தவளைகளின்
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!

வணக்கம். இவ்வார வல்லமையாளர் பத்தியில், அன்பு திவாகர் அய்யா அவர்கள் இச்சிறு கவிதையைக் குறிப்பிட்டு இருக்கிறார். மூலையில் எங்கோ புதையுண்டு கிடக்கும் அந்த நுண்ணுணர்வினைக் களைந்தெறிந்து விட்டு வாசித்தால் இனிப்பைத் துறந்து விட்டு மெல்லும் கரும்புச் சக்கை போலத்தான் இருக்கும் எப்பேர்ப்பட்ட கவிதையும். அதற்கு இதுவும் விதிவிலக்கல்ல. அன்பு அய்யா அவர்களுக்கும் இக்கவிதையில் புதைந்திருக்கும் அந்த நுண்ணுணர்வின் தாக்கம் இருக்கிறது. அனுபவமும் நெகிழ்வும் தரித்த படைப்பாளிக்கு அதன் தாக்கம் இருக்கப் பார்ப்பதில் வியப்பில்லைதான். ஆனால் எமக்கு எல்லா நேரமும் அது வாய்க்கப் பெறுவதில்லை. அவ்வுணர்வைச் சரியாக வெளிப்படுத்துகிற கவிதைகளின் வீரியமும் அளப்பரியது. எனவேதான் கவிஞர்கள் உலகை ஆளுகிறார்கள். கவிதைகளாலே புரட்சிகள் பல பிறக்கின்றன! மக்கள்சக்தியை பராசக்தியாக்கி நாட்டைத் தட்டி எழுப்பினான் மகாகவி.

மனத்துள் விளைந்ததை எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். வினாவொன்று நம்மை நிற்கவைத்து வினவியது. மணவாட்டி என்றால் அடுக்களைதானா? முற்போக்குவாதம் எனக் கையிலெடுத்துக் கொண்டு வந்தால் நீ பிற்போக்குவாதியாகி விடமாட்டாயா?? சிந்தையில் விழுந்தது சாட்டையடி. உள்ளதை உள்ளபடிச் சொல்லாமல் திரித்துச் சொல்வதுவும் நன்றன்றோ? எதிர்ச்சாட்டையின் வலு முன்னைய அடியைக் காட்டிலும் மிகுந்திருந்தது. வல்லான் வகுத்ததே வாய்க்காலெனக் கருதியும் உண்மை கருதியும் பின்னதன் சொல்படியே, எழுதியது எழுதியபடியே இருக்கட்டுமென இருந்து விட்டேன்.

”வெயிலின் அருமை நிழலில் தெரியும்; அண்மையின் அளவு அகல்தலில் தெரியும்!” என்பார்கள். விடுமுறைக்காலப் பயணமாகத் தாயகம் சென்றிருக்கும் மணவாட்டிக்கும் எனக்குமான அணுக்கம் அகம் குறித்தானது; எனவே எங்களுக்குள் பிரிவென்றேதும் கிடையாது. ஆனால் புறத்துக்கும் அகத்துக்குமான பிரிவு, அதாவது அடுக்களைக்கும் அவருக்குமான பிரிவின் தாக்கம் எமக்கு உண்டு. எனக்குச் சமைத்துக் கொடுக்க ஆளில்லாமல், நானே சமையலை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதல்ல அதன் பொருள். அமைதியாய்ச் சலனமெதுவுமின்றிக் காணப்படும் அடுக்களைதான் எம்மை என்னவோ செய்கிறது. அடிக்கடி சென்று பார்க்கிறேன். வெறுமையாய் இருக்கிறது. அந்த வெறுமையே எம்மிலும் புகுந்து பிரிவைச் சொல்லிக் காட்டி கெக்கலிக்கிறது.

நகரில் பிறந்து வளர்ந்து ஆளானவர் மணவாட்டி. மணமாகும் வரையிலும் செல்லப் பிள்ளைக்கே உரிய பாங்கில் சமையல் வேலை எதுவும் செய்யாமல் படிப்பும் விளையாட்டுமாய் இருந்த ஒருவர். சமையல் கட்டுக்கும் அவருக்கும் யாதொரு பிணைப்பும் இருந்ததில்லை. ஆனால் இன்று? பட்டறையே கதியென்று கிடக்கும் பொற்கொல்லனைப் போல இருக்கிறார். அவருக்கு எல்லாமும் எப்போதும் அடுக்களைதான்.

சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே என எண்ணி நான் வியந்தது எண்ணற்ற முறை. பொதுவாக ஒருவர் காலையில் எழுந்ததும் கழிவறைக்குச் செல்வது வழமை. ஆனால் இவரோ அடுக்களைக்குச் செல்வார். சும்மா அடுக்களைக்குச் சென்று அங்கொரு திருகு போட்டு விட்டுப் பின்னர் கழிப்பறைக்குச் செல்வார். சில நேரங்களில் சும்மாவேனும் எதோவொரு கதவினைத் திறந்து பார்த்து விட்டு, இருக்க வேண்டிய இடத்தில் இருக்க வேண்டியது இருக்கிறதாவென உறுதி செய்துவிட்டுச் செல்வார்.

வெளியே எங்கு போய் விட்டு வந்தாலும் சரி, கதவைத் திறந்து கொண்டு நேரடியாக அடுக்களைக்குப் போய் கண்களைச் சுழலவிட்டு ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரைக்கும் மேய்ந்தானபின் அங்கிருக்கும் நீர்க்குவளையில் ஒரு வாய் தண்ணீர் குடித்து விட்டுத்தான் இயல்புக்கு வருவார். விமான ஓட்டியின் அந்த ஒற்றைப் பார்வைக்கு நூறு கண்கள் இருக்கும். தன் எதிரே இருக்கும் நூற்றுக்கணக்கான எண்ணிமகாட்டிகளில் எதுவொன்று இயல்பிலியாக இருந்தாலும் உடனுக்குடன் அறிந்து கொள்கிற ஆற்றல் ஒரு விமானிக்கு உண்டு. ஆனால் என் மணவாட்டியின் அடுக்களைப் பார்வைக்கோ ஆயிரம் கண்கள். அதனதன் வைப்பிடத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தாலோ, இருக்க வேண்டிய இடத்தில் ஏதேனும் இல்லாமற் போனாலோ, புதிதாய் ஏதேனும் இடம் பெற்றிருந்தாலோ சட்டெனக் கண்டுபிடித்து விடுவார்.

அடுக்களையில் இருந்தபடியே குறுங்கணினியில் மின்னஞ்சல் பார்ப்பார். அடுக்களையில் இருந்து கொண்டே தொடுப்பிலித் தொலைபேசியினூடாக தாத்தா, பாட்டி, அதாவது என் அம்மா, அப்பாவை அழைத்து அவர்களுக்கு நடக்க வேண்டியது கிரமத்துடன் நடந்து கொண்டிருக்கிறதாவென அறிந்து கொள்வார். சில பல நேரங்களில் ஊரில் இருக்கும் அம்மா, அமெரிக்க அடுக்களையில் சமைத்துக் கொண்டிருப்பார். ’பொசுக், பொசுக்னு நாள் முச்சூடும் டாக்டர்கிட்டப் போய்ட்டு இருக்கப்படாது. கைக்குழந்தைகள்னா அப்படித்தான். இஞ்சியத் தட்டி இதுல போடு. சுக்கைத் தட்டி அதுல போடு. எண்ணைய சுட வெச்சி அதுல நாலு பல்லுப் பூண்டைப் போடு” என்று அடுக்களையில் அற்றைநாள்ப் போருக்கான முசுதீபுகள் பதினாறு இறக்கைகள் கொண்டு பறக்கும்.

“அம்மா, சீனு என்னோட அதை எடுத்திட்டு தர மாட்டீங்றான்” என்று பெரிய புராணத்தோடு வந்து நிற்கும் இரட்டை வாண்டுகளில் ஒன்று. ஒட்டிப் பிறந்தது வாளாதிருக்குமா? கூடவே வந்து நாயனத்துக்கு ஒத்து ஊதும். இலாகவமாக அதுகளுக்குப் பஞ்சாயத்து நடப்பதும் அந்த அடுக்களையில் வைத்துத்தான்.

சற்று நேரத்தில் அடுத்தவர் வருவார். “அம்மா, நேத்தே சொன்னனே? ஃபீல்டு ட்ரிப்புக்கு இருபது டாலர் கட்டணும்!”. அடுக்களையின் எதோவொரு இழுப்பறையை இழுக்க வந்து சேரும் வேண்டிய அந்த இருபது டாலர். எதற்காவது அடுக்களைக்குள் நாம் செல்ல நேரிட்டாலோ, வந்து பாயும் காண்டீபக் கணைகளும் பேட்ரியாட்களும். “இங்கென்ன செய்றீங்க? நீங்க போங்க. நான் எடுத்துத் தர்றேன்!”. நமக்கு ஒரு போதும் அனுமதி கிடையாது. அடுக்களைக்கு நாம் ஒரு அந்நியன். எத்தனையோ ஃபோபியோக்கள், கிலிகள் உண்டு. இது ”அடுக்களையோ கிலி”. எடுத்ததை எடுத்த இடத்தில் வைக்காமல் விட்டுவிடுவோமோ என்கிற கிலி.

“சின்னவங்க ரெண்டு பேரும் வாங்க. உக்காருங்க பேசாம. சாப்டுட்டுப் போயி விளையாடுவீங்களாமா!! இருந்து, ஆற அமரச் சாப்பாடு உண்ண ஆயிரம் அறைகலன்கள் வீட்டில் இருந்தாலும் அடுக்களைதானே இருந்தாக வேண்டிய இடம்? அடுக்களையின் தரையிலேயே சின்னதுகளும் உட்கார, நடந்தேறும் காலைச் சிற்றுண்டி.

இப்படி விடியல் பிறந்ததும் ஆர்ப்பரிக்கத் துவங்கிவிடுமந்த அடுக்களை. நாள் முழுமைக்கும் அடுக்களையில்தான் எல்லாமும். கதைப் புத்தகங்கள் வாசிப்பதும், அண்டை வீட்டாருடன் அளவளாவுவதும், எந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு எந்த நாளில் செல்ல வேண்டுமெனத் தீர்மானிப்பது உள்ளிட்ட ஏனைய பிற அலுவல்களும் அடுக்களை உருட்டலினூடேதான்.

செய்ய எதுவுமே இல்லாவிட்டாலும் செய்வதற்கு உரிய வேலைகள் உண்டு அடுக்களையில். சென்றவாரம் இடப்பக்கத்தில் இருப்பதை எல்லாம் வெளியே இழுத்துப் போட்டு மீண்டும் உள்ளே அடுக்கி வைத்தோமா? அப்படியானால் வலப்பக்கத்திலிருப்பதை எல்லாம் இழுத்துப் போடுவோம் இப்போது. இப்படித்தான் அடுக்களைக்குச் சீர் நடக்கும் தவறாது. என்றாவது ஒருநாள் அடுக்களையும் ’தன் வரலாறு’ எழுதும்; அன்று தெரியவரும் அதற்கு ஈடேறுகிற சீர்களும் பேணுதல் வரிசைகளும் முற்றிலுமாய்.

”உன்னை எனக்குக் கட்டி வைத்தார்களா, அடுக்களைக்கா?”, கேட்ட மாத்திரத்தில் பதில் வந்து விழும். அது நீங்கள் கட்டியழும் கம்ப்யூட்டரிடம் போய்க் கேளுங்கள் என்று. ஒரு வீட்டில் திருமண பந்தம் வைத்துக் கொள்கிறோம் என்றால், அந்த ஆணையோ பெண்ணையோ பார்க்கத் தேவையில்லை. கழிப்பறை அல்லது அடுக்களையைப் பார்த்தால் விளங்கும் என்கிறவாக்கில், “அடுப்புஞ் சலதாரையும் சுத்தமின்னா பொண்ணுஞ் சுத்தந்தேன்” என்கிறது ஊர்ப்புறத்துச் சொலவடை. எங்கள் வீட்டு அடுக்களையைப் பார்த்தாலோ ஏழேழு பிறவிக்கும் இந்த ஒரே மணவாட்டிதான் போலிருக்கிறது. நான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

வீட்டின் மறுகோடியில் இருக்கும் அலுவலக அறையிலிருந்து பார்க்கிறேன். ஆட்டுவிக்கப்படாத பொய்க்கால் குதிரை போலச் சலனமற்று ஒலிப்பசியுடன் கூடிய இருட்டுப் பட்டினியுடன் துவண்டு கிடக்கிறது. ஆமாம். கடந்த இரு வாரங்களாய்த் தரிசாய்க் கிடக்கிற அதன்மேல் மெலிதாய்ப் போர்த்தப்பட்டுமிருக்கிறது அமைதி.. அமைதி.. அமைதி!!!

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அடுக்களையும் அமைதியும்

  1. சுருன்கிப்போன இந்த உலகத்தில் இன்னும் விரிந்து கிடப்பது அடுப்படி மட்டும் தான். அந்த அடுப்படியில் ஓர் குடும்பத்தலைவி . நல்ல விவரிப்பு உண்மை நிகழ்வும் கூட.

  2. அருமையான பதிவு!!! 
    //சிறப்புப் பட்டம் பெற்று, மருத்துவத்துறையின் உரிமம் பெற்ற ஒருவர் இப்படியானதொரு பாங்கில் இருக்கிறாரே// அங்கு மருத்துவத்துறை. இங்கு M.S தகவல் தொழில்நுட்பம். இது ஒன்றுதான் வித்தியாசம் தான். மற்றபடி, நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அனைத்தையும் கடந்த மாதம் நானும் உணர்ந்தேன். வாசிக்கும் அனைத்து ஆண்களும்இதையே உணர்வார்கள் என்று நினைக்கிறேன். 
    Thanks for the wonderful article! You may want to dedicate this to your wife! 🙂

  3. மாப்பு….
    அமைதி அமைதி அமைதி!

    அடுக்களையும் கொஞ்சம் ஓய்வெடுக்கட்டும்..

    உங்கள் எழுத்தை வாசித்தபிறகு மனசுதான் ஓய்வின்றி றெக்கை கட்டிப் பறக்கிறது

  4. இவளுக இம்ச தாங்க முடியல…
    இவளுக இல்லாமையும் இருக்க முடியல 
    இந்த நிலைல போயிகிட்டுருக்கு வாழ்க்கை 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.