குறளின் கதிர்களாய்…(3)
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
-திருக்குறள் -151(பொறையுடைமை)
புதுக் கவிதையில்…
தோண்டினாலும் நிலம்
துன்பப்படுவதில்லை, தாங்கிக்கொள்ளும்..
பாடம் இது உனக்கு
படித்து உயர,
மனிதா
பொறுத்துக்கொள் உன்னை
வெறுத்து இகழ்வோரையும்…!
குறும்பாவில்…
பூமியாயிரு பொறுமையில்,
மனிதா உன்னை
இகழ்பவரையும் மறந்து…!
மரபுக் கவிதையில்…
வெட்டியும் குத்தியும் அகழ்ந்தாலும்
வேலி போட்டே அடைத்தாலும்,
கெட்ட செயலே செய்தாலும்
கோபம் ஏதும் கொள்ளாமல்,
சுட்டிப் பிள்ளையின் தாயவள்போல்
சுமந்து காப்பாள் நிலமகள்தான்,
திட்டும் மாந்தர் இகழ்ச்சியையும்
தாங்கியே உயர்வாய் அதுபோலே…!
புதுப்பாவில்…
தீண்டப்படுகிறது
தோண்டப்படுகிறது
நிலமகளின் மேனி..
பொறுமையின் உருவம் அவள்-
போகட்டும் என்று
பெருந்தன்மையில் தாங்கிக்கொள்கிறாள்..
இந்த குணம்தான் வேண்டும்
மனிதா
இகழ்ந்தாலும் பிறர் உன்னை-
இதுதான் முதல் படி உயர்வுக்கே…!
கிராமிய பாணியில்…
மலயத் தாங்கிடும்
மரத்தத் தாங்கிடும் பூமியம்மா- ஒன்
மனத்தப் பாத்தா சாமியம்மா..
தோண்டிஒன்ன எடுத்தாலும்
தொல்ல யெல்லாந் தந்தாலும்- அத
எல்லாம் பொறுத்திடுந் தாயம்மா
எங்களத் தாங்கிடும் நீயம்மா..
அடுத்தவன் ஒன்ன வெறுத்தாலும்
ஆங்காரத்தில் பழிச்சாலும்- அத
எல்லாம் பொறுத்திரு நெலம்போல
நல்லா வாழலாம் மனம்போல…!
படத்துக்கு நன்றி
http://www.ebibleteacher.com/node/323
வல்லமையின் கண்ணதாசன் என்றே சொல்ல தோன்றுகிறது உங்களை.
புதுக் கவிதையில்…
////தோண்டினாலும் நிலம்
துன்பப்படுவதில்லை, தாங்கிக்கொள்ளும்.////
.மரபுக் கவிதையில்…
///வெட்டியும் குத்தியும் அகழ்ந்தாலும்
வேலி போட்டே அடைத்தாலும்,///
புதுப்பாவில்…
///தீண்டப்படுகிறது
தோண்டப்படுகிறது
நிலமகளின் மேனி..
கிராமிய பாணியில்…
///மலயத் தாங்கிடும்
மரத்தத் தாங்கிடும் பூமியம்மா- ஒன்
ஒரே பொருளை வெவ்வேறு வார்த்தைகளில் பார்க்கும் போது எனக்கு மேலே சொன்னதுதான் தோனியது. அருமை. அருமை.
மெய்சிலிர்த்துத்
தலை வணங்குகிறேன்
தனுசு அவர்களின் பாராட்டுக்கு-
துரோணரின்(ஆசான்) பெயரெடுத்த
ஏகலைவனாக…!
கண்ணதாசப் புல்வெளியில்
கவிதைமேய்ந்து வளர்ந்தவன் நான்..
நன்றி..நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…