பத்துமலைத் திருமுத்துக்குமரனைப் பார்த்துக் களித்திருப்போம்.. வருவான் வடிவேலன்.. கவியரசு கண்ணதாசன்
கவிஞர் காவிரி மைந்தன்
இறையருள் இயக்குனர் கே.சங்கர் அவர்களின் இயக்கத்தில் எத்தனையோ தமிழ்த்திரைப்படங்கள் வெற்றியடைந்தது மட்டுமின்றி சரித்திரம் படைத்திருக்கின்றன. ஆலயமணி, இது சத்தியம், ஆண்டவன் கட்டளை, கலங்கரை விளக்கம், குடியிருந்த கோயில் என பட்டியல் நீளும். இதுதவிர, எடிட்டிங் துறையில் இவரின் திறமை அடிமைப்பெண் திரைப்படத்தில் சிங்கத்துடன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் சண்டையிடும் காட்சியென – பல படங்களில் பளிச்சிடுகிறது. மேலும் பொன்மனச்செம்மலுக்கு இவர் நெருங்கிய உறவினர் என்பது கூடுதல் தகவலாகும்.
தமிழகத்தில் திருமுருகன் குடிகொண்ட திருத்தலங்கள் எல்லாம் தைப்பூசம் என்கிற உற்சவம் உற்சாகம் கரைபுரள லட்சக்கணக்கான பக்தர்கள் படைவீடுதோறும் படையெடுப்பதோடு, காவடிகள் பலவகையென எங்குபார்த்தாலும்,அணிவகுத்துச்செல்லும் அழகிற்குப் பஞ்சமில்லை. கடல்கடந்த நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் கூட கந்தன் பெருமை ஓங்கார நாதம் முழங்க பரவசநிலையுடனே பக்தர்களின் அலைகளாக வியாபித்திருக்கிறது என்பது தமிழர்தம் வாழ்வியலில் தமிழ்க்கடவுள் முருகனுக்கு தலையாய இடம் தரப்பட்டிருக்கிறது என்பதை பறைசாற்றுகிறதே!
மேற்கண்ட நாடுகளுக்கு தான் பயணம் மேற்கொண்டபோதெல்லாம் அங்குள்ள பச்சைமலை, கதிர்கிராமம் போன்ற முருகன் எழுந்தருளியிருக்கும் ஸ்தலங்களுக்கும் சென்று வழிபடும் பழக்கம் கொண்டவர். குறிப்பாக இந்த மூன்று ஸ்தலங்களில் தான் கண்ட இக்காட்சியை (தைப்பூச விழாவை) தமிழக மக்கள் காண வேண்டும் என்பதற்காகவே வருவான் வடிவேலன் என்கிற திரைப்படம் எடுத்து அதில் இக்காட்சியை இணைத்ததை எம்மோடு (கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தினரோடு)2001ஆம் ஆண்டு இயக்குனர் கண்ணதாசன் விருது பெற்ற தருணங்களில் பகிர்ந்தார். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்கிற மனோபாவம், எண்ணம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. இத்தகு நல்லெண்ணம் கொண்டவராய் நம் இயக்குனர் கே. சங்கர் – தைப்பூச நாளொன்றில் இம்மூன்று ஸ்தலங்களில் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவை பிரத்யேக ஏற்பாடுகள் செய்து தனி விமானம் அமர்த்தி ஒரே நாளில் சிறப்புக்குழு அமைத்து சீர்மிகு வண்ணம் தங்கரதம் வரை முழுக்க முழுக்க படம்பிடித்து சென்னை திரும்பினாராம்.
கிட்டத்தட்ட 20000 அடிகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டிருந்த அக்காட்சியை அப்படியே மக்களுக்குத் தருவததெப்படி என்கிற சிந்தனையில் மூழ்கியிருக்கிறார். அப்படித் தருவது டாக்குமெண்ட் படம்போல ஆகிவிடுமே என்கிற ஐயமெழ, அனைவரையும் பொறுமையுடன் பார்க்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்துடன், புதிய யுக்தியொன்றை அமைத்திட மெல்லிசை மன்னரை அணுகினாராம். தனது எண்ணத்தை எடுத்துரைத்து, தான் எடுத்துவைத்திருந்த படக்காட்சியை போட்டுக்காட்டி, இதற்காக ஒரு முழுநீளப் பாடல் ஒன்றையும் எழுதி அதற்கான இசையையும் அமைத்திடக் கேட்டிருக்கிறார்.
எப்படியிருந்தாலும் பாடல் என்பது ஒரு சில நிமிடங்களே அமைக்க முடியும் என்கிற நிலையில் அதற்கேற்ப பல்லாயிரம் அடிகள் எடுத்து வைத்த படக்காட்சியை .. தைப்பூச நிகழ்வுகளை சில ஆயிரம் அடிகளாக தனது எடிட்டிங் திறமையால் சுருக்கித்தந்த பெருமைக்கு உரியவரானார். ஒரு சில சரணங்கள் மட்டுமே கொண்டு வரும் பாடலுக்கு பதிலாக பல வரிகளுடன் அமைக்கப்பட்ட இப்பாடலை.. முற்றிலும் புதுமையாக.. அன்றைய நாளில் பிரபலமாகயிருந்த பாடக பாடகியர்கள் தவிர பக்தியிசைப் பாடகர்களையும் சேர்த்து ஒரு அசுர சாதனையாக .. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் – கண்ணதாசன் வழங்கிய அற்புதப் பாடலிது!
டி.எம்.செளந்திரராஜன், பி.சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், பெங்களுர் ரமணியம்மாள், என ஓரு பாட்டுப் பட்டாளம் பாடும் கந்தன் பாடலிது. வருவான் வடிவேலனுக்காக.. இது வெற்றி பெற்றது என்பது அடிப்படையில் ஒரு நல்லெண்ணம், அதற்கான விடா முயற்சி, கடும் உழைப்பு, கூட்டணி வெற்றி.. எல்லாம் அமைந்திட இறைவன் ஆசி வேறென்ன சொல்ல?
எந்தப் பாடல் ஆனாலும் கண்ணதாசனின் முத்திரை வரிகள் காணலாம் அல்லவா? இதோ இந்தப்பாடலில்..
தங்கத்தேரை வடம்பிடிக்க மலேசியா நாட்டு அமைச்சர் வரும்காட்சியில்..
அழகப்பன் மேனிக்கு அழகுசெய்ய அரசாங்கம் வருகின்றது.. என்று சொல்லாட்சி செய்துள்ளார்.
கோடிக் கணக்கில் பணம் கொடுத்தான்.. அவன்
கோவிலுக்கென்றே செலவழிப்போம்
என்கிற வரியில் செட்டிநாட்டு மக்கள் முருகன் கோவிலுக்கு செய்யும் சேவையை நிலைநாட்டுகிறார்.
the pranava om in all lines!