இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………
எஸ் வி வேணுகோபாலன்
அண்மையில் ‘சிறப்பாக’ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது:
”நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?”
”டெய்லி டேட் மாத்தி விக்கிறான்… அதை எதுக்குப் படிக்கணும்?”
இது நகைச்சுவைக்காக எழுதப் பட்ட ஒரு வசனம் தான். ஆனால் செய்தித் தாள்களில் வரும் சில திடுக்கிடும் செய்திகள், பரபரப்பு விஷயம், அதிர்ச்சி சம்பவம் இவற்றைத் தொகுக்க உட்கார்ந்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சில நிகழ்வுகள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றும். ஒரு பத்து நாள் விஷயங்களை ஒரு சேர எடுத்து வாசிக்க நேர்ந்தால் சமூகத்தில் நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே மிஞ்சாது போல் கூடத் தோன்றும்.
கொலை, தற்கொலை, கணவன் – மனைவி உறவில் விரிசல், அதிகமாகிக் கொண்டிருக்கும் மண முறிவு (விவாகரத்து), கள்ளக் காதல், பரஸ்பர சந்தேகம், நிம்மதியற்ற தாம்பத்திய வாழ்க்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வு மற்றும் மனைவி வேலைக்குப் போவது குறித்த கருத்து முரண்பாடு, குடும்ப உறுப்பினர் நிமித்தம் கருத்து மோதல்கள்…..இவை குறித்த இடைவிடாத செய்திகள் நாளிதழ் முழுக்க நிறைந்திருப்பதைக் காண முடியும். குடும்பங்கள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்ற சித்திரம் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும், அப்படியான குரல் கேட்கும்படி பல செய்திகள் வருகின்றன.
இவை எதுவும் பொய்யான செய்திகள் அன்று. எங்கோ நடப்பதைத் தான் எழுதுகின்றனர். ஆனால், சமூகம் முழுக்க இந்த மாதிரியான விஷயங்களே நிறைந்திருப்பது மாதிரியான தோற்றம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. அது உண்மை அல்ல. இந்தச் செய்திகள் வழங்கப்படும் விதம் அப்படியான ஒரு தாக்கத்தை வாசகருக்கு ஏற்படுத்துகிறது.
அப்போதைக்கு வெளிவந்திருக்கும் செய்திகள், ஒரு பக்க சார்பாக வெளிப்படும் செய்திகள், முழு விவரமற்ற ஊகத்தில் புனையப்படும் செய்திகள், உண்மை கலவாத கற்பனை சரடுகள், உணவில் சேர்க்கப்படும் அஜினமோட்டோ போல் விறுவிறுப்பு ஏற்றி எழுதப்படும் செய்திகள், மறுப்பு வந்தாலும் கண்டு கொள்ளாது விடப்படும் செய்திகள்…..என இது ஒரு தனி விவாதத்திற்குரிய அம்சம்.
இன்னொருபுறம், இந்தச் செய்திகள் படிப்பவர் மனத்தில் பன்மடங்கு விரிவாக்கம் செய்து புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பது தெரிந்தும் தெரியாதது போல் எழுதப்படுவது. அதாவது எங்கோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் என்றல்ல, வர வர காலம் போகும் போக்கே சரி இல்லையே என்று தான் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.
ஏன் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன….ஏதாவது காரணங்கள் உண்டா, தற்செயலான நிகழ்ச்சிப் போக்குகள் தானா என்றெல்லாம் பெரிய விவாதங்களையோ அலசல்களையோ ஊடகங்கள் நடத்துவதில்லை. தங்களுக்கு ஆதாயம் உருவாக்கும் அதிரடி, பரபரப்பு செய்திகள் மீது மட்டும் கண் கூசும் அளவு வெளிச்சம் பாய்ச்சுவதும், சமூகத்திற்கு உருப்படியாகச் சொல்லத் தக்க அல்லது சொல்ல வேண்டிய விஷயங்களை இருட்டடிப்பு செய்வதும் ஊடக வாடிக்கை. அவர்களுக்கு அதில் அரசியல், வர்த்தக நோக்கம் உண்டு.
இன்றைய சமூகம் பெருமளவு இறுக்கமான நிலையில் இயங்குகிறது என்பது கவனிக்கத் தக்கது. இறுக்கமான சமூக இயக்கம் மனிதர்களை நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்க வைக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேவையற்ற விரோத மனப்பான்மை உருவாக இடம் தருகிறது. அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் பொறுமையோ, எதிர்ப்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று அறிய விரும்பும் தன்மையோ இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. தாம் செய்வது சரி என்று தீர்மானமாக நம்பும்போது மற்ற எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன. பகிர்தல் அற்ற உளவியல் ஓர் அழுத்தத்தை உள்ளே கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் மூச்சு திணறும் மனிதர்கள் வன்மம் வளர்த்துக் கொள்ளவும், வன்முறையை யோசிக்கவும் நேர்கிறது. அல்லது, தங்களுக்கு இங்கே வாழ இடமில்லை என்று முடிவெடுக்கவும் தூண்டுகிறது.
இந்த இறுக்கமான சமூக இயங்குதல், நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்கும் உளவியல் ஒருபுறம். மற்றொருபுறம், கனவுகளையும், இலக்குகளையும், வெற்றிக் கோடுகளையும் மட்டுமே நிறுத்தி ஓடிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கை. இவை மனிதர்களை எளிதில் சலிப்படைய வைக்கிறது. மிக இலகுவாக நிராசை அடைய வைக்கிறது. விரும்பிய உணவை ருசித்து உண்ணவேண்டிய பொழுதில், எரிச்சலும் பதட்டமும் உணவுத் தட்டை நிரப்பி விடுகின்றன.
தாம் மட்டுமே ஏமாற்றப் படுகிறோம் அல்லது தாம் மட்டிலும் எப்படியாவது முந்திச் சென்று விட வேண்டும் என்ற உளப்பாங்கை இன்றைய போட்டி உலகம் ஏற்படுத்துகிறது. சந்தைப் பொருளாதார உலகம் தனித்தனி நியாயங்களை, தனித்தனி கற்பிதங்களை, தனித்தனி தீர்வுகளை நுட்பமாக சமூகத்தில் நடுகிறது.
இந்த உணர்வாக்கம் தான், வெல்வதற்காக எதுவும் செய்யலாம் என்று தூண்டுகிறது. வெற்றிப் பயணத்தின் திசை வழியில் வெல்வதற்கான கருவிகளை எப்படியும் பயன்படுத்தலாம் என்று கற்பிக்கிறது. அடுத்தவர் வலியை, அடுத்தவர் துயரை, அடுத்தவர் கதறலை நின்று நிதானித்துக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் வழங்கலாம் என்று நிற்பது கூடத் தமது நேரத்தில் வீண் விரயம் என்று பாராதது போலக் கடந்து செல்ல வைக்கிறது.
சக மனிதர்கள் என்ற சொல்லை எடுத்துவிட்டு சக போட்டியாளர்கள் என்ற சொல்லாடலை முன்வைக்கிறது. உரையாடல்களுக்குப் பதிலாக வாக்கு வாதங்களையும், நிதானமான அணுகுமுறைகளுக்கு மாற்றாக ஆவேசத் தலையீடுகளையும், மறு பரிசீலனைக்குப் புறம்பாக இறுதிச் சொல் இதுவே என்ற வற்புறுத்தலையும், பன்முக நோக்கைக் கை கழுவி ஒற்றைக் கோணத்தையும், திறந்த பார்வையை உதறிவிட்டுக் குறுகலான சொந்தப் பார்வையையும் முன்மொழிகிறது.
இதனால் தான், பேசித் தீர்க்கக் கூடிய விவாதங்களில் திடீரென்று ஆயுதங்கள் மூலம் பிரச்சனைகள் ‘தீர்த்துக்’ கட்டப்படுவதைக் காண்கிறோம்.சண்டை இட்டுக் கொண்டிருக்கும் யாரோ இருவரிடையே புகுந்து சமரசம் செய்ய முயற்சி எடுக்கும் மூன்றாவது நபர் கொலையுண்டதான செய்திகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறோம். ஆசிரியரைக் கொல்லத் துணியும் மாணவரையும், எந்தக் காரணமும் இன்றி அண்டை வீட்டு நபரைப் ‘போட்டுத் தள்ளும்’ மனிதர்களையும் கண்டு நடுங்குகிறோம்.
இதன் விபரீத அடையாளங்கள் குடும்ப உறவிலும் வெளிப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கும் பெற்றோர் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள், எதை எதிர்பார்க்கின்றனர் என்று பொறுமையோடு கேட்டறியாத போதும், திருமண வயதில் உள்ள ஆணும் பெண்ணும் மனம் விட்டு பெற்றோரிடம் பேசத் தவறுகிற போதும் முதல் கட்ட பிரச்சனைகள் தோன்றுகின்றன. கல்வி, வேலைத் தன்மை, ஊதியம் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், வேறு வகை பழக்க வழக்கங்களும் திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்தே பூதாகர உருவெடுக்கின்றன.
தாங்கள் எப்படியும்இருக்கலாம், பெண்கள் மட்டும் அடங்கிப் போகவேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவம் நவீன பண்பாடுகளை விரும்புவதுபோல் காட்டிக் கொள்ளும் ஆண்களிடமும் நிலவுகிறது. பரஸ்பரம் ஒளிவு மறைவற்ற பகிர்தலுக்கான இடம் மறுக்கப் பட்டதாக குடும்பங்கள் இன்று பெருகி வருகின்றன. சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் கூட பெரிய மோதல்களாக வெடிக்கின்றன. சரி செய்யக் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு இடைவெளியும், பெரிய பெரிய பள்ளங்களாக உருவெடுத்து விடுகின்றன.
குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஜனநாயகத் தன்மை வேண்டும் என்ற அம்சம் நமது மரபிலோ, கல்வியிலோ, வளர்ப்பிலோ கிடையாது என்பது மிக சுலபமாக, இனிமையாக பேசி சரி செய்யத் தக்க விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிதாக்குகிறது. ஈகோ எனப்படும் அகங்காரம் அறிவுக் கண்ணை இறுக்க மூடிவிடுகிறது.
அதிக ஊதியம் பெற்றுத் தரும் ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலைகளில் ஈடுபடுவோர் தமக்கான நிம்மதியை மது பானத்தில் தேடுவது தற்காலத்திய மிகப் பெரிய பிரச்சனையாக உரு மாறியிருக்கிறது. மது ஒரு தவறான பழக்கம் என்று சமூக மதிப்பில் பார்க்க வேண்டியதில்லை. ஆல்கஹால், நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நமது உளவியலில் ஆட்டிப் படைக்கும் மாற்றங்கள், பொருளாதார ரீதியாக சுமத்தும் செலவினம், பொதுவெளியில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் இவை பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கூட்டாக, குடும்ப சங்கமமாக, உறவின் வெளிப்பாடாக, நட்பின் அடிப்படை கட்டுமானமாக இன்று மது அருந்துதல் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் வெடிப்புகளும் குடும்ப உறவில் பிரதிபலிக்கின்றன.
பணத்தை முன் நிறுத்தும் தாராளமய பொருளாதாரம் குறுக்கு வழியில், மிக விரைவான கதியில் முன்னேறிவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நீடித்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சி தரும் சொந்தங்களை விடவும், குறுகிய காலத்திற்கு இன்பம் பயக்கும் உறவுகளை நாடத் தூண்டுகிறது. இதன் தாக்கமே எல்லை மீறிய ஆசைகள், தவறான தொடர்புகள், நட்பின் விரிசல்கள் போன்றவற்றை நியாயப் படுத்துகின்றன. பணம் எல்லாவித உறவுகளையும் சிதைக்கிறது என்பதை மார்க்சிய பார்வை சுட்டிக் காட்டுகிறது. கலை, கேளிக்கை, விளையாட்டு எல்லாவற்றையும் காசு எப்படி பேரம் பேசுகிறது, சீரழிக்கிறது, கொச்சைப் படுத்துகிறது என்று நாம் பார்க்கிறோம். மனித உறவுகளையும் அது ஈவிரக்கமின்றி மிதித்துப் போகிறது.
நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் அல்லது செய்தி ஊடகங்களில் தெரிந்து கொள்கிற நடப்புகள், தனி நபர் நடவடிக்கைகள் போலவோ, தனி நபர் வாழ்க்கை தடுமாற்றங்கள் போலவோ நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவற்றை நுட்பமாக கவனிக்கத் தான் வேண்டும். முற்போக்கான மதிப்பீடுகள் மட்டுமே சமூகத்திற்கு ஆரோக்கியமான முன்மாதிரிகளை ஏற்படுத்தித் தர இயலாது, வெறும் பேச்சுக்களால் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது. ஆரோக்கியமான சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொள்வோர் இந்தச் செய்திகளைக் கடக்கும்போது மாற்று சமூகப் பார்வைகள் குறித்த விவாதத்தை அதிகரிக்க வேண்டும். முற்போக்கான முன்னுதாரணங்கள் பொது மன்றத்தில் பரந்த கவனத்திற்கு எடுத்துச் செல்லப் படவேண்டும்.
வாழ்க்கையின் தடுமாற்றங்களைத் தனி நபர் பிரச்சனைகளாக ஊடகங்கள் செய்தியாக்கும்போது அதை தேடித் தேடி படிக்கும் கிளுகிளுப்பு ஒரு விற்பனை சரக்கு. அதன் மூல காரணத்தைத் தேடிப் பார்த்து விவாதிப்பது மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளி.
***********
நன்றி : வண்ணக்கதிர்