Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (112)

    –சக்தி சக்திதாசன்.

    kaviyarasuஅன்பினியவர்களே!

    இனிய வணக்கங்கள். கவியரசர் கண்ணதாசன் பிறந்த மாதத்தின் கடைசி வாரத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவியரசர் கண்ணதாசன் என்னுள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கங்கள் போன்று வேறு எவருமே ஏற்படுத்தியது கிடையாது என்று சொன்னால் மிகையாகாது.

    பதின்ம வயதுகளின் இறுதியில் லண்டனில் காலடி வைத்த எனக்கு ஆன்மீகம், தத்துவம் என்பனவற்றில் அந்தக் காலக்கட்டத்தில் எவ்வித ஈடுபாடுமே கிடையாது.

    காதல் எனும் அந்த மூன்றெழுத்தின் அர்த்தம் புரியாமல் வனப்புள்ள வனிதையரின் பால் மனம் செல்வதும், அவ்வுணர்வுகளுக்குகந்த கவியரசர் பாடல்களை மனம் முணுமுணுப்பதுமே அப்போதைய கவியரசரைப் பற்றிய எனது புரிந்துணர்வாக இருந்தது.

    காலம் கரையக் கரைய, வாழ்வின் வளைவு சுளிவுகளுக்குள்ளாக  நுழைந்து வெளியே வரும் போது அடைந்த வேதனைகள், மகிழ்ச்சிகளினால் விளைந்த இன்ப, துன்ப வலிகள், அவை விட்டுச் சென்ற அனுபவ வரிகள் இவைகளுக்கெல்லாம் காரணங்களைத் தேடி மனம் ஓலமிடும் போது, அங்கே அப்போது ஒவ்வொரு நிகழ்விற்கும் அவர் தீட்டிய ஒவ்வொர் பாடல் மருந்தாகியது.

    கவியரசரின் அனுபவ ஞானம், அந்த ஞானத்தின் ஆழம் என்பன அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது..

    வாழ்வின் உறவுகள் கொடுத்த அடிகளின் வலி தாங்காமல் எனதுயிர் நண்பனோடு நான் நிகழ்த்திய மன உணர்வுப் பரிமாற்றங்களின் பின்னே அவன் எனக்கு ஒவ்வொன்றாய் கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களை ஒவ்வொரு பாகத்தையும் அனுப்பினான்.

    படிக்கப் படிக்க நெஞ்சம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. ஆமாம் எங்கெங்கு அவரின் இதயந் தொட்ட உணர்விகளின் வரிகள் அவருக்கு ஏற்பட்ட வலிகளை விளக்கினவோ, அவைகளில் பல எனது வலிகளின் காரணங்களையும் தொட்டுக் காட்டி நின்றன.

    அவரது பாடல்கள், அவற்றில் துள்ளி விழும் வரிகளவை ஒவ்வொன்றும் வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்தன. ஆம், கவியரசரின் பாடல்களுக்குள் புகுந்து அவற்றின் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களைத் தேடினால் அவை எமது மனநிலைக்கேற்ப வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அனுபவங்களுக்குத் துணை வரும்.

    எதோ ஒரு இடத்தில் படித்ததாக ஞாபகம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த “தெய்வத்தாய்” எனும் படத்திற்காக டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் பாடும் பாடலான “பேசுவது கிளியா ? இல்லை பெண்ணரசி மொழியா” எனும் பாடலை யாத்தவர் கவியரசர். அப்பாடலைப் பற்றி மக்கள் திலகமும் அவருடைய அபிமானி ஒருவரும் மக்கள் திலகத்தின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, வந்தவர் மக்கள் திலகத்திடம் கவியரசரின் திறமைதான் என்ன, உங்கள் வாழ்க்கைச் சரிதத்தை இரண்டே இரண்டு வரிகளில் இயம்பி விட்டாரே என்று கூறும் போது, அப்படியா அது என்ன என்று மக்கள் திலகம் கேட்க;

    “சேரனுக்கு உறவா ? செந்தமிழர் நிலவா ?” எனும் வரிகளில் கேரளத்தில் பிறந்து இன்று தமிழர் மனங்களிளெல்லாம் நிலவாக ஒளிவீசிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னதும் மக்கள் திலகமே ஒரு கணம் திகைத்து விட்டாராம்.

    என் வாழ்க்கையிலே நான் சந்தித்தோர் அநேகம் பேர் எனக்கு உதவியாக உந்து சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர். ஆனால் என்ன ஏமாற்றி விட்டுச் சென்றவர்கள் சிலர்.

    அப்படியான ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்தது கவியரசர் அவர்களின் பாடல்களும் அவரது படைப்புக்களுமே.

    “வனவாசம்” பின்பு “மனவாசம்” என்று தனது வாழ்க்கைச் சரிதத்தை திறந்து வைத்த போது, ஏதோ அவர் ஒரு நூலை ஆக்கினார் என்று எண்ணுவோர்கள் பலரிருக்கிறார்கள். ஆனால் அவராக்கிய அந்த நூல்கள் எத்தனை பேரின் விடையறியா வினாக்களுக்கு விடையளித்து மனதில் ஒரு ஆறுதலைக் கொடுத்துள்ளது என்பதை உணர்தோர்கள் சிலரே.

    கவியரசரின் எழுத்துகள் , படைப்புகள் இன்றும் நிலைத்திருப்பது அவைகள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடைந்த காரணத்தினாலேயே.

    அப்படி பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடையக் காரணமாகவிருந்தது … அவருடைய எளிமையான  எழுத்துக்களே. அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது பாடல்களும் எழுத்துக்களும் இருந்தமையாலேயே…

    வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது நிலையானதல்ல. இன்று வெற்றி பெற்றோர் நாளை தோல்வியடையலாம், நாளை தோற்போர் அடுத்த நாளே ஜெயிக்கலாம் இதை,

    “புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
    வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”

    என்று எத்தனை எளிமையாக தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம்தான் இன்றுவரை அவரது பெயரை  உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    எழுதும் என் விரல்களுக்கு உத்வேகத்தையும், எழுத வேண்டும் அது பலரையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலை எனக்கு அளிப்பதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ணங்களே !

    இன்று புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பல படைப்பாளிகளை உருவாக்கித் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று கவியரசரின் ஆற்றல் என்று சொன்னாலது மிகையாகாது.

    கம்பர், வள்ளுவர் என்போர் போன்ற அறிஞர்களின் ஆக்கங்களை அனைவரும் புரியும் படியாக எளிய நடையில் நமக்களித்தவர் கவியரசரே !

    என் மானசீகக்குருவைப் பற்றிய எனது சில கருத்துகளை அவர் பிறந்த இம்மாதத்திலே என் அன்பு வாசகர்களுடன் இம்மடல் மூலமாகப் பகிர்ந்து கொள்வது என் நெஞ்சத்தை நிறைக்கிறது

    “நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
    எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை”

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • உன்னைக் கண்டு நானாட…

    –கவிஞர் காவிரிமைந்தன்.

    unnaikkandu

    ஸ்ரீதரின் கைவண்ணத்தில் வெற்றிப்படைப்பு கல்யாணப் பரிசு!  பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் படத்திலே  கனகச்சிதமாய் பொருந்த இசையமைத்த மேதை ஏ.எம்.ராஜா.  இந்திய அளவில் கொண்டாடப்படும் இனிய பண்டிகை தீபாவளியாகும்.  அந்த தீபாவளி திரைப்படத்தில் காட்சியாக.. அதற்கேற்ற பாடல் கதைக்கேற்ப எழுதித்தர மகிழ்ச்சியின் துள்ளலில் ஒரு முறையும், பின்னர் பிரிவின் வலியோடு மறுமுறையும் இந்த ஒற்றைப் பாடல் சில வார்த்தைகள் மாற்றங்களோடு பரிணமிக்கிறது.

    பேராசிரியர் வாணியம்பாடி கவிஞர் அப்துல் காதர் அவர்கள் ஒருமுறை பம்மலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டு பட்டிமன்ற நடுவராய் பொறுப்பேற்று தமது தலைமையுரையில்  குறிப்பிட்ட வரிகள் சிந்தை நிறைந்த ரகம்!

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா..

    நம்ம குழந்தைகளுக்கு சிறுவயதிலேயே கடன் வாங்குவதுபற்றி கற்றுத்தருகிறோம்.  வாங்குகிற முத்தத்தைக்கூட கடனில் தா.. நான் வட்டியும் முதலுமாகத் திருப்பித் கொடுத்துவிடுவதாக இயம்புவது சிறப்பே.. எனினும் சிறுவர் நெஞ்சில் கடன் மீது பற்று ஏற்பட அல்லவா இது வழிவகுத்துவிடும் என்று கேள்வி எழுப்பினார்.

    தீபாவளி என்னும் விழா கொண்டாடப்படும் நாட்களில் வருடம்தோறும் தொலைக்காட்சி, வானொலி அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப்பாடல் அன்றும் இன்றும் என்றும் நிச்சயம் இடம்பிடிக்கிறது..

    record player

    சித்திரப்பூப்போல சிதறும் மத்தாப்பூ
    தீயெதும் இல்லாமல் வெடித்திடும் டேப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு


    காணொளி: -http://youtu.be/z7h_fulvE3M

    படம்: கல்யாணப்பரிசு
    பாடல்: பாட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
    பாடியவர்: ஜிக்கி
    இசை: ஏ.எம். ராஜா

    உன்னைக் கண்டு நானாட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா… ஆ  ஆ ஆ
    உறவாடும் நேரமடா…

    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா
    கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா
    கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்
    எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்
    வல்லமை சேர நல்லவனாக
    வளர்ந்தாலே போதுமடா.. ஆ ஆ ஆ
    வளர்ந்தாலே போதுமடா..

    சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
    சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு
    தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு
    முகமோ மலரோ இது என்ன ரசிப்பு
    மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்
    வேறென்ன வேணுமடா… ஆ  ஆ  ஆ
    வேறென்ன வேணுமடா…

    உன்னைக் கண்டு நானாட
    என்னைக் கண்டு நீ ஆட
    உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
    ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாக கலந்து
    உறவாடும் நேரமடா… ஆ  ஆ ஆ
    உறவாடும் நேரமடா…

    Share
  • திருமால் திருப்புகழ் (118)

    கிரேசி மோகன்

    Vaatsalyam series #krishnafortoday Keshav
    Vaatsalyam series #krishnafortoday
    Keshav

     

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————-
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-

    Experiments with Krishna series. #krishnafortoday Keshav
    Experiments with Krishna series. #krishnafortoday Keshav

    மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்திரவில்,
    ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
    கார்முகில் வண்ணன்மேல், கோதூளி மின்னிட,
    பார்மிசை ராப்பக லாச்சு….(222)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன் நலம்தானா. -பின்னால்,
    இதுபோ லெனைநீ, இங்கிதமாய்க் கேட்டு,
    பதிலொன்(று) எழுதிப் போடு….(223)

    கண்ணா நலம்தானா, கன்று நலம்தானா,
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி,
    யசோதையாள், நந்தகோபன், யாதவரைக் கேட்டு,
    விசாரித் ததாக விளம்பு….(224)

    கல்லில் சிலையாகக், காற்றில் இசையாக,
    புல்லில் பிருந்தா வனமாக, -சொல்லில்,
    பொருளாக அல்லும், பகலாகும் கண்ணன்,
    இருதாள் எண்ணல் இணைப்பு….(225)

    பேரா யிரம்கொண்டு, ஷீராப் தியிலுறங்கும்,
    ஆரா அமுதா அடைக்கலம், -தீராத,
    பித்தாண்ட ராதையாய், புத்தாண்டில் மாறிட,
    அத்தாயென் புத்தி அமர்….(226)

    அம்மியில்லை அண்ணாந்து, அருந்ததி காணவில்லை,
    நம்முடைய சந்திப்போ நட்டநிசி, -விம்மியழும்,
    ராதைக்குக் கண்ணன், ரகசியமாய்க் கூறினான்
    கோதையே நானுன் குழவி….(227)

    ——————————————————————————————————————-

    படங்களுக்கு நன்றி:

    http://kamadenu.blogspot.in/

     

    Share
  • பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.. வருவான் வடிவேலன்.. கவியரசு கண்ணதாசன்

    கவிஞர் காவிரி மைந்தன்

    muruga

    இறையருள் இயக்குனர் கே.சங்கர் அவர்களின் இயக்கத்தில் எத்தனையோ தமிழ்த்திரைப்படங்கள் வெற்றியடைந்தது மட்டுமின்றி சரித்திரம் படைத்திருக்கின்றன. ஆலயமணி, இது சத்தியம், ஆண்டவன் கட்டளை, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில் என பட்டியல் நீளும். இதுதவிர, எடிட்டிங் துறையில் இவரின் திறமை அடிமைப்பெண் திரைப்படத்தில் சிங்கத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டையிடும் காட்சியென – பல படங்களில் பளிச்சிடுகிறது. மேலும் பொன்மனச்செம்மலுக்கு இவர் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவலாகும்.

    தமிழகத்தில் திருமுருகன் குடிகொண்ட திருத்தலங்கள் எல்லாம் தைப்பூசம் என்கிற உற்சவம் உற்சாகம் கரைபுரள லட்சக்கணக்கான பக்தர்கள் படைவீடுதோறும் படையெடுப்பதோடு, காவடிகள் பலவகையென எங்குபார்த்தாலும்,அணிவகுத்துச்செல்லும் அழகிற்குப் பஞ்சமில்லை. கடல்கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் கூட கந்தன் பெருமை ஓங்கார நாதம் முழங்க பரவசநிலையுடனே பக்தர்களின் அலைகளாக வியாபித்திருக்கிறது என்பது தமிழர்தம் வாழ்வியலில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தலையாய இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறதே!

    மேற்கண்ட நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அங்குள்ள பச்சைமலை, கதிர்கிராமம் போன்ற முருகன் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக இந்த மூன்று ஸ்தலங்களில் தான் கண்ட இக்காட்சியை (தைப்பூச விழாவை) தமிழக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே வருவான் வடிவேலன் என்கிற திரைப்படம் எடுத்து அதில் இக்காட்சியை இணைத்ததை எம்மோடு (கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தினரோடு)2001ஆம் ஆண்டு இயக்குனர் கண்ணதாசன் விருது பெற்ற தருணங்களில் பகிர்ந்தார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம், எண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இத்தகு நல்லெண்ணம் கொண்டவராய் நம் இயக்குனர் கே. சங்கர் – தைப்பூச நாளொன்றில் இம்மூன்று ஸ்தலங்களில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தனி விமானம் அமர்த்தி ஒரே நாளில் சிறப்புக்குழு அமைத்து சீர்மிகு வண்ணம் தங்கரதம் வரை முழுக்க முழுக்க படம்பிடித்து சென்னை திரும்பினாராம்.

    கிட்டத்தட்ட 20000 அடிகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருந்த அக்காட்சியை அப்படியே மக்களுக்குத் தருவததெப்படி என்கிற சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். அப்படித் தருவது டாக்குமெண்ட் படம்போல ஆகிவிடுமே என்கிற ஐயமெழ, அனைவரையும் பொறுமையுடன் பார்க்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், புதிய யுக்தியொன்றை அமைத்திட மெல்லிசை மன்னரை அணுகினாராம். தனது எண்ணத்தை எடுத்துரைத்து, தான் எடுத்துவைத்திருந்த படக்காட்சியை போட்டுக்காட்டி, இதற்காக ஒரு முழுநீளப் பாடல் ஒன்றையும் எழுதி அதற்கான இசையையும் அமைத்திடக் கேட்டிருக்கிறார்.

    எப்படியிருந்தாலும் பாடல் என்பது ஒரு சில நிமிடங்களே அமைக்க முடியும் என்கிற நிலையில் அதற்கேற்ப பல்லாயிரம் அடிகள் எடுத்து வைத்த படக்காட்சியை .. தைப்பூச நிகழ்வுகளை சில ஆயிரம் அடிகளாக தனது எடிட்டிங் திறமையால் சுருக்கித்தந்த பெருமைக்கு உரியவரானார். ஒரு சில சரணங்கள் மட்டுமே கொண்டு வரும் பாடலுக்கு பதிலாக பல வரிகளுடன் அமைக்கப்பட்ட இப்பாடலை.. முற்றிலும் புதுமையாக.. அன்றைய நாளில் பிரபலமாகயிருந்த பாடக பாடகியர்கள் தவிர பக்தியிசைப் பாடகர்களையும் சேர்த்து ஒரு அசுர சாதனையாக .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் வழங்கிய அற்புதப் பாடலிது!

    டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களுர் ரமணியம்மாள், என ஓரு பாட்டுப் பட்டாளம் பாடும் கந்தன் பாடலிது. வருவான் வடிவேலனுக்காக.. இது வெற்றி பெற்றது என்பது அடிப்படையில் ஒரு நல்லெண்ணம், அதற்கான விடா முயற்சி, கடும் உழைப்பு, கூட்டணி வெற்றி.. எல்லாம் அமைந்திட இறைவன் ஆசி வேறென்ன சொல்ல?

    எந்தப் பாடல் ஆனாலும் கண்ணதாசனின் முத்திரை வரிகள் காணலாம் அல்லவா? இதோ இந்தப்பாடலில்..

    தங்கத்தேரை வடம்பிடிக்க மலேசியா நாட்டு அமைச்சர் வரும்காட்சியில்..

    அழகப்பன் மேனிக்கு அழகுசெய்ய அரசாங்கம் வருகின்றது.. என்று சொல்லாட்சி செய்துள்ளார்.

    கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்.. அவன்
    கோவிலுக்கென்றே செலவழிப்போம்

    என்கிற வரியில் செட்டிநாட்டு மக்கள் முருகன் கோவிலுக்கு செய்யும் சேவையை நிலைநாட்டுகிறார்.

    3 Attachments

    varuvan vadivelan.jpg

    Pathu Malai

    Share
  • காற்று வாங்கப் போனேன் – பகுதி (9)

    கே. ரவி

    Smart-Air-Now
    நான் ஒரு பெரிய மனிதன் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. சுரதா, ஒளவை நடராஜன், சுகி சிவம், இசைக்கவி ரமணன், வ.வே.சு. போன்ற பெரிய மனிதர்களோடு என் வாழ்க்கை நிகழ்ச்சிகள் பின்னியிருப்பதால், சுயசரிதை எழுதும் அளவுக்கு நானும் ஒரு பெரிய மனிதன்தான் என்ற நம்பிக்கையோடு இத்தொடரைத் தொடர்கிறேன்.

    சோவுக்கு பதில் சொல்வதாக அமைந்த சுரதாவின் கவிதையை ஒட்டியும் ஆமோதித்தும் சுகி சிவம் ஒரு கவிதை எழுதினான் என்று சொன்னேன் இல்லையா? அதில் சுரதாவைப் புகழும் போக்கில் மிக அழகாக இரண்டு வரிகள் போட்டிருந்தான்.

    ‘ஆடியடங்கும் வாழ்க்கையடா’ என்று சுரதா எழுதிய ஒரு பழைய திரைப்பாடலில் வரும் இரண்டு வரிகள் தெரிந்தால்தான் சிவத்தின் கவிதையை ரசிக்க முடியும்.

     “முதலில் நமக்கெல்லாம் தொட்டிலடா – கண்
     மூடினால் காலில்லாக் கட்டிலடா”

    இவை சுரதாவின் கவிதை வரிகள்.

    சிவம் எழுதியிருந்தான்:

     “காலில்லாக் கட்டிலெனக் கவிதை சொன்னீர்
     எட்டுக்கால் கட்டிலென எதிர்த்துச் சொல்வேன்”

    சுரதா தம் கவிதையை மிகக் கச்சிதமாக முடித்திருந்தார்:

     “மாடுமுட்டிக் கோபுரங்கள் சாய்வதில்லை, மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை”

    அதை அடியொட்டி, சிவம் தன் கவிதையை இப்படி முடித்திருந்தான்:

    “எலிதாக்கிப் புலியிங்கே வீழ்வதில்லை
    எருக்கம்பூ தாமரையாய் ஆவ தில்லை”

    நான் பாராட்டினேன். படித்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள். ஒளவை நடராஜனும் முதலில் பாராட்டினார். பிறகு சிவத்தையும், என்னையும் தனியே அழைத்துச் சொன்னார்:

    ‘ராஜா, கோபுர மதிற்சுவரை மாடு முட்டுவது இயற்கையாக, அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இப்படி இயல்பான ஒரு நிகழ்வைச் சுட்டிக்காட்டிவிட்டு, மாடு முட்டும் ஆனாலும் கோபுரம் சாய்வதில்லை என்கிறார் சுரதா. அது போல், கூழாங்கல் மாணிக்கம் ஆவது இயற்கையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. ஆனால் மாணிக்கம் கூழாங்கல் ஆவதில்லை என்கிறார் சுரதா. இப்பப் பாரு ராஜா, எலி போய்ப் புலியைத் தாக்கும் நிகழ்ச்சி எங்கேயாவது நடக்குமா? இல்லை எருக்கம்பூ தாமரையாவோ, தாமரை எருக்கம்பூவாவோ ஆவதுண்டா? யோசிச்சுப் பாருங்க, அப்பத்தான் சுரதாவின் உவமைகள் எவ்வளவு யதார்த்தமானவை என்பதும், அர்த்தம் பொதிந்தவை என்பதும் புரியும்’ என்று அவர் அருமையாகப் பாடம் எடுத்த லாவகம் எங்கள் மனத்தில் அப்படியே பதிந்து விட்டது.

    மெல்ல, மெல்லப் புரியத் தொடங்கியது, சிகாமணி இல்லாமல் மனோன்மணி மட்டும் பிரயோசனமில்லை என்று. சிகா-மனோ உறவில்தான் கவிதை மலர வாய்ப்புண்டாகிறது என்ற மர்ம முடிச்சு அவிழத் தொடங்கியது.

    அந்த உறவை அற்புதமாகப் பிரதிபலிக்கும் இன்னொரு கவிதை எழுந்த வரலாற்றை இங்கே சொல்லாமல் இருக்க முடியாது. அந்த வரலாற்று நாயகரும் ஒளவை நடராஜன்தான்.

    எங்கள் கல்லூரி நாட்களில், சிவமும் நானும் ஒளவையுடன் அதிக நேரம் உடனிருப்போம். பெரும்பாலும் அப்போதெல்லாம் அவரோடு எங்கள் இருவரையும் ஒன்றாகப் பார்க்கலாம். அவர் “சங்ககாலப் பெண்பாற் புலவர்கள்” என்று முனைவர் பட்டத்துக்காக ஆய்வில் ஈடுபட்டிருந்த போது அதற்கு ஓரளவு உறுதுணையாக இருந்த பெருமைக்கு நாங்கள் இருவரும் உரியவர்கள் ஆனோம். ஒரு சிலர் நாங்கள் ஒளவையோடு சுற்றிக் கொண்டிருந்ததைக் கடுமையாக விமர்சனம் செய்யுமளவுக்கு நாங்கள் நெருக்கமாகக் காணப்பட்டோம்.

    சிறிது காலத்துக்குப் பிறகு, எங்கள் படிப்பு, குடும்பம் என்ற பணிகள் காரணமாகவோ என்னவோ சிவமும், நானும் ஒளவையை அடிக்கடி சந்திக்க முடியாமற் போய் விட்டது. பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒரு கூட்டத்தில் ஒளவை மேடையில் வீற்றிருந்தார். நான் பார்வையாளனாக அரங்கில் சென்றமர்ந்தேன். அப்போது அவர் என்னைப் பார்த்துவிட்டு ஒரு துண்டுக் காகிதத்தில் ஏதோ எழுதி அனுப்பினார். பிரித்தேன், படித்தேன், நெகிழ்ந்தேன். அந்தத் துண்டுக் காகிதத்தில் நாலு வரிகள், அமர வரிகள், எழுதப் பட்டிருந்தன:

    “ஊரார் அலர் உரைக்கக் கேட்டு – நீ
    உள்ளம் வெதுப்புறலாமா
    ஆரார் எதுசொன்ன போதும்
    யாழா முழவோடு மோதும்”

    சற்று நேரம் சிலையாகி விட்டேன். யாழும் முழவும் மோதிக் கொள்ளலாமா? ஸ்ருதியும், லயமும் இணைந்தால்தானே சங்கீதம்! எவ்வளவு பொருத்தமான ஓர் உருவகத்தை எவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டார்! அதுவரை அவர் எழுதியதாக எந்தக் கவிதையையும் அவர் எங்களிடம் படித்ததில்லை, காட்டியதில்லை. ஏதாவது கவிதை அதற்குமுன் எழுதினாரா என்றே தெரியவில்லை. அதற்குப் பிறகும் அவர் கவிதை எழுதியதாகத் தெரியவில்லை. ஒரே பாடலால் காலம் கடந்து வாழும் காக்கைப் பாடினியார், செம்புலப் பெயல்நீரார் போன்ற மிக உயர்ந்த புலவர்கள் வரிசையில் இந்த ‘யாழ்முழவார்’ சேர்ந்து விட்டார் என்றே தோன்றுகிறது.

    சிகா-மனோ சரியான அளவில் கூடிய கவிதைக்கு இது ஓர் நல்ல எடுத்துக்காட்டு என்பதால் சொன்னேன்.

    ஆனால், சிகா-மனோ உறவு போகப் போக மேலும் தெளிவுபடலாயிற்று. அப்போதுதான் முதல் பகுதியில் சொன்னேனே, சிற்றறிவு, பேறறிவு என்று, அந்த பாகுபாடும் புரியத் தொடங்கியது; சிகாமணியின் விஸ்வரூபம் கொஞ்சம் கொஞ்சமாக எனக்குத் தரிசனமாகத் தொடங்கியது.

    (தொடரும்)

    Share
  • திருமால் திருப்புகழ் (117)

    கிரேசி மோகன்

    The story of Puranjana - Keshav
    The story of Puranjana – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————–
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ———————————————–

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

    காரணம் நேற்றுண்டோம், சூரண மாற்றின்று,
    ஜீரணம் நாளைதான்: ஜீவிதம் -பூரணம்,
    கொள்ள சரண்புகு, கோகுல பாலகன்,
    கள்ள பிராந்தன் கழல்….(216)

    காமம், பொறாமை, குரோதம் இவைகளின்,
    சாமக் கிரியையால் சோர்வுற்றேன், -நாமம்,
    உரைத்தேன் முகுந்தா, உனதாழ் கடலில்
    கரைத்த பெருங்காயம் ஆக்கு….(217)

    அடிவானம் ராதை, அலைகடல் கண்ணன்,
    பிடிவாதம் இல்லா பிணைப்பு, -முடிவாக,
    ஜீவன் அலைந்து, ஜகன்நாத னோடிணையும்,
    பாவம் பரிகாரம் போகும்….(218)

    ஒன்பது ஓட்டை, உடலே உடனேநீ,
    தின்பது தூக்கம் தவிர்த்தாயர், -நண்பனின்,
    ஊது குழலாய், உருமாறி என்நாளும்,
    கீதகோ விந்தமதைக் கூவு….(219)

    குருவாயூர் பிள்ளை, திருநாமம் சொல்லி,
    வெறும்வாயை மெல்லு விடாது, -வரும்நாளில்,
    பக்திஅவல் உண்டு, பதிலுக்(கு) அளித்திடுவான்,
    முக்தியாம் செல்வம் மகிழ்ந்து….(220)

    மார்கழி மாதத்தில், மாடுகள் மேய்த்தபடி,
    ஓர்கழி ஊது குழலோடு, -ஊர்புகும்,
    கோதூளி வண்ணனே, கண்ணனே கண்ணுறங்க,
    வாதூளி ஆட விரைந்து….(221)

    ————————————————————————————————————–

     படங்களுக்கு நன்றி :

    http://bhagavatham.blogspot.in/

     

     

    Share
  • அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்

    இசைக்கவி ரமணன்

     

    எந்த உறவு சொந்தமுடன்
    எனது குறைகளைச் சுட்டிக் காட்டுமோ
    எந்த உறவு சுட்டிக் காட்டினால்
    இடைமறிக்காமல் ஏற்றுக்கொள்ளுமோ
    அந்த உறவே அமையவேண்டும்
    அன்னாய்! உன்னை வேண்டுகின்றேன்
    எந்த உறவும் அந்த உறவாய்
    இயற்றி விட்டால் பாடுகின்றேன்!

    அவரவர் போக்கில் அவரவர் பயணம்
    அவரவர் மனதில் அவரவர் சலனம்
    அழுகையும் சிரிப்பும் அவரவர் அனுபவம்
    அறியாமைகளில் ஆயிரம் தனித்துவம்!
    எவரெவர் எப்படி இருந்தால் என்ன?
    எதையும் பேச நமக்கே துரிமை?
    இருக்கும் உரிமைகள் புகழவும் போற்றவும்
    இறங்கி மேலும் இறங்கிப் பணியவும்
    ஏதும் அறியான் போலே இருப்பதும்
    இங்கிதமாக விலகவும் தானே??!!

    நேசம் இருப்பதால் நெஞ்சு பதைக்கலாம்
    நெஞ்சு பதைப்பதை நேரில் சொன்னால்
    நெருடல் முளைக்கலாம்; உரிமை மீறலாய்க்
    கருதப் படலாம்; கலகம் நேரலாம்
    வாசம் வண்ணம் வழங்குதற்கப்பால்
    வாழ்ந்து உதிரும் மலர்க்கென்ன உரிமை?!
    வாழ்த்தி வணங்கி நகர்வதல்லவா
    வழிப்போக்கர்க்கு வாய்த்த கடமை!

    தவறும் சரியும் முறையாய்த் தெரிந்தால்
    தவமும் எதற்கு? தவிப்புகள் ஏது?
    அவர்கள் அறியார்; ஆயினும் அன்பர்;
    அறிந்ததாய் எண்ணி அயரும் மழலையர்!

    ரசனைகளின் ராட்சதத்தனங்களும்
    நாகரீகத்தின் மோக முகங்களும்
    கல்வியிருந்தும் காதலிருந்தும்
    கண்ணில் ஏனோ படுவதில்லையே!
    கசடு தெரியுமா கண்ணில் இருந்தால்?
    கண்டவர் சொன்னால் மனதுதான் ஏற்குமா?
    கடவுளே! என்குறை அன்றி வேறெதும், என்
    கண்ணில் படாமல் காத்தருள்கவே!

    நான்
    நேசிக்கின்ற இதயங்களுக்காய், என்னை
    நேசிக்கின்ற நெஞ்சங்களுக்காய், உன்னை
    யாசிக்கின்றேன் ஒருவரம் அருள்வாய்!
    ஊசிமுனை அளவு கூட, அவர்கள்
    உள்ளத்தினிலே குறையின்றிக் களைக!
    உலகில் அவர்கள் நலமாய் வாழ்க!
    ஒருபிழையும் அவர் செய்யாதிருக்க!
    ஒருதீங்கும் அவரை அண்டாதிருக்க!
    வலமும் இடமும் எதிரும் பின்னும்
    மேலும் கீழும் உள்ளும் புறமும்
    நீயே இருந்தவரைக் காவல் செய்க
    நலமே அந்த நல்லவர்க்கருள்கவே!

    16.06.2014 / திங்கள் / 22.43

    Share
  • திருமால் திருப்புகழ் (116)

    கிரேசி மோகன்

    Bhagavatha:  Amritha and the Mohini avatara  - Keshav
    Bhagavatha: Amritha and the Mohini avatara – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ‘’கண்ணன் வெண்பாக்கள்’’
    ——————————————————-blogger-image-1088852207

    பாரேழை உண்டுமிழ்ந்து, பள்ளிகொண்ட பாலகனே,
    பாரேழை எந்தன் பரிதவிப்பை, -பேரேழாய்,
    மாமன்கை எட்டாது, ஜாமம்போய் எட்டானோய்,
    காமமப்பேய் கொல்லும்முன் கொள்….(210)

    மூப்பும் பிணியும், முகமன் உரைத்திடும்,
    தோற்பும் பகையும் திரண்டெழும், -காப்பாய்,
    மருதம் முறித்து, மதயானை கொன்ற,
    வரதனை நெஞ்சே வணங்கு….(211)

    பெண்பால் புணர்ச்சியாய், வெண்பா வடிவத்தில்,
    என்பால் எழுந்தருளும் எம்பிரானே, -உன்போல்,
    பொழுதை கழிக்க, புவியிலில்லை தெய்வம்,
    தொழுது கிடப்பதே தொண்டு….(212)
    ஆழ்வாரி தன்னில், அனந்த சயனத்தில்,
    ஆழ்வாரே ஆண்டாளின் அப்பாவாம், -ஆழ்வாரின்,
    பாடல் அழகால், பெருமை அடைந்தவனே,
    கூடல் அழகனே காப்பு….(213)

    ஆனைவா வென்றைக்க, ஆழியுடன் வந்தானை,
    ஆனைவாய் உண்டுமிழ்ந்த ஆழியானை, -ஆணைவாய்ச்,
    சங்கூதி பாரதம், செய்தானை பள்ளிகொள்ளும்,
    பொங்கோத ஆழியானைப் போற்று….(214)

    தீபாவளி EVE பாமா துணை
    ————————————————-
    நமக்குள் இருக்கும், நரகா சுரனார்,
    இமைக்கும் பொழுதில் இறக்க, -சமர்த்தன்,
    யதுகுலக் கண்ணன், இணைசகி பாமா,
    உதவிக்கு உண்டு உனக்கு…(215)

    ————————————————————————————————————–

    Share
  • பெரிய ஆசைகள்

    இசைக்கவி ரமணன்

     

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    மண்ணில் விழுந்த
    மழைத்துளி என்னும் ஆச்சரியக்குறியை
    உள்ளங்கையில் பம்பரம்போல் ஏந்தி
    உற்றுப் பார்க்கவேண்டும்

    ஒய்யாரி ஆடும் மழையின் இழைகளில்
    ஒருதுளியும் நனையாமல்
    கண்ணா மூச்சு ஆடவேண்டும்
    காற்றோடு

    நிலவில் வெண்ணெய் எடுத்து
    உலவும் முகிலில் ஒன்றைத் திரியாக்கி, என்
    கவிதையைச் சுடராக்கி, அவள்
    கண்ணில் படும்படி வைத்துவிட்டு, அவள்
    கண்ணில் படாமல், அவள்
    கண்களைப் பார்க்கவேண்டும்

    கால்பட்ட இடமெல்லாம்
    கார்மழை பொழியவேண்டும்
    கைபட்ட இடமெல்லாம்
    கலயம் பொங்கவேண்டும்

    காதலே கவிதையாய்
    கவிதையே கண்களாய்
    கண்களே நெஞ்சமாய்
    நெஞ்சோடு எல்லோரையும்
    நேசத்தால் அணைக்கவேண்டும்

    சின்ன வயதிலிருந்தே, சில
    பெரிய பெரிய ஆசைகள்
    பின்னிப் போட்டிருக்கின்றன
    உயிரை உலகோடு

    கர்பத்திலிருந்தே மரணம்
    கழுத்தைக் கவ்விப் பிடித்தபடிதான் இருக்கிறது
    கால்வைத்த இடமெல்லாம் பொய்மை
    கப்பித்தான் கிடக்கிறது

    எனினும்
    அழகான இந்த ஆசைகள்தான்
    அற்ப உலகில்
    அடுத்த அடியை எடுத்துவைக்க
    ஆணையிடுகின்றன

    வாழத்தானா பிறந்தோம்? மற்றவரை
    வாழ்த்துவதே வாழ்க்கைக்கு
    வலுவான காரணம். என்
    வாசலெங்கும் சூறையிலும்
    வரவேற்கும் தோரணம்

    நிறைவேறிவிடுகின்ற ஆசைகளில்
    நெஞ்சுக்கு லயிப்பில்லை
    மின்னல்களை வகைபிரித்து
    மீட்டும் வரை, என்பாடலை
    இசைக்கப் போவதேயில்லை
    எதற்கும் பொறுத்திருங்களேன்!
    மீண்டும் நான் வருவேன்
    மிரளாத வானத்தில்
    மின்னலுக்குப் பஞ்சமேது

    16.06.2014 / திங்கள் / 19,53

    Share
  • திருமால் திருப்புகழ் (115)

    கிரேசி மோகன்

    Bhagavatha --Ulukala bandhanam - Keshav
    Bhagavatha –Ulukala bandhanam – Keshav

    கண்ணன் திருப்புகழ்(வெண்பா)….
    ————————————————————
    ’’கண்ணன் வெண்பாக்கள்’’
    ————————————————–
    மீண்டும் உரலிழுத்து ,மாமருதம் சாய்த்தரவத்,
    தாண்டவம் ஆடித் தயிருண்டு, -வேண்டிய,
    ராதையை காதலித்து, போதனையாய் கீதையை,
    யாதவா வந்திங்(கு) எழுது….(204)

    பாற்கடலை இன்றுவிலை, பேரமாய்ப் பேசினால்,
    வேர்கடலை கூட வராதுகேள், -யார்கடவுள்,
    உண்டுமிழ்ந்த நீயா ? உமிழ்ந்ததை உண்ணமீண்டும்
    பண்டமாற்று வோனா பகர்….(205)

    பள்ளிதனைக் கொண்டதால் பிள்ளை பெறுவதால்
    வள்ளலென பாற்கடல் உள்ளமால், -புள்ளேறும்,
    கார்மேக வண்ணனும், ஓர்மகன் அன்னையும்,
    நேர்நிகர் ஆவார் நமக்கு….(206)

    ஓவியம் : கேஷவ்
    ஓவியம் : கேஷவ்

     

    பார்த்த சாரதி பெருமாள் கோயிலில்
    ———————————————————–

    மீசைக்கு பாரதி, ஆசைக்கு ருக்மணி,
    ஓசைக்கு வெண்சங்கின் ஓங்காரம், -பூசைக்கு
    ஆழ்வார்கள் பாசுரம்,அல்லிக் குளக்கரையில்
    வாழ்வோனை நெஞ்சே வணங்கு….(207)

    பாலுக்கும் காவலாய், பூனைக்கும் தோழனாய்அப்,
    பாலுக்கும் அப்பாலே பாதுகாக்கும், -மாலே,
    பழகிடப் பூனையே, பாய்ந்தால் புலியே,
    அழகிய சிங்கா அருள்….(208)

    ஆராரோ என்றாய்ச்சி, சீராட்டித் தன்முலைப்பால்,
    சோறாலே எவ்வாறு சொக்கவைத்தாள் ! -பாரேழை,
    உண்டு பசியாறி, ஊழியில் ஆலிலையில்,
    பண்டு படுத்தோய் பகர்….(209)
    ————————————————————————————————————–

     

    படங்களுக்கு நன்றி:

    http://bhagavatham.blogspot.in/

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(31)

    -செண்பக ஜெகதீசன்

    இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே
    யொழுக்க முடையார்வாய்ச் சொல்.
    (திருக்குறள்: கேள்வி – 415)

    புதுக் கவிதையில்…

    வழுக்கி விழாதிருக்க                                           old-man-with-walking-stick
    வகையாய் உதவிடும்
    ஊன்றுகோல்…

    வாழ்வில் அதுபோல்,
    தடுக்கி விழாமல்
    தாங்கிப் பிடித்திடும்,

    நீ
    கேட்டு நடக்கும்
    ஒழுக்கமுடையோர் சொல்!

    குறும்பாவில்…

    ஊன்றுகோல் விழவிடாது தாங்கிடும்
    உடலை,
    ஒழுக்கமுடையவர் சொல் – வாழ்வை!

    மரபுக் கவிதையில்…

    உடலது தளர்ந்த போதினிலே
         வழுக்கிக் கீழே விழுந்திடாமல்
    நடந்து திடமாய்ச் செல்லுதற்கே
         நல்ல துணைதான் ஊன்றுகோலே,
    உடலைத் தாங்கிடும் துணையதுபோல்
         வாழ்வில் வழுக்கி வீழ்ந்திடாமல்
    இடரது அகற்றிடும் இன்துணையாய்
         இயக்கிடும் ஒழுக்க முடையோர்சொலே!

    லிமரைக்கூ…

    வழுக்கி வீழ்ந்திடாதிருக்க ஊன்றுகோலுடன் செல்!
    அதுபோல் வாழ்வில்
    வழுக்கிடாதிருக்கக் கேட்டுநட ஒழுக்கமுடையோர் சொல்!

    கிராமிய பாணியில்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி,
    தடுக்கி வுளாமக் காத்திடுமே
    தக்க தொணயா வந்துடுமே!

    மனுச வாழ்க்கக் கதயிதுதான்
    ஒழுங்கானவன் பேச்சக் கேட்டா
    ஒழுங்காப் போவும் வாழ்க்கயுமே,
    வழுக்கிவுளாமக் காப்பாத்தும்
    வாழ்க்கத்தொணயாக் கூடவரும்,
    நல்லசொல்லக் கேட்டுநட
    நன்மயெல்லாஞ் சேந்துவரும்…

    தடியிது தடியிது கைத்தடி
    தாங்கிப் புடிக்கும் கைத்தடி!

     

    Share
  • பக்குவத்தை அடையாரா!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

    வானத்து வெண்நிலவு
    வசைபாடி நிற்பதில்லை                                             moon and clouds for jayarama sarma kavithai
    வண்ணமிகு தாரகைகள்
    வம்புதும்பு செய்வதில்லை
    நீலநிற முகிற்கூட்டம்
    நிந்தனையும் செய்வதில்லை
    நீள்புவியில் வாழ்பவர்கள்
    நினைத்துமிதைப் பார்ப்பதுண்டா?

    கண்சிமிட்டும் தாரகைகள்
    கண்டனமும் செய்வதில்லை
    கருமேக முகிற்கூட்டம்
    கருத்தேதும் சொல்வதுண்டா?
    சுட்டெரிக்கும் சூரியனும்
    சுடுசொற்கள் சொல்வதில்லை
    சுற்றிநிற்கும் மனிதரிதைக்
    கற்றுக்கொள்ள வேண்டாமா!

    சோலைமயில் எந்நாளும்
    தோகைவிரித் தாடிவிடும்
    காலைமாலை என்றின்றி
    கருங்குயிலும் பாடிவிடும்
    காலைவேளை வருந்தென்றல்
    கன்னமதை வருடிவிடும்
    ஞாலமீது உள்ளவர்கள்
    நல்லதையேன் மறக்கின்றார்?

    வளர்ந்து மரம்நிழல்கொடுக்கும்
    வகைவகையாய்க் கனிகொடுக்கும்
    பரந்தவெளி வளர்புல்லும்
    பசுவினத்தின் பசிதீர்க்கும்
    பயன்கருதா உதவிநிற்கும்
    பாங்கினையும் பார்த்தபின்னர்
    பாரிலுள்ள மனிதரெல்லாம்
    பக்குவத்தை அடையாரா!

    Share
  • இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்

    —முனைவர் மு.இளங்கோவன், புதுச்சேரி.

    கோபகுமார் 1புதுவை மாநில அரசு ‘அறுமுகனம்’ என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் – இராசம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.

    சு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராஜம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராஜம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்திறன் மிகுதியாக இருந்தது.

    சு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராசப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர்  கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சி. எசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.

    சு. கோபகுமார்  அவர்கள் கானபூசனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

    சு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.

    இதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.

    கோபகுமார் 2

    இந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு நா. அரங்கசாமி முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

    சு. கோபகுமார்  அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

    இவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.

    ஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.

    சு. கோபகுமார்  அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.

    மேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர். கீர்த்தனம்,  தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு,  ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய ஜதியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.

    இவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.

    மின்னணு இசைக்கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார்  அவர்கள் விரும்புகின்றார்.

    புள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

    தமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.

    பொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.

    முகவரி:
    கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்
    எண் 98, ஆறாம் குறுக்கு,
    தந்தை பெரியார் நகர்,
    புதுச்சேரி- 605 005, இந்தியா

    செல்பேசி: 0091 94433 76671

     

    படம் உதவி:  http://muelangovan.blogspot.com/2014/06/blog-post_16.html
    நன்றி: http://muelangovan.blogspot.in/

    Share
  • மன நல ஆலோசனை கேள்வி பதில்கள்

    கார்த்திகேயன், விமலதாரணி

    கேள்வி :1

                        நான் 17 வயது மாணவி.  கிராமத்துப் பள்ளியில் பயின்றவள் தற்போது நகரத்தில் பயில்வதால் எனக்கு பாடம் மிகவும் கடினமாக உள்ளது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியாததை கேட்டால் அவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்கள். என்னை பொருட்படுத்த மாட்டேங்கிறார்கள். ஏனெனில் நான் மட்டும் தமிழ் மீடியத்தில் படித்த மாணவி. டியுசன் வைக்கவும் வீட்டில் வசதி இல்லை. நான் தனித்து விடப்பட்டது போல் உணருகிறேன். என்னுடன் சாப்பிடுவதற்குக் கூட தோழிகள் இல்லை கல்லூரியில் இப்படி இருப்பதால் வெளி இடத்திலும் பேசுவதற்குக் கூச்சமாகவும் நடுக்கமாகவும் இருக்கிறது. நான் என்ன செய்வது?

    பதில்

    வாழ்க்கை வாழ்வதற்கு தான். வாழ்க்கையைக் கண்டு பயப்படும் பெண்ணால் வாழ்க்கையை ரசிக்க முடியாது, வெல்லவும் முடியாது. சின்ன விஷயமானாலும் சரி, பெரிய விஷயமானாலும் மோதிப் பார்த்துவிட வேண்டும் ”என்னாலும் முடியும்” என்ற தைரியத்தோடு களத்தில் இறங்கி விட வேண்டும். மொழி என்பது நாம் நம் எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவும் கருவி. ஆங்கிலம் சரியாக தெரியவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டாம். சுலபமாக எளிமையாக ஒரு மொழியில் பேச வேண்டுமென்றால் முதலில் அம்மொழியில் சிந்திக்கத் தொடங்க வேண்டும். அப்போது தான் அந்த மொழியில் சரளமாகப் பேச முடியும். உங்களின் எண்ண ஒட்டம் தமிழில் இருந்தால் எதிரே நிற்கும் நபரிடம் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவது சிரமம். பேச்சில் சரளம் இல்லாமல் திக்கித் திக்கி திணறவேண்டி வரும். காரணம் பேசுவதற்கு முன்னால் உங்களை அறியாமல் உங்களுக்கு ஒரு மொழி பெயர்ப்பு நடந்து கொண்டிருக்கும். இது சிரமத்தை ஏற்படுத்தும் . ஆங்கிலத்திலேயே பேச விரும்புவதால் அந்த மொழியிலேயே சிந்தனை ஓட்டத்தை உருவாக்குங்கள்.

                             உங்கள்தோழியிடமும் ஆங்கிலம் தெரிந்த உறவினர்களிடமும் தப்பு, தவறு என்று பார்க்காமல் ஆங்கிலத்தில் பேசிப் பழங்குகள். தப்பாக பேசினாலும் பரவயில்லை . அதை மற்றவர்கள் பரிகாசம் செய்தாலும் பொருட்படுத்தாதீர்கள். தொடர்ந்து ஆங்கிலத்திலேயே பேசிப் பழகுங்கள் தினமும் புதிய புதிய வார்த்தைகளை கற்றுக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் கடிதத்தில் ஒரு விஷயம் என்னை யோசிக்க வைக்கிறது. ஆங்கிலம் தெரியாததால் மட்டுமே உங்களுக்கு இந்த பாதிப்பு இல்லை. எனென்றால் அன்பு, நட்பு எல்லாம் மொழிக்கும் அப்பாற்பட்டது. மொழி தெரியாததால் தோழிகள் கிடைக்காமல் தனிமையை அனுபவிப்பதாகக் கூறுவது தவறு. உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. அதனால் உங்களையே நீங்கள் தனிமைப்படுத்துகிறீர்கள் . தாழ்வு மனப்பான்மையை கண்டறிந்து அதனை விலக்குங்கள்.

    கேள்வி: 2

                         எனக்கு 30 வயது ஆகிறது. எனது தந்தை மிகவும் கண்டிப்பாக நடத்தியதால் எனது 10 வயதில்  இருந்தே மனதில் ஒருவித பயம் தோன்றி விட்டது. எனக்கு பேச்சு திக்கித் திக்கி வரும். புது ஆட்களிடமும், பெரிய மனிதர்களிடமும் பேச முற்படும் போதெல்லாம் ஒரு வித படபடப்போடு, கை கால்களும் மிகவும் குளிர்ச்சியடைகிறது. இதை எப்படிப் போக்குவது?

    பதில் :

    சிறு வயதின் பாதிப்புகள் வாழ்க்கை முழுவதும் நம்முடன் பயணிக்கும் வல்லமை பெற்றவை தான். ஆனால் முதலெழுத்து கோணி விட்டதால் கடிதமே கோணலாய் இருக்க வேண்டும் என்று சொல்ல முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடைய பிரச்சனையில் இருந்து மீள்வதற்கான வலிமை உள்ளது.

    இங்கே உங்களுக்கு எற்பட்ட பாதிப்புக்கு அதிக கண்டிப்புடன் உங்களை வழிநடத்திய தந்தை காரணமாய் இருந்திருக்கிறார். நாளடைவில் தாழ்வு மனப்பான்மையும், தன்னம்பிக்கையின்மையும் விசுவரூபம் எடுத்து உங்களை இந்நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வை திருத்தி அமைக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க உங்களுடையது தான். திக்கு வாயால் வாழ்க்கையை ஆரம்பித்த சிலர் இன்று தலைசிறந்த மேடை பேச்சாளர்களாய் இருப்பது நாம் கண்கூடாக பார்த்து கொண்டிருக்கும் உண்மை. முதலில் உங்கள் பயத்தைப் போக்கி  தன்னம்பிக்கையை  வளர்த்துக் கொள்ளுங்கள்.

    உங்கள் தந்தையை உங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை உங்களிடம் எதிர்பார்த்து அது நிறைவேறாமல் போன போது உங்களிடம் கோபம் கொண்டிருக்கலாம். இப்போது நீங்கள் உங்கள் இலக்கை நிர்ணயித்துக் கொள்ளலாம். உங்கள் சக்திக்கு உட்பட்ட இலக்கை நீங்கள் அடையும் போது உங்கள் மனதிற்கு அது புது தெம்பைக் கொடுக்கும். தினமும் காலை எழும் போது உங்கள் மனதை ஒருமுகப்படுத்திக் கொண்டு நீங்கள் வழிபடும் கடவுளிடம் இன்று எனக்கு பிரச்சனை எதிர் நோக்கும் பலத்தைக் கொடு என்று முழுமனதுடன் வேண்டிக் கொள்ளுங்கள் . புதிய சூழ்நிலைகளை எதிர் கொள்ள அது துணையாய் இருக்கும். நண்பர்களிடம் அதிகமாகப் பேசுங்கள். விவாதங்களில் ஈடுபடுங்கள். உணர்ச்சி வசப்படும்போது திக்குவதை பொருட்படுத்தாமல் பேசுங்கள். பயத்தால் ஏற்படும் பலகீனத்தால் தான் உங்கள் உடல் குளிர்ச்சியடைகிறது. தேவைப்பட்டால் மனோதத்துவ நிபுணரின் ஆலோசனையும் பெறுங்கள்

    கேள்வி 3

                       நான் 28 வயது பெண். வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தேன். பலரும் பாராட்டும்படி படித்தேன். நான் படித்து முடித்ததும் தகுதி அடிப்படையில் நல்ல வேலை கிடைத்தது. அன்றும் இன்றும் எனக்கு பணத்திற்கும், அழகிற்கும்,  அந்தஸ்திற்கும் குறைவில்லை. என் தோழிகளாகட்டும் என்னோடு வேலை பார்ப்பவர்களாகட்டும் நம்ம ’சுஜா கொடுத்து வைத்தவள்’ என்று என் காது படவே பேசுகிறார்கள். ஆனால் நானோ எதையோ இழந்தவள் போல மகிழ்ச்சி இல்லாத நிலையில் இருக்கிறேன். பணி முடிந்து திரும்பும்போது எனது காரை  எங்கேயாவது நிறுத்தி விட்டு சாலை ஓரத்து குடிசைகள் வழியாக நடக்கிறேன். அவர்களெல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. நானும் சராசரி பெண்களைப் போல மகிழ்ச்சியாக இருக்க வழி சொல்லுங்கள்.

    பதில்

    இன்றைய இயந்திரமான வாழ்க்கையில் பலரும் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயத்தை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதாவது இன்று பலரும் பணம் அந்தஸ்து அழகால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அவை இருந்தால் கூட மகிழ்ச்சி இல்லை என்பதை நீங்கள் உணர்த்துகிறீர்கள். இன்னொரு விஷயம். நடைப்பாதை குடிசைவாசிகள் எல்லாம் மகிழ்ச்சியாக இருப்பதாக மற்றவர்கள் நினைப்பது எப்படி சரி இல்லையோ அது போல அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக நீங்கள் நினைப்பதும் சரியல்ல. ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவுக்கு பிரச்சனைகள் கஷ்டங்கள் இருக்கும். அதனை  எதிர்கொண்டு அதையும் மீறி ஆங்காங்கே இருக்கும் மகிழ்ச்சியான வாய்ப்புகளைக் கண்டறிந்து அதனை அனுபவித்து யார் நிம்மதி அடைகிறார்களோ அவர்களுக்கே மகிழ்ச்சி கிடைக்கிறது. நீங்களும் உங்கள் அளவில் இருந்து கொண்டு மகிழ்ச்சி அடைய நிறைய வாய்ப்புகள் உள்ளன.

    உங்கள் சாதனைகளை சத்தமாக வெளியே சொல்லுங்கள். சறுக்கி விழுந்ததை மறந்து விடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள் மனதில் எதையும் மூடி வைக்காதீர்கள். உற்சாகமாக இருங்கள் மகிழ்ச்சி தானே வரும்.

    Share