Blog

  • தண்ணீர்… தண்ணீர்…!

     

    -கவிநயா

    ஒரு ஞாயிற்றுக் கிழமை காலை. அந்த அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. வீட்டுக்காரர் கதவைத் திறந்து பார்க்கிறார். முன் பின் தெரியாத இரண்டு பேர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

    “யாரைப் பார்க்க வேண்டும்?”

    “உங்கள் வீட்டில் தண்ணீர்க் குழாய் ஏதாவது ஒழுகுகிறதா? அப்படியானால் சொல்லுங்கள். நாங்கள் இலவசமாக சரி பார்த்துத் தருகிறோம்”

    வீட்டுக்காரர் நம்ப முடியாமல் பார்க்கிறார். இலவசமாகவா?!

    இப்படித்தான் ஆரம்பித்தது Drop Dead Foundation-னின் பணி. “Save every drop or drop dead” என்பது இவர்களின் முழக்கம். இந்தச் சிறப்பு மிக்க பணியை ஒற்றை ஆளாகத் தொடங்கியவர், திரு. ஆபிட் சுர்தி (Aabid Surti) என்பவர். இவர் விருது பெற்ற எழுத்தாளரும், ஓவியரும் கூட. ஆனால் இவர் தன்னுடைய பெரிய சாதனையாகக் கருதுவது பல்லாயிரம் லிட்டர் தண்ணீரின் சேமிப்பைத்தான். ஒவ்வொரு வருடமும் இவர் பணியால் 414,000 லிட்டர்கள் தண்ணீர் (மும்பையில் மட்டும்) வீணாகாமல் காப்பாற்றப்படுகிறதாம்!

    70-களில் இருக்கும் இவருக்கு, இளம் வயதிலேயே தண்ணீரின் அருமையை மும்பை வாழ்க்கை உணர்த்தியிருக்கிறது. ஒரு முறை ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்த போது, அவர் வீட்டில் ஒழுகிய குழாய் இவரை ரொம்பத் தொந்தரவு செய்திருக்கிறது. ஒழுகும் குழாயை சரி செய்வதில் என்ன கஷ்டம் என்று பலரிடமும் பேசிப் பார்த்த போது, குழாய் சரி செய்பவர்கள் கிடைப்பது அரிதென்றும், கிடைத்தாலும் அவர்கள் கேட்கும் தொகையைக் கொடுத்துச் சரி செய்யும் வசதி பலருக்கும் இல்லையென்றும் தெரிய வந்தது.

    ஒரு குழாயில் சொட்டு சொட்டாகத் தண்ணீர் ஒழுகினாலும், ஒரு மாதத்தில் 1000 லிட்டர் தண்ணீர் வீணாகிறதாம். ஆயிரம் 1-லிட்டர் தண்ணீர் பாட்டில்களைக் கூவத்தில் எறிவதாக நினைத்துப் பாருங்கள்! அவர் அப்படித்தான் நினைத்துப் பார்த்தாராம்!

    அத்துடன் இல்லாது, எதிர்காலத்தில் தண்ணீரின் காரணமாகவே உலக நாடுகளுக்குள் போர் மூளலாம் என்ற செய்தியையும் வாசித்திருக்கிறார்.

    இந்த இரண்டு விஷயங்களையும் அவரால் நமக்கென்ன என்று ஒதுக்கித் தள்ள முடியவில்லை. சரியாக 2007-ல் (உலக தண்ணீர் வருடம்) அவருக்கு உத்தர பிரதேச அரசிடமிருந்து சாகித்ய சந்த்ஸா (Sahitya Santhsa award) விருது ரூ.100,000 கிடைத்தது. உடனடியாக அந்தப் பணத்தை இந்தப் பணிக்குச் செலவிட முடிவெடுத்து விட்டார்.

    ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலையிலும் தன்னுடன் ஒரு குழாய் பழுது பார்ப்பவரைக் (plumber) கூட்டிக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று இலவசமாக குழாய்களைப் பழுது பார்த்துத் தருகிறார்.

    இப்போது இவருடையது ஒரு இயக்கமாகவே மாறி விட்டது. பள்ளிக் குழந்தைகளையும் இவருடைய தண்ணீர் சேமிக்கும் இயக்கத்தில் ஈடுபடுத்தி வருகிறார்.

    “A penny saved is a penny earned” என்று சொல்வார்கள். அது தண்ணீருக்கும் நிச்சயம் பொருந்தும். சிறு துளி பெரு வெள்ளமல்லவா? குறிப்பாகப் பருவ மழை பொய்த்துப் போகும் இந்தக் காலத்தில், ஆறு குளங்களெல்லாம் கட்டிடங்களாகிக் கொண்டு வரும் இந்தக் காலத்தில், தனி மனிதனால் செய்யக் கூடியவற்றவைகளையாவது நாம் செய்ய வேண்டுமல்லவா? அதுதானே நாம் நம் சந்ததியினருக்கு விட்டு போகும் செல்வம்? இப்போதிருக்கும் நிலைமையில் நாம் வறண்ட பூமியைத்தான், உணவும், நீரும், இல்லாத பூமியைத்தான் அவர்களுக்கு விட்டுப் போகத்தான் தயாராகிக் கொண்டிருக்கிறோம்! 🙁

    நாம் ஒவ்வொருவரும் ஆபிட் சுர்தியாக ஆக முடியா விட்டாலும், தண்ணீரைச் சேமிக்க நம்மாலான பல எளிய வழிகள் இருக்கின்றன.

    ஒழுகும் குழாய் இருந்தால் உடனடியாகச் சரி பார்க்கலாம்.

    காலையில் பல் துலக்கும் போது பலரும் தண்ணீரைத் திறந்து வைத்து, அது பாட்டுக்கு போய்க் கொண்டிருக்க, அவர்கள் பல் துலக்குவார்கள். அப்படியில்லாமல் தண்ணீரை வேண்டுமென்னும் போது மட்டும் திறந்து கொள்ளலாம்.

    பாத்திரம் துலக்கும் போதும் சிலருக்கு தண்ணீர் போய்க் கொண்டே இருக்க வேண்டும், அல்லது முழு வேகத்தில் திறந்து விடுவார்கள். இதிலெல்லாம் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.

    குளிக்கும் போதும் அப்படியே. சோப்பு போடும் போது தண்ணீரை நிறுத்தி வைக்கலாம். குளிக்கும் போது கனவு கண்டு கொண்டிருந்தாலும் (மற்ற விஷயங்களைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாலும்), தண்ணீர் போய்க் கொண்டிருப்பதே தெரியாது. அதனால் குளியல் கனவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். (இதை எனக்கே சொல்லிக் கொள்கிறேன்!)

    சிலர் தண்ணீர் குடிப்பதற்கென எடுக்கும் போது தம்ளர் நிறைய எடுத்து விட்டு, கால் தம்ளர் மட்டுமே குடித்து விட்டு மீதியைக் கீழே ஊற்றி விடுவார்கள். அதற்குப் பதில் வேண்டுமென்கிற அளவு மட்டுமே எடுத்துக் குடிக்கலாம்.

    சரியாக மூடப் படாத குழாயைப் பார்த்தால், பொது இடமாக இருந்தாலும் நமக்கென்ன என்று போகாமல் சரியாக மூடலாம்.

    தனி மனித ஒழுக்கம் இருந்தாலே சமுதாயம் எவ்வளவோ நன்றாக இருக்கும். நம்மாலானதை இன்றே செய்வோம்!

    எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்!

    அன்புடன்
    கவிநயா

    பி.கு.: சுகி. சிவம் அவர்கள் ஒரு முறை இவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அதிலிருந்துதான் இந்தக் கட்டுரை எழுதும் எண்ணம் வந்தது. ஆகையால், அவருக்கு நன்றி!

    படத்துக்கு நன்றி: http://superaalifragilistic.wordpress.com/2013/01/26/saving-the-planet-one-drop-at-a-time/

     

    Share
  • இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………

    எஸ் வி வேணுகோபாலன்

    அண்மையில் ‘சிறப்பாக’ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது:

    ”நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?”
    ”டெய்லி டேட் மாத்தி விக்கிறான்… அதை எதுக்குப் படிக்கணும்?”

    இது நகைச்சுவைக்காக எழுதப் பட்ட ஒரு வசனம் தான். ஆனால் செய்தித் தாள்களில் வரும் சில திடுக்கிடும் செய்திகள், பரபரப்பு விஷயம், அதிர்ச்சி சம்பவம் இவற்றைத் தொகுக்க உட்கார்ந்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சில நிகழ்வுகள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றும். ஒரு பத்து நாள் விஷயங்களை ஒரு சேர எடுத்து வாசிக்க நேர்ந்தால் சமூகத்தில் நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே மிஞ்சாது போல் கூடத் தோன்றும்.

    கொலை, தற்கொலை, கணவன் – மனைவி உறவில் விரிசல், அதிகமாகிக் கொண்டிருக்கும் மண முறிவு (விவாகரத்து), கள்ளக் காதல், பரஸ்பர சந்தேகம், நிம்மதியற்ற தாம்பத்திய வாழ்க்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வு மற்றும் மனைவி வேலைக்குப் போவது குறித்த கருத்து முரண்பாடு, குடும்ப உறுப்பினர் நிமித்தம் கருத்து மோதல்கள்…..இவை குறித்த இடைவிடாத செய்திகள் நாளிதழ் முழுக்க நிறைந்திருப்பதைக் காண முடியும். குடும்பங்கள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்ற சித்திரம் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும், அப்படியான குரல் கேட்கும்படி பல செய்திகள் வருகின்றன.

    இவை எதுவும் பொய்யான செய்திகள் அன்று. எங்கோ நடப்பதைத் தான் எழுதுகின்றனர். ஆனால், சமூகம் முழுக்க இந்த மாதிரியான விஷயங்களே நிறைந்திருப்பது மாதிரியான தோற்றம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. அது உண்மை அல்ல. இந்தச் செய்திகள் வழங்கப்படும் விதம் அப்படியான ஒரு தாக்கத்தை வாசகருக்கு ஏற்படுத்துகிறது.

    அப்போதைக்கு வெளிவந்திருக்கும் செய்திகள், ஒரு பக்க சார்பாக வெளிப்படும் செய்திகள், முழு விவரமற்ற ஊகத்தில் புனையப்படும் செய்திகள், உண்மை கலவாத கற்பனை சரடுகள், உணவில் சேர்க்கப்படும் அஜினமோட்டோ போல் விறுவிறுப்பு ஏற்றி எழுதப்படும் செய்திகள், மறுப்பு வந்தாலும் கண்டு கொள்ளாது விடப்படும் செய்திகள்…..என இது ஒரு தனி விவாதத்திற்குரிய அம்சம்.

    இன்னொருபுறம், இந்தச் செய்திகள் படிப்பவர் மனத்தில் பன்மடங்கு விரிவாக்கம் செய்து புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பது தெரிந்தும் தெரியாதது போல் எழுதப்படுவது. அதாவது எங்கோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் என்றல்ல, வர வர காலம் போகும் போக்கே சரி இல்லையே என்று தான் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

    ஏன் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன….ஏதாவது காரணங்கள் உண்டா, தற்செயலான நிகழ்ச்சிப் போக்குகள் தானா என்றெல்லாம் பெரிய விவாதங்களையோ அலசல்களையோ ஊடகங்கள் நடத்துவதில்லை. தங்களுக்கு ஆதாயம் உருவாக்கும் அதிரடி, பரபரப்பு செய்திகள் மீது மட்டும் கண் கூசும் அளவு வெளிச்சம் பாய்ச்சுவதும், சமூகத்திற்கு உருப்படியாகச் சொல்லத் தக்க அல்லது சொல்ல வேண்டிய விஷயங்களை இருட்டடிப்பு செய்வதும் ஊடக வாடிக்கை. அவர்களுக்கு அதில் அரசியல், வர்த்தக நோக்கம் உண்டு.

    இன்றைய சமூகம் பெருமளவு இறுக்கமான நிலையில் இயங்குகிறது என்பது கவனிக்கத் தக்கது. இறுக்கமான சமூக இயக்கம் மனிதர்களை நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்க வைக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேவையற்ற விரோத மனப்பான்மை உருவாக இடம் தருகிறது. அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் பொறுமையோ, எதிர்ப்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று அறிய விரும்பும் தன்மையோ இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. தாம் செய்வது சரி என்று தீர்மானமாக நம்பும்போது மற்ற எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன. பகிர்தல் அற்ற உளவியல் ஓர் அழுத்தத்தை உள்ளே கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் மூச்சு திணறும் மனிதர்கள் வன்மம் வளர்த்துக் கொள்ளவும், வன்முறையை யோசிக்கவும் நேர்கிறது. அல்லது, தங்களுக்கு இங்கே வாழ இடமில்லை என்று முடிவெடுக்கவும் தூண்டுகிறது.

    இந்த இறுக்கமான சமூக இயங்குதல், நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்கும் உளவியல் ஒருபுறம். மற்றொருபுறம், கனவுகளையும், இலக்குகளையும், வெற்றிக் கோடுகளையும் மட்டுமே நிறுத்தி ஓடிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கை. இவை மனிதர்களை எளிதில் சலிப்படைய வைக்கிறது. மிக இலகுவாக நிராசை அடைய வைக்கிறது. விரும்பிய உணவை ருசித்து உண்ணவேண்டிய பொழுதில், எரிச்சலும் பதட்டமும் உணவுத் தட்டை நிரப்பி விடுகின்றன.

    தாம் மட்டுமே ஏமாற்றப் படுகிறோம் அல்லது தாம் மட்டிலும் எப்படியாவது முந்திச் சென்று விட வேண்டும் என்ற உளப்பாங்கை இன்றைய போட்டி உலகம் ஏற்படுத்துகிறது. சந்தைப் பொருளாதார உலகம் தனித்தனி நியாயங்களை, தனித்தனி கற்பிதங்களை, தனித்தனி தீர்வுகளை நுட்பமாக சமூகத்தில் நடுகிறது.

    இந்த உணர்வாக்கம் தான், வெல்வதற்காக எதுவும் செய்யலாம் என்று தூண்டுகிறது. வெற்றிப் பயணத்தின் திசை வழியில் வெல்வதற்கான கருவிகளை எப்படியும் பயன்படுத்தலாம் என்று கற்பிக்கிறது. அடுத்தவர் வலியை, அடுத்தவர் துயரை, அடுத்தவர் கதறலை நின்று நிதானித்துக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் வழங்கலாம் என்று நிற்பது கூடத் தமது நேரத்தில் வீண் விரயம் என்று பாராதது போலக் கடந்து செல்ல வைக்கிறது.

    சக மனிதர்கள் என்ற சொல்லை எடுத்துவிட்டு சக போட்டியாளர்கள் என்ற சொல்லாடலை முன்வைக்கிறது. உரையாடல்களுக்குப் பதிலாக வாக்கு வாதங்களையும், நிதானமான அணுகுமுறைகளுக்கு மாற்றாக ஆவேசத் தலையீடுகளையும், மறு பரிசீலனைக்குப் புறம்பாக இறுதிச் சொல் இதுவே என்ற வற்புறுத்தலையும், பன்முக நோக்கைக் கை கழுவி ஒற்றைக் கோணத்தையும், திறந்த பார்வையை உதறிவிட்டுக் குறுகலான சொந்தப் பார்வையையும் முன்மொழிகிறது.

    இதனால் தான், பேசித் தீர்க்கக் கூடிய விவாதங்களில் திடீரென்று ஆயுதங்கள் மூலம் பிரச்சனைகள் ‘தீர்த்துக்’ கட்டப்படுவதைக் காண்கிறோம்.சண்டை இட்டுக் கொண்டிருக்கும் யாரோ இருவரிடையே புகுந்து சமரசம் செய்ய முயற்சி எடுக்கும் மூன்றாவது நபர் கொலையுண்டதான செய்திகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறோம். ஆசிரியரைக் கொல்லத் துணியும் மாணவரையும், எந்தக் காரணமும் இன்றி அண்டை வீட்டு நபரைப் ‘போட்டுத் தள்ளும்’ மனிதர்களையும் கண்டு நடுங்குகிறோம்.

    இதன் விபரீத அடையாளங்கள் குடும்ப உறவிலும் வெளிப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கும் பெற்றோர் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள், எதை எதிர்பார்க்கின்றனர் என்று பொறுமையோடு கேட்டறியாத போதும், திருமண வயதில் உள்ள ஆணும் பெண்ணும் மனம் விட்டு பெற்றோரிடம் பேசத் தவறுகிற போதும் முதல் கட்ட பிரச்சனைகள் தோன்றுகின்றன. கல்வி, வேலைத் தன்மை, ஊதியம் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், வேறு வகை பழக்க வழக்கங்களும் திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்தே பூதாகர உருவெடுக்கின்றன.

    தாங்கள் எப்படியும்இருக்கலாம், பெண்கள் மட்டும் அடங்கிப் போகவேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவம் நவீன பண்பாடுகளை விரும்புவதுபோல் காட்டிக் கொள்ளும் ஆண்களிடமும் நிலவுகிறது. பரஸ்பரம் ஒளிவு மறைவற்ற பகிர்தலுக்கான இடம் மறுக்கப் பட்டதாக குடும்பங்கள் இன்று பெருகி வருகின்றன. சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் கூட பெரிய மோதல்களாக வெடிக்கின்றன. சரி செய்யக் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு இடைவெளியும், பெரிய பெரிய பள்ளங்களாக உருவெடுத்து விடுகின்றன.

    குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஜனநாயகத் தன்மை வேண்டும் என்ற அம்சம் நமது மரபிலோ, கல்வியிலோ, வளர்ப்பிலோ கிடையாது என்பது மிக சுலபமாக, இனிமையாக பேசி சரி செய்யத் தக்க விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிதாக்குகிறது. ஈகோ எனப்படும் அகங்காரம் அறிவுக் கண்ணை இறுக்க மூடிவிடுகிறது.

    அதிக ஊதியம் பெற்றுத் தரும் ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலைகளில் ஈடுபடுவோர் தமக்கான நிம்மதியை மது பானத்தில் தேடுவது தற்காலத்திய மிகப் பெரிய பிரச்சனையாக உரு மாறியிருக்கிறது. மது ஒரு தவறான பழக்கம் என்று சமூக மதிப்பில் பார்க்க வேண்டியதில்லை. ஆல்கஹால், நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நமது உளவியலில் ஆட்டிப் படைக்கும் மாற்றங்கள், பொருளாதார ரீதியாக சுமத்தும் செலவினம், பொதுவெளியில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் இவை பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கூட்டாக, குடும்ப சங்கமமாக, உறவின் வெளிப்பாடாக, நட்பின் அடிப்படை கட்டுமானமாக இன்று மது அருந்துதல் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் வெடிப்புகளும் குடும்ப உறவில் பிரதிபலிக்கின்றன.

    பணத்தை முன் நிறுத்தும் தாராளமய பொருளாதாரம் குறுக்கு வழியில், மிக விரைவான கதியில் முன்னேறிவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நீடித்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சி தரும் சொந்தங்களை விடவும், குறுகிய காலத்திற்கு இன்பம் பயக்கும் உறவுகளை நாடத் தூண்டுகிறது. இதன் தாக்கமே எல்லை மீறிய ஆசைகள், தவறான தொடர்புகள், நட்பின் விரிசல்கள் போன்றவற்றை நியாயப் படுத்துகின்றன. பணம் எல்லாவித உறவுகளையும் சிதைக்கிறது என்பதை மார்க்சிய பார்வை சுட்டிக் காட்டுகிறது. கலை, கேளிக்கை, விளையாட்டு எல்லாவற்றையும் காசு எப்படி பேரம் பேசுகிறது, சீரழிக்கிறது, கொச்சைப் படுத்துகிறது என்று நாம் பார்க்கிறோம். மனித உறவுகளையும் அது ஈவிரக்கமின்றி மிதித்துப் போகிறது.

    நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் அல்லது செய்தி ஊடகங்களில் தெரிந்து கொள்கிற நடப்புகள், தனி நபர் நடவடிக்கைகள் போலவோ, தனி நபர் வாழ்க்கை தடுமாற்றங்கள் போலவோ நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவற்றை நுட்பமாக கவனிக்கத் தான் வேண்டும். முற்போக்கான மதிப்பீடுகள் மட்டுமே சமூகத்திற்கு ஆரோக்கியமான முன்மாதிரிகளை ஏற்படுத்தித் தர இயலாது, வெறும் பேச்சுக்களால் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது. ஆரோக்கியமான சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொள்வோர் இந்தச் செய்திகளைக் கடக்கும்போது மாற்று சமூகப் பார்வைகள் குறித்த விவாதத்தை அதிகரிக்க வேண்டும். முற்போக்கான முன்னுதாரணங்கள் பொது மன்றத்தில் பரந்த கவனத்திற்கு எடுத்துச் செல்லப் படவேண்டும்.

    வாழ்க்கையின் தடுமாற்றங்களைத் தனி நபர் பிரச்சனைகளாக ஊடகங்கள் செய்தியாக்கும்போது அதை தேடித் தேடி படிக்கும் கிளுகிளுப்பு ஒரு விற்பனை சரக்கு. அதன் மூல காரணத்தைத் தேடிப் பார்த்து விவாதிப்பது மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளி.

    ***********

    நன்றி : வண்ணக்கதிர்

    Share
  • நடுங்கும் நடுத்தரங்கள்

     

    சச்சிதானந்தம்

     

    வறுமையில் வாடுபவன் கூட,

    வெறுமையின் எல்லைக்குச் சென்றாவது

    வெற்றியின் மடியை அடைகிறான்,

    பொருளாதாரச் சிக்கல்கள் இல்லாதவன்

    சிந்தனையிலும் சிக்கல்கள் இருப்பதில்லை!

    சிகரங்கள் அவனைச் சரணடைகின்றன!

    ஆனால்,

    நடுத்தரக் குடும்பங்கள், என்றும்

    நடுங்கும் தரத்துடனேயே இருக்கின்றன!

    அன்றாடத் தேவைகளுக்காக

    மன்றாடித் திரிந்து,

    இலட்சியக் கனவுகளைப் பணயம் வைத்து,

    வாழ்க்கைப் பயணத்தைத்

    தொடர்ந்திடும் பரிதாப நிலை!

    உணவுத் தேவைகளே அவன்

    உழைப்பின் எல்லையாய்

    அமைந்துவிடும் பாவக்கோலம்!

    உணர்வுத் தேவைகளான

    இலட்சியங்களும்,கனவுகளும்

    நடைமுறைத் தேவைகளின்

    நச்சுச் சூட்டில் உலர்ந்துபோகின்றன!

    உலர்ந்து போன கனவுகளுடனும்

    உறைந்துபோன உற்சாகங்களுடனும்

    அவன் இன்னும் வாழ்ந்து கொண்டுதானிருக்கின்றான்!

    தன் பிள்ளையாவது சாதிப்பான் என்று!

    Share
  • அன்பே அழகானது – 2

    ராஜப்ரியன்

    டாடி ….

    டாடி ……….

    என்னடா ?

    பைக் ஓட்டனா காது கேட்காதா டாடி?

    எத்தனை முறை சொல்லியிருக்கன் அப்பான்னு கூப்டுன்னு.

    ஸாரி.

    சரி எதுக்கு கூப்ட்ட.

    எங்க போறோம் ?

    என்னடா கேள்வியிது. ஆறாவது சேர்ந்துயிருக்க புது ஸ்கூல் அதனால உனக்கு யூனிபார்ம் எடுக்கப் போறோம்.

    அது தெரியும். கிளம்பும்போது என்ன சொன்னிங்க.

    என்ன சொன்னன்?

    ஐஸ்கிரிம் சாப்பிட்டுட்டு அப்பறம்மா டிரஸ் எடுக்கலாம்ன்னு சொன்னிங்கயில்ல.

    ஆமாம் அதுக்குயென்ன இப்போ.

    முதல்ல ஐஸ்கிரிம் பார்லர் அதுக்கப்பறம் டிரஸ்.

    நீ ஓழுங்கா ஐஸ்கிரிம் சாப்பிடமாட்ட. டிரஸ் மேலப்படும். அப்படியே துணிக்கடைக்குப் போனா அசிங்கமா இருக்கும். அதனால போகும் போது வாங்கித்தர்றன் வீட்ல வந்து சாப்பிடு.

    வீட்ல வந்து சாப்பிடறன். ஆனா இப்ப வாங்கித்தா.

    டிரஸ் எடுக்கப் போறப்ப அத வேற கைல எடுத்துக்கிட்டு போகனும்டா.

    டிரஸ் எடுத்ததுக்கப்பறம் காசுயில்ல, சளி புடிக்கும்ன்னு சொல்லுவீங்க.

    அதெல்லாம் சொல்லமாட்டன்டா.

    உங்களப்பத்தி எனக்கு தெரியும்.

    கேடிடா நீ.

    நான் உன் பையன்ப்பா என்றவனிடம் வேறு எதுவும் பேசாமல் பைக்கை ஐஸ்கிரிம் பார்லர் முன் நிறுத்தியதும் நீ வெளியில இருப்பா நான் வாங்கி வந்துடறன் என 200 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓடிய ரஞ்சித் நான்கு ஐஸ்கிரிம் கப்புகளை வாங்கிக்கொண்டு மீதி சில்லறையை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டு வருவதை மதன் பார்த்தான்.

    அருகே வந்த ரஞ்சித்திடம் மீதி பணத்த எங்கிட்ட தாடா.

    உங்கிட்ட காசுயில்லாதப்ப தர்றன் என்றபடியே வண்டியில் ஏறி உட்கார்ந்தான்.

    உனக்கு வர்ற வர்ற கொழுப்பு அதிகமாயிடுச்சிடா.

    அதுக்குத்தான் சாப்பாட்டுல ஆயில் குறைக்கச்சொல்றன்.

    அவன் நக்கலடிப்பதைக் கேட்டு டேய் பேசாம வா என்றதுக்கு ‘ம்’ என்றான்.

    குழந்தை ஏசு மெட்ரிக்குலேஷன் பள்ளியின் அலுவலகத்தில் சொன்னபடி அவர்கள் குறிப்பிட்ட துணிக்கடைக்கு சென்று மூன்று செட் யூனிபார்ம், டை, ஷீ எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர இரவு 8 மணியானது. கதவை திறந்து கொண்டு உள்ளே வந்ததும் டேய் தோசை சுடறன் சாப்பிட்டுட்டு அதுக்கப்பறம் ஓரே ஒரு ஐஸ்கிரிம் சாப்பிடு. மீதிய நாளைக்கு சாப்பிடுவ.

    நோ டாடி. இப்ப டூ, டுமாரோ டூ.

    நைட்ல சாப்பிட்டா சளி பிடிக்கும் காலையில சாப்பிடுடா.

    காலையில சாப்ட்டா கோல்டாகாதா?.

    ஆகாது.

    ஏன்?.

    கேள்வி கேட்காம அதக் கொண்டு வந்து பிரிட்ஜ்ல வை.

    பிரிட்ஜ்ஜைத் திறந்து அதை வைத்தபடியே நான் தூங்கனதுக்கப்பறம் நீ எடுத்து சாப்பிடமாட்டயில்ல.

    நீ அதிகமா என்னை நக்கல் அடிக்கறடா எனச்சொன்னதை அலட்சியவன்.

    தோசைக்கு சக்கரை வச்சி தாப்பா.

    ம் என்றதும் ஹாலுக்கு சென்று டிவியை போட்டுக்கொண்டு உட்கார்ந்துவிட்டான். ஆதித்யா, போகோ, நிக் என மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தவன் முன்னால் தோசை தட்டை வைத்ததும் ரிமோட்டை தொடைக்கு கீழே வைத்துவிட்டு சாப்பிட தொடங்கினான். நானும் அவன் அருகில் உட்கார்ந்து சாப்பிட தொடங்கினேன். எதையும் கண்டுக்கொள்ளாமல் சாப்பிட்டு முடித்துவிட்டு தட்டை தந்தான். நான் பாத்திரங்களை கழுவி வைத்துவிட்டு வரும்வரை டிவி முன்பே உட்கார்ந்து இருந்தவனிடம் டைம்மாகிடுச்சி ரஞ்சித் படுக்கலாம்.

    இன்னும் கொஞ்ச நேரம்ப்பா.

    ரிப்பீட்டட் புரோகிராம்டா நாளைக்கும் போடுவான் வா என்றதும் டிவியை ஆப் செய்துவிட்டு பெட்ரூமுக்குள் நுழைந்தான். நான் கதவை லாக் செய்துவிட்டு பெட்ரூமுக்கு வர அவன் கட்டிலில் படுத்திருந்தான். அவனுக்கு பெட்ஷீட் போர்த்திவிட்டு பக்கத்தில் அமர்ந்தேன்.

    ஸ்கூல் எப்பப்பா ஓப்பன்.

    இன்னும் இரண்டு நாள் இருக்கு.

    தினமும் நீ அழைச்சிம்போய் விடுவியாப்பா.

    காலையில ஆட்டோவுல போய்டு. ஈவ்னிங் நான் வந்து உன்னை அழைச்சி வர்றன்.

    காலையில உன்னோட பைக்லயே வர்றன்ப்பா.

    எனக்கு ஆபிஸ் பத்து மணிக்குடா. உனக்கு ஸ்கூல் 8:30 மணிக்கு ஸ்டார்ட்டாகிடும். அதனால நீ காலையில ஆட்டோவுல போய்டு. மதியம் லஞ்ச்ச பாக்ஸ்ல எடுத்தும் போய்டு. தாத்தா பாட்டி ஊர்லயிருந்து வந்ததுக்கப்பறம் பாட்டி தினமும் மதியம் லஞ்ச் எடுத்து வருவாங்க.

    போப்பா தாத்தாவும் – பாட்டியும் வந்துடுவாங்கன்னு நீயும் தான் சொல்ற. அவுங்க வரவே மாட்டேன்கிறாங்க.

    வருவாங்கடா செல்லம் இப்ப நீ தூங்கு என்றதும் அவன் சோகமாக கண்ணை மூடிக்கொண்டான். அவன் தூங்குவது உறுதியானதும் கட்டில் டிராயரை சத்தம் வராமல் திறந்தேன். அதில் லேமினேஷன் செய்யப்பட்ட போட்டோவில் ஜோடியாக நானும் என் மனைவியும் சிரித்துக்கொண்டு இருந்ததைப் பார்த்ததும் மனம் பாரமானது.

    தொடரும்

    Share
  • மே (2013) மாத சிறுகதைப் போட்டி முடிவுகள்!

    வெங்கட் சாமிநாதன்

    கதைகளின் வருகை குறைந்ததற்குக் காரணம் எழுதுபவர்கள் பலருக்கு நாம்/ நான் உற்சாகம் கொடுக்கமுடியாமற் போவது தான் . வருவது முப்பது முப்பத்தைந்து கதைகளே ஆனாலும் ஒன்றிரண்டு நம்மை மிகவும் கவர்ந்து கொள்வதே பெரிய காரியம்.

    இம்முறை கதைகள் வெகுவாகக் குறைந்த போதிலும் பலர் வித்தியாசமாக எழுதிப் பார்க்கிறார்கள். அவர்கள் முயற்சி வரவேற்கத்தக்கது. கவிதை வடிவில் எழுதுகிறார்கள். ஒரு பொழுதின் நகைச் சுவையை எழுதிப் பார்க்கிறார்கள். துப்பறியும் கதை எழுதிப் பார்க்கிறார்கள். இப் புதிய முயற்சிகளில், தேமொழியின் துப்பறியும் கதை முயற்சி வந்தவற்றுள் படிக்க சுவாரஸ்யமாக சிறப்பாக வந்துள்ளது. மே மாத சிறுகதைப் போட்டியின் வெற்றியாளராக தேமொழியைத் தேர்ந்தெடுக்கிறேன்.

    தேமொழிக்கு என் பாராட்டுக்கள்.

    இந்த மாத சிறுகதைப் போட்டியில் பங்கு பெற்ற சிறுகதைகள்:

    1.முன்னைப் பிறவியில்… (கவிதைக்கதை)

     

    2. நகைச்சுவைத் திருவிழா

    3.ஜினா என்றொரு க்ருயெல்லா

    4.அவ்யயாநந்தர்

    5. பேஸ்புக் ஸ்டேடஸ் (Facebook Status)

    6. ஆராதனா

    7.பெண்மை

    போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்பர்களே. வெற்றி  பெற்ற தேமொழிக்கு வல்லமை குழுவினரின் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.  போட்டியில் அனைவரையும் பங்குபெற வரவேற்கிறோம்.
    அன்புடன்
    பவள சங்கரி
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒன்றினை இரண்டு நாட்கள் முன்பு படிக்க நேர்ந்தது. பாரத பண்பாட்டையும் அதன் சிற்பக் கலையின் மேம்பாட்டையும் நன்கு உணர்ந்து அதன் உன்னதத்தைப் போற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த சிற்பங்களை பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் இரு மேற்கத்தியவர்கள் ஆற்றிய பணிகள் பற்றிய சிறு வரலாற்றுடன் கூடியது

    சிற்பக் கலையின் பெருமைகளை அறியத் தரும் ஒரு அருமையான தளம், சிங்கப்பூர் விஜய் அவர்களின் கல்லிலே கலைவண்ணம் கண்டான் – பொயட்ரி-இன்-ஸ்டோன், இதன் பதிவுகள் இந்த வாரத்தில் முன்னூறை எட்டியுள்ளன. இந்த முன்னூறாம் பதிவை இந்த வாரம் பதிப்பித்தவர் நம் மதிப்பிற்குரிய எழுத்தாளர் கடலோடி திரு நரசய்யா அவர்கள். இந்தப் பதிவில்தான் நான் மேற்குறிப்பிட்ட பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மதுரை மதன கோபால்சாமி ஆலய கலைச் சிற்பங்கள் பற்றிய முன்வரலாற்றுக் குறிப்பை மிகச் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுத்தின் மூலமாக சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

    ”சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்சியகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது.

    மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான்.

    மேலும் படிக்க சுவையான இந்த இணைப்பைச் சொடுக்குங்களேன்..
    http://poetryinstone.in/lang/ta/2013/05/31/300th-post-connection-of-west-and-east-by-art-poetryinstone-becomes-a-record-of-history-kra-narasiah.html

    நரசய்யா அவர்கள் எனக்கு எப்போதும் எழுத்துலகில் பெரிய வழிகாட்டியாக இருப்பவர். அவர் என்னைப் பாராட்டி எழுதிய எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கைவரப்பெற்றவன்.. ஆனாலும் சிறியனாகிய நான் எப்போதுமே அவரை ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இவரது அனுபவங்கள், தெளிந்த ஆராய்ச்சிகள், நேர்மையான எழுத்துகள், அதற்கும் மேலாக எளிமை, இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்தான் இவை எல்லாமே எதிர்கால எழுத்தாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த முன்னூறாவது பதிவிலும் அவரது ஆராய்ச்சியின் புலமையும் அவரது நினைவாற்றலும் போற்றத்தக்க வகையில் பரிமளித்த விதமும் எங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்த வார வல்லமையாளர் எனும் விருதினை நரசய்யா அவர்களுக்கு அளித்து மகிழ்வது என்பது. . விருதுகள் பல வாங்கியவருக்கு இது பத்தோடு பதினொன்றாக இல்லாமல் எங்கள் இதயங்களின் அன்பையும் சுமந்துகொண்டு கொடுப்பதை அவர் அறிவார். மேலும் பல பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க அவரது எழுத்துப் பணி!

    கடைசி பாரா: பழமை பேசி தன் பெயரை புதுமை பேசியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘அமைதி’ யான கவிதை

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    Share
  • அடுக்களையும் அமைதியும்

    தவளைகளின்
    அட்டகாசத்தில்
    ஆர்ப்பரித்துக் கிடக்கும்
    குளத்திலும் அமைதி
    மணவாட்டி இல்லாத
    அடுக்களை போல!!

    வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.

    மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.

    ”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.

    நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.

    சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.

    வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.

    அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.

    “அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.

    சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.

    “சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.

    இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.

    செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.

    ”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

    வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!

    Share
  • குறளின் கதிர்களாய்…(3)


      செண்பக ஜெகதீசன்

    அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத்        தம்மை

    இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

          -திருக்குறள் -151(பொறையுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டினாலும் நிலம்

    துன்பப்படுவதில்லை, தாங்கிக்கொள்ளும்..

     

    பாடம் இது உனக்கு

    படித்து உயர,

    மனிதா

    பொறுத்துக்கொள் உன்னை

    வெறுத்து இகழ்வோரையும்…!

     

    குறும்பாவில்…

     

    பூமியாயிரு பொறுமையில்,

    மனிதா உன்னை

    இகழ்பவரையும் மறந்து…!

     

    மரபுக் கவிதையில்…

     

    வெட்டியும் குத்தியும் அகழ்ந்தாலும்

    வேலி போட்டே அடைத்தாலும்,

    கெட்ட செயலே செய்தாலும்

    கோபம் ஏதும் கொள்ளாமல்,

    சுட்டிப் பிள்ளையின் தாயவள்போல்

    சுமந்து காப்பாள் நிலமகள்தான்,

    திட்டும் மாந்தர் இகழ்ச்சியையும்

    தாங்கியே உயர்வாய் அதுபோலே…!

     

    புதுப்பாவில்…

     

    தீண்டப்படுகிறது

    தோண்டப்படுகிறது

    நிலமகளின் மேனி..

     

    பொறுமையின் உருவம் அவள்-

    போகட்டும் என்று

    பெருந்தன்மையில் தாங்கிக்கொள்கிறாள்..

     

    இந்த குணம்தான் வேண்டும்

    மனிதா

    இகழ்ந்தாலும் பிறர் உன்னை-

    இதுதான் முதல் படி உயர்வுக்கே…!

     

    கிராமிய பாணியில்…

     

    மலயத் தாங்கிடும்

    மரத்தத் தாங்கிடும் பூமியம்மா- ஒன்

    மனத்தப் பாத்தா சாமியம்மா..

     

    தோண்டிஒன்ன எடுத்தாலும்

    தொல்ல யெல்லாந் தந்தாலும்- அத

    எல்லாம் பொறுத்திடுந் தாயம்மா

    எங்களத் தாங்கிடும் நீயம்மா..

     

    அடுத்தவன் ஒன்ன வெறுத்தாலும்

    ஆங்காரத்தில் பழிச்சாலும்- அத

    எல்லாம் பொறுத்திரு நெலம்போல

    நல்லா வாழலாம் மனம்போல…!

     படத்துக்கு நன்றி

     http://www.ebibleteacher.com/node/323  

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 74

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 08. வேனில் காதை
    இளவேனிலின் வருகை
    திருவேங்கடப் பெருமாள் எழுந்தருளிய
    வேங்கடமலையை வடக்கேயும்
    குமரிக் கடலைத் தெற்கேயும்
    எல்லையெனக் கொண்டது தமிழ்நாடு.

    மாடமாளிகைகள் நிறைந்த ஊரானது மதுரை;
    பெருமையில் சிறந்த ஊரானது உறையூர்;
    ஆரவாரம் நிறைந்த நகரானது வஞ்சி;
    ஒலிக்கின்ற கடலும் காவிரியும் உடையது புகார்.

    இந்நான்கு நகரங்களிலும் ஆட்சி செய்தனன்
    புகழும் சிறப்புமுடைய மன்மதராசன்.
    அவனுக்குத் துணையெனவே
    வந்துவிட்டனன் இளவேனில் என்பவனும்.
    இச்செய்தியை குயிலோனுக்குத் தூது கூறினன்
    வளத்தில் சிறந்த பொதிகை மலையில்
    அகத்தியர் பெற்றெடுத்த தென்றல் என்பவன்.

    ஆதலின்,
    “மீன்கொடி மைந்தன்
    மன்மதனின் படையிலுள்ள
    மகளிர் அனைவரும்
    நல் அலங்காரங்கள் செய்திடுங்கள்”
    என்றேதான் சொல்லும் வண்ணம்
    தென்றல் தூதுவன் இட்ட கட்டளையதனை
    பூங்கொடிகள் நிறைந்த
    சோலைப் பாசறையிலிருந்து
    கொம்பு ஊதும் குயிலோன்
    அறிவித்தனன் கூவியே.

    அடிப்படையாய் அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 1 – 14
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram23.html

    படத்துக்கு நன்றி:
    http://www.indiamart.com/forum-art-gallery/abstract-paintings.html

    Share
  • மதுரையம்பதியில் கால்மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்

    சு.ரவி

    வணக்கம், வாழியநலம்,

    பாண்டிய மன்னனுக்காக, மதுரையம்பதியில் கால்மாற்றி, வலதுகால் தூக்கி ஆடும்

    நடராஜப் பெருமான்

    பார்க்க, படிக்க, ரசிக்க….

    ஆலவாய் அழகா, ஈசா!

    ஆடலுக் கரசே!கையில்

    சூலமும் தழலும் ஏந்தும்

    சுந்தரா!அகிலம் வாழ

    ஆலமுண் டமர்ந்த தேவா!

    அடியவர் உயிரைக் காத்துக்

    காலனைக் கடிந்தாய் அன்று!

    கழலிணை பணிந்தேன் இன்று!

    வானுயர்   மதில்கள் சூழும்

    மதுரையின் வேந்தே!கையில்

    மானொடு மழுவும் தாங்கி

    மன்றினில் ஆடும் ஈசா!

    மீன்விழி  மங்கை நேசா!

    ம்ருத்யுவை உதைத்த பாதா!

    நானுனை வேண்டிக் கொள்வேன்

    நலமெலாம் பொழிந்து காப்பாய்

    அமரரும் அஞ்சும் நேரம்

    அஞ்சலென் றபயம் தந்தோய்!

    டமருகம் கையில் தாங்கித்

    தாண்டவம் ஆடும் தேவா!

    நமனணு  காமல் அன்று

    நம்பியைக் காத்தாய்! மீனாள்

    உமையொரு பாகா, காப்பாய்!

    உனதடி சரணம் ஐயா!

    வைகையின் அலைகள் சூழும்

    வளமிகு மதுரை ஆளும்

    மைவிழி மீனாள் மேவும்

    மன்னனே, சொக்க நாதா!

    கையினால் பாசம் வீசும்

    காலனிங் கணுகா  வண்ணம்

    செய்கைகள் ஓயும் போது

    சடுதியில் காப்பாய் அப்பா!

    வலதுகால் தூக்கி ஆடும்

    வண்ணமே! வார்சடைமேல்

    நிலவொடு கங்கை பொங்க

    நிர்த்தனம் செய்யும் தேவா!

    புலனெலாம் ஒடுங்கும் நேரம்

    புகல் எமக் காரும் இல்லை!

    நலம் காக்க வேண்டும் உனையே

    நம்பினோம் அம்மையப்பா!!

     

    Share
  • இன்னும் மாயை இருக்கிறது

     

    -சு.ரவி

     

    இன்னும் மாயை இருக்கிறது- அது

    என்னில் என்னை மறைக்கிறது!

    மின்னல் கீற்றாய் மெய்யுணர்(வு) அந்தோ!

    எப்பொழுதாகிலும் ஸ்புரிக்கிறது.                           ( இன்னும்)

     

    புலன் உணர்வெல்லாம் பொய்மைஎன்றே ஒரு

    பொறிபறந்தாற்போல் புரிகிறது;

    நிலத்தில் இவ்வாழ்வும் நிலைகிடையாதெனும்

    நிச்சய உண்மை தெரிகிறது- மனம்

    சிலபோதேனோ இனிப்பை அவாவும்

    சிறுமதலை போல் அலைகிறது-உடல்

    பலமிழந்தோய்ந்தால் பயந்து நடுங்கிப்

    பரிதவித்தேங்கிக் குலைகிறது!                            ( இன்னும்)

     

    ‘மனநிறை(வு) என்பதோர் மாரீசம் – அது

    மயக்கி இழுத்துனைச் செயும் மோசம்

    இனம் குலம் என்பவை வெளிவேஷம் “- என

    இன்னும் பலப்பல கதை பேசும்= உடன்

    தனயன், தாய், மனை இவர் முகம் பார்த்திடில்

    தயங்கும், தடுக்கும், தவறி விழும்!

    கனவும் நனவும் கடந்த பின்னாலும்

    கணப்பொழுதாசையில் கவிழ்ந்து விடும்!  ( இன்னும்)

     

    விண்ணியல் கண்டு தெளிந்தாலும்- மறை

    ஓதிய பண்டிதன் ஆனாலும்

    எண்ணிய மட்டினில் ‘யான்’ ,‘என(து)’ எனும் இவை

    எங்கோ பாதலம் ஆழ்த்திவிடும்

    திண்ணிய நெஞ்சுரம் வைராக்யம் இவை

    திரும்பவும் இடிந்து பொடியாகும்

    நுண்ணிய நூலிழைதான் பாசம்- அது

    நோற்ற தவங்களை விலைபேசும்            ( இன்னும்)

     

     

    ஓட்டம் இதற்கோர் இலக்கில்லை

    ஓடாதிருக்க விலக்கில்லை

    ஓட்டுவ தாரோ, ஓடுவ தேனோ

    ஓடும் எவர்க்கும் தெரிவதில்லை

    ஓட்டம் முடிந்தபின் ஓடு கழன்றால்

    ஓய்வுண்டோ எனில் அதுவுமிலை

    ஓட்டத்தின் ஊடே ஓராயிரம் தடை!

    ஓட்டத்தில் நாட்டம் குறையவில்லை    ( இன்னும்)

     

    Share
  • என் கதைமாந்தர்கள்…

     

    -கீதா மதிவாணன்

     

    காத்திருந்து காத்திருந்து

    களைத்துப்போயிருக்கலாம்

    என் கதைமாந்தர்கள்!

    ஆட்டுவிக்கும் கர்வத்தில் நான்!

    அலைக்கழிக்கப்படும் கலவரத்தில் அவர்கள்!

    விதியை மாற்றுவதும் வீணே இழுத்தடிப்பதும்

    இன்னாருடன் இன்னாருக்கு

    இணக்கமா பிணக்கா என்பதை

    இடைக்கிடை நிர்ணயிப்பதும்

    நிர்ணயித்ததை நிராகரிப்பதும்

    இடைச்செருகல்களாய்…

    இன்னுஞ்சிலரை இணைப்பதும்,

    இணைந்தோரை வலிந்து பிரிப்பதுமாய்

    ஒரு பொம்மை விளையாட்டுப்போல்தான்

    ஆரம்பித்தது அது…

    துல்லியமாய் கணக்கிடவியலா

    துளிப்பொழுதொன்றில்

    நானும் அங்கோர் அங்கமாகிவிட

    நகரமறுக்கிறது கதைக்களம்!

    அம்மாந்தரோடு நாளெல்லாம்

    செம்மாந்து திரியும் எனக்கு

    நாட்பட நாட்பட…

    புற உலகம் என்பது

    புளித்துதான் போய்விட்டது!

     

    படத்துக்கு நன்றி: http://completejoy.files.wordpress.com/2012/12/people-in-shadow.jpg

     

    Share
  • வார ராசி பலன்!….03-06-13 – 09-06-13

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்:  மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும், திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில் வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத் தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில் பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம்

    ரிஷபம்: .நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப் பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள் நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம். இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில் இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும் வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும். பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர் பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை, தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய் மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன் திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும். அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய் முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில் அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு, உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள் படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து, தங்களின் திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள். இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம் கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் , சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண் செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல் இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன் செயல்படலாம்.

    விருச்சிகம்: பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம் செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம் மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும் துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள். பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள் கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும் உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன் வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும் கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம். வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின், கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள் இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள் கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர் வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும் வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்:நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன் அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும் இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால், தேக நலன் சீராக இருக்கும்.

    Share
  • அரசியல் கொக்குகள்

     

    -வே.ம.அருச்சுணன் – மலேசியா

    அழகிய நாடு
    அற்புத வளங்கள்
    கல்வி குறைவென்றாலும்
    அறிவான மக்கள்
    பேதம் அறியா
    அன்பு தெய்வங்கள்
    மாறா குணங்கள்
    அமைதியான வாழ்க்கை
    பொது நலம்
    கடந்து நூற்றாண்டில்……!

    புதிய மனிதர்கள்
    விநோத சிந்தனைகள்
    சுய கௌரவம்
    பொது வாழ்வில்
    சுரங்கம் அமைத்து
    நாட்டை மறந்து
    வீட்டை வளர்க்க
    சித்து விளையாட்டு
    சுயநலம்
    இந்த நூற்றாண்டில்……!
    மகாத்மாக்கள்
    சென்ற நூற்றாண்டு முதலே
    பயணித்துவிட்டார்கள்……!

    இன்று,
    அரசியல் வானில்
    அநீதிகளுக்கு மகுடம்
    அறப்போர்
    ஓரமாய் ஒதுங்கிக் கொண்டது
    அடாவடிகள்
    தலையெடுப்பால்
    நதிகள் நாசமாயின
    நீர்வாழ் அழிந்தன…….!

    பொய்யான
    அரசியல் சுனாமியால்
    மக்கள் சிரச்சேதம்
    கூடி வாழ்ந்த மூவினம்
    மண்ணாகியது
    வம்பும் வழக்கும்
    தொடராகின…..!

    நாட்டின் அமைதி
    அவர்கள் விரும்பாதது
    கலங்கி குட்டையில்
    மீன் பிடிக்கும்
    அரசியல் கொக்குகள்……!
    மக்களை
    மாக்களாக்கும்
    அரசியலாரிடம் எச்சரிக்கை
    துஸ்டனைக் கண்டால் தூரவிலகு
    பெரியோர் சொன்னது தப்பாகா……!

    நாட்டு நலம்
    முன்னெடுத்து
    சபதம் எடுத்திடு
    மக்கள்
    அரசியலாரிடமிருந்து
    நாட்டைக் காக்திடு……!

    நாடு
    இடுகாடாய் மாறு முன்னே
    சுதந்திரத்தைக் காத்திடு
    சிம்மாசனத்தில் அமர்ந்து
    எக்காளமிடும் அரசியலார்
    திமிரினை அடியோடு
    வீழ்த்திடுவீர்……!

    நாட்டைக் காக்கும்
    வீரத்திருமகனே
    நாளைய பொழுது
    நலமாய் இருக்கட்டும்
    வெற்றிமுரசு வேகமாய் ஒலிக்கட்டும்………!

    Share
  • குருவி கத்துகிறதா…சிக்கட்டி பாடுகிறதா

    எஸ்.வி.வேணுகோபாலன்

    பேரன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

    தீராநதி மே இதழை நேற்று தான் வாங்கினேன்…(அது நேற்றுதான் வந்திருக்கும் என்று கருதுகிறேன்…வியாழன் அன்று எங்களது பள்ளிக்கூட நிகழ்வு ஒன்றுக்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தேன்)…

    இது தான் நாள் என்ற தலைப்பில் உங்களது கதை காத்திருந்தது, 18ம் பக்கத்தில்…

    புலம் பெயர் வாழ்க்கையின் நிச்சயமற்ற தருணங்கள், எல்லை கடத்தலின் எல்லையற்ற அபாயங்கள், உயிரைக் கையில் பிடித்தபடி அலைவுறும் நேரங்கள்….இவற்றின் மற்றுமொரு அழுத்தமிக்க பதிவாக இந்தக் கதை…

    இந்த உலகு யாருக்காக இயங்குகிறது…யாருக்கானது என்ற கேள்விகள் எனக்குள் அடிக்கடி நிகழும்…. எஜமானர்கள், அடியாட்கள், அரசுகள், அதிகாரிகள், விதிமுறைகள், தண்டனைகள்…என்று பொருத்துக அட்டவணையில் இடம்பெற வேண்டிய ஜோடி ஜோடியான வன்முறை சொற்கள் எவ்விதம் மனித வாழ்விற்குள் நுழைந்தது….

    தூக்கு மேடை குறிப்புகள் (ஜூலியஸ் பூசிக்) என்ற மகத்தான உண்மைக் கதையில், நாசிச சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளும் இடம் ஒன்று வரும்: என்னை என் இத்தனை வலுவுள்ளவனாகப் பெற்றீர்….? மானசீகமாகத் தனது பெற்றோரிடம் முன் வைக்கப்படும் இந்தக் கேள்வி, முடிவற்ற துயரத் தாக்குதலை எதிர்கொள்ளும் அரசியல் உரம் பெற்ற கம்யூனிஸ்ட் ஒருவரது உளத் திண்மையை சோதிக்கும் உச்சகட்ட தாக்குதலின் போது அவரது வெளிப்பாட்டு மொழியாக வெளிவரும்…

    சம காலத்தில், இலங்கைத் தமிழர் சொந்த மண்ணிலும், வெளி தேசங்களிலும் படும் இன்னல், இழிவு, அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை விவரிப்புக்கு அப்பாற்பட்டது…

    இது தான் நான் கதை, இந்த வேதனையின் பாடுகளை, இத்தனை இடர்மிகுந்த சூழலிலும் பரஸ்பரம் துளிர்க்கும் கரிசனத்தை, அடுத்தவர்க்காக உதிர்க்கப்படும் கண்ணீர்த் துளிகளை, அடிப்படை மனித நேயத்தை எந்த மிகையுமற்ற குரலில் பேசுகிறது…வெடி மருந்துகளின் வேதியல் நெடிக்கிடையே நம்பிக்கையை மூச்சுத் திணராது பொத்திக் காப்பது இத்தகைய உணர்வுகளன்றி வேறென்ன…

    கதையில் வரும் சந்திரா மாமி ஓர் இயற்கை கொண்டாடி…பறவைகளின் பெயர்கள் மட்டுமல்ல,, அவற்றின் சஞ்சாரம், வாசஸ்தலம், பறத்தலின் திசையை வைத்து நீர்ப்பரப்பு அறிதல் இன்னோரன்ன விஷயங்களில் கொண்டிருக்கும் தேர்ச்சி அருமையான அம்சம்….

    கதையை நீங்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற இலக்கணத்தில் கொண்டு வர தேர்வு செய்யும் வடிவம் எப்போதுமே சிறப்பானது…இந்தக் கதை அதில் இன்னோர் புதிய உயரத்தைத் தொடுகிறது….

    குருவி கத்துகிறது என்று சொல்வதே, சந்திரா மாமியை கோபப்படுத்துகிறது…சிக்கட்டி பாடுகிறது என்று சொல்லவேண்டும் என்று கற்பிக்கிறார்…இயற்கையோடு ஒத்திசைவாக வாழப் பழகும் மனிதர்களால் இயற்கையோடு சென்று மீண்டும் கலக்கும் தருணத்தையும் அறிந்திருக்க முடிவது உங்களது அற்புதக் கதை சொல்லும் நேர்த்தி. இலக்கியமயமாகும் வாழ்வியல் தரிசனம்…

    முன் பின் பார்த்திராத மனிதர்களுக்காக வாசக உள்ளங்களை அலைமோத வைக்கிறீர்கள்….
    குலுங்கி அழ வைக்கிறீர்கள்….ஏக்கப் பெருமூச்சோடு இறுக்கமாக விழி மூடி சிந்திக்கத் தூண்டுகிறீர்கள்….

    வணக்கங்கள் அ மு…
    எஸ் வி வேணுகோபாலன்

    Share