்று ஒன்றுக்கொன்று முரண்பட்ட நிலைகளையும் ருத்திரனாகக் கருதிப் போற்றும் மந்திரங்கள் சோதியனே- துன்னிருளே, சேயாய்- நணியானே என்ற மணிவாசகரின் வரிகளை நினைவூட்டுகின்றன.

    எல்லாப் பொருள்களும் எல்லா உயிர்களும் இறைவன் என்றால் நாம் அன்றாடம் கண்ணெதிரில் காண்போரும் தெய்வம் தானே. உரக்கக் கூவுபவர்களுக்கு வணக்கம், ஓடுபவருக்கு வணக்கம், உட்கார்ந்து இருப்பவர்களுக்கு வணக்கம், படுத்திருப்பவர்களுக்கு வணக்கம், தூங்குபவர்களுக்கு வணக்கம், விழித்திருப்பவர்களுக்கு வணக்கம், நிற்பவர்களுக்கு வணக்கம் என்று இறைவனின் வியாபகத் தன்மையை விதந்து ஓதுகிறது ருத்ரம்.

    இறைவன் கெட்டவரிடத்தும் இருப்பான் அல்லவா?  அதனால் ருத்ரம் அவனது உயர் பண்புகளைப் போற்றுவதோடு நிற்கவில்லை. தாழ்ந்ததாக நாம் கருதும் பண்புகளையும் கொண்டவன் இறைவன் என்கிறது.  இது பிற அருச்சனைகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு.

    திருடர்களின் தலைவருக்கு வணக்கம், கொள்ளையருக்கு வணக்கம், ஏமாற்றுபவருக்கு வணக்கம்,  பேராசைக்காரருக்கு வணக்கம் என்று நாம் சமூகத்தில் விரும்பத் தகாதவராகக் கருதுவோரையும் இறைவனாகவே காண்கிறது.

    இதைப் படித்து விட்டுத் தான் பாரதி சூழ்ந்ததெல்லாம் கடவுள் எனச் சுருதி (வேதம்) சொல்லும் என்று பாடினார் போலும். வேறொரு பாடலில் ருத்ரத்தின் சாரத்தைப் பிழிந்து தமிழில் தருகிறார்.

    சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
    சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
    வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
    வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;

    பித்தரே அனைத்துயிருங் கடவுளென்று
    பேசுவது மெய்யானால் பெண்டிரென்றும்
    நித்த நுமதருகினிலே குழந்தை யென்றும்
    நிற்பனவுந் தெய்வமன்றோ நிகழ்த்துவீரே?

    உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
    ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
    பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப்
    பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;

    வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்
    மேலுமிங்குப் பலபலவாம் தோற்றங் கொண்டே
    இயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;
    எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்.

     

    படம் உதவிக்கு நன்றி:  http://new-hdwallpaperz1.blogspot.com/2013/07/hindu-god-shri-ram-wallpapers.html

    Share
  • பால்நினைந்து கொடுத்திடுவீர்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    பிரமனின் படைப்பினிலே
    பெரும்படைப்பு
    பெண்ணினமே!          MotherChild2
    பெருங்குணங்கள்
    பெற்றவளே
    பிறப்பினிலே
    பெண்ணாவாள்!

    ஆண்படைப்பும் பெண்படைப்பும்
    அகிலத்தில்
    உயர்படைப்பே!
    ஆனாலும்
    பெண்படைப்பே
    அகிலத்தை
    ஆளுவதே!

    கருவினைத் தாங்கிநிற்கும்
    பெருமையே
    பெண்மையாகும்!
    உருவினைக்
    கொடுப்பதற்கும்
    உரியதே
    ஆண்மையாகும்!

    இருஇனம் சமமானாலும்
    பெருமையே
    பெண்ணுக்கன்றோ!
    சுமைதனைத்
    தாங்கிநின்று
    சுமப்பது
    பெண்மைதானே!

    அடிவயிறு நோவெடுக்க
    அவள்சுமந்து
    பெற்றபிள்ளை
    அழகுமுகம்
    கண்டவுடன்
    அகமகிழ்ந்து
    நின்றிடுவாள்!

    அக்குழந்தை பால்குடிக்க
    அவள்வயிறு
    குளிர்ந்துவிடும்!
    அக்கணத்தில்
    ஆனந்தம்
    அவளோடு
    அணைந்துவிடும்!

    பால்குடிக்கா விட்டாலும்
    பால்கொடுக்கா
    விட்டாலும்
    தாயின்நோ
    அதிகரிக்கும்
    தாளாத
    துயரைத்தரும்!

    குழந்தை அழவேண்டும்
    குடிக்கவேண்டும்
    தாய்ப்பாலை
    தாயப்போ
    தனைமறப்பாள்
    தாயன்பு
    சுரக்குமப்போ!

    தாய்ப்பாலே உணவாகும்
    தாய்ப்பாலே
    மருந்தாகும்
    தாய்ப்பாலைத்
    தவிர்த்துவிடின்
    நோய்க்கிடமாய்
    ஆகிடுமே!

    பிள்ளைக்குப் பால்கொடுத்தல்
    பெருமையென
    நினைத்தார்கள்
    பால்குடிக்கும்
    பிள்ளைக்கு
    நோயணுகா
    என்றார்கள்!

    நாகரிகம் தலைக்கேறி
    நல்லதெல்லாம்
    மறந்துவிட்டுப்
    பால்கொடுத்த
    பெண்களிப்போ
    படுத்துறங்கி
    நிற்கின்றார்!

    குழந்தை அழுதாலும்
    கொடுக்கமாட்டேன்
    பாலென்று
    குழறுபடி
    செய்கின்றார்
    குடும்பமதில்
    பெண்களிப்போ!

    பால்கொடுத்தால் தம்மழகு
    பாழாகி
    விடுமென்று
    பவ்வியமாய்ச்
    சொல்லியவர்
    பால்கொடுக்க
    மறுக்கின்றார்!

    பெற்றபிள்ளை அழுதாலும்
    பெருங்கவலை
    கொள்ளாமல்
    வற்றிவிடும்
    அழகுஎன்று
    வாடியவர்
    நிற்கின்றார்!

    உற்றவரும் மற்றவரும்
    ஓலமிட்டு
    உரைத்தாலும்
    சற்றுமதை
    மதியாது
    தம்மழகைப்
    பேணுகின்றார்!

    புட்டிப்பால் கொடுக்கின்றார்
    புத்திகெட்டு
    அலைகின்றார்
    கிட்டச்சென்று
    கேட்டாலோ
    வெட்டியே
    பார்க்கின்றார்!

    விஞ்ஞானம் வளர்ந்தாலும்
    விந்தைகள்
    புரிந்தாலும்
    உண்மைகள்
    ஒருபோதும்
    ஓடிவிட
    மாட்டாது!

    தாய்ப்பாலைக் கொடுத்துவிடின்
    தாய்க்குக்குறை வருவதில்லை
    தாயழகும்
    கெடுவதில்லை
    தாய்மைதான்
    அழகுபெறும்!

    என்றிப்போ விஞ்ஞானம்
    எடுத்தியம்பி
    நிற்கிறது
    இதைக்கேட்ட
    தாய்மாரும்
    இரங்கிவந்து
    நிற்கின்றார்!

    மேலைநாட்டில் பெண்களிப்போ
    விரும்பிப்
    பால்கொடுக்கின்றார்
    வேலைக்குச்
    சென்றாலும்
    பால்கொடுக்க
    மறக்கவில்லை!

     எம்கருவில் வந்தபிள்ளை
    எம்பாலைக்
    குடிப்பதனால்
    எங்கிருந்து
    பிரச்சனைகள்
    எமக்குவரும்
    எண்ணுங்கள்!

    தாய்ப்பாலைக் குடித்தவர்கள்
    தானுரமாய்
    உள்ளார்கள்
    தகரப்பால்
    குடிப்பதனால்
    தரம்கெட்டுப்
    போகாதா?

    தாய்ப்பாலில் உள்ளசத்து
    தகரத்தில்
    இருக்கிறதா?
    தாய்மாரே
    மறக்காதீர்!
    தாய்ப்பாலைக்
    கொடுத்திடுவீர்!

    பால்முகத்தைப் பாருங்கள்!
    பரிவோடு
    அணைத்திடுங்கள்!
    பால்நினைந்து
    கொடுத்திடுவீர்
    பாரிலுள்ள
    தாய்மாரே!

    Share
  • காற்று வாங்கப் போனேன் (28)

    கே.ரவி

    ரயிலில் என்னைத் தாக்கிய மின்னற் கவிதை என்று போன அதிகாரத்தில் குறிப்பிட்டேன் இல்லையா? அதுதான் ‘ஸ்பரிசம்’ படத்தின் அடுத்த பாடலாகியது. அதுவும் இரண்டே வரிகள். அதையே வேறு வேறு ஸ்தாயியில், ஆனால் ஒரே ராகத்தில் கதாநாயகன் பாடுவதாக அமைந்த பாடல். எனக்குத் தெரிந்த வரையில் அதைவிட அளவில் சிறிய பாடல் எதுவும் எந்தத் திரைப்படத்திலும் வந்ததில்லை.

    baluஅந்தப் பாடலைப் பாட எஸ்.பி.பாலசுப்ரமண்யம் ஒப்புக் கொண்டிருந்தார். அதற்கு முன் நான் அவருக்கு அறிமுகம் இல்லை. பாடல் பதிவுக்கு நாள் குறித்தாகி விட்டது. அன்று பகல் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரைக்கும் ஆர்.ஆர்.ஒலிப்பதிவுக் கூடத்தை வாடகைக்கு எடுத்து விட்டோம். வாத்தியக்காரர்களை எல்லாம் வரவழைத்து, ஹார்மோனியம் ராமமூர்த்தி உதவியுடன் ஸ்வரங்கள் எழுதித் தந்து, ஒத்திகை எல்லாம் பார்த்து முடித்து, இரவு 6 மணிக்குத் தயாரக, எஸ்.பி.பி. அவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தோம். 7 மணியாயிற்று வரவில்லை. தொலைபேசியிலும் அவர் அகப்படவில்லை. 8 மணிக்குத் தொலைபேசியில் கிடைத்தார். “சாரி ரவி, நான் திருப்பதியில் இருந்து வந்து கொண்டிருக்கிறேன். வரப் பத்து மணிக்கு மேலாகிவிடும். ரொம்பக் களைப்பாகவும் இருக்கிறது. நீங்கள் ம்யூஸிக் டிராக்கைப் பதிவு செய்து கொள்ளுங்கள். நான் இன்னொரு நாள் பாடிக் கொடுக்கிறேனே” என்று மிகப்பணிவாக அவர் வேண்டுகோள் விடுத்தார். டிராக் பதிவு செய்த அனுபவம் எனக்கு அப்போது இல்லாததாலும், எஸ்.பி.பி. பாட வேண்டிய என் முதல் பாட்டிலேயே இப்படித் தடை வருகிறதே என்ற ஆதங்கத்தாலும் அவர் வேண்டுகோளுக்குச் செவிசாய்க்காமல் அன்றிரவே அவர் வந்து பாடிக் கொடுக்க வேண்டும் என்று அடம் பிடித்தேன். என் நிலையைப் புரிந்து கொண்டு அவர் வீட்டுக்குக் கூடப் போகாமல் இரவு பத்து மணிக்கு நேராக ஒலிப்பதிவுக் கூடத்திற்கு வந்தார். பாடல் சொல்லுங்கள் என்றார். நான் இரண்டு வரிகளைச் சொன்னேன். ஓகே, சரணம்? என்றார். அவ்வளவுதான் என்றேன். நிமிர்ந்து பார்த்தார். பாடலே அவ்வளவுதானா? ஆம். அரை மணி நேரத்துக்குள் மலஹரி ராகத்தின் சாயையில் அமைந்திருந்த அந்தப் பாடலை அமர்க்களமாகப் பாடிக் கொடுத்தார். என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாடல் மிகவும் நன்றாக அமைந்தது. அந்தப் பாடல் இதுதான்:

    ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

    காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

    அவ்வளவுதான் பாடல். இதே வரிகளை வெவ்வேறு விதமாக மூன்று முறை கதாநாயகன் நாயகியிடம் பாடுவதாகக் காட்சி அமைந்தது. நீங்களும் பாடலைக் கேட்கலாம், பின்வரும் சுட்டியைச் சொடுக்கினால்.

    http://www.inbaminge.com/t/s/Sparisam/Oodal%20Siru%20Minnal.eng.html

    ராக்கெட் ராமனாதன், சுப்புணி (என்னுடன் விவேகானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்த நண்பன் டி.எம்.சுப்பிரமணி) இவர்களுடைய நகைச்சுவையும், இந்தப் படத்தின் பாடல்களுமே, வினியோகஸ்தர்கள் இந்தப் படத்தை வாங்க, முக்கியமான காரணங்களாக அமைந்தன.

    மேலே உள்ள பாடல், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல் இல்லை. பல்லவியே ஒரு முழுப்பாடலாக உருக்கொண்டு விஸ்வரூபம் எடுத்த பாடல். அதற்குமேல் வளர அதில் இடமில்லை. ஆனால், பல்லவியோடு நின்றுவிட்ட பாடல்களும் உண்டு.

    ஒருநாள் இளங்காலைப் பொழுது, சின்ன சின்ன இழைகளாக வானம் மெல்ல மழைதூவிக் கொண்டிருந்தது. அந்த ரம்மியமான சூழ்நிலையில் ஒரு பல்லவி, தர்பாரி கானடா ராகத்தில், மனத்தில் மெல்லப் படர்ந்தது. அதையே மனம் முணுமுணுத்துக் கொண்டிருக்க, அதுவே அப்படியே மெல்லத் தேய்ந்து போனது, ஆங்கிலத்தில் ஃபேட் அவுட் ‘fade out’ என்பார்களே, அது போல்.

    மழைத்

    தூறலிடும் ஒரு காலைப் பொழுது – உனைத்

    தூண்டிவிடும் ஒரு பாடல் எழுது

    பிறகு நேர்ந்த எந்தத் தூண்டுதலும் அனுபல்லவி, சரணங்களைத் தரவில்லை. அந்தப் பல்லவியைத் தொடர்ந்து எழுதப் பலமுறை நான் முயன்றும் முடியவில்லை. வார்த்தைகள் வந்தன. ஆனால் அந்தப் பல்லவியோடு அவை இணைய முடியவில்லை. முயற்சியைக் கைவிட்டு விட்டேன்.

    ஷோபனாவும் பாடல்கள் எழுதியுள்ளாள். அதுவும் அவள் இஷ்ட தெய்வமாகிய கண்ணன் மேல் அவள் வடித்த பாடல்களில் மீராவின் தாபமும், ஆதங்கமும் எதிரொலிக்கக் கேட்கலாம். அப்படி அவள் 1980-களில் எழுதிய ஒரு பாடலில் வரும் இரண்டு வரிகளை இந்தச் சூழ்நிலையில் எண்ணிப் பார்க்கலாம்:

    குழலில் இருந்து பிறந்த இசை நான் – அவன்

    குழலில் இருந்து பிறந்த இசை நான்

    கண்ணனின் கற்பனை நான்

    இந்தப் பல்லவியோடு தொடங்கும் அந்தப் பாடலின் சரணத்தில் வரும் அந்த இரண்டு வரிகள்:

    தென்ற லின்வழி சென்றத னாலே கண்ணனை மறந்திருந்தேன்

    பல்லவி யோடு நின்றத னாலே கண்ணனைச் சரணடைந்தேன்

    செதுக்கச் சிற்பி வந்தால்தான் கல் சிலையாகும். அவிழ்க்கக் கவிஞன் வந்தால்தான் சொல் கவியாகும். நம் உயிரே ஒரு கல்; ஒரு சொல்; அதைச் செதுக்க வரும் சிற்பிக்காக, அல்லது அதை விரித்துப் பாடவரும் கவிஞனுக்காக அது எத்தனை யுகமானாலும் காத்திருக்கும், ராமனுக்காகக் காத்திருந்த அகலிகை போல!

    பல ஆண்டுகள் கழித்து நான் எழுதிய ஒரு பாடலின் தொகையறா (இந்த வார்த்தைக்கு என்ன பொருளோ!):

    உளிதாக்கி உடைகின்ற கல் – நான்

    உமிவிலகக் காத்திருக்கும் நெல்

    ஒருதேவ முனிவன்வந் துச்சரிக் கும்வரை

    ஓசையின்றி ஒளிந்திருக்கும் மந்திரச்சொல்

    என் வாழ்க்கையில் எப்படியெல்லாம் மின்னல் அடித்திருக்கிறது! 5 வயதில் ‘மின்னல் வீரன்’ என்ற பெயரில் என் வளர்ப்புத் தந்தை தயாரித்த படத்தில் குட்டிக் கதாநாயகனாக நடித்தேன். 11 வயதில் என் ஆசிரியர் என் தமிழ் விடைத்தாளைச் சுருட்டி என் முகத்தில் வீசியெறிந்த ஒரு மின்னல் அதிர்ச்சியில் உந்தப் பட்டு மூன்று மாதங்களில் தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களை நானே நூலகம் சென்று பயின்று கவிதை எழுதத் தொடங்கிப், “மின்னற் சுவையே கன்னற் கனியே” என்று தொடங்கும் ஒரு நீண்ட கவிதை எழுதி ஆசியரின் அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெற்றேன். 28 வயதில் எஸ்.பி.பி பாட “ஊடல் சிறு மின்னல்” என்ற என் பாடலை நானே இசையமைத்துப் பதிவு செய்தேன். பிறகு, 1998-ஆம் ஆண்டில் பாரதியியல் பற்றி “மின்னற் சுவை” என்றொரு நூல் எழுதி அதற்குக் கவியரசி செளந்தரா கைலாசத்திடம் அருமையான முன்னுரை வாங்கி வெளியிட்டேன்.

    balu1என் இசையமைப்பில் எஸ்.பி.பி. பாடிய இரண்டாவது பாடலும் மின்னல்தான். ஆனால் அது ‘ஸ்பரிசம்’ படம் வெளியாகி இரண்டு வருடங்களுக்குப் பிறகு என் வளர்ப்புத் தந்தை எடுத்த ‘ராஜா நீ வாழ்க’ படத்துக்காகப் பதிவானது. பிரபு, சத்யராஜ், அம்பிகா நடித்து, சி.வி.ராஜேந்திரன் இயக்கத்தில் தயாரான அந்தப் படத்துக்காக எஸ்.பி.பி. பாடிய பாடலைப் பதிவு செய்ய என் உதவியாளராகப் பணியாற்றிய எல்.வைத்தியநாதனை இப்போது நினைத்துக் கொள்கிறேன். ஏற்கனவே, ‘ஏழாவது மனிதன்’ என்ற படத்துக்கு இசையமைத்து வெற்றியும் பெற்ற இசையமைப்பாளர் அமரர் எல்.வைத்தியநாதன் தம்மை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த எனக்கு உதவிசெய்ய முன்வந்த பெருந்தன்மையை நன்றியுடன் நினத்துக் கொள்கிறேன். அந்தப் பாடலை எஸ்.பி.பி எப்படித் தம் இனிய குரலால் வளம் செய்திருக்கிறார் என்பதை நினைத்தால் இப்பொழுதும் என் கண்கள் குளமாகின்றன:

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா
    மேகமே மழைத் துளிகளில்
    மணிச் சதங்கைகள் கட்ட ஓடிவா

     

    நிலவே ஒரு மலரென மலர்வதும்
    நிழலே மணி ஒளியென விரிவதும்
    கனவா இல்லை நினைவா உன் முகமா
    காவியம் ஆயிரம் பாடுவதென் மனம்

    பார்வையே மலர் சூடுமே – ஒளிப்

    புன்னகை வளை போடுமே – என்

    கண்களின் மழைத்துளிகளே – உன்

    கால்களில் ஜதி போடுமே

     

    தென்றலே மலர் சூடவா

     

    வீணை நாதஸ்வர மேள தாளமின்றி
    வெண்ணிலா தினம் உதிப்பதில்லையா
    கனவு மலரக் கண் இமைகள் நெகிழப் – புதுக்

    கனவு மலரக் கண் இமைகள் நெகிழ – ஒரு

    மழலை வடிவமுன் மடியில் தவழவரும்
    வெண்புறா விளையாட வா – குயில்

    பேடையே குழ லூதி வா – அலைக்

    கரங்களில் நுரைக் குடங்களில் – நதி

    அன்னை யேசீர் கொண்டு வா

     

    தென்றலே மலர் சூடவா
    கொடி மின்னலே வளை போடவா

     

    லாலலா லல லாலலா
    லல லாலலா லல லால லா

    [பாடலை நீங்களும் கேட்கச் சொடுக்கவும்]

    https://www.youtube.com/watch?v=d0HckTVpYFw

    இந்தப் பாட்டுக்கும் ஒரு பின்னணி உண்டு. அதுவும் இலக்கியப் பின்னணி. என் கல்லூரி நாட்களில் என் நண்பன் ஓவியக்balu2 கவிஞர் சு.ரவி எனக்கு அவ்வப்போது சம்ஸ்க்ருத இலக்கியத்திலிருந்து நல்ல கவிதைகளைச் சொல்லி விளக்கியிருந்தான். அதிலும் மஹாகவி காளிதாசனின் ‘ரகுவம்சம்’ என்ற காவியத்தில் இருந்து அவன் சொன்ன ஒரு பாடல் என்னை மிகவும் கவர்ந்தது. ரகுவம்சத்தில் ஒரு பகுதிதான் ராமனின் கதை. அதில், ராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு போகும் வழியில், சீதை தன் ஆபரணங்களை ஒவ்வொன்றாகக் கழற்றிக் கீழே வீசி எறிந்ததாகவும், அவள் கைவளையல்களை அப்படிக் கழற்றி எறிந்ததும், அவளுடைய வெறுங்கையைப் பார்க்கப் பொறுக்காமல் வானமே இடியிடித்து, மின்னலால் அவள் கைக்கு வளையிட்டது என்ற அருமையான பாடல் என் மனத்தில் உறைந்து, தக்க நேரத்தில் தமிழில் வெளிப்பட்டதை எண்ணி மகிழ்கிறேன்.

    இன்னும் என் வாழ்வில் என்னென்ன மின்னல்கள் காத்திருக்கின்றனவோ!

    அட, இந்த வரி எழுதும் போதே உள்ளத்தில் பளிச்சென்று மின்னலிடுகிறதே ஒரு புதுக்கவிதை; அதாவது, இப்பொழுதுதான் உதித்த புதிய கவிதை. சுடச்சுட, அப்படியே பரிமாறுகிறேன். இந்தக் கவிதைக்கு இதுவே சூழல்; நீங்களே இதன் செவிலித் தாய்மார்கள்:

    காற்றும் மின்னலுமாய்க் கதைசொல்ல வந்தேனே

    நேற்று நினைவுகளை நெஞ்சுருகத் தந்தேனே

    போற்றிப் புகழ்வதற்கா புலனழிந்து போவதற்கா

    ஏற்றம் எனக்கில்லை எல்லாம் திருவருளே

     

    சாட்டை சொடுக்கியவன் சங்கல்பத் தால்நானும்

    ஆட்டம் போடுகிறேன் ஆலோலம் பாடுகிறேன்

    வேட்டைக் காரனுக்கு வேறென்ன குறிக்கோளோ

    வேடிக்கை காட்டுகிறான் வேஷங்கள் போடுகிறேன்

     

    கூத்து நடக்கையிலே கூட நடிப்பார்கள்

    கூத்து முடிந்ததுமே கூட்டம் கலைந்துவிடும்

    கூத்தன் அவனன்றிக் கூட்டில் எதுபறவை

    கூத்து நடக்கட்டும் கொண்டுவா கவிதைகளை

    (தொடரும்)

    Share
  • நேர்மையின் வலி!

    –சங்கர் சுப்ரமணியன்

    அப்பாவின் கைப்பிடித்துக்                                    Pandavas
    காலார நடக்கையிலே
    சொல்லி வந்திடுவார்
    அர்ச்சுனனின் உண்மையும்
    தர்மனின் நேர்மையும்
    அவர்களடைந்த மேன்மையும்
    எனக்கும் பசுமரத்தில் அடித்த
    ஆணிபோல் நெஞ்சத்தில் பதிந்து போனது!

    சிவப்பு விளக்கு எரிகையிலே
    முன்னம் செல்ல, அலுவலகங்கள்
    வேலைமுடிக்க பணம் கொடுக்க,
    வரிசையில் நில்லாமல் இடை சொருக,
    முன் நிற்பவனின் இடம் பெற,
    மனம் பொருந்தா வேலை செய்ய…
    பின்னமிருந்து சமூகம் என்னை
    முன்னம் தள்ளப்பார்க்கும்!

    இப்படியாகச் செய்யாவிடின்
    இல்லாத காரணம் சொல்லி
    என்னைப் பின்னம் தள்ளும்!
    இவன் கனவுகளில் நிஜம்
    இழக்கும் பைத்தியக்காரன் என்ற
    முத்திரையுடன் எள்ளி நகைக்கும்!

    எதுவரினும், என் முகம் சிதைந்திடினும்
    நேர்மையின் வலி என்
    இதயமெல்லாம்  ஆறாத ரணங்களாய்
    நிறைந்திடினும், நான் நிறம்
    இழந்திடேன்! ஏனெனில் கழட்டி
    மாட்டும் சட்டையல்ல என் நேர்மை!
    உறையும்வரை உடன்வரும் என் உதிரம்!

    Share
  • ஒளியும் ஒலியும்

    — மாதவ. பூவராக மூர்த்தி.

    என்னை அறியாமல் என் தலைப்புகள் அதனுள்ளே ஒரு நினைவைப் பதித்துக் கொண்டு விடுகின்றன. இதுவும் அப்படித்தான். தொலைக்காட்சி வந்த புதிதில் வெள்ளிக்கிழமைகளை மகிழ்ச்சியாக்கின தொலைக்காட்சி நிகழ்ச்சி. பார்க்க ஒரு திருவிழாக் கூட்டம். இன்று எல்லாரிடமும் டி.வி. செட் ஆஃப் பாக்ஸ். அலுத்துப் போகும் அளவுக்கு ஒளியும் ஒலியும்.

    Photo0144முன்கதையைச் சுருக்கிவிட்டு சொல்லவந்த செய்திக்குப் போகலாம். முதலில் ஒளி வேகத்தில் முந்தி இருப்பதால் அதை பார்ப்போம். இறைவன் நமக்கு நாளைத் தந்திருக்கிறான். அதில் ஒரு பாதி பகல் இன்னொரு பாதி இரவு. இரவு ஒளியற்றது. இருட்டு. நாம் அந்த இரவை பகலாக்குகிறோம். இந்த பகலை இருளாக்குகிறோம். இயற்கைக்கு மாறாக இருப்பதால் நம் உடலும் மனமும் இயற்கைக்கு மாறாக இருந்து விடுகிறது.

    பகல் உழைப்பதற்கு, உண்பதற்கு, உணர்வதற்கு, உவப்பதற்கு. இதில் எதையாவது நாம் செய்து கொண்டிருக்கிறோமா? வாழ்க்கை என்பதன் வேர்ச்சொல் வாழ்வு. வாழ் என்றால் அதை மகிழ்வாக வாழ்வது. இப்போது கூட ஒரு சொல்வழக்கு உண்டு.”வாழ்வுதான்”. எல்லாம் இருந்தும் வகைப்படுத்தமாட்டாமல் ஒன்றில் முயங்கி பிறவற்றை இழந்து அந்த இழப்பைப் பற்றி கவலைப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் (இருந்து கொண்டிருக்கிறோம்).

    நம் முன்னோர்கள் வாழத்தெரிந்தவர்கள். வாழ்ந்து காட்டியவர்கள். வாழ்க்கை முறையை அமைத்துக் கொடுத்தவர்கள். பகலில் வரும் சூரியன் என்னும் மாபெரும் சக்தியை உணர்ந்தவர்கள். உபயோகப்படுத்தியவர்கள். அந்தக்  கால வீடுகள் அதற்குச் சான்றாக இருந்தவை. நிழல் தரும் மரங்களை நம் வாழ்விடங்களின் முன்னும் பின்னும் அமைத்து இல்லத்தில் ஒளி வருமாறு அமைத்தார்கள். ஒளியும் காற்றும் அந்த இல்லங்களில் எப்போதும் வந்து போகும். அங்கு வளமையும் ஆரோக்யமும் எப்போதும் தங்கும்.

    இன்று அடுக்கங்களில் நம்மைப் பொருத்திக்கொண்டிருக்கிறோம். அவை பெரும்பாலும் பகலை இரவாக்குபவை. ஒளி குறைவாக வரும் அமைப்பு. கதவுகளும் சாளரங்களும் இருந்தாலும் அடுத்தவர் வாழ்விடம் மிக அருகில் இருப்பதால் நம் வீட்டுக் கதவும் ஜன்னலும் நம்மை பிறர் கவனத்திலிருந்து தவிர்க்க எப்போதும் மூடப்பட்டிருகின்றன. அதன் விளைவு நாம் பகலிலும் விளக்கைப் பயன்படுத்துகிறோம்.

    வெப்பம் தவிர்க்க குளிர்பதனம் செய்த அறைகளில் சூரியப் பிரவேசம் தடை செய்யப்படுகிறது. அலுவலங்களிலும் இதே நிலைதான். பயணம் செய்யும் வாகனங்களிலும் ஒளியின் வெப்பத்தை தடுக்க ஒளியின் நன்மையை தடை செய்து விடுகிறோம்.

    Photo0383இரவு தூங்குவதற்காக இறைவன் மனிதனுக்கு கொடுத்த கொடை. சூரியனின் ஆதிக்கம் குறைந்து வானம் இருண்டு நம்மை இளைப்பாற வைக்கிறது. ஆனால் நாம் இரவைப் பகலாக்குகிறோம். விளக்குகளால் இருளைப் போக்குகிறோம். கேளிக்கைகளில், சந்திப்புக்களில் தொலைக்காட்சியில் பணியில் நம் இரவுகளை அடகு வைத்து நம் தூக்கதை இழக்கிறோம்.

    தூக்கமுன் கண்களைத்  தழுவட்டுமே அமைதியுன்  நெஞ்சில் நிலைக்கட்டுமே.என்ன அற்புதமான வரிகள். தூக்கம் உடலுக்கும் மனதுக்கும் தரும் சுகங்களையும் நன்மைகளையும் உணராமல் நாம் முரணான வாழ்க்கை வாழுகிறோம்.

    விளைவு தானாக வரவேண்டிய தூக்கம் வராததால் மதுவையும் மருந்தையும் நாட வேண்டிய கட்டாயம். இரவு தரும் இருட்டை இன்று நாம் உணர வில்லை ரசிக்க வில்லை. யோசித்துப் பாருங்கள்.

    மண்ணையும் வானத்தையும் பார்க்க மறந்த தலைமுறை நாம். நமக்கான கூரைகளை வேய்ந்து கொண்டு வானம் நமக்குப் புலப்படும் வகை அழித்து விட்டோம். பயணங்களிலும் நிலமும் வானமும் நாம் பார்க்க மறந்தவை.

    கும்மிருட்டு என்ற வார்த்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா. அனுபவித்திருக்கிறீர்களா. இன்று இருபது வயது இருக்கும் இளைஞர்கள்மனதில் இருட்டைப் பற்றிய எண்ணமே இருக்க வாய்ப்பு இல்லாமல் அவர்களை வளர்த்து விட்டோம். விஞ்ஞான முன்னேற்றம் என்ற பெயரில் தெருக்களில் வெளிச்சத்தை பரவ விட்டு இருளை புறக்கணிக்கிறோம். இரவு படுக்கை அறைகளிலும் முழு இருட்டு சாத்யமில்லாததாகிவிட்டது. குளிர் பதனக் கருவியின் ஒளிக்கசிவு அல்லது கணினியின் ஒளி, செல்போன் திரைவெளிச்சம் இப்படி ஏதாவது ஒன்று நம்மையும் காரிருளையும் இணைய விடாமல் செய்கிறது. நேற்று என் அடுக்ககத்தில் நாள் முழுவதும் மின்சாரம் இல்லை. இரவு மெல்ல வந்து இருள் என் வாழுமிடத்தை அணைத்துக் கொண்டது. நான் அதனை அன்போடு வரவேற்றேன். நடமாட ஒரு சிறிது வெளிச்சத்தை மட்டும் உபயோகப்படுத்தினேன். ஒரு மூன்று மணிநேரம் அந்த காரிரிருளுடன் கழித்தேன்.

    இன்றைய தலைமுறையை அப்படி ஒரு இருள் சூழ்ந்த அமைப்பில் விட்டால் தவித்து விடுவார்கள். அமைதியை கொடுக்க வேண்டிய இருள் அவர்களுக்கு அமைதியின்மையைக் கொடுத்துவிடும். நல்ல வேளை என் மகள் வீட்டில் இல்லை.

    நீங்கள் யாருமற்ற தனிமையில் வெட்ட வெளியில், கடற்கரையில், மலையடிவாரத்தில், அருவியின் அருகில் இரவை ஒரு பூரண சந்திரன் ஒளிவீசும் நாட்களிலோ பிறை நிலவும் விண்ணில் கோடி விண்மீன்கள் ஜொலிக்கும் வானத்திரையை கண்டு களித்திருக்கிறீர்களா? ஒரு முறையாவது வெளிச்ச வெள்ளத்திலிருந்து விலகி சிறிது வெளிச்சத்தின் உன்னதத்தில் திளையுங்கள்.

    Photo0330இறை வழிபாட்டில் கூட ஒளியைப் புகுத்தி விட்டோம். நம் புராதனக் கோவில்களில் பகலில் போதுமான வெளிச்சம்தான் இருக்கும்படி கட்டமைப்பு இருக்கும். கருவறை இருளில் மிளிரும். அகல் விளக்கின் பிரகாசம் விக்ரகத்தின் பள பளப்பை காட்டி நிற்கும். இரவு நேரங்களில் லிங்கத்தின் பின்னாலும் அம்மன் சந்நிதியிலும் பட்டை ஆடியில் முன் வைக்கப்படும் ஒரு அகல் விளக்கின் ஒளியில் ஏற்படும் பிரகாசமும் பரவசமும் இன்று இல்லை.

    வீதி உலாக்களில் வரும் தீவட்டிகளிலும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளும் இரவின் அழகை குலைக்காமல் நமக்கு தந்த அருங்காட்சி இப்போது இல்லாமல் போய் விட்ட்து.

    எங்களூர் திரு இந்தளூர் கோவில் சப்பரத்தன்று இரவு நான்கு தெருக்களிலும் சாலை குறுக்கே வரும் மின் கம்பிகள் துண்டிக்கப்பட்டு தெரு இருளில் மூழ்கும். பனைமரத்தின் தென்னை மரத்தின் ஓலைகளில் பின்னப்பட்ட மிக உயரமான சப்பரம் இருளில் குறைந்த வெளிச்சத்தில் நகர்ந்து நம்மை நோக்கி வரும்போது கற்பூர ஒளியும் மெருகேற்றும் அந்த பேரழகை இனியும் நான் காணப்போகிறேனா என்று என்னுள் ஒரு ஏக்கம்.

    இருளில் இருக்கும் பழக்கம் நமக்கு இல்லாமல் போய்விட்டது எப்போதும் ஒரு ஒளியை நமக்குத் துணையாக வைத்துக் கொள்கிறோம்.

    அதேபோல் ஒலியும் நம் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கிறது. நாம் கேட்க வேண்டிய பார்க்க வேண்டிய ஒலியையும் ஒளியையும் மறந்து விட்டோம். தேவையற்ற ஒலியை நம் காதுகளில்வாங்கி நம் மனதில் நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

    வீட்டில் இருக்கும் போது நாம் விரும்புகிறோமோ இல்லையோ தொலைக்காட்சியின் ஒலி நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. அல்லது செல்போனில் ஒலி. அல்லது வெளியே செல்லும்போது காரில் இசை குறுந்தகடுகளின் சுழற்சி இறைக்கும் சத்தம். அல்லது நாமே நம் காதுகளில் செருகி கேட்கும் சத்தங்கள். வெளிச் சத்தம் கேட்கவிடாமல் அதையும் மீறி செல்போனிலும் கணினியிலும் செய்தி வரும்போது வரும் சத்தங்கள். சாலையில் அலறும் வண்டிகளின் பேரிரைச்சல். சாகக்கிடப்பவர்களின் தங்க நேரங்களில் அவர்களை காப்பாற்ற நினைக்கும் ஆம்புலன்ஸ்கள் போக்குவரத்து நெரிசலில் வழிகேட்டு கெஞ்சும் அலறல்கள். இப்படி ஏதாவது ஒரு ஓசை நம் காதுகளை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

    நம் காதுகள் இயற்கை ஒலிகளை மறந்து ஆண்டுகளாகிறது. வீட்டில் கூட யாரும் யாரிடமும் பேசும் நேரம் மிக குறைந்து விட்டது. குழந்தை அழும் சத்தம். இவையெல்லாம் மறந்து விட்டது.

    உங்களுக்கு கொஞ்சம் ஞாபகபடுத்த விரும்பும் நான் கேட்ட ஒலிகளை இப்போது பட்டியலிடுகிறேன். இதையெல்லாம் கடைசியில் எப்போது கேட்டீர்கள் என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்.

    Photo0328வெளியிலும் வீட்டிலும் கேட்ட எத்தனை ஒலிகள். இயற்கையானவை இன்று நாம் கேட்பதில்லை. வீட்டின் பின்புறம் கட்டியிருக்கும் பசுவின் ஓசை. சுவரில் பல்லியின் சத்தம். பூனையின் மியாவ், குயிலின் இசை, கூரையின் மீது ஏறி நின்று கொண்டை நிமிர்த்தி சேவலின் கொக்கரிப்பு,  யானையின் பிளிறல், சுவர்க்கோழியின் இடைவிடாத சத்தம், மழைக்காலத்தில் தவளைகளின் வார்த்தைப் பறிமாற்றங்கள். காவிரியின் மதகடியில் சுழற்சியில் செல்லும் நீரின் சலசலப்பு. காற்றில் அசையும் மரங்களின் பெரிய சத்தம், மூங்கில் மரங்களின் உரசல்கள், கோவில் மணியின் ரீங்காரம், ஒலி பெருக்கியில்லாமல் கோவிலில் வாசித்து காற்றில் பரவும் நாதஸ்வரம். விழாக்காலங்களில் ஸ்வாமி புறப்பாட்டுக்கு முன்னால் வெடிக்கும் அதிர்வேட்டு. வீட்டில் தயிர் கடையும் சத்தம். ஆசாரியின் இழைப்புலி வெளிப்படுத்தும் இசை, இரவின் அமைதியில் நடப்பவர்களின் செருப்புத் தேய்வுகள், மரங்கொத்தியின் கொத்து, மீன் கொத்தியின் நீர் மூழ்கும் தொபுக், உலைநீர் கொதிக்கும் சத்தம், கடிகார பெண்டுலத்தின் அசைவின் இசை, ஊஞ்சல் கம்பியின் உரசல்கள், கன்றுக் குட்டியின் கழுத்து மணி, பெண்ணின் கால் கொலுசு தரும் இசை. கதவுகள் மூடித்திறக்கும் போது வரும் கிறீச், ஹால் கடிகாரத்தின் மணிக்கொருதரம் வரும் மீட்டல்கள் மழை நீர் பந்தலில் விழும் சத்தம், இடியோசை இவையெல்லாம் இன்னும் பட்டியல் நீளும். உங்கள் கற்பனைக்கும் கொஞ்சம் விட்டு வைக்கிறேன்.

    அவை அனைத்தையும் அனுபவித்து மகிழ்ந்த நினைவுகளினால் இந்த யுகத்து சத்தங்களில் கூட அதன் சாயல்களை என்னால் உணர முடிகிறது. இன்றைய என் புது செல்பேசியில் செய்திகள் அறிவிப்பு வரும் ஓசை அன்று நான் கேட்ட குளத்தில் உயரத்திலிருந்து சிறகொடுக்கி நீருக்குள் சட்டென்று மூழ்கும் மீன்கொத்தி எழுப்பும் ஓசையை ஒத்திருக்கிறது.

    தேங்காயோ, கறிவேப்பிலையோ அம்மியில் அரைக்கப்படும் போது மெதுவாக கனிவோடு அவை மென்மைப்படுத்தப்படும். இன்றைய மிக்ஸிகள் ஈவு இரக்கமின்றி ஒரு பெருத்த ஓசையுடன் அவைகளை கசக்கிப் பிழிவதில் எனக்கு வருத்தமே.

    என் மனதுக்கு இனியவர்களே என் வேண்டுகோளெல்லாம் அவசர யுகத்தில் உங்கள் ஓய்வு நாட்களில் கொஞ்சம் இயற்கைக்கு அருகில் இருக்க முயலுங்கள். ஒளியும் ஒலியும் நமக்கு அளிக்க நினைக்கின்ற கொடைகளை அன்போடு எடுத்துக் கொள்ளுங்கள். புற ஒளி தவிர்த்து உள்ளொளி பெருக்கி உங்கள் உள்ளத்தின் குரலின் ஒலியை கேளுங்கள். வாழ்வை ஒளிமயமாக்குங்கள் . எழுதியபின் நான் அனுபவிக்கும் மௌனம் உங்களுக்கும் கிடைக்கட்டும். இன்னொரு நாள் சந்திப்போம் சிந்திப்போம்.

    Share
  • பாபாவை நினைப்பாய் மனமே!

    -பி.எஸ்.டி. பிரசாத்

    Sai Baba Shirdi (9)

    மனமே! மனமே! மனமே!
    பாபாவை நினைப்பாய்!
    தினமே! தினமே! தினமே!
    நினைத்தாலே சுகமே!
    சாயினாதன் சன்னதி!
    வேண்டி நின்றால் நிம்மதி!  (ம‌னமே!)

    ஆண்டி என்று சொன்னவர்க்கே அரசனானவன்! – தனை
    அண்டி வந்த அடியார்க்குத் தெய்வமானவன்!
    கன்றைக் காக்கும் தாய்ப்பசு
    போலக் காக்கும் ஈசனாம்!
    கோடி கோடி பக்தரின்
    அன்பைக் கொண்ட நேசனாம்!   (சாயினாதன் சன்னதி!)

    சீரடியில் அடிவைத்தால் கோடி புண்ணியம்! – பாபா
    ஈரடியைப் பணிந்தோர்க்கு ஏது சஞ்சலம்?
    பாபா பாதம் சரணமே!
    சேர்ந்தால் இல்லை துன்பமே!
    வெற்றி மேலும் மேலுமே!
    சேரும் நாளும் நாளுமே!  (சாயினாதன் சன்னதி!)

    Share
  • முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை)

    படக்கதை – 15

    மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா

    வசனம், வடிவமைப்பு : வையவன்

    ஓவியர் : தமிழ்

    Mukkonakkilikal - 57Mukkonakkilikal - 58Mukkonakkilikal - 59Mukkonakkilikal - 60

    தொடரும்…

    Share
  • முஸ்லீம்கள் கவனிப்பார்களா?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதினோராம தேதி பின் லாடன் அமெரிக்க வர்த்தகக் கட்டடங்களை விமானங்கள் மூலம் தகர்த்தெறிந்த சம்பவத்திற்குப் பிறகு உலகம் முழுவதும் முஸ்லீம்கள் பற்றி ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கிறது.  இதற்கு முன்னும் முஸ்லீம்கள் பற்றி தவறான எண்ணம் பலரிடையே இருந்தாலும் இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு அது வெகுவாக வலுப்பெற்றிருக்கிறது.  சௌதி அரேபியாவில் அமெரிக்கப் படை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது பின் லாடனுக்கு அமெரிக்காவின் மேல் ஏற்பட்ட கோபத்திற்கு முதல் காரணம்.  பின் லாடனின் கோபம் நியாயமானதுதான் என்று நினைத்து வேறு சிலரும் அவன் செய்த செயல்களில் அவனுக்குத் துணைபுரிந்தனர்.

    ஒரு சிலர் செய்த சில கொடிய செயல்களுக்காக உலகம் முழுவதும், குறிப்பாக மேலைநாடுகள், முஸ்லீம்கள் மீது வெறுப்பைக் கொட்டி அவர்களுக்குப் பயங்கரவாதிகள் என்ற பட்டத்தையும் சூட்டின.  உலகில் மோதல்கள் எங்கு நடந்தாலும் அவற்றில் முஸ்லீம்கள் கலந்துகொண்டிருந்தால் தவறு அவர்கள் மீதுதான் என்பது போன்ற படிமத்தை மீடியாக்கள் ஏற்படுத்தின.

    இந்தியாவிலும் சுதந்திரத்திற்குப் பிறகு நிறைய இந்து-முஸ்லீம் கலவரங்கள் ஏற்பட்டன.  இந்துக்கள் பெரும்பான்மையராக இருந்ததினால் கலவரங்களுக்குக் காரணம் முஸ்லீம்கள்தான் என்பது போல் பேசப்பட்டது.  இந்தியா, பாகிஸ்தான் என்ற இரண்டு நாடுகள் பிரிட்டனால் உருவாக்கப்பட்டபோது முஸ்லீம்கள் எல்லோரும் பாகிஸ்தானுக்குக் குடிபெயர வேண்டும் என்று கூட சில இந்தியர்கள் விரும்பினர்.  இந்தியாவின்மீது முஸ்லீம்களுக்குள்ள நாட்டுப்பற்றையும்  சிலர் சந்தேகித்தனர்.

    காந்திஜியின் கொள்கைகளை அப்படியே பின்பற்றும் எங்கள் அபிமானத்திற்குரிய பிராமண வகுப்பைச் சேர்ந்த ஒரு கன்னட எழுத்தாளரே ஒரு முறை அவரிடம் நான் ஆட்டோவில் சாதாரணமாகப் போவதில்லை என்று கூறியபோது, ‘முஸ்லீம் அல்லாத ஒரு ஓட்டுநரின் ஆட்டோவில் போவதில் அவ்வளவு பயம் இல்லை’ என்றார்.  அதுவரை நான் அவர் மீது வைத்திருந்த என் மதிப்புக் கொஞ்சம் குறைந்தது என்று கூறலாம்.

    மெத்தப் படித்த சட்ட வல்லுனரான ஒரு வழக்கறிஞர் வீடு கட்ட நிலம் வாங்கும்போது பக்கத்து நிலத்துக்குச் சொந்தக்காரர் ஒரு முஸ்லீம் அல்ல என்பதை உறுதி செய்துகொண்டு வாங்குங்கள் என்று எங்களுக்கு அறிவுரை கூறினார்.

    சில நாட்களுக்கு முன் இன்னொரு நண்பரோடு (இவர் ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்) பேசிக்கொண்டிருந்தபோது காஸாவில் இஸ்ரேல் இப்படிப்பட்ட கொடுமைகள் புரிந்துவருகிறதே என்று ஆதங்கப்பட்டேன்.  எனக்கு ஆறுதலாக அவர் ஏதாவது கூறுவார் என்று நான் எதிர்பார்த்ததற்கு மாறாக ‘இஸ்ரேல் அரேபியர்களை அப்படி அடக்கிவைக்கத்தான் வேண்டும்’ என்றார்.  இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி முழுவதும் புரியாமல் இவர் பேசுகிறார் என்பதோடு முஸ்லீம்கள் என்றாலே பயங்கரவாதிகள், அவர்கள் மற்றவர்கள் கண்காணிப்பில்தான் இருக்க வேண்டும் என்பது போல் பேசுகிறாரே என்று மிகவும் வருத்தமாக இருந்தது.

    இப்போது இஸ்ரேல் அமெரிக்காவின் ஆதரவோடு காஸாவைத் தரைமட்டமாக்கிக்- கொண்டிருக்கிறது.  இஸ்ரேல் பிரதம மந்திரி நேத்தன்யாஹு என்ற ஈவு, இரக்கமற்ற பயங்கரவாதி வெஸ்ட் பேங்கையும் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.  பாலஸ்தீனத்திலிருந்த பாதிப் பேரை யூதர்கள் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்த நாளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வந்திருக்கின்றனர்.  இப்போது எல்லாப் பாலஸ்தீனர்களையும் வெளியேற்றுவதோடு மிஞ்சியிருப்பவர்களைக் கொன்றுகுவிக்கவும் நேத்தன்யாஹு திட்டமிட்டிருப்பது போல் தெரிகிறது.  இந்த மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. என்னவோ செய்துகொண்டிருக்கிறது.  அதை எல்லாம் இஸ்ரேல் சட்டைசெய்வதாகத் தெரியவில்லை.  அமெரிக்கா இஸ்ரேலின் மீது பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவதின் மூலம்தான் இஸ்ரேலின் வன்கொலையை நிறுத்த முடியும்.  ஈரானின் மீதோ சிரியாவின் மீதோ தடைகள் கொண்டுவர வேகமாக முன்வரும் அமெரிக்கா இஸ்ரேலின் மீது ஏன் அப்படிப்பட்ட தடைகளைக் கொண்டுவரவில்லை?  ஏனென்றால் ஈரானும் சிரியாவும் இஸ்லாம் நாடுகள்.

    வல்லமையில் நான் இஸ்ரேலுக்கு விஜயம் செய்தது பற்றி எழுதிக்கொண்டிருந்தபோது வாசகர் ஒருவர் ‘நீங்கள் முஸ்லீம்களுக்கு ஆதரவாகப் பேசுகிறீர்கள்’ என்று என் மேல் குற்றம் சுமத்தினார்.  நான் பதிலுக்கு, ‘ஏன் அப்படிக் கூறுகிறீர்கள்?  நான சரித்திர நிகழவுகள் எதையாவது திரித்துக் கூறியிருக்கிறேனா என்று கூறுங்கள்’ என்றேன்.  அவரிடமிருந்து பதிலே இல்லை.

    உலகம் முழுவதும் முஸ்லீம்கள் மீது ஒரு எதிர்மறையான படிமம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் முஸ்லீம்கள் ஏன் இன்னும் குரானில் கூறியிருப்பதாகச் சொல்லிக்கொண்டு பழமைவாதத்தை விட மறுக்கிறார்கள்?  சமீபத்தில் சிரியாவில் தவறாக நடந்துகொண்டதற்காக  ஒரு ஆணுடன் தகாத உறவு வைத்திருந்ததாகச் சொல்லி ஒரு திருமணமான பெண்ணை கல்லால் அடித்தே கொன்றிருக்கிறார்கள்.  எவ்வளவு பெரிய மிருகத்தனம்!  அவள் செய்தது தவறே என்றாலும் இப்படித் தண்டனை கொடுக்க வேண்டுமா? இறக்கும் வரை அவளைக் கல்லால் அடித்தபோது அவள் எத்தனை வேதனை அனுபவித்திருக்க வேண்டும்?

    அமெரிக்காவில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை மனிதாபிமானத்தோடு நடத்துகிறார்கள்.  அவர்கள் இறக்கும்போது அவர்களுக்கு எவ்வளவு வேதனை குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுகிறார்கள்.  அவர்களால் இம்சிக்கப்பட்டவர்கள், கொலைசெய்யப்பட்டவர்கள் எத்தனை துன்பத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருந்தாலும் தண்டனை பெற்றவர்கள் அதே வேதனையையும் துன்பத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று அமெரிக்க நீதி நினைப்பதில்லை.  அவர்கள் சமூகத்திலிருந்து அகற்றப்பட வேண்டியவர்கள்தான், ஆனால் அதற்காக அவர்கள் வேதனை அனுபவித்து இறக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறது அமெரிக்க நீதி.  இதுவல்லவா மனித இனம் வளர்ச்சி பெற்றிருக்கிறது என்பதற்கு அடையாளம்.

    ஒரு முறை அமெரிக்காவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டபோது குற்றவாளிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டபோது அது சரியாக வேலைசெய்யாமல் அவன் ஐம்பது நிமிடங்கள் வலியால் துடித்து இறந்த சம்பவம் அமெரிக்காவில் பெரிய விவாதங்களை எழுப்பியது.  இனி ஒரு போதும் இப்படி நடக்கவிடக் கூடாது என்று பலர் குரல் எழுப்பினார்கள்.  இப்படி மனித இனம் ‘வளர்ச்சி’ அடைந்துகொண்டிருக்கும்போது உயிர் போகும் வரை கல்லால் அடிப்பதையே ஒரு பெண்ணுக்குத் தணடனையாக வழங்கவேண்டுமா?

    ரம்ஜான் நோன்பின்போது ஒருவன் தாகம் தாங்க முடியாமல் தண்ணீரைக் குடித்ததற்காக அவனுக்குச் சவுக்கடி வழங்கப்பட்டிருக்கிறது ஈரானில்.  இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான செய்கைகளில் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் சமூகங்கள் ஈடுபடலாமா?  அவன் நோன்பைச் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்றால் அவன்தானே நரகத்திற்குப் போவான்?  அதைப் பற்றி ஏன் சமூகம் கவலைப்பட வேண்டும்?  மேலும் இப்படி நோன்பு மூலம்தான் இறைவனை அடையலாம் என்ற மூட நம்பிக்கையை இன்னுமா வைத்திருக்க வேண்டும்?  பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துபவர்களை இறைவன் எப்போதும் தன் பக்கம் சேர்த்துக்கொள்வான் என்பதை இந்தக் காலத்தில் கூட ஒரு சமூகம் உணரவில்லையா?

    உலகம் முழுவதும் வாழும் முஸ்லீம்களே, உலகத்தில் உங்கள் படிமத்தை உயர்த்திக்கொள்வதற்கு இது போன்ற  செயல்களை விட்டு நீங்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டும் என்பதை தயவுசெய்து உணருங்கள்.

    Share
  • மல்லிகை என் மன்னன் மயங்கும் …

    — கவிஞர் காவிரிமைந்தன்.

    malligai en mannan mayangum

    எத்தனையோ மலர்களிங்கே மண்ணிலிருந்தாலும் மல்லிகைக்கென்று ஒரு மகத்தான இடம் மங்கையரிடம் மட்டுமில்லை,  ஆடவரின் உள்ளங்களிலும் உண்டு!  வெள்ளை நிறத்தில் மொட்டாகக் கூடிச் சரமாய்த் தொடுக்கப்பட்டுப் பின் மெல்ல மெல்ல இதழ் விரித்து மணம்தனைப் பரப்பி மனதையும் மயக்கும் மலரன்றோ? மஞ்சமென்றதும் மல்லிகைதான் முதலில் நினைவுக்குள் தோன்றும்! மங்கையரின் கூந்தலில் பெரும்பாலும் இடம் பெறுகின்ற மலர் – மல்லிகை!  எனவேதான் ‘தீர்க்கசுமங்கலி’ திரைப்படத்தில் ‘புன்னகை அரசி’ கே.ஆர்.விஜயா அவர்கள் நடிப்பில் உருவான பாடலிலே..

    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ….

    கவிஞர் வாலி வரைந்தளித்த பாட்டு!  ஏழிசை ஸ்வரங்கள் என்றால் அந்த ஸ்வரங்களாகவே வாழும் திருமதி. வாணி ஜெயராம் அவர்களின் நாதலயஸ்வரம் கலந்த குரலில் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்களின் மென்மையான இசையில் இதயங்களை ஈர்க்கும் பாடல்!  மயக்கும்  பாடல்!  மல்லின்கையின் மயக்கம் இப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் கூட வருகிறதே!  கவிஞரின் பொற்காலக் கூட்டணியில் விளைந்த அற்புத முத்துக்களில் இதுவும் ஒன்று!  ஏ சி திருலோகசந்தர் அவர்களின் இயக்கத்தில் உருவான மறக்க முடியாத பாடல்!

    vaalimsvvanikrv

    காணொளி: http://www.youtube.com/watch?v=OXb-MnTstR0

    பாடல்: கவிஞர் வாலி
    திரைப்படம்: தீர்க்க சுமங்கலி (1974)
    இசை: M S விஸ்வனாதன்
    குரல்: வாணி ஜெயராம்
    இயக்கம்:A C திருலோகசந்தர்
    நடிப்பு: முத்துராமன், K R விஜயா

     
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    வான் மேகங்கள் வெள்ளி ஊஞ்சல் போல்
    திங்கள் மேனியை தொட்டு தாலாட்டுது
    குளிர் காற்றிலே தளிர் பூங்கொடி
    கொஞ்சி பேசியே அன்பை பாராட்டுது
    என் கண்ணன் துஞ்சத்தான்
    என் நெஞ்சம் மஞ்சம் தான்
    கையோடு நான் அல்லவோ
    என் தேவனே உன் தேவி நான்
    இவ் வேளையில் உன் தேவை என்னவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    பொன் மாங்கல்யம் வண்ண பூ சரம்
    மஞ்சள் குங்குமம் என்றும் நீ தந்தது
    ஓராயிரம் இன்ப காவியம்
    உந்தன் கண்களில் அள்ளி நான் தந்தது
    நம் இல்லம் சொர்க்கம் தான்
    நம் உள்ளம் வெல்லம் தான்
    ஒன்றோடு ஒன்றானது
    என் சொந்தமும் இந்த பந்தமும்
    உன்னோடுதான் நான் தேடிக் கொண்டது
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ
    என் நேரமும் உன் ஆசை போல்
    பெண் பாவை நான் பூ சூடிக்கொள்ளவோ
    மல்லிகை என் மன்னன் மயங்கும்
    பொன்னான மலரல்லவோ

    Share
  • காணவில்லை

     

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (12)

    காணவில்லை

    (கேட்டு மகிழ சொடுக்குங்கள் மேலே)

     

    images (2)
    சிட்டுக் குருவிகளைக் காணவில்லை என்று
    விசனத்தோடிருந்தார்கள்
    நான்மட்டும்
    கைகளை மடக்கிக் கழுத்தைப் பொருத்தி
    அண்ணாந்தபடி என்னுள்
    மல்லாந்திருந்ததைக் கண்டு
    நேயமற்றவன் என்று
    நெருங்கி விலகினார்கள்

    எப்படிச் சொல்வது…?

    ஒருநாள்
    எதையோ திறக்கப்போய்
    இதயம் திறந்துகொண்டபோது
    கூடமெங்கும் சிட்டுக் குருவிகளின்
    குதூகலம்.

    ஒரேபாட்டு, தன்னைத் தானே
    ஓயாமல் பாடிக்கொள்வதைப் போல
    எல்லாக் குருவிகளும்
    ஒரேமாதிரியாய்த்தான் இருக்கின்றன.

    எத்தனை இருக்கும்?
    எப்படித் தெரியும்??
    எழுத்துக் கூட்டியா பார்ப்பார்கள் மழலையை?

    ஒருவேளை
    மூச்சுவிடாமல் இங்குமங்கும் பறந்தபடி
    என்னவோ சொல்லிக்கொண்டே இருப்பதால்
    ஒன்றுதான் நூற்றுக்கணக்காய்த் தெரிகிறதா?

    இருக்கட்டும்
    இவைகளின்….இல்லை…இதன் தயவில்தான்
    இதயம் தட்டுப்பட்டது.
    இரவுபகலை அறவே காணோம்
    சிட்டுக் குருவிகளின் கீச்சுக்கீச்சே
    இதயத் துடிப்பாகிவிட்டது

    கணநேரம் அந்தக் கீச்சுக்கீச்சு நின்றால்
    அதே கூடத்தில் துளி இறகாய்
    நானே
    விழுந்திருக்கும் வினோதம் கண்டு
    மீண்டும் துவங்கும் கீச்சுக்கீச்சால்
    மீளவா போகிறது உயிர்?

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

    crazy

    “கனக்கின்ற மாரியில், கோகுலத்தைக் காக்க,
    குணக்குன்றாம் கண்ணனவன் கோவர்த், -தனக்குன்றை,
    பேர்த்தெடுத்த பாவத்தைப், போட்டோ பிடித்ததுபோல்,
    வார்த்தெடுத்த கேசவர்க்கு வாழ்த்து”….கிரேசி மோகன் ….

     

    Share
  • சிட்டுக்குருவிக் கூட்டமே!

    இசைக்கவி ரமணன்

     

    உனக்கே உனக்காக  (11)

     

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    (பாடல்)

    south-indian-women-paintings-wallpaper

    சிட்டுக்குருவிக் கூட்டமே!

    சில்லுவண்டுச் சீட்டியே!

    சொட்டுச் சொட்டா எறங்கிவந்து தோளெத்தொட்டு மூச்சுப்பட்டு

    மொகவாயெ ஏந்தி என்ன

    முழுக்க முழுக்க மூழ்கடிக்கும் பரவசமே!

     

    பரவசமே! ஈசல்

    பரபரப்பே!

    படபடக்குற கண்ணுக்குள்ளெ பளபளக்குற மின்னலிலே

    கெறங்கிப்போன மனசக்கிள்ளிக்

    கிலுகிலுப்பை ஆட்டிக்கிட்டுச்

    சிரிப்பவளே சிரிப்பவளே சிரிப்பவளே

     

    மனசெப் பந்தாக்கி மதில்மேலே எறியாதே! அது

    மருதாணிக் கைக்குள்ளெ மறுபடியும் சேரும்வரெ

    மாருத்துடிக்க வெக்காதே!

    கனவெயும் நெனவெயும் கலக்கிப்போட்டுக் கொழப்பாதே!

    காலத்தெ நிறுத்திவச்சுக் காவடிச் சிந்து பாடாதே!

     

    உள்ளங்கையி ரேகையே! என்

    உசுரெக் குலுக்கும் ராகமே!

    மெள்ளவுள்ளெ வந்திடாமெ மினுக்கிக்கிட்டு மேடையேறி

    நீட்டிப் படுத்துகிட்டு

    கொலுசுக் காலு கிணுகிணுங்கும் ஒய்யாரியே!

     

    ஒய்யாரியே! அட என்

    உல்லாசமே!

    ஒண்ணும் மிஞ்சாமெ ஊரெவாரிச் சுருட்டிக்கிட்டு

    ஒண்ணுமே தெரியாமெ

    கண்ணக்கொட்டி எதிரெ நிக்குற கைவிலங்கே!

     

    வெள்ளத்துக்கே திடுதிப்புன்னு தாகம்வந்து சேருமா?

    விறுவிறுன்னு வீதியேறி வீட்டுக்கதவத் தட்டித்தட்டி

    ஏக்கத்தோடு நிக்குமா!

    கொள்ளைக் கூட்டம்நம்மெக் கும்பிடுபோட்டுப் பாக்குமா?

    கொடுக்க வந்ததெய்வம் பழெயகடனக் கேக்குமா?

     

    ஆலவூஞ்சல் ஆட்டமே! அட என்

    அந்தரங்கத் தோட்டமே!

    காலு தாளம் போடும்போது ககனம் கரகம் ஆடுதடி

    காத்துக்குள்ளே மூச்சாகி மூச்சுக்குள்ளே உசுராகி

     

    உசுருக்குள்ளே சிரிப்பவளே! என்னெ

    உருக்கி உருக்கி வளர்ப்பவளே!

    வருசம்மாசம் வாரமெல்லாம்

    வாசலோடு கோலமாச்சு

    வந்துசேர்ந்த ஒருகணந்தான்

    பூசணிப்பூ சிரிப்பாச்சு!

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம்-கிரேசி எண்ணம்

     

    கிரேசி மோகன்

     

    crazy

    “நீலவுடல் மஞ்சளாச்சு, பீலிமயில் பின்னலாச்சு,
    கோலமிதன் காரணம் கூறுகண்ணா!, -ஆலமுண்ட,
    நாரிபாகன் போலநீயும், மாறினாயோ ,கேசவனின்,
    தூரிகை வண்ணத்தில் தோய்ந்து”….!கிரேசி மோகன் ….

    Share