இந்த வார வல்லமையாளர்!

ஆகஸ்ட் 4, 2014

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்கள்

kamatchi

இவ்வார வல்லமையாளர் விருதிற்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு அவரது வலைப்பூவைத் தொடங்கிய ஆண்டுக்கு ஓராண்டு முன்பு வரை கணினியைப் பயன் படுத்தத் தெரியாது.  ஆனால் அவருடைய 78 வயது என்பது அவரது ஆர்வத்திற்கு ஒரு தடையாக இருக்கவில்லை.  விகடனின் தீவிர வாசிப்பளரான இவர், பதிவுகளைப் படித்து கருத்துரைகளையும் வழங்கி வருபவர்.  பத்திரிக்கைகளை உடனுக்குடன் இணையம் மூலம் படிப்தற்கும், எழுதுவதற்கும் தனது மகனின் உதவியால் கணினியைக் கையாளக் கற்றுக் கொண்டதுடன் தானும் எழுதத்  தொடங்கி, தனது வலைப்பூ பதிவில் கருத்துரைக்கும் வாசகர்களுடனும் உற்சாகமாக கலந்துரையாடுகிறார்.

இவரை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்தவர் வல்லமை வாசகர் ரஞ்சனி  அவர்கள். முதுமைக் காலத்திலும் தன்னால் இயன்ற அளவு பயனுறப் பொழுதைக் கழித்து, தனது எழுத்து ஆர்வத்தின் மூலம் தனக்குத் தெரிந்தவற்றை பிறருக்குப் பயன்படும் வகையில் எழுதி வரும் “சொல்லுகிறேன் காமாட்சி” அம்மையாரை இவ்வாரத்தின் வல்லமையாளராக அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம்.

காமாட்சி அம்மையார் சிறு வயதில் ஒரு பெரிய நகரில் பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்களில் பெண்கல்விக்கு இருந்த வசதியற்ற சூழலில் எட்டாம் வகுப்புடன், அவருடைய 12 ஆவது வயதில் அவருடைய பள்ளிப்  படிப்பு நின்று போயிருக்கிறது.  அண்டை அயல் வீடுகளில் உள்ளவர்களுக்கு நூல்கள் படித்துக் காட்டியும், கடிதங்கள் எழுத உதவியும் வந்திருக்கிறார். 1945 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விமுறையை அரசு அறிவித்த பொழுது மாணவர்கள் தொகை அதிகமாகிவிட  ஆசிரியர் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.  இவர் படித்த பள்ளியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார்  (அந்தக் காலத்தில் E.S.L.C படித்தாலே ஆசிரியர் பணி புரியலாம்). சுதேசமித்திரன்  போன்ற பத்திரிக்கைகளில்,கதைகளும், பலவகை சமையல் குறிப்புக்களும் எழுதி சன்மானங்களும் வாங்கி இருக்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, அவர் வசித்த நேபாளத்திலிருந்து  மடல்கள் அனுப்பினாலே ஏற்படும் தாமதம், குடும்பப் பொறுப்பு, ஐந்து குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பு ஆகியவற்றினால் இவரது எழுத்துப்பணி தடை பட்டிருக்கிறது.  பிறகு முதுமைக்காலத்தில் தனது மகனுடன் ஜெனிவாவில் வசிக்கத் துவங்கியதும் இணையம் மூலம் தனது எழுத்தார்வத்தை புதுப்பித்துக் கொண்டுள்ளார்.  காமாட்சி அம்மையார் 1930 களில் பிறந்தவர். அவர் தனது 78 ஆவது வயதில் வர்ட்பிரஸ் (wordpress.com)  வலைப்பூ தொடங்கி எழுதத் துவங்கியதே ஒரு சாதனைதான்.

ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, தற்பொழுது  தனது 82 ஆவது வயதிலும்  தொடர்ந்து  “சொல்லுகிறேன்”  என்ற தலைப்பில் தனது வலைப்பூவில் எழுதி வருகிறார். சமையல் குறிப்பில் தொடங்கி தனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் பகிர்ந்து கொள்வேன் என்று வலைப்பூவில் தன்னைப்பற்றிய அறிமுகப் பகுதியில் குறிபிட்டுள்ள காமாட்சி அம்மையார், அதைப் போலவே பெரும்பான்மையான சமையல் குறிப்புகளும், அவற்றுடன் பயணக் கட்டுரைகள், விழாக்கள், சில நினைவுகள்,கடிதங்கள், கதைகள், துணுக்குகள்,  நடப்பு என்ற பற்பல தலைப்புகளின் கீழும் தனது எண்ணங்களைப் பதிவு செய்து வருகிறார்.  அத்துடன் தனது பதிவிற்கான புகைப்படங்களையும் தானே எடுத்து பதிகிறார் என்பது  இவரது தனிச் சிறப்பு. திரு சைபர் சிம்மன் ’80 வ‌யது பாட்டியின் வலைப்பதிவு!’ என்றும் இவரது வலைப்பூவை அறிமுகப்படுத்தியுள்ளார். திருமதி காமாட்சியின்  வலைப்பூ அவள் விகடனிலும் அறிமுகம் ஆகியுள்ளது.

ஓர் அன்னையர் தினப் பதிவாக தனது அன்னையைப் பற்றிய அந்தக் கால நினைவுகளை அசை போடத் தொடங்கியவர் தொடர்ந்து  அடுத்த ஆண்டு வரை பதினைந்து பதிவுகளுக்கு அக்கால நினைவலைகளில் நீந்திச் செல்கிறார்.  அதன் வழியாக சென்ற நூற்றாண்டின் ஆரம்பக் காலங்களில் மக்களின் வாழ்க்கையை, குறிப்பாக பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய கால வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.  “பழைய காலத்தில் பெண்களுக்கு வாழ்க்கை எப்படியெல்லாம் அமைந்தது என்பதின் சிலரின் குறிப்புகள்…… அந்த நாளைய சமாசாரங்கள். இந்த கதையெல்லாம் யாராலே சொல்லமுடியும் ? பிடிச்சா படியுங்கோ. அவ்வளவுதான்…” என்று முன்குறிப்புகள் கொடுத்துத் தொடர்ந்துள்ளார்.  அப்பதிவுகளில் இருந்து ஒரு சில பகுதிகள் மட்டும்  படித்து மகிழ கீழே கொடுக்கப்பட்டுள்ளது….

அன்னையர் தினத் தொடர்வு

என் அம்மாவைப் பற்றி எழுதுகிறேன் என்று சொன்னேன். அவர் இருந்தா  நூறைவிட அதிகம் வயது. இருக்க வாய்ப்பில்லை. அவரின் சின்ன வயது அனுபவங்களைப் கேட்டபோது காலம் எப்படியெல்லாம் இருந்தது என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. அவரின் சிறிய வயது காலத்தில்  விவாகம் என்பது பெண் குழந்தைகளுக்கு அவசியம் என்பதுடன், உள்ளூரிலேயே ஸம்பந்தம் செய்ய வேண்டும்,  என்பதால்,  சாப்பாட்டிற்கு கஷ்டமில்லாது பார்த்துக் கொள்ளக் கூடியவரைப் பார்த்தார்களே தவிர நல்ல இடம் கிடைக்கும் என்றுவேறு ஊர்களில் வரன் தேடுவதில்லை. கஷ்டப் பட்டாலும், கண்ணெதிரே இருப்பதை விரும்பினார்கள்.  ஆதலால் வயது வித்தியாஸம், பெரியதாகத் தெரிவதில்லையாம். அந்தந்த ஸீஸனில் விளையும் பயிர் பச்சைகள் போல, கிடைக்கும் மாப்பிள்ளைகளைத் தேர்ந்தெடுப்பார்கள போலும்………..

……. மற்றொரு பதிவில் …….

அது ஒருகாலம்.  குழந்தை வைத்தியம் ஸரிவர இல்லாத காலமென்றும் சொல்லலாம். மருந்துகள்   கண்டு பிடித்த காலம் அது என்றும்  சொல்லலாம். எங்கு நோக்கினாலும்    ஒரு வயதுக் குழந்தைகள்  வயிற்றைப் பெரியதாக முன்நோக்கித் தள்ளிக் கொண்டு, சரிந்த தோள்களும், மெலிந்த கால்களுமாக உட்கார்ந்து கொண்டிருக்குமே தவிர சுரு சுருப்பாக இராது. கண்களில் ஒரு ஏக்கம். அழுகை என ஈரல், குலைக்கட்டிக்கு ஆளாகி  இம்மாதிரிக் குழந்தைகள்தான் பார்க்கக் கிடைக்கும். கட்டி விழுந்த குழந்தை.,   மாதமொரு  முறை  ஜம்மி வெங்கட ரமணய்யாவின் அருகிலிருக்கும் பெரிய ஊர்களுக்கு அவரின் விஜயம் எல்லா மாதங்களிலும் ஒரே குறிப்பிட்ட தேதியில் அவர் வருகைக்காக அம்மாவுடன் பயணிக்கும். நல்ல    வார்த்தை  டாக்டர்  சொல்ல  வேண்டுமே  என்று  வேண்டும் தாயின்  உள்ளங்கள்.

பத்துரூபாய் மருந்து என்றால்   பாப்பையா மருந்து.   வியாதி கடினம். ஐந்து ரூபாய் மருந்து என்றால்  ஜம்மியோ, ஜிம்மியோ? வியாதி  ஆரம்பம். அப்படிப் பெயர்போன மருந்துகள். மிகவும் கஷ்டம், எத்தனை தேரும், தேராது என்பது. ஒரு முப்பது வருஷ காலங்கள் இம்மாதிரிதான் ஓடிக்கொண்டிருந்தது. நான் நிறைய இம்மாதிரி குழந்தைகள் பார்த்திருக்கிறேன். ஒரு ஐம்பது வருஷமாக இம்மாதிரி அவல நிலை ஓய்ந்தது என நினைக்கிறேன். அம்மாவின் முதல் ஆண் குழந்தை இம்மாதிரி இழப்பு………..

அக்காலத்தில் தனது பாட்டிகளிடம் கதைகேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரியும் பாட்டிகள் எவ்வளவு அனுபவச் சுரங்கங்களாக இருந்தார்கள் என்பது. கதைகள், வைத்தியக் குறிப்புகள், சமையல் குறிப்புகள், பாடல்கள், காலக்குறிப்புகள் எனஅவர்கள் அள்ளி அள்ளி வழங்குவார்கள்.  அந்த அருமையான வாய்ப்பினை இழந்த இக்காலதத்வருக்கு, அந்த ஏக்கத்தை தீர்க்க  ‘இணையப்பாட்டி’ போல  காமாட்சி அம்மையார்  எழுதி வருகிறார்.  இளைய தலைமுறையினருக்கு இவரது வலைப்பூ  தகவல் பலத் தரும் ஓர் அருமையான கருவூலம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

 

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

 1. இதெல்லாம்   நம்மால் முடியாதுப்பா..  என்று அலுத்துக்கொள்ளும் பலர் நம்மிலே உண்டு.

  எதையும் என்னால் செய்ய முடியும் என்று முனைவோர் அங்கும் இங்கும் கொஞ்சம் பேர்..  வயது ஒரு தடையே இல்லை..  முயற்சி இருந்தால் முழுமையாக வெற்றி பெறலாம்..  வாழ்வின் அனுபவங்கள் –  சரியாக சொல்லப்படும்போது பாடங்கள் ஆகின்றன..   மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் விளங்கும் ‘காமாட்சிகள்’ பாராட்டுக்கு உரியவராவார்.  படிப்பது.. படித்துவிட்டு வாளாவிருப்பது .. என்ன பயன்?  படித்ததைப் பிறரிடம் பகிரும்போதே..  பலன் பன்மடங்காகும்..
  இப்பணியை முதுமையிலும் இக்கால நவீனக் கருவிகளின் பயன்பாட்டை .. தான் அறிந்து தக்கபடி பயன்படுத்தி தனது எண்ணங்களைப் பதிவிட்டுவரும் வல்லமைமிகு திருமதி காமாட்சி மகாலிங்கம் அவர்களை 
  வணங்கி உள்ளம்நிறைந்து பாராட்டுவோம்…

  அன்புடன்..
  காவிரிமைந்தன் 
  http://www.thamizhnadhi.com

 2. எனது பரிந்துரையை ஏற்று திருமதி காமாக்ஷிமா வை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து கௌரவித்ததற்கு நன்றி, தேமொழி.

  காமாக்ஷிமா விற்கு வாழ்த்துக்கள். 

 3. அன்புள்ள தேமொழி,
  காமாட்சி மாமியைப் பற்றி நான் போட்ட சிறிய கோட்டை ஹைவே ஆக மாற்றி மிகச் சிறப்பாக அவரை கௌரவித்திருக்கிறீர்கள். பலமுறை படித்துப் பார்த்தேன். படிக்கப்படிக்க மனநிறைவு அதிகமானது. உங்கள் எழுத்து வன்மை வியக்க வைக்கிறது. மறுபடியும் எனது மனம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

  அன்புடன்,
  ரஞ்சனி நாராயணன்

 4. அன்புள்ள திருமதி. காமாக்ஷி மாமிக்கு அநேக நமஸ்காரங்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள். 

  வல்லமையாளரை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ள வல்லமை மின் இதழுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் 
  கோபு

 5. வல்லமை மின் இதழில் என்னை வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்துப் பாராட்டியதற்கு வல்லமைக் குழுவின் யாவருக்கும், என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வயதானவர்களுக்கு இது எவ்வளவு ஸந்தோஷத்தைத் தருகிறது என்பதை அனுபவித்தவர்களுக்கே நன்றாகத் தெரியும். மீண்டும் அன்பார்ந்த நன்றிகள். எழுதுவதை நிறுத்திவிடவேண்டும் என்ற முடிவுக்கு வந்து கொண்டிருந்த என்னை வேண்டாம்,தெரிந்ததை எழுது என்று சொல்வதுபோல இருந்தது உங்களின் பாராட்டு.
  ரஞ்ஜனி அவர்கள் கோடிட்டதை எவ்வளவு பெரிய கோலமாக வரைந்து கொடுத்துள்ளீர்கள்.
  ரஞ்ஜனிக்கும் மிக்க நன்றி.
  திரு.கோபால கிருஷ்ணன் அவர்களும், ஊக்கம் எப்போதுமே கொடுப்பவர்.. அவருக்கும்,திரு காவிரி மைந்தன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
  ஆசிகளுடனும்,அன்புடனும் காமாட்சி மஹாலிங்கம்.

 6. ரஞ்ஜனி நீங்கள் இருக்கும் இடத்திற்கு என்னையும் அழைத்துப் போவதற்கு மிகவும் நன்றி. வல்லமையாளர்கள் எல்லோரையும் படித்துக் கொண்டிருக்கிறேன்.
  எவ்வளவு அழகாக அறிமுகப் படுத்துகிரார்கள்.வியந்து போகிரேன். அன்புடன்

 7. திருமதி தேமொழி அவர்களுக்கு மிகவும் அழகாக தொகுத்துக் கொடுத்துப் பாராட்டியதற்கு மிகவும் ஸந்தோஷம். அன்புடன் காமாட்சி.

 8. திருமதி.காமாட்சி மகாலிங்கம் அவர்களின் வலைப்பூ பார்த்து அசந்து விட்டேன்.. இத்தனை வயதிலும் எவ்வளவு அழகாக எழுதுகிறார். வாழ்க்கை தந்த விவேகத்தை மற்றவர்களுடன் அருமையாகப் பகிர்ந்து கொண்டு வருகிறார்.. அன்னையர் தினப் பதிவுகள் படித்து மெய்மறந்தேன். என் பாட்டியுடன் கழித்த காலங்கள் கண்முன் தெரிகின்றன… திருமதி.தேமொழி அவர்களே! எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது உங்களுக்கு!..

  திருமதி.காமாட்சி மகாலிங்கம் அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களும் பணிவான நமஸ்காரங்களும்.. தாங்கள் வாழும் காலத்தில் நானும் வாழும் பேறு பெற்றதை எண்ணி மகிழ்கிறேன்!.

 9. Maami, 

  Namakaram and Congratulations on this honor. I am not sure how many at your age will even want to learn operating a computer! It’s amazing to see your enthusiasm. No one will believe your age if had not mentioned in your blog.

  Please continue the good work that you are doing and pray the Almighty to bless you with many more years of selfless service. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.