இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (112)

–சக்தி சக்திதாசன்.

kaviyarasuஅன்பினியவர்களே!

இனிய வணக்கங்கள். கவியரசர் கண்ணதாசன் பிறந்த மாதத்தின் கடைசி வாரத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கவியரசர் கண்ணதாசன் என்னுள்ளத்திலே ஏற்படுத்திய தாக்கங்கள் போன்று வேறு எவருமே ஏற்படுத்தியது கிடையாது என்று சொன்னால் மிகையாகாது.

பதின்ம வயதுகளின் இறுதியில் லண்டனில் காலடி வைத்த எனக்கு ஆன்மீகம், தத்துவம் என்பனவற்றில் அந்தக் காலக்கட்டத்தில் எவ்வித ஈடுபாடுமே கிடையாது.

காதல் எனும் அந்த மூன்றெழுத்தின் அர்த்தம் புரியாமல் வனப்புள்ள வனிதையரின் பால் மனம் செல்வதும், அவ்வுணர்வுகளுக்குகந்த கவியரசர் பாடல்களை மனம் முணுமுணுப்பதுமே அப்போதைய கவியரசரைப் பற்றிய எனது புரிந்துணர்வாக இருந்தது.

காலம் கரையக் கரைய, வாழ்வின் வளைவு சுளிவுகளுக்குள்ளாக  நுழைந்து வெளியே வரும் போது அடைந்த வேதனைகள், மகிழ்ச்சிகளினால் விளைந்த இன்ப, துன்ப வலிகள், அவை விட்டுச் சென்ற அனுபவ வரிகள் இவைகளுக்கெல்லாம் காரணங்களைத் தேடி மனம் ஓலமிடும் போது, அங்கே அப்போது ஒவ்வொரு நிகழ்விற்கும் அவர் தீட்டிய ஒவ்வொர் பாடல் மருந்தாகியது.

கவியரசரின் அனுபவ ஞானம், அந்த ஞானத்தின் ஆழம் என்பன அப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது..

வாழ்வின் உறவுகள் கொடுத்த அடிகளின் வலி தாங்காமல் எனதுயிர் நண்பனோடு நான் நிகழ்த்திய மன உணர்வுப் பரிமாற்றங்களின் பின்னே அவன் எனக்கு ஒவ்வொன்றாய் கவியரசரின் அர்த்தமுள்ள இந்துமதம் நூல்களை ஒவ்வொரு பாகத்தையும் அனுப்பினான்.

படிக்கப் படிக்க நெஞ்சம் ஆனந்தக் கண்ணீர் வடித்தது. ஆமாம் எங்கெங்கு அவரின் இதயந் தொட்ட உணர்விகளின் வரிகள் அவருக்கு ஏற்பட்ட வலிகளை விளக்கினவோ, அவைகளில் பல எனது வலிகளின் காரணங்களையும் தொட்டுக் காட்டி நின்றன.

அவரது பாடல்கள், அவற்றில் துள்ளி விழும் வரிகளவை ஒவ்வொன்றும் வித்தியாசமான நேரங்களில் வித்தியாசமான விளக்கங்களைக் கொடுத்தன. ஆம், கவியரசரின் பாடல்களுக்குள் புகுந்து அவற்றின் பின்னே புதைந்திருக்கும் அர்த்தங்களைத் தேடினால் அவை எமது மனநிலைக்கேற்ப வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு அனுபவங்களுக்குத் துணை வரும்.

எதோ ஒரு இடத்தில் படித்ததாக ஞாபகம். மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த “தெய்வத்தாய்” எனும் படத்திற்காக டி.எம்.எஸ்சும் பி.சுசீலாவும் பாடும் பாடலான “பேசுவது கிளியா ? இல்லை பெண்ணரசி மொழியா” எனும் பாடலை யாத்தவர் கவியரசர். அப்பாடலைப் பற்றி மக்கள் திலகமும் அவருடைய அபிமானி ஒருவரும் மக்கள் திலகத்தின் வீட்டில் பேசிக் கொண்டிருக்கும் போது, வந்தவர் மக்கள் திலகத்திடம் கவியரசரின் திறமைதான் என்ன, உங்கள் வாழ்க்கைச் சரிதத்தை இரண்டே இரண்டு வரிகளில் இயம்பி விட்டாரே என்று கூறும் போது, அப்படியா அது என்ன என்று மக்கள் திலகம் கேட்க;

“சேரனுக்கு உறவா ? செந்தமிழர் நிலவா ?” எனும் வரிகளில் கேரளத்தில் பிறந்து இன்று தமிழர் மனங்களிளெல்லாம் நிலவாக ஒளிவீசிக் கொண்டிருப்பதைக் குறிப்பிட்டுள்ளார் என்று சொன்னதும் மக்கள் திலகமே ஒரு கணம் திகைத்து விட்டாராம்.

என் வாழ்க்கையிலே நான் சந்தித்தோர் அநேகம் பேர் எனக்கு உதவியாக உந்து சக்தியாக இருந்தவர்கள், இருப்பவர்கள் பலர். ஆனால் என்ன ஏமாற்றி விட்டுச் சென்றவர்கள் சிலர்.

அப்படியான ஏமாற்றங்களைத் தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொடுத்தது கவியரசர் அவர்களின் பாடல்களும் அவரது படைப்புக்களுமே.

“வனவாசம்” பின்பு “மனவாசம்” என்று தனது வாழ்க்கைச் சரிதத்தை திறந்து வைத்த போது, ஏதோ அவர் ஒரு நூலை ஆக்கினார் என்று எண்ணுவோர்கள் பலரிருக்கிறார்கள். ஆனால் அவராக்கிய அந்த நூல்கள் எத்தனை பேரின் விடையறியா வினாக்களுக்கு விடையளித்து மனதில் ஒரு ஆறுதலைக் கொடுத்துள்ளது என்பதை உணர்தோர்கள் சிலரே.

கவியரசரின் எழுத்துகள் , படைப்புகள் இன்றும் நிலைத்திருப்பது அவைகள் பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடைந்த காரணத்தினாலேயே.

அப்படி பட்டி தொட்டிகளெல்லாம் சென்றடையக் காரணமாகவிருந்தது … அவருடைய எளிமையான  எழுத்துக்களே. அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையின் நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அவரது பாடல்களும் எழுத்துக்களும் இருந்தமையாலேயே…

வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது நிலையானதல்ல. இன்று வெற்றி பெற்றோர் நாளை தோல்வியடையலாம், நாளை தோற்போர் அடுத்த நாளே ஜெயிக்கலாம் இதை,

“புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை”

என்று எத்தனை எளிமையாக தத்ரூபமாகச் சொல்லியிருக்கிறார். இவையெல்லாம்தான் இன்றுவரை அவரது பெயரை  உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களிலெல்லாம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எழுதும் என் விரல்களுக்கு உத்வேகத்தையும், எழுத வேண்டும் அது பலரையும் சென்றடைய வேண்டும் எனும் ஆவலை எனக்கு அளிப்பதுவும் கவியரசர் கண்ணதாசன் அவர்களின் எண்ணங்களே !

இன்று புலம்பெயர் நாடுகளிலெல்லாம் பல படைப்பாளிகளை உருவாக்கித் தமிழை வாழவைத்துக் கொண்டிருக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று கவியரசரின் ஆற்றல் என்று சொன்னாலது மிகையாகாது.

கம்பர், வள்ளுவர் என்போர் போன்ற அறிஞர்களின் ஆக்கங்களை அனைவரும் புரியும் படியாக எளிய நடையில் நமக்களித்தவர் கவியரசரே !

என் மானசீகக்குருவைப் பற்றிய எனது சில கருத்துகளை அவர் பிறந்த இம்மாதத்திலே என் அன்பு வாசகர்களுடன் இம்மடல் மூலமாகப் பகிர்ந்து கொள்வது என் நெஞ்சத்தை நிறைக்கிறது

“நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை”

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *