திவாகர்

ஏற்கனவே ஒருமுறை அருங்காட்சியகங்களின் அருமையைப் பற்றி (தேமொழி எழுதியபோது) அதன் பெருமையை எடுத்துக் காட்டினோம். இப்போது இன்னொரு அருங்காட்சியகமும் அதன் பூர்வகதையும் பற்றிய தகவல் அடங்கிய கட்டுரை ஒன்றினை இரண்டு நாட்கள் முன்பு படிக்க நேர்ந்தது. பாரத பண்பாட்டையும் அதன் சிற்பக் கலையின் மேம்பாட்டையும் நன்கு உணர்ந்து அதன் உன்னதத்தைப் போற்றியதோடு மட்டுமல்லாமல் அந்த சிற்பங்களை பாதுகாக்க அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் இரு மேற்கத்தியவர்கள் ஆற்றிய பணிகள் பற்றிய சிறு வரலாற்றுடன் கூடியது

சிற்பக் கலையின் பெருமைகளை அறியத் தரும் ஒரு அருமையான தளம், சிங்கப்பூர் விஜய் அவர்களின் கல்லிலே கலைவண்ணம் கண்டான் – பொயட்ரி-இன்-ஸ்டோன், இதன் பதிவுகள் இந்த வாரத்தில் முன்னூறை எட்டியுள்ளன. இந்த முன்னூறாம் பதிவை இந்த வாரம் பதிப்பித்தவர் நம் மதிப்பிற்குரிய எழுத்தாளர் கடலோடி திரு நரசய்யா அவர்கள். இந்தப் பதிவில்தான் நான் மேற்குறிப்பிட்ட பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மதுரை மதன கோபால்சாமி ஆலய கலைச் சிற்பங்கள் பற்றிய முன்வரலாற்றுக் குறிப்பை மிகச் சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் எழுத்தின் மூலமாக சில விஷயங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சரி, இவர் விஷயங்களுக்குப் போவதற்கு முன், நாம் ஸ்டெல்லா கிராம்ரிஸ்ச் எனும் அம்மையாரைப் பற்றி அறிந்துகொள்ளத்தான் வேண்டும். நான் கிருத்திகாவின் (மதுரம் பூதலிங்கம்) ‘லெட்டெர்ட் டயலாக்’ எனும் புத்தகத்தை எழுதும்போதும் அதற்கான ஆராய்ச்சியில் ஈடுபடும்போதுதான் ஸ்டெல்லா, கிருத்திகாவை அமெரிக்காவுக்கு அழைத்த விவரம் கண்டு வியந்தேன். ஸ்டெல்லா (1896-1993) ஒரு கலைப்பிரியர். ஆஸ்திரியாவில் பிறந்தாலும் பாரதத்தின் பண்பாடு இவரை ஈர்த்தது. இளம்பருவத்திலே மேற்கத்திய நடனத்தில் தேர்ந்தவர்தான் எனினும், வியன்னாவில் வசிக்கும்போது இவருக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பகவத் கீதை இவர் மனதை கொள்ளை கொண்டது. இது இவரை வடமொழியில் ஈடுபாடு கொள்ளச் செய்ததோடு மட்டுமல்லாமல் வடமொழியில் டாக்டர் பட்டமும் பெறும் அளவுக்கு கொண்டு சென்றது. இந்திய சமயத் தத்துவங்களில் இவர் ஈடுபாடும் இவர் ஆக்ஸ்போர்ட் பல்கலையில் பேசிய சொற்பொழிவும் கல்கத்தாவில் உள்ள தேசிய கவிஞர் ரவீந்திரநாத தாகூர் கேள்விப்பட்டு இவரை சாந்திநிகேதனில் பணியாற்றுமாறு அழைத்தார். 1924 முதல் 1950 வரை சாந்திநிகேதனில் இந்தியக் கலைகளுக்கான பேராசிரியராகப் பணியாற்றியபோதுதான் ஃபிஸ்கே கிம்பெல் (இவர் அப்போது பிலெடெல்பியாவில் அருங்காட்சியக இயக்குநராக இருந்தவர்) பேராசிரியை ஸ்டெல்லாவை அமெரிக்காவில் அந்த அருங்காட்சியகப் பொறுப்பாளராக அழைப்பு விடுத்தார். ஏற்கனவே இந்தியக் கலைப் பண்பாடுகளில் ஆர்வம் மிகுந்த ஸ்டெல்லா இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பிலடெல்பியா சென்றதும் செய்த முதல் வேலை இந்தியக் கலைப்பொருள்களுக்கான பகுதியை அந்த அருங்காட்சியகத்தில் விரிவாக்கியதுதான். அத்துடன் இல்லாமல் பொறுப்பாளருக்கான நிதி உதவி (நன்கொடை) இருக்கை (Curatorial Chair Endowment) ஒன்றையும் உருவாக்கி ஊக்கமளித்தார். இப்படி இந்த இருக்கைக்கான முதல் நிதியுதவி நியமனத்தைப் பெற்றவர் டெரீல்லெ மேஸன் எனும் பெண்மணியார். மதுரை (ஆலவாய்) பற்றி எழுதும்போது மேஸன் அவர்களிடமிருந்து பல செய்திகள் பெற்றுக் கொண்டதையும் என்னால் மறக்கமுடியாது.

மறுபடியும் நார்மன் பிரவுன் அவர்களிடத்தே வருவோம். 1931 இல் அருங்காட்சியகத்தில் இந்தியக் கலைச் சொத்துக்கான முதல் பொறுப்பாளராக பதவியேற்றவர் பிற்காலத்தில் பலமுறை இந்தியா வந்து சென்றார். அவருக்கு கல்கத்தா, சென்னை பல்கலைக்கழகங்கள் கௌரவ டாக்டர் கொடுத்துப் பெருமை பெற்றன. அவருடைய கலையறிவும் ஞானமும் அவர் எழுதிய எழுத்துக்கள் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். அதில் ஒன்றுதான் ஒரு சிறிய புத்தகம், ஆனால் ஞானம் தோய்ந்தது. அதன் பெயர் ‘எ பில்லர்ட் ஹால் ஃபிரம் டெம்பிள் அட் மதுரா’ என்பது. இப் புத்தகத்தை பென்சில்வேனியா பல்கலைக்கழகமே 1940 இல் பிரசுரித்தது. இந்தப் புத்தகத்தில்தான் அந்த அருங்காட்சியகத்தில் உள்ள அரிய சிலைகளின் பிறப்பிடத்தை தான் எப்படி கண்டுகொண்டு அதன் நேர்த்தியையும் அழகையும் எப்படியெல்லாம் வியந்தோம் என்பதையும் எழுதி இருக்கிறார். மதுரை மதனகோபால் சுவாமி சிற்பங்கள் பிலடெல்பியா அருங்காட்சியகத்தில் பார்க்கப்படும்போதும் அவைகளின் பிறப்பிடம் நம்முடைய ஊர்தான் என்று தெரியவரும்போதும், நம்மை விட மிக எச்சரிக்கையாகவும், அழகாகவும் பராமரிக்கப்படும் நேர்த்தியைப் பார்க்கும்போதும் நமக்குள் ஒருவித பெருமை நம்மையறியாமல் தோன்றும்தான்.

மேலும் படிக்க சுவையான இந்த இணைப்பைச் சொடுக்குங்களேன்..
http://poetryinstone.in/lang/ta/2013/05/31/300th-post-connection-of-west-and-east-by-art-poetryinstone-becomes-a-record-of-history-kra-narasiah.html

நரசய்யா அவர்கள் எனக்கு எப்போதும் எழுத்துலகில் பெரிய வழிகாட்டியாக இருப்பவர். அவர் என்னைப் பாராட்டி எழுதிய எத்தனையோ சந்தர்ப்பங்களைக் கைவரப்பெற்றவன்.. ஆனாலும் சிறியனாகிய நான் எப்போதுமே அவரை ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன். இவரது அனுபவங்கள், தெளிந்த ஆராய்ச்சிகள், நேர்மையான எழுத்துகள், அதற்கும் மேலாக எளிமை, இன்னும் இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம்தான் இவை எல்லாமே எதிர்கால எழுத்தாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டுதான். இந்த முன்னூறாவது பதிவிலும் அவரது ஆராய்ச்சியின் புலமையும் அவரது நினைவாற்றலும் போற்றத்தக்க வகையில் பரிமளித்த விதமும் எங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கிறது. அதுதான் இந்த வார வல்லமையாளர் எனும் விருதினை நரசய்யா அவர்களுக்கு அளித்து மகிழ்வது என்பது. . விருதுகள் பல வாங்கியவருக்கு இது பத்தோடு பதினொன்றாக இல்லாமல் எங்கள் இதயங்களின் அன்பையும் சுமந்துகொண்டு கொடுப்பதை அவர் அறிவார். மேலும் பல பல சுவையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்க அவரது எழுத்துப் பணி!

கடைசி பாரா: பழமை பேசி தன் பெயரை புதுமை பேசியாக மாற்றிக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘அமைதி’ யான கவிதை

தவளைகளின்
அட்டகாசத்தில்
ஆர்ப்பரித்துக் கிடக்கும்
குளத்திலும் அமைதி
மணவாட்டி இல்லாத
அடுக்களை போல!!

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1.  இந்த வார வல்லமையாளர் திருமிகு நரசய்யா அவர்களுக்கு வாழ்த்தும், அன்பு திவாகர் அய்யா அவர்கட்கு நன்றியும்!!

  2. இந்த வார வல்லமையாளராக திரு. நரசய்யா அவர்களை வல்லமை  இதழ் குழுவினர்  அறிவித்ததது  மகிழ்ச்சியைத் தருகிறது. கடைசி பத்தி பழமைபேசிக்கும் பாராட்டுகள்.

    அன்புடன் 
    ….. தேமொழி 

  3. இந்தவார வல்லமையாளர் திரு.நரசய்யா அவர்களுக்குக்ம், திரு பழமைபேசி அவர்களுக்கும் என் இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்!

    சு.ரவி

  4. வல்லமையாளர் நரசைய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  5. வல்லமையாளர் விருது பெற்றுள்ள திரு. நரசய்யா அவர்களுக்கும், சகோதரர் பழமைபேசி அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!!!

  6. இந்தவார வல்லமையாளர் திரு.நரசய்யா அவர்களுக்கும், திரு.பழமைபேசி அவர்களுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.